01.05.2025

அரசியலைக் கைவிட்டு பொது மேடையில் ஆணாதிக்க திமிருடனும்,
தனிநபர் தாக்குதலாகவும் தரம் தாழ்ந்தும் பேசிய
கோவன் குழுவினரைக் கண்டிக்கிறோம்!

கண்டன அறிக்கை

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

சில தினங்களுக்கு முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் அவர்கள் ஒருங்கிணைத்த நிகழ்வில், பாடல் பாடிய கோவன் குழுவினர் பாடலுக்கு முன்பான உரையில் நடிகர் விஜய்-யின் குடும்பம், தனிப்பட்ட விவகாரங்களை கிசுகிசு பாணியிலும் ஆணாதிக்க சிந்தனையுடனும் தரம் தாழ்ந்தும் பேசியதை பல்வேறு ஜனநாயக சக்திகளும் தங்களது முகநூல் பக்கங்களில் கண்டித்து கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

மக்கள் கலை இலக்கிய கழகம் எனும் எமது அமைப்பானது தமிழ்நாட்டில் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடித்து இந்து மத வெறி பாசிசத்துக்கு எதிரான போராட்டங்கள், சாதி ஆதிக்க எதிர்ப்பு, மறு காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டங்கள், மற்றும் பிற்போக்கு சீரழிவு கலாச்சாரங்களுக்கு எதிரான போராட்டங்கள் போன்றவற்றை முன்மாதிரியான வகையில் நடத்தி அனைவரும் பாராட்டும் வகையிலும் முன்னுதாரணமாகச் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.

இந்த நிலையில் 2020 -இல் கோவன் குழுவினர் ம.க.இ.க-வின் அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகியதாலும், அமைப்பு விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாலும், பல்வேறு வகைகளில் கலைப்புவாத நடவடிக்கைகள் மற்றும் தனி நபர்களை முன்னிறுத்துவது என சீரழிந்து போனதன் அடிப்படையில் எமது அமைப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஆனாலும் இந்த கும்பல் தங்களுடன் ம.க.இ.க என்ற பெயரை வைத்துக் கொண்டு ம.க.இ.க வின் அரசியல் போராட்ட மரபைக் கெடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்ன நடிகர் விஜய்க்கு பதில் சொல்வது என்ற பெயரில், நடிகர் விஜய்யின் குடும்பத்தையும் தனிப்பட்ட முறையிலும் ஆணாதிக்க திமிருடனும் தரம் தாழ்ந்த முறையிலும் கருத்துக்களை வெளியிட்டுப் பேசியுள்ளார். இதை அனைத்து ஜனநாயக சக்திகளும் பரவலாகக் கண்டித்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு இன்றைய மோசமான சமூக சூழலைப் பாதுகாத்து வரும் அரசு தான் முதன்மை குற்றவாளி என்பது தான் எமது அமைப்பின் நிலைப்பாடு. மாறி மாறி வரக்கூடிய அரசாங்கங்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. அந்த அடிப்படையில் ஆளும் கட்சியை கண்டித்து நாம் பேசுகிறோம். இதையெல்லாம் விடுத்து தி.மு.க-விற்கு சொம்படிப்பவர்களாகவே உள்ளார்கள் என்பதுதான் மேற்கண்ட நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. இது போன்று செயல்படுவதன் மூலம் தொடர்ந்து மக்கள் பிரச்சினையை விடுத்து மக்கள் பக்கம் நின்று கேள்வி கேட்பதை விடுத்து தி.மு.க-வின் சொம்பாக மாறிவிட்டார்கள் என்பதைத்தான் பட்டவர்த்தனமாக இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகிறது.

இந்த நிகழ்விலும் தி.மு.க-விற்கு சொம்படிப்பதாக நினைத்து தனிநபர் தாக்குதல், ஆணாதிக்க திமிருடன் பேசி தங்கள் சுய ரூபத்தையும் அரசியல் சமூக பார்வையையும் வெளியிட்டுள்ளனர். இப்படி பேசிய கோவன்தான் இந்த குழுவின் பொதுச் செயலாளர் என்றால் இந்த அமைப்பின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

சமீபத்தில் தி.மு.க-வில் கூட பெண்களைத் தவறாகப் பேசியதற்கு பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவன் குழுவினர் இந்த விஷயத்தைப் பற்றி யாரும் இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை. கோவன் பேசியதை நியாயப்படுத்தியும் கூட சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆக கடந்த காலத்தில் இருந்து இவர்களைப் பற்றி நாங்கள் கூறிய படி, ம.க.இ.க-வின் அடிப்படை அரசியல் அமைப்பு கண்ணோட்டத்தைக் கைவிட்டு, மக்களைக் கைவிட்டு ஆட்சியாளர்களுக்கு சொம்படிப்பவர்களாக, தனிநபர்வாத அரசியலை முன்னிறுத்தும் சீரழிவில் போய் விட்டனர் என்பதை மீண்டும் உறுதி செய்வதாக உள்ளது.

நக்சல்பாரி கலாச்சாரம் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கின்ற, கம்யூனிச கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரட்டும் வகையில், புதிய கலாச்சாரத்தை தன்னளவில் கடைப்பிடித்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்ற, பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகவும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்க சீர்குலைவு கலாச்சாரத்திற்கு எதிராகவும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பாடல்கள், இசைச் சித்திரங்கள், நாடகங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் – போன்ற பல்வேறு வடிவங்களில் புதிய கலாச்சாரத்தை முன் நிறுத்துகின்ற, இந்தியாவில் தனிப்பெரும் அடையாளங்களாகத் திகழ்கிற புரட்சிகர ஜனநாயக சக்திகளின் மத்தியில், ஒரு முத்திரை பதித்துள்ள மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் அடிப்படைக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தோழர்.ப.ராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.
9791653200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க