மூன்று மத்திய தொழிற்சங்கங்கள் தலைமையில் கிராமப்புற தபால் சேவை ஊழியர்கள் 16 நாட்களாக நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஜூன் 7-ம் தேதி முடிவுக்கு வந்திருக்கிறது. தொழிலாளர்கள் அமல்படுத்தக் கோரிய ”கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை”க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
மே 22-ம் தேதி தொடங்கிய இந்த வேலை நிறுத்தத்தில், நாடு முழுவதும் உள்ள 2.76 லட்சம் கிராமப்புற தபால் சேவை ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு ஊழியர்களிலேயே மிகவும் மோசமாக சுரண்டப்படும் பிரிவினர்களில் உள்ள கிராமப் புற தபால் சேவை ஊழியர்கள், அரசின் மோசடி பிரச்சாரங்களையும் மிரட்டல்களையும் மீறி 16 நாட்கள் உறுதியாக போராடி அரசை பணிய வைத்திருக்கின்றனர்.
வேலை நிறுத்தத்தை கைவிட்டால்தான் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்ற அச்சுறுத்தலுக்கு பணியாமல், பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் நாடெங்கிலும் உள்ள 1.29 லட்சம் கிராமப் புற தபால் நிலைய கிளைகளில் பணி புரியும் இந்த ஊழியர்கள் போராட்டத்தை வெற்றி பெறச் செய்திருக்கின்றனர்.
தபால் துறையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு காலனிய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட “துறைக்கு வெளியிலான முறை” கிராமப்புற தபால் சேவை ஊழியர் என்று பெயர் மாற்றப்பட்டு இன்றும் தொடர்கிறது. இந்த ஊழியர்கள் வேறு ஏதாவது தொழில் செய்து கொண்டே ஒரு நாளைக்கு 3 – 5 மணி நேரம் தபால் சேவைக்கான வேலைகளை செய்ய வேண்டும் என்பது இந்த வேலை வாய்ப்பின் அடிப்படை. ஆனால், நிர்ணயிக்கப்படும் இலக்குகளை எட்டுவதற்கு 8 – 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதால், இதையே முழுநேரமாகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், முழு நேர வேலைக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படுவதில்லை.
இந்த இலட்சணத்தில் தரப்பட்டுள்ள வேலை நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை எட்டாத தபால் நிலையங்கள், வேலை நேரத்துக்கு அப்பால் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் தபால் நிலையத்தை இயக்க வேண்டும் என்று சொல்கிறது கமலேஷ் சந்திரா அறிக்கை. ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய உரிமைகள், குழந்தைப் பேறு விடுப்பை 3 மாதத்திலிருந்து 6 மாதமாக அதிகரித்தல் உள்ளிட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்து வந்த அரசு வேலை நேரத்தை மட்டும் அதிகரிப்பது அயோக்கியத்தனமல்லவா?
ஆறு மாதங்களுக்கு முன்பு இது போன்ற வேலை நிறுத்தத்தின் போது 2 மாதங்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தபால் துறை இயக்குனர் வாக்குறுதி அளித்தும் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்துதான் சமீபத்திய வேலை நிறுத்தம் நடத்தப்பட்டு மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்பதாக பணிந்திருக்கிறது. இந்தத் துறையால் கிடைக்கும் பலன்களே இவ்வாறு பணிந்திருப்பதற்குக் காரணம்.
கிராமப் புறங்களில் தகவல் தொடர்புக்கும் நிதி சேவைகளுக்கும் அடிப்படையாக இந்த தபால் நிலையங்கள் இருப்பதாக மத்திய அரசின் தகவல் குறிப்பு தெரிவிக்கிறது. கிராமப் புற மக்களை வங்கி வளையத்துக்குள் கொண்டு வருவதற்கான இந்தியா தபால்துறை பணப் பட்டுவாடா வங்கி (India Post Payment Bank) திட்டத்துக்கு இந்த தபால் நிலைய வலைப்பின்னல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அது குறிப்பிடுகிறது.
நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளையும், கிராமப்புற தொழிலாளர்களையும் வங்கித் துறைக்குள் கொண்டு வருவது, அதன் மூலம் மக்களின் சேமிப்புகளையும், பண பரிவர்த்தனைகளையும் நிதித்துறை சூதாட்டத்துக்குள் ஈடுபடுத்த வசதி செய்வது என்ற மோடி அரசின் திட்டத்தை அமல்படுத்துவதற்கான காலாட்படையாக அரசு இந்தத் துறை ஊழியர்களை அரசு பார்க்கிறது.
எனவே, இந்த வேலை நிறுத்தத்தின் வெற்றி தொழிலாளி வர்க்கத்தின் நீண்ட போராட்ட பயணத்தின் ஒரு சிறிய அடிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கார்ப்பரேட், நிதி மூலதன ஆட்சியானது இவர்களை பயன்படுத்துவதும், தேவைகள் முடிந்த பின்னர் தூக்கி எறிந்து விடுவதும் எப்போதும் நடக்கக் கூடியவை. இந்த வேலை நிறுத்த அனுபவத்தை தொகுத்துக் கொண்டு அவர்கள் தமது அடுத்த போராட்டத்துக்குத் தயாராக வேண்டும்.
பெறுநர்,
ஆசிரியர் / நிர்வாகி அவர்கள்,
பத்திரிக்கை / தொலைக்காட்சி ஊடகம்
அன்புடையீர் வணக்கம்,
# மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது தூத்துக்குடி மீனவப் பிரதிநிதிகள் சொல்லும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
# துப்பாக்கிச்சூடு படுகொலை – தேசிய பாதுகாப்புச் சட்டம் – நூற்றுக்கணக்கான வழக்குகள் – கைது – சிறை!
# தூத்துக்குடி மாடல் போலீசு அடக்குமுறை!
இவைகள் குறித்து 03-07-2018, செவ்வாய்க்கிழமை, காலை 12:30 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த உள்ளோம். தங்கள் நிருபரையும், தொலைக்காட்சி ஊடகத்தினரையும் அனுப்பி செய்தி வெளியிடுமாறு கோருகிறோம்!
இவண்,
சி. வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்
9176801656
” பொம்மிஸ் பெருமையுடன் வழங்கும் ’அவள் விருதுகள்’
பெண்ணென்று கொட்டு முரசே! இது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த சாதனைப் பெண்களின் சங்கமம்! அனைவரும் வருக! ”
கடந்த மார்ச் 14, 2018, அன்று சென்னை வர்த்தக மையத்தில் விகடன் குழுமம் நடத்திய ’அவள் விருதுகள்’ – ’சாதனை பெண்களின் சங்கமம்’ என்ற நிகழ்ச்சியின் பேனர் தாங்கி நின்ற வாசகம்தான் இது.
கிண்டி கத்திப்பாரா தொடங்கி நிகழ்ச்சி நடக்கும் வர்த்தக மைய கட்டிடம் வரை வழி நெடுக ஒரே கட்டவுட்டாக இருந்தது. விளம்பரத்துக்கான கட்டவுட்டின் ஒரு பகுதியில் சாதனை பெண்களான நடிகை, பாடகி, அரசியல்வாதி, சமூக சேவகி, இன்னும் பிற அறியப்படாத முகங்களும் புகைப்படங்களாக இருந்தன. மறு பகுதியில் இந்நிகழ்ச்சியை வழங்கும் விளம்பர நிறுவனங்களின் பெயர்களும் இருந்தன.
விளம்பர பேனரில் சாதனைப் பெண்களின் எண்ணிக்கையை விட விளம்பரங்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதிலும் பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள்தான் இந்நிகழ்ச்சியை வழங்குகின்றன.
உள்ளே வரும் கார்களுக்கு வணக்கம் வைத்து வரவழைத்தவர்களிடம் “சார் நானும் நிகழ்ச்சிய பாக்கணும், உள்ள போக ஏதாவது வரைமுறை இருக்கா?” என விசாரித்தேன். ”பாஸ் இருக்கணும்” என்றனர்.
பாஸா!…. இல்லாத பாஸ எங்கிட்டு தேட? விழாக் கூடத்தின் வாசல் வரை முயற்சி செஞ்சும் ’சாதனை பெண்களின் சங்கமத்தை’ பாக்க முடியல.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை ’ஓவியா ஆர்மி’யையே உருவாக்க வைத்தற்காக ஓவியா, பதினெட்டு வருடம் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தற்காக ஜோதிகா, அழுகை ஆர்பாட்டம் இல்லாத நவீன நடிப்பை தருவதற்காக ஆன்ட்ரியா, இந்த அடிப்படையில் சாதனை பெண்களை அடையாளம் கண்டுள்ளது ’அவள் விகடன்’.
இவர்கள் எல்லாம் ஒளி வெளிச்சத்தில் மின்னும் மின்மினிகள். உழைப்பின் வலியோடு போராடும் வாழ்க்கையோடும் சாகும் வரை உறுதிபட எதிர் கொள்பவர்களே நம் பார்வையில் சாதனைப் பெண்கள். இதெல்லாம் “அவள் விகடனு”க்குத் தெரியாததல்ல. முன்னோடிப் பெண்கள் என்று அவர்கள் காட்ட விரும்புவது எளிய மக்களை அல்ல!
எத்தனை திறமை இருந்தாலும் ஏழ்மையை எதிர் கொள்வதிலேயே பல பேருக்கு முழு வாழ்க்கையும் போராட்டமாக அமைந்து விடும். அன்றாட பசியை போக்குவதே சாதனையாகிவிடும். கத்தியில் நடப்பது போலான இந்த வாழ்க்கையில் ஒரு நாள் பொழுது கழிவதே பெரும்பாடு. நாளைக்கேனும் சோறு கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு இன்றைய இரவை கழிப்போர் எத்தனையோ பேர்.
இவர்களையெல்லாம் வலை வீசி தேடிப் பார்க்க வேண்டியது கிடையாது. அவர்கள் நம் அருகே எல்லா இடங்களிலும் எப்போதும் வாழ்கிறார்கள். “அவள் விகடன்” பேனர் தாங்கிய சென்னை நகரம் முழுவதும் அவர்கள் ஊடக உலகம் அங்கீகரிக்க மறுக்கும் சாதனையை ஒவ்வொரு நிமிடமும் நிகழ்த்தி வருகிறார்கள். இவர்களெல்லாம் நாடாண்டால்தான் இந்தியா சாதனை படைக்கும்! ஓவியா, ஜோதிகா சாதனைகளால் என்ன கிடைக்கும்?
பாஞ்சாலி பாட்டி – ஆடு மேய்ப்பவர் இந்த கிண்டிய ஒட்டின பகுதிலதான் ஆடு மேச்சுகினு என் பொழப்பு ஓடுது. பொறந்ததும் இங்கதான், வாக்கப்பட்டதும் இங்கதான். ஆடு மாடுதேன் எங்க சொத்து. கிண்டியாண்ட ஆரம்பிச்சு தாம்பரம் தாண்டி மேச்சுகினே போலாம். இப்ப மில்ட்ரி, ஏர்போட்டு, பெரிய ஆபிசுங்கன்னு அடைச்சிட்டதால செரமாமாருக்கு.
ரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. நடு ராத்திரி திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன். ஆடு எல்லாத்தையும் மாடி மேல ஏத்துன பிறகுதான் நானும் போனேன்.
அரசாங்கம் குடுத்த அரிசிப் பருப்பும் பாயும் தலையணையும் வச்சுகிட்டு இன்னைக்கி வரைக்கும் குடும்பம் நடத்த முடியுமா?
பவானி, தாம்பரம். துப்புரவு தொழிலாளி எங்க வீட்டுக்காரு வேலையதான் நான் பாக்குறே. அவருக்கு ஒடம்புக்கு முடியல. லீவு போட்டா சம்பளம் தரமாட்டாக. அதனால அவருக்கு பதிலா நானு வந்து வேலை செய்றேன். அவருக்கு வேலை போச்சுன்னா எங்குடும்பத்துல அஞ்சு பேரும் பட்டினிதான்.
எனக்கு ரத்தப் போக்கு அதிகமா இருக்கும். தலைக்கு ஊத்திகினா 20 நாளைக்காவது தீட்டு வந்துகினே இருக்கும். என்னால எந்த வேலைக்கும் போக முடியாது. எம்புருசன் சம்பாத்தியம் மட்டும் தான். அவரு லீவு போட்டா நானு வந்து செய்வேன். இல்லன்னா வீட்டு வேலைய பாத்துகினு இருந்துருவேன்.
அறிவுச்செல்வி மேடவாக்கம். சோளம் விற்பவர். எனக்கு மூனு பசங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு குடுத்துட்டேன். அடுத்து பையன் 11-வது படிக்கிறான். அடுத்த பொண்ணு 9-வது படிக்கிறா. எங்கூட்டுக்காரு வேற ஏறியாவுல கடை போட்டுருக்காரு.
மூத்த பொண்ணுக்கு கல்யாணம் முடிக்கிற வரைக்கும் நான் எங்கையும் வேலைக்கி போனதில்ல. எங்கூட்டுக்காரு சாம்பாதிச்சுட்டு வருவாரு, நான் வீட்ட பாத்துப்பேன். எம்பொண்ணுக்கு வாங்குன கல்யாண கடனுக்கு வட்டி கட்டி எங்களால மீண்டு வரமுடியல. அதனாலதான் நானும் தொழிலுக்கு வந்துட்டேன். இந்த கடன அடைக்கிறதுக்குள்ள, அடுத்து பொண்ணு கல்யாணம், பய படிப்புன்னு என்ன செய்யப் போறேன்னே தெரியல.
விஜயா கோடம்பாக்கம். வீட்டு வேலை செய்பவர். இன்னைக்கி நான் சந்தோசமா இருக்கேன் இனிப்பு எடுத்துக்குங்க. (மிட்டாய் கொடுத்தார்) எம் பொண்ணு பி.இ முடிச்சுட்டு வேலைக்கி போயி நேத்துதான் முதல் மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம் வாங்கிட்டு வந்தா. என்னோட கவலையெல்லாம் தீந்துட்டு. இருவது வருசத்துக்கு முன்ன அறியாத பிள்ளைய வச்சுகிட்டு திண்டாடி நின்னேன். நம்பிக்கைய எழந்துட்டமின்னா எழுந்திருக்கவே முடியாது போயிருமுன்னு மனசுல தைரியத்த வளத்துகிட்டு எம்பிள்ளைய படிக்க வச்சு சாதிச்சுட்டேன்.
எம்பொண்ணு அஞ்சு வயசாருக்கும் போது என்ன புடிக்கலன்னு சொல்லிட்டு வேற ஒருத்திக்கூட ஓடிட்டான் எம்புருசன். ஏழட்டு பேரோட பொறந்த நான் வசதி வாய்ப்பு இல்லாமெ ஒம்பது வயசுல வீட்டு வேலை பாக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கி வரைக்கும் பாத்துகிட்டே இருக்கேன். பத்து வருசமா ஆபீஸ்ல ஆயா வேல பாக்குறேன். அது போக ரெண்டு வீட்டுலயும் பாக்குறேன். கடன் வாங்கி சீட்டு போட்டு எப்படியோ படிக்க வச்சுட்டேன். பாதி கடனையும் அடச்சுட்டேன். மறுபடியும் சொல்றேன் இன்னைக்கி நான் சந்தோசமா இருக்கேன்.
ஜோதியம்மா,பழம் விற்பவர், நுங்கம்பாக்கம். எனக்கு எழு பிள்ளைங்க. எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ளேருந்து இந்த யாவரம்தான். இப்ப எம்பிள்ளைங்க பேரப்பிள்ளைங்க எல்லாருமே இந்த மார்கெட்டுலதான் வியாபாரம் பாக்குறோம். பூ, பழம், வேர்க்கடலை, கீரை ஆளுக்கொன்னா விப்போம். வித்து முடிச்ச ஆளுங்க விக்காதத எடுத்துட்டு போயி விக்கணும். எம்பிள்ளைங்களுக்கு தொணையா குந்திகினுருக்கேன்.
முனியம்மா, கிண்டி, பூ விற்பவர். (உள்படம் – காப்பு காய்ச்சிய அவரது கைகள்) எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ரொம்ப வருசத்துக்கு முன்னயே வீட்டுக்காரு செத்துட்டாரு. இந்த பூக்கட்டிதான் பொண்ணுங்கள கர சேத்தேன். ஒரு மருமகன் குடிகாரன் வாழ வைக்காமெ வெரட்டி விட்டுட்டான். பேத்தியோட வந்து எங்கூடதான் இருக்கா. 12 வருசமா நான்தான் பாத்துக்கிறேன். இப்ப பேத்திய பொண்ணு பாத்துட்டு போயிருக்காங்க. கல்யாணத்துக்கு 50,000 ரூவா செலவாகும். வட்டிக்கிதான் கேட்டிருக்கேன். பூக்கட்டி கட்டி கையெல்லாம் காச்சுருந்தாலும் ஒரு நாள் ஒடம்புக்கு முடிலன்னு படுக்க மாட்டேன். அதனால நம்பி பணம் குடுப்பாங்கன்னு காத்துருக்கேன்.
சரோஜா, மடுவாங்கரை, தர்பூசணி விற்பவர். ரெண்டு பிள்ளைங்கள பெத்தேன். ரெண்டும் கைவிட்டுட்டுதுங்க. பத்து வருசத்துக்கு முன்னமே புருசன் போயி சேந்துட்டாரு. இப்ப யாரும் இல்லாத அனாதையா இருக்கேன். கடன் தொல்லை எதுவும் இல்ல. வர்ற வருமானத்துல 1000 ரூபா வீட்டு வாடகை போக சாப்பாட்டுக்கு வந்துரும். ஒடம்புக்கு முடியலன்னா ஒரு சுடுதண்ணி வச்சுக் குடுக்கவோ ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போகவோ யாருமே கெடையாது.
ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்
பாகம் :3
ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.
ஆப்பிள் ஐ-ஃபோன் உலகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் பொதுவான போக்குகளையும், அடிப்படை உறவுகளையும் மிகைப்படுத்தப்பட்ட அதீத வடிவில் வெளிப்படுத்துகிறது. 2010-ல் ஹோன் ஹாய் ஒரு ஊழியருக்கு $2,400 என்ற வீதத்தில் மொத்தம் $240 கோடி லாபம் ஈட்டியது. ஹோன் ஹாயின் லாபத்தை ஆப்பிளின் லாபத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆப்பிள் தனது 63,000 ஊழியர்கள் (அவர்களில் 43,000 பேர் அமெரிக்காவில் உள்ளனர்) ஒவ்வொருவருக்கும் தலா $2.63 லட்சம் லாபம் ஈட்டியது. 2012-ல் ஆப்பிளின் ஒரு ஊழியருக்கான லாபத் தொகை $4.05 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 11, 2011ல் ஹோன் ஹாயின் பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு $3,690 கோடி. தனது பெயரில் ஒரு தொழிற்சாலை கூட இல்லாத ஆப்பிளின் பங்குச் சந்தை மதிப்பு $32,430 கோடி. 11
தனது பெயரில் ஒரு தொழிற்சாலை கூட இல்லாத ஆப்பிளின் பங்குச் சந்தை மதிப்பு $32,430 கோடி
அதற்குப் பிந்தைய ஒரு ஆண்டில் ஆப்பிளின் பங்கு விலை இன்னும் பல மடங்கு அதிகரித்து அதன் பங்குச் சந்தை மதிப்பு $60,000 கோடியை தாண்டியது. அதன் மூலம் எக்சான் மொபில் நிறுவனத்தை தாண்டி உலகின் மிக அதிக பங்குச்சந்தை மதிப்புடைய நிறுவனம் என்ற பெருமையைக் கைப்பற்றியது ஆப்பிள். அதன் பங்கு விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, ஆப்பிள் $11,000 கோடி நிதிக் கையிருப்பை குவித்திருக்கிறது, அந்த நிதியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் எந்த வழிமுறையும் அதனிடம் இல்லை.
“அதிகரித்து வந்த தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்த சீன கூலி அதிகரிப்பு, ஆப்பிள் (மற்றும் பிற நிறுவனங்களின்) உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களின் சிக்கல் அதிகரிப்பதால் தேவைப்படும் கூடுதல் உற்பத்தி நேரம், கடுமையான ஒப்பந்த நிபந்தனைகள்” ஆகிய இரட்டைத் தாக்குதலுக்கு ஹோன் ஹாயின் லாபங்களும், பங்கு விலையும் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன.12 இதை “உற்பத்தியாளரின் துயரநிலையும், வணிகமுத்திரையின் வளமும்” என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. 2005-க்குப் பிறகு ஆப்பிளின் பங்கு விலை 10 மடங்கு அதிகரித்த நிலையில், அக்டோபர் 2006-க்கும் ஜனவரி 2011-க்கும் இடையே ஹோன் ஹாயின் பங்கு விலை கிட்டத்தட்ட 80% வீழ்ச்சியடைந்தது. “முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஊழியருக்குமான செலவு சரியாக மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து $2,900-க்கு சற்றுக் குறைவாக இருந்தது. மொத்த ஊதியச் செலவு $27.2 கோடி; இது மொத்த லாபத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு… சீனாவில் அதிகரித்து வரும் ஊதிய அளவு மின்னணு பொருட்களுக்கான உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தி நிறுவனத்தின் மொத்த லாபத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு 4-5% என்பதிலிருந்து இப்போது 1.2% அளவுக்குக் குறைத்திருக்கிறது.”13
“உற்பத்தியாளரின் துயரநிலையும், வணிகமுத்திரையின் வளமும்” – Hon Hai
இன்னும் மலிவான உழைப்பைத் தேடியும், மேலும் மேலும் போராட்ட குணம் அதிகமாகும் ஷென்சென் தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்காகவும், ஹோன் ஹாய் “சீனாவின் கடலோர பிரதேசங்களிலிருந்து உள்நாட்டுக்கு உற்பத்தியை மாற்றுவதற்காக கணிசமான அளவு முதலீடு செய்திருக்கிறது. மேலும், அதன் தொழிற்சாலைகளில் எந்திரமயமாக்கலை அதிகரித்து வருகிறது. இவற்றின் விளைவாக ஏற்கனவே பலவீனமாக இருக்கும் ஹோன் ஹாயின் லாப வீதம் சென்ற ஆண்டு மேலும் சுருங்கியது..”14 என்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையாளர் ராபின் க்வாங் தகவல் தெரிவிக்கிறார். கணிசமாக அதிகரிக்கும் ஊதியச் செலவுகள், பெருமளவு முதலீட்டுச் செலவு, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து தமது செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகள் (அதாவது ஏற்றுமதி விலை வீழ்ச்சி) ஆகியவை மட்டும் போதாது என்று, ஹோன் ஹாய்க்கும் சீனாவுக்கும் பிரதானமாக உள்ள மேற்கத்திய ஏற்றுமதி சந்தைகளில் வேண்டல் குறைந்து அவை நெருக்கடியில் உள்ளன. இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. “சீனாவில் அத்தனை தொழிற்சாலைகளை கட்டியிருக்கும் இந்நிலையில் கோவ் எதிர்கொள்ள விரும்பாத ஒரு விஷயம் வேண்டல் வீழ்ச்சி” என்று முடிக்கிறார் குவாங். 15
சட்டை
ஐ-ஃபோனின் கண்ணைக் கவரும் கவர்ச்சியும், போற்றப்படும் அதன் வணிகமுத்திரை (பிராண்ட்) அந்தஸ்தும் அதன் உற்பத்தி உலகளாவிய சமூக பொருளாதார உறவுகளில் சுரண்டலும் ஏகாதிபத்தியமும் அடங்கியிருப்பதைப் பார்க்க முடியாதபடி நம்மை மயக்கி விடலாம். ஆனால், இந்த அடிப்படையிலான உறவுகள், பல்வேறு வகையான நுகர்வு பண்டங்கள் அனைத்தின் உற்பத்தியிலும் செயல்படுகின்றன. உதாரணமாக, ஒரு எளிய சட்டையை எடுத்துக் கொள்வோம். “சீன விலையின் உண்மையான பொருள் என்ன?” என்ற கட்டுரையில் டோனி நார்ஃபீல்ட் வங்கதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ஸ்வீடனைச் சேர்ந்த நுகர்பொருள் விற்பனையாளர் ஹென்னஸ் & மவுரிட்ஸ் (H&M) ஜெர்மனியில் விற்கும் ஒரு சட்டையின் கதையைச் சொல்கிறார். H&M வங்கதேச உற்பத்தியாளருக்கு ஒவ்வொரு சட்டைக்கும் €1.35 விலை கொடுக்கிறது. அது இறுதி விற்பனை விலையில் 28 சதவீதம் ஆகும். இந்த விலையில் 0.40 யூரோ அமெரிக்காவிலிருந்து வங்கதேசத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் 400 கிராம் பருத்தி மூலப்பொருளுக்குப் செலவழிக்கப்பட்டு விடுகிறது.
ஏழை நாடுகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது, பணக்கார நாடுகளின் மக்களுக்கு நேரடி பொருளாதார ஆதாயத்தை அளிக்கிறது
இந்த €1.35-க்கு மேல் சட்டையை ஹாம்பர்க் நகருக்கு அனுப்புவதற்கு 0.06 யூரோ செலவாகிறது. விற்பனை விலையான €4.95-ல் எஞ்சிய €3.54 சட்டை நுகரப்படும் ஜெர்மனியின் ஜி.டி.பி-ல் சேர்க்கப்படுகிறது. அந்தத் தொகை பின்வருமாறு பிரித்துக் கொள்ளப்படுகிறது:
ஜெர்மன் போக்குவரத்து நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனைக் கடைகள், விளம்பரதாரர்கள் ஆகியோருக்கான செலவுகளுக்கும் லாபத்துக்கும் €2.05 (அவற்றில் சிறுபகுதி பல்வேறு வரிகள் மூலமாக அரசுக்கு திருப்பி விடப்படுகிறது).
ஒவ்வொரு சட்டைக்கும் H&M 0.60 யூரோ லாபம் சம்பாதிக்கிறது.
ஜெர்மன் அரசு 19 சதவீதம் மதிப்புக் கூடுதல் வரி (வாட்) மூலம் விற்பனை விலையில் 0.79 யூரோக்களை கைப்பற்றுகிறது;
எஞ்சிய 0.16 யூரோ இதர செலவுகளுக்கு செல்கிறது.16
இவ்வாறாக, “விற்பனை விலையிலிருந்து பெறப்படும் வருமானத்தில் பெரும்பகுதி, வரிகளாக அரசுக்கும், ஜெர்மனியின் பலதரப்பட்ட தொழிலாளர்கள், மேலாளர்கள், கட்டட உரிமையாளர்கள், மற்றும் நிறுவனங்களுக்கு செல்கின்றது“. மலிவான சட்டைகளும், இறக்குமதி செய்யப்பட்ட பலவகையான பண்டங்களும், ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் கிடைப்பதோடு, அந்நாடுகளின் அரசுக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானத்துக்கான முக்கிய தோற்றுவாயாகவும் உள்ளன.”
குறைந்த கூலியை எதிர்த்து போராடும் வங்கதேச தொழிலாளர்கள்
வங்கதேச தொழிற்சாலை ஒரு நாளைக்கு 1.25 லட்சம் சட்டைகளை உற்பத்தி செய்கிறது. அவற்றில் பாதி H&M-க்கும் எஞ்சியவை பிற மேற்கத்திய நுகர்பொருள் விற்பனை நிறுவனங்களுக்கும் விற்கப்படுகின்றன. 85 சதவீதம் பெண்களால் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 10-12 மணி நேரத்திலான ஒரு வேலை நாளுக்கு €1.36 கூலி பெறுகின்றனர். ஒவ்வொரு தொழிலாளியும் இயக்கும் எந்திரம் மணிக்கு 250 சட்டைகளை உற்பத்தி செய்கிறது, அல்லது தொழிலாளியின் கூலியில் ஒவ்வொரு 0.01 யூரோவுக்கும் 18 சட்டைகள் உற்பத்தியாகின்றன.
இந்த ஆலை வங்க தேசத்தில் உள்ள 35 லட்சம் பேரை உற்பத்தியில் ஈடுபடுத்தியுள்ள 4,500 ஆடை நிறுவனங்களில் ஒன்று. “ஏகாதிபத்திய நாடுகளில் பல தரப்பட்ட விற்பனை உதவியாளர்கள், சுமை வண்டி ஓட்டுனர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், கணக்காளர்கள், விளம்பர அலுவலர்கள் மற்றும் விரிவான மக்கள் நல வழங்கல்கள், மற்றும் பலவும் எப்படி சாத்தியமாகின்றன என்பதற்கு இந்தக் குறைந்த கூலிகள் பகுதியளவு விளக்கம் தருகின்றன” என்று கூறுகிறார் நார்ஃபீல்ட். வங்கதேசத்தின் கூலி அளவுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவுதான், ஆனால் ஒப்பீட்டளவில் அதிகக் கூலி மட்டம் நிலவும் மற்ற மூன்றாம் உலக நாடுகள் பற்றிய ஆய்வுகளும் இதே மாதிரியான முடிவுக்கே நம்மை இட்டுச் செல்கின்றன : ஒப்பீட்டளவில் ஏழை நாடுகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது, பணக்கார நாடுகளின் மக்களுக்கு நேரடி பொருளாதார ஆதாயத்தை அளிக்கிறது.17
தம் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு எதிராக போலீசு காவலில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் ! வேறு வழியின்றி நீதிமன்றக் காவலுக்கு திருப்பி அனுப்பியது போலீசு !
கடந்த 29.06.2018 அன்று, தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3-ல், வழக்கறிஞர் வாஞ்சிநாதனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தூத்துக்குடி போலீசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற எண் 317/ 2018 – ஸ்டெர்லைட் குடியிருப்பில் ஹோண்டா சிட்டி கார் எரிப்பு வழக்கில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க, அன்றைய தினம் (29.06.2018) மாலை 4 மணி முதல் திங்கள்கிழமை (02.07.2018) காலை 11 மணி வரையில் அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து, போலீசு காவல் விசாரணையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை, டி.எஸ்.பி. முத்தமிழ், ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர், வேறு சில வழக்கறிஞர்களோடு அவர் பேசியதாக ஒத்துக் கொள்ளக் கூறி வற்புறுத்தியிருக்கின்றனர். மேலும் இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத வகையில், அவரை மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கின்றனர்.
நீதிமன்றக் காவலுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
1 of 3
இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஒத்துழைக்க மறுத்திருக்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். தனி நபராக தமது ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கியுள்ளார். மேலும் கடந்த சனிக்கிழமை (30.06.2018) அன்று காலை 7 மணி முதல் சிப்பி போலீசு நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக வழக்கறிஞர் வாஞ்சிநாதனை (30.06.2018) அன்று தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2-ல் நேர்நிலைப்படுத்தி, அவரை மீண்டும் நீதிமன்றக் காவலுக்கே இரவு 8 மணிக்கு திருப்பி அனுப்பி வைத்தது.
தகவல்:
ஜிம்ராஜ் மில்டன்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.
மேற்படி மனுவை சாக்காக வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பைப் பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி, என பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்க தக்கது. பாசிச இந்துத்வா கொள்கையை வைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி தீவிரவாதம், பயங்கரவாதம் என பேசுவது, வேடிக்கையானது.
மீனவ பிரதிநிதிகள் கொடுத்த புகார் மனுவில்……
“காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம்.
தற்போது அந்த 2 வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.
‘‘தூத்துக்குடி வன்முறை சம்பவத்துக்கும் மீனவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டி மே 22 போராட்டத்தில் பங்கேற்க செய்தனர்’’ என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் 29-6-2018 அன்று மனு அளித்தனர்“.
மொத்த மனுவின் சாரம் மேற்கண்ட சில வரிகள்தான்.
நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்து, யாரை வேண்டுமானாலும் கைது செய்கிறது போலீசு. ஸ்டெர்லைட்டைவிட அதிக ஆபத்து போலீசின் இந்த அடக்குமுறைதான். ஒரு சில மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும், மக்கள் அதிகார அமைப்பின் மீதும் அவதூறு பிரச்சாரத்தை போலீசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மே 22 போராட்டம் மீனவ அமைப்புகள் முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை. மீனவ சங்க பிரதிநிதிகள் கொடுத்த மனுவில் போலீசின் தற்போதைய அடக்குமுறையை கண்டித்து, துப்பாக்கிச்சூடு படுகொலையை கண்டித்து ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்த புகாரை கொடுக்கவில்லை. இரு வழக்கறிஞர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அல்ல. போலீசு தனது பித்தலாட்ட நடவடிக்கையை நியாயப்படுத்த அவ்வாறு இட்டுகட்டி பரப்பி வருகிறது.
போராடும் மக்களுக்கு உண்மையாக உதவியதற்காக இன்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எண்ணற்ற வழக்குகளில் போலீசின் சித்ரவதையில் பாளையம் கோட்டை சிறையில் உள்ளார். எப்போது வெளியே வருவார் என தெரியாது. எதையும் செய்யத் தயங்காத போலீசார் உயிரோடு விடுவார்களா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. பல கோடிகள் புரளும் மதுரை பல்கலைகழக துணைவேந்தரை உச்சநீதிமன்றம் வரை சென்று பணி நீக்கம் செய்தவர் வாஞ்சிநாதன். வழக்கறிஞர் தொழிலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் திறமை உடையவர்.
வழக்கறிஞர் அரிராகவன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். நீதிமன்றத்தில் அவரை பற்றி விசாரித்துப் பாருங்கள். மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை செயல்பாடு பற்றி தமிழக மக்கள் அறிவார்கள். இந்நிலையில் போலீசார் சொல்வதை வேறு வழியில்லாமல் புகாராக கொடுத்த மீனவ பிரதிநிதிகளின் மனுவை அப்படியேஅனைத்து பத்திரிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு போல் வெளியிட்டதன் நோக்கம் நேர்மையற்றது.
மே 22 போராட்டம் தூத்துக்குடி மக்கள் நடத்திய மாபெரும் தன்னெழுச்சி போராட்டம். ஜல்லிகட்டுபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக பெரும் மக்கள்திரள் அமர்ந்து விட்டால் என்ன செய்வது?. அதனால்தான் ஸ்டெர்லைட்டும், போலீசாரும் திட்டமிட்டு வன்முறை வெறியாட்டத்தை நடத்தி போராட்டத்தை முடித்து உள்ளனர். தமிழகத்தில் இனி யாரும் எதற்கும் போராடக்கூடாது என்பதன் அச்சுறுத்தல்தான் தூத்துக்குடி மாடல் துப்பாக்கிசூடு படுகொலை மற்றும் அதன்பிறகான போலீசின் அடக்குமுறைகள்.
இந்த படுகொலை குற்றத்தை திசை திருப்ப யார்மீது பழிபோடுவது என ‘பொறியில் அகபட்ட எலி’யாக தூத்துக்குடி போலீசு துடிக்கிறது. தென் மாவட்டங்களில் மக்கள் அதிகார அமைப்புத் தோழர்களை, ஏறத்தாழ அனைவரையும் மோசடியாக ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜோடித்து எழுதி வைத்துக்கொண்டு வீடுவீடாக வேட்டையாடி வருகிறது. 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் உள்ளிட்டு ஆறு தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், இரண்டு தோழர்கள் மீது 52-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது. என்.எஸ்.ஏ. சரவணன் என்ற கூலித்தொழிலாளி, வலிப்பு நோயால் அவதி பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சையின்றி சித்ரவதையை அனுபவத்து வருகிறார். அவரை ஈவு இரக்கமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளார்கள்.
மக்கள் அதிகாரத் தோழர்கள் எந்த வன்முறை தீ வைப்பு சம்பவத்திலும் ஈடுபடவில்லை. எந்த ஆதாரத்தையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யோ, அல்லது பா.ஜ.க அமைச்சர் பொன்னாரோ காட்ட முடியாது. தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பா.ஜ.க. அதிமுக தவிர தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அங்கு சென்று ஆதரித்தார்கள். எந்தப் பாகுபாடு, வேறுபாடுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இதில் மூளைச்சலவை எங்கு வருகிறது? வெளியிலிருந்து தூண்டுவது எங்கு வருகிறது? இதில் யார் சமூக விரோதிகள்? ஸ்டெர்லைட்டை மூடி விட்டார்கள் என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் பா.ஜ.க பொன்னாருக்கு ஒருவிதமாகவும், ஜக்கி வாசுதேவ், பாபா ராம் தேவ் சாமியாருக்கு வேறுவிதமாகவும் வெளிப்படுகிறது.
பா.ஜ.க. அமைச்சர் “ பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக வலம் வருகின்றனா். அரசியல் கட்சிகளிலும் பயங்கரவாதிகள் நுழைந்து இருக்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தால் வேறு பெயரில் செயல்படுவார்கள் அதனால் அவா்களை கரு அறுக்க வேண்டும். வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்” என தூக்கத்தில் நடக்கும் வியாதி போல் பிதற்றிவருகிறார்.
மீத்தேன், கெயில், சேலம் விமான நிலைய விரிவாக்கம், எட்டுவழிச்சாலை, சாகர்மாலா, ஆகியவற்றால் பாதிக்கபட்ட மக்கள் போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக சென்று ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முடியாத இந்த பாசிச கோழைகள்தான், மக்களோடு மக்களாக நின்று போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகளை பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி என பீதியூட்ட முயல்கிறார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் சதி வழக்கை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கட்டும். கொலைகார போலீசே கொலைக்கான காரணத்தை விசாரிக்கிறது. ஸ்டெர்லைட்டிடம் கோடிகணக்கில் பணம் பெற்ற பா.ஜ.க கட்சியை சார்ந்த அமைச்சர் தீவிரவாதம், பயங்கரவாதம் என போலீசை உசுப்பேற்றி விடுகிறார். இதன்மூலம் அனைத்து மக்கள் போராட்டங்களையும் போலீசு அடக்கி ஒடுக்க வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார்கள். பொது அமைதிக்கு, பொது ஒழுங்குக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தால்தான் தமிழகத்தில் அமைதி நிலவும். அதற்காக அனைவரும் போராட வேண்டும்.
இப்படிக்கு, வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
பேச: 99623 66321
கடந்த ஜூன் 18-ம் தேதியன்று சேலம் 8 வழிச்சாலை பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 தோழர்களை பென்னாகர போலீசு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தோழர்கள் மீது, மக்களை வன்முறைக்குத் தூண்டியதாகவும், மிரட்டி பணம் வசூலித்ததாகவும் பொய் குற்றச்சாட்டைக் கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் பத்திரிகைகள் மூலமாகவும் இந்த அவதூறுகளைப் பரப்புகிறது போலீசு .
மக்கள் அதிகாரம், மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்காகவும், அரசிடம் அனுமதி பெற்று ஜனநாயக ரீதியில் தொடர்ந்து பிரசாரமும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தும் ஓர் ஜனநாயக அமைப்பு; அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வினை மக்களிடத்தில் தெளிவாக எடுத்துரைக்கின்ற அமைப்பு.
சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக கதறியழும் மக்கள்
பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கு அடிபணிந்து, அதனால் சொந்த நாட்டு மக்களையே காவு வாங்கும் அரசை எதிர்த்து மக்கள் அதிகாரம் மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக அமைப்புகள், முற்போக்கு சக்திகளுமே கேள்வி எழுப்புவார்கள். இந்திய அரசியல் சாசன சட்டப்படி, கருத்துகளை வெளியிட முழு உரிமையும், சுதந்திரமும் நாட்டு மக்களுக்கு உண்டு. அதைத்தான் மக்கள் அதிகாரம் செய்து வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் இப்பொழுது சேலத்தில் வலுக்கட்டாயமாக நிலங்களை பறித்து அமைக்கப்படவிருக்கும் எட்டுவழி சாலை வரை மக்கள் அதிகாரம் உள்ளிட்டு அனைத்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறன்றன.
ஆனால், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்களை மட்டும் வலுக்கட்டாயமாக கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்து மக்களிடத்தில் ஒரு பீதியை உண்டாக்குகிறது போலீசு.
கடந்த மாதம் மே22-ல் தூத்துக்குடியில் போலீசால் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், யாருக்காக கொல்லப்பட்டார்கள்?, ஆகிய கேள்விகளை மக்கள் முன் வைக்கின்றனர். புற்றுநோயை உண்டாக்கும் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டுமென 22 வருடங்களாக மக்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். மக்களுக்கு ஒரு பிரச்சினை எனில் அவர்களுடன் கைகோர்க்க வேண்டியது அனைத்து முற்போக்கு அமைப்புகளின் கடமை. அவ்வாறு கைகோர்த்தால் தேசிய பாதுகாப்பு சட்டமும், பயங்கரவாத தடுப்பு சட்டமும் பாய்கிறது எனில், இந்த அரசு யாருக்காக இருக்கிறது?
சேலத்தில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், எட்டு மலைகள், நூற்றுக்கணக்கான ஏரிகள், குளங்களை அழித்து விட்டு எட்டு வழிச்சாலையை அமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் மக்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு வருகின்றன.
பல இலட்சம் மரங்கள் அழியப் போவதை கருத்தில் கொண்டு 277 கிமீ தொலைவிற்கு 3 இலட்சம் மரக்கன்றுகள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலைக்காக பல லட்ச மரங்கள் அழிக்கப்பட்டன. அதற்காக இன்னும் ஒரு செடியைக்கூட இந்த அரசு நடவில்லை. அதே போல திண்டிவனம்-செஞ்சி-கிருஷ்ணகிரி வழி நெடுஞ்சாலை அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக போராடி வரும் மக்களிடம் நிதி இல்லை எனும் அரசு, தற்போது 10 ஆயிரம் கோடி செலவில் யாருக்காக இயற்கை வளங்களை எல்லாம் அழித்து யாருடைய நலனுக்காக இந்த எட்டு வழி சாலையை அமைக்க போகிறது?
நில ஆக்கிரமிப்பை முன்நின்று நடத்தும் ’யோக்கியர்’ சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி
ஜிண்டால் நிறுவனத்தின் இரும்புத்தாது கொள்ளைக்காக தன் சொந்த நாட்டு மக்களை கதறவிட்டு வேடிக்கை பார்க்கிறது அரசு. கடந்த 11.06.2018 அன்று குறைதீர்ப்பு கூட்டம் நடத்தாமல், மக்களிடம் கருத்துக் கேட்காமல் சட்டம் கூறும் அனைத்து அரசு சட்டவிதிமுறைகள் மீறி சேலத்தில் நில அளவிடும் பணியை மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் நடத்தியது, சேலம் மாவட்ட நிர்வாகம்.
கண்ணீர் விட்டு கதறும் மக்களை நாயைப் போல விரட்டுகிறது. அரசுக்கு எதிராக யார் போராடினாலும் தன் அதிகாரத் திமிரைக் காட்டி ஒடுக்குகிறது. அதன் அடிப்படையிலேயே நடிகர் மன்சூர் அலிகான், மாணவி வளர்மதி ஆகியோரை சிறை பிடித்திருக்கிறது.
போராடும் மக்களிடத்தில் யார் நெருங்குகிறார்களோ, யார் அவர்களுக்காக நிற்கிறார்களோ, அவர்களை கூண்டோடு ஒழித்துக்கட்டும் வேலையைச் செய்கிறது, போலீசு. அந்த அடிப்படையில்தான் பென்னாகரம் மக்கள் அதிகாரம் தோழர்களை, ”சமூகவிரோதிகள்” போன்ற தோற்றத்தை உண்டாக்கி கைது செய்திருக்கிறது. மேலும் பத்திரிகைகளிடமும் தனது அதிகாரத்தை காட்டியிருக்கிறது போலீசு.
கடந்த 18.06.2018 அன்று, மாலையில் வெளிவந்த தமிழ் முரசு, மாலை மலர், அதற்கு அடுத்த நாள் வெளியான ’தி இந்து’ தமிழ் நாளேட்டிலும் மக்கள் அதிகார அமைப்பினர் மக்களை மிரட்டி பணம் வசூலித்ததாகவும் அதனால் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யபட்டதாகவும் தகவலை வெளியிடும்படி மிரட்டியுள்ளது. அந்த ஊடகங்களும் வெட்கங்கெட்ட முறையில் அந்த அவதூறுகளை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் அதிகார அமைப்பு மக்களிடத்தில் நன்கு செல்வாக்கு பெற்று வரும் அமைப்பு. அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்ற அமைப்பு. இதனால்தான் காவல்துறை பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்களிடம் நெருங்குவதை தாங்க முடியாமல் இவர்கள் சமூக விரோதிகள் என்று பீதியை பரப்புகின்றனர். பத்திரிக்கைகளிலும் அப்படி செய்தி வெளியிடக் கூறி மிரட்டுகின்றனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பு மக்களுக்காக உயிரையும் தியாகம் செய்கிற அமைப்பு. தொடர்ச்சியாக மக்களுக்காக போராடக் கூடிய முற்போக்கான அமைப்பு. பத்திரிகைகள் மக்களைத் தாங்கும் பாலம் போன்றவை. ஆகவே, அரசு தவறிழைக்கும்போது அதை அரசிற்கு எடுத்துக் கூறும் கடமை பத்திரிகைகளுக்கு உள்ளது. மக்கள் அதிகாரம் பற்றி போலீசு தரும் தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம். போலீசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் மக்களின் பக்கம் நிற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்: முத்து குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
பேச: 90477 85572
சென்னை பட்டினப்பாக்கம், சாந்தோம் கடற்கரையை ஒட்டியுள்ள சீனிவாசபுரம் மீனவர் குடியிருப்பில் கடல் சீற்றத்தால் கடந்த பத்து நாளில் (ஜூன் 2018) ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி இருக்கின்றன. மீனவர்கள் வீடிழந்து பல நாட்களாகியும் அமைச்சர்களோ, அதிகாரிகளோ எட்டிக் கூட பார்க்கவில்லை. அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் தமிழகத்தின் மொத்த அ.தி.மு.க. அமைச்சர்களும், அதிகாரிகளும், நீதிபதிகளும் வசிக்கும் கிரீன்வேஸ் சாலை உள்ளது. ஆனாலும் மீனவர்களின் ஓலம் யாருக்கும் கேட்காமல் கடலோடு கரைந்து போனது. அதை நாமாவது கேட்போம்!
குமுதா: “வருஷா வருஷம் எங்களை கடல் காவு வாங்குது. குடிச வீட்ல குடியிருந்தப்ப எங்கள அக்னிதேவன் வந்து அள்ளிக்கினு போனான். அப்புறம் அங்க இங்கனு ஓடி கடன-உடன வாங்கி ஓடு போட்டோம்………இப்ப ஓட்டு வீட்டையும் கடலம்மா விட்டு வெக்கல. நாங்க வாழத் தகுதி இல்லாதவங்கன்னு தெரிஞ்சிருச்சி போல. அதான் கடலு இப்பிடி வாரிக்கினு போவுது” என்று படபடவென பேசினார் மீனவ மூதாட்டி குமுதா.
பட்டினப்பாக்கம் சீனுவாசபுரம் என்பதெல்லாம் இப்ப வந்த பேரு. அதுக்கு முன்ன முல்லைக்குப்பம், பத்து மோடு கிராமம். முதல்ல குவாட்டர்ஸ் காமராஜர் காலத்துல கட்டினது. 70-ல கலைஞரும் இங்க குடியிருப்பு கட்டினாரு. அதுக்கப்பால இப்ப ஐம்பது வருஷம் ஆவுது. நானே இங்க மூனு தலைமுறை பார்த்துட்டேன். 5 பேரு 6 பேரு இருந்த குடும்பம் இப்ப 30 பேரு ஆயிட்டோம். கொள்ளுபேரன், பேத்தினு அவங்க கல்யாணத்தயும் பார்த்துட்டேன். இவ்வளவு பேருக்கும் யாரு வேல கொடுக்கிறான். கவர்மெண்ட்டா? கடலம்மா தான் எங்களுக்கு சோறு போடுறா… வலை எடுத்து கடலுக்கு போனாத்தான் பொழப்பு. அதான் கடல் மடியிலயே வாழறோம்.
எங்க பேரே பிஷர்மேன் தானே. கடல்ல இல்லாத கரையில எங்களுக்கு என்ன வேலை. ஆனா கடலும் இப்ப கைவிரிச்சுடுச்சி! எங்களுக்கும் வீடு கொடுத்து கவருமெண்டு வேலை கொடுத்தா கரைக்கு வரதுக்கு கசக்குமா என்ன?
தொழிலு இல்ல. பேர பசங்கள படிக்க வைக்க முடியல. பேத்திங்கள கட்டிக் கொடுக்க முடியல. நான் சோறு போட்டு வளர்த்த பசங்க எனக்கு சோறு போட முடியாம தவிக்கிறாங்க. இட்லி கடை போட்டு ஏதோ காலத்த ஓட்டுறேன்.
இந்திரா:
ரேசன் பொருளக்கூட வாங்க வழி இல்லாம கெடக்குறோம். அரிசிதான் ஓசி. பருப்பு, பாமாயிலு பணம் கொடுத்தா தானே வரும். இரண்டு லிட்டர் கிருஸ்னாயிலுக்கு 28 ரூபா பணம் இல்லாம வாங்காம விட்டுட்டேன். பசங்களும் வீட்டுல சும்மா இல்ல. கடல்ல தொழில் இல்லன்னு ஆட்டோ ஓட்டுறதுக்கு, கம்பனி வேலைக்கு, செக்குரிட்டி வேலைக்கினு எங்க போனாலும் பத்தல.
தேவி: காசிமேட்டுக்கு போயி மீனு வாங்கியாந்து தெருவுக்கு போவோம். இருநூறு, முந்நூறு கெடைக்கும். குடும்ப செலவு, பசங்க செலவுன்னு தள்ளிக்கினு போவும். இப்ப கடல் சீற்றத்துல வீடு இடிஞ்சி விழுந்துடுச்சி. நாலு நாளா தூக்கம் இல்ல…… சோறும் எறங்கல..… என்ன பன்றதுன்னு தெரியாம பித்து புடிச்சி அலையுறோம். கலெக்டர் ஆபிஸ், மந்திரி ஜெயக்குமார் ஆபிசுன்னு ஓடுறோம். எங்க போயும் வழிதான் பொறக்கல.
மாரி: கடல்ல தொழிலு இல்லாதப்ப. டெலிவரி வேலை செஞ்சேன். மில்கி பிரட் பிஸ்கட் கடை கடையா போடுவேன். ஜிம்முக்கும் போவேன். பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். உடம்பு இருந்தாலும் போலிசு வேலைக்கு போறதுக்கு எனக்கு பிடிக்கல. காதுல கம்மல் போடக்கூடாது, ஸ்டைலா முடி வெட்டக்கூடாதுன்னு அங்க போடுற கண்டிஷன்லாம் நமக்கு ஒத்து வராது. டிரைவர் வேலை மேல ஆசை. ஆனா, டச் இல்ல. சீக்கிரம் போயிடுவேன். சுனாமி வந்தப்ப எங்க ஆயாதான் என்ன இடுப்புல வச்சிக்கினு கூரமோட்ட புடிச்சி காப்பாத்துச்சி. எங்க அம்மா இல்ல.. செத்துடுச்சி….. எல்லாம் ஆயாவுக்காத்தான்….!
ரோசம்மா: சுனாமில தப்பிச்சவ நான். இப்பவும் என் பேரன் பேத்திங்களுக்காகத்தான் வாழரேன். வீடு விழுந்ததால பக்கத்து அக்கத்து வீடுகள்ல ஒண்டிக்கினு வாழுறோம். யாரும் வர்ல. எதுவும் செய்யல.. குழந்தைங்க பசி தாங்குமா? அதான் வெளியில கல்லு வச்சி சோறு ஆக்குறேன். நல்லவேல வீடு பகல்ல விழுந்துச்சி.. ராத்திரின்னா கொழந்தைங்க எல்லாம் செத்திருக்கும். வயசான காலத்துல எ….. வூட்டுக்காரு அம்பது வருசமா கடலுக்கு போனவரு……. இப்ப மாவு அரைக்குர எடத்துக்கு வேலைக்கு போயி.. ஏதோ..கொடுத்தாரு… மிசின்ல அடிபட்டு காலு எல்லாம் புண்ணு. வைத்தியம் பாக்க முடியல…..அதுக்குள்ள இன்னொரு வேதனை வந்துடுச்சி !
செந்தில்: கடலுக்கு போயி பல மாசம் ஆவுது. தொழிலு சரியா இல்ல. அதனால இப்ப பெயிண்டிங் வேலைக்கு போறேன். அதுவும் வாரத்துல இரண்டு நாள் கூட கிடைக்க மாட்டேன்னுது.. அதுக்கும் வட நாட்டுக்காரங்க வந்துட்டாங்க. 7,8 பேரு ஒரு ரூம்ல தங்கிக்கினு 350 ரூபா கொடுத்தாலே போதும்னு செய்யுறாங்க. கரையிலயும் வாழ முடியல.
பாதிக்கப்பட்ட வீடுகள்
1 of 6
முத்துமணி: சீற்றத்துல இடிஞ்ச வீட்ல இருந்து கட்டிக்க துணி கூட எடுக்க முடியில. சட்டுனு எல்லாம் அலையில இழுத்துக்கிச்சு. கொஞ்ச நேரத்துல மண்ணும் மூடிப்போச்சி. இதுவரைக்கும் அதிகாரிங்க யாரும் வரல. இங்க ஒரு சமூதாயக் கூடம் இருக்கு. அதைக்கூட தொறந்து விடல. நாங்க மொத்தமா அங்க தங்கினா வெளியில தெரியும். அது பத்திரிக்கையில வரும் டிவியில போடுவாங்க. அதனால எங்கள தனித்தனியா அலைய விட்டுட்டாங்க. படுக்க இடம் இல்ல.
சரவணன்: கடல்ல வேல இல்லாததால கரையோரத்துலயே அலையில அடிச்சிகினு வர வெள்ள நண்டுகளையும், எலி பூச்சியையும் புடிச்சி விப்பேன். புள்ளதாச்சி பொம்பளைங்களுக்கு அது டானிக் மாதிரி மருந்து. கடல் சீற்றத்துல வீடுங்க விழுந்து போனதால ஜனங்க அலை மோதுதுங்க. வாடகை இருந்தவங்க திடீர்னு எங்க போறதுன்னு தெரியாம குழந்தைங்களோட ரோட்டுல நிக்குறாங்க. நீங்கதான் எதாவது வழி பண்ணனும்.
வெண்ணிலா: பொறந்ததுல இருந்து கடல்தான் எங்களுக்கு. இங்கதான் எங்களுக்கு உழைக்க தெரியும். வெளியுலகத்துக்கு போயி பொழக்கிற தெறம எங்களுக்கு கிடையாது. ஓட்டுக்கேட்டு MLA, MP-ன்னு எவ்ளோ பேர் வந்தானுங்க. இப்ப காப்பாத்த எவனும் வர்ல… வரவனுங்களும் பிச்சை போடுறதுக்குதான் வருவானுங்க. பண்ணு, பழம் எடுத்துக்கினு நோயாளிங்கள வந்து பாக்கிற மாதிரி பார்ப்பானுங்க. வேற ஒன்னும் செய்ய மாட்டானுங்க.
ஆயிஷா, அம்மு, மலர், விஸ்வநாதன்: எங்களுக்கு தெரிஞ்சது கடல்தான். இங்க ரொம்ப பாதுகாப்பு இல்லன்னாலும் கெடக்கிறத வச்சி புள்ள குட்டிகளோட வாழ்ந்தோம். இப்ப தெருவுக்கு வந்துட்டோம். வீடும் போயிடுச்சி. தொழிலு இல்லாம அரை வயிறு கஞ்சி குடிச்சாலும் குழந்தை குட்டிகளோட இங்கயே நிம்மதியா செத்துடலாம்னு பார்த்தோம். அதுக்கும் வழி இல்ல.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வரும் ஜூலை 1,2018 அன்று (ஞாயிற்றுக் கிழமை) மணப்பாறையில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இரங்கல் கூட்டம்
நாள்: ஜூலை 1, 2018, மாலை 5.30 மணி.
இடம் : மகாலட்சுமி திருமண மண்டபம், விராலிமலை ரோடு, மணப்பாறை.
தலைமை : தோழர். வை.கண்ணன், மக்கள் அதிகாரம், மணப்பாறை.
உரையாற்றுவோர் :
திரு. துரை காசிநாதன், தலைமைக் கழக பேச்சாளர், திமுக. தோழர் த.இந்திரஜித், MA.,LLB., மாநில நிர்வாக குழு உறுப்பினர். CPI. தோழர் இரும்பொறை ச.பிச்சை, நகர தலைவர். திராவிடர் கழகம், மணவை. வழக்கறிஞர் ஆனந்த் முனிராஜ் BABL., சாதி பகைவன் நண்பர்கள் குழு. திண்டுக்கல் திரு. சூர்யா சுப்பிரமணியம், சூர்யா கேட்ரிங் கல்லூரி, வையம்பட்டி. திரு. மணவை தமிழ் மாணிக்கம், MA, மாநில மாணவரணி செயலாளர், மதிமுக. திரு. MP. ஆறுமுகம், நகர செயலாளர், ஆதி தமிழர் பேரவை, மணவை. வழக்கறிஞர் தமிழ்மணி, BABL, சமூக ஆர்வலர், மணவை. வழக்கறிஞர் சதாசிவம், BABL, சமூக ஆர்வலர்.
ம.க.இ.க கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி
தொகுப்புரை : தோழர் ராஜா, மக்கள் அதிகாரம், திருச்சி
நன்றியுரை :
தோழர் முரளி, மக்கள் அதிகாரம், மணவை. அனைவரும் வருக !
தகவல்:
மக்கள் அதிகாரம், மணப்பாறை. தொடர்புக்கு: 98431 30911
மார்க்ஸ் பிறந்தார் – 14 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
6. “யதார்த்தத்தை இரக்கமற்ற முறையில் விமர்சனம் செய்தல்”
ஒரு அரசாங்கம் மக்களுக்கு விரோதமாக இருக்குமானால் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் – “நல்லவை” கூட- எதிரானவையாக மாறிவிடுகின்றன. “சட்டத்தை” அமுலாக்க முயற்சிக்கின்ற பொழுது அது அராஜகத்தை, சட்டத்தை மீறலைத் துணையாகக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது. அது தான்தோன்றித் தனத்தைச் சட்டத்தின் நிலைக்கு உயர்த்துகிறது.
பத்திரிகைகள் விமர்சனம் செய்கின்ற உரிமையை அது பறிப்பதனால் அரசாங்க அதிகாரிகளின் மீது விமர்சனக் கடமையைச் சுமத்துகிறது, “தனிநபர்களே” ஆதரிப்பதன் மூலம் அது தனிநபரைக் கீழிறக்குகிறது; அந்தத் தனிநபர் சொந்தக் கருத்தை வைத்துக் கொள்கின்ற உரிமையைக் கூடப் பறித்து விடுகிறது.
தேசிய உணர்ச்சியை அதிகப்படுத்த முயற்சிக்கும் பொழுது அது “தேசிய இனத்தை அவமதிக்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.” அரசாங்க ஆணை “அதிகாரிகளிடம் அளவுக்கு மீறிய நம்பிக்கையைக்” கோருகிறது; “அதிகாரிகள் அல்லாதவர்களிடம் அளவுக்கு மீறிய அவநம்பிக்கையிலிருந்து முன்னே செல்கிறது”.
பிரஷ்ய அதிகாரி “பாதுகாவலர்” என்ற பாத்திரத்தில் செயல்படுகிறார், “மூளையைக் கட்டுப்படுத்துகின்ற” பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானத் தகுதியுடைய விஷயங்களைப் பற்றித் தீர்ப்பு வழங்குவதற்கு அவருக்கு விஞ்ஞானத் தகுதி இருக்கிறதா என்பதைப் பற்றி மிகச் சிறிதளவு சந்தேகம் கூட ஏற்படுவதில்லை.(1)
இந்த அதிகாரவர்க்கக் கோட்பாட்டில் அமைந்திருக்கும் கிண்டலை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். சிந்தனையாளர்களைப் பற்றித் தகுதியுடன் மதிப்பிடுவதற்கு அதிகாரி எல்லாத் துறைகளிலும் அவர்களைக் காட்டிலும் உயர்ந்த தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
ஒரு வேளை “அரசாங்கத்துக்குத் தெரிந்த சர்வாம்ச மேதைகள் கூட்டம்” உண்மையாகவே பிரஷ்யாவில் வசிக்கலாம். அப்படியானால் இந்தக் “கலைக்களஞ்சிய மேதைகள்” எழுத்தாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் ஏன் முன்வருவதில்லை?
எண்ணிக்கையில் ஏராளமாகவும் விஞ்ஞான அறிவினாலும் மேதாவிலாசத்தினாலும் மாபெரும் பலமுடையவர்களாகவும் இருக்கின்ற இந்த அதிகாரிகள் சமூக மேடையில் தோன்றி பரிதாபகரமான எழுத்தாளர்களைத் தங்களுடைய கணத்தினால் ஏன் நசுக்கவில்லை?
சிந்தனைத் துறையில் ஒழுங்கை பாதுகாப்பவர்களை நியமித்து, அவர்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற இந்த அதிகாரிகளின் மேதாவிலாசம் இன்னும் எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்? “இந்த அறிவின் அதிகாரவர்க்கத்தில் எவ்வளவு மேலே நாம் போகிறோமோ அந்த அளவுக்கு நாம் சந்திக்கின்ற மூளைகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.”(2)
ஒரு அதிகாரவர்க்க, போலீஸ் அரசில் எல்லாத் தணிக்கைக்கும் மேலே இன்னொரு உயர்ந்த தணிக்கை இருக்கிறது; ஒவ்வொரு அதிகாரியின் எதேச்சாதிகாரமும் அவருக்கு மேலே இருக்கின்ற அதிகாரியின் எதேச்சாதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அத்தகைய அமைப்பில் “மூன்றாவது அல்லது தொண்ணூற்று ஒன்பதாவது கட்டத்தில் சட்டத்தை மீறல் தொடங்குவது”(3) தவிர்க்க முடியாதது. அதிகாரவர்க்க அரசு இந்தத் துறையை நம் கண்களுக்குத் தெரியாமலிருக்கும்படி மிகவும் உயரத்தில் வைப்பதற்கு முயற்சி செய்கிறது.
“தணிக்கை முறையை ஒழிப்பதே அதற்குத் தீவிரமான மருந்து; ஏனென்றால் அந்த அமைப்பே மோசமானதாகும்.”(4) என்ற இயற்கையான முடிவுக்கு இந்தப் பகுப்பாய்வு மார்க்சை இட்டுச் சென்றது.
முதலாளித்துவ அரசின் “அதிகாரவர்க்க” இயந்திரத்தை அழிக்க வேண்டிய அவசியத்தை மார்க்ஸ் இங்கே போதிக்கவில்லை; ஆனால் அந்தக் கருத்தை மிகவும் நெருங்கி வருகிறார்.
மார்க்ஸ் தன் முதிர்ச்சிக் காலத்தில் தணிக்கை அரசாணையைப் பற்றிய இந்தக் கட்டுரையை மிக உயர்வாக மதிப்பிட்டார் என்பது 1851ம் வருடத்தில் வெளிவரத் தொடங்கிய அவருடைய கட்டுரைகளின் தொகுப்பில் முதல் கட்டுரையாக அதை வைத்தார் என்பதிலிருந்து விளங்கும் (முதல் தொகுதி வெளியான பிறகு அரசாங்க நிர்ப்பந்தம் காரணமாக இப்பதிப்பு நிறுத்தப்பட்டது).
அக்கட்டுரை மிகவும் தீவிரமான முறையில் எழுதப்பட்டிருந்தபடியால் அதை ஜெர்மனியில் அச்சடிக்கின்ற பேச்சுக்கே இடமில்லை. மார்க்ஸ் எதிர்பார்த்ததைப் போல தணிக்கை முறை அக்கட்டுரையைத் தடை செய்தது; அதன் மூலம் அக்கட்டுரையில் அதைப் பற்றி எழுதப்பட்டிருந்த வர்ணனை எவ்வளவு துல்லியமானது என்பதை நிரூபித்தது. அக்கட்டுரை முதல் தடவையாக 1843-இல் ஸ்விட்சர்லாந்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் 1842ம் வருடத்தின் வசந்தகாலத்தில் Rheinische Zeitung பத்திரிகையில் ரைன் மாநில சட்டசபையில் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதங்களைப் பற்றிக் கட்டுரை எழுதினார். அதில் இப்பிரச்சினையை வேறொரு கோணத்திலிருந்து அணுகினார்.
பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி சபையின் உறுப்பினர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக்களுக்கும் அவர்களுடைய சமூக-வர்க்க அந்தஸ்துக்கும் இடையிலுள்ள நேரடியான இணைப்பை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். அவர் பின்பற்றிய புதிய அணுகுமுறை இந்த உண்மையில் அடங்கியிருக்கிறது. இது முன்னே வைக்கப்பட்ட முக்கியமான காலடியாகும்.
பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதத்தில் “சமூகக் குழுக்களின்” நலன்கள் சமரசப்படுத்த முடியாதபடி மோதுவதால், “பொதுவான” சுதந்திரம் இல்லை என்பது தெளிவாயிற்று, ஒவ்வொரு சமூகப் பிரிவும் தன்னுடைய “சொந்த” சுதந்திரத்தை ஆதரிக்கிறது.
முதலாளி வர்க்க, விவசாய வர்க்கக் குழுக்கள் கூட பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றித் தங்களுடைய கோரிக்கைகளின் குறுகிய தன்மையை விளக்கிவிட்டார்கள் என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். முதலாளி வர்க்க பத்திரிகைச் சுதந்திரம்-அது அப்பொழுது பிரான்சில் இருந்த வடிவத்தில்கூட- போதுமான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாக மார்க்ஸ் கருதவில்லை.
பிரெஞ்சுப் பத்திரிகைகள் “ஆன்மிகத் தணிக்கைக்கு உட்பட்டிருக்காவிட்டாலும்… அவை பெருந்தொகைகளைப் பிணையாகக் கட்ட வேண்டியிருப்பதால் பொருளாயதத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன”, அவை “பெரும் வர்த்தக சூதாட்டத் துறைக்குள் இழுக்கப்பட்டிருக்கின்றன.”(5)
இங்கே ஒரு புதிய கருத்து தோன்றுவதைத் தெளிவாகப் பார்க்கிறோம்: “ஆன்மிகத் தணிக்கை” “பொருளாயதத் தணிக்கையை”, முதலாளித்துவச் சமூகத்தின் வர்த்தக – பணவியல் உறவுகளைச் சார்ந்திருக்கின்றது. இக்கருத்து மார்க்ஸ் அடுத்தடுத்து எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும் மேலும் வளர்த்துக் கூறப்படுவதை நாம் காண்கிறோம்.
ஜெர்மானிய மிதவாத அறிவுஜீவிகள் முதலாளித்துவ சுதந்திரங்களைத் தம்முடைய இலட்சியமாகக் கொண்டிருந்தனர்; ஆனால் மார்க்ஸ் அவற்றைத் தன் இலட்சியமாக ஒருக்காலும் கருதவில்லை என்பதை அவருடைய முதல் பத்திரிகைக் கட்டுரையே எடுத்துக்காட்டுகிறது. அவர் ஆரம்பத்திலேயே புரட்சிகர ஜனநாயகவாதியாகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் தீவிரமான முதலாளிவர்க்க மிதவாதிகள் செய்ய முடிந்ததைக் காட்டிலும் அதிக ஆழமான, முரணில்லாத முறையில் ஜெர்மானிய யதார்த்தத்தை விமர்சனம் செய்தார்.
ஒரு முறை சுதந்திரத்தை அனுபவித்த பிறகு ஒரு நபர் அதற்காக “ஈட்டிகளை மட்டுமல்லாமல் கோடரிகளையும் உபயோகித்துப்” போராட வேண்டும் என்று ஹெரடோடஸ் கூறியதை மேற்கோளாகக் காட்டி பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது விவாதத்தைப் பற்றிய தன்னுடைய கட்டுரையை மார்க்ஸ் முடிக்கிறார்.
Rheinische Zeitung பத்திரிகையில் மார்க்ஸ் மேதாவிலாசத்துடன் எழுதத் தொடங்கிய பொழுது அது உண்மையிலேயே பரபரப்பூட்டியது. மார்க்ஸ் தன்னுடைய திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்று நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் திருப்தியடைந்தனர். பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றியும் அதை ஆதரித்தும் இப்படி மிக ஆழமான, நன்கு வாதிக்கப்பட்ட முறையில் இதற்கு முன்பு ஒருபோதும் எழுதப்படவில்லை என்று அ. ரூகே கூறினார்.
Rheinische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் மார்க்சின் செல்வாக்கு இதற்கு முன்பு கணிசமாக இருந்தது. அது இக்கட்டுரைத் தொடருக்குப் பிறகு மிகவும் அதிகரித்துவிட்டபடியால் மார்க்ஸ் அதன் தலைவர்களில் ஒருவரானார். சிறிது காலத்துக்குப் பிறகு அப்பத்திரிகையின் தலைமை ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டார். ரைன் மாநில சட்டசபையில் மரங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் மீது நடைபெற்ற விவாதங்களைப் பற்றி இப்பத்திரிகை 1842 அக்டோபரில் ஒரு புதிய கட்டுரைத் தொடரை வெளியிட்டது.
மார்க்சின் படைப்பாற்றல் நிறைந்த வாழ்க்கையில் இக்கட்டுரைகள் முக்கியமானவையாகும். முதல் தடவையாக அவர் சூக்குமக் கருத்தாக்கம் என்ற வானத்திலிருந்து “உறுதியான பூமிக்கு” வரும்படி, அதாவது ஹெகலின் தத்துவஞான அமைப்பில் இடம்பெறாத பொருளாயத நலன்களைப் பற்றி எழுதும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இந்தச் சமயத்திலிருந்து மார்க்சினுடைய சிந்தனை சமூகத்தின் வர்க்க மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைப் பகுத்தாராய்கின்ற திசையில் செலுத்தப்பட்டது. மரம் திருடப்படுவதைப் பற்றிய விவாதங்களைப் பற்றிய கட்டுரையைப் படிக்கின்ற பொழுது புதிய கருத்துக்களின் “உதயத்தை” அறிவிக்கின்ற முதல் “மின்னல் வீச்சுக்களை” நாம் கற்பனை செய்ய முடிகிறது.
மரங்கள் திருடப்படுவதும் வேட்டையாடுதல் மற்றும் காடுகளைப் பாதுகாத்தலைப் பற்றிய சட்டங்கள் மீறப்படுவதும் பொருளாதார வாழ்க்கையில் அற்பமான விஷயமாகத் தோன்றும். ஆனால் அவற்றுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களைப் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சி பெருந்திரளான ஏழை மக்களின் வறுமை நிலையையும் அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டிருப்பதையும் முழுமையாக எடுத்துக் காட்டியது.
பெரிய நிலவுடைமையாளர்களின் நலன்களுக்குச் சாதகமான முறையில் அடிப்படை மனித உரிமைகள் எவ்வளவு அவமானகரமான முறையில் மீறப்பட்டன, தனிச் சொத்துடைமைக்காக மக்கள் எப்படி பலியிடப்பட்டார்கள் என்பதை மார்க்ஸ் கண்டார்.
“தனிச் சொத்துடைமை” மனித விரோதமானது, அது தனி நபருக்கு எதிராக இருக்கிறது, தனி நபருக்கு எதிராக எல்லாவிதமான குற்றங்களையும் நியாயப்படுத்துகிறது, அது மனிதனை மிருகத்தின் நிலைக்குத் தாழ்த்திவிடுகிறது என்பவை அவருக்கு மிகவும் தெளிவாயிற்று.
குறிப்புகள் :
(1) Ibid., p. 126.
(2) Ibid.
(3)Ibid., p. 131.
(4) Ibid.
(5)Ibid., p. 167.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே) 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்) பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது போலீசு. மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர், அந்த மக்களுக்காக சட்டரீதியில் உதவி புரிந்த பல்வேறு ஜனநாயக சக்திகளையும், வழக்கறிஞர்களையும் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளது போலீசு.
ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினரின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது பல்வேறு பொய் வழக்குகளை புனைந்து அவரைக் கைது செய்துள்ளது போலீசு. இது போக மக்கள் அதிகாரம் தோழர்கள் அறுவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு சிறை வைத்துள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் இன்றும் இளைஞர்களை கைது செய்வதும், வீடு புகுந்து மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த பச்சைப் படுகொலையைக் கண்டித்தும், கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் ஸ்டெர்லைட் படுகொலையைக் கண்டித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் போராடிய மக்கள் மீதான கைது மற்றும் அடக்குமுறையைக் கண்டித்தும் கருத்தரங்கம் நடத்தவிருக்கின்றனர்.
இந்தக் கருத்தரங்கத்தை வழக்கறிஞர் கனகவேல் அவர்கள் நெறிப்படுத்தி நடத்தவிருக்கிறார். இக்கூட்டத்தில்
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி திரு அரிபரந்தாமன்,
மூத்த வழக்கறிஞர்கள் பா.பா.மோகன், அஜ்மல்கான், ஹென்றி திபேன்
ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கின்றனர்.
1 of 2
மேலும் பேராசிரியர்கள் முரளி, சீனிவாசன், வழக்கறிஞர்கள் மோகன்குமார், லஜபதிராய், ராமமூர்த்தி, திருநாவுக்கரசு, அக்பர்பாட்சா, தமிழரசன், ஜான் வின்சென்ட், மாணிக்கம், சாரங்கன், சுப்பு, சந்திரசேகரன், ஜிம்ராஜ் மில்டன், பாரதி, பார்வேந்தன், நாகை திருவள்ளுவன், இன்குலாப், பானுமதி, செந்தில்குமார், பால்ராஜ், ஆனந்த முனிராஜ், முகமது அப்பாஸ்
ஆகியோர் உரையாற்றவிருக்கின்றனர்.
கருத்தரங்க தீர்மானங்களை வழக்கறிஞர் பழனியாண்டி மொழிவார். வழக்கறிஞர் ராசேந்திரன்நன்றியுரையாற்றவிருக்கிறார்.
பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது வலுவான கண்டனக் குரலை பதிவு செய்யுமாறு ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.
தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாதபட்சத்தில் இன்று இந்நிகழ்வு வினவு இணையதளத்திலும், யூ-டியூப் சேனலிலும், ”வினவின் பக்கம்” ஃபேஸ்புக் பக்கத்திலும் நேரலையாக மாலை 4.30 முதல் ஒளிபரப்பப்படும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவேந்தல் கூட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு 28/06/2018 அன்று கோவை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அண்ணாமலை அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தை மக்கள் அதிகாரம் கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை ஏற்றி நடத்தினார். இதில், தோழர் கு.இராமகிருஷ்ணன் (பொது செயலர், த.பெ.தி.க.), தோழர் N.K.நடராஜன் (மாநிலக்குழு உறுப்பினர், CPI ML லிபேரசன்), தோழர் சுசி கலையரசன் (அமைப்பு செயலர், வி.சி.க., கோவை),தோழர் ச.பாலமுருகன் (PUCL), தோழர் துரைசாமி (CPI ML ரெட் ஸ்டார்), தோழர் சி. முருகேசன் (தமிழகம் காப்போம்), தோழர் மாணிக்கம் (தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை), தோழர் மு.கார்க்கி (சமத்துவ கழகம்), தோழர் ஜோதி குமார் (மாநிலகுழு உறுப்பினர் அ.இ.வ.சங்கம்), தோழர் சபாபதி (மாநில துணை பொதுச்செயலர் தமிழ்புலிகள் கட்சி), தோழர் பன்னீர்செல்வம் (சமூக நீதிக் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
1 of 3
கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். குறிப்பாக அரசின் பாசிச அடக்குமுறையை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டிய அவசியத்தை பதிவு செய்தார்கள். மேலும் கோவையில் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதால் ஏற்பட்டுள்ள அபாயத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்றனர்.
மேலும், மிசா காலகட்டங்களில் போராடும் கட்சிகள், இயக்கங்கள் எப்படி தங்களது சிவில் வீரத்தை காட்டினார்களோ அது போல இன்று இந்த அரசின் அடக்குமுறையை எதிர்த்து நாமும் நமது சிவில் வீரத்தை காட்ட வேண்டும். மேலும் மிசா காலகட்டங்களில் போராடுபவர்கள் வெளியில் இருந்தால் நாட்டிற்கு ஆபத்து என்று எங்களை சிறையில் அடைத்தார்கள். ஆனால் இன்று மக்கள் போராடுகிறார்கள். போராடும் மக்களை சமூக விரோதிகள் என்கிறார்கள் தூத்துக்குடிக்காக, சேலம் 8 வழிச்சாலைக்காக, மீத்தேன் திட்டங்களுக்காக. நாம் பேசுவது போல கோவையில் தனியார் நிறுவனத்தின் மூலமாக குடிநீர் விநியோகத்தால் ஏற்படவிருக்கும் பரிதாப நிலை குறித்து உலகமே பேசும் சூழல் வரலாம்.
எனவே நாம் அடங்க மறுக்க வேண்டும், அத்துமீற வேண்டும். கைதுக்கும் சிறைக்கும் தோட்டாக்களுக்கும் அஞ்சாமல் உயிர்நீத்த தியாகிகள் வழியில் போராடுவோம் என்று சூளுரைத்தனர்.
மக்கள் அதிகாரம், கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா தொகுப்புரை வழங்கினார். கோவை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் திரைப்படங்களின் ஆரம்பத்தில் வரும் பச்சை வண்ண லைக்கா (LYCA) நிறுவனத்தின் முத்திரை இப்போது பலருக்கும் பரிச்சயமாயிருக்கும். லைக்கா பிரபலமான இந்தக் காலத்தில்தான் கமல் – ரஜினி போன்றோர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கும் அறிவிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். லைக்கா நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றிய ராஜு மகாலிங்கம், தற்போது ரஜினி துவக்க இருக்கும் அரசியல் கட்சியின் நிழல் பிரிவு தலைவராக பணியாற்றுகிறார்.
ரஜினி – கமல் பேசும் ஊழல் ஒழிப்பு – ஒரு மோசடி என்பதை இவர்களுக்கு படியளக்கும் லைக்காவின் கறை படிந்த வரலாறே தெள்ளத்தெளிவாக காட்டி விடுகிறது. ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்ததாகக் கூறப்படும் காலாவின் நிதி ஆதாரமே லைக்காவின் கைங்கரியம்தான்.
காலாவைத் தொடர்ந்து ரஜினியின் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் எந்திரன்-2 அல்லது 2.0. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.550 கோடியை நெருங்கிவிட்டதாம். இந்திய திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவுடன் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது 2.0.
லைக்கா மொபைல்
கத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு வர்த்தகத்தில் நுழைந்தது லைக்கா. அதைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன், இப்படை வெல்லும், 2.0, சபாஷ் நாயுடு, தியா, வட சென்னை, செக்க சிவந்த வானம், இம்சை அரசன் 24-ம் புலிகேசி, இந்தியன்-2 என அடுத்தடுத்த படங்களையும் தயாரித்து வருகிறது. இவை தவிர வெற்றிமாறனின் விசாரணை, மகேஷ் பாபுவின் ஸ்பைடர், காலா, இரும்புத் திரை போன்ற படங்களை விநியோகஸ்தராக வெளியிட்டது. இதன் மூலம் தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது லைக்கா. இதோடு தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் இருக்கிறது.
எந்திரன்-2 அல்லது 2.0 வின் முதல் தோற்ற வெளியீட்டுவிழா சென்ற 2016-ம் ஆண்டு மோடி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அறிவித்த சில நாட்களில் மும்பையில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவிற்கு மட்டும் செலவான தொகை சுமார் ஆறு கோடி ரூபாய்.
ஜெயமோகன்: லைக்கா படத்திற்கு வசனமெழுதியதும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆதரித்ததும் தற்செயலா?
அன்று 2.0-வின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்த அப்படத்தின் வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்பு மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதென்று பொருளாதார அறிஞர்களே திடுக்கிடும் வண்ணம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதில் உள்ளூர் கருப்புப் பணத்தின் மிகச்சிறு பகுதியே வெளிநாட்டுக் கருப்புப் பணமாக சென்று ஹவாலாவாக இங்கு திரும்புகிறது என்று ‘பயங்கரமான’ ஆய்வு ஒன்றையும் வெளியிட்டார்.
ஜெயமோகன் பணியாற்றும் 2.0 – திரைப்படத்தின் தயாரிப்பாளரும் வெளிநாட்டு நிறுவனமுமான லைக்காவின் சட்டவிரோத பணப் பறிமாற்றங்கள், மோசடிகள் குறித்து ஏற்கனவே வினவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் பாகமாய் இந்தக் கட்டுரை வெளிவருகிறது.
பிரான்சில் வரிவிதிப்பை தவிர்க்க லைகா நிறுவனம் சட்டவிரோதமான முறையில் பணத்தை வரியில்லா சொர்க்கங்களில் உள்ள தனது கிளை நிறுவனங்களுக்கு கடத்துவதை “பஸ்ஃபீட்” BUZZFEED எனும் ஐரோப்பிய ஊடகம் அம்பலப்படுத்தியது.
லைக்கா நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றிய ராஜு மகாலிங்கம் ரஜினி கட்சியில் நிழல் பிரிவு தலைவர்
கருப்புப் பணத்தை வரியில்லா சொர்க்கங்களுக்கு கடத்தும் நிறுவனங்கள் அதை வெள்ளையாக்க மீண்டும் வேறு தொழிலில் முதலீடு செய்யும். அப்படி முதலீடு செய்யும் தொழிலே ஆடிட்டிங் மற்றும் கணக்கு வழக்குகளை சரிவர செய்யாததாகவும், லாபம் கொட்டுவதாகவும் இருந்தால்? லைக்கா தனது கருப்புப் பணத்தை வெள்ளையாக்க தேர்ந்தெடுத்த துறைதான் தமிழ் திரைப்பட தயாரிப்பு. ’தி இந்து’ பத்திரிகைக்கு நேர்காணல் அளித்த லைக்காவின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா திரைப்படத் தயாரிப்புக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக கூறியிருந்தார். மோடியின் பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட போது ரஜினி, கமல் போன்றோரும் கருப்புப் பண ஒழிப்பு என அதைக் கொண்டாடினர். ஜெயமோகன் ஒரு இலக்கியவாதி என்பதால் அந்தக் கொண்டாட்டத்தைத் தாண்டி ஒரு ‘ஆய்வு’ கட்டுரையே வெளியிட்டார்.
அதில் ஜெயமோகன் சொன்னபடி வரிகட்டாமல் கருப்புப்பணமாக வெளிநாடு சென்று திரும்பும் பணத்தில் தான் அவருக்கே லைக்கா படியளக்கிறது. அவருக்கு மட்டுமல்ல ரஜினி, கமல் போன்றோருக்கும், லைக்காவே படியளக்கிறது. லைக்காவைப் பொறுத்தவரை திரைப்படத் தயாரிப்பே ஹவாலாதான். அந்த ஹவாலாவில் பயன் பெறுபவர்கள்தான் கமல்- ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் போன்றோர். இதை இன்னும் இழுத்தால் காலா படத்திற்கு பைனான்ஸ் செய்த லைக்காவின் பணம்தான் தனுஷின் கை வழியாக இயக்குநர் ரஞ்சித்திற்கும் ஊதியமாக போய்ச் சேர்ந்திருக்கிறது. இன்றைக்கு தமிழ் சினிமாவில் இயங்கும் அனேகம் பேர் லைக்காவை ஏற்று தொழுதால்தான் தொழில் செய்ய முடியும்!
தற்போது இங்கிலாந்தில் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மீண்டும் சிக்கியுள்ளது லைக்கா.
ஜூலை 2012 முதல் பிப்ரவரி 2016 வரையிலான இடைப்பட்ட காலத்தில் லைக்கா மொபைல்ஸ்-இன் இங்கிலாந்து பிரிவு தனது வர்த்தகத்தை குறைத்துக் காட்டி மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) குறைவாக செலுத்தியது அம்பலமாகியுள்ளது. கட்ட வேண்டிய நிலுவை வரியை அபராதத்துடன் சேர்த்து 26 மில்லியன் பவுண்டுகள் வரை (சுமார் 235 கோடி இந்திய ரூபாய்) லைக்கா நிறுவனம் இங்கிலாந்தின் வருவாய் மற்றும் சுங்கவரித் துறைக்கு (HMRC) செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக கார்டியன் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
2016-ம் ஆண்டு மோடி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அறிவித்த சில நாட்களில் மும்பையில் நடைபெற்ற எந்திரன்-2 முதல் தோற்ற வெளியீட்டு விழாவிற்கு மட்டும் செலவான தொகை சுமார் ஆறு கோடி ரூபாய்.
முன்னதாக 2017-ம் ஆண்டு லைக்கா மொபைல்சின் நிதி கணக்கை செய்து வந்த KPMG என்ற கணக்கு தணிக்கை நிறுவனம் அப்பணியிலிருந்து விலகிக் கொண்டது. ”போதுமான கணக்கியல் பதிவுகள் பராமரிக்கப்படாததையும், லைக்கா தனது கிளை நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள் சரிவர பதிவு செய்யப்படாமலிருப்பதையும்” KPMG தனது அறிக்கையில் தெரிவித்தது. மேலும், லைக்காவும் அதன் கிளை நிறுவனங்களும் வரிவிதிப்பை தவிர்ப்பதற்காக தங்களுக்குள் சிக்கலான வலைப்பின்னலையும், பரிவர்த்தனைகளையும் கொண்டிருக்கின்றன என்றும் அந்நிறுவனம் கூறியது. ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஆடிட்டரே அது ஒரு ஃபிராடு நிறுவனம் என்று செல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவை எவற்றையும் லைக்காவோ இல்லை அதன் ஊழல் பணத்தில் உண்டு களிக்கும் எவரும் மறுக்க முடியாது. அனைத்தும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் !
2016–ம் ஆண்டு ஜூன் மாதம் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை (money laundering) நடவடிக்கைகள் தொடர்பாக பிரான்சில் லைக்காவின் 19 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பிரான்சு நாடு கடந்த மார்ச் 2017-ல் இங்கிலாந்தின் வருவாய் மற்றும் சுங்கவரித் துறை (HMRC) அதிகாரிகளிடம், லைக்கா மொபைல் நிறுவனத்தில் சோதனை நடத்தி விசாரிக்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு இங்கிலாந்து வருமானத்துறை மறுப்புக் கடிதம் எழுதியது.
பஸ்ஃபீட் (buzzfeed) என்னும் பத்திரிக்கை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கட்சிக்கு அதிக நன்கொடை வழங்கும் நிறுவனம் லைக்கா என்பதை அம்பலப்படுத்தியது
“லைக்கா நிறுவனம், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக நன்கொடை வழங்கும் நிறுவனம் என்பதால், விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது” எனக் கூறிய அக்கடிதத்தை பஸ்ஃபீட் (buzzfeed) என்னும் பத்திரிகை அம்பலப்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள லேபர் கட்சியின் ஜெரமி கோர்பைன், “இங்கிலாந்து வருவாய் மற்றும் சுங்கவரித் துறை என்பது ஒரு அரசு நிறுவனம், அது எவ்விதமான ஒளிவு மறைவுமின்றி, எதற்கும் அஞ்சாமல், அனைத்து நிறுவனங்களையும் விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் இரண்டாண்டுக்கு முன்பு வரை கன்சர்வேடிவ் கட்சிக்கு சுமார் 2.1 மில்லியன் பவுண்ட் பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. ’பஸ் ஃபீட்’-ன் செய்திக்குப் பிறகு, இங்கிலாந்து கருவூலத்தால் தேர்வு செய்யப்பட்ட கமிட்டி மற்றும் பொதுக் கணக்குக் கமிட்டியின் உறுப்பினர்கள், இங்கிலாந்து வருவாய் மற்றும் சுங்கவரித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவிருக்கின்றனர். இங்கிலாந்து எம்பிக்களும் இது குறித்து விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
ஆனால் இங்கிலாந்தின் வருமான மற்றும் சுங்கத்துறை இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. தேடுதல் அனுமதி வழங்குவதற்கு போதுமான ஆவணங்களை பிரெஞ்சு வரித்துறை வழங்காததால்தான் அனுமதி வழங்கவில்லை என்று கூறியிருக்கிறது.
கன்சர்வேடிவ் (டோரி) கட்சி மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் தொடர்பும் லைக்காவின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவுக்கு இருக்கிறது. இங்கிலாந்தின் ஆசிய தொழிலதிபர்கள் குழுமத்தால் துவக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏசியன் ட்ரஸ்ட் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முக்கிய கொடையாளர்களில் ஒன்றாக லைக்கா குழுமம் இருக்கிறது. இத்தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்.
சுபாஷ்கரன் அல்லிராஜாவுடன் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்
இந்த லைக்கா நிறுவனம் எப்படி இவ்வளவு பெரிய ஆளானது? ஈழ அகதியாக இங்கிலாந்து சென்ற சுபாஷ்கரன் அல்லிராஜா, ஒரு மெய்நிகர் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தை துவங்குகிறார். ஒரு மெய்நிகர் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனம், அலைபேசி சேவை வழங்கலுக்கான செல்போன் டவர், அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம் உரிமம் போன்ற எந்த கட்டமைப்பு வசதியையும் வைத்திருக்க தேவையில்லை. ஏற்கனவே அலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தொகுப்பை மொத்தமாக வாங்கி சில்லறைக்கு விற்றுக் கொள்ளலாம். மொத்தமாக பெற்ற அழைப்புகளை விற்கும் போது மறைமுகமான கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகளின் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றவும் செய்யலாம்.
லைக்காவும் இந்த உத்தி அல்லது மோசடியில் தான் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்தது. தோழர் கலையரசன் அதை விரிவாக விவரிக்கிறார்.
“லைக்கா அதிபரின் வளர்ச்சியை ஒரு தமிழன் கோடிஸ்வரனாகிறான் என்று தமிழ் கூறும் நல்லுலகம் ஆரம்பத்தில் பெருமைப்பட்டது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக வாழும் மக்களின் சந்தையை Niche market அழைக்கிறார்கள். மத்திய தரைக்கடலில் மூழ்கிச் செத்தது போக கரையேறியவர்கள் ஐரோப்பாவின் கடுமுழைப்பு வேலைகளில் ஈடுபட்டு தமது வயிற்றை கழுவுகிறார்கள். அகதி பிரச்சினை, குடியுரிமை இல்லாத பிரச்சினை எல்லாம் சேர்ந்து இவர்களை எந்நேரமும் அச்சத்தில் வாழ வகை செய்கிறது. அப்பேற்பட்ட மக்களிடம் பொருள் விற்பதுதான் மேற்கண்ட Niche market .
இத்தகைய மக்கள் ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இருக்கமாட்டார்கள். இவர்களிடம்தான் தனது மொபைல் சேவையை ஆரம்பித்தது லைக்கா. லைக்கா, ஞானம், லைபரா போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு பேசலாம் என்று இந்த அகதி மக்களிடம் விளம்பரம் செய்து கல்லா கட்டுகின்றன. லைக்கா, லெபராவின் தாய் நிறுவனமான ஞானம் இதில் முன்னோடி.”
இதில் லைக்காவின் திறமை அல்லது மோசடி என்ன?
பல்வேறு நாட்டு அகதிகளைக் கவர்வதற்காக அந்தந்த நாட்டு அகதிகளையே விற்பனை பிரதிநிதிகளாக அமர்த்தும் லைக்கா நிறுவனம்
“மலிவு விலையில் சேவையை வழங்கும் ஒரு நிறுவனம் நஷ்டமடைவதில்லை. மாறாக, பல கோடி இலாபம் சம்பாதிக்கின்றது என்ற உண்மை பலருக்கு உறைப்பதில்லை. ஒரு பொருளை மலிவு விலையில் வழங்கினால், அது பெருமளவில் விற்பனையாகும். ஆனால், என்றைக்குமே அதன் கொள்முதலுக்கு ஆகும் செலவு, அதை விடக் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், லைக்காவோ வேறு சில குறுக்கு வழிகளால், அதிக இலாபம் சம்பாதித்து வருகின்றது. லைக்கா நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை எனக்குத் தெரியும் என்பதால், அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். மற்றபடி, லெபரா, ஞானம் எல்லாம் இந்த மோசடிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.
லைக்கா நிறுவனத்தின் விளம்பரங்களில், எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கும் அட்டையில், குறிப்பிட்டளவு நிமிடங்கள் முன் கூட்டியே ஒதுக்கப் பட்டிருக்கும். ஆனால், அந்த அட்டையை ஒரு தடவையில் பாவித்தால் மட்டுமே, அந்தளவு நிமிடங்களும் கிடைக்கும். அதற்குள்ளும், இணைப்பு வழங்குவதற்கான ஆரம்பக் கட்டணம். நீங்கள் அந்த அட்டையை வைத்திருந்து, வெவ்வேறு அழைப்புகளை எடுத்து, துண்டு துண்டாக பிரித்து பாவித்தால், கணிசமான அளவு ஒதுக்கப் பட்ட நிமிடங்கள் காணாமல் போய் விடும்!
லைக்காவின் அலுவலகங்கள் தங்களின் மோசடிக்கேற்ப எளிதில் கண்டுபிடிக்க முடியாத சந்து பொந்துகளில் இருப்பதோடு அடிக்கடி இடத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள்
நிமிடங்களை திருடுவதற்காக பயிற்றப்பட்ட ஊழியர்கள், லைக்கா தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார்கள். எந்தெந்த நாட்டு அழைப்பிற்கு, எந்தெந்த தொகை வெட்டி எடுக்க வேண்டும் என்று, அதற்காக மென்பொருள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான லைக்கா பாவனையாளர்களுக்கு இந்த உண்மை தெரியும்.” – என்கிறார் தோழர் கலையரசன்.
இத்தகைய மோசடிக்கேற்பவே லைக்காவின் அலுவலகங்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சந்து பொந்துகளில் இருப்பதோடு அடிக்கடி இடத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள். இவர்களின் மோசடியை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்கும் போது லைக்காவின் தொலைபேசி அட்டைகளை விற்கும் சில்லறை வணிகர்கள்தான் மாட்டிக் கொள்கிறார்கள். பலர் மக்களிடம் அடியும் பட்டுள்ளனர்.
அந்த வகையில் லைக்கா வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களையும் சுரண்டுகிறது. லைக்கா சிம் அட்டைகளை தெருவில் நின்று கூவிக் கூவி பத்து மணி நேரம் விற்க வேண்டும். லைக்காவின் மோசடியை அறிந்தவர் யாரும் வந்தால் அவர்களிடம் திட்டுக்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். லைக்கா மற்றும் லெபரா நிறுவனங்களை கொள்ளைக் கோஷ்டிகள், மற்றும் மாஃபியா குழுக்கள் என்று மக்கள் திட்டுவதை தன் காதாலேயே கேட்டிருப்பதாக கலையரசன் கூறுகிறார்.
பல்வேறு நாட்டு அகதிகளைக் கவர்வதற்காக அந்தந்த நாட்டு அகதிகளையே விற்பனை பிரதிநிதிகளாக அமர்த்தும் லைக்கா நிறுவனம் அவர்களுக்கு பிரிட்டனின் குறைந்த பட்ச ஊதியத்தை கொடுப்பதற்கு பதில் அந்தந்த நாடுகளின் குறைந்த பட்ச ஊதியத்தையே கொடுக்கிறது. பத்து சிம்கார்டுகளை விற்றால்தான் அவர்களுக்கு போக்குவரத்து செலவு கிடைக்கும். விற்கவில்லை என்றால் கைக்காசை போட்டு அவர்கள் வீடு திரும்ப வேண்டும். அதாவது அவர்கள் சுபாஷ்கரனிடம் வேலை பார்ப்பதற்காக தமது பணத்தை செலவழிக்க வேண்டும்.
விற்பனைப் பிரதிநிதிகளை நேரடியாக லைக்கா அமர்த்தாமல் அதற்கென்றே பினாமி முகவர் நிறுவனங்களை பயன்படுத்துகிறது. இந்த திடீர் நிறுவனங்கள் ஒரிருவரைக் கொண்டு நடத்தப்பட்டு ஒரு வருடத்திற்குள்ளேயே மறைந்து போய்விடும். அதற்குள் அதில் பல மோசடிகள், வரி ஏய்ப்பு முடிந்து அதே நபர் புதிய இடத்தில் புதிய பெயருடன் திறப்பார்.
இப்படிச் சுரண்டப்பட்ட பணத்தைக் கொண்டு தமிழ்ப்படங்களைத் தயாரிப்பதோடு ராஜபக்சேவின் தொழில் கூட்டாளியாக இலங்கையிலும் முதலீடு செய்திருக்கிறது லைக்கா. அதைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்!
லைக்காவின் கரம் இங்கிலாந்து கட்சிகள், அரச குடும்பம், தமிழ் சினிமா, கமல் – ரஜினி படங்கள் என்று இறுதியில் இலங்கையிலும் நீள்கிறது!
கடைசியாக நஸீம் தனது கணவர் காசிமிடம் வீட்டு விசயங்களைக் குறித்துப் பேசியுள்ளார். தினசரி செலவுகள், வாடகை மற்றும் குழந்தைகளுக்கான சாப்பாட்டுச் செலவுகள் பற்றி பேசி 100 ரூபாயை வாங்கிக் கொண்டார். நஸீம் மிக மெலிதான சரீரம் கொண்டவர், அகண்ட கண்களும் கொண்டவர். மறுமுறை சுமார் எட்டு மணி நேரம் கழித்து நஸீம் தனது கணவரை அந்த வீடியோ காணொளித் துண்டில்தான் பார்த்தார். அந்த வீடியோ அதற்குள் உத்திரபிரதேசத்தின் உள்ளொடுங்கிய சிறுநகரமான ஹபூரில் இருந்து நாடெங்கும் பரவியிருந்தது.
வெறும் ஒரு நிமிடம் ஓடும் அந்தக் காணொளி காசிமுக்கு நேர்ந்த கொடூரமான மரணத்தைப் பதிவு செய்து வைத்திருந்தது. முசுலீம்கள் அதிகம் வசிக்கும் மதூர்பூருக்கும் தாக்கூர் சாதி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பஜேரா குர்த் கிராமத்துக்கும் இடையே உள்ள விவசாய நிலம் ஒன்றில் வைத்து காசிமைத் தாக்கியுள்ளனர் ஹிந்துக்கள். பசுமாடு ஒன்றை அறுப்புக்காகத் திருட வந்தார் என்று குற்றம் சாட்டியே காசிமைத் தாக்கினர்.
அடிபட்டு உடலெங்கும் காயங்களோடும், வழியும் இரத்தத்தோடும், உடைகள் கிழிக்கப்பட்டும், வலியில் அரற்றிக் கொண்டே தனது கணவர் வயலின் மத்தியில் விழுந்து கிடப்பதைப் பார்த்தார் நஸீம். மரணத்தின் தருவாயில் தாகத்தால் அலறிக் கொண்டிருந்த காசிமுக்கு அந்தக் கொலைகாரக் கூட்டம் தண்ணீர் கூட கொடுக்கவில்லை.
காசிமின் மனைவி நஸீம்
”எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீங்கள் நேசிக்கும் யாருக்காவது இப்படி நடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்கிறார் நஸீம். “அந்தக் காணொளியும் புகைப்படங்களும் நாடெங்கும் பரவிவிட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள். இந்த நாடு அதைப் பார்க்கிறதா? உங்களுக்கெல்லாம் அதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது என கேட்க நினைக்கிறேன்”
காசிம் குரேஷி இனத்தைச் சேர்ந்தவர். பாரம்பரியமாக கால்நடை வியாபாரமும், கசாப்பும் தான் இவர்களது தொழில். காசிம் தங்கள் மாடுகளைக் கடத்தப் போகிறார் என்கிற சந்தேகம் இருந்ததாகவும், இந்த நிலையில் வயலுக்குப் பக்கமாக காசிமைப் பார்க்கநேரவே ஆத்திரத்தில் கிராமவாசிகள் அவரை அடித்திருக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள் பஜேரா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், காசிமின் குடும்பம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறது. காசிம், ஆடுகளையும் எருமைகளையும் தான் வியாபாரம் செய்தார் என்கிறார்கள் அவர்கள்.
”அப்படியே அவர்கள் எதையாவது சந்தேகப்பட்டிருந்தால் இரண்டு அடியைப் போட்டு காவல் துறையிடம் அல்லவா ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது வெறுமனே காவல்துறையிடம் புகாரளித்திருக்க வேண்டும் தானே. இப்படி எங்கள் குடும்பத்தையே நாசமாக்க வேண்டுமா?” எனக் கேட்கிறார் நஸீம். ”அவர்கள் அவரை ஏற்கனவே அடித்து நொறுக்கி விட்டார்கள். அவர் செத்துக் கொண்டிருக்கிறார். அப்புறம் ஏன் நாய் பூனை மாதிரி மிருகங்களை இழுப்பதைப் போல் அவரது உடலை தெருத்தெருவாக இழுத்துக் கொண்டு போனார்கள்?” என்கிறார் நஸீம்.
சம்பவம் நடந்த இடத்தில் ஆம்புலன்சு வாகனங்கள் ஏதும் இல்லை என்பதால் சீக்கிரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய காசிமை போலீசு வாகனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்கிற அவசரத்தில் அந்த மூன்று காவலர்களும் பொறுப்பின்றி செயல்பட்டு விட்டதாக விளக்கமளித்துள்ள உத்திரபிரதேச மாநில காவல்துறை ‘மன்னிப்பு’ ஒன்றையும் தெரிவித்துள்ளது.
“ஏன் இப்படி நடப்பதை மோடி அனுமதிக்கிறார்? அவர்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தையே தாக்கிச் சிதைக்கிறார்கள். எங்கள் வீடுகளில் சுள்ளி விறகுகள் கூட எரிந்து விடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்”
“மன்னிப்பா, யாருக்கு வேண்டும் இந்த மன்னிப்பு? வெறும் மன்னிப்பு மட்டும் போதுமென்றால் எனது கணவர் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பாரே. அவரும் கூட தன்னை அடிக்க வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பார். தன்னை போலீசிடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டிருப்பார். தண்ணீர் தாருங்கள் என்று கேட்டிருப்பார். ஆனால், தண்ணீர் கூடக் கொடுக்காமல் அடித்தே கொன்று விட்டார்களே” என்கிறார் நஸீம்.
அந்தப் புகைப்படங்களும் காணொளியும் வெளியானதில் இருந்து கொடுமையான நினைவுகளோடே வாழ்ந்து வருகிறார் நஸீம். “நான் அந்த வீடியோக்களைப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், எனது இதயம் கேட்க மறுக்கிறது. உங்கள் கணவரைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பத்தை இதயம் கேட்டுக் கொண்டா இருக்கும்? அவரால் எப்படி அந்த வலியைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது என்பதை நான் பார்க்க வேண்டும். இறுதி நேரத்தில் அவர் என்ன வார்த்தைகளைச் சொன்னார் என்பதைக் கேட்க வேண்டும். மரணிக்கும் போது அவர் எதை நினைத்துக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரிய வேண்டும்” என்கிறார் நஸீம்.
இத்தனைக்கும் மோடி தான் காரணம்.
‘இந்தியாஸ்பெண்ட்’ இணையதளம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி 2010-ஆம் ஆண்டில் இருந்து பசு பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களில் 84 சதவீதம் பேர் இசுலாமியர்கள். இதில் 97 சதவீத தாக்குதல்கள் மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின் நடந்துள்ளன.
மரணத் தருவாயில் தண்ணீருக்காக மன்றாடும் காசிம்
”மோடி ஆட்சிக்கு வந்த பின் முசுலீம்கள் மாடுகளைக் கொல்வதாக குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்படுகின்றனர். இதெல்லாம் மோடியால் தான் நடக்கிறது. அவர் இந்துக்களை கட்டுப்படுத்த தவறிவிட்டார். அதனால் இசுலாமியர்கள் கொல்லப்படுகின்றனர்” என்கிறார் நஸீம். காசிமின் மரணத்தைத் தவிர பிரச்சினைக்குரிய எதையும் பேச வேண்டாம் எனத் தடுக்கும் மகளையும் மீறிப் பேசிக் கொண்டிருக்கிறார் நஸீம்.
இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே கால்நடை வியாபாரம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருப்பதாகக் குறிப்பிடும் நஸீம், தங்களது சமூகம் முன்னெப்போதும் இப்படி அஞ்சி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை என்கிறார். “ஏன் இப்படி நடப்பதை மோடி அனுமதிக்கிறார்? இந்தக் கொலைகள் எல்லாம் பசுக்களை காப்பாற்றுவதற்காக நடக்கவில்லை. அவர்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தையே தாக்கிச் சிதைக்கிறார்கள். நாங்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாடுவதைப் பார்க்க விரும்புகிறார்கள். எங்கள் வீடுகளில் சுள்ளி விறகுகள் கூட எரிந்து விடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்” என்கிறார் நஸீம்.
உ.பி போலீசு அடித்த பல்டி
இந்தக் கொடூர படுகொலை குறித்த செய்தி பரவுவதால் மக்கள் அதிருப்தி அடைவதை அறிந்த உத்திரபிரதேச போலீசு, நடந்த மரணத்திற்கு ‘சாலை விபத்தே’ காரணம் என்கிறது. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் பசுக் காவலர்கள் பற்றியோ, கும்பல் கொலை பற்றியோ குறிப்பிடப்படவே இல்லை. ஆனால், கடந்த 23-ஆம் தேதி ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் பேசிய ஹபூர் போலீசு சூப்பிரண்டு சர்மா, காசிமின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அதைப் பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு அந்தக் குற்றவாளிகள் தூக்கிலேற்றப்பட வேண்டும். எனக்கு நீதி வேண்டும். அதற்காக நான் விடாமல் போராடுவேன். நீதி கிடைக்காவிட்டால் நான் யாரையும் சும்மா விடமாட்டேன்”
காசிம் தாக்கப்படும் காணொளியும் அதில் அவரைக் காப்பாற்ற தலையிடும் மதார்பூர் கிராமத்தைச் சேர்ந்த சமியுத்தீன் என்பவரும் தாக்கப்படும் காட்சிகளும் இந்த வழக்கில் மிக முக்கியமான சாட்சியங்கள். “நாங்கள் எல்லா கோணத்திலும் விசாரிக்கத் தயாராகவே இருக்கிறோம்” என்கிறார் சர்மா.
முதலில் வெளியான காணொளியில் காசிம் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கிறார். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மாட்டைக் கொல்வது தொடர்பாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவன், ‘அடித்த வரை போதும். விளைவுகள் மோசமாகி விடப்போகிறது’ என்கிறான். அதற்கு பதிலளிக்கும் மற்றொருவன் “நாம் இரண்டு நிமிடம் தாமதமாக வந்திருந்தால் இவன் மாட்டைக் கொன்றிருப்பான்’ என்கிறான். “இவன் ஏன் மாட்டைக் கொல்கிறான்” என்கிறான் மற்றொருவன்.
சமியுத்தீன்
இரண்டாவதாக வெளியான காணொளி, உ.பி. போலீசாரின் கட்டுக்கதையை நொறுக்கிப் போடுவதாக இருக்கிறது. அதில் சமியுத்தீனை கொலைகார கும்பலைச் சேர்ந்த சிலர் மோசமாக ஏசுகின்றனர். உடலெங்கும் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த வயதான மனிதரால் நிற்கக் கூட முடியவில்லை. கும்பலைச் சேர்ந்த ஒருவன் சமியுத்தீனின் நரைத்த தாடியைப் பற்றி இழுக்கிறான். அந்தக் கும்பல் இவர்களை மாட்டைத் திருட வந்ததாக ஒப்புக் கொள்ளச் சொல்லி மிரட்டுகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் எப்படியோ பிழைத்துக் கொண்ட சமியுத்தீன் தற்போது ஹபூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஜேரா குர்த் கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் சிசோதியா மற்றும் யுதிஷ்ட்ர சிங் எனும் இருவர் காசிமின் மரணத்தில் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 20-25 நபர்களைத் தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் மாடுகளையோ, கசாப்பு செய்யும் கத்திகளையோ போலீசார் கண்டெடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள சர்மா, பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே காவலர்கள் பார்த்ததாகச் சொல்கிறார்.
விரக்தியான சூழல்
நஸீம் பள்ளிக்குச் சென்றதேயில்லை. அவருக்கு 12 வயதாகும் போது தன்னை விட 15 வயது மூத்த காசிமைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்கள் மொத்தம் ஏழு பிள்ளைகள். அதில் ஒரே ஒரு ஆண் பிள்ளையைத் தவிர மற்ற யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. தனது கணவர் தினசரி 200 இல் இருந்து 500 வரை கூலியாகச் சம்பாதிப்பார் என்றும், இதை வைத்துக் கொண்டு வீட்டுக்கு 1500 ரூபாய் வாடகையும் கொடுத்த பின் அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாது என்கிறார் நஸீம். “எங்களிடம் தொலைக்காட்சி கூட கிடையாது. எங்களால் எந்த ஆடம்பரச் செலவும் செய்ய முடியாது” என்கிறார், நஸீம்.
அந்த வீட்டுக்கு அக்கம் பக்கமாக உள்ளவர்கள் தாத்ரியில் கொல்லப்பட்ட முகமது அக்லக்கையும் தாசனா எனும் நகரில் கொல்லப்பட்ட மற்றொரு கால்நடை வியாபாரியையும் நினைவு கூர்ந்தனர். “எங்களுக்கு மூச்சு முட்டுகிறது. நாங்கள் பாதுகாப்பாகவே உணரவில்லை” என்கிறார் நஸீம். அங்கிருந்த மற்றொரு பெண்ணோ, “எங்களை இந்துக்கள் அடியோடு வெறுக்கிறார்கள் என்றால், ஏன் எங்களிடம் கால்நடைகளை விற்கிறார்கள்?” எனக் கேட்கிறார். “முசுலீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு பதிலாக நாங்கள் பொறுமையையே காட்டிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் புர்கா அணிந்த மற்றொரு பெண். “அவர்கள் காசிமைக் கொன்றதால் பெரிதாக சாதித்து விட்டதாக கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால், அல்லா அவர்களுக்கு கருணை காட்ட மாட்டான்” என்கிறார், ஒரு வயதான பெண்.
”நாங்கள் பொறியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த அரசாங்கம் எங்களைப் பற்றியெல்லாம் கவலையே படாது என்பது தெரியும். ஆனாலும், இந்தச் சூழ்நிலையில் நாங்கள் அரசாங்கத்திடம் தான் உதவிக்காக ஓட வேண்டியிருக்கிறது. அவர்கள் காசிமைக் கொன்றவர்களை தண்டிக்க வேண்டும். இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏதாவது நட்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்கிறார், அருகில் உள்ள மதார்பூரில் இருந்து வந்திருந்த வயதான முசுலீம் பெண்மணி.
சமியுத்தீனின் மகள்கள், சையீதா, ஷாய்தா
பசு பயங்கரவாதிகளால் நிகழும் கொலைகளைக் குறித்து கேள்விபட்டிருந்தும் கால்நடை வியாபாரத்தைக் கைவிடுமாறு தனது கணவரிடம் நஸீம் கேட்கவில்லை. “எங்களுக்கு பயமாகத் தான் இருந்தது. ஆனால், நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்? வாழ்வதை நிறுத்தி விட முடியாதே” என்கிறார் நஸீம்.
மதார்பூரைச் சேர்ந்த ஷாய்தாவும் சையீதாவும் தங்களது வயதான தந்தை அடிவாங்குவதையும் அவரது தாடி இழுக்கப்படுவதையும் புகைப்படங்களாகப் பார்த்து இன்னமும் நடந்த சம்பவத்தை சீரணிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் இருவரும் சமியுத்தீனின் மகள்கள். அந்தக் காணொளியில் இருந்த அனைத்துமே கொடூரமானவை எனக் குறிப்பிடும் அவர்கள் தங்கள் தந்தையின் தாடியைப் பிடித்து இழுத்த காட்சி தங்களை நொறுக்கி விட்டது என்கின்றனர்.
“அல்லாவுக்கே வெளிச்சம். தாடி என்பது பெரியவர்களுடைய மரியாதையின் அடையாளம். எனக்கு முன்பாக அப்படி நடந்திருந்தால் என் கையாலேயே அந்தக் கயவர்களைக் கொன்றிருப்பேன். அதற்குப் பின் எனக்கு என்ன ஆனாலும் கவலையில்லை” என்கிறார் சையீதா. 17 வயதான சையீதாவுக்கும், 20 வயதான ஷாய்தாவுக்கும் எழுதப்படிக்கத் தெரியாது. நடந்த சம்பவத்தை தனது உறவினர்கள் காட்டிய காணொளியின் மூலமே அறிந்து கொண்டனர். விவசாயம் செய்து கொண்டிருக்கும் தங்கள் தந்தையால் பசுமாடுகளைக் கொல்ல முடியாது என்கிறார்கள் அந்தச் சகோதரிகள்.
”அவருக்கு ரொம்பவே வயதாகிவிட்டது. ஒரு மாட்டை வெட்டிக் கொல்லும் அளவுக்கான ஒரு பொருளைப் பிடித்துத் தூக்கவே அவருக்கு சக்தியில்லை” என்கிறார் ஷாய்தா. மேலும், “அப்படியே அவர்கள் தப்பு செய்ய திட்டமிட்டார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் போலீசிடம் தானே புகார் அளித்திருக்க வேண்டும்? இவர்களாக எப்படி அடித்துக் கொல்லாம்” என்கிறார்.
உ.பி. போலீசு பொய் சொல்கிறதா?
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரே ஒரு விசயம் மட்டும் பொதுவாக உள்ளது. அவர்கள் இருதரப்பினருமே உ.பி. போலீசாரின் விசாரணையை நம்பவில்லை. போலீசால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை காசிமையும் சமியுத்தீனையும் இருசக்கர வாகனம் ஒன்று இடித்து விட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு காரணமாகவே இருவரும் தாக்கப்பட்டர்கள் என்றும் குறிப்பிடுகிறது. சாலை விபத்து என வழக்கை முடிக்க போலீசார் முனையவில்லை என்றும், சமியுத்தீனின் சகோதரர் யாசின் சொன்னதன் பேரிலேயே அவ்வாறு அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றும் சொல்கிறார் சூப்பிரெண்டு சர்மா.
ஆனால், கடந்த 21-ஆம் தேதி தில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சமியுத்தீனின் மற்றொரு சகோதரர் மெகருத்தீன், தனது சகோதரர் யாசின் எப்படி புகார் தரவேண்டும் என போலீசார் தான் சொல்லிக் கொடுத்தார்கள் என்கிறார். “எங்களுக்குத் தேவை நீதி. இப்படி புகார் கொடுத்தால் நியாயம் பெற்றுத் தருகிறோம் என்று போலீசார் சொன்னதாலேயே யாசின் கையெழுத்துப் போட்டார்” என்கிறார் அவர்.
கொல்லப்பட்ட காசிமை தலைகுப்புற தூக்கி இழுத்து வரும் காட்சி
அதே போல் கைது செய்யப்பட்டுள்ள ராகேஷ் சிசோதையாவின் சகோதரர் உதய், சம்பவம் நடப்பதற்கு முன்பே தனது சகோதரர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் அழைத்து வன்முறை நிகழப் போவது குறித்து எச்சரித்ததாக குறிப்பிடுகிறார். மேலும் பிரச்சினை தொடங்கியதற்கு ஒரு மணி நேரம் கழித்து தான் போலீசார் வந்ததாக குறிப்பிடும் உதய், “எனது சகோதரனின் தொலைபேசிப் பதிவுகளை போலீசார் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் எனது சகோதரன் போலீசாரை அழைத்ததும் அவர்கள் தாமதமாக வந்ததும் நிரூபணமாகும்” என்கிறார்.
குற்றம் நடந்த இடத்தில் ஒரு பசுவையும் கன்றையும் கைப்பற்றிய போலீசார், அவற்றை கிராமவாசி ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும், இப்போது அனைத்தையும் மூடி மறைக்க முயல்வதாகவும் பஜேரா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலீசாரின் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.
ஹஃபிங்டன்போஸ்டின் நிருபர்கள் கிராமவாசிகளிடம் பேசிய போது தங்களது அடையாளத்தை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட ஒரு தந்தையும் மகனும், ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அந்தப் பசுவும் கன்றும் தங்கள் பாதுகாப்பில் தான் இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.
நீதி எங்கே?
தனது கணவரின் மரணத்தை அடுத்து இசுலாமிய முறைப்படி நான்கு மாத துக்கம் அனுஷ்டிக்கும் நஸீம், இந்த வழக்கை தான் அத்தனை சுலபத்தில் விட்டு விடமாட்டேன் என்கிறார். தனது 17 வயது மகன் ஆசிஃபை இரண்டு வருடங்களுக்கு முன் விபத்து ஒன்றில் பறிகொடுத்த நஸீம் ஏற்கனவே மனதொடிந்து போயிருந்த நிலையில் தற்போது கணவரின் மரணத்தால் நிலைகுலைந்து போயிருக்கிறார்.
“எனக்கு அந்தக் குற்றவாளிகள் தூக்கிலேற்றப்பட வேண்டும். எனக்கு நீதி வேண்டும். அதற்காக நான் விடாமல் போராடுவேன். நீதி கிடைக்காவிட்டால் நான் யாரையும் சும்மா விடமாட்டேன்” என்கிறார் நஸீம்.
காசிமின் சடலம் போலீசாரின் முன்னிலையிலேயே இழுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் பரவிய பின் போலீசார் ”வருத்தம்” தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் மேற்படி ‘வருத்தத்தை’ தெரிவிக்க எந்தப் போலீசாரும் நேரில் வரவில்லை என்கின்றனர் காசிமின் குடும்பத்தார். ”இதே போல் போலீசாரைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களது குழந்தைகளும் இதே போல் அனாதைகளாகி விட்டால் எப்படி உணர்வார்கள்? இந்தப் போலீஸ்காரர்களை என்ன தான் செய்வது? எங்கே இருக்கிறது நீதி” எனக் கேட்கும் நஸீம், “இனிமேல் எந்த முசுலீமுக்கும் இப்படி நடக்காது என்று மோடியே சொல்ல வேண்டும்” என்கிறார்.
ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்
பாகம் :2
ஐ-பாட்களும், ஐ-ஃபோன்களும்
ஆப்பிளின் ஐஃபோனும் அதனோடு தொடர்புடைய பொருட்களும் “சர்வதேச விற்பனை பண்டங்களுக்கான” கச்சிதமான பிரதிநிதிகள். உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களின் பல்வகைபட்ட திறமைகளிலான உழைப்பு வகைகளின் சிக்கலான இணைப்பின் விளைவாக அவை உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு கையடக்கக் கருவியிலும் தற்கால உலக முதலாளித்துவத்தின் சமூக உறவுகள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் யார், இவற்றிலிருந்து லாபம் ஈட்டுபவர்கள் யார் என்பது குறித்த ஆய்வு பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது. உற்பத்தி நடைமுறைகள் குறைகூலி நாடுகளுக்கு மாற்றப்படுவதுதான் இதில் மிகவும் கவனத்தைக் கவருவதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாட்டு நிறுவனங்களும், அரசுகளும் இந்த குறைகூலி நாடுகளின் உழைப்பிலிருந்து பெறப்படும் அதீத லாபங்களை எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருக்கின்றன என்பதும் தெரிய வருகிறது.
ஒவ்வொரு கையடக்கக் கருவியிலும் தற்கால உலக முதலாளித்துவத்தின் சமூக உறவுகள் அடங்கியிருக்கின்றன
இந்த வகையில் 2007-ம் ஆண்டு கிரேக் லிண்டன், ஜேசன் டீட்ரிக், கென்னத் கிரேமர் ஆகியோர் வெளியிட்ட ஆய்வு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்குப் பின்னர் செய்யப்பட்ட பிற ஐஃபோன் ஆய்வுகளில் வெளிப்படாத இரண்டு விஷயங்களை அது வெளிப்படுத்துகிறது. (1) அவர்களது ஆய்வு ஐ-போனின் வடிவமைப்பு, உற்பத்தி, போக்குவரத்து, விற்பனை ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடும் உழைப்பை அளவீடு செய்கிறது. (2) இந்த வெவ்வேறு பிரிவு தொழிலாளர் குழுக்கள் பெறும் ஏற்றத்தாழ்வான கூலிகள் தொடர்பான விபரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.4
2006-ம் ஆண்டு 30 GB ஆப்பிள் ஐ-பாட் $299 விலைக்கு விற்கப்பட்டது. வெளிநாடுகளிலேயே நடத்தி முடிக்கப்பட்ட அதன் உற்பத்திக்கான மொத்தச் செலவு $144.40. அதாவது, ஆப்பிள் அறுவடை செய்த மொத்த லாப வீதம் 52 சதவீதம். அதாவது விற்பனை விலையில் உற்பத்திச் செலவு போக எஞ்சிய $154.60 ஆப்பிளுக்கும், அதன் சில்லறை விற்பனையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், வரிகள் மூலம் அரசுக்கும் சென்று சேர்கிறது. இந்தத் தொகை அமெரிக்காவிற்குள் சேர்க்கப்பட்ட மதிப்பாக கருதப்பட்டு அமெரிக்காவின் ஜி.டி.பி-க்கு பங்களிக்கிறது. “2006-ம் ஆண்டு ஐ-பாட் மற்றும் அதன் துணை பாகங்கள் உலகம் முழுவதிலும் 41,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கின. அவற்றில் 27,000 பேர் அமெரிக்காவுக்கு வெளியிலும், 14,000 அமெரிக்காவுக்குள்ளும் பணி புரிந்தனர். வெளிநாட்டு வேலைகள் பெரும்பாலும் குறைகூலி அளிக்கும் உற்பத்தித் துறையிலும், அமெரிக்க வேலைகள் உயர் ஊதியம் பெறும் பொறியாளர்கள், மேலாளர்கள் மற்றும் பிற குறைகூலி சில்லறை விற்பனை உள்ளிட்ட தொழில்முறை அல்லாத தொழிலாளர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட சமமாக பிரிக்கப்பட்டிருந்தது.”5
ஃபாக்ஸ்கான் தொழிலாளி
13,920 அமெரிக்க ஊழியர்களில் முப்பது பேர் மட்டுமே உற்பத்தித் தொழிலாளர்கள் (சராசரியாக ஆண்டுக்கு $47,640 ஊதியம் பெறுபவர்கள்); 7,789 பேர் “சில்லறை விற்பனை மற்றும் பிற தொழில்முறை அல்லாத” தொழிலாளர்கள் (அவர்களது சராசரி ஊதியம் ஆண்டுக்கு $25,580); 6,101 பேர் தொழில்முறை ஊழியர்கள் அதாவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள மேலாளர்களும் பொறியாளர்களும். கடைசி பிரிவினர் மொத்த அமெரிக்க ஊதியச் செலவில் மூன்றில் இரண்டு பங்கைக் கைப்பற்றினர்; அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு $85,000 ஈட்டினர். மறுபக்கத்தில், 12,250 சீன உற்பத்தித் தொழிலாளர்கள் ஆண்டுக்கு தலா $1,540 ஊதியம் பெற்றனர், அல்லது வாரத்துக்கு $30 — இது அமெரிக்காவில் சில்லறை விற்பனைத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சராசரி ஊதியத்தில் 6 சதவீதம், உற்பத்தித் துறை தொழிலாளர்களின் ஊதியத்தில் 3.2 சதவீதம், தொழில்முறை ஊழியர்களின் சம்பளத்தில் 1.8 சதவீதம்.6 அமெரிக்காவிலும், சீனாவிலும் ஐ-பாட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை (முறையே 13,920 மற்றும் 12,250) சற்றேறக்குறைய சமமானதுதான். ஆனால், அமெரிக்க ஊழியர்கள் பெறும் மொத்த ஊதியத் தொகை $71.9 கோடி. சீனாவில் வழங்கப்படும் மொத்த ஊதியத் தொகை வெறும் $1.9 கோடி. [அமெரிக்க சராசரி சம்பளம் 35 மடங்கு அதிகம்]
ஐ-பாட்-க்கு பின் சந்தைப்படுத்தப்பட்ட ஆப்பிளின் ஐஃபோன் குறித்து 2010-ல் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) வெளியிட்ட ஆய்வறிக்கை இன்னும் பிரமாதமான லாபக் குவிப்பை வெளிப்படுத்துகிறது. “2007-ம் ஆண்டு பெரு்ம் பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்கச் சந்தையில் ஐ-போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றின் விற்பனை எண்ணிக்கை 2007-ம் ஆண்டில் 30 லட்சமாகவும், 2008-ல் 53 லட்சமாகவும், 2009-ல் 1.13 கோடியாகவும் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.” ஒவ்வொரு ஐ-ஃபோனின் மொத்த உற்பத்திச் செலவு $178.96, அதன் விற்பனை விலை $500; அதாவது ஆப்பிள் ஈட்டிய மொத்த லாபம் விற்பனை விலையில் 64 சதவீதம்; அந்த மொத்த லாபம் அதன் வினியோகஸ்தர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பொருளாதாரவியல் தரவுகளில் இவை அனைத்தும் அமெரிக்காவுக்குள் சேர்க்கப்பட்ட “மதிப்புக் கூடுதல்” என்று பதிவு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வறிக்கையின் முக்கிய கவனம் அமெரிக்க-சீன வர்த்தகப் பற்றாக்குறையில் ஐ-ஃபோன் செய்யும் பங்களிப்பு பற்றியதாக இருந்தது. “ஐ-ஃபோன் மூலம் சீனாவின் கணக்கில் சேர்க்கப்படும் ஏற்றுமதி மதிப்பும் அதன் விளைவான வர்த்தகப் பற்றாக்குறையும் பெரும்பகுதி மூன்றாம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் மற்றும் துணை பாகங்களிலிருந்து பெறப்பட்டவை” என்று இந்த ஆய்வு கண்டறிந்தது.
ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் தங்குமிடங்கள்
இருப்பினும் சீனத் தொழிலாளர்கள், “ஒவ்வொரு ஐ-போனுக்கும் $6.50 மட்டுமே பங்களிப்பு செய்கின்றனர், அதாவது மொத்த உற்பத்திச் செலவில் 3.6%”7 96 சதவீதத்துக்கும் அதிகமான ஐ-ஃபோனின் ஏற்றுமதி மதிப்பு மூன்றாம் நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட மறு-ஏற்றுமதியான பாகங்களால் ஆனது. அவை அனைத்தும் சீனா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் மதிப்பில் கணக்கிடப்படுகின்றன, ஆனால், அதில் எதுவும் சீனாவின் ஜி.டி.பி.ல் சேர்க்கப்படுவதில்லை. இந்த மொத்த லாபம் ஆப்பிள், சேவை அளிப்பாளர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது என்பதை ஆய்வாளர்கள் விபரமாக புலனாய்வு செய்யவில்லை. ஆனால், அவற்றின் பிரமிக்கத்தக்க தாக்கம் பற்றி அவர்களால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. “சந்தைப் போட்டி வலுவாக இருந்திருந்தால், எதிர்பார்க்கப்படும் லாபவீதம் பல மடங்கு குறைவாக இருந்திருக்க வேண்டும்…. விண்ணை முட்டும் விற்பனையும், உயர் லாபவீதமும் ஆப்பிள் ஒப்பீட்டளவில் ஏகபோக நிலையை பராமரிப்பதை சுட்டிக் காட்டுகின்றன. ஐ-ஃபோன்கள் அனைத்தையும் சீனாவில் உற்பத்தி செய்வது என்ற முடிவை ஆப்பிளின் லாப வேட்டைதான் தீர்மானிக்கிறது; சந்தைப் போட்டி அல்ல.”8
இதைத் தொடர்ந்து அந்த ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வாளர்கள் ஆப்பிள் ஐ-போன்கள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு இடம் மாற்றினால் என்ன நடக்கும் என்று உருவகித்து பார்க்கிறார்கள். அமெரிக்க ஊதியங்கள் சீன ஊதியங்களை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், இந்த உருவகிக்கப்பட்ட அமெரிக்க பொருத்தி தயாரிப்பு தொழிலாளர்கள் ஃபாக்ஸ்கானில் உழைக்கும் இப்போதைய தொழிலாளர்களைப் போலவே தீவிரமான உழைப்பில் ஈடுபடுகிறார்கள் என்றும் அவர்கள் வைத்துக் கொண்டார்கள். “ஐ-ஃபோன்கள் அமெரிக்காவில் பொருத்தி தயாரிக்கப்பட்டால் அவற்றின் மொத்த பொருத்தி தயாரிக்கும் செலவு $65-ஆக உயர்ந்து விடும் [சீனாவில் அந்தச் செலவு $6.50], அதன் பிறகும் ஆப்பிளுக்கு 50% லாபம் எஞ்சியிருக்கும்”9 என்று அவர்கள் கணக்கிட்டார்கள். “லாபத்தில் ஒரு சிறு பகுதியை தியாகம் செய்து, தொழில்முறை அல்லாத அமெரிக்கத் தொழிலாளர்களுடன் அதை பகிர்ந்து கொண்டு”, “நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR)” காட்டுமாறு ஆப்பிளுக்கு வேண்டுகோள் விடுத்து அவர்கள் தம் அறிக்கையை முடிக்கிறார்கள்.10 அதை விட, சீனப் பொருளாதாரத்துக்கு அவசரமாக தேவைப்படும் வேண்டல் அதிகரிப்புக்கு உதவும் வகையில் அதன் $11,000 கோடி நிதிக் கையிருப்பை ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி ஆப்பிளை அவர்கள் கேட்டிருக்கலாம்.
அடிக்குறிப்புகள்:
4.Greg Linden, Kenneth L. Kraemer, and Jason Dedrick, Who Captures Value in a Global Innovation System? The Case of Apple’s iPod, Personal Computing Industry Center, UC Irvine, June 2007, http://signallake.com, 7. 5. Greg Linden, Jason Dedrick, and Kenneth L. Kraemer, Innovation and Job Creation in a Global Economy: The Case of Apple’s iPod, Personal Computing Industry Center, UC Irvine, January 2009, http://pcic.merage.uci.edu, 2. 6. The distribution of the resulting profits brings to mind words written by Lenin in 1907: “The British bourgeoisie, for example, derives more profit from the many millions of the population of India and other colonies than from the British workers. In certain countries this provides the material and economic basis for infecting the proletariat with colonial chauvinism.” V.I. Lenin, “The International Socialist Congress in Stuttgart,” http://marxists.org . 7.Yuqing Xing and Neal Detert, How the iPhone Widens the United States Trade Deficit with the People’s Republic of China, ADBI Working Paper Series No. 257, December 2010 (revised May 2011), http://adbi.org, 4–5. 8.Ibid, 8. 9.Ibid. 10.Ibid, 9.