தெலங்கானா சுரங்க விபத்து: தொழிலாளர்களைக் கைவிட்ட அரசு!

சுரங்கத்தில் அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நிறுவனம் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது எட்டு தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அம்ராபாத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 8 தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கிக் கொண்டனர்.

ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்திலிருந்து நல்கொண்டா மாவட்டத்திற்குக் குடிநீர் கால்வாய் அமைக்கும் வகையில், ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் (எஸ்.எல்.பி.சி) அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு 42 கி.மீ தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கம் தோண்டி வருகிறது. கடந்த சனிக்கிழமை (22.02.2025) ஐம்பது தொழிலாளர்கள் நாகர் கர்னூல் மாவட்டத்தில் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, 14 கி.மீ தொலைவில் சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்து, 8 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்; பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். கட்டுமான பணியின்போது நீர் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, இராணுவம் ஆகியவற்றின் தலைமையில் எட்டு தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) பேட்டியளித்த நாகர்குர்னூல் போலீசு கண்காணிப்பாளர் வைபவ் கெய்க்வாட், “இதுவரை சிக்கிக் கொண்டவர்களிடம் தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை. மீட்புப் படை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வழி உருவாக்கும் வகையில் கனரக இயந்திரங்கள் கொண்டு சேற்றை அப்புறப்படுத்தி வருகிறது. நீரை வெளியேற்றும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் இருக்கும் சிதைந்த துளையிடும் இயந்திரத்தின் பாகங்களை அகற்றுவது தான் சவாலான பணியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

”துளையிடும் இயந்திரத்திற்கு முன்பு தான் தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டிருப்பதாகக் கருதுகிறோம்; ஆனால் அங்குள்ள சேற்றையும் உடைந்த இயந்திர பாகங்களையும் அப்புறப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது” என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்பிறகு, 2023 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட்டில் நடந்த சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்ட எலிவளை சுரங்க தொழிலாளர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக் கணக்கான டன்கள் எடையுள்ள சேற்றையும் கழிவுகளையும் இதுவரை அப்புறப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், 7 நாட்களாகியும் இன்னும் தொழிலாளர்கள் மீட்கப்படவில்லை.


படிக்க: உத்தராகண்டில் சுரங்கம் இடிந்ததில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மோடியின் வெற்றியா?


இச்சம்பவத்திற்குப் பிறகு, தொழிலாளர்கள் வசிக்கும் தொமல்பெண்டா கிராமம் இருண்டு காட்சியளிக்கிறது, “எங்களைப் போன்றே அவர்களும் இந்த ஆபத்தான வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் எங்களது குடும்பங்கள் உயிர் வாழ்கிறது. அடிக்கடி நீர் கசிவு ஏற்படுவதாக நாங்கள் புகார் செய்துள்ளோம். இந்த வேலையை நாங்கள் தவிர்க்க முடியாது, வேலைக்குச் சென்று தான் ஆக வேண்டும்” என்று சஞ்சய் சா (வெல்டர்) என்கிற விபத்தில் உயிர் தப்பிய தொழிலாளி கூறினார். இவரும் சனிக்கிழமை காலையில் சுரங்கத்திற்கு வேலைக்குச் சென்று பாதுகாப்பாக வெளியில் வந்தவர்களில் ஒருவர்.

“இரவுநேர பணியாளர்கள் நீர் கசிவு உள்ளதாக எங்களிடம் தகவல் கொடுத்தனர். ஆனால், இது பலமுறை நிகழ்கிறது என்பதால், நாங்கள் எச்சரிக்கையுடன் வேலை செய்தோம். நாங்கள் வேலைக்குச் சென்ற 15-20 நிமிடங்களில் சேறு சரியத் தொடங்கியது, மேற்பகுதி விழுந்ததிலிருந்து நான் 20 மீட்டர் தொலைவில் தான் இருந்தேன். ஷ்ப்டின் இன்சார்ஜ் எங்களுக்கு எச்சரிக்கை செய்தார். எச்சரிக்கை மணியும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. நாங்கள் ஓடத் தொடங்கினோம், சில நிமிடங்களில் பெரிய வெடிச் சத்தத்துடன் மேற்பகுதி இடிந்து விழுந்தது. வருகை பதிவைச் சோதிக்கும் போது தான் எட்டு பேர் மாட்டிக் கொண்டார்கள் எனத் தெரிந்து கொண்டோம்” என சஞ்சய் சா மேலும் கூறினார்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்த மனோஜ் குமார், சீரி நிவாஸ்; ஜார்க்கண்டிலிருந்து வந்த சந்தீப் சாகு, ஜக்த செஸ், சந்தோஷ் சாகு, அனுஜ் சாகு; ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்த சன்னி சிங் ஆகியோர் தான் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாக அரசு அடையாளப் படுத்தியுள்ளது. இந்த தொழிலாளர்களில் பெருமளவு அவர்கள் வேலைக்குச் சென்றுதான் குடும்பங்களுக்கு உணவளிக்கும் நிலைமையுள்ளது. எட்டு தொழிலாளர்களின் குடும்பங்களும் தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர்.

சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் சக தொழிலாளிகள் மூலம் தான் தகவல் சென்றுள்ளது. அரசு தரப்பிலிருந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முறையாகத் தகவல் கூட வழங்கப்படவில்லை. “எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை; அதிகாரிகள் எதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களது குடும்பங்களுக்கு நாங்கள் என்ன சொல்வது?” என ஆதங்கத்துடன் சுரங்க தொழிலாளி கோவிந்த் கூறினார்.

அனுஜ்-இன் உறவினர் சஞ்சிவ் சாகு, “தொழிலாளர்களின் குடியிருப்புகளில் அவரும் நானும் ஒரே அறையில் இருப்போம். இருவரும் சேர்ந்துதான் சனிக்கிழமை வேலைக்குச் சென்றோம், இடிந்து விழுவதற்கு முன்பாக துளையிடும் இயந்திரத்திற்கு முன் எதையோ நோக்கிக் கொண்டிருந்தார். மூன்று சாகோதரவர்களில் இவர் தான் மூத்தவர். இவர் ஒருவர் மட்டும் தான் அவர்களது குடும்பத்தில் பொருள் ஈட்டுபவர்” எனக் கூறினார்.

மற்றொரு சுரங்க தொழிலாளி சஞ்சீவ், “எங்களது வாழ்க்கையை அன்றாடம் பணயம் வைக்கிறோம். ஆனால், எங்களுக்கு வேலை செய்ததற்கான கூலியைத் தரவில்லை. நிறுவனம் பொறியாளர்களை மட்டும் தான் பணிக்கு எடுக்கிறது. தொழிலாளிகளை ஒப்பந்த அடிப்படையில் தான் எடுக்கிறது. சுரங்கம் மூடப்பட்டு விட்டது. எப்பொழுது அடுத்து பணி தொடங்கும் என்று தெரியாது. எப்படி நாங்கள் வீட்டுக்குப் போவோம், எங்களிடம் பணமில்லை” என கோவத்துடன் கேள்வியெழுப்பினார்.


படிக்க: மோடியின் ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் இரயில் விபத்துகள்!


சுரங்கத்தில் அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நிறுவனம் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது எட்டு தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்துள்ளது.

கடந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த விபத்தின் போது இதேபோல்தான் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் இந்திய ராணுவம் எவ்வளவு முயற்சி செய்தும் கடைசியில் எலிவளை சுரங்க தொழிலாளர்களை வைத்து தான் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்குப் பின்னரும் கூட தேசிய பேரிடர் மீட்புப் படையும் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து எந்தவொரு தயாரிப்பும் இல்லாமல் இருந்துள்ளது. அரசுக்கு தொழிலாளர்களின் உயிர் குறித்து எந்த அக்கறையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

”தொழிலாளர்களை உயிருடன் மீட்பது சாத்தியமில்லை” என்று கூறுவதற்குத்தான் அரசு உள்ளது.

அகப்பட்டிருக்கும் தொழிலாளர்களைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து (எலிவளை சுரங்க) தொழிலாளர்கள்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


ஹைதர், சரவணன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க