எது மகளிர் தினம் ? கடலூரில் திரண்ட பெண்களைக் கேளுங்கள் !

0
40
  • உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்!
  • பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் முறியடிப்போம்!
  • பெண்ணும் ஆணும் சமம் என்பதை உயர்த்திப் பிடிப்போம்!

களிர் தினக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில், அழகிப் போட்டி, கோலப் போட்டி, விளையாட்டுப் போட்டி, சமையல் போட்டி என பெண்களை அழகுப் பதுமைகளாகவும், அடுப்பறைப் பதுமைகளாகவும் இருத்தி வைத்து  பெண்ணடிமைத்தனத்தை கட்டிக் காக்கும் வகையில், “பெண்குயீன்” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இச்சமூகம் பயிற்றுவிக்கிறது.

பெண்களும் கூட்டாக கோயில், குளங்களைச் சுற்றி வருவது, சுற்றுலா செல்வது என்றே பொழுது போக்குகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களோ, அதையே சற்று மாற்றி, ஒரே டிசைனில் உடையணிந்து வேலைக்கு வருவது, சக பெண்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர்.

பொட்டு வைத்து, பூ முடித்து, அடக்க ஒடுக்கமாக முந்தானையை எடுத்து மூடிக்கொண்டு, குடும்பத்திற்கான அத்தனை உழைப்பையும் செலுத்துகின்ற கூலியில்லா அடிமையாக மாற்றி வைத்தது நிலப்பிரபுத்துவம். ஆனால், பெண் விடுதலை, சமத்துவம் என்ற பெயரில், பெண்களை நுகர்வுப் பண்டமாகவும், குறைந்த கூலிக்குச் சுரண்டும் கொத்தடிமைகளாக கூலி அடிமைகளாகவும் மாற்றியுள்ளது முதலாளித்துவம்.

எது பெண் விடுதலை? பெண்கள் மீது திணிக்கப்படும் சமூக அவலங்களை எதிர்த்துப் போராடி உலகை அதிர வைத்து பெண்ணுரிமைகளை வென்றெடுத்தது உழைக்கும் பெண்களின் போர்க்குரல். ஆணுக்குப் பெண் சமம், என்பதை நிலைநாட்டி அரசியல் தளத்திலும் சமூக அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, தியாகத்திலே உருவான அந்த ரத்தம் தோய்ந்த வரலாறில் உதித்தது தான் பெண்கள் தினம். அந்த வரலாறைத் தெரிந்து கொண்டு, இன்றைய பின் தங்கிய நிலைக்கான காரணத்தை உணர்ந்து, அதை மாற்றப் போராட வேண்டிய தருணத்தை புரிந்து கொள்வது தான் பெண்கள் தினம்.

இதை விளக்கும் வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி சங்கத்தின் சார்பில் 2018, மார்ச் – 08 அன்று கடலூர் தேரடித் தெருவில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு, உழைக்கும் பெண்கள் குழு தோழர் ஜோதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளை, கடலூர் மின்வட்டச் செயலாளர் தோழர்.முருகையன் தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ஸ்ரீதர் அவர்களும், புதுச்சேரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு ஆய்வாளர், முனைவர் கீதா அவர்களும், சென்னை, பெண்கள் விடுதலை முன்னணி தோழர் ஜெயலட்சுமி அவர்களும் சிறப்புரையாற்றினர்.

தோழர் ஸ்ரீதர்

தோழர் ஸ்ரீதர் தனது உரையில், “புத்தாடை அணிந்தும், குழுவாக ஒரே மாதிரியான உடையணிந்தும் வேலைக்கு வந்து, வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது, இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது தான் மகளிர் தினமாக பெண்கள் நினைக்கின்றனர். அதையும் தாண்டி, தங்களது வேலையிடத்தில் நிகழும் வேலைப்பளு, உழைப்புச் சுரண்டல், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் அதையும் தாண்டி, சமூக அவலங்களையும் எதிர்த்துப் போராடும் வகையில் பெண்கள் தினத்தைப் பற்றி, பெண் தோழர்கள் பேசுவது தான் சிறந்ததாகும்.” என்று கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.

முனைவர் தோழர் கீதா மேடையில் நின்று பேசாமல், கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுடன் கலந்துரையாடி கேள்வி கேட்டு, அதிலிருந்து விளக்கங்களைக் கொடுத்துப் பேசினார். அவர் பேசும் போது, “நாம் பெண்கள் தினம் என்று சொல்லிக் கொண்டாடுகிறோம். கொண்டாடும் அளவிற்கு நமக்கு எல்லாம் கிடைத்து விட்டதா? பிரச்சினையின்றி வாழ்கிறோமா?” என்று கேட்டார்.

அதற்கு பெண்கள், இல்லை என்றதோடு, “பிரச்சினைகளுடன் தான் வாழ்கிறோம். அடிமையாகத் தான் வாழ்கிறோம்” என்றனர். அதற்கு தோழர் கீதா, “அப்படியெனில் இந்த அடிமைத்தனத்திற்கு யார் காரணம்?” என்று கேட்க, குடும்பம், அரசு, சமூகம், பெண்கள் என பலவாறு பதில்கள் வந்தன.

முனைவர் தோழர் கீதா

“உண்மையில் நம்மை அடிமையாக வைத்திருப்பதற்கு சாதியத்தையும், சொத்துரிமையையும் பாதுகாப்பதற்கான சமூகம் செய்த ஏற்பாடு தான். இதற்கு ஒத்து வராமல் இருப்பதால் தான் மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கியும், விரட்டியும் விடுகின்றது இந்த சமூகம்.

சாதி வழித் திருமண முறைகளையும், தந்தை வழி சொத்து உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பெண்களை குடும்ப உறவுகளில் அமிழ்த்தி வைக்கிறது. இதைக் கட்டிக் காப்பதன் மூலம் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறது. எனவே, அந்த குடும்ப முறையிலிருந்து விடுபட்டு, சமூக வெளிக்கு வரும் போது தான் பெண்களாகிய நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும்.” என்றார். கலந்துரையாடல் போலப் பேசியது பல்வேறு கருத்துக்களை பெண்களுக்கு உணர்த்துவதாக இருந்தது.

அடுத்தாகப் பேசிய தோழர் ஜெயலட்சுமி, ஜன கன மன என்ற தேசியகீதப் பாடலுடன் தொடங்கியவர், “நான் தேசிய கீதம் பாடும் போது யாரும் எழுந்து நிற்கவில்லை. அதனால், நீங்கள் எல்லோரும் ஆன்டி இண்டியன்ஸ்” என்றார். மேலும், “ஆன்டி இந்தியனாக இருந்தால் மட்டுமே நாம் நமது விடுதலையைச் சாதிக்க முடியும். ஏனெனில், இந்தியன் என்று சொல்லி உலகை சுற்றி வரும் மோடி, முதலாளிகளிடம் நாட்டை கூவிக் கூவி விற்று வருகிறார்” என்று சொன்னது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரு காலத்தில் பெண்கள் அடுப்படி பராமரிப்பையும், குடும்ப பராமரிப்பையும் மட்டுமே பார்த்து வந்தனர். இன்று வேலைக்குச் செல்கின்றனர். அதனால் பெண்களுக்கு சமத்துவம் வந்து விட்டது என்கின்றனர். உண்மையில் அடுப்படி, குடும்ப வேலையுடன் வேலைக்குச் செல்வது கூடுதல் சுமையாக மாறி விட்டது. அதாவது உழைப்புச் சுரண்டல் என்பது, குடும்பம், முதலாளித்துவம் என்ற இரு முனைகளாக மாறி குத்துகிறது. மற்றொரு புறம் அதிக வேலை, குறைந்த கூலி என்பது முதலாளித்துவத்திற்கு கூடுதல் ஆதாயத்தை தருகிறது . குடும்பத்திற்கு வரும் கூடுதல் வருமானம் மீண்டும் முதலாளிகள் கையில் தான் சென்று சேருகிறது. இதன் மூலம் இன்னும் கூடுதல் ஆதாயம் தான் முதலாளிக்கு.

தோழர் ஜெயலட்சுமி

இன்று நாம் காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் இரவில் கொசுவர்த்தி வைத்து தூங்கச் செல்வது வரை நமது ஒவ்வொரு அசைவிலும் கார்ப்பரேட் முதலாளிகள் நம்மை கண்ணுக்குத் தெரியாத வகையில் இயக்குகிறார்கள். அந்தப் பொருட்களுக்கு மயங்கி நாம் குடும்பத்துடன் உழைத்து கார்ப்பரேட்டுக்களை மீண்டும் மீண்டும் கொழுக்க வைக்கிறோம். எனவே, அடுப்படி வேலைகள், குடும்ப வேலைகளைத் தாண்டி, நம்மை அணுதினமும் சுரண்டும் கார்ப்பரேட் மயத்தை ஒழிக்க பொது வெளிக்கு வந்து சமூக விடுதலைக்காகப் போராடுவதில் தான் பெண்களது உண்மையான விடுதலை அமைந்துள்ளது. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை என்ற ஆசான் லெனின் அவர்களது வழியில் பெண்களின் பங்களிப்போடு சமூக விடுதலையைச் சாதிப்போம்!” என்றார்.

நிகழ்ச்சியில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது. பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலையும், அதற்குக் காரணமான இன்றைய அரசியல் சூழல்களையும் விளக்கும் வகையில் பாடப்பட்ட பாடல்கள் பெண்கள் மத்தியிலும், திரண்டிருந்த மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்களின் உரைகள் பெண்களைச் சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கடலூர் மின் வட்டம்.

 

சந்தா