நடிகர் விஜய்: ஒரு சினிமா கழிசடை, ஆளும் வர்க்க அரசியல் கழிசடையாக பரிணாமம்

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உதிரித்தனமான சிந்தனையை அவரது திரைப்படங்கள் எந்தளவுக்கு உருவாக்கியதோ, அதைவிட மோசமான சிந்தனையைத்தான் அவரது அரசியல் வருகையும் ஏற்படுத்தும்.

மிழ்நாட்டின் தற்போதைய முக்கிய செய்திகளில் ஒன்று, நடிகர் விஜய்-இன் அரசியல் வருகை. இந்த வருகையை விஜய் ஒரு லெட்டர்பேட் மூலம் ’எளிமையாக’ அறிவித்தார். மானங்கெட்ட ஆளும்வர்க்க ஊதுகுழலான ஊடகங்களோ பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தின.

விஜய்-இன் அரசியல் வருகையைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதுகிற அளவுக்கெல்லாம் ஒரு இழவும் இல்லை. என்னடா இப்படி ’அபசகுனமாக’ எழுதறாங்களே என்று யோசிக்காதீர்கள். ஏனென்றால், விஜய் இன் அரசியல் வருகையே தமிழ்நாட்டைப் பீடித்திருக்கும் ’அபசகுனம்’ தான்.

காவி கார்ப்பரேட் பாசிச சூழலில் நாடே சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையே அதற்காக காவு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் இன் அரசியல் வருகையை இந்நிகழ்வுகளோடு இணைத்துத் தானே பார்க்க முடியும்.

நாட்டில் திட்டமிட்டு தூண்டிவிடப்படும் சாதி, மத கலவரங்களும், விவசாயிகள், தொழிலாளிகள் மீதான அரசியல், பொருளாதார, அதிகார அடக்குமுறைகளும் அதிகரித்து வரும் நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நடைமுறையில் இதைக் கண்டித்து அறிக்கை விடுவதற்கு கூட துப்பற்ற கோழையாகத்தான் நடிகர் விஜய் இருக்கிறார். அரசியல்வாதியாக அல்ல, குறைந்தபட்ச சமூக பொறுப்புணர்வுடன் கூட மேற்கண்ட பிரச்சினைகளைப் பற்றி விஜய் ஒருபோதும் நேரடியாகக் கண்டித்துப் பேசியதில்லை.

கட்சி தொடங்குவதாக அறிக்கை வாயிலாக அறிவிப்பு கொடுத்தார் விஜய். அவரது அறிக்கையில் மாநில உரிமைகள் பற்றிப் பேசுகிறார். ஆனால் உண்மையில் நீட் திணிப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பின்மை, தமிழ்மொழி புறக்கணிக்கப்படுதல், கீழடி இருட்டடிப்பு என தமிழ்நாட்டின் உரிமைகள் ஒன்றிய பாசிச பாஜக அரசால் பறிக்கப்படும்போதெல்லாம் வாயே திறந்ததில்லை. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு சினிமாவில் மிகவும் பிசியாக இருந்தார். இப்போது வந்து மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக கட்சி தொடங்குவதாக கூறுகிறார்.

ஆனால், யார் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கிறார்கள் என ஆர்.எஸ்.எஸ் –பிஜேபி கும்பலை நேரடியாக குறிப்பிட்டுக் கூட விமர்சிப்பதற்கு தைரியமில்லாத நபர்தான் நடிகர் விஜய்.


படிக்க: சினிமா அரசியல் போதை மிருகம் = விஜய்


ஆளுநர் ரவி தமிழகம் என்று கூற வேண்டும் என பார்ப்பன குயுக்தியோடு சொன்ன பின்பு தமிழ்நாடு என்றுதான் சொல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டோம். இது பார்ப்பன எதிர்ப்பு மரபின் அடிப்படையில் தமிழ்நாடு எடுத்த முடிவு. ஆனால் விஜயோ தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி, தனது பார்ப்பன அடிமை உணர்வை வெளிப்படுத்துகிறார். இதை அவர் புரிந்து செய்தாரா, புரியாமல் செய்தாரா என்பதல்ல பிரச்சினை, அவரின் நடவடிக்கைகள் பார்ப்பன பாசிசத்திற்கு சேவை செய்கிறது என்பதைத்தான் கூறுகிறோம்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரின் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படப்போவதாக விஜய் கூறுகிறார். ஆனால் நடைமுறையில் அதற்கான சுவடே கிடையாது. கொள்கை கோட்பாடெல்லாம் சும்மா அறிக்கைகளில் பெயரளவுக்கு இருந்தாலே போதும்; ரசிகர்கள் மத்தியில் ப்ளைன் கிஸ் கொடுத்தாலே போதும் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. அந்தளவுக்கு தமிழ்நாட்டின் இளைஞர்களை முட்டாளாகக் கருதுகிறார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் சாதி வன்கொடுமைத் தாக்குதல்கள் குறித்தெல்லாம் ஒரு வார்த்தை கூட கண்டித்துப் பேசியதில்லை.

ஊழலை எதிர்க்கப் போவதாக தம்பட்டம் அடிக்கிறார். உண்மையில் அரசின் தனியார்மயக் கொள்கைகளே ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கின்றன. அதில் சினிமா எனும் கருப்புப் பணம் புரளும் கார்ப்பரேட் வணிகத்தில் அவரும் பிரதானமாக பங்கு வகிக்கிறார். அதாவது ஊழலில் பங்கு வகிக்கிறார் என்று சொல்கிறோம். பொத்தாம் பொதுவாக அடித்துவிட்டால் மக்கள் நம்புவார்கள் என்று கருதுகிறார்.

இதையெல்லாம் தாண்டி அவரது சினிமா துறை சம்பந்தப்பட்ட விசயங்களில் கூட நேரடியாக தலையிட்டு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பவர் அல்ல விஜய். அரசியலில் ஈடுபடாத மற்ற நடிகர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு கூட விஜய் பேசியதில்லை.

இப்படிப்பட்ட ஒரு பேர்வழிதான் இன்று அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வதாக சொல்கிறார். இவரைத்தான் ஊடகங்களும் வாராது வந்த மாமணியைப் போல விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன.


படிக்க: லியோ + மறுகாலனியாக்க சீரழிவு + அரசு


இன்றைய சூழலை நாம் புரிந்து கொண்டால்தான் நடிகர் விஜய் யின் அரசியல் வருகை எவ்வளவு ஆபத்தானது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் நாடு முழுவதும் மோசமாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் வண்ணப்புகைக் குண்டு வீச்சே, வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்த போர்க்குணமிக்க இளைஞர்களின் மனநிலைதான்.

காவி – கார்ப்பரேட் பாசிச பயங்கரவாதமோ மேலும் மேலும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. மூச்சு கூட விடமுடியாத நிலையை நோக்கி மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச அடக்குமுறைக்கு எதிரான மனநிலை நாடு முழுக்க வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெதிராக அரசியல் ரீதியாக மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு விடக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கமும், பாசிச கும்பலும் தெளிவாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே பாசிசமயமாகியிருக்கும் நிலையில் பொதுவாக ஊழல், தேர்தல் அரசியலில் மாற்று என்பதாக மீண்டும் மீண்டும் மக்களை புதைகுழிக்குள் தள்ளுவதே ஆளும் வர்க்கத்தின் நோக்கம்.

இந்த நோக்கத்தை சிறப்பாக ஈடேற்றுவதற்குத்தான் விஜய்-இன் அரசியல் வருகை பயன்படும். தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை பாசிச எதிர்ப்பு அரசியலை, புரட்சிகர அரசியலை நோக்கி நகராமல் வைப்பதற்குத்தான் விஜய்-இன் அரசியல் வருகை பயன்படும்.

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உதிரித்தனமான சிந்தனையை அவரது திரைப்படங்கள் எந்தளவுக்கு உருவாக்கியதோ, அதைவிட மோசமான சிந்தனையைத்தான் அவரது அரசியல் வருகையும் ஏற்படுத்தும். நடைமுறையில் தன்னை நம்பி வரும் இளைஞர்களை பார்ப்பன பாசிசத்திற்கு அடியாட்படையாக மாற்றுவதற்குத்தான் விஜய்-இன் அரசியல் நுழைவு பயன்படப் போகிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்து!

தனது சொத்துகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், புகழ்போதைக்காகவும் நடிகர் விஜய் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலின் அடியாட்படையாகப் பயன்படப்போகிறார் என்றும் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் வரிசையில் விஜய்யும் ஒரு ஆளும் வர்க்க அரசியல் கழிசடை என்றும் இந்த நோக்கில் இருந்துதான் சொல்கிறோம்.

தமிழ்நாட்டு மாணவர்களே, இளைஞர்களே, இத்தகைய ஆளும் வர்க்க அரசியல் கழிசடைகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்! புறக்கணியுங்கள்!


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க