இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க. அரசு

நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் என்பதையே ஒழித்துக்கட்டி ஆசிரியர் நியமனத்தில் கார்ப்பரேட்-காண்டிராக்ட்-மயத்தை தீவிரப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு.

நேற்று (ஏப்ரல் 5) சென்னை எழும்பூரில் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 2,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாட்டில் கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி அன்று அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்து ஜூன் 1-ஆம் தேதி அன்று பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நாள் வித்தியாசத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இடையே ரூ.3,170 ஊதிய வேறுபாடு உள்ளது. இதனால் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்திப் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், “ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம்” என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை வஞ்சித்து வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்திலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் ஏமாற்றியது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் நேற்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (என்.எஸ்.டி) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், “தமிழ்நாட்டில் 2009-இல் தி.மு.க. ஆட்சியில் ஒரே பதவிக்கு இரு வேறு அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சம்பள முரண்பாடு கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த முரண்பாட்டைக் களையக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை இந்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்படவில்லை” என்றார்.


படிக்க: சென்னை: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்


மேலும், “நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இதுதொடர்பாக ஆய்வு செய்ய 2023 ஜனவரி 1 அன்று மூன்று பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழு இதுவரை மூன்று முறை மட்டுமே கூடி கருத்துகளைக் கேட்டுள்ளது. ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டிய இந்த பிரச்சினையை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கிறது. எனவே இப்போது நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சம்பள முரண்பாட்டைக் களைவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும். இல்லையெனில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், தி.மு.க. அரசு போராட்டத்தைக் கலைக்க பேச்சுவார்த்தை நடத்துவது, போராட்டங்களை ஒடுக்குவது என்று நயவஞ்சக செயலில் ஈடுபடுகிறதே ஒழிய ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. மாறாக, நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் என்பதையே ஒழித்துக்கட்டி ஆசிரியர் நியமனத்தில் கார்ப்பரேட்-காண்டிராக்ட்-மயத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

“தற்போது இருக்கும் ஆசிரியர்களே கடைசி தலைமுறை அரசு ஆசிரியர்கள்” என்று கல்வியாளர்கள் எச்சரிப்பது மிகுந்த கவனத்திற்குரியது. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கை வலியுறுத்தும் “ஊழியர்கள் இல்லாத பணிமுறை” என்ற டிஜிட்டல்மயமாக்கத்தின் ஒரு அங்கமாகவே இந்த போக்கு ஊக்குவிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே திட்டமிட்டே ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்படுகின்றன.

இது ஆசிரியர் பணியில் மட்டுமின்றி அனைத்து அரசுத் துறைகளிலும் நடந்தேறுகிறது. இந்த டிஜிட்டல்மயமாக்கத்தை தி.மு.க. அரசு தீவிரமாகச் செயல்படுத்துகிறது. ஆனால், அதனை வெளிப்படையாக அறிவிக்காமல் ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களின் கோரிக்கை விரையில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிப்பதன் மூலம் இந்த நயவஞ்சக நாடகத்தில் அனைத்து கட்சிகளும் கைகோர்க்கின்றன.

எனவே, இந்த பகாசுர சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் மாற்றுத் திட்டத்தை முன்வைத்துப் போராடுவது என்பதே ஆசிரியர்களின் அனைத்துவித கோரிக்கைகளையும் நிறைவேற்றும். இப்போராட்டத்தில் ஆசிரியர்கள்-பேராசிரியர்கள்-மாணவர்கள்-அரசு ஊழியர்கள்-மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க