முதல் சுற்றிலேயே கவிழ்ந்தார் தளபதி!
“என்ன இப்படி சொல்லிட்டீங்க” என்று கேட்பவர்களுக்கு, 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளின் சில காட்சி ஓட்டங்கள், இதோ!
000
கூட்டிக் கழித்துப் பாருங்கள், விஜய் முன்வைக்கும் அரசியல்தான் என்ன?
கொள்கைக்கு பெரியார், அம்பேத்கர் அடையாளங்கள்; அப்புறம் தமிழ். அதற்கெல்லாம் ஏற்கெனவே தி.மு.க., வி.சி.க. உள்ளன.
பற்றாக்குறைக்கு காமராஜர் அடையாளம். இது, காங்கிரசுக்காரர்களும் பி.ஜே.பி.யினரும் அவ்வப்போது பயன்படுத்துவது. அது என்றைக்குமே எடுபட்டதில்லை என்றாலும், அதனை சாதி அடையாளத்திற்காகப் பயன்படுத்தினார், விஜய்.
வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், சோழ, சேர, பாண்டியர்கள்… போன்ற மிச்சமீதி அடையாளங்களெல்லாம் காமராஜர் அரசியலைப் போல, சாதி அடையாளத்திற்காக முன்வைக்கப்பட்டவை.
இத்துடன், “பாசிசமாவது, பாயசமாவது” என்று நக்கல் வசனத்தின் மூலம், பா.ஜ.க.வுடன் மோதாமல் பக்கவாட்டில் புகுந்து வெளியே வந்தார்.
இத்தனைக்கும் மேலாக, அவர் பேசிய வீரவசனம், “ஊழல் ஆட்சி – குடும்ப ஆட்சி”!
இவை அனைத்தும், அப்படியே எடப்பாடி பழனிச்சாமியின் – அ.தி.மு.க. அரசியலுடன் பொருந்திவிட்டது.
ஒன்று மட்டும் விடுபடுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி என்ற ஏகவசனம். இது, இல்லையென்பதால், இது விஜய்-யின் அரசியல்!
இதைத்தான், விஜய் தனது ஓப்பனிங் சீன் – அதுதான் மாநாடு – மூலமாக தமிழ்நாட்டின் பேசுபொருளாக்க முயற்சித்தார்.
அதாவது, ஓர் ஆண்டாக பிரச்சாரம்; கொள்கை, திட்டங்கள் எல்லாம் சஸ்பென்ஸ்; மாநாட்டில் அறிவிப்பார் என்று ஊடகங்கள் டெம்ப் ஏற்றியிருந்தன. எந்த நெருக்கடியும் திமுக அரசு கொடுக்காத நிலையில், “விஜய் மாநாடு நடக்குமா?”, “தி.மு.க. அரசு நெருக்கடி கொடுப்பது ஏன்” என்றெல்லாம் விவாதங்கள். நடுவில் மழை! மாநாடே நடத்த முடியாமல் போனால், டெம்ப் ஏற்றியதெல்லாம் வீணாகிவிடுமே என்று ஒரே கவலை. நல்லபடியாக, அக்டோபர் 27 வந்தது. இலட்சக்கணக்கனோர் கூடும் பெரிய கூட்டம், ஒரே ஆரவாரம், விசில் சந்தங்கள். இந்த கூட்டத்திற்கு நடுவில், விஜய், “ஊழல் ஆட்சி – குடும்ப ஆட்சி” எதிர்ப்பு வசனங்களை கோபாவேசமாகப் பேசினார்.
இந்த ஒர்க்-அவுட் நல்லா இருக்கு எனக் கருதினார். இது மக்களிடம் பற்றிக்கொள்ளும் என எதிர்பார்த்தார். சீன் எல்லாம் ஓ.கே., செட்டப் எல்லாம் ஓ.கே. ஆனால், மூவ்மெண்ட்தான் பழசு!
000
ஓப்பனிங் சீனான மாநாட்டில், கொள்கையும் அறிவித்தார். செயல்திட்டத்தையும் அறிவித்தார். அவையெல்லாம், தமிழ்நாட்டு மக்கள் கேட்டுக்கேட்டு புளித்துப் போனவை.
மாநாடு குறித்து ஊடகங்கள் விவாதித்தன. ஆனால், ‘வில்லன் குடும்ப’த்தில் (தி.மு.க. கட்சியில்) இருந்து நோ ரியாக்சன்.
சோ, விஜய் எதிர்ப்பார்த்த ஃபைட் சீன் வரவே இல்லை.
போதாக்குறைக்கு ஆமைகறிகாரர், “புரோ”, ‘ரோடு”, ”லாரி”, “அடிபட்டு செத்துடுவ” என்று சாக்கடை ஓராமாக நின்று கொண்டு விஜய் மீது சாணியடிக்க ஆரம்பித்துவிட்டார். மீடியா இதையும் ஃபுல் கவரேஜ் கொடுக்கத் தொடங்கியது.
இத்துடன், திருமாவின் ‘அட்வைஸ்’. “கத்துக்குட்டி”, “அமெச்சூர்” என்று விஜயின் சிறுபிள்ளைத் தனத்தை நயமாக அம்பலப்படுத்தினார். “கூட்டணிக்கு இப்படியா அழைப்பு விடுப்பது”, “எப்போது எது பேசனுமே தெரியல” என்று விஜயை, பாப்பா ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்.
000
மொத்தத்தில், மாநாடு முடிந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை.
முதல் மூன்று நாட்கள், மீடியாக்களில், ஓப்பனிங் சீன் ஏற்பாடுகள், மக்கள் கூட்டம் பற்றிய சிலாகிப்புகள், விவாதங்கள். அவ்வளவுதான்!
அப்புறம், ஆமைகறிகாரரும், திருமாவும் மீடியாவில் ஃபுல் கவரேஜ்.
“குடும்ப ஆட்சி – ஊழல் ஆட்சி” வசனம் மொத்தமாக புஸ்வானமாகியது.
தலைவாவும் இல்ல, தளபதியும் இல்லை என்ற நிலையில், விஜய்க்கு ஒரே டென்சன், விரக்தி.
000
இப்பதான் ஆட்டத்தை ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிப்பது போல, நேற்று செயல்திட்ட தீர்மானங்களை அறிவித்து செயற்குழு கூட்டம் நடத்தினார். 26 தீர்மானங்களை நிறைவேற்றினார்.
ஆக, மாநாடே முடிந்து 10 நாட்கள் ஆன பின்னர்தான், ஏதோ ஒரு கூட்டத்தைக் கூட்டி, ‘தலைவர்’ செயல்திட்டங்களைத் தீர்மானமாக நிறைவேற்றினார்.
அப்படியென்றால், கொள்கைத் தீர்மானங்கள் எப்போது? அடுத்த ஆறு மாதம் கழித்து நடக்கலாம்.
விஜய் ‘சூப்பர் ஸ்டார்’ இல்லையா.. அவர் எதைச் செய்தாலும் அவரது ரசிகர்கள் ரசிப்பார்கள் இல்லையா..
அதனால், முதலில் சோறு போட்டு, சம்பார் ஊற்றி பிசைந்து வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டார். அது, மாநாடு. அதுதான், ஓப்பனிங் சீன்!
அப்புறம், இப்போதுதான் பல்துளக்கத் தொடங்கியுள்ளார். நேற்று காலை செயல்திட்டங்கள் தீர்மானித்தது. அது, அடுத்த சீன்!
‘தலைவரி’ன் அரசியல்படி பார்த்தால், இனிமேல்தான் – அதாவது சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னர் பல்துளக்கிவிட்டு, இனிமேல்தான் – ‘தலைவர்’ காலைக்கடனை முடிப்பார் போல. அதாவது, கொள்கைகளைத் தீர்மானிக்கும் சீன்!
திடீரென மனதுமாறி, அதான் சாப்பிட்டாச்சு, பல்லும் துளக்கியாச்சு; இனிமேல் எதற்கு காலைக்கடன். மதிய வேளையே வந்துவிடப் போகிறது எனக் கருதி கடந்துவிட்டாலும் கடந்துவிடுவார்.
அதுதான், ரசிக்கிறதுக்கு ஒரு கூட்டமும் காட்டுறதுக்கு மீடியாக்களும் இருக்கு. அப்புறம் எதைப்பற்றியும் அவர் ஏன் கவலைப்பட வேண்டும்.
000
ஒருவகையில், தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து பெருமை கொள்ளத்தான் வேண்டும். விஜய் ரசிகர்கள் வேறு, தமிழ்நாட்டின் மக்கள் வேறு என்பதைக் காட்டிவிட்டார்கள். நல்லது!
“தமிழகம்” என்று உளவாளி ரவி சொன்னபோது, “தமிழ்நாடு” என்று அனைத்து மக்களும் முழங்கினர்; சனாதனத்தை விமர்சித்த ஆ.ராசாவுக்கு எதிராக சங்கி கும்பல் கூச்சலிட்ட போது, தமிழ்நாடே திருப்பி அடித்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாசிச பா.ஜ.க. கூட்டணியையும் பா.ஜ.க.வின் அடிமை அ.தி.மு.க. கூட்டணியையும் மக்கள் புறக்கணித்தனர்.
ஆகையால், விஜயகாந்த், சீமான், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ரஜினிகாந்த் என ஒரே ஜானர்ல (அரை சங்கி), விஜய் இருப்பதை மக்களால் ரசிக்க முடியவில்லை.
000
அப்படின்னா, இலட்சக்கணக்கில் கூட்டம் சேர்ந்தது, எப்படி?
நடிகர் விஜய்க்காக கூடிய ரசிகர்கள் கூட்டம், அது ஒரு லட்சத்தைக் கூட தொடாது.
மீதி இருப்பதில், பா.ம.க., அ.தி.மு.க., சீமான் கட்சியினர் பெரும்பகுதி.
வி.சி.க., தி.மு.க.வில் இருந்து ஒரு சிறுபகுதி.
நடிகரை வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டம் இன்னொரு பகுதி.
ஓபனிங் சீனுக்கு வந்த இந்தக் கூட்டம், அடுத்தடுத்து தொடர்ந்து கூடுமா?
நடைபயணம் செய்யப் போவதாக ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளார், விஜய். இன்னும் இவருக்கு சினிமாக்காரன் புத்தி மாறவே இல்லை. கட்சி என்ற வகையில், முறையாக அறிவிக்கும் பொது அறிவு கூட இவருக்கு இல்லை. அது, இருக்கட்டும்.
ஆனால், அது அண்ணாமலையின் பாதையாத்திரையாக, சில மணி நேரம் மட்டும் காரில் ஊர்வலம் போவது போல இருக்குமா? அல்லது விஜயின் ‘கேரவன்’ யாத்திரையாக இருக்குமா?
அடுத்த சீன் என்ன என்ற இந்த விசயத்தில், விஜய், ரஜினிகாந்த் வழியையும் கமலஹாசன் வழியையும் சேர்த்துப் பின்பற்றலாம்.
அதாவது, மாநாடு மூலமாக, ஓரளவுக்கு கட்சி பிரபலம் ஆகியிருக்கு. அதை அப்படியே மெயிண்டெய்ன் செய்து கொண்டே, எப்படியாவது, ’69’-யை சூட்டோடு சூட்டாகக் கொண்டுவந்து காசை அள்ளிவிட வேண்டும். (இது, ரஜினி வழி. திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, தன்னைப் பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வரப்போவதாக பரபரப்பூட்டுவது.)
அந்த இடைப்பட்ட காலத்தில், ஓப்பனிங் சீன் (அதான், மாநாடு!) விஜய்-க்கு ஏற்படுத்திய விரக்தியும் தணிந்துவிடும்; ரசிகர்களும் ஓப்பனிங் சீனை மறந்துவிடுவார்கள். (இது கமலஹாசன் வழி. தேர்தல் வரும் போது கட்சியை தூசி தட்டி, ஓட்டுக்கேட்க புறப்பட்டு வருவது. அதற்கேற்ப சில ஜால்ராக்களை சேர்த்துக் கொண்டு, கட்சி – கூட்டம் என்று கதைவிட்டுக் கொண்டு மீடியா அட்டென்சனை தன்பக்கமே வைத்திருப்பது)
மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கலாம் என்று கூட விஜய் சிந்திக்கலாம்.
தமிழ்நாட்டில் இந்த கும்பலுக்கெல்லாம் கூட்டம் கூடுற வரைக்கும், எதுவும் நடக்கும்!
000
அப்படியெனில், தி.மு.க. ஊழலே செய்யாத கட்சியா, தி.மு.க.விற்கு முட்டுகொடுக்கிறாயா? என்றெல்லாம் கேட்கலாம்.
கேளுங்கள், நல்லதுதான்.
நாமும் சேர்ந்து கேட்போம்; தி.மு.க.வின் கார்ப்பரேட் திட்டங்களை எதிர்ப்போம்; மாணவர்களுக்கு கந்தசஷ்டி பாராயணம் நடத்தி பா.ஜ.கவுடன் மறைமுகக் கூட்டு வைத்திருப்பதை அம்பலப்படுத்துவோம்!
அவையெல்லாம், நமக்கான வேலைகள், நம்முடைய கடமைகள்.
அவற்றை, இந்த கார்ப்பரேட் சீரழிவு சினிமாவின் ஊழல் கொள்ளையனை வைத்துப் பேச என்ன இருக்கிறது? இவர் வந்து நம்முடன் போராடினாரா? நமக்காக குரல் கொடுத்தாரா? இவர்களுக்காக பரந்தூர் விவசாயிகளும், தூத்துக்குடி (ஸ்டெர்லைட்) மக்களும் காத்திருக்கிறார்களா?
கோடி கோடியாய் கொள்ளையடிப்பதற்கு அரசியலைப் பேசுகிற இந்தக் கூட்டம், திராவிடம், பெரியார், அம்பேத்கர், தமிழ், ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி, நல்லாட்சி ஆகியவை பற்றி பேச அருகதை இருக்கிறதா, என்பதுதான் நமது கேள்வி?
உரக்கக் கேட்போம்!
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram