சிறார்கள் கொடூரமான குற்றங்களில் ஈடுபடும்போது சமூகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களைத் தளர்த்தி அவர்களைப் பெரியவர்களைப் போலக் கருதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுகின்றன. ஆனால், இந்த ஆத்திரங்களுக்கு மத்தியில் நாம் ஒன்றைச் சிந்திப்பதில்லை: “யார் இந்தச் சிறுவர்கள்? இவ்வளவு இளம் வயதில் அவர்களை வன்முறைக்குத் தள்ளிய சூழல் எது?”
ரிஷி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை எடுத்துக்கொள்வோம். இப்போது அவருக்கு 20 வயது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு “ஹுக்கா”வைப் (புகையிலை குழாய்) பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிறு தகராறில் ஒரு சிறுவனைக் கொன்றுவிட்டார். இன்று அவர் ஒரு பாதுகாப்பு இல்லத்தில் (Place of Safety) அடைக்கப்பட்டுள்ளார். சிறார் நீதி சட்டம் சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை அடிப்படை விதியாகக் கொண்டிருந்தாலும், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் நிதி மேலாண்மை (Financial Management) பயின்று வருகிறார். சீர்திருத்தத்தை அவர் ஏற்றுக்கொண்டாலும், வெளியுலகம் தெரியாமல் நம்பிக்கையற்று முடங்கியுள்ளார்.
இதேபோல் இர்ஃபான் மற்றும் ஃபர்தீன், சமூக ஊடகங்களில் காட்டப்படும் போலியான “கேங்க்ஸ்டர்” (Gangster) கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, பெரிய குற்றவாளிகளால் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர். இவர்களும் ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் பிணையின்றி வாடுகின்றனர். இவர்களது செயல்களுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரச் சமநிலையின்மையைச் சட்டம் கவனிக்கத் தவறிவிடுகிறது.
இவை கற்பனை கதைகள் அல்ல. தலைப்புச் செய்திகளில் தோன்றி மறைந்து போகும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உண்மையான கதைகளே. இவர்கள் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் பிரதிநிதிகள்.
யுனிசெஃப் (UNICEF) கணக்கின்படி, இந்தியா 25.3 கோடி வளரிளம் பருவத்தினரைக் கொண்ட நாடு. ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் 10 முதல் 19 வயதுக்குள் உள்ளவர். இளைய தலைமுறை என்பது நாட்டின் வளர்ச்சி வாய்ப்பு என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில், விளிம்புநிலைச் சிறுவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கும்போது, அவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுவதில்லை; மாறாக ‘பிறவிக் குற்றவாளிகளாகவே’ பார்க்கப்படுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.
2016-ஆம் ஆண்டு “பட்டாம்பூச்சிகள்” (Butterflies) அமைப்பின் ஆய்வு, சீர்திருத்தப் பள்ளிகளில் இருக்கும் பல குழந்தைகள் மிகவும் பாதிப்புக்குள்ளான பின்னணியிலிருந்து வருவதாகக் காட்டுகிறது. அதில் 39.2 சதவிகித குழந்தைகளுக்கு நிரந்தர வீடு இல்லை; 62 சதவிகித குடும்பங்களுக்கு நிலம் இல்லை.
மேலும், குழந்தைகளின் ஒழுங்கீனம் எப்படிக் கையாளப்படுகிறது என்பதிலும் பெரிய வேறுபாடு உள்ளது. சான்றாக, ‘பின்தங்கிய’ சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் செய்யும் தவறுக்கு சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுகின்றர். அதே நேரத்தில், ‘உயர்ந்த’ சமூகங்களில் இதே போன்ற தவறுகள் பேச்சுவார்த்தை மற்றும் செல்வாக்கு மூலம் அமைதியாகத் தீர்க்கப்படுகின்றன; நீதிமன்றத்துக்குச் செல்லாமல் தவிர்க்கப்படுகின்றன. இதனால் வன்முறை வெறும் வறுமையின் விளைவாக மட்டும் சுருக்கி பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில், அது அரசு அவர்களுக்குத் தரத் தவறிய கல்வி, பாதுகாப்பு மற்றும் மனநல ஆதரவின் வெளிப்பாடே.
இந்தியா நீதி அறிக்கை 2025 (India Justice Report 2025) மேலும் பல குறைகளைச் சுட்டிக்காட்டுகிறது. பல மாநிலங்களில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு “நன்னடத்தை அதிகாரி” (Probation Officer) கூட இல்லை. இதனால் சிறார்கள் பிணையில் சென்ற பிறகு அவர்களைக் கண்காணிக்கவோ அல்லது ஆலோசனைகள் வழங்கவோ ஆட்கள் இல்லை. இத்தகைய சூழலில் பெற்றோர்கள் மட்டும் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வறுமையை மட்டுமே காரணமாகக் கூறுவது ஆபத்தானது. இது குடிசைப் பகுதிகளில் (Slum) மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற வகுப்புவாத கருத்துகளுக்கு வழிவகுக்கிறது. வர்க்கப் பாகுபாடு நிறைந்த இத்தகைய பார்வைகள், வேகமான நகரமயமாக்கலினால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்கின்றன. குறிப்பாக, குறைந்த ஊதியம் கொண்ட வேலைகளுக்காகப் பெற்றோர்கள் இருவரும் நீண்ட நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், குழந்தைகள் போதிய கண்காணிப்பின்றி தவிக்கின்றனர் அல்லது தங்களை விடச் சற்றே பெரிய உடன்பிறப்புகளின் பொறுப்பில் விடப்படுகின்றனர். பொழுதுபோக்கு இடங்கள், மனநல ஆதரவு மற்றும் தரமான கல்வி போன்றவை இல்லாத சூழலில், வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒரு விளைவாக மாறிவிடுகிறது.
இதனுடன், கட்டுப்பாடற்ற முறையில் இணையத்தில் பெருகிவரும் வன்முறை சார்ந்த டிஜிட்டல் உள்ளடக்கங்களும் இணைகின்றன. கத்தியால் குத்துவது மற்றும் சண்டையிடுவது போன்ற கொடூரமான காணொளிகள் சமூக ஊடகங்களில் தடையின்றிப் பரவுகின்றன. சட்டத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளும் முன்பே குழந்தைகள் இத்தகைய காட்சிகளை எதிர்கொள்கின்றனர். இதனால் வன்முறை என்பது ஒரு இயல்பான விசயமாக மாறுகிறது. மேலும், “லைக்”-களுக்காக (Likes) உண்மை ஆயுதங்களைக் கொண்டு குழந்தைகள் வன்முறை காட்சிகளை மறு உருவாக்கம் செய்கின்றனர்; இத்தகைய பல யூடியூப் சேனல்கள் இன்றும் இயங்கி வருகின்றன.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules) வலியுறுத்தினாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சுணக்கம் நிலவுகிறது. கருத்து சுதந்திரத்தைத் ஒடுக்குவதில் காட்டும் தீவிரத்தை, வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் காட்டாமல் அரசு மௌனம் காப்பது முரணாக உள்ளது.
“சிறார் நீதிச் சட்டம், 2015”, 2026 ஜனவரியில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், நாம் ஒரு மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.
தேவைப்படும் ஐந்து உடனடி மாற்றங்கள்:
- சமூக விழிப்புணர்வு: சிறார் நீதிச் சட்டம் ஏன் தண்டனையை விட சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.
- ஆதாரங்கள் அடிப்படையிலான ஆய்வு: 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களைப் பெரியவர்களைப் போல் கருதி விசாரணை நடத்துவதானது, குற்றங்களையோ அல்லது அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதையோ (recidivism) குறைக்கிறதா என்பது குறித்து கடந்த பத்தாண்டுகளில் முறையான ஆய்வுகள் ஏதும் இல்லை. குற்றங்களுக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய நமக்குத் துல்லியமான தரவுகள் தேவை.
- மேம்படுத்தப்பட்ட மறுவாழ்வு உள்கட்டமைப்பு: பல சிறார் நீதி வாரியங்களில் உறுப்பினர்கள் இல்லை; 14 மாநிலங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இல்லை; குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் ஆய்வு செய்யப்படுவதில்லை; பெண் குழந்தைகளுக்கான இல்லங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஒழுங்கற்ற ஒரு அமைப்பைக் கொண்டு சீர்திருத்தத்தை ஒருபோதும் சாத்தியப்படுத்த முடியாது.
- இணைய வன்முறை மீதான உண்மையான கட்டுப்பாடு: சமூக ஊடகத் தளங்களின் விதிகளை முறையாக அமல்படுத்தி, குழந்தைகள் அணுகக்கூடிய வன்முறை உள்ளடக்கங்களுக்கு அந்த தளங்களைப் பொறுப்பாக்க வேண்டும்.
- அடிப்படைத் தடுப்பு நடவடிக்கைகள்: நகரத் திட்டமிடல், கல்வி, குழந்தை பராமரிப்பு மற்றும் மனநல ஆதரவு ஆகியவற்றை ஏதோ விருப்பத்தேர்வுகள் போலக் கருதாமல், குற்றத் தடுப்புக்கான முதன்மையான நடவடிக்கைகளாகக் கையாள வேண்டும்.
ரிஷி, இர்பான் மற்றும் ஃபர்தீன் ஆகியோரின் கதைகள் நமக்கு ஒரு கசப்பான உண்மையை உணர்த்துகின்றன: நமது சட்டம் காகிதத்தில் சீர்திருத்தம் பேசுகிறது. ஆனால், நடைமுறையில் குழந்தைகளைத் தண்டிப்பதிலேயே குறியாக இருக்கிறது. இளஞ்சிறார் நீதிச் சட்டத்திற்குத் தேவைப்படுவது இன்னும் கடுமையான திருத்தங்கள் அல்ல, மாறாக அதன் அசல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான நேர்மையான அர்ப்பணிப்புதான்.
– நந்தினி சௌகான், யாமினா ரிஷ்வி
(ஆசிரியர்கள்: இவர்கள் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் சட்டத்தின் பிடியில் சிக்கும் சிறுவர்களுக்காக நீதிமன்றங்களில் வாதிடும் வழக்கறிஞர்கள் ஆவர்.)
மொழிபெயர்ப்பாளர்: அஜிதா
நன்றி: அவுட்லுக்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram









