தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: அரசின் அலட்சியமே காரணம்!

விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் டி.என்.ஏ பரிசோதனை செய்து நபர்களை அடையாளம் காண வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஜூன் 30 அன்று தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை (reactor) வெடித்ததில் 42 பேர் பலியாகியுள்ளனர்.

சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி மருந்து ஆலை (Sigachi Chemicals) செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் உலை வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த போது ஆலையில் 143 பேர் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் டி.என்.ஏ பரிசோதனை செய்து நபர்களை அடையாளம் காண வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து இரண்டே நாளான 24 வயது பீம் ராவ் என்ற தொழிலாளியின் மனைவி சோனு, “முதல் நாள் அவர் நலமாக வீடு திரும்பினார். நேற்று அவருக்கு இரண்டாவது நாள்; வெடி விபத்து நடந்தது. அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்…” என்று ஐந்து மாதக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு தனது துயரத்தை செய்தியாளர்களிடம் கூறினார்.

பத்து ஆண்டுகளாக இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 29 வயதான லட்சுமி முகியாவைத் தேடி அவரது சகோதரர் மிதிலேஷ் முகியா பீகாரிலிருந்து வந்துள்ளார்.  அவர் தி நியூஸ் மினிட் செய்தியாளரிடம் “நிர்வாகத்துடனோ அரசு அதிகாரிகளுடனோ பேச யாரும் எங்களை அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. எங்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.


படிக்க: கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!


விபத்தைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதேபோல், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ரசாயன ஆலையின் வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று கூறியுள்ளார். இது ரேவந்த் ரெட்டி அரசு தனது தவறை மறைப்பதற்கான நடவடிக்கையாகும்.

தெலங்கானாவில் கடந்த 30 மாதங்களில் குறைந்தது 10 வெடி விபத்துகள் பதிவாகியுள்ளன. லாபவெறியால் தொழிற்சாலையை முறையாகப் பராமரிக்காமல் இயக்கும் தனியார் நிறுவனங்களை அரசு முறையாகக் கண்காணிப்பதில்லை என்பதையே இந்த தொடர் விபத்துகள் காட்டுகின்றன.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க