கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பலாசூரில் சரக்கு ரயில்-கோரமண்டல் விரைவு ரயில்-ஹவுரா விரைவு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி தடம்புரண்டதால் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர ரயில் விபத்து நடந்து சரியாக ஒராண்டு நிறைவடைந்த நிலையில், மற்றொரு கோர ரயில்விபத்து மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரியில் நடந்திருக்கிறது.
கடந்த ஜூன் 17 அன்று நியூ ஜல்பைகுரிக்கு அருகில் உள்ள ரங்காபானி ரயில்வே நிலையத்தில் நின்றுகொண்டிருந்த கஞ்சன் ஜங்கா பயணிகள் ரயில் மீது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சரக்கு ரயில் ஓட்டுநரும், பயணிகள் ரயில் பாதுகாவலரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து ஏற்பட்டவுடன் ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹா, இவ்விபத்திற்கு சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலை மதிக்காமல் அதிவேகமாக ரயிலை ஓட்டிச் சென்றதுதான் காரணமென்று கூறினார். ஆனால், அந்தப் பகுதியின் ரயில்வேதுறை அதிகாரிகள் சிலர், அன்று காலை 5:50 மணியிலிருந்தே ஆட்டோமேட்டிக் சிக்னல்கள் வேலை செய்யவில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் மட்டுமல்ல, ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்தபோதும், மனிதத் தவறுகள்தான் காரணமென்று உண்மையை மூடிமறைக்க முயற்சித்தது ரயில்வே அமைச்சகம். ஆனால், ஒடிசா ரயில் விபத்திற்கு மனிதத் தவறுகள் மட்டுமே காரணமல்ல, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது போன்ற ரயில்வேதுறையை சீரழிக்கும் பாசிச மோடி அரசின் கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கைகளே முதன்மை காரணம் என்று பலரும் அம்பலப்படுத்தினர்; படுகொலைகளுக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் குரல் எழுப்பப்பட்டது.
படிக்க: மோடி ஆட்சியில் தொடர் நிகழ்வாகி வரும் ரயில் விபத்துகள்
ஆனால், அவற்றையெல்லாம் துளியும் மதிக்காத மோடி அரசு, தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ரயில்வே துறைக்கு மீண்டும் அஸ்வினி வைஷ்ணவையே அமைச்சராக நியமித்துள்ளது. இதன்மூலம் ரயில்வேதுறையை கார்ப்பரேட்மயப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை பாசிசக் கும்பல் அறிவிக்கிறது.
தீவிரப்படுத்தப்படும் கார்ப்பரேட்மயமாக்கம் தொடரும் படுகொலைகள்
2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2023 வரை சுமார் 638 ரயில் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. 2014-ஆம் ஆண்டிலிருந்து, சராசரியாக வருடத்திற்கு 71 ரயில்கள் தடம்புரள்வதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகமே ஒப்புக்கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் உயிர் பறிப்போவது குறித்து துளியும் கவலைகொள்ளாத பாசிச மோடி அரசு கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்காக ரயில்வேதுறையை சீரழித்து வருவதே இத்தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.
சிக்னல்கள் ஒழுங்காக செயல்படாமல் இருப்பதே ரயில் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ள நிலையில், 2021-22 ரயில்வே வாரிய புள்ளிவிவரத்தின்படி, மொத்தமுள்ள 8,747 சிக்னல் கருவிகளில் 2,592 கருவிகள் பழுதடைந்துள்ளன. இதற்கு, சிக்னல் சம்பந்தப்பட்ட 14,850 பணியிடங்கள் காலியாக இருப்பதே முக்கியக் காரணமாகும். அதேபோல், ரயில் ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்களுக்கான 20,000 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே அமைச்சரே, ரயில்வேயில் மட்டும் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
படிக்க: ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!
அதுமட்டுமின்றி, கடந்த ஜூன் 28, 2023 அன்று, அகில இந்திய ரயில்வே பொறியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 60,000 பொறியாளர்கள், “தண்டவாளங்கள், சிக்னல் கருவிகளைப் பராமரிப்பது மற்றும் பழுதுபார்ப்பது போன்ற பணிகளுக்குரிய காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில், அப்பணிகளை தனியார் நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்த வேண்டும்” என்று ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ரயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பாதுகாப்புப் பணிகளுக்காக செலவு செய்யாமல், வேறு காரணங்களுக்காக செலவிட்டதால்தான் ரயில் விபத்துகள் ஏற்படுவதாக 2021-22-ஆம் ஆண்டு வெளியான சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்துகிறது. கடந்த 2017-18 முதல் 2021-22 வரையில், ரயில்வே பாதுகாப்பு காரணங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனைக்கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்கள் மற்றும் ரயில் வழித்தடங்களிலும், ரயில் பாதுகாப்பு சாதனமான கவாச் இயந்திரத்தை ரூ.45,000 கோடி செலவில் பொருத்தியிருக்க முடியும்.
ஆனால், இத்தகைய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளாமல், மேட்டுக்குடிகளுக்கான “வந்தே பாரத்”, “கவுரவ் பாரத்” போன்ற ஆடம்பர ரயில்கள் தொடங்குவது, ரயில் நிலையங்களில் 6.25 லட்சம் செலவில் “மோடியின் தன்பட முனையம்”(Modi selfie booth) அமைப்பது, ஃபூட் மாசாஜர் (Foot Massager), ஆடம்பரப் பொருட்கள் (crockery, furniture), மடிக்கணினிகள் வாங்குவது என ரயில்வே நிதி அயோக்கியத்தனமாக செலவிடப்பட்டிருப்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெட்டவெளிச்சமாக்கியது. இதிலிருந்தே பாசிச மோடி அரசின் மக்கள் விரோதத் தன்மையை புரிந்துக் கொள்ள முடியும்.

ஒடிசா ரயில் விபத்திற்குப் பிறகு, ரயில்களில் கவாச் இயந்திரம் பொருத்தப்படாமல் இருப்பது குறித்து பெரும் விவாதம் எழுந்த பிறகே, 2023-க்குள் 6,000 கி.மீ. நீளமுள்ள டெல்லி-குஹாத்தி ரயில் வழித்தடங்களில் (இதில் மேற்கு வங்கமும் உள்ளடங்கும்) ரயில் பாதுகாப்புச் சாதனமான கவாச் இயந்திரம் பொருத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. ஆனால் வெறும் 1,500 கி.மீ. வரையிலான ரயில் வழித்தடங்களில் மட்டுமே கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவேளை திட்டமிட்டப்படி கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தை தடுத்திருக்க முடியும் என்பதே கசப்பான உண்மை.
ஆகவே, கஞ்சன் ஜங்கா, கோரமண்டல், ஹவுரா போன்ற ரயில்கள் தடம்புரண்டதை விபத்துகள் என்று சொல்ல முடியாது, இது கார்ப்பரேட் கொள்ளைக்காக மோடி அரசு நடத்திய படுகொலையாகும்.
சேவைத்துறைகள் லாபத்திற்கானதல்ல!
ரயில்வேதுறையை கார்ப்பரேட்மயப்படுத்த வேண்டுமென்பதற்காகவே திட்டமிட்டே காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, பாதுகாப்புப் பணிகளை புறக்கணிப்பது, ரயில்களில் அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருப்பது ஆகியவற்றை செய்து வருகிறது மோடி அரசு. மற்றொருபுறம் ரயில்வேதுறை நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி ரயில் கட்டணத்தை ஏற்றுவது, சாதாரண உழைக்கும் மக்கள் பயன்படுத்துகிற பொதுப் பெட்டிகள் மற்றும் உறங்கும் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவற்றை அதிக விலைக்கொண்ட குளிர்சாதனப் பெட்டிகளாக மாற்றுவது ஆகியவற்றை செய்து வருகிறது. இதனால், உழைக்கும் மக்கள் ரயில் பெட்டிகளின் மூலைமுடுக்குகளிலும் கழிவறைகளிலும் ஆடுமாடுகளைப் போல் அடைந்துக்கொண்டு பயணிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவையெல்லாம் மக்கள் மனமுவந்து கார்ப்பரேட்மயத்தை ஏற்றுக்கொள்வதற்கு அரசால் செய்யப்படும் சூழ்ச்சிகளாகும்.
மேலும், இவையெல்லாம் மக்களின் வரிப்பணத்தாலும், இரயில்வே தொழிலாளர்களின் உழைப்பாலும் உருவாக்கப்பட்ட ரயில்வேதுறையை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி, ரயில் பயணத்தை உழைக்கும் மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுகிற நடவடிக்கைகளாகும். ரயில்வேதுறை மட்டுமின்றி, மறுகாலனியாக்கக் கொள்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவரும் கல்வி, மருத்துவம், தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளிலும், விவசாயம் மற்றும் தொழிற்துறைகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடித்து லாபத்தில் கொழுக்க வேண்டுமென்பதற்காகவே “சேவை”த்துறைகளின் அடிப்படைகளை ஒழித்துக்கட்டி அவற்றை மக்களை ஒட்டச்சுரண்டுவதற்கான துறைகளாக பாசிசக் கும்பல் மாற்றிவருகிறது. இக்கொடூர சுரண்டலுக்கு எதிராக எழும் மக்கள் போராட்டங்களை தங்களது பாசிச சர்வாதிகாரத்தின் மூலம் ஒடுக்கிவிடவும் எத்தணிக்கிறது.
எனவே, பாசிசத்தை வீழ்த்த வேண்டுமானால், பாசிசத்திற்கு அடிப்படையான மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு மாற்றான, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட, மாற்று அரசியல்-பொருளாதார திட்டங்களை முன்வைத்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறன்றி, மறுகாலனியாக்கக் கொள்கைகளால் நாட்டில் நடக்கும் ரயில் விபத்துகள், நீட் படுகொலைகள், விவசாயப் படுகொலைகள் என எதையும் தடுக்க முடியாது, தவிர்க்கவும் முடியாது.
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube