பாசிச பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் “நியூ ராஜேஷ் ஹைடெக் மருத்துவமனை” (New Rajesh Hi-Tech Hospital) என்கிற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனை பிப்ரவரி 1-ஆம் தேதி இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியுள்ளது. இதில் உள்ளூர் மக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.
இவர்களில் கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு இம்மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் 30 பேருக்கும் கடுமையான கண் வலி ஏற்பட்டு, கண்களிலிருந்து சீழ், இரத்தம் வழிந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 18 பேர் கடுமையான பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் சோதனையிலும் பாக்டீரியா பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உடல் முழுவதும் பரவுவதைத் தடுப்பதற்காக ஒன்பது பேருக்கு ஒரு கண்ணை முற்றிலுமாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒன்பது பேர் ஒரு கண் பார்வையை நிரந்தரமாக இழந்துள்ளனர். கடும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் டெல்லி எய்ம்ஸ், வாரணாசி மற்றும் லக்னோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், இக்கொடூரச் சம்பவம் குறித்துப் பேசிய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜேஷ் ஜா, இதனை ‘தீவிரமான தவறு’ என்று தெரிவித்துவிட்டு, “விசாரணை அறிக்கைக்குப் பிறகு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அலட்சியமாகவும் எந்தவித குற்ற உணர்ச்சியின்றியும் பதிலளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் தீபக் மீனாவும் கூறியதாவது: மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாராவது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களின் பதிவு இரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்
அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாள் நிலைமை மோசமடைந்ததாகக் கூறிய கோலாவைச் சேர்ந்த சஹ்வான் அலி, “அடுத்த நாள் கண்ணிலிருந்து இரத்தம் வந்தது. டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டோம். மருத்துவர்கள் ஒரு கண்ணை அகற்றினர். இப்போது என்னால் பார்க்க முடியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
வாரணாசி மருத்துவமனையில் கண் அகற்றப்பட்டதாகக் கூறிய ரஹ்தௌலியைச் சேர்ந்த சங்கராவதி, “இன்னும் வலி இருக்கிறது. மங்கலான பார்வை உள்ளது. தொற்று மற்ற கண்ணுக்கும் பரவிவிடுமோ என்று பயமாக இருக்கிறது” என்றார். அவரது மகன், மீதமுள்ள கண் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்துள்ளார்.
முக்கியமாக கண் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பாக அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள், ஆய்வுப் பொருட்களின் மேற்பரப்பில் உள்ள வைரஸ்கள், பூஞ்சைகள் உள்ளிட்ட அனைத்து நுண்ணுயிரிகளையும் முழுமையாக நீக்க வேண்டும். இதற்குப் பெயர் “ஸ்டெரிலைசேஷன்” (Sterilization) செயல்முறையாகும். கண் உள்ளே சிறிய அளவு கிருமி சென்றாலும் கடுமையான தொற்று ஏற்பட்டு நிரந்தர பார்வையிழப்பு ஏற்படும்.
ஆனால், மருத்துவர்களும் செவிலியர்களும் கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய கருவிகளில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக நீக்காமல் அலட்சியமான முறையில் பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் 18 பேர் கண்களையும் பார்வையையும் இழந்து கடும் வேதனையிலும் கடும் பொருளாதார நெருக்கடியிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச மருத்துவமனைகளில் இதுபோன்ற கொடூரங்கள் அரங்கேறுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு பாக்யஸ்ரீ என்ற தனியார் மருத்துவமனையின் மருத்துவர் குழந்தையின் வெட்டுக் காயத்திற்கு மருந்து போடுவதற்குப் பதிலாக ஃபெவி-குவிக் (Fevi kwik ) வைத்து ஒட்டிய கொடூரம் அரங்கேறியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் எலிகள் கடித்துக் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியது.
இக்கொடூரத்தின் வடுக்கள் மறைவதற்குள் டிசம்பர் மாதத்தில் சத்னா மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் அரசு மருத்துவமனையில், தலசீமியா (Thalassemia) நோயால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகளுக்கு இரத்த மாற்று சிகிச்சையில், பரிசோதிக்காமல் எச்.ஐ.வி நோய் பாதிக்கப்பட்ட இரத்தத்தை ஏற்றியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாசிச கும்பல் இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை ஒழித்துக்கட்டி மருத்துவத்துறையை கார்ப்பரேட் மயமாக்குகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இவை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, மகாராஷ்டிரா பா.ஜ.க அரசு, தனியார் மருத்துவமனையைப் போல அரசு மருத்துவமனைகளில் மருத்துவத்திற்கு விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளதெல்லாம் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சொற்ப அளவிலான மருத்துவத்தையும் ஒழித்துக்கட்டுகின்ற நடவடிக்கையாகும்.
இவ்வாறு தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்படும் மக்கள், அவற்றின் இலாப வெறிக்கு பலியாக வேண்டிய அவலத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, கண் அறுவை சிகிச்சையில் அலட்சியமாகச் செயல்பட்டு 18 பேரின் கண் பார்வையினைப் பறித்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் உரிமங்களை இரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்து நிரந்தரமாக மூட வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











