இந்தியாவில் பயணிகள், ரயில்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்கும் வகையில் ரயில்வே துறையில் போதுமான அளவுக்கு பணியாளர்கள் இல்லை என்பது நீண்ட நாள் முறையீடாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதற்கு பணியாளர்களின் பணிச்சுமையும், பற்றாக்குறையும் முதன்மை காரணமாகக் கூறப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் ரயில்வே வாரியத்தின் தலைவர் – தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள சதீஷ்குமார் பணியாளர் பற்றாக்குறை குறித்து நிதித்துறை அமைச்சகத்துக்கு எழுதி இருக்கும் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.
2021 நிலவரப்படி இந்தியாவில் சராசரியாக 13,555 ரயில்கள் பயணிகளுக்காகவும், சரக்குகள் எடுத்துச் செல்வதற்காகவும் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர். 150 கோடி டன் சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மொத்தம் 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ரயில்வேவில் மத்திய மண்டலத்தில் மட்டும் ஏறக்குறைய 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ரயில்களை இயக்குவது, பராமரிப்பது ஆகிய பணிகளை உள்ளடக்கிய பயணிகள் பாதுகாப்பு நோக்கிலான துறைகளில் மட்டும் இவ்வளவு பற்றாக்குறை இருப்பது கவலை அளிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேவில் 31,000 கிலோமீட்டர் வழித்தடம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 2019 – 2024 காலகட்டத்தில் 772க்கும் மேற்பட்ட புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 2019ல் இருந்த இன்ஜின்களின் எண்ணிக்கை 2024 இல் 59.86 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இன்ஜின்களை இயக்குவதற்கு மட்டுமில்லாமல் இந்த கட்டமைப்பைப் பராமரிப்பதற்கும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் வேண்டும். ரயில் நிலையங்களில் உள்ள மின்படிகள் (எஸ்கலேட்டர்) மின்தூக்கிகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் விடும் மோடி அரசு அவற்றை நிர்வகிக்கத் தேவையான விகிதத்தில் பணியாளர் நியமனம் செய்வதில்லை.
வருவாய் நோக்கில் அரசுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் தான் இந்திய ரயில்வேவின் செயல்பாடு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பயணிகள் ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 40 சதவீதமும் சரக்கு ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 31.40% அதிகரித்துள்ளன. புதிய பணியாளர் நியமனத்துக்குப் பொருளாதாரத் தடைகள் இருக்க வாய்ப்பு இல்லை. எனினும் பணிகளை மின்னணு மயமாக்குதல், பணி அயலாக்கம் (அவுட்சோர்சிங்) ஆகிய நடவடிக்கைகள் மூலம் பணியாளர்களுக்கான இடங்கள் குறைக்கப்படுகின்றன. எனினும் மனிதர்களின் நேரடி பங்களிப்பு இன்றி பல வேலைகள் தேக்கம் அடைவதும், வேலையின் தரம் குறைவதும் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகின்றன.
படிக்க: தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?
ரயிலின் ஒரு பெட்டிக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதனை அதிகாரி (டிடிஇ) இருந்த நிலை மாற்றப்பட்டு, தற்போது ஒரு ரயிலுக்கே மொத்தமாக இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள் தான் உள்ளனர். ஓட்டுநர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் ஒரே பணியாளரே தொடர்ந்து இரண்டு ஷிப்ட் ரயிலை இயக்க வேண்டிய நிலையும் கூட இருப்பதாக ரயில்வே தொழிலாளர் அமைப்புகள் முறையிட்டு வருகின்றன. இது சில வேலைகளில் விபத்துகளுக்கு வழி வகுப்பதும், அது ஓட்டுநரின் தவறாகவும் அலட்சியமாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுவதும் புதிதல்ல.
இந்தச் சூழலில் தான் பணியாளர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு தேவை என ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் சதீஷ்குமார் சுட்டிக்காட்டி இருக்கிறார். ரயில்வே துறைக்குள்ளிருந்து எழுந்திருக்கும் முக்கியமான குரல் இது.
ஆனால் பாசிச மோடி அரசு இதையெல்லாம் தெரியாமல் செய்யவில்லை. பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா உள்ளிட்ட பிற பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளி அம்பானி, டாட்டாவுக்கு பலனளிக்கும் வகையில் செய்தது. அதேபோல் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் சதி இதனுள் அடங்கியுள்ளது.
தனியாருக்கு ரயில்வே துறையைத் தாரைவார்க்கும் பாசிச மோடி அமெரிக்காவிற்குச் சென்று வெள்ளியில் செய்த ரயிலை பைடனுக்கு பரிசளித்துள்ளது தற்செயலானதல்ல. இதை ஒரு அடிமை தன் ஆண்டைக்கு மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்துப் பரிசளிக்கும் குறியீடாக கொள்ளலாம். இன்னும் பல விசயங்களைக் குறியீடாக நமக்குத் தெரிவிப்பார் பிரதமர் மோடி என நாம் உறுதியாக நம்பலாம். கார்ப்பரேட்டுகளையும் அவர்களுக்கு நாட்டின் வளங்களை கூறுபோடும் சங்பரிவார பாசிசக் கும்பலையும் வீழ்த்தாமல் நமது வளங்களையும், எதிர்காலத்தையும் நாம் காத்துக் கொள்ள முடியாது.
முகநூலிலிருந்து… மக்கள் அதிகாரம் – நெல்லை மண்டலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram