இன்று (30.07.2024) காலை மும்பை ஹௌரா ரயில் சார்கன் சந்திரபூர் சந்திப்பருகே தடம் புரண்டுள்ளது. 18 பெட்டிகள் தடம் புரண்டுள்ள இந்த துயர விபத்தில் தற்போது அறிந்தவரையில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்; இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சரக்கு ரயில் ஒன்று மும்பை ஹௌரா ரயிலில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்ததாக தடம் புரளும் ரயில் விபத்துகளில் தற்போது இச்சம்பவமும் இணைந்துள்ளது. கடந்த ஆண்டு 02.06.2023 அன்று ஒடிசா மாநிலம் பலாசூரில் மூன்று ரயில்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 1200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ரயில் விபத்துகள் நடந்து வருகின்றன. ஜூன் 17, 2024 அன்று கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில் மீது அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து ஜூலை 18 சண்டிகர் திப்புருகர் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டு 4 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அதே வரிசையில் இன்று ஜார்கண்டில் ரயில் தடம் புரண்டுள்ளது. இதனிடையே ஜூலை 20 மற்றும் 21 தேதிகளில் மட்டும் மூன்று சரக்கு ரயில்கள் தடம் புரண்டுள்ளன. ஜூலை 26 சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. மேற்கூறிய விபத்துகளில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
2014 முதல் 2023 வரை சுமார் 638 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. சராசரியாக வருடத்திற்கு 71 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வரும் இந்த ரயில் விபத்துகளுக்கு சிக்னலை மதிக்காமல் அதிவேகமாக ரயிலை ஓட்டுவது தான் காரணம் என்று ரயில்வே துறை கூறியுள்ளது. ஆனால் இருக்கும் சிக்னல்கள் பழுதடைந்து இருப்பதுதான் விபத்துகளுக்கு காரணம் என்று ரயில்வே ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
படிக்க: கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து: தடம்புரள்வது ரயில்கள் அல்ல, ரயில்வேதுறை!
மேலும் ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் மொத்தம் 3.12 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அவை திட்டமிட்டு நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கு காரணம் என்ன?
ரயில்வே துறையில் நிதி பற்றாக்குறை இருப்பது தான் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கும் காரணம் என்று ரயில்வே அமைச்சகம் கூறுகின்றது. ஆனால் இந்த ஆண்டிற்கான நிதி அறிக்கையில் ரயில்வே துறைக்கு 2.62 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே அதிகமாகும். இதில் பராமரிப்பிற்கு மட்டும் 1.08 இலட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்படும் நிதி எங்கு செல்கிறது? மேல்தட்டு மக்கள் மட்டும் பயணிக்கும் வந்தே பாரத், கௌரவ பாரத் போன்ற சொகுசு ரயில்களை உருவாக்குவதற்கும், ரயில்களில் ஏசி பெட்டிகளை அதிகப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ரயில் நிலையங்களில் சொகுசு நடவடிக்கைகளான மோடி செல்பிபுத் (selfie booth), புட் மசாஜர் ஆகியவற்றுக்குச் செலவிடப்படுகிறது.
இதனால், ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள சாதாரண உழைக்கும் மக்களின் நிலை இடிபாட்டுக்குள் சிக்கி மூலை முடுக்குகளில் நசுங்கி பயணிக்கும் படி உள்ளது. மேலும், பயணச்சீட்டின் விலையும் தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ரயிலின் பராமரிப்பு பணிகள் குறைந்து வருகிறது. ரயிலின் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டு ஏ.சி பெட்டிகளாக அவை மாற்றப்பட்டு வருகின்றன. மேல்தட்டு மக்களின் ஆடம்பரமான பயணத்தை உறுதி செய்வதற்காக சாதாரண மக்களின் அத்தியாவசியமான பயணத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க இந்த ரயில் வழித்தடங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று வெறும் வாய் வார்த்தையாக மட்டும் ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரயில் தடம் பாதுகாப்பிற்கு “கவாச்” இயந்திரம் பொருத்தப்படும் என்று அமைச்சகம் கூறியிருந்தது. இந்த கவாச் இயந்திரம் சிக்னலுக்கு ஏற்ப ரயிலை ஓட்டுநர் நிறுத்த தவறினாலும் தானியங்கியாக ரயிலை நிறுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தால் தொடர்ந்து அரங்கேறி வரும் இந்த ரயில் விபத்துகள் அனைத்தும் தடுக்கப்பட்டு இருக்க முடியும். ஆனால் மேற்கூறிய பாதுகாப்பு பணிகள் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறது ரயில்வே துறை.
படிக்க: மோடி ஆட்சியில் தொடர் நிகழ்வாகி வரும் ரயில் விபத்துகள்
இவை அனைத்திற்கும் காரணம் என்ன?
சாதாரண உழைக்கும் மக்களின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான ரயில்வே போக்குவரத்து இன்று பொதுமக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது.
காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, பராமரிப்பிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படாமல் இருப்பது போன்ற எல்லா நடவடிக்கைகளும் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை கார்ப்பரேட்டின் கைகளில் கொண்டு செல்வதற்கான பணியே ஆகும்.
இது போன்ற சம்பவங்களைக் காரணம் காட்டி ரயில்வே துறையை தனியார்மயமாக்க அரசு முயல்கிறது. தனியார்மயப்படுத்தப்படும் சேவை துறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றன. அன்றாடம் ரயிலில் பயணிக்கும் உழைக்கும் மக்களுக்கு தனியார்மயமாக்கப்பட்ட ரயில் போக்குவரத்து கைக்கு எட்டாமலேயே போய்விடும். உழைக்கும் மக்களை ஒரு பொருட்டாகவே பாசிச மோடி அரசு கருதுவதில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது, பராமரிப்புக்கு போதுமான நிதி ஒதுக்குவது மற்றும் கவாச் போன்ற பாதுகாப்பு அம்சங்களை அனைத்து ரயில்களிலும் பொருத்துவது ஆகியன உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முடிவு கைவிடப்பட்டால் தான் அரசு மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவற்றை மக்கள் கோரிக்கைகளாக மாற்றி ரயில்வே ஊழியர்களும், சாதாரண பொது மக்களும், பயணிகளும் களத்தில் இறங்கும் பொழுது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube