விஜய் கட்சி தொடங்கிய போது, “நடிகர்விஜய்: ஒரு சினிமா கழிசடை, ஆளும் வர்க்க அரசியல் கழிசடையாக பரிணாமம்” என்று அவரைப் பற்றி வினவு தளத்தில் வெளியான கட்டுரைக்கு அவரது மாநாடு எந்த வகையிலும் விதிவிலக்காக அமையவில்லை. விஜய் மாநாடு குறித்தும் அதில் விஜய் பேசிய வசனங்கள் குறித்தும் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
இதுநாள் வரை சினிமாவில் கோடி கோடியாய் மக்கள் பணத்தைச் சுருட்டிய கார்ப்பரேட் சினிமா நாயகன்தான் விஜய்; விஜயின் சினிமா வாழ்க்கையே ஊழல்தான்; ஆடம்பர சொகுசுக்கார், வரி ஏய்ப்பு; தமிழ்நாட்டின் மக்கள் எத்தனைத் துன்பங்கள் அடைந்த போதும், நாட்டில் எத்தனை பிரச்சினைகள் வந்த போதும் அவற்றைப் பற்றி சிறிதும் அக்கறையின்றி, வக்கிரமான உல்லாச வாழ்க்கை போன்றவைதான் விஜயின் கடந்த கால, நிகழ்கால வாழ்க்கை.
இவர் கார்ப்பரேட் சீரழிவு சினிமாவின் ஊழல் கொள்ளையர் என்பதுதான், இவர் அரசியலில் நுழைந்திருப்பதற்கான நோக்கமும் காரணமுமாகும்.
இவர் நடித்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளன; வசூலையும் அள்ளியுள்ளன. ஆனால், சில தயாரிப்பாளர்கள் போண்டியாகியுள்ளனர். இது, விஜய் நடிகராக வாழ்ந்த முதல் பாகத்தின் கதை. அதாவது, “நடிகர் விஜய்”.
000
கூட்டுக்கொள்ளையர்களாகிய தயாரிப்பாளர்களையே போண்டியாக்கிய சினிமா கொள்ளைக்காரனான விஜய், இரண்டாவது பாகத்தில் அரசியல்வாதியாக வருகிறார். இதுதான், “அரசியல்வாதி விஜய்”!
இந்த முதல் பாகத்தில், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஒளி-ஒலி அமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், துணை நடிகர்கள் வகித்த பாத்திரங்களுக்கு இரண்டாவது பாகத்தில் பிழைப்புவாத தேர்தல் அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த இரண்டாம் பாகத்தில் ஒரே நாயகரும் தற்போதுவரை தயாரிப்பாளரும் விஜயே! நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இரண்டு வகையிலுமே கொள்ளையடிக்கலாம் என்பதுதான் திட்டம். அதற்கு இவரே இயக்குநர். மற்றவர்கள் அனைவரும் உதவி இயக்குநர்கள் மட்டுமே.
இருப்பினும், முதல் பாகத்திலும் இரண்டாவது பாகத்திலும் பிரச்சார வேலையென்னவோ அதே ஊடகங்கள்தான். கொள்ளைக்கு பலியாவது என்னவோ ரசிகர்களும் தமிழ்நாட்டின் மக்களும்தான்.
இரண்டாவது பாகமான “அரசியல்வாதி விஜய்”-யின் ஓப்பனிங் சீன்தான் இந்த மாநாடு.
இதில் விஜய் மட்டும் தெரிந்தார்; விஜய் துள்ளிக்கொண்டு ஓடி வந்தார்; அவர் மட்டும் மேடையில் காட்சி அளித்தார்; திரைப்படத்தைப் போலவே துணை நடிகர்கள் பலர் இருந்தும் யார் முகமும் அடையாளம் தெரியவில்லை; அவர் மட்டுமே பேசினார்; ரசிகர்களை போதையேற்றும் வகையில் அவர் சில வசனங்களை அள்ளிவிட்டார்.
முதல்பாகமான “நடிகர் விஜய்”-யில் ரசிகர்களாக வந்து சினிமா கவர்ச்சியில் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் விஜய்க்கு பலி கொடுத்து பாலபிஷேகம் செய்தவர்கள், இரண்டாம் பாகமான “அரசியல்வாதி விஜய்”-யில், தொண்டர்கள்!
000
“நடிகர் விஜய்” என்ற முதல் பாகத்தின் கடைசி சீன்களில் ஒன்றாக “கோட்” திரைப்படம் இருக்கலாம். நடிகர் விஜய் தனக்கு இணையாக நடிகர்கள் இல்லாமல் இவர் மட்டும் முதன்மையாகக் காட்டப்பட்ட பல படங்கள் ஊத்திக் கொண்ட வேளையில், 450 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை அள்ளிய திரைப்படம் “கோட்”. பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர் போன்ற சில இரண்டாம் நிலை நட்சத்திரங்கள் இருந்தாலும் ‘கோட்’ போல, விஜயைத் தவிர மற்றவர்கள் யாரும் டாப்பாகத் தெரியக் கூடாது என்பதற்காக கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையும் காட்சியமைப்பும் கொண்டதுதான் இந்த “அரசியல்வாதி விஜய்”.
ஒரே ஒரு தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசியல்வாதி, அது விஜய் – என்பது போல தொடங்கியது இரண்டாவது பாகம். இதன் ஓப்பனிங் சீன், மாநாடு.
திரைப்படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவது போல, எட்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு திரைப்பட சூட்டிங்கின் இண்டர்வெல் கேப்பில் கட்சியைத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார் விஜய். ஊடகங்கள் அதை ஊதிப்பெருக்கின.
அரசியல்வாதி விஜய்-க்கான புரமோஷன் ஷோக்களை நடத்தாமலேயே விளம்பரங்கள் சூடாக பரந்த சூழலில், “கோட்” திரைப்படத்தை வெளியிட்டு காசை அள்ளினார். எதிர்கால அரசியல்வாதி விஜய், சினிமா கொள்ளையனான நடிகர் விஜய்க்கு உதவி செய்த கதை இது. இதுவும் இரட்டைவேடம்தான்!
000
“கோட்” படத்தைப் போலவே, “அரசியல்வாதி விஜய்”-யில் நடிப்பதற்கு, இரண்டாம் நிலை அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்தார், அரசியல்வாதி விஜய். நடிகராக இருந்தாலும் விஜய்தான் டாப் (ஹீரோ), அரசியல்வாதியாக இருந்தாலும் விஜய்தான் டாப் (முதல்வர்). ஒப்புக்கொள்பவர்கள் கூட்டணிக்கு போகலாம்.
மாநாட்டில் அரசியல்வாதி விஜய் பேசியது எல்லாம், எழுதி கொடுத்து மனப்பாடம் செய்து பலமுறை ரிகர்சல் பார்த்த வசனங்கள், அதற்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை என்று நாம் கருதலாம்.
ஆனால், மாநாட்டின் இறுதியில், அரசியல்வாதி விஜய் பேசிய சூப்பர் வசனம் ஒன்று, பழம் தின்று கொட்டைப்போட்ட பிழைப்புவாத அரசியல்வாதிகளையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
“ஆட்சியிலும் அதிகாரத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு பங்குண்டு”, அதுதான், விஜயின் சூப்பர் வசனம்.
இவ்வளவு காலமாக முக்காடு போட்டு பேசிட்டு வந்தத, கொஞ்சமும் வெட்கப்படாம, இவ்வளவு பப்ளிக்காக பேசுறாரே என்பது பிழைப்புவாத அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
சில மாதங்களுக்கு முன்பு, ‘வில்லன்’ கூட்டணியில் புகைந்து கொண்டிருந்த இந்த பிரச்சினையை அரசியல்வாதி விஜய் அடையாளப்படுத்தி விட்டார். இதன்மூலம் ‘வில்லன்’ கூட்டணியினரும் ‘வில்லனு’க்கு எதிராக உள்ள மற்ற கூட்டணியினரும், தனது “அரசியல்வாதி விஜய்” திரைப்படத்தில் இரண்டாம் நிலை நட்சத்திரங்களாக பங்கேற்பதற்கான பகிரங்க பேரத்தை கூறிவிட்டார்.
ஓட்டு வாங்கி ஆட்சி அமைப்பதற்கு மட்டுமல்ல கூட்டணி, ஆட்சி அமைத்த பிறகு கொள்ளையடிப்பதிலும் அது தொடரும் என்பதுதான் அரசியல்வாதி விஜயின் தொழில் டெக்னிக்.
பா.ஜ.க-வை எதிர்ப்பவர்களுக்கு ஈ.டி. (அமலாக்கத்துறை); பா.ஜ.க-வை ஏற்பவர்களுக்கு “வாசிங் மிசின்”. பாசிச மோடி-அமித்ஷா கும்பல் உருவாக்கியிருக்கும் இந்த அரசியலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, விஜய் பேசியதைப் பார்த்து வியப்படைவதற்கு ஏதுமில்லை.
ஆட்சிக்கு வந்த பாசிஸ்டுகள் கையாளும் ஆயுதங்கள் அவை! ஆட்சிக்கு வரவிரும்பும் விஜய் பயன்படுத்தும் டெக்னிக் இது. இந்த வேறுபாடு தவிர, கூட்டணிக்கு கொள்கையும் தேவையில்லை, ஒரு வெங்காயமும் தேவையில்லை என்பது இரண்டுக்கும் இடையிலான ஒற்றுமை!
இருப்பினும், விஜயை பாசிஸ்டு என்றோ, அரை சங்கி என்றோ யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவர் பேசிய வசனங்கள்தான், “பெரும்பான்மை சிறுபான்மை என்று பிரித்தாள்வதை ஏற்கமுடியாது”, “அது பாசிசம்னா, நீங்க என்ன பாயசமா” போன்றவை.
இதைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
000
விஜய் நடித்த படங்களின் வில்லன்கள் எவ்வளவு குண்டுகளை வீசினாலும் விஜய் மட்டும் எழுந்து வருவார், சண்டை செய்வார் என்பது போல, அரசியல்வாதி விஜய்-க்கு அவர் உருவகப்படுத்தும் ‘வில்லன்’தான் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. கட்சியும், முதல்வர்-துணை முதல்வரான ஸ்டாலின்-உதயநிதியும்.
திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போல, அரசியலிலும் நடக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அரசியல்வாதி விஜய்-க்கு எதிரான வில்லனாக தி.மு.க. கட்சி, ஸ்டாலின்-உதயநிதியைத் தேர்ந்தெடுத்ததில் வியப்படைவதற்கு எதுவும் இல்லை. ஆனால், பரம்பரை குடும்ப அரசியல்வாதிக்கு எதிராக திடீர் அரசியல்வாதி என்று காண்ட்ராஸ்டான சினிமா டெக்னிக்கை சங்கிக் கும்பல் சொல்லிக் கொடுத்திருக்கும். அதற்கேற்ப, ஊழல் எதிர்ப்பு வசனங்கள், குடும்ப அரசியல் எதிர்ப்பு வசனங்களை அள்ளிவிட்டார் அரசியல்வாதி விஜய்.
000
அரசியல்வாதி விஜய் தனது கட்சிக்கு தலைவர்களாக சில பெண் தலைவர்களை அறிவித்தார். இது அவர் காட்டிய ‘சீன்’.
நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இரண்டு பாகங்களிலும் வரும் விஜய்க்கு உண்மையில் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், அது, ரஜினிதான்!
தனது இரண்டாம் பாகமான ‘அரசியல்வாதி ரஜினி’ திரைப்படம் வரும் என முப்பது ஆண்டுகளாக பலமுறை அறிவித்தாலும் நடிகர் ரஜினியால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை. ரஜினியின் அனுபவங்கள் விஜய்க்கு வழிகாட்டின.
ஆம், திரை உலகின் வழிகாட்டி, அரசியல் உலகிலும் வழிகாட்டி!
ஆன்மிக அரசியல் என்று அப்பட்டமாக பேசி அரை சங்கி என அம்பலப்பட்டார், இது தலைவரின் கதை. அதை இலாவகமாக கையாண்டது, தளபதியின் கதை.
சிவப்பாகவும் இருக்கக் கூடாது, காவியாகவும் இருக்கக் கூடாது இரண்டுக்கும் நடுவில் ஒரு கலரைத் தேர்வு செய்தார்; சாதிக்கட்சிகளுக்கே உரிய மஞ்சளை அத்துடன் அடித்துவிட்டார்; பசு மாட்டுக்குப் பதிலாக யானை; தாமரைக்குப் பதிலாக வாகை மலர்; தமிழ்நாட்டிற்கு பதிலாக தமிழகம்… இணையாக மூவேந்தர்களையும் இணைத்துக் கொண்டார், “பொன்னியின் செல்வன்” கல்கியைப் போல.
இதையெல்லாம் மறைப்பதற்கு, “திராவிடமும் தமிழ்தேசியமும் எனக்கு இரண்டு கண்கள்” என்று அள்ளிவிட்டார் வசனங்களை.
குடும்ப அரசியலை எதிர்க்கும் அரசியல்வாதி விஜய், தனது கட்சிக் கொடியை அம்மா ஷோபாவையும் அப்பா சந்திரசேகரையும் வைத்து அறிமுகம் செய்தார். விசிலடிச்சான் குஞ்சுகளான ரசிகர்களே இரண்டாம் பாகத்தில் தொண்டர்களாக வருவதால், விஜய் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
விஜய் எது செய்தாலும் அது சரி, வில்லன் அதையே செய்தாலும் அது தப்பு என்பதுதான் தொண்டனுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட கொள்கை.
“நான் ஒரு முறை சொன்னா, நூறு முறை சொன்னது போல” – இது பாட்சாவில் தலைவர் ரஜினி பேசிய வசனம். “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டன்னா, என் பேச்சை நானே கேட்கமாட்டேன்” – இது போக்கிரியில் தளபதி விஜய் பேசிய வசனம்.
சிந்தனை செய்யும் திறனற்ற ஒரு கூட்டத்தை உருவாக்கியதிலும், தலைவரின் வழியே தளபதியின் வழி.
“ஸ்டைல்” என்ற பெயரில் புகழ்பெற்ற இந்த சாக்கடைகள், காவி பாதாள சாக்கடையில் சங்கமிப்பது எவ்வளவு பொருத்தமானது, இந்த விசயத்தில் சனாதனம் அவ்வளவு ஆழமானது என நாம் ஒப்புகொண்டுதான் ஆக வேண்டும்.
000
“தொட்டப்பெட்டா ரோட்டு மேலே முட்ட பரோட்டா, நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…”, இது மகன் விஜய்-யும் அம்மா ஷோபாவும் சேர்ந்து பாடிய பாடல். இந்த பாடல், இந்த குடும்பத்தின் பண்பாடு. இந்தப் பண்பாட்டை தமிழ்நாட்டிற்கும் கடத்த வருகிறார், அரசியல்வாதி விஜய்.
சிந்திக்கும் திறனற்றவர்கள்தான் அவரது ரசிகர்கள் என்பது நமக்கு ஐயமில்லை. சிந்தித்து செயல்படுவதாகக் கருதிக் கொண்டிருக்கும் சிலர், அரசியல்வாதி விஜய் குறித்தும் அவரது மாநாட்டு வசனங்கள் குறித்தும் விவாதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அரசியல்வாதி விஜய்-யின் கதையில் இரண்டு ஆண்டுகளில் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக அமரும் காட்சி கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. துணை அரசியல்வாதிகளாக பலரும் சேர்வதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
“அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்பது இந்த ‘துணை’ அரசியல்வாதிகளின் ‘கொள்கை’. ‘ஆட்சியில் பங்கு’ என்பது, இந்த துணை அரசியல்வாதிகளுக்கு விஜய் போட்டுள்ள தூண்டில்!
தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம் என்று கருதிக்கொண்டு இந்த கூத்துகளையெல்லாம் நாம் சகித்துக் கொள்ளப் போகிறோமா என்பது நம் ஒவ்வொருவர் முன்னேயும் உள்ள கேள்வி?
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
அருமை