சினிமா அரசியல் போதை மிருகம் = விஜய்

ஒழுக்கம், விழுமியங்கள், பிறரைப் பற்றி சிந்திப்பது குறித்து அக்கறையற்ற இத்தகைய மனநிலைதான் இந்துமதவெறி பாசிஸ்டுகள் தங்களுக்கான அடியாட்படையைத் திரட்டிக் கொள்வதற்கும் அடிப்படையாக உள்ளது.  எவ்வளவு பெரிய அபாயம் இது. சொல்லப்போனால் பண்பாட்டுத் தளத்தில் இந்துமதவெறி பாசிச கும்பலின் பங்காளிதான் நடிகர் விஜய்.

சுயமரியாதை உணர்வு, பார்ப்பனிய எதிர்ப்பு, மொழிப்பற்று, அநீதிகளுக்கு எதிரான மாணவர் போராட்டம் என தமிழ்நாட்டின் பெருமை கொள்ளத்தக்க உணர்வுகளையெல்லாம் காறி உமிழ்கிறது ஆழமாக வேரூன்றி வரும் தமிழ்நாட்டின் சினிமா போதை வெறி பொறுக்கித்தன கலாச்சாரம். தாங்கள் கோடிகளில் மிதப்பதற்காக இந்த வெறியை திட்டமிட்டு ஊட்டுகிறார்கள் கோடம்பாக்கத்து சினிமா பொறுக்கிகள்.

இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொள்ளையடிப்பது, எந்நேரமும் சினிமாவைப் பற்றிய சிந்தனையிலேயே சமூகத்தை இருத்தி வைப்பது, படம் வருவதற்கு முன்பே இசைவெளியீடு, பாடல்கள் அறிமுகம், ட்ரெய்லரை தியேட்டர்களில் வெளியிட்டு இளைஞர்களை வெறியூட்டுவதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் காசு பார்ப்பதும் என்று திட்டமிட்டு இந்த சினிமா கழிசடை கும்பல்கள் செயல்பட்டு வருகின்றனர்.  நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5 அன்று வெளியானது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் லியோ பட ட்ரெய்லர் பார்க்க சென்ற சில வெறிபிடித்த புறம்போக்கு கும்பலால் தியேட்டரின் உட்பகுதி சூறையாடப்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தேதான் ட்ரெய்லரை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தியேட்டரில் வெறியாட்டம் போடுவதற்கும் உதிரி புறம்போக்கு கும்பலை தயார் செய்தே வைத்திருக்கின்றனர் என்பதே உண்மை.

இதைத் தடுத்திருக்க முடியாதா? ட்ரெய்லர் திரையிடலை ரத்து செய்திருக்க முடியாதா? கண்டிப்பாக முடிந்திருக்கும். எவன் செத்தால் என்ன, எக்கேடு கெட்டால் என்ன, நமக்கு துட்டு பார்க்க வேண்டும், படத்திற்கு விளம்பரம் கிடைத்து கோடிக்கணக்கில் இளைஞர்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை சுருட்ட வேண்டும் என்பதே விஜய் உள்ளிட்ட சினிமா புகழ் போதை தலைக்கேறிய கழிசடைகளின் நோக்கம்.


படிக்க: நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …


இந்த சினிமா கழிசடைகளுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி கூட கிடையாது. தமிழ்நாடு முழுக்க நடிகர் விஜய்க்கென்று லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் பலரும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். குடும்பத்திற்கு பொறுப்பாக உழைத்து வாழும் இளைஞர்கள்தான். நடிகர் விஜயை ரோல்மாடலாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட இளைஞர்களின் வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக என்றாவது களத்தில் இறங்கிப் போராடியிருக்கிறாரா? சமூகப் பிரச்சினைகள் என்றால் வாயே திறக்காமல் அமைதியாக இருந்துவிட்டு சினிமாவில் நரம்பு புடைக்க வசனம் பேசுவதைத் தவிர விஜய் நடைமுறையில் என்ன செய்தார்?  உண்மையில் இவர்களுக்கு விஜய்யின் படங்கள் கற்றுக் கொடுப்பது என்ன?

லியோ ட்ரெய்லரில் ஒரு இடத்தில் தே… பையன் என்று வசனம் பேசுகிறார் விஜய். இந்த வசனம் சமூகத்தில் மாணவர்கள், இளைஞர்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும், அதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதெல்லாம் தெரியாமலா அந்த வசனத்தை வைத்திருப்பார்கள் இந்தக் கழிசடைகள்?

கண்டிப்பாக தயாரிப்பாளருக்கும், இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், நடிகர் விஜய்க்கும் தெரியும். தெரிந்துதான் அந்த வசனத்தை வைத்துள்ளார்கள். பெண்களை எப்படி வேண்டுமானாலும் கேவலப்படுத்தி வசனம் எழுதுவது, இளைஞர்களுக்கு போதையேற்றி வெறியூட்டுவது, கோடிக்கணக்கில் பணம் பார்ப்பது என்பது மட்டும்தான் அவர்களுடைய இலக்கு.

பெண்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியக் கழிவுகளை வாந்தியெடுத்து பார்ப்பன பாசிசத்திற்கு இடைவிடாமல் சேவை செய்கிறார்கள் விஜய் உள்ளிட்ட  சினிமா கழிசடைகள். அதனால்தான் அப்படிப்பட்ட வசனங்களை மாணவர்கள், இளைஞர்களை ரசிக்க வைக்கும் வேலையை செய்கிறார்கள். அப்படி உச்சரிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்ற கண்ணோட்டத்தையும், அந்த கேடுகெட்ட வசனத்தை கெத்தாக உச்சரிக்கும் பொறுக்கித்தனத்தையும் கற்றுக் கொடுப்பதைத் தவிர இந்த சினிமா கழிசடை கும்பலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

குறிப்பாக லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஒவ்வொரு படமும் போதைமருந்துக் கடத்தல், ரவுடியிசம், வன்முறைக் கொலைகள் ஆகியவற்றை குரூரமாக ரசிக்க வைக்கும் தன்மையில் எடுக்கப்படுகிறது. இன்றைய தமிழ் சினிமாவின் டிரெண்டே இதுதான். இதனால் ஏற்படும் சமூக உளவியல் தாக்கங்கள் குறித்து இவர்களுக்கு எந்தவிதமான சமூகப் பொறுப்புணர்ச்சியும் கிடையாது.

இலக்கற்ற முறையில் பொறுக்கித்தனத்தை வியந்தோதி எடுக்கப்படும் இதுபோன்ற படங்களுக்கு ஏற்ப வெறியூட்டும் இசை. குறிப்பாக அனிருத்தின் இசை. மனதளவில் இளைஞர்களை எதைப்பற்றியும் கவலைப்படாதவர்களாக வெறிபிடித்தவர்களாக மாற்றுவதுதான் அனிருத் போன்றோரின் இசையின் அடிநாதமே.

ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக்கச்சேரிகளும் கோடிகளில் பணம் குவிக்க நடத்தப்படும் மறுகாலனியாக்க நுகர்வு வெறியின் ஒரு அம்சமே.


படிக்க: பி.வி.ஆர் சினிமா – அபராதம் வசூலித்த மக்கள் போராட்டம்


ஆனால் இங்கே உண்மை நிலை என்ன? பயிர் காய்ந்து அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் காவிரியில் தண்ணீர் கேட்டு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாடு முழுக்க பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. படித்து முடித்து வேலை கிடைக்காத நிலையில் எந்த பாதுகாப்பும் இல்லாத, உரிமைகள் அற்ற நிலையில் கிடைத்த வேலையை செய்து கொண்டு எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடு நம்வீட்டுப் பிள்ளைகள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். வறுமை சூழ்ந்த வாழ்நிலை நெருக்கடிகள் ஏற்படுத்தும் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்யும் இளைஞர்கள், தொழிலாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை கந்துவட்டி கடனிலும், நாளை என்ன ஆகுமோ என்ற பயத்திலும் போய்க் கொண்டிருக்கிறது.

இதற்காகப் போராடுவதற்கோ, ஏன் பேசுவதற்கு கூட துப்பில்லாத கோழைகள்தான் விஜய் போன்றவர்கள். இவர்கள் நடிக்கும் படங்களும் இளைஞர்களை சமூக சிந்தனை அற்றவர்களாக, பொறுப்பற்றவர்களாக, பெண்களை இழிவாக பார்க்கும் கண்ணோட்டம் கொண்டவர்களாக மாற்றுவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன.  வாழ்க்கை குறித்த எந்த விழுமியங்களோ, சிறந்த லட்சியங்களோ இல்லாமல் சினிமா, போதை உள்ளிட்ட நுகர்வு வெறியே இளைஞர்களின் லட்சியமாக இந்த சினிமா பொறுக்கி கும்பலால் மாற்றப்படுகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டையே இளைஞர்களின் பண்பாடாக சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.

ஒழுக்கம், விழுமியங்கள், பிறரைப் பற்றி சிந்திப்பது குறித்து அக்கறையற்ற இத்தகைய மனநிலைதான் இந்துமதவெறி பாசிஸ்டுகள் தங்களுக்கான அடியாட்படையைத் திரட்டிக் கொள்வதற்கும் அடிப்படையாக உள்ளது.  எவ்வளவு பெரிய அபாயம் இது. சொல்லப்போனால் பண்பாட்டுத் தளத்தில் இந்துமதவெறி பாசிச கும்பலின் பங்காளிதான் நடிகர் விஜய்.

மறுகாலனியாக்கம் உருவாக்கியுள்ள இந்த நுகர்வுவெறி, போதை சீரழிவுப் பண்பாட்டை  சினிமா பொறுக்கிக் கும்பல் மேலும் மேலும் வளர்த்து சமூகத்தை சீழ்பிடிக்க வைக்கிறது. தங்களது சொகுசு வாழ்க்கைக்காக, சினிமா, அரசியல் போதைவெறிக்காக இளைஞர்களின் வாழ்க்கையில் தெரிந்தே விளையாடுகின்றனர் இந்த பொறுக்கி நாயகர்கள். தங்கள் துயரமான வாழ்க்கை நிலை வேறு, கோடிகளில் குதூகலிக்கும் சினிமா கதாநாயகர்களின் சொகுசு வாழ்க்கை வேறு என்பதை உணர்ந்து விஜய் போன்ற சினிமா கழிசடைகளின் உண்மை முகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு சென்று கூட்டத்தில் சிக்கிக் கொண்டோம், கூட்டத்தில் தவறாக நடந்து கொண்டார்கள், நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகள் சரியாக ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று நடுத்தர வர்க்கம் புலம்பிக் கொண்டிருப்பதால் ஒன்றும் மாறப் போவதில்லை. இந்த சந்தர்ப்பவாதப் போக்கை உதறித் தள்ள வேண்டும். மறுகாலனியாக்க சீரழிவான இந்த சினிமா போதைவெறியை சமூகப் பொறுப்பணர்ச்சியுள்ள அனைவரும் அம்பலப்படுத்த வேண்டும். கேடுகெட்ட இந்த சினிமா கழிசடைகளை கண்டிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் நம் வீட்டுப் பிள்ளைகள் படிப்படியாக சமூகத்திற்கு எதிரானவர்களாக மாறுவதை நம்மால் தடுக்க முடியாது.

அதே சமயம் மாணவர்கள், இளைஞர்களின் உள்ளார்ந்த சமூகப் பொறுப்புணர்வை, மானுடநேயத்தை, மக்களுக்காகப் போராடுகின்ற உன்னத குணத்தை அரசியல், பண்பாட்டுத் தளத்தில் மிகப் பரந்த அளவில் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை புரட்சிகர ஜனநாயக சக்திகளுக்கு முன்நிபந்தனையாக உள்ளது.


இனியன்



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க