மோடியின் ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் இரயில் விபத்துகள்!

மோடி அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ள போதிலும் இரயில்வே விபத்திற்கு மனிதத் தவறுகள் தான் காரணம் என்றும், திட்டமிட்ட சதியால் தான் ரயில் விபத்து நடந்துள்ளது என்றும் திசைதிருப்பும் வேலையையே பாசிச மோடி அரசு செய்கிறது.

டந்த அக்டோபர் 11-ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி பாக்மதி அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 8.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எறிந்தன. 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அரசால் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதால் ஏற்பட்ட சத்தத்தினை கேட்டு அந்த பகுதிக்கு அருகிலிருந்த கிராமங்களில் வசித்து வந்த மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு அவர்களுக்குத் தேவையான தண்ணீர், பிஸ்கட் முதலியவற்றைக் கொடுத்து அனைவரையும் காப்பாற்றியுள்ளனர்.

விபத்து குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்ட பிறகு அரக்கோணத்தில் இருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பெட்டிகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 19 பேர் ஆம்புலன்சுகள் மூலம் ஸ்டான்லி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகள் கவரப்பேட்டை அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் பேருந்துகள் மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சனிக்கிழமை (அக்டோபர் 12) காலை சிறப்பு ரயில்கள் மூலம் தர்பங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: ரயில்வே துறையைச் சிதைத்து  கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கும் பாசிச மோடி கும்பல்!


கடந்த ஆண்டில் மேற்குவங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பஹா நகர் பஜார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதைப் போன்று இந்த பாக்மதி ரயில் விபத்தும் ஏற்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் அளவுக்கு பாக்மதி ரயில் வேகமாகச் செல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று செய்திகளில் கூறப்படுகிறது. எனவே, நூலிழையிலேயே கோரமண்டல் ரயில் விபத்தைப் போன்று கோரவிபத்து நடைபெறுவதிலிருந்து பாக்மதி ரயில் தப்பித்துள்ளது.

பாக்மதி ரயில் விபத்திற்கு ஜனநாயக சக்திகள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மக்களும் மோடி அரசுக்கெதிரான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தார்மீகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “ஆறு நாட்களுக்கு ஒரு முறை ரயில் விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? உயிர்ச்சேதம் இல்லை என பெரும் நிம்மதி இருந்தாலும், ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கித் தள்ளும் சூழலிலிருந்து மீளாமல் இருக்கும் ரயில்வே துறை என்ன தான் செய்யப் போகிறது?” எனத் தனது விமர்சனத்தை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஏராளமான தொடர் ரயில் விபத்துகள் நடந்தும் பல உயிர்கள் பலியானபோதும் மோடி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மோடி அரசு விழித்துக் கொள்வதற்கு இன்னும் எத்தனை குடும்பங்களை பலி கொடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


படிக்க: தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?


இவ்வாறு மோடி அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ள போதிலும் இரயில்வே விபத்திற்கு மனிதத் தவறுகள் தான் காரணம் என்றும், திட்டமிட்ட சதியால் தான் ரயில் விபத்து நடந்துள்ளது என்றும் திசைதிருப்பும் வேலையையே பாசிச மோடி அரசு செய்கிறது.

மோடியின் பத்தாண்டுக்கால ஆட்சியில் இரயில்வே துறை திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டதே இரயில் விபத்துகளுக்குக் காரணம் என்பதை அத்துறையைச் சார்ந்த அதிகாரிகளே கூறிவிட்டனர். சான்றாக, விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட தெற்கு ரயில்வே தலைமைச் செயலாளர் ஆர்.என் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாக்மதி விரைவு ரயில் மெயின் லைனில் வருவதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அருகில் வரும்போது அதிர்வுகள் ஏற்பட்டு லூப் லைனில் போவதற்கு சிக்னல் காட்டியுள்ளது. அதன்படி சென்ற ரயில் அங்கே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் மீது மோதியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த ரயில் விபத்து மட்டுமின்றி மோடி – அமித்ஷா கும்பலின் பாசிச ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் ரயில் விபத்துகளுக்கு ரயில்வே துறைக்கான நிதியை வெட்டுவது; காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் ரயில்வே துறையைத் திட்டமிட்டுச் சீரழித்து கார்ப்பரேட்மயமாக்குவதே காரணமாகும். எனவே ரயில்வே துறை கார்ப்பரேட்மயமாக்கப்படுவதை ஒழித்துக்கட்டாதவரை ரயில் விபத்துகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க