யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

0

ந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் சாதி, மதம், இனப் பாகுபாடுகளைத் தடுப்பதற்கான புதிய விதிமுறைகளை (சமபங்கை மேம்படுத்துதல் ஒழுங்குமுறை 2026 – Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13- ஆம் தேதி அன்று வெளியிட்டது. இந்த விதிமுறைகளில் இருந்த போதாமைகளை ஜனநாயக சக்திகள் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், போதாமையாக இருந்த இந்த விதிமுறைகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பன – ‘உயர்’ சாதியினர் போராட்டங்களில் ஈடுபட்டது. அதற்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம் புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அடித்தள சமூக இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்தியப் பல்கலைக்கழகங்களில் தொடரும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் அடையாளமாக, பிப்ரவரி 8 அன்று டெல்லியில் ஒன்று கூடினர். இந்த கூட்டத்தின் மூலம் “அனைத்திந்திய சமத்துவ மன்றம் – யு.ஜி.சி விதிமுறைகள் சமதா அந்தோலன்” (All India Forum for Equity – UGC Regulations Samta Andolan) தொடங்கப்பட்டது. இந்த முன்னெடுப்பு வரவேற்கத்தக்கதாகும்.

இந்த மன்றம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (JNUSU), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), இந்திய மாணவர் சங்கம் (SFI), தேசிய மாணவர் சங்கம் (NSUI), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF), பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் (BAPSA) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைந்தது. அத்துடன் யு.ஜி.சி-யின் புதிய விதிமுறைகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையினைக் கண்டித்துள்ளது.

மேலும் ரோஹித் வேமுலா உள்ளிட்ட மாணவர் தற்கொலைகள், வரலாற்று அநீதிகள் மற்றும் அவற்றிற்குப் பக்கபலமான ஊடகக் கதைகளை எடுத்துரைத்து, பேச்சாளர்கள் இந்தப் புதிய விதிமுறைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், ரோஹித் சட்டத்தின் அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரினர்.

கூட்டத்தைத் தலைமைத் தாங்கிய டாக்டர் ஜிதேந்திர மீனா (Jitendra Meena) எஸ்.சி / எஸ்.டி / ஓ.பி.சி மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளைக் குறிப்பிட்டுக் காட்டினார். அவர் “பல்கலைக்கழகங்களில் சாதி அடக்குமுறையால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான நண்பர்களின் வலி ஓரளவுக் கருத்தில் கொள்ளப்பட்டு, யு.ஜி.சி சில வழிகாட்டுதல்களை வழங்கியது. ஆனால் தேவையில்லாத அச்ச உணர்வை உருவாக்கி, நீதிமன்றத்தால் இந்த வழிகாட்டுதல்களுக்குத் தடை விதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

ஊடகங்கள் மற்றும் பார்ப்பனிய சக்திகளால் உருவாக்கப்பட்ட தவறான கருத்துருவாக்கத்தை விமர்சித்த JNUSU-வைச் சேர்ந்த தோழர் அதிதி, “வெறும் சாதகமான நடவடிக்கைக்காகக் கொண்டுவரப்பட்ட, அவ்வளவு தீவிரமற்ற, ஒரு சட்டம், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அச்சுறுத்தலாக வெட்கக்கேடான முறையில் சித்தரிக்கப்பட்டது. இது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற பொய்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு அச்சமான சூழல் உருவாக்கப்படும் வரை, இந்தப் பொய் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மண்டல் கமிஷன் இயக்கத்தின் காலத்தை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டுப் பேசிய டாக்டர் லக்ஷ்மண் யாதவ் (Laxman Yadav) நீதிமன்றங்கள் அனைத்து வகையான நேர்மறை நடவடிக்கைகளையும் (affirmative action) தடுத்து வருவதாகவும், எஸ்.ஐ.ஆர் (SIR) போன்ற முக்கிய விஷயங்கள் கூட குறிப்பிடப்படாமல் இருப்பதாகவும், அதே நீதிமன்றங்கள் EWS இட ஒதுக்கீட்டை அனுமதித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.


படிக்க: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்: வஞ்சிக்கப்படும் தலித் மாணவர்கள்!


ஊடகங்களின் பக்கபலமான பங்கை விமர்சித்த டாக்டர் ஹேமலதா மகேஷ்வர் “யு.ஜி.சி-க்கு எதிரான ஒரு சிலரின் போராட்டங்களை மாபெரும் மக்கள் திரட்சியாகக் காட்டும் ஊடகங்களின் பாரபட்சமான பங்கும், இன்று அலகாபாத், பாட்னா, டெல்லி போன்ற பல இடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கியுள்ள போது, அதே ஊடகங்கள் 5 பேரைக் கூட காட்டவில்லை. சாதி ஒழிப்புத் திட்டமே இந்தியாவின் அரசியலமைப்புத் திட்டத்தின் அடிப்படை என்பதை நாம் உறுதியாக வலியுறுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் பல்கலைக்கழகங்கள் வழிகாட்டும் ஒளியாகத் திகழ வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

முக்கியமாக, இக்கூட்டத்தில் பாகுபாடு இல்லாத சமத்துவமான உயர்கல்வி நிலையங்களுக்கான உந்துதலை உருவாக்குவதற்காக மன்றம் பிப்ரவரி 13-ஆம் தேதியை அகில இந்திய போராட்ட தினமாக அறிவித்தது. அன்றைய தினம் 100-க்கும் மேற்பட்ட வளாகங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பல்கலைக்கழக வளாகத்தில் (Dr. Shyama Prasad Mukherjee University) அகில இந்திய சமத்துவ மன்றத்தின் கீழ் மாணவர் சங்கங்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலிலிருந்து பேரணியாகச் சென்று பல்கலைக்கழகத்தை அடைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்போராட்டங்களின் கனல்கள் நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பரவி போராட்டத் தீயை உண்டாக்க வேண்டும். அது புதிய விதிமுறைகளை உடனே அமல்படுத்தும்படி பாசிச கும்பலை நிர்ப்பந்திக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க