காதல்னா ஒருத்தரை ஒருத்தர் மெய்மறந்து காதலிக்கிறதுன்னு நினைக்கிறீங்களா? அது அந்தக் காலம் பாஸ்!
தன்னோட காதல் தெரிவு தப்பானதுன்னு ஒருத்தர் உணர்கிற பட்சத்தில அந்தக் காதலை ரத்து செய்றாங்கன்னு வச்சுப்போம். அப்போ அதை மனமுவந்து ஏற்கிற பக்குவம் எல்லாத்துக்கும் இருக்கணும். ஏன்னா காதல் உறவுல ஜனநாயக உணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்.
பொதுவாக பாத்தீங்கன்னா காதல் வயப்படும் ஆண்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா? தன்னைக் காதலிக்கிற பெண்கள் தன்னோட கருத்துக்களை காது கொடுத்து கேக்குறதைத்தான் விரும்புவாங்கன்னு நினைக்கிறாங்க. இல்ல சார். ஓபனிங்கிலயே நீங்க் அவுட்டாயிட்டீங்க!
ஏன்னா எல்லாப் பெண்களும் என்ன நினைக்கிறாங்கன்னா தன்னோட பேச்சு மனசு இரண்டையும், மனதையும் காதையும் கொடுத்து கேட்கிற ஆண்களைத்தான் விரும்புறாங்க! இந்த உலகம் ஆணாதிக்கமா இருக்கும் போது ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இப்படித்தான சிந்திக்க முடியும்!
பணத்தை முக்கியமா நினைக்கும் காதலால அதாவது ஸ்டேட்டஸ், வருமானம், நல்ல வேலைன்னு கணக்கு போடும் காதலால இந்த உலகத்துல பிட்சா வியாபாரமும், மல்டிபிளக்ஸ் பிசினசும் தான் வளரும்.
குணத்த முக்கியமா நினைக்கும் காதல்தான் சமூகத்தோட தரத்த வளர்க்கும்.
சாதி பாத்து காதலிச்சா அதுக்குப் பெயர் அரேஜன்டு லவ். சாதி பாக்காம காதலிச்சா அதுக்குப் பேர்தான் அழகுக் காதல்!
மனுசங்களா வாழும் போது அதுல சாதி, மதம்னு சறுக்கி விழுந்தா சங்கடம் சமூகத்துக்குத்தான்!
காதலிகளை தெரிவு செய்யும் ஆண்கள் வைச்சிருக்கிற பட்டியல் என்ன தெரியுமா? தான் காதலிக்கிற பெண் வயசுல, படிப்பில, வருமானத்துல தன்னை விட குறைவா இருக்கணும். ஆனா அழகுல மட்டும் ஊரே பாத்து அதிசயப்படணும்.
ஆனா பாருங்க, காதல்ங்கிறது கூட்டிக் குறைச்சு பாக்குற வட்டிக் கடை கணக்கு இல்லைங்க!
காதலிப்போம், ஊரைச் சுற்றுவோம், அப்பா அம்மா ஒத்துக்கிட்டா கல்யாணம் செய்வோம், ஒத்துக்கலைன்னா குட் பை சொல்லிட்டு வீட்ல சொல்றபடி திருமணம் செய்வோம்! இதுக்குப் பெயர் காதலா, கண்றாவியா, நீங்களே சொல்லுங்க!
பொதுவா பெண்கள் என்ன நினைக்கிறாங்க? தன்னை காதலிக்கும் ஆண் தன்னை புரிஞ்சிக்கணும், தன்னை பாத்துக்கணும், தன்னோட குடும்பத்த ஏத்துக்கணும், அப்டின்னுதான் யோசிக்கிறாங்க,
ஆனா மை டியர் லேடிஸ், காதல் – திருமணங்கிறது ஒரு செக்கியூரிட்டி பிரச்சினை இல்லப்பா, உங்களோட தன்மானம், சுயமரியாதை, சமத்துவம் சம்பந்தப்பட்டது! அதனால நீங்க சொந்தக் கால்ல நின்னுகிட்டு காதலிச்சீங்கன்னா அதாவது படிப்பு, வேலை, வருமானம்னு நீங்க நிக்கும் போது செக்யூரிட்டி பிரச்சினை அவ்வளவா இருக்காது! சொல்லப் போனா அப்பதான் உங்க காதல் தேடுதல் சுதந்திரமா நடக்கும்!
தமிழ் சினிமா ஹீரோக்கள ரசிக்கிற ஆண்கள் காதலைப் பத்தி என்ன நினைக்கிறாங்க? ஒரு பெண்ணுங்கிறவ ஒரு ஆணால் துரத்தப்பட்டு வேட்டையாடப்பட்டு வீழ்த்தப்படும் விலங்குன்னு நினைச்சாங்கன்னா, அவங்ககிட்ட இருக்குற வியாதிபேர் கொலைகார காதல்!
இந்த வியாதி உள்ளவங்கதான் ஆசிட், பெட்ரோல்னு நியூசுல கொடூரமான கதைங்களயும் காட்சிகள்ளயும் காட்டுறாங்க!
தான் காதலிக்கிற பெண்ணோட மடியல படுத்து தூங்கணும், அவ தன்னோட தலையை வருடிக் கொடுத்து ஆறுதல் சொல்லணும், குறிப்பறிஞ்சு காஃபி கொடுக்கணும், ஃபோன் பண்ணனும், தலைவலி மாத்திரை கொடுக்கணும், தன்னை பாக்கலேன்னா அவளுக்கு தூக்கமே வரக்கூடாது, ஐந்து நாளு பாக்காம ஆறாவது நாளு பாத்தா அப்படியே பாசத்துல குமுறி அழணும்……… இப்படி பல ஜெமினிகணேசன் காலத்து பாய்ஸ் யோசிக்கிறாங்க! தம்பிங்களா காதல்ங்கிறது ஒரு பெண்ணோட அடிமைத்தனமில்லப்பா, அது இரண்டு பேரும் சமத்துவமா சுதந்திரமா ஒருத்தரை ஒருத்தர் விரும்புறது!
ஆடம்பரமான பரிசுப் பொருட்கள், செல்போன்ல தவமிருக்கிறது, உலகத்துல நடக்குற நல்லது கெட்டதுகளை கண்டுக்காம காதல்ல மட்டுமே வாழ்றது, மல்டிபிளக்ஸ்ல நாலு டிஜிட்டில்ல செலவு பண்ணறது இதுமாதிரி ஜோடனைங்களால காதலுக்கு எந்த பயனுமில்லை. சொல்லப்போனா அது காதலாங்கிறது சந்தேகம்தான்.
காதலுங்கிறது அடக்கமா, கண்ணியமா, அழகா, அமைதியா ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கிற பூங்கா! அந்த பூங்காவை யாரு கண்டுபிடிக்கிறீங்களோ அவங்களுக்கு எங்களோட வாழ்த்துக்கள்!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
எளிய மனிதர்களை சந்திக்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போங்கனு சொல்லுவாங்க…அது உண்மைதான். ஒரு உறவினரைப் பார்க்க செங்கல்பட்டில் இருக்கும் தொழுநோய் மருத்துவமனைக்கு போனேன். அங்கயே ஒரு நாள் காத்திருக்கும் போது பல கதைகள் கிடைத்தன. அதுல ஒரு செவிலியர் சொன்ன கதையைக் கேட்டு அதிர்ச்சியா இருந்ததோடு சந்தோசமாகவும் இருந்தது. கதைன்னா ஏதோ கற்பனைன்னு நினைக்காதீங்க, இது அங்க உண்மையிலேயே நடந்த சம்பவம். இனி அந்த செவிலியர் வார்த்தையிலேயே கேளுங்கள்!
தொழு நோய் மருத்துவமனை, செங்கல்பட்டு
ஐயர்வீட்டு மாமி என்றால், ஆச்சாரம் பாப்பாங்க.. கவுச்சிய கண்ணுல பாக்க மாட்டாங்க… தன் சொந்த சாமிய சுத்தி சுத்தி கும்பிடுவாங்க…மத்தவங்க சாமிய பழிப்பாங்க….சக மனிதர தொட்டு பேசமாட்டாங்க.. இப்படித்தான் நாம், பொது வெளியில காலம்காலமா பாக்குறோம்.
ஆனா, அய்யங்கார் சாதியில் பிறந்த சரஸ்வதி மாமிக்கு வந்த தொழுநோய், அவங்கள பண்படுத்தி , சக மனுஷியா மாத்துச்சி. அவருக்கு வயது, 65. தபால் துறையில் வேலை பார்த்தவங்க…. வயதான காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது கால் கட்டைவிரல் புண்ணாகி, அழுகிய நிலையில,தாங்க முடியாத நாத்தத்தோட தொழுநோய் ஆஸ்பத்திரிக்கு, எங்களிடம் வந்தாங்க.. சா்க்கரை நோய்னு நினைச்சி, வருடக்கணக்கா வைத்தியம் பாத்திருக்காங்க…. கடைசியில அது தொழுநோய்னு தெரிந்ததும். சொந்தக்காரங்க, ஆஸ்பத்திரியில் விட்டுட்டு அவசரமா ஓடிட்டாங்க….
சரஸ்வதி மாமியால், இந்த, தொழுநோய் ஆஸ்பத்திரிய ஏத்துக்கவே முடியல…. வேற வழியில்ல… இங்க மட்டும்தான் அந்த புண்ண ஆத்துவாங்க என்று அவரது டாக்டரோட சொல்லையும் தட்ட முடியல… வீட்டுக்குப் போனா ,சொந்தக்காரங்க கவனிக்க தயாரில்ல…. ஏதோ அரைகுறை, மனசோட இருந்தாங்க…
எங்கிட்ட சரஸ்வதி மாமி முதல்ல பேசின பேச்சு , ”இங்க எதனாச்சும் ஸ்பெஷல் வார்டு இருந்தா கொடு… பணம் பே பண்றதா இருந்தாலும் பரவாயில்லை.. இவங்க (நோயாளிகள்) கூட இருக்க பயமா இருக்கு….” என்றார் சோகத்துடன்.
பயப்படாதீங்க… இங்க முதல்ல அப்படித்தான் இருக்கும்.. 10 வருசமா நாங்க இங்கத்தான் இருக்கோம்.. எங்களுக்கு ஒண்ணும் ஆகல, எங்க புள்ளைங்களும் இங்க வருவாங்க, அவங்களுக்கும் ஒண்ணும் ஆகல….. தைரியமா இருங்க…இங்க எல்லோரும் சொந்தக்காரங்களை விட நல்லாப் பழகுவாங்க… இங்க, பொம்பளவார்டு ஒண்ணு மட்டும்தான் இருக்கு… ஸ்பெஷல் வார்டு எல்லாம் கிடையாது…. உங்க புண் ஆற குறைஞ்சது 3, 4 மாசம் ஆகும். புண்ண ஆத்திட்டு, நல்லா போகணும்னு மட்டும் நினைங்க என்று ஆறுதல் சொன்னேன்.
எந்த சமாதானத்தையும் சரஸ்வதி மாமி ஏற்கவில்லை. வழக்கமாக கொடுக்கும் சாப்பாட்டை இரண்டு நாள் வாங்க மறுத்தார். குழந்தை போல் அடம்பிடித்தார். 2 நாள் முழு பட்டினியில் சுருண்டு கிடந்தார். அவர் வீட்டுக்கு போன் செய்தோம். வீட்டிலிருந்து யாரும் வந்தபாடில்லை.. போன் செய்தால், அவசர வேலையில் இருப்பதாக சொல்லி, ”யாரிடமாவது பணம் கொடுத்து வாங்கி சாப்பிடட்டும் விடுங்கள் ” என்றனர். வீட்டில் சொல்லியதைக் கேட்டு புலம்பினார்.
நாட்கள் கடந்தன. சரஸ்வதி மாமி, பக்கத்திலிருந்தவர்களிடம் பேசி பழகினார்.
அவரது பக்கத்து படுக்கையில் இருந்த தொழுநோயாளி ஹாஜீரா பீவி, முஸ்லீம். அவர் பாசத்துடன் ”மாமி, சாப்பாடு சூடா, சுத்தமாத்தான் போடுவாங்க.. நீ முட்டை வேணானுட்டு, பால் வாங்கிக்க… சாப்பிடு .. கால் புண் அப்பத்தான் ஆறும்… ” என்பார், அக்கரையுடன்.
உள் நோயாளிகள் (கோப்புப் படம்)
மாமி கொஞ்சம் கொஞ்சமாக மாறினார். தினமும் குளித்து, முகத்தில் பவுடர் போட்டு சுத்தமாக இருந்தார். ஆனால், காலில் இருக்கும் புண்ணை சுத்தமாக வைத்துக் கொள்ள மறுத்தார். நாங்கள் அவரை தொட்டு, கட்டு கட்டியே உடனே, தீட்டாக நினைத்துக் காலை கழுவுவார். கட்டு ஈரமாகி நாற்றமடிக்கத் தொடங்கும். பக்கத்தில் இருப்பவர்கள் மாமியின் பழக்கம் அது என்று அனுசரித்தனர். ”காலை நனைச்சிகிட்டா சீக்கிரம் ஆறாதுனு நீங்க சொல்லுங்க, நாங்க சொன்னா… மாமி தப்பா நினைச்சிக்க போகுது ” என்று கரிசணையோடு கூறினார்கள், சக தொழு நோயாளிகள்.
நாளடைவில்… பீவியும் மாமியும் நெருங்கிய நண்பர்களானார்கள் …
ஹாஜீரா பீவி, சரஸ்வதி மாமிக்கு, கால் புண்ணை காக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். மாமியின் வேலைகளுக்கு உதவினார். மாமி குளிக்கப் போகும் போது காலில் பிளாஸ்டிக் கவர் கட்டி விடுவது, மாமி சாப்பிட்டதும் தட்டு கழுவித் தருவது, மாமி துவைத்த துணிகளை காய வைத்து தருவது என எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி செய்தார். வாரத்திற்கு ஒருமுறை வரும், தன் மருமகளிடம் ஹாஜீரா பீவி, மாமிக்கு தேவையான, எண்ணெய், பவுடர், ஊறுகாய், சிப்ஸ் என வாங்கிவர சொல்லி, ஆசையோடு கொடுப்பார். மாமியின் கால் புண் ஆறத்தொடங்கியது.
மாமி, பீவி உறவினர்களுடன் ஒன்றரக் கலந்தார். பீவியின் மருமகள் சமைத்துவரும் அசைவ உணவுடன் தனக்கு சாப்பாத்தியும் செய்து வரச் சொல்லுவார். பீவியின் பேரப் பிள்ளைகளுடன் தானும் ஆசையோடு விளையாடுவார்.
பின்னர் பீவிக்கு காலில் ஆபரேஷன். நடக்க முடியாத சூழ்நிலை. பீவிக்கான வேலைகளான சாப்பாடு வாங்குவது, சாப்பாடு ஊட்டுவது, துணி துவைப்பது, தலைவாரி விடுவது போன்ற வேலைகளை சரஸ்வதிமாமி மிகவும் கவனமாக அவருக்கு செய்தார்.
சாப்பாடு வாங்க மாமி வருவார். உடன் பீவியின் தட்டையும் எடுத்து வந்து முட்டை வாங்குவார். சில சமயங்களில், தட்டு மாறி முட்டையைப் போட்டு நாங்கள் பதறுவோம். ஆனால் மாமி பதறாமல் முட்டையை எடுத்து பீவியின் தட்டில் போடுவார். நான் பாத்துக்கிறேன் என்பார். பீவியால் சாப்பிடமுடியாத நிலையில், மாமி, சோறூட்டி, முட்டையும் ஊட்டிவிடுவார் .
நாங்கள் மாமியிடம் வேடிக்கையாக, “மாமி… பீவியும், மாமியும் ஒண்ணாயிட்டீங்க….. பாத்து … வீடு மாறி போயிடப்போறீங்க… ” என்றால், ”இதுல… என்ன இருக்கு சொல்லுங்க, மாமிக்குனு ஒரு வியாதியும், பீவிக்குன்னு ஒரு வியாதிமா …வந்திருக்கு? ரெண்டுப் பேருக்கும் ஒரே வியாதி…. அவங்களுக்காவது, கவனிக்க ஆள் இருக்கு…. எனக்கு அதுவும் இல்ல…. ” என்பார்.
பீவிக்கு கொஞ்சம் காது கேட்காது… அதனால் மாமி, தான் படிக்கும் நாவல்களின் கதைகளை அவரிடம் சத்தமாக சொல்லி சொல்லி சிரிப்பார். பீவியின் தொழுகை நேரத்தில் எதுவும் பேசாமல் சிரத்தையுடன் கவனிப்பார். பீவி கறி விரும்பி சாப்பிடும்போது அருவறுப்புப் பார்க்காமல் உடனிருந்தது பார்த்து ரசிப்பார்.
நோயாளிகளுக்கு உணவு
பீவி எப்போதும் சுத்தமாக இருப்பார். ஆனாலும் சரஸ்வதி மாமியுடன் இருக்கும்போது மேலும் அதிக சுத்தமாக இருப்பார். சாப்பாடு வாங்கும்போது, கைகழுவி, மாமிக்கு முதலில் வாங்கிவைத்துவிட்டு, பிறகுதான் தன் தட்டை தொடுவார். மாமிக்கு பிடித்த கலரில், ஒயர் கூடையை தன் கையால் பின்னி, மாமியின் துணிகளை அதில் வைத்து பாதுகாப்பார்.
பீவியின் பேத்தி, ‘பெரிய புள்ளையாக’ ஆனார். சடங்கு முடித்து, வீட்டில் செய்த இனிப்புகளுடன் பீவியின் மருமகள் வந்தார். சரஸ்வதி மாமி, பீவி பேத்திக்கு ஆசையுடன், தன் காசில் பூ, பொட்டு, வளையல் வாங்கிக் கொடுத்தார். அவர்கள் கொண்டுவந்த இனிப்பை ஆசையுடன் சாப்பிட்டார்.
உடல்நலம் இருவருக்கும், சரியானது. வீட்டிற்கு செல்லும் நேரம். இருவரும் அழுது கொண்டே இருந்தனர். ஊருக்குப் போகும்போது மாமி, ”என்னால, இந்த ஆஸ்பத்திரியும் மறக்க முடியாது.. பீவியையும் மறக்கமுடியாது…… எல்லாரும் ஒண்னுணு… இங்க கத்துக்கிட்டேன்.. வருசத்துக்கு ஒரு தடவை இங்க வந்து, என்னால முடிஞ்ச உதவியை நோயாளிகளுக்கு செய்வேன்.” என்று எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றார்.
அந்த செவிலியர் கதையை முடிச்ச போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. மனுசனுக்கு பாதிப்பு வரும்போது அதுவும் பெரிய நோய்னு வரும்போது அவங்கிட்ட இருக்குற மனுஷத் தன்மை எப்படி வெளியே வருது பாருங்க! பார்ப்பனருங்க எல்லாரும் அக்ரகாரம், ஐதீகம், ஆச்சாரம்னு மத்த மக்கள்கிட்ட இருந்து பிரிஞ்சுதான் இருக்காங்க, அப்புறம் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்-ன்னு சாதாரண மக்களை பிரிக்கிற கட்சிங்கள்ள பதவியிலயும் இருக்காங்க. இதெல்லாம் ’இயல்பா’ இருக்குறதுக்கு என்ன காரணம்? அவங்க வாழ்க்கையில எப்பயுமே சாதாரண மக்களோட பழகுற வாய்ப்பு ரொம்பக் குறைவு. பல விசயங்கள்ள அதுக்கு தேவையே இல்லாம இருக்குங்கிறது ஓரளவுக்கு உண்மைதான். காசு இருந்துச்சுன்னா நீங்க உங்களுக்குன்னு தனியா ஒரு உலகத்தை உண்டாக்கலாம்கிறது உண்மைதான். ஆனா அது நிரந்தரமா?
அப்படித்தான் அவங்க வாழ்க்கையில ஒரு பிரச்சினைன்னு வரும் போது சாதி சனம் சொந்தபந்தத்தை விட சாதாரண மக்கள் உதவறதப் பார்க்கும் போது அவங்ககிட்ட இருக்குற அந்த ’உயர்சாதி’ மனோபாவம் மாறுது. முஸ்லீம்னா தேசத்துரோகி, பாகிஸ்தான் உளவாளி, அசைவ நாற்றம்ன்னு ஏகப்பட்ட விசமப் பிரச்சாரங்களை நம்புறாங்க. சரஸ்வதி மாமியும் அதுக்கு விதிவிலக்கு இல்லைதான். ஆனா தொழுநோய்னு ஒரு நோய் வந்த பிறகுதான் அவங்க உண்மையை கண்கூடா பாக்குறாங்க. சரியாச் சொல்லப்போனா அவங்கிட்ட இருக்குற அநாகரிகத்தை ரத்தமும் சதையுமா உணர்ராங்க!
நம்ம சமூகம் இயல்பா ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் இருக்குங்கிறதுக்கு இந்த கதை ஒரு உதாரணம். யாரெல்லாம் தங்கிட்ட இருக்குற சாதிவெறி, மதவெறி மாறணும்னு நினைக்கிறாங்களோ அவங்க செங்கல்பட்டுக்குத்தான் வரணும்னு இல்லை, பக்கத்துல இருக்குற ஒரு அரசு மருத்துவமனைக்கு போய் வைத்தியம் பாத்தாலே அந்த வெறிங்களை உதறிட்டு மனுசனா மாறலாம். என்ன சொல்றீங்க?
“கடைமடைக்கு காவிரி நீர் வரும்வரை டெல்லியோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை!
தமிழக எம்.பி. -க்களே ராஜினாமவை செய்யுங்கள்!” என்று அறைகூவி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுத்து, தமிழகத்தை வஞ்சிக்கும் தீர்ப்பை உச்சிக்குடுமி மன்றம் கொடுத்துள்ளது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அதிமுக அரசோ, பாஜக-வின் பினாமியாக செயல்பட்டு வருகிறது. பாஜக ஆர்.எஸ்.எஸ் தமிழகத்திற்கு எதிராக எந்த வேலை செய்தாலும் அதனை மறுத்து பேசுவதோ, நடவடிக்கையில் ஈடுப்படுவதோ இல்லை.
மாறாக பெரியார் சிலை உடைப்பு என்றால் மௌனமாக இருக்கின்றனர். அல்லது பசப்பி பதில் கொடுக்கின்றர். இந்த அடிமை கூட்டம் நமது உரிமையை நிலைநாட்டது. காவிரியில் இராயிரம் ஆண்டுகளாக உள்ள நெற்களஞ்சியத்தை அழிக்கும் பாஜக -விற்கு எதிராக தமிழக எம்பி, எம்.எல்.ஏ. -க்களே ராஜினாமாவை மோடியின் முகத்தில் வீசியெறியுங்கள், என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்ர பாளையம் பகுதியில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்து, அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் 13.03.2018 செவ்வாய் காலை 11:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அத்திமரத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். நாட்றாபாளையம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் கண்டன உரையாற்றினார். இதில் பென்னாகரம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத் சிறப்புரையாற்றினார்.
தோழர் கோபிநாத் பேசும் போது “நீதி மன்றம், பிரதமர், ஜனாதிபதி, மத்திய அரசு அனைவரும் தமிழகத்திற்கு எதிராக உள்ளனர். இந்த எதிராளிகளிடம் எந்த நீதியும் நாம் பெற்றுவிட முடியாது. தமிழகத்தில் உள்ள அதிமுக அரசும் பாஜகவின் அடிமையாக உள்ளது. இவர்களிடம் உரிமையை மீட்க சொல்ல முடியாது. தமிழகத்தின் உரிமை காசுக்காக காவு கொடுத்து விடுவார்கள்.
டெல்டாவை பாதுகாப்பதோ, மீத்தேன் எடுப்பதற்கு எதிராக போராடி விவசாயத்தை பாதுகாப்பதோ இந்த ஆட்சியாளர்களின் நோக்கமல்ல. பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டிய டெல்டாவை, பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கும் இந்த ஈன துரோகிகளிடம் எந்த நியாத்தையும் எதிர்பார்க்க முடியாது. மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம், டெல்டாவை பாதுக்காக்க களத்தில் இறங்குவோம். தமிழகத்தின் உரிமை மீட்க இனி டெல்லியோடு ஒட்டுமில்லை, உறவும் இல்லை, மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் செய்வோம்.” என்று எழுச்சி உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை நூற்றுக்கணக்கான மக்கள் கவனித்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம் அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
தமிழகத்தின் மகளிர் தினக்கூட்டங்களில் சிறப்புற நடந்த நிகழ்வாக இதைக் குறிப்பிடலாம். நேர்த்தியான நிகழ்ச்சிகள், காட்சிகள், பரிசுகள், உணர்ச்சிகரமான உரைகள், விமர்சனங்கள், தோழமை அனைத்திலும் பாராட்டத்தக்க விதத்தில் நடத்தியிருக்கிறார்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள். வாழ்த்துக்கள்! – வினவு
மார்ச் 8 சர்வ தேச மகளிர் தினத்தை ஒட்டி வழக்குரைஞர்கள் மத்தியில் மார்ச் 7 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பார் கவுன்சில் அரங்கத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை கிளை சார்பாக அரங்க கூட்டம் நடத்தப்பட்டது. விழாவில் மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
பெரியார் – லெனின் அரங்கம்!
மகளிர் தினத்தை ஒட்டிதான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எச். ராஜாவின் முட்டாள்தனமான திமிர் பேச்சால் பெண்களின் விடுதலைக்கு வித்திட்ட ஆசான் லெனினையும், தந்தை பெரியாரையும் நினைவு கூறும் வகையில் பார் கவுன்சில் அரங்கம் பெரியார் – லெனின் அரங்கமாக மாறியது. எச். ராஜாவின் திமிர் பேச்சால் ஆத்திரமுற்று அரங்கத்தில் நுழைந்த அனைவரையும் பெரியாரும், லெனினும் புகைப்படமாய் இருந்து ஆசுவாசப்படுத்தினர்.
நூல் அரங்கமும் காட்சி அரங்கமும்!
மானமும், அறிவும் மனிதற்கு அழகு என்று கூறிய பகுத்தறிவு பகலவனின் கூற்றுக்கேற்ப மகளிர் தினத்தில் பெண்கள் அறிவார்ந்தவர்களாக தம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அரங்கத்தின் இடது புறத்தில் அமைந்திருந்தது நுால் அரங்கம். இது கொண்டாட்ட நாள் அல்ல. பறிக்கப்படும் உரிமைகளையும் தொடுக்கப்படும் ஒடுக்கு முறைகளையும் தகர்த்து எரிவதற்காக உறுதி ஏற்கும் நாள் என்பதனை பறைச்சாற்றும் வகையில் நுழைவாயிலுக்கு எதிரே அமைந்தது காட்சி அரங்கம்.
அரங்கு நிறைந்த கூட்டம்
துவக்கத்தில் அரங்கத்தில் ஆங்காங்கே ஒருசில தலைகள் மட்டும் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் அரங்கு நிறைந்தது.
வரவேற்புரையில் வழக்கறிஞர் மீனாட்சி சிறப்பு பேச்சாளர்கள் உட்பட முன்னிலையாளர்கள், பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்று, மகளிர் தினம் உருவான வரலாற்று சூழலை சுருக்கமாக பகிர்ந்து அமர்ந்தார்.
உரிமைகளுக்கான போராட்டத்தில் பெண்கள் பங்கேற்கவேண்டும்!
தலைமை ஏற்று நடத்திய வழக்கறிஞர் பொற்கொடி, “மகளிர் தினம் உருவானதின் நோக்கத்தை நினைவு கூர்ந்து உறுதியேற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இங்கு பெண்கள் நிலவுக்கு போகலாம். வானில் பறக்கலாம். ஆனாலும் ஆண்டு அனுபவிக்கும் பொருளாகத்தான் பெண்களின் நிலை இருக்கிறது. பெண்கள் அடிமையாக இருப்பதனால் குடும்பத்தில் மட்டும் அல்ல, ஆலைகளிலும் உழைப்பு சுரண்டல் தொடர்கிறது.
பெண்களை வேலைக்கு அமர்த்தினால் எதிர்ப்பு இல்லாமல் சுரண்டலாம் என்பது தானே முதலாளித்துவத்தின் லாபவெறியாக இருக்கிறது… எதையும் ஆண்டு அனுபவித்து தீர்த்துவிடு என்கிற நுகர்வு வெறியை அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலமாக ஆழமாக அனைவரின் மூளையிலும் கையடக்க செல்போன் வரை கொண்டு வந்து திணிக்கின்றன கார்பரேட் கம்பனிகள்.
பொருள் விற்பனைக்கான எல்லா விளம்பரங்களிலும் பெண்கள், பொருட்களின் வடிவமே பெண்ணாக சித்தரிக்கப்படும் கோரம். அதனால்தான் பயன்படுத்திய பொருட்களை கசக்கி எறிவது போல அனுபவித்தப் பெண்ணையும் கசக்கி எறி, சிதைத்து கொலை செய், என்ற புதிய பரிமாணத்தை அடைந்திருக்கின்றன பாலியல் வன்கொடுமைகள். ஆடைகளில் குறை, அடக்கமாக இருப்பதில் குறை என அடிமைத்தனத்திற்கு அங்கீகாரம் கேட்கிறது ஆணாதிக்கம். லாபவெறி, நுகர்வு வெறி, ஆணாதிக்கம் ஆகியவைகளை அங்கீகரித்து அதிகரிக்க அசுர வேகத்தில் வேலை செய்யும் கார்ப்பரேட் அடிமை மோடி அரசு.
இந்த விசச்சூழலில் அடிமைத்தனம் அகல வேண்டும் என்றால் ஜனநாயகம் மலர வேண்டும். வீட்டுக்குள்ளே ஜனநாயகம் இருக்க வேண்டும் என்றால் நாட்டிற்குள்ளே ஜனநாயகம் நிலவவேண்டும். ஆனால் நமது நாட்டில் ஜனநாயகத்தின் நிலைமை என்ன? ஜனநாயகத் தூண்களில் ஒன்றான உச்சநீதிமன்றத்திலேயே ஜனநாயகம் இல்லை என கதறுகின்றார்கள் அதன் தலைமையில் உள்ள மூத்த நீதிபதிகள்.
விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய ஜனநாயகம் இல்லை, கல்வி கற்கும் ஜனநாயகம் இல்லாததால்தானே அனிதா மரணம். இப்படி நாட்டில் ஜனநாயகமில்லாத சூழல் பெண்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களுக்கும் தான் உள்ளது. எனவே பெண்கள் சமுக நிலைமையை மாற்ற வீதிக்கு வரவேண்டும். ஆனால் பெண்களே அரசியல் என்பது ஆண்களுக்கானது, பெண்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று என அறியாமையில் உள்ளனர். அதனை மாற்றிக்கொண்டு உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவதற்கு உறுதியேற்கும் நாள் தான் மகளிர்தினம் என்பதை எடுத்து சொல்லவே இந்த கூட்டம்” என்பதை பல்வேறு நடைமுறை விசயங்களுடன் எடுத்து சொல்லி தனது தலைமை உரையை முடித்தார்.
பெண்களின் நிலை, போராட வேண்டியதின் அவசியத்தை கவிதை பாடினார் சட்ட கல்லூரி மாணவி இனியா.
பேச்சாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பரிசாக, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்? ” புத்தகம்!
பேச்சோடு மட்டும் அல்லாமல் எழுத்து வடிவிலும் பெண் விடுதலையை கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி ஏற்பாடு செய்யப்பட்டது, பெண் ஏன் அடிமையானாள்? என்ற பெரியாரின் வெளியீடு பங்கேற்கும் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என பரிசீலித்த பொழுது, பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது சவாலாக இருந்தது. அந்த சுமையை தான் ஏற்றுக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் முன் வந்தார் மூத்த வழக்கறிஞர் ச. துரைசாமி. கடைசி நேர அழைப்பானாலும் நிகழ்ச்சியின் முக்கியம் கருதி பங்கேற்று தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். சிறப்பு பேச்சாளர்களுக்கு இவர் மூலம் சிறப்பு செய்வது பொருத்தமாக அமையும் என்பதால் புத்தகங்களை அளிக்க வேண்டுகோள் விடுத்தோம். ஏற்றுக்கொண்ட அவர் அகமகிழ்ச்சியோடு செய்து முடித்தார்.
ஆணாதிக்கத்தை எதிர்த்து நின்ற அகிலா அவர்களுக்கு மரியாதை!
யார் இந்த அகிலா? பெண்களுக்கு ஜனநாயகம் இல்லை என்பது ஜனநாயகத்தின் தூணாண பத்திரிக்கையிலும் தானே! அப்படி ஊடகத்திற்குள் ஒளிந்திருந்த ஆணாதிக்க பாலியல் சீண்டலை துணிவாக எதிர்த்து நின்று, எதிரியின் பலம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பயமில்லை மானமே பெரிது என்று சன் டி.வி குழுமத்தை சந்திக்கு இழுத்த வீரமங்கை தான் அகிலா. இவரின் போராட்ட குணத்தை அங்கீகரிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கினார் மூத்த வழக்கறிஞர் வைகை.
பெண் விடுதலை என்பது சமூக விடுதலையின் ஓர் அங்கம்!
எப்போதும் வெற்று திரையை பார்த்து பேசி வெறுத்து போன ஊடகவியலாளர் ரகுமானுக்கு மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய திளைப்பு. சரிபாதிக்கும் பெண்கள் இருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு தன் உரையை துவங்கினார் பெண் விடுதலை என்பது சமூக விடுதலையின் ஒரு அங்கம் என விவரங்களை அடுக்கி கட்டி கருத்து சித்திரத்தை எழுப்பினார்
அநீதிகளுக்கு எதிராக அணிதிரள்வதே மகளிர் தினம்!
எல்லாம் மாறிவிட்டது. முன்னேற்றத்தில் தானே பெண்கள். எதற்கு இந்த கூட்டம்? என்பவர்களின் வாதங்களை அன்றும் இன்றும் என்ற வகையில் அடுக்கினார். முன்னேற்றம் தான் கல்வி, வேலை, விஞ்ஞானம், தொழில் நுட்பம் என எல்லாவற்றிலும் முன்னேறி தான் உள்ளார்கள் பெண்கள். அத்தனை முன்னேற்றமும் உழைப்பு சுரண்டலுக்காய். ஊர் குருவி உயர உயரவே பரந்தாலும் பருந்தாக முடியுமா? விமானிகளாக வானத்தில் பரந்தாலும், ஹாசினிகளாக அரும்பிலேயே அழிக்கப்படுவது தானே இன்றைய நிலை. தொடரும் ஆணாதிக்கம், ஒடுக்குமுறை. அலங்காரப் பேச்சுகளுக்கு மதிமயங்காமல் அநீதிகளுக்கு எதிராக அணி திரள்வதே மகளிர் தினம் என்பதை அழகு கவிதையாய் அளித்து சென்றார் வழக்கறிஞர் கலைச்செல்வி.
“நமக்கு கண்ணகிகள் வேண்டாம்! அநீதியை சுட்டெரிக்கும் குண்டலகேசிகள் வேண்டும்– பேராசிரியர் கருணாநந்தம்
“ஏட்டில் உள்ளவை எல்லாம் ஆண்டவர்களின் வரலாறே. மக்களின் வரலாறு எப்போதும் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறே என்பதை துணிவாக சமூகத்தில் வெளிபடுத்துபவர் ஓய்வு பெற்ற வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் அ.கருணாநந்தம். இதிகாச புராண காலம் தொட்டே பெண்ணடிமைத்தனம் நியாயப்படுத்தப்படும் வரலாற்றை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். என்ன தான் பிற்போக்காளர்களின் ஆதிக்கத்தில் பிற்போக்கு கருத்துக்கள் ஆளுமையில் இருந்தாலும், அதற்கெதிரான முற்போக்கு கருத்துக்களின் உறுதி மிக்க போராட்டங்கள் வரலாற்று நெடுகிலும் பயணித்து வருவதை பல்வேறு சான்றுகளுடன் பகிர்ந்தார். பெண் விடுதலையை பெரியார் இல்லாமல் பேச முடியாது என்பதை பெண்களுக்கு பெரியார் முன்வைத்த வழிகாட்டுதல்களை, வழிமொழிந்து அமைந்தார்.
சென்னை சட்டக்கல்லூரியை மாற்றக்கூடாது என போராடும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு!
உரிமைகளுக்காக போராடும் சட்டக்கல்லூரியை சென்னையிலிருந்து அகற்றி, திருவள்ளூருக்கும், காஞ்சிபுரத்திற்கும் மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியாவிலேயே உயர்நீதிமன்ற வளாகத்திலேயே சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு படிப்பும், பயிற்சியும் இணைந்தே இருக்கின்றன. இதை மாற்றக்கூடாது என பத்து நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டம் இருந்து வருகிறோம். வழக்கறிஞர்கள் தான் எங்களது அடைக்கலம். ஆகையால், ஆதரவு தாருங்கள் என மாணவர்களின் பிரதிநிதியாக சட்டக்கல்லூரி மாணவர் சரத்குமார் முன்வைத்தார். மாணவர்களின் நியாயமான இந்த கோரிக்கை நிறைவேறுவதற்கு அனைத்து வழக்கறிஞர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கையை அனைவரின் சார்பாகவும் உறுதியளித்தார் கூட்ட தலைவர்.
போராட்டத்தில் முன்நிற்கும், சட்ட கல்லூரி மாணவி ஸ்ரீஜாவின் பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் பாரதிதாசனின் பாடலான “சோலை மலரே” பாடலை இனிமையாக பாடினார். ஆணாதிக்கத்தை கிண்டல் செய்யும் மகஇக பாடலான “ஏன்னா நான் ஒரு ஆம்பளை” பாடலை சிறுவர்கள் தீபன், பாவெல் பாட, பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைத்தட்டலுடன் அரங்கு அதிர்ந்தது.
நீதிமன்றங்கள், சட்டங்களை நம்பி பயனில்லை, மாறாக ஆண்களோடு கைகோர்த்து, சமூக விடுதலையை முன்னெடுப்பதே பெண் விடுதலைக்கு வழி வகுக்கும் – மூத்த வழக்கறிஞர் வைகை.
“எத்தனை சட்டங்கள் போட்டால் என்ன? அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எங்கே இருக்கின்றது உத்திரவாதம்? கடுமையான சட்டங்கள், தண்டனைகள் பாலியல் வன்முறையை தடுத்துவிடும் என்கின்றார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நீதிமன்றங்களே ஆணாதிக்கம் கோலோச்சும் இடங்களாக உள்ளன. பெண்கள் பணிபுரியும் இடங்களில் இருக்க வேண்டிய விசாகா கமிட்டி, நீதிமன்றங்களிலேயே இல்லை.
இப்படி துறை சார்ந்தும், சமூக விசயங்களிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பற்றி விளக்கி பேசினார். ஆக நீதிமன்றங்கள், சட்டங்களை நம்பி பயனில்லை, மாறாக ஆண்களோடு கைகோர்த்து, சமூக விடுதலையை முன்னெடுப்பதே பெண் விடுதலைக்கு வழி வகுக்கும் என்ற தீர்வை முன்வைத்து உரையை இறுதி செய்தார். கவிதை , பாடல் ஆகியவற்றை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இறுதியாக வழக்கறிஞர் ராதிகா நன்றியுரையாற்றினார், கூட்டம் நிறைவு பெற்று அனைவரும் களையும் நேரம் அப்படி களைய முனைந்தவர்களை தனது எதுகை மோனை பேச்சால் இருக்கையில் நிறுத்தினார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் தொடங்கி, இறுதி வரை இருந்த அனைவரின் பங்களிப்புக்கும் நன்றி பாராட்டி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.
பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் பார்வையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெரியார் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் உடன் செல்கிறார். இனி அவர் பார்த்துக்கொள்வார்.
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை, தொடர்புக்கு : 90946 66320.
மார்ச் – 8 உலக மகளிர் தினத்தையொட்டி பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக தருமபுரி, பென்னாகரம் ஊரில் 8.03.2018 அன்று மாலை தோழர் பழனியம்மாள் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
தலைமை உரையில் “மார்ச் – 8 இன்றைக்கு திருவிழாவை போல ஒரு கொண்டாட்ட நாளாக கொண்டாடுகின்றனர். ஆனால் மார்ச் -8 பெண்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், வாக்குரிமை, சங்கம் சேரும் உரிமை, போன்ற பல்வேறு உரிமைகளை கம்யூனிசப் போராளி கிளாரா ஜெட்கின் தலைமையில் ஆயிரகணக்கான பெண்கள் ரத்தம் சிந்தி உரிமைகளை பெற்றெடுத்த போராட்ட நாள்தான் மார்ச் -8.
அப்படி போராடி பெறப்பட்ட உரிமைகளை இழந்து நிற்கிறோம். அதோடு இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை, சிரியா போரில் பெண்களை கொல்கிறார்கள், ஈழப்போரிலே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விதவையாகியுள்ளார்கள், இங்கே டாஸ்மாக் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களை விதவையாக்கியிருக்கிறார்கள். எனவே இதனை அனுமதிக்க கூடாது, அன்றைக்கு சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள்தான் முன்னின்று போராடினார்கள். இன்றைக்கும் பெண்கள் அணைவரும் ஒன்றிணைந்து சமூகப் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கான விடுதலையை சாதிக்க முடியும்” என்றார்.
அடுத்தாக தோழர் வனிதா பேசுகையில், “இன்றைக்கு முதலாளித்துவம் லாபத்துக்காக பெண்களை ஆபாசமாக விளம்பரப்படுத்துவது, பெண்களை நுகர்வு பொருளாக பார்ப்பது என்கிற வக்கிரத்தை திட்டமிட்டே பரப்புகின்றனர். அதோடு அவனுடைய லாபத்துக்காக பெண்களை குறைந்த கூலிக்கு அமர்த்தி சுரண்டுவதும் அரங்கேறி வருகிறது. மேலும் பெண்களை பாதுகாக்க பல சட்டங்களை கொண்டுவந்தாலும் , அதற்கு எதிராகவே இந்த அரசு இருப்பதால் சட்டங்கள் மூலம் பெண்களை பாதுகாக்க முடியாது. இதனால் பெண்கள் விடுதலை பெற ஆண்களோடு இணைந்து வீதியில் இறங்க வேண்டும் அது ஒன்றுதான் தீர்வு.” என்றார்.
சென்னை பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் திலகவதி சிறப்புரையாற்றினார். “பெண்கள் எப்போதுமே திருமணம், படிப்பு, போன்ற பல்வேறு விஷயங்களில் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படையாக சொல்லமுடியாத சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகமாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும் முதலாளிகளின் லாபத்துக்காக கழிவறைக்கு சென்று வந்தால் கூட ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்பது, சில ஆலைகளில் நாப்கின் கொடுக்கிறேன் என்று பெருமையாக பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால் அத்தொழிற்சாலைகளின் பண்டக சாலைகளில் ஆண் பணியாளர்களை வேலைக்கு நியமித்துள்ளனர். இதனால் பெண்கள் சங்கடமாக, கூச்சப்பட்டுக்கொண்டு நாப்கினை கேட்பது இல்லை. அதை கேட்க முடியாதபடிக்கு அவர்களிடம் அடிமைத்தனம் திணிக்கப்பட்டிருக்கிறது. இப்படி அனைத்திலும் உளவியல் ரீதியான ஒடுக்குமுறையும் அன்றாடம் அனுபவிக்கின்றனர். பெற்ற தாயே தின்பண்டங்களில் கூட பெண்ணுக்கு குறைவாக கொடுப்பதில் இருந்து பல அடிமைத்தனங்களை இயல்பாக செய்கிறார். சமூகத்திலோ பெண்களுக்கான சமவெளி என்பது இன்னமும் உருவாகவே இல்லை. நிர்பயா பாலியல் பலாத்காரத்திற்கு பிறகு தண்டனை வழங்ககப்பட்ட பிறகும் பாலியல் வன்முறைகள் குறையவில்லை.
அந்த அளவுக்கு பாலியல் நுகர்வு வெறி சமூகத்தில் புரையோடிபோயிருக்கிறது. இதையெல்லாம் இடித்துரைத்து சரியான பாண்பாடுகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க வேண்டிய ஊடகங்கள் மாமா வேலையைத்தான் செய்கிறது. எந்த நேரமும் சினிமா, சீரியல்கள் அனைத்திலும் பெண்களை நுகர்வு பொருளாக காட்டுவதைதான் செய்கிறது.
எனவே இதனையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமானால் பெண்களும் சமூக போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் ஆணாதிக்க சுரண்டலில் இருந்து, சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறமுடியும். அதைதான் ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் சாதித்தனர். பெண்கள் குடும்ப ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க, சமூதாய கூடங்கள் , குழந்தைகள் காப்பகம், சமூதாய உணவு கூடங்களை, அமைத்து பெண்களும் உற்பத்தியில் ஈடுபட்டனர். பெண்கள் மகப்பேறு காலங்களில் விடுப்புடன் கூடிய ஊதியம் எல்லாம் வழங்கி பெண்கள் விடுதலையை சாதித்தனர்.
அத்தகைய போராட்டம்தான் தீர்வு. அதற்கு பெண்கள் சமூக போராட்டங்களில் பங்கெடுப்போம் பெண்கள் விடுதலையை சாத்தியமாக்குவோம்.” என்று அறைகூவல் விடுத்தார்.
இதில் சாராய ஒழிப்பு பெண்கள் குழு அனுபவ உரை, பள்ளி மாணவிகள் கவிதை வாசிப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கான பாதுகாப்பை, விடுதலையை சட்டத்தின் மூலமாக சாதிக்கமுடியாது. மாறாக பெண்கள் சமூக போராட்டங்களில் பங்கெடுப்பதுதான் தீர்வு என்பதை உணர்த்தும் விதமாக இக்கூட்டம் அமைந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : பெண்கள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு. தருமபுரி. தொடர்புக்கு : 80989 08438.
திருவள்ளூரில் இருந்து ஊத்துக் கோட்டை செல்லும் சாலையில் இயங்கி வருகின்றது DMC ஆட்டோ மோட்டிவ் (லிட்) என்ற தென் கொரியா ஆலை. இந்த ஆலையில் 21 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர்.
ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வரை பணி புரியும் தொழிலாளர்கள் 56 பேர் உள்ளனர். இந்த தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ந்த போது, மூன்று ஆண்டுகளில் பணி நிரந்தர ஆணை வழங்குவதாக உறுதியளித்தது நிர்வாகம். அதை செய்யக்கோரி நிர்வாகத்திடம் பணி நிரந்தர ஆணை கேட்ட தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கி, அடக்கு முறையை ஏவி அச்சுறுத்துகிறது .
இங்கு பணி புரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களான நெல்வாயல், ஒதப்பை பூண்டி, கச்சூர், கலவை, சித்தஞ்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இளம் தொழிலாளர்கள்.
தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது கொத்தடிமையாக நடத்துவது என்ற நடை முறையை ஒவ்வொரு ஆலை நிர்வாகமும் ஒவ்வொரு விதமான அனுகும் முறையை கையாண்டாலும் சாரம்சம் தொழிலாளர்களை கொத்தடிமையாக்குவதுதான் நோக்கமாக உள்ளது. நிர்வாகமே ஒர்க்கர்ஸ் கமிட்டி ஏற்படுத்தி தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்ப்பதாக கூறியது. ஆனால் தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மேற்படி கமிட்டி நிர்வாகத்தின் ‘சொம்பாக’ செயல்பட்டது.
இந்த ஏமாற்றத்தில் இருந்து மீளவும் பிரச்சனையை தீர்க்கவும் தொழிலாளர்கள் சார்பாக ஒர்க்கர்ஸ் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது, இதன் பிறகு நிர்வாகத்தின் தாக்குதல் நாள் தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சான்றாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இனிப்பு (ஸ்விட்) குறைவாக இருக்கின்றதே என சகஜமாக கேட்ட தொழிலாளியை அதிகாரியிடம் அத்து மீறி பேசி விட்டுதாக சொல்லி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள் விசராணையை எதிர் கொண்டு வருகின்றார். இதேப் போல தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரையும் பொய் குற்றசாட்டி கூறி வேலையை பறித்துள்ளது. இப்படி தினந்தோறும் ஆலையில் பணி புரிவது என்பதே ஏதோ போர்க் களத்திற்கு சென்று வருவதுப் போல் உள்ளதாக கூறுகின்றனர் தொழிலாளர்கள்.
நிர்வாகத்தின் அடக்கு முறைக்கெதிராக தொழிலாளர் நீதி மன்றத்தில் பணி நிரந்தரம் கோரும் வழக்கை நடத்தி வருகின்றனர். தங்களுக்கான சங்கத்தையும் பதிவு செய்யும் நோக்கத்தோடு செயல்படும் தொழிலாளர்களை அச்சுறுத்த கடந்த 9.3.2018 அன்று மாலை முன்னணி தொழிலாளர்கள் மூன்று பேரை எவ்வித குற்றச்சாட்டும் விசாரணையும் ஏதும் இன்றி டெர்மினேட் செய்தது. குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு இந்நிகழ்வு மேலும் கொதிப்பை ஏற்படுத்தியது. மறு நாள் 10.3.2018 அன்று இதற்கெதிராக பணி செய்ய மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர் தொழிலாளர்கள்.
பிறகு ஆலை முன்பு போலீசை குவித்து தொழிலாளர்களை அச்சுறுத்தியது நிர்வாகம். பிற்பகல் 12:00 மணிக்கு துவங்கிய பேச்சு வார்த்தை மாலை 4:00 மணி வரை நீடித்தது. பேச்சு வார்த்தையின் முடிவில் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று பேரை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வது பணி நிரந்தரம் செய்வதை பொறுத்த வரையில் நீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கின் முடிவை ஏற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவை (சட்ட விரோத பணி நீக்கத்தை ரத்து செய்யும் வகையில்) எழுத்துப் புர்வமாக எழுதி தருவதாக ஒப்புக் கொண்ட நிர்வாகம் சதி வேலையில் ஈடுப்பட்டது.
எடுத்த முடிவுக்கு மாறாக நிர்வாகம் கொடுக்கும் ஒவ்வொரு கடிதத்தையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். இறுதியாக மாலை 5.30 மணியளவில் கொடுத்த கடித்தில் டெர்மினேட் செய்யப்பட்டதை நிறுத்தி வைப்பதாக சொல்லி கொடுத்த கடிதத்தை தெழிலாளர்கள் நிராகரித்து டெர்மினேட் செய்ததை ரத்து செய்வதாக திருத்தம் செய்ய வேண்டும் கேட்ட போது நேரம் ஆகி விட்டது HR மற்றும் மேனேஜர் எல்லாம் கிளம்பி போய்விட்டார்கள் எனக் கூறி திங்கள் கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்றனர் இராண்டாம் நிலையில் இருந்த அதிகாரிகள்.
வேலைக்கு எடுத்துக் கொளகின்றேன் என சொல்லி போராட்டத் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற சதியை முறியடிக்கும் வகையில் போராட்டம் தொடர்கின்றது உள்ளிருப்பு போராட்டமாக தொடரும் என அறிவித்து மறு நாள் ஞாயிறு முழுவதும் தொடர்ந்து திங்கள் கிழமையும் போராட்டம் தொடர்கின்றது. காலை நிலவரப்படி 40 தொழிலாளர்களை 20 – 25 நாட்கள் தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறது நிர்வாகம். உரிமையை, வேலை பறித்து பட்டினிக்கு தள்ளும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றார்கள் தொழிலாளர்கள்.
போராடும் தொழிலாளிகளை ஆதரித்து கேட்டின் முன் நின்று பேசும் புஜதொமு தோழர் சிவா
இந்த பிரச்சனையில் நிர்வாகத்தின் யோக்கியதை எந்தளவிற்கு கீழ்த்தரமாக இருக்கின்றது பாருங்கள் ! அதிகாரியாக இருப்பவர்கள் எல்லாம் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் இவர்களுக்கு அறிவு நாணயம் இருக்கின்றதா ?எடுத்த முடிவு என்ன ? எழுதிக் கொடுப்பது என்ன ? இங்கு எப்படி வேண்டுமானாலும் தொழிலாளர்களை ஏமாற்றலாம் எந்த சட்டத்திற்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தலாம் இதைத்தான் பாசிச மோடி வளர்ச்சி என்கிறார்.
தொழிலாளர்களின் அடிப்படையான கோரிக்கை என்ன? மிக மிக சாதரணமான சட்டப்படியான உரிமைதான் பணி நிரந்தர கோரிக்கை இதனை தெழிலாளி வர்க்கம் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. துறைச் சார்ந்த அதிகார வர்க்கம் மத்திய – மாநில அமைச்சர்கள் நீதிமன்றம் தொழிலாளர் நீதி மன்றம் என இவ்வளவு இருந்தும் தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமையை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.
மாறாக இந்த நிறுவனங்கள் எல்லாம் தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதில் நோக்கமாக இருக்கின்றது. இது ஏதோ DMC தொழிலாளர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கான போராட்டம் மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது. எனவே இப்போராட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணித் தோழர்கள் நேரில் சென்று ஆதரித்து வருகின்றனர்.
இந்த அரசின் கொள்கையே தொழிலாளர்கள் மக்களின் வாழ்வை பறிப்பதாக உள்ளது இதற்குகெதிராக தொழிலாளி வர்க்கம் அமைப்பாக திரள்வதும் புரட்சிகர அரசியலை கற்று போராடுவதின் ஊடாகத்தான் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட முடியும். !
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளுர் மாவட்டம் ( கிழக்கு ), 94444 61480.
லஞ்சம் – வழிப்பறி – படுகொலை ! போலீசின் ரவுடித்தனத்தை எதிர்த்து எழுந்து நின்றது திருச்சி !
திருச்சியில் ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் கர்ப்பிணிப்பெண் உஷா உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் வழிப்பறி கொள்ளையை எதிர்த்துக் கேட்ட உய்யக்கொண்டான் பகுதி பொதுமக்கள் – இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லஞ்சம் – வழிப்பறி – ரவுடித்தனம்! போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராக அணிதிரள்வோம்! என்ற முழக்கத்தின் கீழ் 06.03.18 அன்றுதான் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்திருந்த மறுநாளே இக்கொடூர செயலை அரகேற்றியது திருச்சி போலீசு. தற்போது உஷா கர்ப்பிணி இல்லை என பிரதேப் பரிசோதனை அறிக்கையை வைத்து திசைதிருப்ப பார்க்கிறது போலீசு. ஒரு வேளை அப்படியே உஷா கர்ப்பிணி இல்லை என்பதால் கொலைகார காமராஜ் எட்டி உதைத்துக் கொன்றது சகிக்க கூடியதா?
இக்கொடூரத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், அக்கம் பக்கத்து இளைஞர்கள் உஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு உடனடியாக போராட ஆரம்பித்தனர். அவ்வழியாக சென்றவர்கள், சமூக வலைதளங்களில் செய்தியைப் பார்த்து ஆத்திரமடைந்த மாணவர்கள் – இளைஞர்கள் என 3,000 பேருக்கு மேல் திரண்டு வரவே அது, அரசு மற்றும் போலீசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் மிகப்பெரும் மறியல் போராட்டமாக மாறியது. தகவலறிந்து களத்திற்கு சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் போலீசின் வழிப்பறியை அம்பலப்படுத்தியும், கொலைகாரன் காமராஜை கைது செய்து, கொலைவழக்கு பதிவு செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
மறியல் நடந்தது திருச்சி – தஞ்சாவூர் பிரதான நெடுஞ்சாலை என்பதால் அரை மணிநேரத்தில் போக்குவரத்து முற்றாக முடங்கி வாகனங்கள் பல கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நின்றது. செய்வதறியாது திகைத்துப் போன வட்டாட்சியரும் காவல்துறை உயர் அதிகாரிகளும் வேறு வழியின்றி பேச்சுவார்த்தைக்கு வந்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (DC) சக்தி கணேஷ் உள்ளிட்ட சில காவலர்கள் போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று சமாதானம் பேச முற்பட்டனர். கோபத்திலிருந்த இளைஞர்களும் பொதுமக்களும் DC சக்திகணேஷுக்கு செருப்படி கொடுத்து வரவேற்றனர்.
இதே சக்திகணேஷ்தான் உய்யகொண்டான் பகுதி இளைஞர்கள் காவல்துறையால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பகுதி பெண்களுடன் சென்று சந்தித்த போது, ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரத்திற்கு கூட அனுமதி மறுத்தார். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடத்தில் கூட பேரணி நடத்தக் கூடாது என்றார். பகுதி பெண்களை பேச அனுமதிக்காமல் தான் மட்டுமே மிரட்டும் தொனியில் பேசிக்கொண்டிருந்தார். “சார், நீங்கள் பேசுவதை கேட்க நாங்கள் வரவில்லை. நாங்கள் பேசுவதற்காக வந்திருக்கிறோம்” என மக்கள் அதிகாரம் தோழர்கள் கண்டித்த பிறகே பகுதி பெண்களை பேச அனுமதித்தார். பகுதி மக்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் இறுதிவரை பேரணி நடத்தக்கூடாது என மறுத்தார்.
அப்படிப்பட்ட ‘சிங்கம் ஸ்டைல்’ சக்தி கணேஷ்தான் இன்று செருப்படி, கல்லடி, தண்ணீர் பாக்கெட் வீச்சு என அத்தனையும் பொறுத்துக்கொண்டு “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா… இவன் ரொம்ப… நல்லவண்டா…” என்பது போல் இளைஞர்கள் முன் ‘பணிவாக’ நின்றார். “இப்படிப்பட்ட நபர்களை தூக்கில் போடுவதுதான் தீர்வு. அந்த தண்டனையை காமராஜ்-க்கு பெற்றுத்தருவோம். SP தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிப்போம்” என இளைஞர்களிடம் உதார் விட்டும் நைச்சியமாகப் பேசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றார்.
தங்களது கடந்தகால அனுபவங்களிலிருந்து காவல்துறை எப்படி நடந்துகொள்ளும் என்பதை உணர்ந்திருந்த இளைஞர்களும், பொதுமக்களும் சக்திகணேஷின் உளறல்களுக்கு மயங்காமல், “காமராஜை நேரில் கொண்டு வா, இங்கயே – இப்பவே FIR போடு,” என்றனர். பொய் வாக்குறுதி கொடுத்த DC-யால் இதை எப்படி நிறைவேற்ற முடியும்? அப்படி நிறைவேற்றினால் அது காவல்துறைக்கு அவமானமாகிவிடும் என்பதோடு, எதிர்மறையான முன்னுதாரணமாகி விடுமே! “இந்தப் பக்கம் சிக்கலு, அந்தப் பக்கம் செதறலு…” என வடிவேலு போல திணறினார்.
பேச்சுவார்த்தை நீண்டதால் மேலும் மேலும் ஆத்திரமடைந்தனர் இளைஞர்கள். ஒரு இளைஞர் தனது T-Shirt-ஐ கழட்டி, கூடியிருந்தவர்களிடம் சில்லரை காசை வசூலித்து “இந்த பிச்சைக்காசுக்குதானடா அந்த பொண்ணக் கொலை பண்ணுனீங்க, இந்தாங்கடா” என DC சக்திகணேசிடம் கொடுத்தார். “100 ரூவா போலீசு” என காவல்துறையின் எச்சக்கலத்தனத்தை இளைஞர்கள் எள்ளி நகையாடினர். இதுக்கு செருப்படியே பரவாயில்லை என சக்திகணேஷ் சிந்தித்திருப்பார். இதுவே போராட்டத்தின் ஹைலைட். இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளக்குமுறல்.
பேச்சுவார்த்தை என இழுத்தடித்துக் கொண்டே போராட்டத்தைக் கலைப்பதற்கான அனைத்து தயாரிப்பு வேலைகளையும் போலீசார் செய்தனர். தங்கள் தயார் நிலையை உறுதிப்படுத்திய மறுகணமே தடியடியைத் துவங்கியது அரசின் கூலிப்படை. இதை சற்றும் எதிர்பாராத நிராயுதபாணியான இளைஞர்களும் பொதுமக்களும் கலைந்து ஓடினர். துரத்தி வந்த காவல்துறையினர் கொலைவெறியுடன் தாக்கினர். பெரும்பாலான இளைஞர்கள் BHEL டவுன்ஷிப் -க்குள் ஓடினர்.
சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் ஆங்காங்கே கிடந்த கற்களைக் கொண்டு போலீசாரை திருப்பித்தாக்க ஆரம்பித்தவுடன் பின்வாங்கி ஓடியது போலீசு. அங்கே நின்று கொண்டிருந்த காவல்துறையின் இரண்டு Bolero வாகனங்கள் மீது 4, 5 இளைஞர்கள் அருகில் இருந்த பேரி கார்டை தூக்கி வந்து மோதி சேதப்படுத்தினர். கற்களைக் கொண்டு தாக்கி சல்லடையாக்கியதுடன், இரண்டு வாகனங்களையும் தலைகீழாக கவிழ்த்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர், அவர்களும் கற்களால் தாக்கியதுடன் லத்தியுடன் விரட்ட ஆரம்பித்தனர். அவமானம் தாங்க முடியாமல், உடனடியாக வண்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தாமத்திருந்தால் தீக்கிரையாகியிருக்கும்! பின்வாங்கிய இளைஞர்கள், மீண்டும் கற்களைக்கொண்டு ஏறித்தாக்க காவல்துறை பின்வாங்கியது.
மாறி மாறி நடந்த இந்த நிகழ்வு, இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான காஷ்மீர் இளைஞர்களின் போர்க்குணமான போராட்டத்தை நினைவுபடுத்தியது. இதற்கிடையில் கையில் கிடைத்த இளைஞர்கள் – பொதுமக்களை பிடித்து கொலைவெறியுடன் தாக்கி மண்டையை உடைத்தது போலீசு. ஆத்திரம் தீராத இளைஞர்கள், அவ்வழியே சென்ற அரசுப் பேருந்துகளை தாக்க ஆரம்பித்தனர். கொலைவெறியோடு திரிந்த போலீசு அவ்வழியே வருவோர், போவோர் என 50 -க்கும் மேற்பட்டோரை பிடித்துச் சென்றது. இதில் பள்ளி மாணவர்களும் அடக்கம். இவர்களில் 25 -க்கும் மேற்பட்டோர் மீது ‘பொது சொத்துக்களை சேதம்’ விளைவித்ததாக வழக்கு பதிந்துள்ளது. இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும், மக்கள் அதிகாரம் தோழரும் அடக்கம்.
இளைஞர்களின் எதிர்தாக்குதலால், அவமானம் தாங்க முடியாத காவல்துறையினர் நேற்று 10.03.18 அன்று, “CCTV கேமரா மூலம் அடையாளம் கண்டு மேலும் 50 பேரை கைது செய்வோம்” என அறிக்கைவிட்டு பொதுமக்களை அச்சுறுத்த முயல்கிறது. காவல்துறை, வருவாய்த்துறை வாகனங்களைத் தாக்கி பொதுசொத்துக்களை சேதப்படுத்திவிட்டார்கள் என்று சொல்லி இளைஞர்கள், பொதுமக்கள் மீதான தடியடியை நியாயப்படுத்துகிறது காவல்துறை.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது அதிமுக கும்பலால் ஏற்படுத்தப்பட்ட பொது சொத்து அழிப்புக்கு எத்தனை வழக்கு பதிவு செய்தது காவல்துறை? கோவையில் சசிகுமார் மரணத்தின் போது பிஜேபி காலிகள் நடத்திய கலவரத்தை தடியடி நடத்தி கலைக்காமல் இதே அமல்ராஜ் தலைமையிலான போலீசுதானே வேடிக்கை பார்த்தது.
அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் காலித்தனத்துக்கு துணைநின்ற ஆணையர் அமல்ராஜ், தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாமல் ஒடுக்கியதுடன் தீவிரவாத பூச்சாண்டி காட்டி பா.ஜ.க-வுக்கு போட்டியாக அறிக்கை விட்டார். தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் அளித்தார். தற்போது, தனது கூட்டத்தைச்சேர்ந்த ஒரு ஆய்வாளர், அவன் அநீதியாக ஒரு கொலையே செய்திருந்தாலும் அதற்கெதிராக மக்கள் போராடுவதை சகித்துக்கொள்ளாமல் கொடூரமாக தாக்கி ஒடுக்குகிறார். பார்ப்பானும் படைவீரனும் கொலையே செய்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்ற மனு நீதியை நிலைநாட்டுகிறார்.
பொதுமக்களோ, காவல்துறைக்கெதிரான இந்த போராட்டத்தை முழுமையாக ஆதரித்தனர். அருகில் இருந்த டவுன்ஷிப் பெல் தொழிலாளர் குடியிறுப்புவாசிகள் சிதறி ஓடிய மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு தண்ணீரும் அடைக்கலமும் கொடுத்து ஆதரித்தனர். காவல்துறையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து இளைஞர்களை பாதுகாத்தனர். எங்கு போராட்டம் நடந்தாலும் அதனால் பாதிக்கப்படும் பேருந்து பயணிகளும் கடைக்காரர்களும் போராடுபவர்கள் மீது எரிச்சலடைந்து புலம்புவதையும் எதிர்ப்பதையும் பார்க்க முடியும்.
ஆனால், இந்த போராட்டம் காவல்துறையின் கொடூர கொலைக்கு எதிரானது என்று அறிந்ததால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் மற்றும் காரில் வந்தவர்கள் கூட “எங்களுக்கு சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், போலீசை எப்படி தட்டிக் கேட்பது?, போலீசு ரொம்ப பண்றாங்க” என்றே கூறினர். தள்ளுவண்டி கடை நடத்தும் பெண்மணியிடம் கேட்டபோது, “கார்ல, பஸ்ல வந்தவங்க எல்லாரும் இங்க தான் சாப்பிட்டாங்க. எல்லாரும் போலீசத்தான் கண்டிச்சாங்க.” என்றார்.
08.03.18 அன்று திருச்சி அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட உஷாவின் உடலை வாங்க மறுத்து மக்கள் அதிகாரம் தலைமையில் புதிய தமிழகம், விசிக, சிபிஐ, சிபிஎம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க ஆகிய கட்சிகள், இயக்கங்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் தமது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மகளிர் தினத்தன்று ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு போலீசாரால் இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தினர்.
கொலை வழக்கு பதிவு செய்யாமல் காமராஜை தப்பிக்க வைக்கும் நோக்கில், மரணம் விளைவிக்கும் குற்றம் என்கிற – வழக்கமாக சாலை விபத்தின் போது போடப்படும் “அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துதல்” என்கிற – இந்திய தண்டனைச்சட்டம் 304 (ii), 336 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தெரியவந்தது. எனவே, பேச்சுவார்த்தைக்கு வந்த காவல் துணை ஆணையர் சக்திகணேஷிடம் இதை ஏற்க மறுத்தோம். தொடர்ச்சியாக வாதாடியதால், உயரதிகாரிகளிடம் பேசிவிட்டு வந்த போலீசார் Crpc 164-ன் படி நீதிபதி முன் வாக்குமூலம் பதிவு செய்து, பின்னர் கொலை வழக்காக மாற்றம் செய்யப்போவதாகக் கூறி, அவர்கள் வாகனத்தில் கொல்லப்பட்ட உஷாவின் கணவர் ராஜாவை அழைத்துச் செல்ல முயன்றனர்.
ராஜாவை தனியாக அழைத்துச் செல்ல முயற்சிப்பதன் நோக்கத்தை புரிந்துகொண்ட வழக்கறிஞர்கள், தங்கள் வாகனத்தில் ராஜாவை அழைத்துச் சென்றனர். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் – 6 (JM-VI) நீதிபதியிடம் ராஜாவை அழைத்து சென்று பேசிய போது அந்த நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் (CJM) இருந்து எந்த பரிந்துரையும் வரவில்லையென்றார். இது போலீசார் நடத்தும் நாடகம் என்பது அம்பலமானதால், இதை நீதிபதியிடம் தெரிவித்து பதிவு செய்தனர்.
காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்வது, போராட்டத்தில் கைதாகி பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிப்பது, வாகன சோதனையை நிறுத்துவது, ராஜா குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். காவல்துறையுடன் பேசி, மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஒரு கடிதம் கொடுத்தனர். அதில், உஷா சாலை விபத்தில் உயிரிழந்ததாக அயோக்கியத்தனமாக குறிப்பிட்டிருந்தனர். DC சக்திகணேஷிடம் இதை சுட்டிக்காட்டி கண்டித்த பின், “இன்ஸ்பெக்டர் காமராஜால் தள்ளிவிடப்பட்டு வாகனத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உஷா உயிரிழந்தார்” எனக்குறிப்பிட்டதுடன், ராஜாவின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுத்திட பரிந்துரை செய்வதாகவும் கடிதம் மாற்றித்தரப்பட்டு, தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டது.
இதனடிப்படையில் முதலமைச்சரிடமிருந்து நிவாரண அறிவிப்பும் அப்போதே வந்தது. மேலும், கைதாகியிருந்த பள்ளி – கல்லூரி மாணவர்களை விடுவிக்கின்றோம். மற்றவர்களை பெயில் எடுக்கும்போது காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டோம் எனக்கூறினர்.
காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்வது, கைதானவர்களை விடுதலை செய்வது என்பதில் உஷாவின் கணவர் ராஜா உறுதியாக இருந்த போதிலும், மற்ற பிற சூழல்களைக் கருத்தில் கொண்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 09.03.18 அன்று போலீசை அம்பலப்படுத்தும் முழக்கங்களுடன் உஷாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் தோழர்கள், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் சில கட்சியினர் கலந்துகொண்டனர்.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் கூடி மேற்கூறிய சம்பவத்தில் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தது. பொய்வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டவர்களைப் பிணையில் எடுக்கவும் கைதாகாத மற்றவர்களுக்கு முன்பிணை பெறவும் கட்டணம் பெறாமல் வாதாடுவதாகவும், வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத் தருவதென்றும் தீர்மானம் இயற்றியுள்ளனர். அத்தோடு மட்டுமின்றி கொலைகாரன் காமராஜூக்கு எந்த வழக்கறிஞரும் பிணை மனு தாக்கல் செய்வதில்லை என்றும் முடிவு செய்துள்ளனர். எவரேனும் பிணை மனு தாக்கல் செய்தால் குறுக்கிட்டு ஆட்சேபனை தெரிவித்து வாதாடுவது என முடிவு செய்துள்ளார்கள்.
13.03.18 திங்கள் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட ராஜாவிற்கு உறுதுணையாக நிற்கும் வகையில் தற்போது PRPC வழக்கறிஞர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ஆணையர் / கண்காணிப்பாளர் என பலதுறைகளுக்கும் காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15.03.18 அன்று அனைத்து கட்சிகள், இயக்கங்களை ஒருங்கிணைத்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் சிலை உடைப்பு ! பா.ஜ.க காலிகள் வெறியாட்டம் !
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற 48 மணிநேரத்திற்குள்ளாகவே பாட்டாளி வர்க்க பேராசான் மாமேதை லெனின் சிலையை உடைத்து பாஜக காலிகள் வெறியாட்டம் போட்டுள்ளனர். சிலையை உடைக்கும் போது பாரத் மாதா கீ ஜே! என்று கோசமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்து மதவெறியைத் தூண்டி, எப்படியாவது தமிழகத்தில் நேரடியாக காலூன்றி விட வேண்டும் என பல மதவெறிக் கூச்சல்களைக் கிளப்பி வருகின்ற ஹெச். ராஜா, இந்த விசயத்திலும், தனது பேஸ்புக் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதை ஆதரித்ததோடு, இந்தியாவிற்கும் லெனினுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டு, லெனின் சிலையைப் போலவே தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்படும் என பார்ப்பனத் திமிருடன் கொக்கரித்துள்ளான். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் பகுதியில் பெரியார் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர் பாஜக மதவெறியர்கள்.
ஹெச்.ராஜாவின் இந்தப் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் ஓட்டுக் கட்சிகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருவதோடு, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு, முற்றுகை என பல வடிவங்களில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் செயல்படும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், 07.03.2018 அன்று மக்கள் கூடும் முக்கிய சந்திப்பான வில்லியனூர் கோட்டைமேடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி புஜதொமு இணைச்செயலாளர் தோழர். மகேந்திரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி, புமாஇமு. அமைப்பாளர் தோழர். மோகன், புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர். கலை மற்றும், புதுச்சேரி புஜதொமு. பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு ஆகியோர் கண்டனவுரையாற்றினர். நிகழ்ச்சியில், வட்டாரக் கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்களைப் பாடினர்.
தோழர் தோழர் தனது தலைமையுரையில், “பாஜக காலிகள், ரவுடிகள் போல வெறியாட்டம் போட்டதற்குக் காரணம் அவர்களது சித்தாந்தம் தான். இவர்கள் ஜெர்மனியின் கொடுங்கோலன் மக்களைக் கொத்து கொத்தாக கொன்று குவித்த நாஜி ஹிட்லரின் இந்திய வாரிசுகள். ஜெர்மனி மீது ஹிட்லர் படையெடுத்த போது, மக்களைக் காக்கும் பொருட்டு, தோழர் ஸ்டாலின் பின் வாங்கினார். அதன் காரணமாக தான் ஆக்கிரமித்த உக்ரைனில் அமைக்கப்பட்ட தோழர். லெனின் சிலையை உடைத்தது நாஜி வெறி ஹிட்லரின் கும்பல். அடுத்த ஒரே ஆண்டுக்குள் ஹிட்லரின் படையை ஓட ஓட விரட்டியது ஆசான் ஸ்டாலின் தலைமையிலான மக்கள் ராணுவம் என்பது தனிக்கதை! இதைத்தான் இன்று திரிபுராவில் நடத்திக் காட்டியுள்ளது பாஜக காலிப்படை. எனவே, நாம் போராட வேண்டியது கண்ணுக்குத் தெரியும் காவி கும்பலை மட்டுமல்ல அவர்களது சித்தாந்தத்தை. அதற்கு பாட்டாளி வர்க்கமாய் ஒன்றிணைவதே ஒரே வழி” என்றார்.
புமாஇமு அமைப்பாளர் தோழர் மோகன், தனது உரையில், “பாஜக ஒரு கட்சியல்ல. அது ஒரு மதவெறிக் கும்பல். அதன் சித்தாந்தமே உழைக்கும் மக்களாக ஆகப் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தங்களது அடிமைகளாக மாற்றி அவர்களை முன்னேற விடாமல் தடுப்பது தான். அதைத் தான் மோடி தனது கொள்கையாகக் கொண்டு அன்றாடம் செய்து வருகிறார். நீட் தேர்வு அதற்கான சமீபத்திய உதாரணம். உழைக்கும் மக்களின் பிரிவிலிருந்து யாரும் உயர்கல்வி கற்கக் கூடாது, மருத்துவராகக் கூடாது என்பதை செயல்படுத்தக் கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. அதற்காக அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பொய் என்பதை, பட்டியலிட்டுப் பேசினார். எனவே, நீட் என்பதைச் சாக்காக வைத்து நமது அடுத்த தலைமுறையை தற்குறியாக, கூலி அடிமைகளாக மாற்றி, முதலாளிகளுக்கு படையல் படைக்கப் போகிறார்கள். இந்து மதத்தின் பெயரால் அதைச் செய்யப் பார்க்கிறார்கள். இவைகளை எல்லாம தட்டிக் கேட்கச் சொன்னவர்கள், போராடக் கற்றுக் கொடுத்தவர்கள் தான் மாமேதை லெனினும், தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும்.
இதனால் தான் ஆர்.எஸ்.எஸ். பாஜக காலிகள் இந்த தலைவர்களின் சிலைகளை குறிவைத்து தாக்குகிறார்கள். எனவே, நாம் பாதுகாக்க வேண்டியது, வழிநடக்க வேண்டியது சிலைகளை மட்டுமல்ல. அந்தத் தலைவர்களின் சித்தாந்தங்களை. அதற்கு எதிராக வரும் பார்ப்பன மதவெறிக் கூட்டத்தை, எச்ச ராஜாக்களை வீதியில் எதிர்கொண்டு அடித்து உதைத்து விரட்டுவது தான் நமக்கான வேலை” என்றார்.
மக்கள் அதிகாரத்தின் தோழர் கலை பேசும் போது, நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. மாறாக, நீட், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வங்கி திவால், சாகர்மாலா, பாரத்மாலா போன்ற நடவடிக்கைகளால் பிரச்சினைகள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவைகள் எல்லாமே, இந்த கட்டமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது. அந்தத் தோல்வியை மறைக்கவே, மதவெறிக் கூச்சல்கள், சிலை இடிப்புகள் நடத்தி மக்களை திசை திருப்புகிறது மதவெறிக் கும்பல். எனவே, இவர்களை எதிர்கொள்ள அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஒன்று திரள்வதும், மக்களுக்கு எதிரியாக மாறிப் போன இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவதும் தான் உடனடி வேலையாக செய்ய வேண்டும்” என்றார்.
இறுதியாகப் பேசிய, புஜதொமு பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, “ஆசான் லெனினுக்கும், இந்தியாவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறார் வரலாறு தெரியாத எச்ச ராஜா. யாரெல்லாம் சமூகத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் மிக நெருங்கிய தொடர்புடையவர் ஆசான் லெனின். தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது, அழுக்குச் சட்டைகள் ஆள முடியும் என்று சொல்லி, தொழிலாளிகள் தங்களது வர்க்க பலத்தை உணரச் செய்தவர்.
முதலாளி தன்னால் தான் சமூகத்தில் மக்கள் வாழ்கிறார்கள் என்று இறுமாப்புடன் இருந்த போது, தொழிலாளியின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர்த்தி, தொழிலாளி என்ற திமிருடன் இருக்கக் கற்றுக் கொடுத்தவர் தான் ஆசான் லெனின். நாட்டை தலைகீழாக மாற்றுவதாகச் சொன்ன மோடியால் எதையும் செய்ய முடியவில்லை. அவ்வளவு ஏன்? இதே பகுதியில் ஊதிய உயர்வு கேட்டுப் போராடி வரும் வேல்பிஸ்கட்ஸ் தொழிலாளர்களுக்கு உங்களது மதமோ, கட்சியோ என்ன செய்தது? வெறும் 500/- ரூபாய் மட்டும் தான் உயர்வு தர முடியும் என்று திமிராகச் சொன்ன முதலாளி மீது நடவடிக்கை ஏதும் இல்லை. ஆனால், தொழிலாளிகளின் உள்ளிருப்புப் போராட்டத்திற்குப் பிறகு தான் முதலாளியே அசைகின்றான்.
எனவே, கூலி அடிமைமுறையை ஒழிக்க வர்க்கமாய் இணைந்து போராடக் கற்றுக் கொடுத்த ஆசான் லெனின் தான் தொழிலாளி வர்க்கத்தின் தலைவர். நமது நாட்டில் அந்த வர்க்க இணைவுக்குத் தடையாக உள்ள சாதிகளையும், அதைத் தாங்கி நிற்கும் இந்து மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர்கள் தான் பெரியாரும் அம்பேத்கரும். எனவே, இவர்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு சிலையாக நிற்கவில்லை. சிந்தனையாக நிற்கிறார்கள். சிலையை உடைத்து விடலாம். சிந்தனையை யாராலும் உடைக்க முடியாது. அந்த சிந்தனையை உயர்த்திப் பிடித்து ஆசான் லெனின் வழியில் புரட்சியை சாதிப்போம்.” என்றார்.
கூட்டத்தில் வட்டாரக் கலைக்குழுத் தோழர்களின் பாடல்கள், இந்து மதவெறியர்களின் அரசியலை அம்பலப்படுத்தியதோடு, அவர்களது கார்ப்பரேட் சேவையையும், அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி, தொடர்புக்கு : 95977 89801.
*****
திரிபுரா சிபிஎம் தொண்டர்கள் மீது RSS-BJP கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரசிய புரட்சியின் தலைவரான லெனின் சிலையை தகர்த்து வெறியாட்டம் போடுவதை கண்டித்தும் “RSS-BJP கும்பலை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்” என்கின்ற முழக்கத்துடன் மதுரை நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
AC அசோகன் தலைமையிலான காவல்துறை அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது வேண்டுமானால் 5 பேர் மட்டும் மாலை அணிவிக்கலாம், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று மிரட்டி பேசினர். அதை ஏற்க மறுத்த தோழர்கள் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வழக்கறிஞர்களை திரட்டி பேரணியாக சென்று மாலை அணிவிக்க முழக்கமிட்டவாறு வரும்போது மகஇக, பு.ம.இ.மு மற்றும் தோழமை அமைப்பு தோழர்களும் பேரணியில் இணைந்து கொண்டனர். இது சாலை சென்று கொண்டிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்து கவனிக்க வைத்தது.
வழக்கறிஞர்கள் தோழர்கள் என அனைவரும் மாலை அணிவித்த பின் ஊடகங்களிடம் தோழர் வாஞ்சிநாதன் பேசும் போது…. “பார்ப்பன பொறுக்கி எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என பேசியதை இந்த அடிமை எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்கு பேசாமல் அதிமுக என்கின்ற பெயரை மாற்றி அடிமை திமுக என கட்சி பெயரை வைத்துக்கொள்ளலாம்” மேலும் “பெரியார் பிறந்த மண்ணில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் அழிக்க நினைக்கும் இந்த நச்சு பாம்பு எச்ச.ராஜா, BJP-RSS கும்பலை நாட்டை விட்டே அடித்து விரட்ட வேண்டும். இந்த வேலையை அனைத்து ஜனநாயகவாதிகளும் இணைந்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தி பேசினார்.
மேலும் “கோவை பாஜக அலுவலகத்தில் குண்டு வீசியது, சென்னை திருவெல்லிகேணியில் 15 பார்ப்பனர்களின் பூனூல் அறுப்பு என்று பாஜக வை சேர்ந்த கிரிமினல் கும்பல்களே செய்துவிட்டு பிரச்சினையை திசை திருப்பி விடலாம் என நினைக்கிறது” என்று அம்பலப்படுத்தி வழக்கறிஞர்கள் தோழர்கள் ஆகியோர் பேசினர்.
பேசிவிட்டு களைந்து செல்ல முற்படும்போது உங்கள் எல்லாரையும் கைது செய்வோம் என காவல்துறை மிரட்ட அதற்கு தோழர்கள் அப்படியென்றால் நாங்கள் சாலை மறியல் செய்வோம் என்றும், மேலும் தொடர்ச்சியாக் சமூகத்தின் அமைதியை கெடுக்கும் வண்ணம் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி வரும் எச்.ராஜாவை கைது செய்ய தயாரா என்ற கேட்டவுடன் ஏசி அசோகன் கும்பலுக்கு முகம் இறுகிப் போய் பின்வாங்கியது. இது மக்களிடையே போலிசின் கையாலாக தனத்தை அம்பலப்படுத்துதும் விதமாக அமைந்தது. பின்பு தோழர்கள் வழக்கறிஞர்கள் அனைவரும் களைந்து சென்றனர்.
மகளிர் தினக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில், அழகிப் போட்டி, கோலப் போட்டி, விளையாட்டுப் போட்டி, சமையல் போட்டி என பெண்களை அழகுப் பதுமைகளாகவும், அடுப்பறைப் பதுமைகளாகவும் இருத்தி வைத்து பெண்ணடிமைத்தனத்தை கட்டிக் காக்கும் வகையில், “பெண்குயீன்” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இச்சமூகம் பயிற்றுவிக்கிறது.
பெண்களும் கூட்டாக கோயில், குளங்களைச் சுற்றி வருவது, சுற்றுலா செல்வது என்றே பொழுது போக்குகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களோ, அதையே சற்று மாற்றி, ஒரே டிசைனில் உடையணிந்து வேலைக்கு வருவது, சக பெண்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர்.
பொட்டு வைத்து, பூ முடித்து, அடக்க ஒடுக்கமாக முந்தானையை எடுத்து மூடிக்கொண்டு, குடும்பத்திற்கான அத்தனை உழைப்பையும் செலுத்துகின்ற கூலியில்லா அடிமையாக மாற்றி வைத்தது நிலப்பிரபுத்துவம். ஆனால், பெண் விடுதலை, சமத்துவம் என்ற பெயரில், பெண்களை நுகர்வுப் பண்டமாகவும், குறைந்த கூலிக்குச் சுரண்டும் கொத்தடிமைகளாக கூலி அடிமைகளாகவும் மாற்றியுள்ளது முதலாளித்துவம்.
எது பெண் விடுதலை? பெண்கள் மீது திணிக்கப்படும் சமூக அவலங்களை எதிர்த்துப் போராடி உலகை அதிர வைத்து பெண்ணுரிமைகளை வென்றெடுத்தது உழைக்கும் பெண்களின் போர்க்குரல். ஆணுக்குப் பெண் சமம், என்பதை நிலைநாட்டி அரசியல் தளத்திலும் சமூக அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, தியாகத்திலே உருவான அந்த ரத்தம் தோய்ந்த வரலாறில் உதித்தது தான் பெண்கள் தினம். அந்த வரலாறைத் தெரிந்து கொண்டு, இன்றைய பின் தங்கிய நிலைக்கான காரணத்தை உணர்ந்து, அதை மாற்றப் போராட வேண்டிய தருணத்தை புரிந்து கொள்வது தான் பெண்கள் தினம்.
இதை விளக்கும் வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி சங்கத்தின் சார்பில் 2018, மார்ச் – 08 அன்று கடலூர் தேரடித் தெருவில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு, உழைக்கும் பெண்கள் குழு தோழர் ஜோதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளை, கடலூர் மின்வட்டச் செயலாளர் தோழர்.முருகையன் தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ஸ்ரீதர் அவர்களும், புதுச்சேரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு ஆய்வாளர், முனைவர் கீதா அவர்களும், சென்னை, பெண்கள் விடுதலை முன்னணி தோழர் ஜெயலட்சுமி அவர்களும் சிறப்புரையாற்றினர்.
தோழர் ஸ்ரீதர்
தோழர் ஸ்ரீதர் தனது உரையில், “புத்தாடை அணிந்தும், குழுவாக ஒரே மாதிரியான உடையணிந்தும் வேலைக்கு வந்து, வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது, இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது தான் மகளிர் தினமாக பெண்கள் நினைக்கின்றனர். அதையும் தாண்டி, தங்களது வேலையிடத்தில் நிகழும் வேலைப்பளு, உழைப்புச் சுரண்டல், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் அதையும் தாண்டி, சமூக அவலங்களையும் எதிர்த்துப் போராடும் வகையில் பெண்கள் தினத்தைப் பற்றி, பெண் தோழர்கள் பேசுவது தான் சிறந்ததாகும்.” என்று கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.
முனைவர் தோழர் கீதா மேடையில் நின்று பேசாமல், கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுடன் கலந்துரையாடி கேள்வி கேட்டு, அதிலிருந்து விளக்கங்களைக் கொடுத்துப் பேசினார். அவர் பேசும் போது, “நாம் பெண்கள் தினம் என்று சொல்லிக் கொண்டாடுகிறோம். கொண்டாடும் அளவிற்கு நமக்கு எல்லாம் கிடைத்து விட்டதா? பிரச்சினையின்றி வாழ்கிறோமா?” என்று கேட்டார்.
அதற்கு பெண்கள், இல்லை என்றதோடு, “பிரச்சினைகளுடன் தான் வாழ்கிறோம். அடிமையாகத் தான் வாழ்கிறோம்” என்றனர். அதற்கு தோழர் கீதா, “அப்படியெனில் இந்த அடிமைத்தனத்திற்கு யார் காரணம்?” என்று கேட்க, குடும்பம், அரசு, சமூகம், பெண்கள் என பலவாறு பதில்கள் வந்தன.
முனைவர் தோழர் கீதா
“உண்மையில் நம்மை அடிமையாக வைத்திருப்பதற்கு சாதியத்தையும், சொத்துரிமையையும் பாதுகாப்பதற்கான சமூகம் செய்த ஏற்பாடு தான். இதற்கு ஒத்து வராமல் இருப்பதால் தான் மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கியும், விரட்டியும் விடுகின்றது இந்த சமூகம்.
சாதி வழித் திருமண முறைகளையும், தந்தை வழி சொத்து உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பெண்களை குடும்ப உறவுகளில் அமிழ்த்தி வைக்கிறது. இதைக் கட்டிக் காப்பதன் மூலம் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறது. எனவே, அந்த குடும்ப முறையிலிருந்து விடுபட்டு, சமூக வெளிக்கு வரும் போது தான் பெண்களாகிய நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும்.” என்றார். கலந்துரையாடல் போலப் பேசியது பல்வேறு கருத்துக்களை பெண்களுக்கு உணர்த்துவதாக இருந்தது.
அடுத்தாகப் பேசிய தோழர் ஜெயலட்சுமி, ஜன கன மன என்ற தேசியகீதப் பாடலுடன் தொடங்கியவர், “நான் தேசிய கீதம் பாடும் போது யாரும் எழுந்து நிற்கவில்லை. அதனால், நீங்கள் எல்லோரும் ஆன்டி இண்டியன்ஸ்” என்றார். மேலும், “ஆன்டி இந்தியனாக இருந்தால் மட்டுமே நாம் நமது விடுதலையைச் சாதிக்க முடியும். ஏனெனில், இந்தியன் என்று சொல்லி உலகை சுற்றி வரும் மோடி, முதலாளிகளிடம் நாட்டை கூவிக் கூவி விற்று வருகிறார்” என்று சொன்னது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு காலத்தில் பெண்கள் அடுப்படி பராமரிப்பையும், குடும்ப பராமரிப்பையும் மட்டுமே பார்த்து வந்தனர். இன்று வேலைக்குச் செல்கின்றனர். அதனால் பெண்களுக்கு சமத்துவம் வந்து விட்டது என்கின்றனர். உண்மையில் அடுப்படி, குடும்ப வேலையுடன் வேலைக்குச் செல்வது கூடுதல் சுமையாக மாறி விட்டது. அதாவது உழைப்புச் சுரண்டல் என்பது, குடும்பம், முதலாளித்துவம் என்ற இரு முனைகளாக மாறி குத்துகிறது. மற்றொரு புறம் அதிக வேலை, குறைந்த கூலி என்பது முதலாளித்துவத்திற்கு கூடுதல் ஆதாயத்தை தருகிறது . குடும்பத்திற்கு வரும் கூடுதல் வருமானம் மீண்டும் முதலாளிகள் கையில் தான் சென்று சேருகிறது. இதன் மூலம் இன்னும் கூடுதல் ஆதாயம் தான் முதலாளிக்கு.
தோழர் ஜெயலட்சுமி
இன்று நாம் காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் இரவில் கொசுவர்த்தி வைத்து தூங்கச் செல்வது வரை நமது ஒவ்வொரு அசைவிலும் கார்ப்பரேட் முதலாளிகள் நம்மை கண்ணுக்குத் தெரியாத வகையில் இயக்குகிறார்கள். அந்தப் பொருட்களுக்கு மயங்கி நாம் குடும்பத்துடன் உழைத்து கார்ப்பரேட்டுக்களை மீண்டும் மீண்டும் கொழுக்க வைக்கிறோம். எனவே, அடுப்படி வேலைகள், குடும்ப வேலைகளைத் தாண்டி, நம்மை அணுதினமும் சுரண்டும் கார்ப்பரேட் மயத்தை ஒழிக்க பொது வெளிக்கு வந்து சமூக விடுதலைக்காகப் போராடுவதில் தான் பெண்களது உண்மையான விடுதலை அமைந்துள்ளது. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை என்ற ஆசான் லெனின் அவர்களது வழியில் பெண்களின் பங்களிப்போடு சமூக விடுதலையைச் சாதிப்போம்!” என்றார்.
நிகழ்ச்சியில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது. பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலையும், அதற்குக் காரணமான இன்றைய அரசியல் சூழல்களையும் விளக்கும் வகையில் பாடப்பட்ட பாடல்கள் பெண்கள் மத்தியிலும், திரண்டிருந்த மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்களின் உரைகள் பெண்களைச் சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி, இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கடலூர் மின் வட்டம்.
ஆண்டாள் விவகாரத்தில் எச். ராசாவின் பேச்சு, புதிய தலைமுறை நெறியாளர் செந்திலுக்கு அளித்த பேட்டியில் எஸ்.வி. சேகரின் பேச்சு, ஜீயரின் சோடாபாட்டில் எச்சரிக்கை – ஆகியவற்றுக்குப் பின்னர் இவர்களைப் பார்ப்பனப் பொறுக்கிகள் என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்குமெனத் தோன்றுகிறது.
இருப்பினும், ஊடக உலகில் பொறுக்கி என்ற சொல், லுங்கியை ஏற்றிக் கட்டிய சூத்திர தோற்றத்துடனும், சூத்திர அரசியல்வாதிகளின் நடத்தையுடனும் மட்டுமே இணைத்துக் காட்டப்பட்டிருப்பதால், இது பொருத்தமில்லையென்றும் சிலருக்குத் தோன்றக்கூடும்.
பார்ப்பனர்கள் என்றால் மென்மை, நாகரிகம் என்பதாகவும், தன் இயல்பில் நாகரிகமற்றவர்களான பிற சாதியினர் நாகரிகமடைவதென்பதே பார்ப்பனப் பண்பாட்டுக்குப் பழக்கப்படுவதுதான் என்பதாகவும்தான் பொதுப்புத்தி இருக்கிறது. ஆம். பெரியார் பிறந்த மண்ணாகிலும் தமிழகத்தின் பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.
”நாங்களும் சோடாபாட்டில் வீசுவோம்” என்று ஜீயர் சொன்னதை விமரிசித்துப் பேசியவர்களும் கூட, ”ஜீயர் இப்படிப் பேசலாமா?” என்றார்கள். பேசியவர்களுக்கு ஜீயரைப் பற்றிய மயக்கம் இல்லையென்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் அப்படி பேசக் காரணம் மக்களிடம் பார்ப்பனர்கள் குறித்து நிலவுகின்ற மேற்சொன்ன பொதுப்புத்தி. இந்த மடமையை அகற்றுவதுதான் நம் வேலையேயன்றி, இந்த மடமையை அனுசரித்துப் பேசுவது அல்ல.
சோடா பாட்டில் பார்ப்பனப் பொறுக்கிகள் !
நயினார் நாகேந்திரன், வைரமுத்துவைக் கொலை செய்தாலென்ன என்று பேசியபோது மேடையில் அமர்ந்திருந்த ஜீயரும் பிறரும் புன்முறுவலுடன் அதை ரசித்தார்கள். ”நாங்கள்லாம் பயந்து ஒடுங்கிடுவோம்னு நெனச்சீங்களா?” என்பது எஸ்.வி.சேகர் பேசிய வசனம் மட்டுமல்ல, மேடைக்கு மேடை எச்.ராசா பேசி வருவதும், வைரமுத்துவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பார்ப்பனர்கள் பேசுவதும் இதைத்தான். இறுதியாக பார்ப்பன குருபீடமான துக்ளக் பத்திரிகையின் தலையங்கத்தில், ”மாறி வரும் தமிழகத்தில் பூசல்களை உருவாக்கக்கூடிய விமரிசனங்களைத் திராவிட அரசியல்வாதிகளும் சிந்தனையாளர்களும் கைவிடுவது நல்லது. இல்லையென்றால், அமைதியாக நடக்கும் போராட்டங்கள் வன்முறையாகவும் மாறலாம்” என்று மிரட்டியிருக்கிறார் குருமூர்த்தி.
சட்கோப ராமானுஜ ஜீயர் தலைமையில் வைரமுத்துவைக் கண்டித்து கோவை மாவட்டம், காரமடையில் ஹிந்து பார்ப்பனர்கள் நடத்திய ஊர்வலம்
இவ்வாறு ஜீயர் முதல் குருமூர்த்தி வரை எல்லோருமே தாங்கள் சோடா பாட்டில்கள்தான் என்று நிரூபித்துக் கொள்வது குறித்து நாம் ஒரு வகையில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். பார்ப்பன பொறுக்கித்தனம், தனது அலங்காரங்களையும் சாத்வீகத் தோற்றத்தையும் களைந்து விட்டு, தனது கருத்துக்குப் பொருத்தமான மொழியில் வெளி வந்துகொண்டிருக்கிறது.
எச்.ராசாவின் மீசையை மழித்து மொட்டையடித்து மேடைக்கு மேல் ஒரு மேடை போட்டு உட்கார வைத்தால், அவர்தான் ஜெகத்குரு. எஸ்.வி. சேகருக்கு காவி அணிவித்து, கையில் குச்சியைக் கொடுத்தால் அவர்தான் ஜீயர். இருவருக்குமிடையிலான ஒற்றுமை தொந்தியில் மட்டும் இல்லை, மண்டைக்குள் இருக்கும் சரக்கும் ஒன்றுதான். ”நான் போலீசு இல்லடா, பொறுக்கி” என்ற சாமி பட வசனத்தைத்தான் தனது பாத்திரத்துக்கு ஏற்ப மாற்றிப் பேசியிருக்கிறார் சோடாபாட்டில் ஜீயர்.
* * *
மறைந்த பத்திரிகையாளர் ஞாநி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் யூ டியூபில் ஆண்டாள் விவகாரம் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்துகள் இப்பிரச்சனையுடன் தொடர்புள்ளவை.
ஆண்டாள் பிரச்சனையை அணுக வேண்டிய முறை பற்றி விளக்கிவிட்டு, வைரமுத்து மன்னிப்பு கேட்டிருக்கக்கூடாது என்றும் ஞாநி சரியாகவே சொல்லியிருந்தார். அந்த உரையின் கடைசிப் பகுதியில் அவர் கூறியிருந்த கருத்துகள் நம் கவனத்துக்குரியவை.
காலஞ்சென்ற பத்திரிக்கையாளர் ஞாநி
”ரொம்ப அதிர்ச்சியாக இருக்கக்கூடிய விசயம், ரொம்ப சாதுவானவர்கள், அமைதியானவர்கள், எந்த வம்புதும்புக்கும் போகாதவர்கள் என்று நாம் கருதக்கூடிய கதாகாலட்சேபம் செய்யும் பௌராணிகர்கள் திருவல்லிக்கேணி, சீரங்கம் கோயில் வாசலில் போராட்டம் நடத்துகிறார்கள். எங்களைப் பழிக்கிறவன் தலையை வெட்ட நாங்கள் தயங்கமாட்டோம் என்கிறார்கள். வேளுக்குடி கிருஷ்ணன் மாதிரி, பார்த்தால் சாதுவாக இருக்கக்கூடியவர்களெல்லாம் வன்முறையாகப் பேசுகிறார்கள். இதை அவர்களிடம் நாம் எதிர்பார்க்கவே இல்லை” என்று சொல்லி, சங்கப் பரிவாரம் தமிழ்ச் சமூகத்தை மதரீதியாகப் பிளவுபடுத்த முயற்சிப்பதைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறார் ஞாநி.
”பார்த்தால் சாதுவாக இருக்கக்கூடியவர்களெல்லாம் வன்முறையாகப் பேசுகிறார்கள். இதை நாம் எதிர்பார்க்கவே இல்லை” என்று ஞாநி சொல்லியிருக்கிறாரே, அந்த வரிதான் நம் கவனத்துக்குரியது. இவ்விசயம் தொடர்பாகப் பல ஆண்டுகளுக்கு முன் அவருடன் நடந்த ஒரு சிறு விவாதம் நினைவுக்கு வருகிறது.
புதிய கலாச்சாரம் இதழில், ”ஹே ராம்” திரைப்படத்துக்கு எழுதப்பட்ட விமரிசனத்தில் ஞாநிக்கு உடன்பாடு இல்லை. ”பார்ப்பன நடுத்தர வர்க்கத்தை நீங்கள் அளவுக்கு அதிகமாக வில்லனாகப் பார்க்கிறீர்கள். அவர்கள் பெரும்பாலும் பயந்தாங்கொள்ளிகள். ஆபத்தற்றவர்கள்” என்றவாறு அவரது கருத்து அமைந்திருந்தது.
”மேற்பரப்பில் தெரியும் அவர்களது மென்மையைக் கண்டு ஏமாறக்கூடாது. அதன் தன்மைதான் நமது கவனத்துக்குரியது. பொருத்தமான தருணத்தில் அது விகாரமாக வெளிப்படும்” என்பது அன்று என் பதிலாக இருந்தது. என் கருத்தை அவர் ஏற்கவில்லை.
”இதை அவர்களிடம் நாம் எதிர்பார்க்கவே இல்லை” என்று தற்போது பார்ப்பன நடுத்தர வர்க்கத்தினர் குறித்து ஞாநி வெளிப்படுத்தியிருக்கும் அதிர்ச்சி, அன்று ”ஹே ராம்” திரைப்பட விமரிசனத்தையொட்டி அவர் தெரிவித்த கருத்தின் தொடர்ச்சியாகவே அமைந்திருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.
* * *
ஆண்டாள் விவகாரத்தில், இந்துக் கடவுளையும் மத நம்பிக்கையையும் காயப்படுத்தி விட்டதாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு இவர்கள் எவ்வளவுதான் முயன்ற போதிலும், இந்தப் பிரச்சினைக்காகப் போராடத் திரண்ட ஹிந்துக்களில் ஆகப்பெரும்பான்மையோர் பார்ப்பனர்களாகவே இருந்தனர் என்பது தொலைக்காட்சிகளைக் கண்ட அனைவரும் புரிந்து கொண்டிருக்கக்கூடிய உண்மை.
தமிழாற்றுப்படை உரைவீச்சு நடத்திவரும் கவிஞர் வைரமுத்து
பார்ப்பனப் பெண் என்று நாங்கள் நம்புகின்ற ஆண்டாளைத் தேவதாசி என்று எப்படிச் சொல்லலாம்? என்பதுதான் பார்ப்பன சமூகத்தின் மத உணர்வை புண்படுத்திய மையப்பிரச்சினை. இசை வேளாளர் குலத்தில் பிறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியைக் கர்நாடக இசையின் நாயகியாக்குவதற்கு முன், அவருக்கு மடிசார் அணிவித்துப் பாப்பாத்தியாக ஞானஸ்நானம் செய்து வைத்தவர்கள், கேரளத்தில் யதுகிருஷ்ணா என்ற தலித் இளைஞரை அர்ச்சகராக்குவதற்கு முன் அவரைப் பார்ப்பானாக மாற்ற பத்தாண்டுகள் பயிற்சி கொடுத்தவர்கள், ஆண்டாள் என்ற பார்ப்பனப் பெண்ணைத் தேவதாசியாக மாற்றுவதை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்? அருவெறுப்பான இந்த பார்ப்பன சாதி உணர்வுதான் மத உணர்வாக வேடம் கட்டிக் கொண்டது.
மேற்கூறிய உண்மைகள் அறிவுத்துறை சார்ந்தோர் அறியாததல்ல. இருப்பினும் ஒரு சாதி என்ற முறையில் பார்ப்பன சமூகத்தினர் குறித்துப் பலருக்கும் ஒரு தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது.
லிபரல் பார்ப்பனர்கள் என்றொரு வகையினர் இருப்பதாக ஒரு புரிதல் அறிவுத்துறையினர் மீது மட்டுமின்றி, மொத்த சமூகத்தின் பொதுப்புத்தியின் மீதும் கவிந்திருக்கிறது. சாதுவானர்கள் என்ற ஞாநியின் மதிப்பீடும் ஏறத்தாழ இதுதான். லிபரல் என்பதற்கு பொது வரையறை எதுவும் கிடையாது. மட்டன் சாப்பிடுவது, சரக்கடிப்பது போன்றவற்றில் தொடங்கி சாதி பாராட்டாமல் வீட்டுக்கு சாப்பிட அழைப்பது, சாப்பிடப்போவது என்பது வரை லிபரலுக்கான இலக்கணம் மதிப்பிடுவோரின் அளவுகோலுக்கு ஏற்ப வேறுபடக்கூடும்.
சாதி என்பது ஜனநாயக விரோத நிறுவனம். சாதி உணர்வு என்பது ஜனநாயக விரோத உணர்வு. லிபரல் எனப்படுபவர் சாதியை இழிவாகவும் அநீதியாகவும் கருதுபவரா, தன்னளவில் சாதி உணர்வை ஆபாசம் என்று கருதி வெறுப்பவரா, நடைமுறையில் சாதியப் பண்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவரா, சாதி மறுப்பைக் குடும்பத்திலும் அமல்படுத்துபவரா என்ற கேள்விகளையெல்லாம் யாரும் கேட்பதில்லை.
லிபரல் என்றழைக்கப்படும் ஜனநாயக உணர்வு சாதியை மறுத்துத்தான் வரமுடியுமேயன்றி, சாதியின் முன்னொட்டாக வர முடியாது. தமிழ்ச்சாதி என்று கூறுவதும், சாதி சமத்துவம் என்ற ஆர்.எஸ்.எஸ். இன் கருத்தும் அடிப்படையில் இந்த வகையைச் சேர்ந்தவைதான். இவையனைத்தும் படிநிலை சாதி ஆதிக்கத்தைச் சாதி வித்தியாசம் என்று திரித்துக் காட்டுபவை.
காலச்சுவடு இதழின் ஆசிரியர் கண்ணன்
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல் என்ற பிரச்சினையில் பார்ப்பனரல்லாத பல சாதியினர் வெவ்வேறு கோயில்களில் பூசாரிகளாக இருப்பதைக் காட்டி, சாதி என்பது ஒரு பன்மைத்துவ (Plural) பண்பாடேயன்றி, பார்ப்பனிய ஒடுக்குமுறை அல்ல என்று நிறுவுவதற்கு சங்கப் பரிவாரத்தினர் முயற்சிப்பதை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.
இனி லிபரல் பார்ப்பனர் விவகாரத்துக்கு வருவோம்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் பஞ்சாயத்துத் தலைவராக முடியாமல் தடுத்தவர்களைத் தேவர் சாதி வெறியர்கள் என்று குறிப்பிட்டு நாம் எழுதியபோது, யாரோ சிலர் அந்த ஊரில் சாதிவெறியுடன் நடந்துகொள்கிறார்கள் என்பதற்காக தேவர் சாதியினர் அனைவரையும் வெறியர்கள் என்று எப்படி நீங்கள் கூறலாம் என்று அச்சாதியினர் விமரிசித்தார்கள். இளவரசன் கொலையின் போது வன்னிய சாதிவெறி என்று எழுதியபோதும் இதே விதமான கேள்வி அந்த சாதிகளைச் சேர்ந்தோரால் எழுப்பப்பட்டது.
இதே சாதியில் பிறந்திருந்தாலும், சாதி ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் யாருக்கும் தான் பிறந்த சாதியை விமரிசிக்கிறார்களே என்று சிந்தனையே எழவில்லை. தான் பிறந்த சாதியை யாரேனும் விமரிசிக்கும்போது அதன் காரணமாகக் கோபப்படுகிறவர் சாதி உணர்வைத் துறந்தவராக இருக்க முடியாது. தங்களை ஜனநாயக உணர்வு கொண்டவர்களாகக் கருதிக்கொள்பவர்கள் பலரும், பொதுமேடையேறி தமது சாதிகளைச் சேர்ந்த சாதிவெறியர்களைக் கண்டிப்பதில்லை. மாறாக, சாதிவெறி தலைவிரித்தாடும் தருணங்களில் சாமர்த்தியமாக மவுனம் சாதிக்கிறார்கள். இது ஆண்டாள் விவகாரத்தில் மவுனம் சாதிக்கின்ற அல்லது மழுப்பி பேசுகின்ற பார்ப்பன அறிவுத்துறையினருக்கும் பொருந்தும்.
இளவரசனை வெட்டிக் கொன்றதைப் போலவோ, கௌசல்யாவின் கணவன் சங்கரை வெட்டிக் கொன்றதைப் போலவோ தங்கள் ஆட்கள் நடந்து கொள்வதில்லையென்பதால், தங்கள் சாதிக்கு இயல்பிலேயே ஒரு லிபரல் குணாதிசயம் இருப்பதாக பல நடுத்தர வர்க்கப் பார்ப்பனர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். பார்ப்பனரல்லாத சாதிகளைச் சேர்ந்த பல நடுத்தர வர்க்கத்தினரும்கூட அவர்களைப் பற்றி இத்தகைய அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். சாதுவானவர்கள் என்ற ஞாநியின் கருத்துக்கு இப்படி ஒரு பொருளும் இருக்கிறது.
சாது, மென்மை,- நாகரிகம் என்று எந்த சொல்லால் குறிப்பிடுவதாக இருந்தாலும், அந்தப் பண்பை பல்வேறு சாதியினரிடமும் உருவாக்குவதில் நவீனக் கல்வியும் நகரமயமாக்கமும் பெரும்பங்காற்றியிருக்கிறது. எல்லோருக்கும் முன்னதாக நகரமயமானவர்களும் கல்வி மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பைப் பெற்றவர்களும் பார்ப்பனர்கள். இது சொல்லிக்கொள்ளப்படும் அவர்களது மென்மைக்கு முக்கியக் காரணம். இதற்கும் மேற்பட்டு தாங்கள் தனிச்சிறப்பான முறையில் பண்பானவர்கள் என்று தமிழகத்துப் பார்ப்பனர்கள் கருதும் பட்சத்தில், அவர்களைப் பண்படுத்திய பெருமை பெரியாரையே சாரும்.
சாதியை மறுக்கின்ற நவீனக் கல்வி, பகுத்தறிவு அல்லது பொதுவுடைமைக் கருத்துகள்தான் ஒருவரிடம் ஜனநாயகப் பண்பைக் கொண்டுவருகிறதேயன்றி, சாதி – மத நிறுவனங்களுக்குள்ளிருந்து ஜனநாயகப் பண்புகள் ஒருபோதும் வருவதில்லை. ”வீழ்ந்தேன் என்று நினைத்தாயோ” என்று எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும், ஜீயரும், குருமூர்த்தியும் இன்று பேசிவரும் பேச்சுகளே இதற்குச் சான்று.
நாங்கள் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று தி.மு.க. பேச்சாளர்கள் தங்கள் கட்சியைப் பற்றி மேடையில் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். பெரியாரைத் தாக்குப் பிடித்து நின்று, திராவிட இயக்கத்தில் ஊடுருவி – உடைத்து, – ஊழலில் ஊறவைத்து, அதனைக் கைப்பற்றியிருக்கும் தமிழகத்துப் பார்ப்பனர்கள்தான் உண்மையில் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர்கள்.
ஜெயலலிதாவின் ஊழல் மறைக்கவே முடியாதவாறு நாறும்போதும் சரி, பார்ப்பனப் பொறுக்கித்தனம் அல்லது சங்க பரிவாரத்தின் பாசிசத் தாக்குதல்கள் நியாயப்படுத்தவே முடியாத அளவுக்குத் தலைவிரித்தாடும்போதும் சரி, சம்பவாமி யுகே யுகே என்று பார்ப்பன மேன்மையை காப்பாற்றுவதற்கு அந்தந்த சூழலுக்குப் பொருத்தமான அவதார புருஷர்கள் களமிறங்குகிறார்கள்.
பார்ப்பனமயமாக்கப்பட்ட சூத்திரசாதியை சேர்ந்த காலஞ்சென்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி(இடது) மற்றும் கேரளாவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த யது கிருஷ்ணா (கோப்புப் படங்கள்)
இதன் பச்சையான வடிவம் தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க. வினருடன் பங்கேற்கின்ற சமூக ஆர்வலர்கள் அல்லது வல்லுநர்கள். நைச்சியமான வடிவம் அறிவுத்துறையினர். ஆண்டாள் விவகாரம் குறித்த காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கு ஒரு சான்று. வளைத்து நெளித்து அது கூறுகின்ற கருத்து இதுதான்.
வைரமுத்து எனப்படுபவர் விளம்பரம் தேடும் ஒரு அரைவேக்காடு. பரபரப்பைக் கிளப்பும் நோக்கத்துக்காக, தெரிந்தேதான் அவர் கட்டுரைக்கு தொடர்பேயில்லாமல் இந்த வாக்கியத்தை நுழைத்திருக்கிறார். பிறரால் கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் தேவதாசிகளுக்கும் தன்னைத்தானே கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஆண்டாளுக்குமிடையிலான வேறுபாடு தெரியாதவர். ஆண்டாள் தேவதாசியே ஆனாலும், கவிஞராகத்தான் அவரைக் காணவேண்டும். அவரால் ஆண்டாளின் கவித்துவப் பரப்பை அணுக முடியவில்லை. வைரமுத்துவுக்கு எதிராக இத்தனை நியாயங்கள் இருந்த போதிலும், பெரும்பான்மைத் தாலிபான்களிடமிருந்து வைரமுத்துவின் கருத்துச் சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் – இந்த தலையங்கத்தின் தலைப்பு, ”அசட்டுப் பாவனைகளுக்கு மதிப்புக்கூட்டும் தாலிபானியம்.”
”வைரமுத்து பிரச்சினை முக்கியமில்லை. இந்துக்களை இழிவுபடுத்தியோ, ஒரு சமூகத்தினரை மட்டும் விமரிசித்தோ யாரும் பேசக்கூடாது என்பதுதான் எங்கள் போராட்டத்தின் நோக்கம்” என்று திருவல்லிக்கேணியில் கூடிய பூணூல் அணிந்த ஹிந்துக்கள் வெளிப்படையாக அறிவித்தார்கள். இருந்த போதிலும், காலச்சுவடுவுக்குள் இருக்கும் லிபரல் மனச்சாட்சி அவர்களைப் பார்ப்பனர்கள் என்றோ, பார்ப்பனியம் என்றோ அழைப்பதை அனுமதிக்கவில்லை. எனவேதான், அக்கிரகாரத்தை அடையாளப்படுத்த ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபான் என்ற சொல்லை இறக்குமதி செய்கிறது.
அப்போதும் தாக்குதல் தாலிபான் மீது இல்லை. தலையை எடுப்பேன், நாக்கை அறுப்பேன் என்றெல்லாம் பேசி வைரமுத்துவுக்கு சாகித்ய அகாதமி அவார்டு கொடுத்ததைப் போல மதிப்பைக் கூட்டிவிட்டீர்களே என்பதுதான் அவர்களது அங்கலாய்ப்பு.
”கழுதையாகவே இருந்தாலும் அது எங்கள் கடவுள். எங்கள் மத நம்பிக்கை. அதைப் பற்றி எவனும் பேசக்கூடாது” என்கிறது பார்ப்பனக் கும்பல். நாச்சியார் திருமொழியின் கற்பூர வாசனை தெரியாத ஒரு கழுதையை அடித்து, அதைப் பிரபலமாக்கி விட்டீர்களே என்று வருந்துகிறது காலச்சுவடு. ஆமையைத் திருப்பிப் போட்டல்லவா அடிக்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்ற, வன்முறையில் ஈடுபடாத சாதுவின் கூற்றாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
லஞ்சம் – வழிப்பறி – ரவுடித்தனம்! போலீசு ராஜ்ஜியத்திற்கெதிராக அணிதிரள்வோம்! திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!
போலீசு ராஜ்ஜியத்திற்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் 07.03.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. முதல் நிகழ்வாக பறையிசைக்கப்பட்டு, காவல்துறையை அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், தோழர்கள் என நூற்றைம்பதற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தலைமை உரை பேசிய மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், “போலீசு எங்கு பார்த்தாலும் வாகன சோதனை என்ற பெயரில் லஞ்சம், ஊழல், வழிப்பறியில் ஈடுபடுகிறது. இதை தட்டிக்கேட்ட உய்யகொண்டான் பகுதி இளைஞர்களை வெறித்தனமாக தாக்கியுள்ளனர். தேவேந்திரன் என்ற இளைஞர் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமான SI கோபால் உள்ளிட்ட உறையூர் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன்
தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ம.ப சின்னதுரை, “தமிழகம் முழுவதும் காவல்துறை செய்யும் வசூல் எடப்பாடிக்கு செல்கிறது. டாஸ்மாக் கடை வேணாம் என்று இளைஞர்கள் போராடினால் டாஸ்மாக் கடைக்கு காவல் நிற்கிறது ‘காவல்துறை’. சாலையில் நின்று அடிக்கிறதுக்கு சட்டம் இருக்கா? உய்யகொண்டான் பகுதி சுடுகாட்டுக்கு ரோட்டுல போக முடியுமா? ரோடு அவ்வளவு சேதம் அடைந்துள்ளது. இது போலீசுக்கு தெரியாதா? இன்று காவல்துறை மாநாடு நடக்கிறது. மாநாட்டில் வாகன சோதனை என்ற பெயரில் நடக்கும் வழிப்பறியை தடுத்து நிறுத்த ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
கஷ்டப்படுற எங்கட்ட வாங்கித் திங்காதிங்க. பாதிக்கப்பட்டது எங்க அண்ணன் தான்யா. பாருங்க அவங்க குடும்பத்த இரண்டு மாசமா வீட்டுல கிடக்கிறாங்க கால உடச்சிட்டு. எங்க அப்பா கிடையாதுயா. அப்பா இல்லாத அவனுக்கு எப்படியா நல்லது கெட்டது செய்வோம். ஆயா வேலைக்கு போக மாட்டா? அவளுக்கு யாரு நல்லது கெட்டது செய்வா? அவன் வேலைக்கு போனாதான் சோறு. இனி யாரு சோறு போடுவா? சோறு திங்க உன் கால்ல வந்து விழனுமா? எங்க வயித்தெறிச்சல் உங்கள சும்மா விடாது. எங்களுக்கு மட்டும் சொல்லல. எங்கள மாதிரி வெளிய வந்து பேச முடியாதவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க…” என்று முடித்துக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண் வனிதா
இதே போல அப்பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவரும் போலீசுக்கு எதிரான தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட எஸ். ஐ. இப்ராஹிம், தனிப்பட்ட முறையில் திட்டக்கூடாது என்றார். தோழர் வாஞ்சிநாதன், போலீஸ் ஸ்டேசனில் நீங்கள் நடந்துகொள்வதற்கு எதிர்வினை தான் இது என்றும், மேலும் அனுமதி பெற்று நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் குறுக்கிடுவதே தவறு என்றும் மைக்கில் அறிவித்தவுடன் பின்வாங்கிக் கொண்டார் எஸ்.ஐ. இப்ராஹிம்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் தோழர் தண்டபாணி, “எஸ்.ஐ. கோபால் மீது 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இனி உன்னை குண்டாசில் தான் போட வேண்டும். திருப்பூரில் டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய பெண்ணை அடித்தவனுக்கு ஒரே மாதத்தில் பதவி உயர்வு. மதுரை மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தலைவர் நல்லகாமனை அவமானப்படுத்தியதற்காக எஸ்.பி. பிரேம்குமாருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வாங்கித் தரப்பட்டது. மேலும், சிவகாசி ஜெயலெட்சுமி முதல் பல்வேறு சம்பவங்களின் மூலம் போலீசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி பேசினார்.
போலீசு என்றாலே வழக்கு, சிறை, சித்ரவதை தான். போலீசின் மாநாட்டில் பயங்கரவாதமும், மதவாதமும் நாட்டின் முக்கிய பிரச்சினை என்கிறான். எது பயங்கரவாதம்? நாட்டில் விவசாயிகள் கொத்து கொத்தாக சாவதற்கு யார் காரணம்? தண்ணீர் இல்லை என்று போராடினால் கூட போலீசு தான் வந்து நிற்கிறது. நேர்மையாக செயல்பட்டதற்காக டிஎஸ்பி விஷ்ணு பிரியா, அவர் தோழியான கீழக்கரை டிஎஸ்பி என அனைவரும் மிரட்டப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள்.
போலீசுத்துறையில் ஆண் போலீசால் பெண் போலீசார் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகள், போலீசார் நிம்மதியாக குடும்பத்துடன் வாழ முடியாத நிலை என போலீசுத்துறையின் நெருக்கடியையும், நெடுவாசல், கதிராமங்கலம் என அனைத்திலும் போலீசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்பதையும், போலீசை எதிர்கொள்ள வேண்டுமானால் மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்களை அணுகுங்கள். எமது வழக்கறிஞர்கள் சார்பில் இலவசமாக வழக்கு நடத்துகிறோம்” என்றார்.
சி.பி.ஐ மாவட்ட செயலர் தோழர் திராவிட மணி பேசுகையில்; “எஸ்.ஐ. கோபால், மெண்டல் போல் தெரியாமல் செஞ்சிட்டான் என்கிறார்கள். மெண்டலை ஏன் வேலைக்கு வைத்துள்ளீர்கள். வீட்டுக்கு அனுப்ப வேண்டியது தானே? இவனை போல் சில்வர் ஸ்டாலின் என்று ஒருத்தன் இருந்தான். இப்ப இருக்கிற இடமே தெரியல. காவல்துறையில் இது போன்ற வல்லுறுகள் அதிகம். சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படி தான் நடந்துகொள்கிறார்கள். காவல்துறை மீது நாங்கள் எங்கள் வெறுப்பை காட்டவில்லை. போலீஸ்டேசன் போனாலே பலவிதமான தொல்லைகள். மக்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியுமா காவல்துறை அதிகாரிகள்? காவல்துறையில் எல்லோரும் அயோக்கியனாக தான் இருக்கிறான். காவல்துறையை தோலுரித்துக் காட்டும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்ததற்கு நன்றி” என முடித்தார்.
வி.சி.க திருச்சி மாவட்ட நெறியாளர் தோழர் குணவேந்தன், “எனக்கு பல நெருக்கமான ஆய்வாளர்கள் உண்டு. நண்பர்களாக இருந்தாலும் காக்கிச்சட்டைப் போட்டால் ஒரு மிதப்பு. காலனிய காலத்து அடியாள்தனம் இது. எங்ககிட்டேயே சட்டம் பேசுறியா? எதிர்த்து பேசுறீயா? என்பார்கள். போலீசு பற்றி நாள் கணக்கில் பேசலாம். எதைக் கேட்டாலும் மேலிடத்து உத்தரவு என்பார்கள். யார் மேலிடம் என்று கேட்டால் அவர்களுக்கு தெரியாது.
மிக மோசமாக மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் பேசுவதை பதிவு செய்கிறாயே, மணல் கொள்ளை, கள்ளச்சாராயம் விற்பது தெரியாதா? பணம் வாங்க தான் தெரியும். போலீசு அடித்தால் திருப்பி அடிக்கக் கூடிய நிலை வருமானால், போலீசு தன்னை திருத்திக் கொள்வார்கள் அல்லது திருத்தப்படுவார்கள்.” என முடித்தார்.
மக்கள் அதிகாரம் தோழர் ராஜா, “இங்கு பேசிய பகுதி பெண்கள் காவல்துறை பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றிரண்டை சொன்னதற்கு முகம் சுழிக்கிறது காவல்துறை. காவல்துறையின் வார்த்தைகளை நேரடியாக அனுபவித்தவர்கள் நாங்கள். ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய காவல்துறையின் நடவடிக்கை நேர்மையாக இருக்கிறதா? குற்றம் செய்த கோபாலை உள்ளே வைத்துக் கொண்டு எங்களை பேசாதே என்கிறீர்கள்.
ஒருத்தர் இரண்டு பேர் அல்ல. சம்பவத்தில் அடிவாங்கியது நூற்றுக்கும் மேற்பட்டோர். அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று போலீசின் அராஜகத்தை எதிர்த்து நிற்கிறார்கள். யாரை அடித்தாலும் கேட்கக் கூடாது, எழுந்து நிற்கக்கூடாது. காவல்துறையின் Block List-ல் இருந்த பல அடித்தட்டு மக்கள் வாழக்கூடிய பகுதிகளை விடுவித்தது நாங்கள். காவல்துறை என்ன செய்தது? மொத்த மக்களையும் கிரிமினல் போல சித்தரித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கிறது. அரசின் திட்டங்களுக்கு அடியாள்படையாக செயல்படுகிறது.
கதிராமங்கலம், நெடுவாசல் என போராடும் மக்களை; நம்மை நொறுக்கியது போல கை கால்களை உடைத்து நொறுக்குகிறார்கள். போராடும் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்கிறார்கள். இந்த காக்கிச்சட்டைகள் சட்டப்பூர்வ சமூக விரோத ரவுடிப்படையாக வளர்க்கப்படுகிறது.
இது எஸ்.ஐ கோபாலுக்கு எதிரான போராட்டமல்ல. நாளை கோபாலுக்கு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று பட்டம் கொடுக்கலாம். எனென்றால் சைக்கோக்கள் தான் காவல்துறைக்கு தேவை. எஸ்.ஐ. காதர் பாட்சாவின் நிலை கோபாலுக்கு உருவாகும். நீ செய்யும் நடவடிக்கையை உன் அதிகாரிகள் மன்னிப்பார்கள், எங்கள் மக்கள் மன்னிக்கமாட்டார்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இத்தகைய காவலர்களுக்கு மக்களே தண்டனை வழங்குவார்கள்’’ என்றார்.
சிறப்புரைற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன், “சீருடை அணிந்த வழிப்பறி கும்பலுக்கு எதிராக மிகுந்த எழுச்சியோடு ஆர்ப்பாட்டத்தை நடத்தும் மக்கள் அதிகாரம் தோழர்களே, பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களே, போலீசை எதிர்க்க ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி புரட்சிகர அமைப்புகளுக்கு தான் என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறது. இந்த இடத்தை பார்த்தால் நாட்டில் எந்தளவு கருத்துரிமை இருக்கிறது? அரசியல் சட்டத்தை காவல்துறை எந்தளவு மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இது தான் சட்டத்தின் ஆட்சியினுடைய லட்சணம். கோபால் என்ற தனிநபர் பிரச்சினை அல்ல. கோபாலுக்கு பின்னால் உள்ள காவல்துறை அதற்கு பின்னால் உள்ள அரசு அதிகாரம், நீதிமன்றம் என இந்த கட்டமைப்பு தான் பிரச்சினை. கோபாலுக்கு ஆரம்பத்திலேயே சில விசயங்களை சொல்ல வேண்டும். பின்னால், வழக்கறிஞர் அலுவலகம், தோழர் செழியன், பாதிக்கப்பட்ட மக்கள் வீடு என வந்து இந்த பிரச்சினையை கொஞ்சம் முடித்து விடுங்க சார் என்று கெஞ்ச வேண்டி வரும். ‘சினிமா ஹீரோக்கள்’ போல செயல்பட்ட தஞ்சாவூர் ஆய்வாளர் சேதுமணி மாதவன், எஸ்.பி. பிரேம் குமார், வெள்ளதுரை ஆகியவர்களின் சம்பவத்தின் மூலம் எந்த காவல்துறையும் அவர்களுக்கு உதவாததுடன், சொந்த காவல்துறையினராலேயே லூசு என்று திட்டி தீர்க்கப்பட்டு, சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டதையும் விளக்கி, மக்கள் ஆதரவுடன் இதே நிலையை SI கோபாலுக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் அதிகாரமும் ஏற்படுத்தும்…
வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்ற நீதிபதி கிருபாகரனின் முட்டாள்தனமான உத்தரவு அதற்கெதிரான, வழக்கறிஞர்கள் போராட்டம் நீதித்துறைக்கெதிரான போராட்டமாக மாறி வழக்கறிஞர் தொழில் செய்யத்தடை விதிக்கப்பட்டு அது உடைக்கப்பட்டு, தற்போது மீண்டும் பணியாற்றி வருவதை கூறினார்.
ஹெல்மெட், டாஸ்மாக் என அனைத்திலும் நிறுவனங்களிடம் போலீசு உயரதிகாரிகள் காசு வாங்குவது, சட்டத்தை அமுல்படுத்துவதாக கீழ்நிலை போலீசு சம்பாதிப்பதை சுட்டிக்காட்டினார். மணல் கொள்ளை, கிரானைட் என எந்த கொள்ளையாக இருந்தாலும் எல்லா கொள்ளையிலும் போலீசுக்கு பங்கிருக்கிறது. போலீசுக்கும் ரவுடிக்கும் தொடர்பில்லாமல் எதாவது குற்றம் நடந்திருக்கிறதா? சட்டத்தை மதிக்க சொல்லும் காவல்துறை எங்காவது சட்டத்தை மதிக்கிறார்களா? சட்டத்தை மதிக்காத ஒரே துறை காவல்துறை தான்.
தோழர் வாஞ்சிநாதன்
போலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா? வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் சிவகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா? (குட்கா ஊழல் பற்றி விளக்கினார்). குட்கா ஊழலில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? போலீசு ஈடுபடாத குற்றங்களே இல்லை. எல்லா துறைகளையும் எடுத்துக்கொண்டால் காவல்துறை தான் அதிகமான ஊழலில் ஈடுபடுகிறார்கள்.
போலீசு மீதான அச்சத்தை உடைக்காமல் போலீசை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு நாள் திருப்பி அடிச்சா என்ன? பகுதி இளைஞர்கள் திருப்பி அடிங்க இரண்டு பேர் மேல கேசு. நம் மீது கேசு போட்டால் கேசு நடத்த நாங்கள் இருக்கிறோம் இலவசமாக நடத்த. அவனுக்கு தண்டனை கிடைத்தால் என்ன ஆகும்? வேலை போகும். அதோடு அவன் குடும்பம் தெருவில் போகும். அப்படி இளைஞர்கள் தயாராகாமல் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது.
ஹெல்மெட் போட்டால் நமக்கு பாதுகாப்பு என்று அரசு சொல்கிறது. டாஸ்மாக் கடை அரசு தானே நடத்துகிறது. மக்கள் உயிர் மேல் நேசம் இருந்தால் டாஸ்மாக் கடை நடத்த முடியுமா? கேலி கூத்தாக இல்லையா? நீரவ் மோடி, விஜய் மல்லையா பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்துவிட்டு ஓடிவிட்டார்கள். பிடிக்க முடிந்ததா?
ஒரத்தநாட்டு விவசாயி டிராக்டர் கடன் இரண்டு லட்சம் கட்டவில்லையென அடித்து கொலை செய்கிறாய். மக்கள் சொத்தை கொள்ளையடித்த பி.ஆர்.பி, வைகுண்டராஜன் மீது என்ன நடவடிக்கை? அதிமுக-வில் எவன் கொள்ளையடிக்கவில்லை. எவன் சொத்தையாவது பறிமுதல் செய்ய முடியுமா? எந்த கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சொத்து விவரத்தை மட்டும் எடுத்தால் போதும். எவன் யோக்கியன் என்று தெரிந்துவிடும், எடுக்க தயாரா? காவல்துறை மீது எத்தனை வழக்குகள் என்பதை வெளியிடு… உன் யோக்கியதை தெரியும். இப்படிப்பட்ட குற்ற கும்பல்கள் தான் காவல்துறை.
சட்டத்தின் மேல், அதிகாரிகள் மேல் யாருக்கும் நம்பிக்கையில்லை. ஓட்டுக்கட்சிகள் மேல் நம்பிக்கையில்லை. கோர்ட் மேல் நம்பிக்கையில்லை. நீதிபதிகள் எல்லோரும் திருடனாக இருக்கிறார்கள். பத்திரிக்கைகளை எல்லாம் பெரிய பெரிய பணக்காரன் வைத்துள்ளான். எல்லா போன பிறகு மக்கள் இன்று வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அவர்களை தடுக்கிற ஒரே சக்தியாக காவல்துறை, காக்கிச்சட்டை அடியாள் கூட்டம் தான் உள்ளது.
உய்யகொண்டான் பகுதியில் போலீசு தேவையில்லை. பெண்கள்-இளைஞர்களைக் கொண்ட பாதுகாப்புக் குழுக்களை நாங்களே உருவாக்குகிறோம். பிரச்சினை வந்தால், தவறு செய்தால் நாங்களே தீர்த்துக் கொள்கிறோம். எதற்கு போலீசு, கோர்ட்க்கு போக வேண்டும்? இந்த அதிகாரத்தை ஏற்கும் வரை இப்பிரச்சினையை நாம் தீர்க்க முடியாது. என்ன நடந்தாலும் எங்களிடம் தானே வர வேண்டுமென நினைக்கிறார்கள் அவர்கள். உன் அதிகாரத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்புக் குழுக்களை நாம் உருவாக்குவோம். அதிகாரத்தை நாம் கையில் எடுப்போம் அது தான் நிரந்தரத்தீர்வு…” எனக்கூறி முடித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே ம.க.இ.க கலைக்குழுவின் புரட்சிகர பாடல்கள் மக்களை உணர்வூட்டின.
அப்போது, பேசிய தோழர் கோவன், “ஹெல்மெட் அணிவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், உங்கள் அக்கறையின் மேல் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், எங்கள் மக்கள் பல காரணங்களால் தினம் தினம் செத்து மடிகிறார்கள், நிம்மதியிழக்கிறார்கள் குறிப்பாக டாஸ்மாக். அதை செய்யக்கூடிய அரசுக்கு ஏவல் வேலை செய்கிறீர்கள். அந்த வகையில், எங்களை கொல்வது என்ற அரசின் கொள்கைக்கு உடன்படுகிறீர்கள்.
அதில் உடன்படக்கூடிய உங்களை எப்படி நம்ப முடியும்? அதனால் உங்கள் நோக்கம் எங்களை காப்பாற்றுவதல்ல. கொள்ளைடிப்பது தான் உங்கள் கொள்கை. உங்களுக்கு நியாயம் பேச துளியும் அருகதையில்லை. பெரியார் அணை பிரச்சினையா – கேரளா, காவிரி பிரச்சினையா – கர்நாடகா, நீட்டு, மாட்டு பிரச்சினையா – மோடி, மீத்தேன் பிரச்சினையா – தமிழக அரசு, மோடி அரசு எதிரி. ஆனால் இதில் எல்லாத்திலேயும் போலீசு தான் நிரந்தர எதிரி. நீங்கள் காக்கிச் சட்டை போட்டுள்ள வரை நீங்களும் நாங்களும் தான் எதிரி. முடிவு செய்யுங்கள், உங்கள் காக்கிச் சட்டையை தூக்கியெறியுங்கள் அல்லது இந்த மோசமான காரியத்தை செய்ய முடியாது என உயரதிகாரிகளுக்கு எதிராக போராடுங்கள். குறைந்தபட்சம் உங்கள் சங்கத்திற்காகவாவது போராடுங்கள்.
அதிகாரம் இருப்பதனால் எதையும் செய்யலாம் என திரிபுராவில் எங்கள் தோழர் லெனின் சிலையை உடைத்து காவி கும்பல் ஆட்டம் போடுகிறது. காவி என்றால் அராஜகம், ஜனநாயக விரோதம், சர்வாதிகாரம். இதே வேலையை தான் போலீசு செய்கிறது. அதிகாரம் இருப்பதால் தோழர் லெனின் சிலையை உடைத்ததை போல் இங்கு இளைஞர்களின் காலை உடைத்துள்ளீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
அதனால், உங்கள் அதிகாரத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். லெனின் சிலையை, இளைஞர்களை – பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமானால் இனி மக்கள் அதிகாரம் தான். அதற்கான துவக்கமாக தான் இந்தக்கூட்டம் என்றார்.”
“போலீசுக்கு மக்களோட உசுரு மேல அக்கற”, “ஏழை மக்கள பாதுகாக்க போலீஸ் இருக்குதா” என்ற பாடல்கள் போலீசை அம்பலப்படுத்தியதுடன், மக்களுக்கு விரோதமான போலீசு துறைக்கு எதிராக போராட வேண்டுமென்ற அறைகூவலாகியது!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.
திருச்சியில் போலீசால் கொல்லப்பட்ட உஷாவின் மரணம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போராட்டத்தின் போது தோழர் கோவன் பாடிய பாடல் – போலீசின் கடமை உணர்வின் இரகசியத்தை அம்பலப்படுத்துகிறது.
மார்ச் 07,2018 அன்று திருச்சி கணேஷ் ரவுண்டனா பகுதியில் ஹெல்மெட் வசூலில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உஷா என்ற கர்ப்பிணியை, இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று உதைத்துக் கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார். உஷாவின் கணவர் ராஜா காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உஷாவின் இறுதி ஊர்வலம், அஞ்சலிக் கூட்டத்தில் தோழர் கோவன், ம.க.இ.க தோழர்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள், எவிடன்ஸ் கதிர், ராயல் சித்திக் மற்றும் பகுதி வாழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திருச்சியில் இரட்டைக் கொலை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்!
தடியடி நடத்தி ரவுடித்தனம் செய்த திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய்!
மார்ச் 07,2018 அன்று திருச்சி கணேஷ் ரவுண்டனா பகுதியில் ஹெல்மெட் வசூலில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உஷா என்ற கர்ப்பிணியை, இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று உதைத்துக் கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார். உஷாவின் கணவர் ராஜா காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹெல்மெட் தாக்குதல்கள், கொலைகள் தமிழக காவல்துறைக்குப் புதிதல்ல. கடந்த ஜூலை 1, 2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனால் மிகப்பெறும் பயனடைந்த ஒரே அரசுத்துறை காவல்துறைதான். டாஸ்மாக் பார், மணல் கொள்ளை எப்படி கீழ்மட்ட ஆளுங்கட்சி ஊழியர்களுக்கு வசூல் வகையைத் திறந்து விட்டதோ, அதேபோல் ஹெல்மெட் உத்தரவு காவல்துறையின் அன்றாட வருமானத்திற்கான வழியானது. மணல் கொள்ளை, சேகர் ரெட்டி டைரி,குட்கா ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களில் ஆதாரத்துடன் பிடிபட்ட எடப்பாடி-பன்னீர் கூட்டம், மேல்மட்ட காவல்துறை அதிகாரிகள் இதனைத் தெரிந்தே அனுமதித்தனர்.
மக்களின் உயிரை காப்பாற்றத்தான் ஹெல்மெட் கட்டாயம் என்கிறோம் என்கிறது அரசு. உண்மையில் மக்கள் மேல் அக்கறை இருந்தால் டாஸ்மாக்கைத் திறந்து கோடிக்கணக்கான தமிழ்ப் பெண்களின் தாலியை அறுப்பதேன்? உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மணல் கொள்ளையில் தமிழகத்தையே சூறையாடுவதேன்? அரசு, காவல்துறை, நீதிமன்றத்தின் மக்கள் மீதான அக்கறை என்பது ஏமாற்றே! கொலையை நேரில் பார்த்துப் பதபதைத்துப் போராடிய மக்களை கொடூரமாகத் தடியடி நடத்தி பொய்வழக்குப் போட்ட அயோக்கியக் கூட்டம்தான் திருச்சி காவல்துறை.
சென்ற வாரம் திருச்சி உய்ய கொண்டான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் கோபாலிடம், ரூ.500/- கொடுத்து, அபராதம் ரூ.100/- போக மீதம் கேட்டதற்கு, கேட்டவரை மட்டுமல்ல, உடன் இருந்தவர்கள் அனைவரையும் தாக்கியுள்ளார். இந்த அநீதியைப் பார்த்து சாலை மறியல் செய்த உய்யகொண்டான் பகுதி மக்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளார் கமிசினர் அமல்ராஜ்.
தேவேந்திரன் என்ற இளைஞரின் கால் முறிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பு, காவல்துறையின் வசூல்வெறியைக் கண்டித்து மார்ச் 6, 2018 அன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
பாஜக ஹெச்.ராஜா முதல் தொலைக்காட்சிகளில் கருத்து கூறும் முன்னாள் போலீசு அதிகாரிகள் வரையிலானவர்கள் ஹெல்மெட் போடாதது தவறில்லையா என்று மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். விரட்டிய ஆய்வாளர் காமராஜ் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என இவர்கள் கேட்கவில்லை? 83 கோடி மக்கள் தினமும் ரூ.20/- வருமானத்தில் வாழும் நாடு, மோடியின் இந்தியா என்பது இந்த ஏ/சி அறைக் கணவான்களுக்குத் தெரியாதா?
பொதுவாக காவல்துறை என்றால் எதுவும் செய்யலாம் என்பதே இன்றைய நிலை. ஜல்லிக்கட்டில் ஆட்டோவுக்குத் தீவைத்து, கல்லெறிந்து கலவரம் செய்து; தடியடி, பொய் வழக்குப் போட்டது முதல் மதுரையில் சென்ற வாரம் வி.கே.குருசாமி குரூப்புக்கு ஆதரவாக, கூலிப்படை போல, எதிர் குரூப் ஆட்களை கட்டி வைத்துச் சுட்டதுவரை அனைத்துக் குற்றங்களையும் செய்துவிட்டு, காவல்துறை உங்கள் நண்பன் என்கிறார்கள். உண்மையில் திருச்சியில் நடந்த இரட்டைக் கொலை, ஆதாயத்திற்காக நிகழ்த்தப்பட்ட கொலை( MURDER FOR GAIN). செயின் அறுப்பில் கழுத்தை அறுத்துக் கொல்வது போன்றதுதான் இச்சம்பவம்.
ரூ.100/- பைன் கட்டாமல் சென்றதற்காக விரட்டி விரட்டித் தாக்கிக் கொலை செய்யும் காவல்துறை, 11,000 கோடி அடித்த நீரவ் மோடியை என்கவுண்டரில் சுடுமா? சேகர் ரெட்டியை எட்டி உதைக்குமா? மக்கள் போராடி விசயம் வெளியே வந்திருக்காவிட்டால் உஷாவின் கணவர் ராஜா கஞ்சா விற்றதாக பொய் வழக்கு போட்டிருப்பார்கள். காமராஜ் கடமை தவறாத காவல் அதிகாரியாக சித்தரிக்கப்பட்டிருப்பார். குற்ற கும்பலாக மாறியுள்ள காவல்துறைக்கு மாற்று என்ன? இனி தங்களைத் தாங்களே எப்படி பாதுகாத்துக் கொள்வது? என்பதை தமிழக மக்கள் சிந்தித்துச் செயல்படவேண்டிய தருணம் இது.
வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தொடர்புக்கு: அலுவலகம்: 150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை – 9865348163, vanchiadv@gmail.com