இணையவழிப் பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் விதிப்பு: எஸ்.பி.ஐ. வங்கியின் பகற்கொள்ளை

சேவைக் கட்டணம் என்ற பெயரில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்ற வங்கிகள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாராக் கடன்களை எந்தவித அபராதமும் விதிக்காமல் தள்ளுபடி செய்கின்றன. ஆக, சேவை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது.

0

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான “பாரத ஸ்டேட் வங்கி” (State Bank of India) பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் இணையவழிப் பணப் பரிமாற்றத்திற்கான ‘சேவைக் கட்டணத்தை’ அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, 25,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஐ.எம்.பி.எஸ். (Immediate Payment Service) முறையில் பணம் அனுப்பினால் ரூ.2 மற்றும் ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்படும். 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அனுப்பினால் ரூ.5 மற்றும் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பினால் ரூ.10 மற்றும் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் (Internet Banking), கைப்பேசி செயலி, எஸ்.பி.ஐ. வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியான “யோனோ எஸ்.பி.ஐ.” (YONO SBI) அனைத்திற்கும் இந்தக் கட்டணமும் ஜி.எஸ்.டி-யும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பகற்கொள்ளையாகும்.

மக்களுக்கு ‘சேவை’ செய்வதாகக் கூறிக்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள் ஏற்கெனவே பல்வேறு வழிகளில் மக்களிடமிருந்து வழிப்பறி செய்து வருகின்றன. குறிப்பாக, 2020-21 மற்றும் 2025-26 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கவில்லை என்று கூறி பொதுத்துறை வங்கிகள் 8,621.12 கோடி ரூபாயை வங்கி கணக்காளர்களிடம் அபராதமாக வசூலித்துள்ளன. அதிகபட்சமாக, உத்தரப்பிரதேசத்தில் 1,233.9 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவில் 1,088.18 கோடி ரூபாயும் மற்றும் தமிழ்நாட்டில் 1,121.38 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. (எஸ்.பி.ஐ. வங்கியில் மட்டும் 2020-ஆம் ஆண்டு முதல் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கத் தேவையில்லை)


படிக்க: சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்


முக்கியமாக, கிராமப்புற மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு வங்கிக் கணக்கினைப் பயன்படுத்தத் தெரியாத சூழல் உள்ளது. அப்படியிருக்கையில், வங்கிக் கணக்கில் இருப்புத் தொகையைப் பராமரிக்கவில்லை என்று கூறி எளிய மக்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் கொஞ்சநஞ்ச பணத்தையும் அபராதமாக வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன. இந்த நாகரீக வழிபறியானது தற்போது வங்கிகளின் முக்கிய வருவாயாக மாறியுள்ளது. இந்தக் கொள்ளைக்கு அஞ்சி பல வங்கி கணக்காளர்கள் பூஜ்ஜிய தொகை (Zero balance) அல்லது அடிப்படை வங்கிக் கணக்கிற்கு (Basic savings account) மாறியுள்ளனர்.

ஆனால், இதே காலகட்டத்தில் (2020-21 முதல் 2025 செப்டம்பர் வரை) பொதுத்துறை வங்கிகள் சுமார் 6.15 லட்சம் கோடி ரூபாயை வாராக்கடன் என்று கூறி தள்ளுபடி செய்துள்ளன. இவற்றில், கார்ப்பரேட் நிறுவனங்களின் கணிசமான தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பாசிச பா.ஜ.க. கும்பலால் மக்களிடையே வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கத்தால் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல்மயமாகி வருகின்றன. மறுபுறத்தில், எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்-களை முறையாகப் பராமரிப்பதில்லை. அவசரத் தேவைகளுக்காக மக்கள் பணம் எடுக்க எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்-களுக்குச் செல்லுகையில் ஒன்று பணம் இருக்காது அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும்; ஏ.டி.எம். இயந்திரத்தின் திரையில், அருகில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்குச் செல்லவும் என்று தெரிவிக்கப்படும். அருகிலும் ஏ.டி.எம். மையங்கள் இருப்பதில்லை. இந்தச் சூழலில்தான் பலர் கைப்பேசி செயலிகளின் மூலம் பணம் அனுப்பி வருகின்றனர்.

ஆனால் தற்போது அத்தகைய பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது திட்டமிட்ட பகல் கொள்ளையாகும். ரூ.2 முதல் ரூ.20 வரை தானே கட்டணம் வசூலிக்கப்படுகிறது, அதிக தொகைக்குத்தானே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று இன்று அலட்சியமாகக் கடந்து சென்றால், நாளை ரூ.100 அனுப்பினால் கூட கட்டணம் வசூலிக்கப்படும் அபாயம் உள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கியின் இந்நடவடிக்கையானது, கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களைப் போன்று சலுகைகளைக் கொடுத்து மக்களைப் பழக்கி பின்னர் கட்டணம் வசூலிக்கும் இழிச்செயலாகும்.

சேவைக் கட்டணம் என்ற பெயரில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்ற வங்கிகள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாராக் கடன்களை எந்தவித அபராதமும் விதிக்காமல் தள்ளுபடி செய்கின்றன. ஆக, சேவை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது. அபராதம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கானது.

எனவே, எஸ்.பி.ஐ. வங்கியின் இந்த பகற்கொள்ளைக்கு எதிராக மக்கள், வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதன் மூலமே வங்கியின் கொள்ளையைத் தடுக்க முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க