Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 457

NSA : ஒரு அரசியல் சதி ! அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு வாதம் !

அறிவுரைக் கழகத்தின் தலைவர் (Chairman – Advisory board) முன்பு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் – ஆதரவாளர்கள் 6 பேரின் சார்பாக தோழர் தியாகு வாதம்! காணொளி !

லிலூர் ரகுமான், முகமது அனஸ், முகமது இர்ஷத், முருகன், சரவணன், கோட்டையன் ஆகிய ஆறு தோழர்களை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டு கைது செய்தது தூத்துக்குடி போலீசு. இத்தகைய கொடுங்கோல், தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு அறிவுரைக் கழகத்தின் முன் விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற நடைமுறையின் படி,  சென்னை அறிவுரைக் கழகத்தில் ஜூலை 11, 2018 அன்று விசாரணை நடந்தது.

இதில் தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 6 பேரின் சார்பாக, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நிறுவனர் தோழர் தியாகு அவர்கள், நடுவர்கள் முன்னிலையில் வாதாடினார். நடுவர்கள் முன் தாம் முன்வைத்த வாதங்கள் குறித்து வினவு இணையதளத்தோடு பகிர்ந்து கொண்டார்.

அவரது வாதத்தில், இந்த 6 பேர் மீது தடுப்புக்காவல் சட்டம் முறையற்ற வகையில் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் 6 பேர் மீதும் இதற்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டதாக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. எவ்வித குற்றப்பின்னணியும் இல்லை. ஆகவே எவ்வகையிலும் இவர்களின் மீது தடுப்புக் காவல் சட்டத்தை பிரயோகிக்க முடியாது என்று முன் வைக்கப்பட்டது.

அறிவுரைக் கழகம்
தோழர்கள் முகமது அனஸ், முகமது இர்ஷத், கலியலூர் ரகுமான்

மேலும், 6 வெவ்வேறு இடங்களில், வெவ்வேறான 6 குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 6 இடங்களும், பல கிமீ தூரம் இடைவெளியுடையவை. இந்தச் சம்பவங்கள் குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனில் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று இதுவே எடுத்துக்காட்டுகிறது.

இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, போலீசு, வருவாய்துறை அதிகாரிகளின் சாட்சியைத் தவிர தற்சார்பான சாட்சி எதுவும் இல்லை. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல இவர்களது சாட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது. மாவட்ட ஆட்சியர், 144 தடை உத்தரவை இறுதி வரையில் இணையதளத்தில் வெளியிடவில்லை. நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துதான் பெற முடிந்தது. துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் இல்லை. இதுவே இங்கு அரசினுடைய சதியை அம்பலப்படுத்துகிறது. போலீசின் மீதான குற்றத்தை மறைக்க மக்கள் அதிகாரத்தின் மீது தீவிரவாத அமைப்பு என்ற முத்திரை குத்தி அவர்களின் மீது பலி போட்டு தப்பிக் கொள்ள நினைக்கிறது அரசு.

99 நாட்கள் நடைபெறாத வன்முறை 100-வது நாள் நடந்திருக்கிறது என்றால் இது அரசின் சதியைத் தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது. தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த 6 பேரும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த முகாந்திரமும் இல்லாமல் இப்பொய் வழக்குகளை போட்டிருக்கிறது அரசு.

அறிவுரைக் கழகம்
தோழர்கள் கோட்டையன், முருகன், சரவணன்

இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக சொல்லும் போலீசு, அதற்கு ஏதாவது காணொளி, புகைப்படத்தின் மூலம் ஆதாரம் காட்டினால் ஏற்றுக் கொள்கிறோம் என்று போலீசுக்கு சவாலாகச் சொல்கிறோம். போலீசும் அரசும் தம் மீதுள்ள துப்பாக்கிச்சூட்டு பழியை மறக்கடிக்க மக்கள் அதிகாரத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறது.

மக்களுக்கு நல்ல காற்று வேண்டும், நல்ல சுற்றுச் சூழல் வேண்டும் என்ற அடிப்படையில் இவர்கள் 6 பேரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். இது அடிப்படை அரசியல் சாசனச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமை. மக்களுக்காக போராடும் இவர்களை பழி வாங்கும் விதத்தில், அரசு இவர்கள் மீது பொய்வழக்கு போட்டிருக்கிறது. அதற்கு இக்கழகம் உதவக்கூடாது.  அரசுக்கு இவர்களை விடுவிக்க வேண்டும் என அறிவுருத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

  • வினவு களச் செய்தியாளர்

சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்

மார்க்ஸ் பிறந்தார் – 15
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

6. “யதார்த்தத்தை இரக்கமற்ற முறையில் விமர்சனம் செய்தல்”

இயற்கையான பிராணிகளின் உலகத்தில் உழைக்கின்ற தேனீக்கள் சோம்பேறித் தேனீக்களைக் கொன்றுவிடுகின்றன; ஆனால் மனிதர்களைக் கொண்டிருக்கும் “பிராணிகளின் உலகத்தில்” “சோம்பேறித் தேனீக்கள் உழைக்கின்ற தேனீக்களை, துல்லியமாக உழைப்பின் மூலமாகவே கொன்றுவிடுகின்றன.” (1)

சொத்துடைமை உறவுகளின் சமூக அநீதியினால் கோபாவேசமுற்ற மார்க்ஸ் “ஏழைகளை, அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் உடைமை இல்லாத மிகப் பலருடைய”(2) நலன்களை உறுதியாக ஆதரித்தார்.

“கற்றறிந்த, கற்றுக் கொள்ளப்போகின்ற அடிமைத்தனத்தின்” உதவியுடன் ஒவ்வொரு இழிந்த கோரிக்கையையும் “உரிமை என்ற கலப்பில்லாத தங்கமாக” மாற்றுகின்ற “செய்முறையான” காடுகளின் உடைமைக்காரர்களே மார்க்ஸ் அம்பலப்படுத்துகிறார்.

அந்தக் காடுகளின் உடைமைக்காரர்களிடம் பணிவோடு நடந்து கொள்கின்ற சட்டசபை உழைக்கும் மக்களின் உரிமைகளை இன்னும் அதிகமாகக் குறைப்பதற்கு எல்லாவிதமான நேர்மையற்ற தந்திரங்களையும் செய்கிறது.

காட்டு விதிகளை மீறியவர்களின் நலன்களைப் பற்றிய பிரச்சினை வரும் பொழுது சட்டசபை சுள்ளிகளைச் சேகரிப்பதற்கும் விறகைத் திருடுவதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நிராகரிக்கிறது; ஆனால் “காட்டுக்கு உடைமைக்காரர்களின் நலன்களைப் பற்றிய பிரச்சினை வரும் பொழுது இந்த வேறுபாட்டை அங்கீகரிக்கிறது.”(3)

தனியார் நலன் செய்முறையானது, சுய நலமுடையது, கோழைத்தனமானது. அது சட்டமின்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அது கோழைத்தனமானது. தன்னிடமுள்ள எல்லாவற்றையும் இழக்க வேண்டிய ஆபத்தேற்படுகின்ற பொழுது அது நடுங்குகிறது. தனியார் நலன் சட்டசபை உறுப்பினர் என்ற பாத்திரத்தை நடிக்கும் பொழுது தீங்கு செய்பவர்களை நினைத்து அச்சமடைந்து அவர்களுக்கு எதிராகச் சட்டங்களை வெளியிடுகிறது.

“கோழைத்தனத்தினால் தூண்டப்படுகின்ற சட்டங்களின் குறிப்பிடத்தக்க பண்பு கொடுஞ்செயல்; ஏனென்றால் கோழைத்தனம் கொடுமையாக நடந்து கொள்கின்ற போது மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும்.”(4)

காடுகளின் உடைமைக்காரர்களின் கருவியாக நடந்து கொண்ட ரைன் மாநில சட்டசபையின் பரிதாபகரமான பாத்திரத்தை வெளிப்படுத்தும் பொழுது சமூகத்தில் அரசின் பாத்திரத்தையும் வேறுவிதமான கண்களுடன் பார்க்கும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார். அரசு என்பது மனிதனுடைய இனக்குழு வாழ்க்கையின் சாராம்சத்தின் வெளியீடு என்ற ஹெகலிய மூடபக்தியும், அதன் தொடர்பாக அவரிடம் எஞ்சியிருந்த பிரமைகளும் மறைந்தன.

மார்க்ஸ் பிறந்தார்“சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை” என்கிறார் மார்க்ஸ். இத்தர்க்கம் அரசின் அதிகாரத்தைக் காடுகளின் உடைமையாளரின் ஊழியனாக மாற்றுகிறது. “அரசின் உறுப்புகள் அனைத்தும் காதுகளாக, கண்களாக, சுரங்களாக, கால்களாக மாறுகின்றன, காடுகளின் உடைமையாளருடைய நலன்கள் அவற்றின் மூலமாகக் கேட்கின்றன, பார்க்கின்றன, மதிப்பிடுகின்றன, பாதுகாக்கின்றன, கையை நீட்டுகின்றன, ஓடுகின்றன.”(5)

சுயநலத்தின் “குதர்க்கங்கள்” பொருள்களுக்கு ஒரு “அதிசயமான குணாம்சத்தைக்” கொடுக்கின்றன. காட்டின் உடைமையாளரிடமிருந்து திருடப்பட்ட விறகு அவரை உடனடியாக அரசின் உருவகமாக மாற்றிவிடுகிறது; ஏனென்றால் அவர் திருடனுக்கு எதிராக அரசின் உரிமையைப் பெற்றுவிடுகிறார். ஆகவே “காட்டின் உடைமையாளர் விறகுத் திருடனைப் பயன்படுத்தி அரசையே திருடிவிடுகிறார்.”(6)

ஒரு மரக்கட்டையின் மீது உரிமையை இழக்கும் பொழுது உடைமையாளர் ஒரு மனிதனின் மீதான உரிமையைப் பெறுகிறார். ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் வருகின்ற ஷைலக் ஒரு பண முறிக்காக ஒரு பவுண்டு தசையைக் கோருவதைப் போன்றதே இதுவும்.

மார்க்ஸ் தலைகீழாக இருக்கின்ற உலகம் என்ற கருத்துக்கு மறுபடியும் வருகிறார் என்பதை நாம் காண முடியும். இக்கருத்தைப் பின்னர் உழைப்பு அந்நியமாதல், பண்ட மூட பக்தி என்ற வகையினங்களில் அவர் வளர்த்துக் கூறுகிறார். இளம் மார்க்ஸ் விறகு திருடப்படுவதைப் பற்றிய கட்டுரையை விறகு “ரைன் பிரதேசத்தைச் சேர்ந்தவருடைய மூடபக்தி” என்று முடிக்கிறாரென்றால் மூலதனத்தில் பண்டத்தின் “மரக்கட்டை மூளை” முதலாளித்துவ உறவுகளின் மொத்த உலகத்தையும் எப்படி ஆட்சி புரிகிறது என்று எடுத்துக்காட்டுகிறார்.

விறகு திருடப்படுவதைத் பற்றிக் கட்டுரை எழுதிய வேலை தனக்குச் சிறிதும் திருப்தியளிக்கவில்லை; சட்டசபை உறுப்பினர்களுடைய அலுப்புத் தருகின்ற, அற்பத்தனமான விவாதங்கள் தனக்கு அருவருப்பைக் கொடுத்தன என்று மார்க்ஸ் ஒத்துக் கொள்கிறார். எனினும் இந்த வேலை அவருடைய அக்கறைகளை ஒரு புதிய பாதைக்குள் திருப்பியது.

அவர் வறுமையில் உழல்கின்ற, உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களை, பத்திரிகை நிருபர்கள் வர்ணிக்கின்ற மக்களை நேருக்கு நேராகக் கண்டார். அவர் “தேவையின் இரக்கமற்ற குரலை” – புத்தகங்களிலிருந்து அல்ல, மூன்றாவது கைமாறியல்ல – மோஸெல் விவசாயிகளிடம் நேரடியாகக் கேட்டார்.

“சொந்த நாட்டில் அவரால் என்றுமே மறக்க முடியாத வேதனையின் பொதுஜன மொழியைப் பத்திரிகையின் பக்கங்களில் எழுதுவது, மக்கள் குரலை தான் கேட்ட விதத்தில் மிகவும் அதிகமான மனச்சாட்சியுடன்” (7) வெளியிடுவது தன்னுடைய “அரசியல் கடமை” என்று மார்க்ஸ் கருதினார்.

முதலாளி வர்க்க மார்க்சிய ஆராய்ச்சியாளர்கள் (மார்க்சியத்தை எதிர்ப்பதற்கு வேறு எந்த “வாதமும்” அவர்களுக்குக் கிடைக்காத பொழுது) மார்க்சின் ‘ஈரமற்ற பகுத்தறிவு வாதத்தைப்’ பற்றி, அவர் தனிமனிதனை வெறும் சூக்குமமான கருத்தமைப்பாக, ஒரு வகையான ‘பொருளாதார மனிதனாகக்’ கருதியதைப் பற்றி (அப்படி அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்), அவர் பெருந்திரளான மக்களின் உண்மையான துன்பங்களினால் சிறிதும் தூண்டப்படவில்லை என்பதைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மார்க்சை நேரடியாக அறியாதவர்களே இப்படி எழுத முடியும். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி அவருடைய “பகுத்தறிவு பூர்வமான வாதங்களை” மட்டுமல்லாமல் அவருடைய சொந்த உணர்ச்சிகளின் வன்மையையும், மனிதன் இழிவுபடுத்தப்படுகின்ற, மனித உரிமைகளும் கெளரவமும் மீறப்படுகின்ற ஒவ்வொரு ஸ்தூலமான இனத்திலும் அவரிடம் ஏற்பட்ட வேதனையையும் கோபத்தையும் அறிந்து கொள்வதற்கு மோஸெல் நிரூபர் நியாயப்படுத்துகிறார் (1842 கடைசியில் எழுதப்பட்டது). 1844ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள், அல்லது மூலதனத்தின் முதல் தொகுதியைப் படிப்பதே போதுமானது.

தனிச் சொத்துடைமை உறவுகளின் இயந்திரகதியான இயக்கத்தில் மார்க்ஸ் (அவருடைய வார்த்தைகளில்) “மனித இதயத்தின் துடிப்பைக்” (8) கேட்டார். அதைப் போல மார்க்சின் நூல்களிலும் அவருடைய இதயத்தின் துடிப்பை நாம் தெளிவாகக் கேட்கிறோம். அந்த இதயம் இரக்க உணர்ச்சியினால் இரத்தத்தைக் கொட்டியது, ஆத்திரத்திலும் வெறுப்பிலும் சுருங்கியது.

மார்க்சின் அறிவு மனிதகுலக் கலாச்சாரத்தின் ஆன்மிகச் செல்வம் அனைத்தையும் திரட்டியிருந்தது என்றால் அவருடைய இதயம் மனித குலத்தில் துன்பப்படுபவர்கள் அனைவருக்காகவும் இரத்தத்தைக் கொட்டியது என்று கூறினால் மிகையாகாது.

மார்க்சின் அறிவு மனிதகுலக் கலாச்சாரத்தின் ஆன்மிகச் செல்வம் அனைத்தையும் திரட்டியிருந்தது என்றால் அவருடைய இதயம் மனித குலத்தில் துன்பப்படுபவர்கள் அனைவருக்காகவும் இரத்தத்தைக் கொட்டியது என்று கூறினால் மிகையாகாது. ஹென்ரிஹ் மார்க்சின் அச்சங்கள் ஆதாரமற்றவை அவருடைய மகனின் இதயம் தலையுடன் பூரணமாகப் பொருந்தியிருந்தது.

மோஸெல் நிருபர் நியாயப்படுத்துகிறார் என்ற கட்டுரையில் மார்க்ஸ் “வேதனையைக் கொட்டி எழுதியிருக்கிறார்”. அதில் தன்னுடைய சொந்த ஊரான டிரியரில் அதிகாரிகள் எதேச்சாதிகாரத்தோடு நடந்து கொண்ட பல உதாரணங்களைக் காட்டுவதோடு வழக்குரைஞர் என்ற முறையில் நியாயத்துக்காகப் பாடுபட்ட தன் தகப்பனார் நடத்திய வழக்குகளையும் குறிப்பிடுகிறார் என்பது எளிதில் புலப்படும் (“வாழ்க்கைத் தொழிலைத் தேடல்” என்ற அத்தியாயத்தில் இந்த உதாரணங்களைப் பற்றி அதிகமான விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன).

மார்க்சியம் அதன் தோற்றுவாயில் புத்தெழுச்சியூட்டுகின்ற வாழ்க்கையின் ஜீவனால் பேணி வளர்க்கப்பட்டிருக்காவிட்டால் அது உலகத்தின் விஞ்ஞானக் கண்ணோட்டமாக வளர்ச்சி அடைந்திருக்க முடியாது. ஆனால் “வாழ்க்கை” உண்மைகளைச் சாதாரணமாக, அனுபவவாத முறையில் பொதுமைப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல; “அனுபவ யதார்த்தத்தின்” மீது தத்துவச் சிந்தனையின் தலைமையான சிகரங்களிலிருந்து ஒளி பாய்ச்சக் கூடிய திறமை மார்க்சிடம் இருந்தது;

மேலும் அதற்கு எதிர் முறையில் ஸ்தூலமான யதார்த்தத்தைப் பற்றிய ஸ்தூலமான பகுப்பாய்வை, பொதுமைப்படுத்தலின் புதிய சிகரங்களுக்கு முன்னேறுவதற்கு, அதற்குரிய தத்துவத்தைத் தேடுவதற்கு அவர் அடிப்படையாக்கினார். இது மார்க்சிடமிருந்த சிறப்பான அம்சமாகும்.

உலகத்தின் மோசமான அமைப்பைப் பற்றியும் பல்வேறு தனிமனிதர்களுடைய துன்பங்களைப் பற்றியும் மார்க்சிடம் திரட்டப்பட்டிருந்த உணர்ச்சிமிக்க பதிவுகள் அந்த மோசமான அமைப்புக்குரிய காரணத்தைத் தேடும்படி, அதன் முரண்பாடுகளை விளக்கும்படி, “முதல் பார்வைக்குத் தனிப்பட்ட நபர்கள் மட்டுமே செயல்படுவதைப் போலத் தோன்றுகின்ற சந்தர்ப்பங்களில் புறநிலை உறவுகளின் விளைவைக் காணும்படி” (9)அவரைத் தூண்டின.

ஒரு ஜனநாயகப் பத்திரிகை மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி “பகுத்தறிவை, ஆனால் அதே அளவுக்கு உணர்ச்சியையும் ஆதாரமாகக் கொண்டு” நடத்தப்பட வேண்டும், இருக்கின்ற உறவுகளைப் பற்றி எழுதுகின்ற பொழுது “தீர்ப்புக் கூறுகின்ற மதிநுட்பம் நிறைந்த மொழியில் மட்டுமே எழுதாமல் அந்த சந்தர்ப்பங்களின் உணர்ச்சிகரமான மொழியையும்” (10) உபயோகிக்க வேண்டும் என்று மார்க்ஸ் எழுதியவை அவருக்குப் பொருந்துகின்றன.

அதிகாரவர்க்க எதேச்சாதிகாரம் மற்றும் முடியாட்சியின் போலியான மிதவாத சமிக்கைகளைப் பற்றிப் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிய பிறகு முடியாட்சி மற்றும் அதிகாரவர்க்கத்தின் சமூக நிலையையும் பாத்திரத்தையும் பற்றித் தத்துவ ரீதியாக விளக்கும்படி அன்றைய நிலைமைகளின் தர்க்கவியல் மார்க்சைத் தூண்டியது.

மார்க்ஸ் பிறந்தார்அரசு பற்றிய ஹெகலியத் தத்துவத்துடனும் முடியாட்சியிடம் ஹெகல் கொண்டிருந்த விசுவாசத்துடனும் அரசியலமைப்புச் சட்ட எதேச்சாதிகாரம் என்ற அவருடைய இலட்சியத்துடனும் கணக்குத் தீர்த்துக் கொள்ளும்படி இது மார்க்சை ஊக்குவித்தது. சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் என்ற பெரிய கையெழுத்துப் பிரதி 1843ம் வருடத்தின் கோடைகாலத்தில் எழுதி முடிக்கப்பட்டது.

ஆனால் மார்க்ஸ் 1841ம் வருடத்தின் பிற்பாதியில், அதாவது அவர் பட்டம் பெற்றுப் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பிறகு அதை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும் என்று உத்தேசமாகக் கூறலாம். மார்க்ஸ் 1842 மார்ச்சில் அர்னோல்டு ரூகேக்கு எழுதிய கடிதத்தில் அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி என்பது “கலப்படம்” என்று குறிப்பிட்ட அதே விமர்சனத்தை இதில் காண்கிறோம்.

மார்க்ஸ் Rheinische Zeitung பத்திரிகைக்கு எழுதிக் கொண்டிருந்த அதே சமயத்தில் சட்டம் பற்றிய ஹெகலிய தத்துவஞானத்தைப் பற்றி கட்டுரை எழுதிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அக்கட்டுரையில் அவர் உபயோகித்திருக்கும் கருத்துக்கள், சிந்தனைகள் ஆகியவற்றில் பல அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதிய பத்திரிகைக் கட்டுரைகளில் உள்ள கருத்துக்களுடன் அநேகமாக சொல்லுக்குச் சொல் பொருந்துகின்றன.

மார்க்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளில் பிரஷ்ய அரசு இயந்திரத்தின் ஸ்தூலமான, தனிப்பட்ட அம்சங்களைக் கடுமையாக விமர்சித்தார் என்றால் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்தைப் பற்றி அவருடைய நூலில் முடியாட்சி, அதிகாரவர்க்க அரசின் கோட்பாட்டையே அவர் விமர்சிக்கிறார். அவர் பிரஷ்ய எதேச்சாதிகாரத்தின் உதிரிப் பகுதிகளைத் தாக்கவில்லை; அதன் மையப் பகுதியை, அதிகாரிகள் பிரிவினால் ஆதரிக்கப்பட்டுப் புனிதமடைந்த தனிச் சொத்துடைமை அமைப்பைத் தாக்குகிறார்.

ஹெகலியத் தத்துவஞான மொழியைப் பற்றி அறியாதவர்கள் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்தைப் பற்றிய இந்நூலைப் படித்துப் புரிந்து கொள்வது கடினம். எனினும், இன்றும் கூட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்ற மிக ஆழமான, சுவாரசியமான கருத்துக்கள் இந்நூலில் ஏராளமாக இருக்கின்றன.

மார்க்சின் விமர்சனத்திலுள்ள முக்கியமான கருத்துக்களை மட்டும் இங்கே எடுத்துரைப்போம்.

முடியாட்சியையும் அரசரையும் பற்றிய விமர்சனம் நூலின் மையப் பகுதியாக இருக்கிறது. ஹெகலின் கருத்துப்படி அரசின் உருவகமே அரசர். ஹெகல் அவரை உண்மையான “கடவுள்-மனிதனாக”, அரசு என்ற கருத்தின் உண்மையான உருவகமாகக் காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்.

எல்லாக் குடிமக்களின் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக, “பொது நன்மையை” நிறைவேற்றுவதற்காக அரசு இருக்கிறது என்பார் ஹெகல்.
இங்கே ஹெகல் மிக மோசமான முறையில் தன்னை மறுக்கிறார்.

ஒரு மனிதர் மொத்த அரசையும் உருவகப்படுத்துகிறார் என்றால் மற்ற எல்லாக் குடிமக்களுக்கும் தனிப்பட்ட பொறுப்புக் கிடையாது என்ற அர்த்தம் சரியானதா? அதிகாரத்தின் முழுச் சக்தியும் ஒரு நபரிடம் குவிக்கப்படுகின்ற பொழுது மற்ற எல்லா நபர்களுமே சக்தியில்லாதவர்களாகி விடுகிறார்கள். ஒரு நபர் “கடவுள்-மனிதன்” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டால் மொத்த சமூகமுமே மனிதத் தன்மை இல்லாத, மனிதத் தன்மைக்கு முந்திய, விலங்குக்கு உரிய நிலையில் இருக்கிறது என்று அர்த்தமாகும். மதத்தில் கடவுளின் சர்வவல்லமை மனிதனைக் “கடவுளின் அடிமையாக” மாற்றுவதைப் போன்றதே இதுவும்.

மார்க்ஸ் பிறந்தார்“அரசர் சர்வவல்லமை உடையவரா அல்லது மக்கள் சர்வவல்லமை உடையவர்களா? இது தான் பிரச்சினை!”(11)

ஹெகல் கருத்துமுதல்வாதக் கோட்பாட்டை முரணில்லாமல் பின்பற்ற விரும்பி மிகவும் கொச்சையான “பொருள்முதல்வாதத்துக்குள்” விழுகிறார். அவருடைய கருத்தமைப்பின் குறை இதில் அடங்கியிருக்கிறது.

அரசர் அரசு என்ற கருத்தைத் தன்னிடத்தில் நிறைவேற்றுகிறார், இக்கருத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலியாக அவர் ஏன் இருக்க வேண்டும்? பாரம்பரியத்தின் அடிப்படையில், உடலின் அடிப்படையில் – இனப்பெருக்க நடவடிக்கை அந்த உடலின் மிக உயர்ந்த செயல்.

“அரசரின் இனப்பெருக்க நடவடிக்கைதான் மிக உயர்ந்த அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கையாகும்; ஏனென்றால் அவர் அதன் மூலமாக அரசரைத் தயாரிக்கிறார், தன்னுடைய உடலை நிரந்தரமாக்குகிறார். அவருடைய மகனின் உடல் அவருடைய சொந்த உடலின் புனருற்பத்தியே, அரசருடம்பின் படைப்பே.”(12)

ஆகவே அரசு தன்னுடைய தலைமையான செயல்களில் ஒரு “பிராணியின் யதார்த்தத்தைப்” பெறுகிறது. இப்படி ஹெகல் இயற்கையைப் பற்றிக் காட்டிய இகழ்ச்சிக்காக அது ஹெகலைப் பழிவாங்குகிறது.

எதேச்சாதிகார ஆட்சி அதிகாரவர்க்கப் படிவரிசை முறையை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். அரசின் தலைவர் இந்த அதிகாரவர்க்க பிரமிடின் உச்சியில் இருப்பவரே. இந்த நிகழ்வின் தன்மையை ஹெகல் வெளிக்காட்டவில்லை; அவருடைய அரசியல் போக்குகளினால் அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. மார்க்ஸ் இந்தக் குறையைத் திருத்துகிறார். எதேச்சாதிகார அரசின் உள்ளுக்குள் ஊடுருவிச் செல்கிறார்.

அதிகாரவர்க்கம் என்பது அரசின் உணர்வு, அரசின் சித்தம், அரசின் அதிகாரம். அது வெளித்தோற்றத்துக்குப் “பொது நன்மையின்” பிரதிநிதியாகவும் பாதுகாவலராகவும் செயலாற்றுகிறது. ஆனால் “பொது நன்மை” என்பது கற்பனை செய்யப்பட்ட பொதுமையே; அதற்குப் பின்னால் ஒரு திட்டவட்டமான தனிச் சலுகை கோஷ்டியின் நலன் இடம் பெற்றிருக்கிறது, அல்லது ஹெகலைப் பின்பற்றி மார்க்ஸ் கூறுவதைப் போல “கார்ப்பரேஷன் உணர்ச்சி” இடம் பெற்றிருக்கிறது.

அதிகாரவர்க்கத்தினர் அரசின் மதகுருக்கள், அதன் யேசு சபையினர், அதன் இறையியல் தத்துவாசிரியர்கள். அவர்களிடம் எல்லாமே இரண்டு அர்த்தங்களைப் பெற்றுவிடுகின்றன : உண்மையான அர்த்தம் ஒன்று, விஷயங்களை அறியாதவர்களுக்கு மறைத்துவைக்கப்படுகின்ற இரகசியமான அர்த்தம் மற்றொன்று. ஆகவே “அதிகாரவர்க்கத்தின் பொது உணர்ச்சி இரகசியம், மர்மம்”.(13)

அதிகாரவர்க்கம் வெளியுலகத்திலிருந்து தனித்து வைக்கப்பட்டிருப்பதில், அதன் ஒதுக்கமான, “கார்ப்பரேஷன் உணர்ச்சியில்” இந்த மர்மத்தைப் பின்பற்றுதல் உறுதி செய்யப்படுகின்றது; ஆனால் அதன் சொந்தச் சூழலில் இந்த மர்மத்தைப் பின்பற்றுதல் அதன் படிவரிசை அமைப்பினால் உறுதி செய்யப்படுகிறது.

“கார்ப்பரேஷன்” இரகசியத்தை மீறுதலை, “அரசின் பகிரங்க உணர்ச்சியை” அதிகார வர்க்கம் துரோகம் என்கிறது. “அதன் படிவரிசை அமைப்பு அறிவின் படிவரிசை அமைப்பே. உச்சியில் இருப்பவர்கள் விவரங்களைப் புரிந்து கொள்வதைக் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். பொதுவானவற்றை உச்சியிலிருப்பவர்கள் புரிந்து கொண்டிருப்பதாகக் கீழ்நிலையில் இருப்பவர்கள் கருதுகிறார்கள். ஆகவே எல்லோரும் பரஸ்பரம் ஏமாற்றப்படுகிறார்கள்.”(14)

ஆனால் அதிகாரவர்க்கத்தின் “அறிவு” விஞ்ஞான அறிவை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை; உண்மையான விஞ்ஞானத்தில் ஒன்றுமில்லை என்று அதிகாரவர்க்கம் கருதுகிறது. அதிகாரவர்க்கத்தின் அறிவு அதிகாரத்தின் நம்பிக்கையை, குருட்டுத்தனமான கீழ்ப்படிதலை, உறுதியாக நிறுவப்பட்ட, சம்பிரதாயமான நடவடிக்கைகளை, முன்னரே தயாரிக்கப்பட்ட கோட்பாடுகள், கருத்துக்கள் மற்றும் மரபுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

“ஆகவே அதிகாரம் அதன் அறிவின் அடிப்படை, அதிகாரத்தைக் கடவுளாக உயர்த்துவது அதன் பற்றுறுதி.”(15)

எதேச்சாதிகார அரசு கீழ்ப்படுதல் மற்றும் குருட்டுப் பணிவினால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்ற திட்டவட்டமான அதிகாரவர்க்க சக்திகளின் அமைப்பு என்ற வடிவத்தைக் கொண்டிருக்கிறது.

நாட்டின் அரசியல் வாழ்க்கை “மனிதத் தன்மையை அடைவதற்கு” அரசரை மட்டும் தூக்கியெறிவது போதுமானதல்ல என்ற முடிவுக்கு அரசைப் பற்றிய மார்க்சின் பகுப்பாய்வு தவிர்க்க முடியாத வகையில் இட்டுச் செல்கிறது. இதற்கு தனிச் சொத்துடைமை, சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது நிறுவப்பட்டிருக்கின்ற மொத்த அதிகாரவர்க்கப் பிரமிடையுமே நொறுக்க வேண்டும். அரசைப் பற்றிய மார்க்சின் விமர்சனம் முடியாட்சியின் எதேச்சாதிகாரத்தை மட்டுமின்றி முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தொட்டுச் செல்வது முற்றிலும் தெளிவாகும்.

அரசு அமைப்பின் தொடக்க நிலைக் கோட்பாடு மக்களை, மனிதனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால் அதிகாரவர்க்கப் போலீஸ் அரசு மக்களின் மிக அவசியமான நடவடிக்கைக்கு அந்நியமானதாக, “சிவில் சமூகத்திலிருந்து” பிரிக்கப்பட்டதாக, அதற்கு மேலே இருப்பதாக இருக்கிறது என்று மார்க்ஸ் வர்ணிக்கிறார்.

மார்க்ஸ் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் என்ற நூலை எழுதிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் அவர் அ. ரூகேக்கு எழுதிய கடிதத்தில் “ஜனநாயகத்தின் மனித உலகத்துக்கு மாறுவதைப்” பிரகடனம் செய்கிறார்.

“தொழில்துறை மற்றும் வர்த்தகம், சொத்துடைமை மற்றும் மக்களைச் சுரண்டுவது ஆகிய அமைப்பு” சமூகத்தில் ஆழமான வெடிப்பை ஏற்படுத்திவிடுகிறது “பழைய அமைப்பினால் அதை குணப்படுத்த முடியாது”(15) என்பதை அவர் தெளிவாகக் காண்கிறார்.

மார்க்ஸ் ஒழிக்கப்பட வேண்டிய அன்றைய அமைப்பின் உளுத்துப் போன தன்மையைக் கண்டார் என்ற போதிலும், “எங்கேயிருந்து தொடங்குவது?” என்ற கேள்வியை அவர் கேட்கவில்லை என்ற போதிலும், “எங்கே போவது?” என்ற கேள்விக்கு அவர் இன்னும் தெளிவான பதிலைத் தர முடியவில்லை. அரை நிலப்பிரபுத்துவ ஜெர்மனியில் இக்கேள்விக்குப் பதிலைக் கண்டுபிடிப்பது கடினமே.

உண்மையான போர் முழக்கத்தை அவர் தேடினார். மனிதகுலத்தின் மொத்த சமூக வரலாற்றைப் பற்றியும் விஞ்ஞான ரீதியான, பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை விரித்துக் கூறினால் மட்டுமே அத்தேடல் பயனளிக்கும்.

குறிப்புகள்:

(1) Ibid., p. 231. 205
(2) ) Ibid., p. 230.
(3)Ibid., p. 228.
(4)Ibid., p. 236.
(5)Ibid., p. 245.
(6) Ibid., p. 253.
(7)Ibid., pp. 332, 333.
(8) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 102.
(9)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 337.
(10) Ibid., p. 349.
(11)Marx, Engels, Collected Works, Vol. 3, p. 28.
(12) Ibid., p.40.
(13)Ibid., p. 47.
(14) Ibid., pp. 46-47.
(15) Ibid., p. 47.
(16)Ibid., p. 141.

தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

உற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் ! உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் !

கிழ்ச்சிக்கான வெளிப்படையான விளைவை சிறிய அளவிலான உடற்பயிற்சிகள் ஏற்படுத்தக் கூடும். வாரம் ஒருமுறையோ அல்லது நாள்தோறும் 10 நிமிடம் என்றாலும் கூட உடற்பயிற்சி செய்பவர்கள் செய்யாதவர்களை விட உற்சாகமாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆரோக்கியமான மனநிலை மற்றும் உடல்ரீதியிலான செயல்பாடுகள் பற்றிய இந்த புதிய ஆய்வின்படி எந்த உடற்பயிற்சியும் இதற்கு உதவக்கூடும்.

உடலியக்கம் நம்முடைய மனநிலையை பண்படுத்தும் என்பது புதிய கருத்தல்ல. சிறிய ஓட்டத்திற்குப் பிறகோ அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வந்த பிறகோ குறைவான சோர்வையோ அல்லது அதிக மனநிறைவையோ நாம் உணர்கிறோம் என்பதை நம்மில் பலர் அனேகமாக ஒப்புக்கொள்ளக் கூடும்.

உடற்பயிற்சி கூடங்கள்
சமீப காலமாக அதிகமாக உருவாகிவரும், சாலையின் ஓரங்களில் ஒவ்வொரு கட்டிடத்தின் மொட்டைமாடியை அலங்கறிக்கும் உடற்பயிற்சி கூடங்கள்

அறிவியலும் பொதுவாக இதை ஒப்புக்கொள்கிறது. எவ்வித செயல்பாடுமற்றவர்களை விட உடல்ரீதியாக நல்ல செயல்பாடுடன் இருப்பவர்களுக்கு சோர்வும் பதட்டமும் குறைவாகவே இருக்கும் என்று கடந்தகால ஆய்வுகள் பல ஆய்ந்தறிந்திருக்கின்றன.

ஆனால் உடற்பயிற்சிக்கும் மன அழுத்தம் மற்றும் கவலை ஆகிய உளவியல் சிக்கல்களுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தியே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. உடற்செயற்பாடு மற்றும் உற்சாகமான மனநிலை குறித்து உளவியல் ரீதியாக நல்ல நிலையில் இருந்தவர்களிடம் இந்த  ஆய்வு நடத்தப்பட்டன. மேலும் அவை பெரும்பாலும் குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்கள் அல்லது உடற்பயிற்சி வகைகளையே ஆய்வு செய்தன.

ஆனாலும் என்ன உடற்பயிற்சி செய்தால் அல்லது எவ்வளவு நேரம் செய்தால் நம்முடைய உற்சாகம் கூடும் அல்லது வழக்கமான உடற்பயிற்சியினாலா அல்லது குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும் உறசாகத்தைத் தருமா என்றும் தன்னளவில் அவை குறிப்பாக தெரிவிக்காது.

உடற்பயிற்சியும் மகிழ்ச்சியும் பற்றிய கடந்தகால ஆய்வுகள் பலவற்றை மதிப்பீட்டு ஆய்வு செய்து தி ஜர்னல் ஆஃப் ஹேப்பினஸ் ஸ்டடீஸ் (The Journal of Happiness Studies) அறிவியல் சஞ்சிகையில் வெளியிட மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

அவர்கள் 1980 முதல் தரவுத்தளங்களில் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை தேடி முடிவாக 23 கட்டுரைகளை தெரிவு செய்தனர். அவற்றில் பெரும்பாலானவை கூர்நோக்கல் (observational) அடிப்படையிலானவை. அதாவது ஒரு குறிப்பிட்ட மக்களிடம் எவ்வளவு உடற்பயிற்சி செய்தார்கள் மற்றும் எப்படி மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்ற அடிப்படையில் ஆய்வாளர்களின் கேள்விகள் இருந்தன. சில ஆய்வுகளில் உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னுமான தகவல்களை ஆய்வாளர்கள் திரட்டியிருந்தனர்.

அந்த ஆய்வு ஒவ்வொன்றிலும் எடுத்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் குறைவாக இருந்தாலும் அனைத்து ஆய்வுகளையும் சேர்த்து பரிசீலிக்கப்பட்டன. சிறுவயது முதல் வயதானவர்கள் வரை பல்வேறு சமூகப் பொருளாதார பிரிவுகளைச் சேர்ந்த 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை அவை ஆய்வு செய்தன.

மேலும் உடற்பயிற்சிக்கும் மகிழ்ச்சிக்குமான இணை பிரியாத உறவை பெரும்பாலான ஆய்வுகள் உறுதிப்பட கூறுவதாக மிச்சிகன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடற்பயிற்சி
நடுத்தர வர்க்க குடும்ப பெண்களை கவரும் பூங்காக்களில் அமைந்துள்ள உடற்பயிற்சி உபகரணங்கள்…

உடல்ரீதியான செயற்பாட்டிற்கும் மகிழ்ச்சிக்கும் இடையேயான பயனுள்ள உறவை அனைத்து ஆய்வுகளுமே சுட்டுவதாக மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் இணை இயற்பியல் பேராசிரியரான வேய்யூன் சென் (Weiyun Chen) கூறுகிறார்.  அவரது பட்டப்படிப்பு மாணவரான ஜான்ஜியா ஜாங்குடன் (Zhanjia Zhang) சேர்ந்து அந்த மதிப்பீட்டை வேய்யூன் எழுதினார்.

உடற்பயிற்சி என்ன செய்கிறோம் என்பது முதன்மையல்ல. மகிழ்ச்சியான மனிதர்கள் சிலர் நடக்கவோ இல்லை ஓடவோ செய்தனர். ஏனையோர் யோகா மற்றும் உடலை நீட்டி மடக்கும் தளர்வு உடற்பயிற்சிகளை செய்தனர்.

உற்சாகத்தைத் தூண்டுவதற்கு சிறிய அளவு உடற்பயிற்சியே போதுமானதாக இருந்தது என்று பேராசிரியர் சென் கூறினார். வாரத்தில் ஒன்றோ இரண்டு முறையோ உடற்பயிற்சி செய்தவர்கள் செய்யாதவர்களைக் காட்டிலும் உற்சாகத்துடன் இருந்ததாக பெரும்பாலான ஆய்வுகள் கூறின. சில ஆய்வுகள் நாளுக்கு 10 நிமிட உடற்பயிற்சியே உற்சாகத்தை அளித்ததாக கூறின.

ஆனால் அதிக உடல் ரீதியிலான இயக்கம் பொதுவாக அதிக மகிழ்ச்சிக்கு பங்களித்தது. நல்ல உடல்நலத்திற்கு நாள்தோறுக்கும் 30 நிமிட உடற்பயிற்சி தேவை என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் திட்டமான பரிந்துரை. அவற்றை பின்பற்றுபவர்கள் அதாவது நாள்தோறும் 30 நிமிட உடற்பயிற்சி செய்வோர் ஏனையோரை விட 30 விழுக்காடு அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக சென் குறிப்பிடுகிறார்.

“உடற்பயிற்சி மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் என்பதற்கு வலுவான அறிகுறிகள் இருக்கின்றன. எதுவும் பயனளித்தாலும் கூடுதல் உடற்பயிற்சி கூடுதல் மகிழ்ச்சிக்கு வித்திடும்” என்று அவர் கூறுகிறார்.

மகிழ்ச்சிஆனால் பெரும்பான்மையான ஆய்வுகள் கூர்நோக்குதல் அடிப்படையிலானவை என்பதால் உடற்பயிற்சி உற்சாகத்திற்கு நேரடியாக பங்களிக்கிறதா என்பதை இன்னும் அறுதியிட்டு கூற முடியவில்லை. அல்லது இரண்டும் ஒருசேர நடக்கின்றனவா என்பதும் கூற முடியவில்லை. சோகமான மனிதர்களை விட மகிழ்ச்சியான மனிதர்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் என்று கூற முடியும். இதன் படி பார்த்தால் உடற்பயிற்சி மகிழ்ச்சிக்கு உதவில்லை மாறாக அவர்களின் மகிழ்ச்சியான மனநிலை உடற்பயிற்சிகள் செய்வதற்கு உதவி செய்கிறது என்று அவர் கூறுகிறார்.

மகிழ்ச்சி என்பது மென்மையான ஒரு அகநிலை சார்ந்த விசயமும் கூட. மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று மட்டும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கட்டுரைகள் ஆய்ந்தன. ஆனால் ஒருவரது மகிழ்ச்சி மற்றவரது சோகமாகவும் இருக்கலாம் எனவே உடற்பயிற்சி செய்வதற்கான உணர்வுபூர்வமான அணுகுமுறைகளை பொதுமைப்படுத்துவதில் இது சிக்கலை ஏற்படுத்துகிறது.

மேலும் உடற்பயிற்சி செய்வது எப்படி மகிழ்ச்சியைத் தூண்டும் என்பதை பற்றி இந்த விமர்சன ஆய்வு ஆழமாக இறங்கவில்லை.

“உடற்பயிற்சிக்கும் உற்சாகத்திற்கும் இடையேயான உறவுகளை சிலருக்கு சமூக காரணிகளும் பாதிக்கக்கூடும்” என்று சென் கூறுகிறார். அதாவது உடற்பயிற்சி வகுப்பின் போதோ அல்லது உடற்பயிற்சி கூடத்திலோ ஏற்படும் சமூகரீதியிலான தொடர்புகள் மனிதர்களின் மனநிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவக்கூடும்.

மகிழ்ச்சி
ஆரோக்கியமான உணர்வு மனிதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்

அல்லது உடற்பயிற்சி உடலில் மூளையும் சேர்த்து நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

“உடற்பயிற்சி உடல்நலத்தை மேம்படுத்தும் என்று நமக்கு தெரியும். ஆரோக்கியமான உணர்வு மனிதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்” என்கிறார் சென்.

மேலும் உடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கிறது.

இப்பிரச்சினைகளைப் பற்றி எதிர்கால ஆராய்சிகள் மேலும் ஆய்வு செய்யும் என்று சென் நம்புகிறார். ஆனால் இப்போதைக்கு “உடற்பயிற்சி செய்யும் மக்கள் உடற்பயிற்சி செய்யாத மக்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருக்ககூடும் என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியும்” என்று கூறுகிறார் சென்.

நமது நாட்டைப் பொறுத்தவரை பெரும்பான்மையான மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அதிக உழைப்பைச் செலுத்தியாக வேண்டிய நிலை. அந்த உழைப்பை புத்துருவாக்கம் செய்யும் சத்துணவு போதுமான அளவில் கிடைக்காத நிலை. கூடவே மருத்துவம் – ஆரோக்கியம் பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட நமது மக்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் அதிக உழைப்பு கொண்ட வேலைகள் கூட ஒரே மாதிரியான உடல் அசைவுகளைக் கோருவதால் நமது மக்கள் குறிப்பிட்ட உடல்பகுதி சார்ந்த குறைபாடுகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

சமீபகாலமாக அனைத்து சமூகப்பிரிவுகளிலும் நடக்கும் தற்கொலை-கொலை இதர வன்முறைகள் அதிகரிப்பதும் கூட நமது மக்கள் பொதுவில் மகிழ்ச்சியற்றவர்களாகவே வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதற்கு பல்வேறு சமூக பொருளாதார காரணிகள் இருந்தாலும் இருக்கும் வாய்ப்புகளில் நாம் நமது மக்களை முறைப்படுத்துவதற்கு முயலவேண்டும்.

எனவே நடைப்பயிற்சி, குழந்தைகளோடு ஓடி ஆடி விளையாடுவது, நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சியோ, சிறு விளையாட்டோ ஆடுவது என்பதையாவது நாம் செய்ய வேண்டும். முக்கியமாக எளிய மக்களுக்கு இந்த உடற்பயிற்சி அவசியத்தை விளக்குவதோடு கூடுமானவரை செய்வதற்கு ஆலோசனை கூற வேண்டும். ஆட்டோ ஓட்டுநரோ, டீக்கடை மாஸ்டரோ, கடை சிப்பந்திகளோ, அலுவலக ஊழியர்களோ அனைவரும் முப்பது நிமிட பயிற்சி செய்வது அவசியம். அந்த அவசியம் இன்று கைகூடுமளவு அரசு – சமூக அமைப்புகள் இல்லை என்றாலும்………
– வி்னவு

– வினவுச் செய்திப் பிரிவு
நன்றி: நியுயார்க் டைம்ஸ் Even a Little Exercise Might Make Us Happier

கால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி !

லகம் முழுவதும் 7.6 பில்லியன் மக்கள் தொகை இருக்குமென்றால் அதில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் ரசியாவில் நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா இல்லை. இனியும் இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்பது அனைவரும் அறிந்ததே!

கால்பந்து விளையாட்டு என்றாலே வீரர்கள் பிரேசிலின் நெய்மர், அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் கிறிஸ்டியானோ ரேனால்டோ ஆகியோர் நினைவில் வருவார்கள்.இவர்களைப் போல் “உலக கோப்பைப் போட்டியில் இந்தியாவிற்காக விளையாட வேண்டும்” என்ற கனவோடு சென்னை வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்து மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் தருண், ஏழாவது படிக்கும் மணிகண்டன், பத்தாம் வகுப்பு பாலமுருகன், மாணவிகள் விஜி, பூஜா, ……. இன்னும் நூற்றுக்கணக்கானோர்.

Vyasarpadi football team
இங்கு வயது வித்தியாசம் தேவையில்லை, ஆர்வம் மட்டுமே போதுமானது

அந்த கால்பந்து மைதானத்தில் “STEDS” என்ற தங்கள் அணியின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸி டீ-சர்ட்டுகளை அணிந்துகொண்டு பந்தை  துரத்துகிறார்கள். அவர்களுக்கு இணையாக சிறுமிகள், பள்ளி-கல்லூரி மாணவிகள் என்று பாலின வேறுபாடு இன்றி பந்தை, மைதானம் முழுக்க விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியம் நிரம்பிய நம் கண்கள் மைதானம் முழுக்க விரிகிறது!

இந்திய அளவில் கால்பந்து நட்சத்திரங்களாக வலம் வரும் பாய்சங் பூட்டியா, சுனில் சேத்ரி, ஐ.என்.விஜயன் போன்று, தமிழ்நாட்டுக்கு ஏராளமான கால்பந்து நட்சத்திர வீரர்களை உருவாக்கியிருக்கிறது இந்த முல்லைநகர் கால்பந்து மைதானம். இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடும் நந்தகுமார், உமாசங்கர், உமாபதி மற்றும் 2010-ம் ஆண்டில் சுவிடன் அணியை அதன் மண்ணிலேயே தோற்கடித்த தியாகு போன்ற வீரர்கள் தோன்றிய களம் இது.

Vyasarpadi football team
மைதானத்தில் பல இடங்களில் சேதம் மறைக்கப்பட்டு ஒட்டுபோட்டாலும் எங்களின் முயற்சியில் எந்த சேதமும் இல்லை என்கின்றனர் இவர்கள்.

பிரேசில், தென் ஆப்பிரிக்கா என்று பல உலக நாடுகளுக்கும் டெல்லி, புனே, பம்பாய், பெங்களூர் என்று இந்திய அளவிலும் சென்று விளையாடும் வீரர்கள் இவர்கள். ஆனாலும் இவர்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது? இந்தியாவின் சார்பாக உலகக் கோப்பை போட்டியில் விளையாட ஒரு அணிக்கான வீரர்களைக் கூட நம்மால் உருவாக்க முடியவில்லையே ஏன்? என்ற நம் ஆதங்கத்திற்கு அழுத்தமாக பதிலளிக்கிறது இவர்களின் வாழ்க்கை !

தேசிய விளையாட்டு வீரர்களாக இவர்கள், சுயமாக உயர்ந்த பிறகும் இவர்கள் நாள்தோறும் சந்திக்கும் அவமானங்கள் ஏராளம். அதுவும் பெண் வீரர்கள் படும் துயரங்கள்  பற்றி சொல்லவே வேண்டாம்! ஆனாலும், இவர்கள் எல்லாவற்றையும் தம் காலணியில்  ஒட்டிக்கொள்ளும் கசடுகளை உதறுவதைப்போல் உதறிவிட்டு முன்னேறுகிறார்கள். “அவமானங்களை நினைத்துக் கொண்டிருந்தால்  விளையாட்டுப் பயிற்சி வீணாகி விடும். எங்களுக்கு விளையாட்டுதான் வேதனைகளை மறக்கும் மருந்து. இதற்காக எதையும் தாங்கிக் கொள்வோம்” என்கின்றனர், பந்தை சக வீரருக்கு பாஸ் செய்தபடியே.

தேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரராவதற்கு எண்ணற்ற தியாகங்களும், கடின உழைப்பும் தேவை. உடல்ரீதியாக, மனரீதியாக, தந்திரோபாயமாக ஒரு வீரர் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்.  இதனுடன் ஆர்வம், விளையாட்டு உள்கட்டமைப்பு, பல ஆயிரம் மணி நேர பயிற்சி, சிறந்த பயிற்சயாளர் ஆகியவை உடன்சேரும்போது ஒரு மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் உருவாகிறார்.

Vyasarpadi football team
இந்திய குழந்தைகள் பலர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். இருப்பினும் நாங்கள் கொண்டிருக்கும் இலட்சியம் எங்கள் கால்களுக்கு உரமேற்றும்.

கால்பந்து விளையாட்டின் “இதயமே” கால்கள்தான். பந்தை பலமாக எட்டி உதைக்கும் வலிமை இருக்க வேண்டும். ஆனால், நாங்கள் பார்த்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களில் 10 பேர்கூட தேவையான உடல் தகுதியில் இல்லை. ஆனாலும் அவர்கள் முகங்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. உன்னுடைய ஆசை என்ன? என்று 10 வயது நந்தாவிடம் கேட்டதும், “நெய்மர் அடிக்கும் பந்தை நான் பாக்ஸில் தடுக்க வேண்டும். கண்டிப்பாக நடக்கும். ஆனால் அதுவரை அவர் ஆடுவாரா என்பது தெரியாது.” என்று, கண்கள் ஒளிர சொல்கிறான்.

அதேபோல் 3 அடி உயரம் கூட இல்லாத சிறார்கள்கூட “அண்ணா.. நான் டிரிபிள் பண்ணுவேன்னா. பாக்கிறயா? தோ.. பாரு” என்று பந்தை தத்திதத்தி உதைத்து, சிரிக்கிறார்கள்.

இவர்களிடம், காலையில் மைதானம் வருவதற்கு முன் என்ன சாப்பிட்டீர்கள் என்றோம், “அம்மா, வீட்டு வேலைக்கு போவுது. இன்னிக்கு ஞாயித்து கிழமையா…தூங்குது. அதான் அது ஒன்னும்  குடுக்கல. இங்க எங்க மாஸ்டர்தான் பிரட், சுண்டல் கொடுத்தாரு…அவ்வளதான்” என்று சொல்லிக்கொண்டே பந்தை மார்பில் வாங்க ஓடிஓடி பயிற்சி செய்கிறான் குமார். வேறு எங்கே காணமுடியும் இக்காட்சிகளை!

தையல் கிளாஸ், பரத நாட்டியம் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் அல்ல நாங்கள் !

மணலியிலிருந்து பயிற்சிக்கு வந்திருக்கும் பி.எஸ்.சி., பிசிக்ஸ் படிக்கும் ஜெயஶ்ரீ, “காலையில் 5 மணிக்கு கிளம்பனாதான் இங்க வரமுடியும். நான் 3 வருசமா இங்க விளையாடுறேன். பல மேட்ச் ஜெயிச்சியிருக்கிறோம். ஆனா இன்னமும் இங்க பக்கத்துல இருக்கிற நேரு ஸ்டேடியத்தில எங்களால நுழைய முடியல. எப்ப போனாலும் அணியில சேர்த்துகின மாதிரி கணக்கு காமிக்கிறாங்க..  தனியார் கல்லூரி பசங்கள ஆட வக்கிறாங்க. நாங்க அங்க நின்னுக்கிட்டு அவங்களுக்கு தண்ணி கொடுக்கணும். அதிகபட்சமா மைதான கோட்டுள்ள நில்லு, ’வாச்..’ பண்ணு.. னு. சொல்லுவாங்க… அவ்ளோதான்.  இப்படிதான் நாங்க அங்க போயிட்டு வறோம். அங்க விளையாடி கத்துகணும்னு ஆசை. ஆனா எங்கள அவங்க விளையாட விடமாட்டாங்க” என்று  சொல்லிக் கொண்டிருக்கும்போது..

பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரதி மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவி, ”நாங்க வியாசர்பாடின்னு சொன்னா போதும், சொல்லக்கூட வேண்டியதில்லை.  அவுங்களே நாங்க யாருன்னு கண்டுபிடிச்சுடுவாங்க,  நீங்க வியாசர்பாடிதானே? உள்ள எல்லாம்… கூப்பிடாம வராதீங்க. வெளிய நில்லுங்க. நாங்க கூப்பிடுவோம். என்று பிற  கல்லூரி மாணவிகள் மத்தியில் அவமானப்படுத்துவார்கள். மற்றவர்கள் உள்ளே அரட்டை அடித்துக்கொண்டிருப்பதை கண்டுகொள்ள மாட்டார்கள்.” என்றார், கோபமாக.

வியாசர்பாடி
பல வழிகளில் நாங்கள் பிரச்சினைகளை சந்தித்தாலும் இந்த கால்பந்து எங்களை ஒய்ந்திருக்க விடுவதில்லை

அங்கு, கோச்சராகவும், டிரெயினராகவும் இருக்கும் பழைய மாணவர்கள் சொல்வது நமக்கு மேலும் அதிர்ச்சியளிக்கிறது….! “கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் இங்கு எங்களுக்கு நடக்கிறது. கால்பந்து விளையாட்டில் 4-வது கிரேடிலிருந்து முதலாவது கிரேடுக்கு முன்னேறி சீனியர் லெவலுக்கு சென்றாலும்  அதிகாரிகள் எங்களை மதிக்க மாட்டார்கள். நீங்கள் எப்படி கோப்பையுடன் சென்று விடுவீர்கள், பார்த்து விடுகிறோம் என்று சம்மந்தமே இல்லாமல் அற்ப காரணங்களைக் காட்டி புள்ளிகளைக் குறைப்பார்கள். புதிய அணியை நுழைத்து கோப்பையை பறிப்பார்கள்.

தனியார் கிளப்புகளின் முதலாளிகள்தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். சென்னை கால்பந்து சங்கம், பணத்தில் புரண்டாலும்  தன் புகழுக்கும் அதிகாரத்துக்கும் மட்டுமே அதை பயன்படுத்துகிறது. எங்கு போட்டி நடந்தாலும் அணிகளுக்கு தேவையான ஜெர்சி முதல் கிட் வரை யார் ஸ்பான்சர் செய்கிறார்களோ அவர்கள்தான் கோப்பையையும் எடுத்துச் செல்வார்கள்.

தனியார் கல்லூரி முதலாளிகள் இதற்காக தங்கள் ஆட்களை பல அதிகார மட்டங்களில் வைத்திருக்கிறார்கள். அவர்களால் நியமிக்கப்பட்ட செலக்டர், ட்ரெயினர், கோச்சர் போன்றவர்கள், எங்களை போன்ற எளியவர்களை வெளியே தள்ளுவதில் தேவையான பயிற்சி எடுத்தவர்கள். வேறு எதுவும் தெரியாது அவர்களுக்கு! அதிகாரிகளும் அவர்களும் ஓர் அணி. நாங்கள் எப்போதும் அவர்களுக்கு எதிரணி. அப்படிதான் எங்களை அவர்கள் பார்க்கிறார்கள்.

வியாசர்பாடி
பழைய முறைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அவர்கள் செய்யும் கூத்துகளை கேட்டால் நீங்கள் மயக்கம் அடைவீர்கள். சென்ற ஜுனியர் கால் பந்து உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில்கூட போனவர்கள் ஜெயிக்கவில்லை. உள்ளூரில் மானம் போவதை தவிர்க்க, தீடீரென வங்கதேசத்திற்கு அங்கிருந்தே பிளைட் ஏறினார்கள். அவர்களுடன் விளையாடி,  கோப்பையுடன் இங்கு வந்து, அது உலகக்கோப்பை மாதிரி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். இது ஊரே நாறிய பிறகும் கமுக்கமாக துடைத்துக்கொண்டனர்.

அவலம் என்னவென்றால், எங்களிடம் தோற்ற ஸ்வீடன் ஜூனியர் அணி வீரர்கள்தான் இப்போது உலககோப்பை அணியில் விளையாடுகிறார்கள். நாங்கள் இன்னும் நடுத்தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இதே கதைதான் இந்தியா முழுக்க நிலவுகிறது. உலககோப்பையை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் அதில் நுழையக்கூட முடியவில்லை. 97-வது இடத்தில் இருக்கிறோம்.

ஆனால் மற்ற எது எதிலேயோ முதல் இடத்தில் இருக்கிறோம். இருந்தாலும் நாங்கள் சோர்ந்துவிட மாட்டோம். நாங்கள் கற்ற கால்பந்து விளையாட்டும் அதற்கு எங்களை அனுமதிக்காது! கால்பந்தும் எங்களை விடாது, காலைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கும் என்கின்றனர்.

வியாசர்பாடி
உடன் விளையாடுவது ஆணா பெண்ணா என்பது எங்கள் கவனத்திற்கு வந்ததில்லை. எங்கள் நோக்கம் கோல் அடிப்பதே !

இந்த கால்பந்து மைதானத்தின் நிறுவனராக இருக்கும் உமாபதி கடந்த இருபது ஆண்டுகளாக கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். “கிரிக்கெட் போன்ற விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கால்பந்து விளையாட்டுக்கு இல்லை. அதனால் தான் பல்வேறு நிறுவனங்கள் அதுல ஸ்பான்சர் பண்றாங்க.  கால்பந்து வீரர்களை கண்டு கொள்வதில்லை. இப்ப நடந்துட்டு வர உலக கோப்பைக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்திருக்க மாதிரி தெரியுது.. அதுல கலந்துகிட்ட போட்டியாளர்கள் நல்ல ஆரோக்கியமாவும், உடல் வலிமையோடவும் இருக்காங்க. இதே நம்ம நாட்ல சொல்லவே வேண்டாம்.. முதலில் கால்பந்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் ரொம்ப குறைவா இருக்கு.. இந்த மைதானத்துல அப்படிபட்ட வசதிகள் எதுவும் இல்லாமதான் பல வீரர்களை நாங்க உருவாக்கி இருக்கோம். அதுக்கு காரணம் அவர்கள் டெடிகேட்டடாக இருக்கிறார்கள். சத்தீஸ்வரி, திலீபன், பீமாபாய், டிக்கோ, தியாகு போன்ற சிறந்த வீரர்களை உருவாக்கியிருக்கோம்.

ஒவ்வொரு உதவியும் யாரிடமாவது கேட்டு கேட்டு செய்யுறோம். பயிற்சியின் போது அடிபட்டா சீக்கிரம் ரெக்கவர் ஆக சரியான ஸ்போர்ட்ஸ் கிளினிக் இல்ல…  இதனால அடிபட்டவங்க சீக்கிரம் பயிற்சிக்கு வர முடியாத நிலை இருக்கு.  பசங்களோட திறமையை கண்காணிக்கும் வசதி இல்லை. வீடியோக்களை போட்டு காண்பித்து அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட முடியவில்லை. சக வீரரை களத்தில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற சூட்சுமங்களை கற்றுத்தருவதில் சிக்கல் உள்ளது. தரமான உணவு இல்லை. முறையான கட்டமைப்பான மைதானம் இல்லை. இப்ப இருக்கக்கூடிய தொழில்நுட்பத்துல பயிற்சிக்கான சாதனங்கள் எவ்வளவோ வந்துட்ட பிறகும் இன்னும் நாங்க பழைய முறையிலதான் பயிற்சி கொடுக்கிறோம்.

எல்லா வசதியும் உள்ளவங்க கிட்ட ஆட்கள் இல்ல… எங்க கிட்ட ஆட்கள் சிறந்த பயிற்சியாளர்கள் எல்லோரும் இருந்தும் வசதி இல்ல…….. இந்த விளையாட்டுக்கு அரசு எங்களுக்கு எல்லா உதவியும் செய்து கொடுத்தா ஒரு வருஷத்துல டாப் பிளேயர்களை உருவாக்கி விடுவோம் என்கிறார் நம்பிக்கையுடன்!

-வினவு களச் செய்தியாளர்கள்

உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !

ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

பாகம் :5

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

கூலி மட்டுமல்ல

அமெரிக்காவில் பல பத்தாண்டுகளாக தொழிலாளர் ஊதியங்கள் தேக்க நிலையில் இருந்த நிலையில், சீனாவில் ஊதியங்கள் அதிகரித்து வந்தாலும், இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் இன்னும் பெரிதாகவே உள்ளது. சீனாவின் தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தரவுகளை ஆதாரமாகக் கொண்ட ஒரு ஆய்வின்படி, 2009-ல் இந்த வேறுபாடு வாங்குதிறன் சமநிலையின் அடிப்படையில் சுமார் 16-க்கு 1 என்ற வீதத்திலும், சந்தை செலாவணி வீதத்தின் அடிப்படையில் 37-ல் 1 ஆகவும் இருந்தது. அயலக பணி உற்பத்தி முறையை பயன்படுத்துவது பற்றி முடிவு செய்வதற்கு அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நாட்டு நிறுவனங்களுக்கு இதுதான் முக்கியமான காரணியாக இருக்கிறது28

சீனாவின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையேயும், புலம்பெயர், உள்ளூர் தொழிலாளர்களுக்கிடையேயும், பொதுத்துறை, தனியார் நிறுவனங்களுக்கிடையேயும் கூலி பெருமளவு வேறுபடுகிறது. இவையும் இன்னும் பிற திரித்தல்களும் ஒப்பிடுதலை சிரமமானதாக்குகின்றன, எனவே இங்கு கொடுத்துள்ள விகிதங்களை ஒரு பொதுவான நிலைமையை சுட்டுவதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், லாபவெறி பிடித்த மேற்கத்திய நிறுவனங்களை ஈர்ப்பது அதீத குறை கூலிகள் மட்டுமல்ல. தொழிலாளர்களை விருப்பப்படி பயன்படுத்த முடிவதும் அவர்களை கடுமையாக வேலை வாங்க முடிவதும் அவர்களை ஈர்க்கின்றன. பரவலாக மேற்கோள் காட்டப்படும் நியூயார்க் டைம்ஸ் ஆய்வில் சார்லஸ் துகிகும் கெய்த் பிராத்ஷரும் இது தொடர்பாக ஒரு தெளிவான சித்திரத்தை வழங்குகின்றனர்:

“கடைசி நிமிடத்தில் ஐ-ஃபோனின் திரையை மறுவடிவமைப்பு செய்தது, ஆப்பிள். அதற்கேற்ப ஐஃபோனுக்கான பொருத்தும் உற்பத்தி நிகழ்முறை மாற்றியமைக்கப்பட்டது. புதிய திரைகள் நள்ளிரவில் ஆலைக்கு வந்து சேர்ந்தன. நிறுவனத்திற்கு உள்ளேயே அமைந்திருந்த தங்கும் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த 8,000 தொழிலாளர்கள் உடனடியாக எழுப்பப்பட்டனர். ஒரு மேற்பார்வையாளர் உடனடியாக எழுப்பினார். ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு பிஸ்கட்டும் ஒரு கோப்பை தேநீரும் வழங்கப்பட்டது. அவர்கள் பணி மேசைக்கு இட்டுச் செல்லப்பட்டனர். அரை மணி நேரத்துக்குள் கண்ணாடி திரைகளை அவற்றுக்காக வனையப்பட்ட சட்டகத்துக்குள் பொருத்தும் வேலைக்கான 12 மணி நேர ஷிஃப்ட் ஆரம்பித்தது. 96 மணி நேரங்களுக்குள் அந்த ஆலை ஒரு நாளைக்கு 10,000 ஐ-ஃபோன்களை தயாரிக்க ஆரம்பித்திருந்தது.”29

மூன்றாம் உலக நாடுகளில் வழங்கப்படும் குறை கூலிகள், அந்நாடுகளின் குறை உற்பத்தித் திறனை பிரதிபலிக்கின்றன என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாடுகளில் தொழிலாளிகள் விருப்பப்படி பயன்படுத்தப்படுவதும், அவர்களிடம் கறக்கப்படும் தீவிர உழைப்பும் இந்தக் கருத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன. ஊதிய வேறுபாடுகளுடன், பணிச்சூழல், பணி நேரம், உழைப்பு தீவிரம் போன்ற அம்சங்களையும் “சமூக ஊதிய”த்தின் போதாமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது சீனா, வங்கதேசம், மெக்சிகோ போன்ற நாடுகளில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் நிலவும் உழைப்புச் சுரண்டலை விட அதிக வீதத்தில் உழைப்புச் சுரண்டப்படுகிறது என்பது மறுக்க முடியாததாக உள்ளது. வேறு விதமாகச் சொல்வதென்றால் ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது சீன, வங்கதேச, மெக்சிகோ தொழிலாளர்கள் தாம் உருவாக்கும் மதிப்பில் ஒரு சிறுபகுதியை மட்டுமே ஊதியமாக பெறுகின்றனர்.

பகுதி இரண்டு : ஜி.டி.பி மாயை

மேலே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்று சர்வதேச பண்டங்கள் ஒவ்வொன்றையும் பொறுத்தவரை, கைக்கருவி உற்பத்தியாளர் (ஆப்பிள்), நுகர்பொருள் சில்லறை விற்பனை கார்ப்பரேட் (H&M), காஃபி கடைகள் (ஸ்டார்பக்ஸ்) ஆகிய மூன்று மேற்கத்திய கார்ப்பரேட்டுகளும் தமது பொருள் உற்பத்திக்கான அனைத்து அம்சங்களையும் அல்லது பெரும்பாலானவற்றை அயலக பணியாக செய்கின்றனர். உற்பத்தி நிறுவனங்களுடன் கைக்கெட்டும் தூரத்திலான ஒப்பந்த உறவை பராமரிக்கின்றனர். எனவே பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுடனும், விவசாயிகளுடனும் இந்த பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி உறவு இல்லை.

இதற்கு மாறாக, இந்த கார்ப்பரேட்டுகள் அன்னிய நேரடி முதலீடு மூலம் சொந்த உற்பத்தி நிறுவனங்களை அமைத்திருந்தால் விஷயம் வேறாக இருந்திருக்கும். உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.

இதற்கு மாறாக, கைக்கெட்டும் தூரத்திலான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அவர்களது ஏகாதிபத்திய வாடிக்கையாளர்களுக்கு லாபம் கடத்தப்படுவது எந்த தரவுகளிலும் பதிவாவது இல்லை. எனவே, பொருளாதாரவியல் தரவுகளின்படியும், முதலாளித்துவ பொருளாதாரவியல் கோட்பாட்டின்படியும், குறைகூலி நாடுகளில் செயல்படும் ஃபாக்ஸ்கானும் எண்ணற்ற பிற “கைக்கெட்டும் உறவிலான” நிறுவனங்களும் வேலைக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்கள், மேற்கத்திய சந்தைகளுக்காக குறைந்த விலை இடைநிலை பொருட்களையும், நுகர்வு பண்டங்களையும் உற்பத்தி செய்தாலும், அவர்கள் டெல் நிறுவனத்துக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும், அவர்களது பொருட்களை விற்பதற்கான விற்பனைக் கட்டமைப்பை உருவாக்கி சில்லறை விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் லாபத்தில் எந்த பங்களிப்பும் செய்வதில்லை.

பூமியின் மூன்று பரிமாண மேற்பரப்பை மெர்காடர் பதிப்பாக இரண்டு பரிமாண வரைபடத்தில் உருமாற்றும் போது, துருவப்பகுதிகளின் அகலம் விரிக்கப்பட்டு, பூமத்திய ரேகை பகுதிகள் சுருக்கப்படுவது எல்லோருக்கும் பரவலாக தெரிந்த ஒன்று. ஜி.டி.பி தொடர்பாகவும், சர்வதேச வர்த்தகம் தொடர்பாகவும் பயன்பாட்டில் உள்ள தரவுகள் இதே மாதிரியான விளைவை ஏற்படுத்துகின்றன. உலகத்தின் மதிப்பு உருவாக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பங்களிப்பை குறைத்துக் காட்டி, ஏகாதிபத்திய நாடுகளின் பங்களிப்பை மிகைப்படுத்திக் காட்டுகின்றன.

இது எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன், “உற்பத்தியை” அளப்பதாக கூறிக் கொண்டாலும், ஜி.டி.பியும், வர்த்தக புள்ளிவிபரங்களும் சந்தையில் நடக்கும் பரிமாற்றங்களையே அளக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணப் பரிமாற்றமும், சொத்துடைமை பத்திர பரிமாற்றங்களும் நடக்கும் சந்தைகளில் எதுவும் உற்பத்தியாவதில்லை. உற்பத்தி வேறு இடத்தில் உயரமான சுவர்களுக்குப் பின்னால், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் உற்பத்தி நிகழ்முறைகளில் நடக்கிறது. மதிப்புகள் உற்பத்தி நிகழ்முறைகளில் உருவாக்கப்பட்டு, சந்தைகளில் சுவீகரிக்கப்படுகின்றன.

சரக்குகள் விற்கப்படும்போது பெறப்படும் இறுதி விலைகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு, அதிலிருந்து தனித்த ஒரு மதிப்பு அவற்றுக்கு உள்ளது. ஆனால், இந்த மதிப்புகள், “சுற்றோட்டத்தில் சுவீகரிக்கப்படுவது மட்டுமின்றி அதிலிருந்தே உருவாவது போலத் தோன்றுகிறது” – இந்தத் தோற்றமயக்கம், பொருளாதாரவியல் தரவுகளை விளக்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட முறையின் பிறழ்வாதத்துக்கு வழிவகுக்கிறது, மதிப்பை விலையுடன் குழப்பிக் கொள்வதுதான் அது. 30

இந்த விஷயத்துக்கு விரைவில் திரும்பி வருவோம். ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான தரவுகளை பயன்படுத்தாமல் உலகப் பொருளாதாரத்தை பகுப்பாய்வு செய்வது சாத்தியமற்றது என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுவது அவசியம். ஆனால், இந்தத் தரவுகளை விமர்சனமின்றி ஒவ்வொரு முறை மேற்கோள் காட்டும் போதும், அவை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய செவ்வியல் பொருளாதாரவியலின் மையமான பிறழ்வு கோட்பாடுகளுக்கு நாம் இடம் கொடுக்கிறோம். உலகப் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும்போது நாம் இந்தத் தரவுகளை பிறழ்வுநீக்கம் செய்ய வேண்டும், அதைவிட, அவற்றை விளக்குவதற்கு பயன்படுத்தும் கோட்பாடுகளை பிறழ்வுநீக்கம் செய்ய வேண்டும்.

  • தொடரும்

28. Álvaro J. de Regil, “A Comparative Approximation into China’s Living-Wage Gap,” June 2010, http://jussemper.org. There is good reason to believe that official Chinese data on real wages considerably exaggerate real wages and real wage growth in China. The ILO notes that official Chinese data largely reflects the situation in state-owned enterprises, and that wage growth (and, by implication, wage levels) is substantially lower in the private sector, the main employer of migrant workers. See International Labour Office, Global Wage Report 2010/11: Wage Policies in Times of Crisis (Geneva: ILO, 2010) http://ilo.org, 3–4. Furthermore, in China as elsewhere, data on average wages and average wage growth obscures very sharp increases in wage inequality, exaggerating medium- and lower-paid workers’ wages by including rapid rises in the wages of the highest-paid workers (including the salaries paid to managers, etc.). Finally, the prices of food, fuel, and other basic necessities, which consume a far larger part of workers’ income than they do of the middle class, have been rising faster than overall inflation; failure to properly account for this can also make real wages seem larger than they are.
29. Duhigg and Bradsher, Ibid.
30. Marx, Ibid.

முந்தைய பாகங்கள்:

  1. ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
  2. ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
  3. ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்
  4. அவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை !

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம் : Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review

நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை. 

விவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா?

சேலம் 8 வழிச்சாலை என்பது வளர்ச்சி திட்டம் என்று அரசு மிரட்டியவாறு கூறுகிறது. இல்லை என்போரை கைது செய்கிறது. சென்னை மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதறிய களத்தில் இறங்கினோம்.

எட்டு வழிச்சாலை பற்றி உங்கள் கருத்து கேட்க வந்திருக்கிறோம் என்றவுடன் “வேண்டாம்” என்று சிலர் விரக்தியில் கடுப்பானார்கள்.. சிலர் சிரித்துக் கொண்டே வேலை இருக்குது பாஸ் என்றனர். சிலர் கருத்துக்களை சொல்லிவிட்டு புகைப்படம் வேண்டாம்.. ப்ளீஸ்.. என்று கடந்தனர்.

எட்டு வழிச்சாலை எதிர்க்கும் மக்களையும், சமூக ஆர்வலர்கள், இயக்கத்தினரை அரசு கைது செய்து தொடர்ந்து அச்சுறுத்துவதாலோ என்னமோ பொதுவில் மக்கள் இது குறித்து பேச தயங்குகிறார்கள். கிராமங்களில் இருந்து வந்திருப்போருக்கு விவசாயிகளின் பிரச்சினை புரிகிறது. விவசாயிகளை அறியாதோர் இது வளர்ச்சி என்றே பேசுகிறார்கள். ஒரிரண்டு தவிர அனைத்து ஊடகங்களும் இப்போராட்டம் குறித்து இருட்டடிப்பு செய்வதால் பலருக்கு பிரச்சினையின் தன்மையோ தீவிரமோ தெரியவில்லை.

நம்மிடம் பேசிய பல இளைஞர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தம் சென்னை வந்திருந்தவர்கள்தான். இந்த சென்னை வாழ் தமிழக இளைஞர்கள் எட்டு வழிச்சாலையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

சூர்யா, பெரம்பூர் – மெடிக்கல் ஊழியர்

8 வழிச்சாலைஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு இதெல்லாம் வளர்ச்சின்னு சொன்னாங்க.. அது யாருக்கு வளர்ச்சின்னு தெரிஞ்சிடுச்சி. இப்ப 8 வழிச்சாலை வளர்ச்சின்னு சொல்லுறாங்க. யாருனா நம்புவாங்களா….? இவங்க வளர்ச்சிக்காக விவசாயிகளோட வீடு வாசலை இடிச்சி அவர்களை நடுத்தெருவில் விட்டா, நாம வேடிக்கை பார்க்க முடியுமா?

நரேந்திரன், திண்டிவனம் – சுயதொழில் முனைவர்
தினேஷ், தலைவாசல் – ஐ.டி. ஊழியர்

அரசியல்வாதிகளா இவங்க. ஊழல்வாதிங்க. நாம இப்படியே பேசிட்டு போயிடுவோம்னு நெனக்கிறாங்க. ஆட்சியாளர்கள் பாதிக்கிற மாதிரி போராட்டம் நாம செய்யணும் .. வளர்மதி, பாலபாரதின்னு வரிசையா கைது பண்ணுவாங்களா? பாதிச்ச விவசாயிங்களை பார்க்கிறது கூடவா அஃபன்ஸ் .. இது சரியில்லை.. நாம விடக்கூடாது.

கார்த்திகேயன், சென்னை

மோடி சுவிட்ச் போடுறாரு இவங்க இங்க ஆடுறாங்க.. நாம இதெல்லாம் பார்த்துகினுதான் இருக்க முடியும்.. வேற என்ன செய்ய முடியும்.. இன்னிக்கு ஒருநாள் போராட்டத்துக்கு வர முடியும் .. நாளைக்கு? இதான் சார் எல்லோருக்கும். நான் ஆட்டோதான் ஓட்டுறேன். சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் ரெஸ்ட் கிடைக்கும். அப்போ பேஸ்புக், வாட்சப்ல இவனுங்கள பயங்கரமா திட்டுவேன்.. வேற என்ன செய்யிறது?

சந்திரசேகர், தேனி – ஜியோ எஞ்சினியர்

அரசு பண்றது தப்புதான் .. அங்க போராட்டம் நடக்குது.. ஆனா பாதி பேர் பணத்தை வாங்கிட்டதா சொல்லுறாங்க .. எடப்பாடியும் அப்படிதான் சொல்லுறாரு… கிரவுண்டுல போயி பாத்தாதான் தெரியும்.

கார்த்தி, திருச்சி – ஜியோ ஊழியர்

ஒவ்வொரு ஆளும் ஒன்னொன்னு சொல்லுறாங்க.. நெறைய பேருங்க மூனு நாலு மடங்கு பணம் தருவேன்னு சொல்றாங்க. ஒரு தென்னைக்கு ஐம்பதாயிரம்’னு சொல்லுறாங்க.. விளையாத நெலம் தானே அது.. சில பேரு ரோடு வேணும்னு சொல்லுறாங்க.. என்னன்னு முழுசா சொல்லத்தெரியல.. 8 வழிச்சாலை கனிமங்களை எடுக்கிறதுக்கு வருதுன்னு சொல்றாங்க.. உண்மை எது? பொய் எது?

கணேஷ், படப்பை

இதுவரைக்கும் நாம எதுவும் பண்ணல…. பண்ணவும் முடியாது.. இருந்தாலும் விவசாயிகளை அப்படியே விட்டுட முடியாது.. எதாவது அரசுதான் செய்யணும் .. இல்லனா நாம செய்யணும் ..

வடிவேலு, ஆரணி – டிரைவர்

நான் ரெகுலரா அந்த ரோட்டுலதான் போயிட்டு வரேன்.. எட்டு வழிச்சாலை தேவை இல்ல.. பெரிய டிராபிக் உளுந்தூர்பேட்டையில தான் இருக்கு.. அதை மட்டும் விரிவுபடுத்தினா போதும் .. பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாம இதை செய்யணும்.

கவுதம் – ஐடி ஊழியர் (போட்டோ தவிர்த்தார்)

சில போராட்டம் தேவையில்லாம நடக்குது.. ஸ்டெர்லைட் அப்படித்தான் கடைசியில யாரோ வந்தாங்க.. எல்லாரையும் சொல்லல.. சம்திங்க் ராங்…. இப்ப எட்டு வழிச்சாலை போடனும்னு சொன்னா, விவசாயிகளுக்கு நல்ல மாத்து இடம் தரணும். இல்லனா கிராமத்து ஜனங்க போராடத்தான் செய்வாங்க.

வினோத், மதுரை – சொந்தமாக பிசினஸ் செய்பவர்

அரசாங்கத்தோடு தொடர் நடவடிக்கை எதுவுமே சரியில்ல… ஒரு அரசுக்கு முதல்ல மக்கள் நலன்தான் முக்கியம்.. அப்புறம் தான் வளர்ச்சி.. அந்த வளர்ச்சி கூட மக்களுக்கானதாத்தான் இருக்கணும். 8 வழிச்சாலை நாம பயன்படுத்த போறது இல்ல.. மக்களோட வளர்ச்சிக்கு அடிப்படையானது விவசாயம் தான். அதை அழிச்சிட்டு போடுற ரோடு என்ன வளர்ச்சி?

தினேஷ், தேவிகாபுரம், திருவண்ணாமலை – நிலத்தை பறிகொடுத்தவர்

எங்களோட நிலம் கொஞ்சம் கையகப்படுத்தி இருக்காங்க. அக்கம் பக்கத்து நிலம் தான் முழுசா போகுது .. அந்த நெலத்தை வச்சிதான் எங்க அப்பா என்ன படிக்க வச்சாரு.. நான் படிச்சி முடிச்சி வேலைக்கு வந்துட்டேன்.. இன்னும் எங்க ஊர்ல படிக்க வேண்டியவங்க இருக்காங்க அவங்க எல்லாம் என்ன பண்றதுண்ணே தெரியல.. இந்த நெலத்த தனியார் அபகரிக்கறான்னா கவர்மெண்டுகிட்ட போகலாம்.

கவர்மெண்ட்டே இப்படி பண்ணும்போது என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறோம். யாரு கிட்ட போறதுன்னு தெரியல.. எல்லாரும் கொடுக்கும் போது நாம மட்டும் எதிர்த்து என்ன பண்ண முடியும்னு தோணுது…. மத்த படி நெலத்த கொடுக்கணும்னு யாருக்கும் விருப்பம் இல்ல.. இந்த சம்பவம் எனக்கு உணர்த்துறது ஒண்ணுதான்.. இது கவர்ன்மெண்ட் இல்ல.. ஒரு கார்ப்பரேட். எனக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்து என்ன பாதுகாத்துன எங்க குடும்பம்தான் எனக்கு கவர்ன்மெண்ட். இனி நாமளேதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்!

சீனுவாசன், திருத்தணி – ஐ.டி ஊழியர்

8 வழிச்சாலைவிவசாயிங்க கிட்ட நிலம் எடுக்கிறது தவறான விசயம்.. அரசு கொடுக்கிற காசு அவங்களுக்கு எவ்ளோ நாளைக்கு வரும்? நிலம் இருந்தாதான் கடைசி வரைக்கும் விவசாயிங்க உழச்சி சாப்பிட முடியும்.. விவசாயத்தை அழிச்சி நாட்டு வளர்ச்சி தேவையில்லை…. வளர்ச்சின்னா என்ன? பணக்காரனுங்க எல்.கே.ஜி படிக்கிறதுக்கு ஒரு லட்சம் பீஸ் கட்றாங்களே அதுவா? ஐ.டி கம்பனியில நாளைக்கு என்ன வேலையில இருந்து துரத்திட்டா நான் எங்க போவேன்..? கடைசியில கிராமம் தான்.. அவங்க நிலத்த விடக்கூடாது. நீங்க போராடுங்க.. நாங்க துணைக்கு வரோம்னு நாம சொல்லணும்.

ராஜேஷ், பிரபு, ஆகாஷ் – பிரிசிடென்சி கல்லூரி முன்னாள் மாணவர்கள்

எட்டு வழி சாலைக்கு பேர் வச்சிருக்கிறத பாருங்க.. பசுமை சாலையாம்..! நிலத்தை அழிச்சி போடுற ரோடு பசுமையா? இவனுங்களுக்கு ரிவிட் அடிக்கனும்.. அப்ப தான் அவனுங்களுக்கு புரியும்.

ராமு, மயிலாடுதுறை – சென்னை பல்கலைக்கழகம்.

8 வழிச்சாலைசிறந்த தலைவர்கள்தான் இப்ப தேவை.. நாட்டுப்பற்று, மொழிப்பற்று அவங்களுக்கு இருக்கணும்.. ஓட்டுப் போட்டா நமக்கு மரியாதை இல்ல. தெரிஞ்சிடுச்சி.. ஓட்டுப் போடக்கூடாது.. நீங்க அடங்கி போவாதிங்க நாங்க வரோம்னு விவசாயிக்கு சொல்லணும்.

ஜெகன்நாதன், கிருஷ்ணகிரி

இந்த கவர்மெண்ட் இருக்கிர வரைக்கும் அப்படித்தான் நடக்கும். கவர்மெண்ட் மாறனும். நாம தனியா என்ன பண்ண முடியும்.. ஜல்லிகட்டு, ஸ்டெர்லைட் மாதிரி எல்லோரும் சேரணும்.

ராஜா, கும்பகோணம் – ஆக்டிங் டிரைவர்

8 வழிச்சாலைநானே டிரைவர்தான். 8 வழிச்சாலை மக்களுக்கு தேவை இல்லை. பத்தாயிரம் கோடியில கமிசன் அடிக்கிறவங்களுக்கு அது தேவை… சேலத்து ஜனங்க ஏற்கனவே அதிகமா கஸ்டப்படுறவங்க.. இந்த சாலையால அவங்களுக்கு இன்னும் துன்பம்தான்.. அவங்களுக்கு தெரிஞ்சது விவசாயம், ஆடு, மாடு. இந்த எட்டு வழிச்சாலைய வச்சி அவங்க என்ன பண்ணுவாங்க?

-வினவு புகைப்பட செய்தியாளர்கள்.

மக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் ?

  • முகாந்திரம் இல்லாமலா வாஞ்சிநாதனை நீதிமன்றக் காவலில் வைத்ததா அரசு?
  • மக்கள் அதிகாரத்தை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று பாஜக கூறுவதன் பின்னணி என்ன ?
  • மக்கள் அதிகாரத்தை கருவறுக்க வேண்டும் என பொன்னார் கூறியதைப் பற்றி ?

– மேலும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு

பாருங்கள், பகிருங்கள் !

மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன ?

  • க்சலைட் என்றால் என்ன? அது தடை செய்யப்பட்ட அமைப்பா?
  • மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன?
  • வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா ?
  • தூத்துக்குடி போராட்டத்தை மக்கள் அதிகாரம் நடத்தியதா?

இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

பாருங்கள் ! பகிருங்கள் !

யார் சமூக விரோதி ?

  • ஜினி கட்சிக்கும் மக்கள் அதிகாரத்திற்கும் என்ன பிரச்சினை?
  • தமிழ் இந்து பத்திரிகையில் மக்கள் அதிகாரத்தின் மீதான அவதூறு செய்திகள் அதிகமாக பரப்பப்படுவது ஏன்?
  • போராட்டங்களை ஒடுக்கி வருகிறது அரசு. நாம் தோற்றுவிட்டோமா?
  • யார் சமூக விரோதி?

–   இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

பாருங்கள், பகிருங்கள் !

சென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் ! படக்கட்டுரை

லகக்கோப்பை கால்பந்து போட்டி ரசியா – 2018-ன் இறுதிக் கட்டம் இது.  ஊடகங்களில் அன்றாடம் ஆயிரத்தெட்டு கோணங்களில் வீரர்கள், நாடுகள், போட்டிகள் குறித்து அலசல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் காலபந்து ஆர்வம் கொண்டவர்கள் குறைவு. கேரளா, வடகிழக்கு போன்ற மாநிலங்கள் தவிர்த்து இங்கே விளையாட்டு குறித்த ஆர்வமே பொதுவில் இல்லை. எனினும் இந்த ஏழை நாட்டில் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

சென்னை வியாசர்பாடி அப்படிப்பட்ட பகுதி. எந்த விளம்பரமுமின்றி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள், இப்பகுதி கால்பந்து வீரர்கள். இங்கு ஒவ்வொருவருமே தங்களுக்கான தனிச்சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர், முல்லை நகர் கால்பந்து மைதானத்தில்…

அவர்களுடையை வாழ்க்கையில் வலிகளே நிரம்பியிருந்தாலும் அவர்கள் காலபந்தை நேசிக்கிறார்கள். அவர்களோடு உரையாடுவோம்.

ஒவ்வொரு நாளும் ஒன்றாக நின்று உறுதிமொழி எடுத்து விட்டுத்தான் விளையாட ஆரம்பிக்கிறார்கள்.

உறுதிமொழி எடுக்கும் வீரர்கள்…

தாரள மனது எங்களுக்கு தாரும்!
காயங்களுக்கு அஞ்சாமல் நற்போர் புரிவோம்!
ஓய்வு தேடோம்!
கஷ்டங்களுக்கு தயங்காத தைரியம் தாரும் !
பதில் சன்மானத்தை எதிர்பாரோம்!
மற்றவர்களை நேசிக்கிற எங்களுக்கு
அன்பு, அமைதி, ஆற்றல், ஆனந்தம்,
நல்ல சிந்தனை, போராட்ட குணம் அள்ளி தாரும்!
குழந்தை தொழில் எதிர்ப்போம்!
குழந்தை உரிமை காப்போம்!

கிருத்திகா, ஜெயஶ்ரீ, பூஜா, காயத்திரி, தேவிஶ்ரீ ஆகியோரிடம், “பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் பசங்களோடு சேர்ந்து விளையாடுவதற்கு வீட்டில் என்ன சொன்னார்கள்?” என்றோம்.

“வீட்டைக்கூட சமாளித்து விட்டோம். பக்கத்து வீடு, தெரு, ஊர் வாயைதான் மூடமுடியவில. பக்கத்து வீட்டு ஆண்டி’ங்கதான் ரொம்ப படுத்துறாங்க. கட்டிக்குடுக்கிற பொண்ண இப்படி கால் டவுசரோட அலையவுடலமா? இதுங்க இன்னா ஊரு மேயவா போகுது? இப்படி போனா இதுங்க கழுத்துல எவனா தாலி கட்டுவானா? என்று டிசைன் டிசைனா கேட்பாங்க. டவுசர், பனியன் போட்டு ரோட்டில் இறங்கினால் போதும் முறைத்து நம்மைப் பற்றிதான் பேசுவார்கள்.

வேலைவெட்டி இல்லாதவர்களுக்கு பொழுதுபோவது எப்படி? நாங்கள் அதையெல்லாம் கண்டுக்கிறதில்லை.இப்போது அவர்களுக்கும் செம கடுப்பு. காதில் வாங்காமல் போகிறார்களே என்று.

எங்களோட அம்மாக்கள் எங்களை செமையாக டீல் பண்ணுவாங்க. ஏன்…டீ…பரிச்சையில மார்க் எடுக்கலனு வைச்சுக்க…வீட்டிலேயே அடைச்சிடுவேன். வெளையாட போ…முடியாது! வீட்டு வேலை எதுவும் செய்யலண்ணா..உன்னை வெளிய…வுடமாட்டேன் என்று டெர்ரர்ராக…டார்ச்சர் செய்து எங்களுக்கு தெரியாமலேயே எங்களை நல்லப் பெண்ணாக்கி விடுவார்கள்.

மற்றபடி மைதானத்தில் ஆண், பெண் என்ற நினைப்போடு யாரும் விளையாடுவது கிடையாது. இங்கு அணிக்கு என்று விதிகள் உண்டு. விளையாட்டு அடுத்துதான். ஒழுக்கம்தான் பர்ஸ்ட். சிறுவனாய் இருந்தாலும் பெரியவனாய் இருந்தாலும் நண்பா என்றுதான் எல்லோரையும் அழைக்க வேண்டும்.

சீனியர்களாய் இருக்கும் அண்ணன்கள்அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கற்றுக் கொடுப்பார்கள். சின்னவர்கள், பெண்கள் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். அவர்கள் உதவி இல்லையென்றால் இந்த அளவுக்கு எங்களால் வளரவே முடியாது.

அவர்கள் தப்பாக நடந்தால் அல்ல, நினைத்தால்கூட எங்களால் கண்டுபிடித்து விடமுடியும். அப்படி சின்ன அறிகுறியைக்கூட நாங்கள் இதுவரை யாரிடமும் பார்த்தது இல்லை.

வல்லரசு, ஜுலை 14 அன்று நடந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற ஜுனியர் அணியின் கேப்டன்! ”எங்க அப்பா ஒரு ஃபைல் கம்பனியில கூலிக்கு வேலை செய்யிறாரு. கால்பந்து விளையாட போறேன்னு வீட்டுல சொன்னேன். விளையாட்டெல்லாம் அப்புறம் இருக்கட்டும் மொதல்ல படிக்கிற வேலையா பாருடான்னு சொல்லிட்டாங்க.” அப்புறம் தங்கராஜ் மாஸ்டர்தான் வீட்டுல பேசி கூட்டி வந்தாரு. இங்க வந்தப்புறம் வீட்டோட கஷ்டம்.. சரியா விளையாட முடியல.. ஒருமாறி டிஸ்டர்ப்பா இருந்துச்சி.. இருந்தாலும் கொஞ்சம் கான்சன்ரேட் பண்ணேன்.

“நான், டிபன்ஸ் பிளேயர். ஒரு முறை என்னோட ஆட்டத்தை பத்தி மாஸ்டர் உற்சாகமா சொன்ன பிறகுதான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சி… அதுக்கப்புறம் தான் கால்பந்து மைதானமே வாழ்க்கையா மாறிடுச்சி… ஆறு வருஷமா பயிற்சி எடுக்கிறேன்… இதுவரைக்கும் நாங்க 7 வெற்றிக்கோப்பைகளை வாங்கியிருக்கோம்” என்று சொல்லிக்கொண்டே பந்தை உதைத்து தள்ளுகிறார்.

சஞ்சய்குமார், கோல்கீப்பர்.. எங்க அப்பா ரோப் கம்பனியில வேலை பாக்குறாரு… நா…இந்தப் பக்கம் வரும்போது..போம்போதெல்லாம் பார்ப்பேன். ஆசையா இருக்கும்… அதனாலதான் இங்க வந்தேன்.. எங்க மாஸ்டர் உமாபதி அண்ணன்தான் நீ நல்லா சேவ் எடுக்கிறன்னு சொன்னார். பெஸ்ட் கோல் கீப்பர்னு பாராட்டினார். “நான் ரொனால்டோவோட கோலை தடுக்கனும்”னு அசால்டாக சொல்கிறார்.

விரல் நுனியில் பந்தை சுழற்றும் ரஃபிக்……!

“கால்பந்து வீரராக வேண்டும் என்ற கனவுகளுடன்”.. நான் ஆட்டோகிராஃப் போடுறேன்…..ஒரேயொரு போட்டோ எடுங்கண்ணா…!

தியாகு, முல்லை நகர் கால்பந்து அணியின் கேப்டன், பயிற்சியாளர், அணி நலம் விரும்பி என பன்முக உதவிகள் செய்யும் கால்பந்து வீரர். இவர் தலைமையில்தான் இவ்வணி ஸ்வீடன் சென்று 2010-ம் ஆண்டு 1-0 என்ற கோலில் வெற்றி பெற்றது.

“படிப்பு ஏறவில்லை. 10 வயதிலேயே விளையாட்டுக்கு வந்துவிட்டேன். கால்பந்தே கதி என்று கிடந்தேன். என் சீனியர்கள் என்னை விளையாட்டு வீரனாக்கினார்கள். அப்போது ஜெர்சி, டீசர்ட் வாங்க என்னிடம் பணம் இல்லை. வெறும் காலில் பந்தை உதைத்து கற்றுக் கொண்டேன். நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் எல்லோரும் அப்படித்தான். பந்துகூட எங்களிடம் சொந்தமாக இல்லை.

வெளி கிளப்புகளில் கெஞ்சினால் சனி, ஞாயிறு இரண்டு லீவு நாட்கள் மட்டும் பந்து கடனாக கொடுப்பார்கள். 20 ஆண்டுகளாக கால் பந்து விளையாடுகிறேன். இப்போதும் அண்ணன் பராமரிப்பில்தான் வாழ்கிறேன். படிப்பு இல்லாததால் வேலை கிடைக்கவில்லை. வீடுகளுக்கு தண்ணீர் கேன்கள் போடுகிறேன். அது கைச்செலவுக்கு ஆகிறது.

இங்கு வரும் குழந்தைகள் காலணி வாங்கக்கூட வசதியில்லாமல் வருகிறார்கள். அவர்களுக்கு தேவையானது செய்ய முடியவில்லை. நான் வேறு எப்படி தனியாக சம்பளம் கேட்பது? திடீர் கஸ்டம் என்றால் அணி பொறுப்பாளர்கள் எனக்கு உதவுவார்கள்” என்கிறார் அமைதியாக!

தங்கராஜ், குடிசைவாழ் குழந்தைகள் விளையாட்டுத் திறமை மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கம். (Slum Children Sports Talent and Education Development Society)அணியின் ஆரம்பகால அமைப்பாளர், கோச்சர். அணி வீரர்கள் அனைவருக்கும் அன்பான “அண்ணா”. இந்நிறுவனம் உலகளவில் குடிசைப் பகுதி குழந்தைகளின் விளையாட்டுத் திறனை வெளிக் கொண்டு வருவதற்காக நடத்தப்படுகிறது. உண்மையில் பெரும் வணிகமாகிவிட்ட விளையாட்டுப் போட்டிகளின் வர்த்தகம் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு இருப்பதாக காட்டிக் கொள்ள இந்த முயற்சிகள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுகின்றன.

“3 வயது குழந்தைகள் முதல் 30 வயது வாலிபர்கள் வரை இங்கு பயிற்சி எடுக்கிறார்கள். வயதுக்கு தகுந்த மாதிரி அணிகள் பிரித்து பெயரிட்டு அழைக்கிறார்கள்.

2 வயது முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் முயல்குட்டி அணி, 5 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்கள் மான்குட்டி அணி, 10 வயது முதல் 13 வயது வரை சப்-ஜூனியர் அணி, 14-லிருந்து 16 வயது ஜூனியர் அணி, 17-லிருந்து 18 வயது இன்டர் லெவல், 18-லிருந்து 26வயது வரை சீனியர் லெவல் என்று தரம் வாரியாக பயிற்சி தருகிறார்கள். பல குழந்தைகளின் அப்பாக்களும் கால்பந்து வீரர்களாக இருக்கிறார்கள்.

இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் இவர்கள். பாதிக்கு மேற்பட்ட குழந்தைகளின் அப்பா, அம்மாக்கள் தினக்கூலிகள். வீட்டு வேலை, மூட்டை தூக்குபவர், தள்ளுவண்டியில் கூலி வேலை செய்பவர்கள், லேத் பட்டறையில் வேலை பார்ப்பவர்கள் என வாழ்க்கையின் ஆகக் கடைக்கோடியில் இருப்பவர்கள். பல குழந்தைகளின் வீட்டில் இலவச கலைஞர் டிவிகூட இல்லை. நடை பாதை தடுப்புகளில் வசிக்கிறார்கள்.

அப்பாக்கள், பல குற்றங்கள் புரிந்து சிறையில் வாழ்கிறார்கள். சில குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை. எனக்கு அம்மா இல்லண்ணா… அப்பா இல்லண்ணா என்று சதாரணமாக சொல்கின்றனர்.

இங்கு பிள்ளைகளுக்கு விளையாட்டு மட்டுமே நாங்கள் கற்றுக் கொடுக்கவில்லை. முதலில் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்படுத்துகிறோம். அதற்கு துணை செய்யதான் இங்கு விளையாட்டு. வட சென்னை, குறிப்பாக வியாசர்பாடி மக்கள் கொலை, கொள்ளைக்கு அஞ்சாதவர்கள் என்று முத்திரைக்குத்தப்பட்ட பகுதி.

20 ஆண்டுகளுக்கு முன் இங்கு படிப்பறிவு ஏறக்குறைய பூஜ்ஜியம். அவர்களின் குழந்தைகளும் சம்மந்தமே இல்லாமல் அப்பழியைச் சுமந்தன. இதனால் பல குழந்தைகள் அவமானத்தால் போக்கிடம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டன. வெளியில் இருந்து குடியேறிய சில பெரும் தாதாக்கள் கடும் வறுமையில் ஊழலற்ற, படிப்பறிவுவற்ற இம்மக்களை கூலிக்கு கிரிமினல் வேலையை செய்யத் தூண்டியது. அவர்கள் கொழுக்க, இவர்கள் போலீசு இலக்காக குறிவைக்கப்பட்டார்கள். அவமானப்படுப்படுத்தப்பட்டார்கள். நடைபிணங்களாக வாழ்ந்தவர்களுக்கு நம்பிக்கையூட்ட பல சமூக நடவடிக்கைகளை முன்னேடுத்தோம். அதில் ஒன்று கால்பந்து.

இவ்விளையாட்டு நாங்கள் எதிர்பார்த்தற்கு மேல் இளைஞர்களை நல்வழிப்படுத்தியது. தன்னை, தன் உடலை, தன் அறிவை, தான் நிற்கும் இடத்தை, தன்னை சுற்றியிருப்பவரின் உளவியலை தொடர்ந்து கண்காணிப்பதை முன் நிபந்தனையாகக் கொண்டது இவ்விளையாட்டு. கால் பந்து இளைஞர்களை பண்படுத்தியது. அவர்களது அறிவு வழி பயணம் அதிசயங்களை நிகழ்த்துகிறது. படிப்பிலும் இப்போது அவர்கள் கில்லி. இங்கு பல அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 100 சதத்தை தொட்டுவிட்டன.

பெற்றோர்களே பிள்ளைகளை இங்கு அழைத்து வருகிறார்கள். இப்போது தேவையான அளவு மைதானங்களையும் விளையாட்டுகளை விரிவுப்படுத்த உதவியின்றி தடுமாறுகிறோம். அப்படியும் இங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில, தேசிய வீரர்களை உருவாக்கியிருக்கிறோம் என்கிறார்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

எது வளர்ச்சித் திட்டம் ?

எது வளர்ச்சித் திட்டம் ?

  • வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானதா மக்கள் அதிகாரம்?
  • 8 வழிச்சாலைக்கு அரசு இழப்பீடு தருகிறேன் என்று கூறுவது பொய்யா?
  • என் நிலத்திற்குள் வர அரசு அதிகாரி யார் என ஒருவர் கேட்க முடியுமா?

– பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.

பாருங்கள், பகிருங்கள் !

அமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah

2

டிவிட்டரில் வந்த செய்திகள் – படங்களை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

சொராபுதீன், கவுசர்பீ கொலை வழக்கில் சிறைவாசத்திலிருந்து எப்படி தப்பினார் அமித்ஷா?

சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில்:

முதல் நீதிபதி ஜே.டி. உத்பத் : ஜூன் 26. 2014 அன்று நீதிமன்றத்தின் முன்னால் அமித்ஷா ஆஜராகவேண்டும் என்றார். ஆனால் ஜூன் 25, 2014 அன்று புனே செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றல் செய்யப்பட்டார்.

இரண்டாவது நீதிபதி ப்ரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா: டிசம்பர்1, 2014-ல் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார். அவரது குடும்பத்தினர் அவர் கொலைசெய்யப்பட்டார் என்கின்றனர். மேலும் அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாகவும் தெரிவித்தனர். எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

மூன்றாவது நீதிபதி எம்.பி. கோசாவி: இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி அமித்ஷா முன்வைத்த மனுவை டிசம்பர் 15, 2014 அன்றுதான் விசாரிக்க ஆரம்பித்தார். டிசம்பர் 17, 2014 அன்று வழக்கு விசாரணையை முடித்தார். 10000 பக்க குற்றப்பத்திரிகையை படிக்காமலேயே அமித்ஷாவை அவ்வழக்கிலிருந்து விடுவித்தார்.

@Jokin Jeyapaul
பாஜக-வின் கப்பார் சிங் #GoBackAmitShah #GetOutAmitshah

@Sanjeevee sadagopan
இந்தியா அளவிலும், சென்னை அளவிலும் (ட்விட்டர் ட்ரெண்டிங்கில்) மூன்றாவது இடத்தை இன்று காலையிலேயே பிடித்துவிட்டது #GobackAmitShah. காலை 11 மணிக்கு தமது கட்சித்தலைவர்களை சந்தித்துப் பேசும் அமித்ஷா, மாலையில் தமது கட்சித் தொண்டர்களை சந்திக்கிறார்.

@Roshan Rai
தமிழர்கள் #GobackAmitShah என்பதை ட்ரெண்ட் ஆக்குவதை காண்கிறேன். ஒரு வட இந்தியனாக தமிழக சகோதர சகோதரிகளின் வலியை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஜம்முவிலிருந்து கேரளாவரை அமித்ஷாவினால் வெறுப்பு உமிழப்படாத மாநிலம் ஒன்று கூட இல்லை. நாம் அனைவரும் இணைந்து மதவாதத்தை எதிர்க்கவேண்டிய நேரம் இது.

@dr.madas
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அமித்ஷா ஏதேனும் கருத்துக் கூறினாரா ? ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்ற வகையில் அவருக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு கிடையாதா?! #GoBackAmitShah

@Boopathy Narendran
நாங்கள் வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, நேபாள் தொழிலாளர்கள் அனைவரையும் எங்கள் மண்ணிற்கு வரவேற்கிறோம். ஆனால் உங்களை நாங்கள் இங்கு வரவேற்கமாட்டோம்.  #GoBackAmitShah

@Jokin Jeyapaul
#GoBackAmitShah  #GetOutAmitshah  உங்க பாட்ஷா இங்கே பலிக்காது.  நீங்கள் பசு பாதுகாவலர்களின் ஆதிக்கப்பகுதிகளில் வேண்டுமானாலும் பாட்ஷா வாக இருக்கலாம். ஆனால் இங்கு நீங்கள் மோசமான ஷா (’பேட்’ ஷா)

@Keerthi
செய்தி: அமித்ஷா தமிழ்நாட்டில் 2019 தேர்தல் உபாயங்கள் குறித்து விவாதிக்க வருகிறார். பக்தாள்கள் எல்லாம், அவரது வருகை, பாஜக ஓட்டு எண்ணிக்கையை நோட்டாவை விட அதிகரிக்கும் என நினைக்கின்றனர். பரிதாப பக்தாள்களே, அமித்ஷா இல்ல, அவரோட தாத்தாவே தமிழ்நாட்டுக்கு வந்தாலும் உங்களுக்கு 108 ஓட்டுகள் மட்டும்தான் கிடைக்கும். #GobackAmitShah

@Ashish Vivek Merukar‏ 
தமிழ்நாடு பிற மாநிலங்களை விட முழுமையாக வேறுபட்டது. அங்கு பாஜக-வால் ஒரு போதும் காலடி பதிக்க முடியாது. பிற மாநிலங்களில் பெரியார் இல்லாத காரணத்தினால்தான் பாஜக அங்கு ஜெயித்திருக்கிறது. #GobackAmitShah

Krish
#GobackAmitShah உங்களது பிரிவினைவாத, விசமத்தனமான, சாதிய, மத வெறுப்பின் மூலம் தமிழ்நாட்டு மக்களை பிரிக்காதீர்கள். தென்னிந்தியாவில் நாங்கள் அனைவரையும் சமமாக நடத்துகிறோம். நாங்கள் மக்களை அவர்கள் விரும்பியதை உண்டு, தங்களது நம்பிக்கையோடு வாழவிடுகிறோம்.

நாங்கள் எதையும் வற்புறுத்துவதில்லை. நாங்கள் கொலைகளையும் கற்பழிப்புகளையும் ஆதரிப்பதில்லை. நாங்கள் கொள்ளைக்காரர்களை ஆதரிப்பதில்லை.

@Pirai Kannan
அருண், ஆரிஃப், அகஸ்டின் – நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம். இது அமித்ஷா, நரேந்திரமோடி போன்ற மதப் பிரிவினைவாதிகளுக்கான இடம் அல்ல.  #GobackAmitShah

@faiz
தமிழர்களே, மிகப் பழமையான நாகரீகத்திலிருந்து வந்த நீங்கள்தான்  #GoBackModi என்ற முழக்கத்தை தந்தீர்கள். வீர மாவீரர்களே, இது திருவள்ளுவர், ராஜராஜன், பாரதியார் வாழ்ந்த பூமி. இந்த தயாள மண்ணில், இழிவான எண்ணம் கொண்டவர்களை விடாதீர்கள். நாம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பதை உரக்கச் சொல்லுங்கள். #GoBackAmitShah

2002-ம் ஆண்டிலிருந்து இருவரும் முதல்பக்கத்தை அலங்கரிக்கிறார்கள். #GoBackAmitShah

@Dr. J Aslam Basha
வளர்ச்சி என்று சொல்லிக் கொள்ளப்படும் சேலம் நெடுஞ்சாலை கட்டுமானத்தில், பாஜகவின் நலனுக்காக, ஏழை மக்களிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுள்ளது. #GoBackAmitShah

@Rachit Seth
ஜெயலலிதாவுக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையை சீர்குலைக்க, கேடாக முயற்சித்தது. தமிழ்நாட்டு மக்கள் அவர்களை எதிர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2019-ல், இந்திய மக்கள் அமித்ஷாவையும், நரேந்திர மோடியையும் அவர்கள் தமிழகத்திற்கு செய்த தீமைகளுக்காக மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்  #GobackAmitShah

@தொல்காப்பியன்
தமிழகம் சமத்துவத்துக்கான மண். நாங்கள் உன்னைப் போன்ற தீவிரவாதிகளை அனுமதிக்க மாட்டோம். #GobackAmitshah

கார்த்திக்தாண்டவன்
ஆமையை வீட்டுக்குள் விடு, ஏன் அமினாவை கூட விடு, பட் அமித் ஷாவை மட்டும் விடாத, பூட்ட கேஸ் ஆய்டுவ #GoBackAmitShah

@Karthikeyan P
வட இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள், சாணக்கியன் என பாராட்டும் போது தமிழகம் மட்டும் ஏன் அமித்ஷாவை, #GoBackAmitShah என வரவேற்கிறது (மன்னிக்கவும், திருப்பியனுப்புகிறது). இது எந்த ஒரு ஐடி செல்களின் மூலமோ, பணம் கொடுக்கப்பட்டோ ட்ரெண்டாக்கப்படவில்லை. மதத்தின் பெயராலான பிரிவினையை தமிழகம் என்றுமே எதிர்த்திருக்கிறது.

@Pirai Kannan
பல இந்தி பேசும் இடம்பெயர்ந்தவர்களை தமிழகத்திற்கு வரவேற்றிருக்கிறோம். அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு அனுமதித்திருக்கிறோம். அதற்காக நாங்கள் குஜராத் இனப்படுகொலையாளர்களையும் #Genocider அனுமதிப்போம் என்று பொருள் கொள்ளக்கூடாது #GoBackAmitShah #GetOutAmitShah
இதுதான் தமிழ்நாடு #GoBackAmitShah

@Siddharth siddu
உங்களை வரவேற்காதவர்கள் இடத்திற்கு நீங்கள் செல்லக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா ?  #GobackAmitShah

@amutharasan
சட்டவிரோத நுழைவு #GobackAmitShah

@நாஞ்சில் வள்ளுவன்
இது தமிழ்நாடு! ராவணன்களின் நிலம்! புலிகளின் குகை! #GobackAmitShah

@Purushothaman
#GobackAmitShah இது எப்படி இருக்கு ?
#GoBackAmitShah@Mirath
தமிழகத்தில் பாஜகவிற்கு கிடைப்பது எல்லாம் எப்போதுமே செருப்படி  மட்டும்தான்.. . #GobackAmitShah

#GoBackAmitShah

@Ragu_Tweets
தமிழகத்தை ஒரு பூதம் ஆட்டுவிக்கிறது. அது பெரியார் எனும் பூதம் #GobackAmitShah

@Ramesh
இந்தியா முழுவதும் #GobackAmitShah ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. நான் உண்மையிலேயே ஒரு தமிழனாக பெருமை கொள்கிறேம். ஏனெனில் நாங்கள் எப்போதுமே ஒருவருக்கொருவர் மீதான வெறுப்பை வளர்க்கும் மதம் சார்ந்த கட்சிகளை ஆதரிப்பதில்லை.

@Naren
காலை 9 மணி தான் ஆகிறது,. அதற்குள் இந்திய அளவில் #GobackAmitShah 4வது இடத்தில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. மக்களின் பார்வை குறித்த ஒரு தெளிவான செய்தி.

@Seeman Army
அனைத்து மீடியாக்களும் க்ளோசப் சாட் மட்டுமே காட்டுகிறார்கள், லாங் சாட் காட்டுவதில்லை. #GobackAmitShah

@srikanth sarma
பணமதிப்பழிப்பு முறைகேட்டாளனே திரும்பிப் போ! #GobackAmitShah

@Yasir Arafat
நாங்கள் சகிப்புத்தன்மை கொண்ட மக்கள். நாங்கள் மனிதத்தன்மை கொண்ட மக்கள். நாங்கள் சகோதரத்துவம் கொண்ட மக்கள். தமிழ்நாடு, தற்போதும், எப்போதுமே உங்களை வரவேற்காது. ஆகவே #GobackAmitShah

@whatever..
#GobackAmitShah – காரணம் எதுவும் கிடையாது. எங்கள் மண்ணிலிருந்து வெளியேறு, அவ்வளவுதான்.

@Ramesh
#GobackAmitShah  தென் கோடியில், மத அடிப்படைவாதத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கான கொடுங்கனவு. மிகவும் முற்போக்கான ஒரு மாநிலத்திலிருந்து ஒருவனாக நான் பெருமை கொள்கிறேன். அருமையாகச் செய்திருக்கிறோம் தமிழகமே!

@SanghiLiveWire
அமித்ஷாவிற்கு சென்னை – உதவிய போது: #GobackAmitShah
#GoBackAmitShah@நிஷா
இறுதியாக பாஜக தலைவர் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் இருக்கிறது என்று உணர்ந்திருக்கிறார். #GobackAmitShah. எங்களுக்கு நீ தேவையில்லை.
#GoBackAmitShah@A.Vimal
#GoBackAmitShah பணமதிப்பழிப்பின் போது மக்கள் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். ஆனால் உங்கள் கூட்டம் ????

ரோலக்ஸ் வாட்ச் – தூக்கக் கலக்கம் : ஓலாவில் இருவேறு அனுபவங்கள் !

0

“உங்கள் முகவரியைக் கண்டுபிடிக்க தாமதமாகிறது. கூகிள் மேப் சரியான வழியைக் காட்டவில்லை. வேண்டுமென்றால் பதிவு செய்திருப்பதை இரத்து செய்யுங்கள் அல்லது பத்து பதினைந்து நிமிடம் காத்திருங்கள்” என்பதை அவர் உடைந்த ஆங்கிலத்தில் உரைக்க வெகுவாக சிரத்தை எடுத்துக் கொண்டார். நான் தமிழில் பேசிய போதும் பிடிவாதமாக ஆங்கிலத்தில் பேச முயற்சித்தது வினோதமாக இருந்தது. ‘ஒருவேளை தமிழரல்லாதவராக இருப்பாரோ’ என நினைத்துக் கொண்டு வேறு வழியின்றிக் காத்திருக்கத் துவங்கினேன்.

ஓலா ஓட்டுநர்களோடு எப்போதுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமிருப்பதில்லை. ஆட்டோ ஓட்டநர்களும் அப்படித்தான் என்றாலும், மேட்டுக்குடியினரின் அல்பத்தனங்களை ஓலா ஓட்டுநர்கள் போல் அவ்வளவு தத்ரூபமாக விவரிக்கும் ‘திறன்’, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாய்ப்பதில்லை. பெரும்பாலும் வாடிக்கையாளரோடு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இல்லை என்பதால் மேட்டுக்குடி ’மேன்மக்களை’ அவர்கள் ‘வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு’ கணக்கில் இடது கையாலேயே ’டீல்’ செய்து விடுகிறார்கள் என்பது எனது துணிபு.

அரிதான சந்தர்ப்பங்களில் வாய்க்கும் ‘சுவாரசியத்தை’ தவற விட விரும்பாததால் காத்திருக்கத் தீர்மானித்தேன். இருபது நிமிடங்கள் கழித்து வண்டி வந்தது – சுசுகி டிசையர். “தம்பி, நான் செடான் புக் செய்யலையே. மினி தானே கேட்டிருந்தேன்” என்றேன்.

“அதெல்லாம் ஆட்டோ அப்கிரேடு ஆயிருக்கும். நீங்க மினிக்கான வாடகையே கொடுத்தால் போதும்” பதிலளித்தவர் இருபதுகளின் துவக்கத்தில் இருந்தார். தலையின் இருபக்கங்களிலும் பின்புறத்திலும் கேசத்தை ஒட்ட வெட்டிருந்தவர் உச்சி மண்டையில் நீளமாக விட்டு அதை பின்புறக் குடுமியாக்கி இருந்தார். கட்டம் போட்ட பருத்திச் சட்டையின் பித்தான்கள் பாதி வரை அவிழ்த்து விட்டு உள்ளே அணிந்திருந்த டீ சர்ட்டின் எழுத்துக்களின் ஒரு பகுதி மட்டும் தெரியுமாறு விட்டிருந்தார்; ஏதோ ஆங்கிலக் கெட்ட வார்த்தை எனப் புரிந்தது. இடக் கையில் ரோலக்ஸ் கடிகாரம்; வலக் கையில் பல வண்ணக் கயிறுகள்.

எனக்குக் கடிகாரங்களின் மேல் கொஞ்சம் கிறுக்கு உண்டு. மட்டுமின்றி பேச்சுக் கொடுக்க அப்போதைக்கு அதில் தான் வாய்ப்பிருந்தது என்பதால் மெல்லத் துவங்கினேன், “தம்பி, இது ஒரிஜினல் ரோலக்சா?”“ஆமா ப்ரோ.. ஒரிஜினல்”

“விலை அதிகமா இருக்குமே?”

“ஒன்றரை லட்சம்”

“இல்லையே இன்னும் கூட இருக்குமே. எங்கே வாங்கினீங்க?”

“ம்ம்… இது ரிஃபர்பிஷ்டு. ஆன்லைன்லே வாங்கினேன். இதே மாடல் புத்தம் புதுசுன்னா மூனு லட்சம்” சாலையில் கவனம் செலுத்தத் துவங்கினார்.

ஓலாவில் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும் எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கு நேரங்காலம் பார்க்காமல் டூட்டி பார்க்க வேண்டும். இவரைப் பார்த்தால் அப்படி உழைப்பவர் போலவும் தெரியவில்லை. இருந்தாலும், “ஒன்றரை லட்சம் சேர்க்க எத்தனை மாசம் டூட்டி பார்த்திருப்பீங்க?” என்றேன்.

”ச்சேச்சே.. இது சொந்த வண்டி ப்ரோ. ட்ரைவர் லீவ்ல போயிருக்கார் அதான் நான் டூட்டி பார்த்திட்டு இருக்கேன்”

“சொந்த வண்டின்னா தவணையா இல்லை முழுசும் சொந்தமா?”

“சொந்த வண்டின்னா.. அப்படியே சொந்த வண்டி இல்லே இது மம்மியோடது. மம்மிக்கு மொத்தம் பதினோரு வண்டி ஓடுது. எல்லாமே ஓலாவில் அட்டாச் பண்ணிருக்காங்க.. நான் சினிமாவுல சான்சுக்காக ட்ரை பண்ணிட்டு இருக்கேன். மம்மி கிட்டே ’கே.டி.எம் ட்யூக் 390’ வாங்கித்தரக் கேட்டேன். அவங்க ட்ரைவருங்க லீவ்ல போகும் போது டூட்டி பார்த்தா ஒரு லட்சம் டவுன் பேமண்ட் தருவேன்னு சொல்லிருக்காங்க.. அதான்”

“அம்மா தான் வசதியாச்சே.. முழு காசையும் கூட தரலாமே”

“ம்ஹூம்… அப்டிலாம் தரமாட்டாங்க. அப்பப்ப டூட்டி பாத்தா ட்யூ கட்றதுக்கு காசு தர்றேன்னு சொல்லிட்டாங்க. எனக்கும் சினிமால சான்ஸ் வந்துட்டு இருக்கு…” என்றவர், தான் திரையின் ஓரங்களில் இடம்பிடித்த சில படங்களின் பெயர்களைச் சொன்னார் – அதில் ஒன்றைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. உப்புமா படங்கள்.

தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. சிறுவயதிலேயே கணவரை இழந்த இவரது தாயார் தன்னந்தனியாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்தக் காலத்தில் சாப்பாட்டுக்கே சிரமப்படும் ஏழைக் குடும்பமாக இருந்துள்ளது. கணவரின் மரணத்திற்குப் பின் முதலில் தெரிந்தவர்களிடம் சீட்டுப் பிடித்து பின் வட்டிக்கு கடன் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை மேலேற்றி இருக்கிறார். இவரது தாயார். ஓலா அறிமுகமான போது பழைய கார் ஒன்றை வாங்கி ஓலாவில் இணைத்து ஆள் போட்டு ஓட்டியிருக்கிறார். பின் வெகு சில ஆண்டுகளிலேயே பத்து கார்களுக்கு மேல் வாங்கி விட்டுள்ளார். கார்கள் ஒவ்வொன்றுக்கும் மாற்று ஓட்டுனர்கள் போட்டு இரவு பகலாக ஓடிக் கொண்டிருந்தாலும் வட்டித் தொழிலை இன்னும் விடவில்லை. ஒரே பிள்ளை என்பதால் செல்லம் அதிகம் என்பதை இவரோடு பேசியதில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

இறங்கும் இடம் வந்தது. “இங்கேருந்து திரும்பிப் போக உங்களுக்கு சவாரி கிடைக்கும் தானே?”

“ப்ரோ மணி எட்டு ஆயிடிச்சி. இதுக்கு மேல எவன் ஓட்டுவான்? பிரண்டுக்கு இன்னிக்கு பர்த்டே பார்டி.. அப்டியே போயிட்டு அங்கேயே தங்கிடுவேன்”

வாடகையைக் கொடுத்து விட்டு இறங்கினேன்.

0o0o0o0

வேலை முடிந்து திரும்பும் போதும் ’ஓலா’தான். இந்த முறை நடுத்தர வயதுக்காரர். மோடியில் ஆரம்பித்து டொனால்ட் ட்ரம்ப் வரை போகிற போக்கில் துவைத்துக் காயப் போட்டுக் கொண்டே வந்தார். என்னுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சடார் சடாரென பேச்சின் பொருளை மாற்றிக் கொண்டே வந்தார். குறுக்கிட்டுப் பேச வாய்ப்பே இல்லாத கடுப்பில் கொஞ்சம் கண்ணயரலாம் என இருக்கையை பின்னுக்கு இழுத்து சாய்ந்தேன். திரும்பிப் பார்த்தவர்,

“சார் தப்பா நினைச்சிக்காதீங்க.. மணி பதினொன்னு ஆயிடிச்சி… நீங்க தூங்கறத பார்த்தா எனக்கும் தூக்கம் வந்துடும்.. கொஞ்சம் பேசிட்டே வாங்களேன் ” என்றார்

ஒருவழியாக பேச வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கையை மீண்டும் முன்னுக்கு இழுத்துக் கொண்டே, “பதினொன்னு தானே ஆச்சி.. அதுக்குள்ளே தூக்கமா?” என்றேன்.

”நேத்திக்கு காலைல வண்டில ஏறுனேன். இப்ப வரைக்கும் சாப்பிடவும் கக்கூசும் தான் இறங்கியிருக்கேன். தொடர்ந்து சவாரி ஓடிட்டு இருக்கு.. இனிமே ஏர்போர்ட் சவாரி மாட்டும்.. எப்படியும் விடியற வரைக்கும் ஓட வேண்டியிருக்கும்” என்றார்.

48 மணி நேரம். எப்படி ஒரு மனிதனால் தூங்காமல் வேலை பார்க்க முடிகிறதென்று ஆச்சர்யமானேன். “உடம்புக்கு எதுனா ஆயிடப் போகுதுங்க.. இடையில ரெஸ்ட் எடுத்துட்டு ஓட்டலாமே”

“ரெஸ்ட்டெல்லாம் எடுக்கிற நிலைமைல இல்ல சார்.. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே ரெண்டு  லட்சம் சேர்க்க வேண்டியிருக்கு.. என்னா பன்றதுன்னே தெரியலை” என்றார்.

”ஏன் வண்டி வாங்கின கடனை அடைக்கிறதுக்கா”

“இல்லைங்க.. அதெல்லாம் ரெண்டு மாசம் முன்னவே அடைச்சிட்டேன்.. இது வேற விசயத்துக்காக” என்றவர் விவரங்களைச் சொன்னார்.

இவர் ஊட்டியைச் சேர்ந்தவர். இவரின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியில் ஆசிரியப் பணி கிடைத்துள்ளது. முதலில் மேட்டுப்பாளையத்தில் பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை வாங்கவே சில லட்சங்களை வட்டிக்கு வாங்கி லஞ்சமாக கொடுத்துள்ளார். அந்தக் கடனை அடைப்பதற்கே மனைவியின் நகைகளும், ஊட்டியில் இருந்த சிறிய வீட்டையும் விற்றுள்ளனர். அதில் எஞ்சிய சொற்ப தொகையைக் கொண்டு தவணையில் கார் ஒன்றை வாங்கி மேட்டுப்பாளையத்தில் ஓட்டி வந்துள்ளார்.

அந்தக் கடன் அடைந்து கொண்டிருந்த போதே திடீரென கும்மிடிப்பூண்டிக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றுக்கு இவரது மனைவியை பணியிட மாற்றம் செய்துள்ளனர். படித்துக் கொண்டிருந்த பிள்ளைகளை  மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் பொறுப்பில் விட்டுவிட்டு மனைவியோடு சென்னை வந்துள்ளார். மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கே பணியிட மாற்றம் வேண்டுமென்றால் இரண்டு லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர் அதிகாரிகள். அதற்காகவே நேரங்காலம் தெரியாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

”சரி பிள்ளைகளையும் சென்னைக்கே கூட்டி வந்திருக்கலாமே”

“இந்த ஊரு செலவு நமக்கு கட்டுப்படி ஆகாதுங்க. பசங்க படிப்பு… வீட்டு வாடகை எல்லாம் கொடுத்த பின்னே கையில் சல்லிக்காசு மிஞ்சாது. ரெண்டும் பொட்டைப் பிள்ளைங்க.. மூத்தது வேற வயசுக்கு வந்துடிச்சி.. நாளை பின்னே ஒரு நகை நட்டு சேர்க்க வேண்டாமா? இங்கே பத்தாயிரம் கொடுத்தா கிடைக்கிற அதே வீடு எங்க ஊர்ல மூவாயிரம் கொடுத்தாலே கிடைக்கும். சாப்பாட்டு செலவுக்கு இங்கே மாசம் பத்தாயிரம்னா ஊர்லே நாலஞ்சாயிரத்துல முடியும். அதும் போக அலைச்சல். எல்லா சொந்தமும் ஊர்ல இருக்காங்க. ஒரு நல்லது கெட்டதுக்கு குடும்பத்தோட போயி வரணும்னா பத்தாயிரம் காலி ஆவுது. இந்த ஊரு நமக்கு சரிப்படாதுங்க.” என்றார்.

இறங்கும் இடம் வந்தது. வாடகையைக் கொடுத்து விட்டு இறங்கினேன்.

– தமிழ்  கார்க்கி
( உண்மைச் சம்பவம்)

திருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் ! கருத்துப்படம்

2

சொன்னாலும் சொல்லுவார் பொன்னார் !

நான் கடந்த 2 வருடங்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறேன் .. ஏழுமலையானுக்கு பூஜை செய்பவர்களில்கூட சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டார்கள் !
– சொன்னாலும் சொல்லுவார் பொன்னார்

கருத்துப் படம்: வேலன்

இணையுங்கள்:

மதுரையில் இரு தோழர்கள் கடத்தல் ! விருதையில் இரு தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கு !

மதுரை – ம.க.இ.க, மக்கள் அதிகாரம் தோழர்களை கடத்திய போலீசு !

துரை ம.க.இ.க வை சேர்ந்த சமயநல்லூர் தோழர் விஜயரங்கன் மற்றும் மக்கள் அதிகாரம் செக்கானூரணி தோழர் ஆசையன் (எ) ஆசை ஆகிய இருவரும் 08.07.2018 அன்று காலை போலீசாரால் கடத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் அதிகாரம் தோழர் ஆசையன்

மக்கள் அதிகாரத்தில் செயல்பட்டு வருபவர் தோழர் ஆசையன் (எ) ஆசை. சில நாட்கள் முன்பு தோழரின் வயதான தந்தையார் மற்றும் அண்ணனை அழைத்துச் சென்ற போலீசார், “தூத்துக்குடில கலவரம் பண்ணி இருக்கான். ஒழுங்கா அவன (ஆசையை) ஒப்படை. இல்ல உங்கள உள்ள தூக்கி வெச்சுருவோம்.” என மிரட்டி உள்ளனர்.

இந்நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்க்கச் சென்ற தோழர் ஆசையை அங்கேயே வைத்து கைது செய்துள்ளது போலீசு. தோழர் ஆசையை எங்கே கொண்டு சென்று உள்ளனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

ம.க.இ.க தோழர் விஜயரங்கன்

தோழர் விஜயரங்கன் நீண்ட காலமாக மதுரை ம.க.இ.க -வில் செயல்பட்டு வருகிறார். இதய நோய் மற்றும் கடுமையான உயர் இரத்த அழுத்த நோயும் தோழரின் உடலை கடுமையாக பாதித்து உள்ள நிலையில் நேற்று அவரை கைது செய்துள்ளது போலீசு.

08.07.2018 அன்று காலை 9 மணியளவில் தோழரின் சிறிய கடைக்கு வந்த போலீசார், சப் – இன்ஸ்பெக்டர் விசாரிக்க அழைப்பதாக கூறி உடன் வருமாறு சொல்லி உள்ளனர். தோழர் உடன் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உடன், “இந்தா இருக்குற ஸ்டேஷனுக்கு வந்து பதில் சொல்லிட்டு திரும்பி வரப் போறீங்க, சீக்கிரம் வாங்க” என அவசரப் படுத்தி உள்ளனர்.

தோழரும் உடன் சென்று உள்ளார். ஆனால், உள்ளூர் காவல் நிலையத்திற்கு செல்லாமல், வாகனம் நான்கு வழிச் சாலை நோக்கி திரும்புவதைக் கண்டு தோழர் கேட்டதற்கு, “தூத்துக்குடி போறோம்” என கூறி உள்ளனர். தோழர் உடன் தனது கைபேசி மூலம் தனது துணைவியாரை தொடர்பு கொண்டு விசயத்தை கூறி உள்ளார். அதன் பின் தோழரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கை பேசி அணைத்து வைக்கப்பட்டது. அன்றைய நாள் முழுக்க தோழரை போலீசு எங்கே கொண்டு சென்றனர் என்ற விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 11.00 மணி அளவில் இரண்டு போலீசார் தோழரை அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை குறித்தும், தோழரை போலீசு சட்டவிரோதமாக கடத்திச் சென்றது குறித்தும் மேலதிக விவரங்களை அறிய வழக்கறிஞர்கள் விரைந்துள்ளனர்.

-வினவு செய்தியாளர்,
மதுரை.

*****

விருதை மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசத்துரோக வழக்கு!

தூத்துக்குடி மக்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 07.07.2018 அன்று கள்ளக்குறிச்சியில் பேருந்தில் பிரச்சாரம் செய்த தோழர்கள் கணேஷ் மற்றும் வினாயகம் ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு (124a) மற்றும் 204b,353,505/1b ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு. அதன் அடிப்படையில் தோழர்கள் இருவரும் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
விருதை.