லியோ + மறுகாலனியாக்க சீரழிவு + அரசு

சமூகத்தைப் பேரழிவுக்குள் இழுத்துச் செல்லும் மறுகாலனியாக்க கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதே நம் முன் உள்ள தீர்வு. அதை மறுகாலனியாக்கத்தைப் பாதுகாக்கும்  இந்த அரசுக்கட்டமைப்புக்குள் செய்ய முடியாது. இந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நமக்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

டிகர் விஜய் நடித்த லியோ படத்தின் ட்ரெய்லர் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில் சென்னையில் ரோகிணி தியேட்டரின் இருக்கைகளும், ஸ்கிரீனும் உதிரிக்கும்பலால் நொறுக்கப்பட்டது. இது குறித்து ”திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கு போலீசாரின் தவறான கையாளுதலே காரணம், ரசிகர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முறையாக கையாண்டிருக்க வேண்டும், அனுமதி வழங்குவது மட்டுமல்லாமல் எந்த ஒரு சேதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தக்  கருத்தை சற்றே விரிவுபடுத்தி சிந்தித்துப் பாருங்கள்… குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் பிரச்சினை கிடையாது. குடித்துவிட்டு வரும் குடிகாரன் பிரச்சினை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கிரிமினல் குற்றங்கள் பிரச்சினை கிடையாது. மற்றவர்களைப் பாதிக்காத வகையில் கிரிமினல் குற்றங்கள் நடக்க வேண்டும். அப்படித்தானே நீதிபதி அவர்களே…

சினிமா போதை, டாஸ்மாக்  உள்ளிட்ட சமூகத்தை சீரழிக்கும் போதைக் கலாச்சாரம் தான் கொலை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களுக்கு அடிப்படையாக உள்ளன. இவற்றைத் தடை செய்தால்தான் இத்தகைய கிரிமினல் குற்றங்களைத் தடுக்க முடியும். இதெல்லாம் கணம் நீதிபதிகளுக்குத் தெரியாத ஒன்று அல்ல.

இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் நுகர்வு வெறியையும், சீரழிவுகளையும் தூண்டிவிட்டு கார்ப்பரேட் முதலாளிகளும், சினிமா கழிசடை கும்பலும் கல்லா கட்டுவதுதான் முக்கியம். அதுதான் மறுகாலனியாக்கத்தின் அடிப்படை விதி. இந்த விதியை நடைமுறைப்படுத்துவதுதான் அரசுக்கட்டமைப்பின் வேலை.


படிக்க: சினிமா அரசியல் போதை மிருகம் – விஜய்


மறுகாலனியாக்கப் பொருளாதாரக்  கொள்கைகளால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவது எப்படி வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறதோ, அப்படித்தான் அதே மக்களை நுகர்வுவெறியூட்டி சுரண்டுவதையும், சீரழிப்பதையும் தடை செய்வதைப் பற்றி சிந்திக்காமல், அதெல்லாம் பொழுதுபோக்கு என்று குற்றங்களை முறைப்படுத்துவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் உள்ளிட்ட அரசுக் கட்டமைப்பின் அங்கங்கள் அனைத்தும் இதனை நியாயப்படுத்துகின்றன.

தியேட்டருக்கும், குடியைக்கெடுக்கும் டாஸ்மாக்குக்கும் பாதுகாப்பு கொடுப்பது எங்கள் வேலை அல்ல என்று போலீசு என்ன போராட்டமா நடத்தப் போகிறது? ஒன்றும் இல்லை. ஏனென்றால் டாஸ்மாக்கை பாதுகாப்பதுதான் அவர்களது கடமை. அதுதான் ஆளுகின்ற அரசாங்கங்களின் மாபெரும் கடமை. அதனால்தான் டாஸ்மாக்கை தடை செய் என்று போராடுபவர்களை ஒடுக்குகிறார்கள். இவர்களிடம் சென்று நமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று யாராவது சிந்திக்க முடியுமா?

சமூகத்தைப் பேரழிவுக்குள் இழுத்துச் செல்லும் மறுகாலனியாக்க கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதே நம் முன் உள்ள தீர்வு. அதை மறுகாலனியாக்கத்தைப் பாதுகாக்கும்  இந்த அரசுக்கட்டமைப்புக்குள் செய்ய முடியாது. இந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நமக்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

இந்த அரசுக்கட்டமைப்புக்கு வெளியே மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலமாகத்தான், மக்களுக்காக போராடுவதையே பண்பாடாக மாற்றுவதன் மூலமாகத்தான் இத்தகைய இழிவுகளை ஒழித்துக் கட்டுவதற்கான பாதையை செப்பனிட முடியும்.


இனியன்விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க