15.02.2026

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்:
வஞ்சிக்கப்படும் தலித் மாணவர்கள்!

தமிழ்நாடு அரசே உடனடியாக தலையிடு!

பத்திரிகைச் செய்தி

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சாதிய – மதவாத சக்திகளின் ஆதிக்கம் நிர்வாகத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நிலைநாட்டப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான வளாக ஜனநாயகத்தை மறுப்பது, மாணவர்களின் பிரச்சினைகளுக்காக, அடிப்படைத் தேவைகளுக்காகக் குரல் கொடுக்கும் மாணவர் இயக்கங்களைச் சேர்ந்த மற்றும் முன்னணியான மாணவர்களின் மீது கட்டப்பஞ்சாயத்து முறையில் தொடர்ச்சியாகப் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பது என நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தற்போது 2026-ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து தலித் மாணவர்கள் குறிவைக்கப்பட்டு சாதிய பாகுபாட்டோடு நடத்தப்படுவதும், அவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு முதல் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வருடத்திற்கு சுமார் 40 முதல் 45 ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இணைகின்றனர். இதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். ஆனால், இம்மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளாக விடுதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம். பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் பல்வேறு வழிகளில் போராடியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில மாணவர்களை மட்டும் விடுதிக்குள் அனுமதித்து மாணவர்களை அமைதிப்படுத்தும் நரித்தனம் மட்டும் தொடர்ந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், மாணவர் அமைப்புகள் தலையிட்டு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துப் போராடிய பின்னர், தற்போது புதிய விடுதி கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, ஆமை வேகத்தில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. ஆனாலும், பாதிக்கப்படும் இம்மாணவர்கள் வழக்கறிஞர் பயிற்சிக்குச் செல்ல முடியாமல் பகுதி நேரமாக வேலை செய்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.

இவ்வாறு ஏற்கெனவே கல்வியைத் தொடர்வதற்கு பல்வேறு அழுத்தங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மீது சாதிய வன்மத்தோடு மீண்டுமொரு தாக்குதல் நடத்துகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

கடந்த 2022-ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக கட்டணத் தொகையைச் செலுத்திட, பட்டியல், பழங்குடியின (SC/ST) மாணவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டது. இத்தொகையானது மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிதியிலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வரவு வைக்கப்பட்டது.

2022-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இந்த உதவித்தொகை நேரடியாக பல்கலைக்கழகத்திற்கே சென்றுவிடும். ஆனால், 2022-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு “நேரடி பலன் பரிமாற்றம்” (DBT – Direct Benefit Transfer) என்ற நடைமுறையைக் கொண்டுவந்தது. இதன் மூலம் உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அதை பல்கலைக்கழகத்திற்குக் கட்டணமாகச் செலுத்துவது என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், இப்படியொரு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது குறித்து மாணவர்களுக்கு எந்தவித வழிகாட்டுதலும் முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. ஆறு மாத காலம் வரை, மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது உதவித்தொகைதான் என்று கூட மாணவர்களுக்கு முன்னறிவிப்போ அல்லது சுற்றறிக்கையோ கொடுக்கப்படவில்லை.

இதனால், ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்த பட்டியல்-பழங்குடியின மாணவர்களும், 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மூலம் சேர்க்கை பெற்ற கிராமப்புற தலித் மாணவர்களும் அத்தொகையை தனியார் விடுதி கட்டணத்திற்காகவும் பிற கல்வி சார்ந்த தேவைகளுக்காகவும் பயன்படுத்திக் கொண்டனர்.

தனது நிர்வாக செயலற்றத் தன்மையினால் ஏற்பட்ட குளறுபடி குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் மறந்தும் வாய்திறக்கவில்லை. மாறாக, ஆறு மாத காலத்திற்குப் பிறகு மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையைப் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக செலுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பியது. இது மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வந்த உதவித்தொகையைக் கொண்டு மாணவர்கள் முறையாக பல்கலைக்கழகக் கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். இருந்த போதிலும், நிலுவையில் உள்ள ஓராண்டு கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு கால அவகாசம் வழங்காமல் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது, பல்கலைக்கழக நிர்வாகம்.

இந்நிலையில் உதவித்தொகையைச் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் இறுதியாண்டு மாணவர்களை அடாவடியாக மிரட்டுவது; இந்தாண்டு தொடங்கியதில் இருந்து வருகைப் பதிவேடுகளிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கி வைத்திருப்பது; பல்கலைக்கழக உள்தேர்வுகளை எழுத அனுமதி மறுப்பது; கல்லூரியில் தொடர முடியாமல் அரையாண்டுக்குப் பிறகு மீண்டும் பல்கலைக்கழகத்தில் சேர முற்படும் மாணவர்களின் மறுசேர்க்கையை நிறுத்தி வைப்பது என தனியார் பல்கலைக்கழகங்களில் செயல்படும் கந்துவட்டி வசூலிக்கும் கும்பலைப் போல மாணவர்களை மிரட்டி வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

மாணவர்களின் சாதியை அடையாளப்படுத்தி பாகுபாட்டோடு நடத்தும் வகையில், தினமும் வகுப்பறைகளில் வருகைப் பதிவேட்டில் பெயர் இல்லாத தலித் மாணவர்களை எழுந்து நிற்க வைப்பது, பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று முறையிட வைப்பது என பார்ப்பனிய கொழுப்புடனும், சாதிய வன்மத்துடனும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்தி வருகிறது.

சட்டப் பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கிட வேண்டும். பல்கலைக்கழகத்தின் இத்தகைய அடாவடித்தனமான மாணவர் விரோத போக்குகளையும், சாதிய வன்மத்தோடு தலித் மாணவர்கள் நடத்தப்படுவதையும் நிறுத்திடவும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் சட்டத்துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசும் உடனடியாக தலையிட வேண்டும்.

உடனடி கோரிக்கைகள்:

  1. வருகைப் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்களின் பெயர்களை உடனடியாக சேர்த்திடு!
  2. அரசு உதவித் தொகையை கல்விக் கட்டணமாக தவணை முறையில் திரும்பச் செலுத்த கால அவகாசம் வழங்கு! அராஜகமான முறையில் வசூல் செய்யும் போக்கினை கைவிடு!
  3. பட்டியல்-பழங்குடியின மற்றும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் இணைந்த அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக விடுதி வழங்கிடு! (புதிய விடுதி கட்டும் வரை காத்திருக்காமல் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்)
  4. மாணவர்களை சாதிய பாகுபாட்டுடன் நடத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடு!


இவண்,
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக கிளை,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க