டந்த ஜூன் 18-ம் தேதியன்று சேலம் 8 வழிச்சாலை பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 தோழர்களை பென்னாகர போலீசு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தோழர்கள் மீது, மக்களை வன்முறைக்குத் தூண்டியதாகவும், மிரட்டி பணம் வசூலித்ததாகவும் பொய் குற்றச்சாட்டைக் கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் பத்திரிகைகள் மூலமாகவும் இந்த அவதூறுகளைப் பரப்புகிறது போலீசு .

மக்கள் அதிகாரம், மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்காகவும், அரசிடம் அனுமதி பெற்று ஜனநாயக ரீதியில் தொடர்ந்து பிரசாரமும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தும் ஓர் ஜனநாயக அமைப்பு; அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வினை மக்களிடத்தில் தெளிவாக எடுத்துரைக்கின்ற அமைப்பு.

சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக கதறியழும் மக்கள்

பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கு அடிபணிந்து, அதனால் சொந்த நாட்டு மக்களையே காவு வாங்கும் அரசை எதிர்த்து மக்கள் அதிகாரம் மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக அமைப்புகள், முற்போக்கு சக்திகளுமே கேள்வி எழுப்புவார்கள். இந்திய அரசியல் சாசன சட்டப்படி, கருத்துகளை வெளியிட முழு உரிமையும், சுதந்திரமும் நாட்டு மக்களுக்கு உண்டு. அதைத்தான் மக்கள் அதிகாரம் செய்து வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் இப்பொழுது சேலத்தில் வலுக்கட்டாயமாக நிலங்களை பறித்து அமைக்கப்படவிருக்கும் எட்டுவழி சாலை வரை மக்கள் அதிகாரம் உள்ளிட்டு அனைத்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறன்றன.

ஆனால், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்களை மட்டும் வலுக்கட்டாயமாக கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்து மக்களிடத்தில் ஒரு பீதியை உண்டாக்குகிறது போலீசு.

கடந்த மாதம் மே22-ல் தூத்துக்குடியில் போலீசால் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், யாருக்காக கொல்லப்பட்டார்கள்?, ஆகிய கேள்விகளை மக்கள் முன் வைக்கின்றனர். புற்றுநோயை உண்டாக்கும் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டுமென 22 வருடங்களாக மக்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். மக்களுக்கு ஒரு பிரச்சினை எனில் அவர்களுடன் கைகோர்க்க வேண்டியது அனைத்து முற்போக்கு அமைப்புகளின் கடமை. அவ்வாறு கைகோர்த்தால் தேசிய பாதுகாப்பு சட்டமும், பயங்கரவாத தடுப்பு சட்டமும் பாய்கிறது எனில், இந்த அரசு யாருக்காக இருக்கிறது?

சேலத்தில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், எட்டு மலைகள், நூற்றுக்கணக்கான ஏரிகள், குளங்களை அழித்து விட்டு எட்டு வழிச்சாலையை அமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் மக்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு வருகின்றன.

பல இலட்சம் மரங்கள் அழியப் போவதை கருத்தில் கொண்டு 277 கிமீ தொலைவிற்கு 3 இலட்சம் மரக்கன்றுகள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலைக்காக பல லட்ச மரங்கள் அழிக்கப்பட்டன. அதற்காக இன்னும் ஒரு செடியைக்கூட இந்த அரசு நடவில்லை. அதே போல திண்டிவனம்-செஞ்சி-கிருஷ்ணகிரி வழி நெடுஞ்சாலை அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக போராடி வரும் மக்களிடம் நிதி இல்லை எனும் அரசு, தற்போது 10 ஆயிரம் கோடி செலவில் யாருக்காக இயற்கை வளங்களை எல்லாம் அழித்து யாருடைய நலனுக்காக இந்த எட்டு வழி சாலையை அமைக்க போகிறது?

நில ஆக்கிரமிப்பை முன்நின்று நடத்தும் ’யோக்கியர்’ சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி

ஜிண்டால் நிறுவனத்தின் இரும்புத்தாது கொள்ளைக்காக தன் சொந்த நாட்டு மக்களை கதறவிட்டு வேடிக்கை பார்க்கிறது அரசு. கடந்த 11.06.2018 அன்று குறைதீர்ப்பு கூட்டம் நடத்தாமல், மக்களிடம் கருத்துக் கேட்காமல் சட்டம் கூறும் அனைத்து அரசு சட்டவிதிமுறைகள் மீறி சேலத்தில் நில அளவிடும் பணியை மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் நடத்தியது, சேலம் மாவட்ட நிர்வாகம்.

கண்ணீர் விட்டு கதறும் மக்களை நாயைப் போல விரட்டுகிறது. அரசுக்கு எதிராக யார் போராடினாலும் தன் அதிகாரத் திமிரைக் காட்டி ஒடுக்குகிறது. அதன் அடிப்படையிலேயே நடிகர் மன்சூர் அலிகான், மாணவி வளர்மதி ஆகியோரை சிறை பிடித்திருக்கிறது.

போராடும் மக்களிடத்தில் யார் நெருங்குகிறார்களோ, யார் அவர்களுக்காக நிற்கிறார்களோ, அவர்களை கூண்டோடு ஒழித்துக்கட்டும் வேலையைச் செய்கிறது, போலீசு. அந்த அடிப்படையில்தான் பென்னாகரம் மக்கள் அதிகாரம் தோழர்களை, ”சமூகவிரோதிகள்” போன்ற தோற்றத்தை உண்டாக்கி கைது செய்திருக்கிறது. மேலும் பத்திரிகைகளிடமும் தனது அதிகாரத்தை காட்டியிருக்கிறது போலீசு.

கடந்த 18.06.2018 அன்று, மாலையில் வெளிவந்த தமிழ் முரசு, மாலை மலர், அதற்கு அடுத்த நாள் வெளியான ’தி இந்து’ தமிழ் நாளேட்டிலும் மக்கள் அதிகார அமைப்பினர் மக்களை மிரட்டி பணம் வசூலித்ததாகவும் அதனால் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யபட்டதாகவும் தகவலை வெளியிடும்படி மிரட்டியுள்ளது. அந்த ஊடகங்களும் வெட்கங்கெட்ட முறையில் அந்த அவதூறுகளை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் அதிகார அமைப்பு மக்களிடத்தில் நன்கு செல்வாக்கு பெற்று வரும் அமைப்பு. அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்ற அமைப்பு. இதனால்தான் காவல்துறை பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்களிடம் நெருங்குவதை தாங்க முடியாமல் இவர்கள் சமூக விரோதிகள் என்று பீதியை பரப்புகின்றனர். பத்திரிக்கைகளிலும் அப்படி செய்தி வெளியிடக் கூறி மிரட்டுகின்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பு மக்களுக்காக உயிரையும் தியாகம் செய்கிற அமைப்பு. தொடர்ச்சியாக மக்களுக்காக போராடக் கூடிய முற்போக்கான அமைப்பு. பத்திரிகைகள் மக்களைத் தாங்கும் பாலம் போன்றவை. ஆகவே, அரசு தவறிழைக்கும்போது அதை அரசிற்கு எடுத்துக் கூறும் கடமை பத்திரிகைகளுக்கு உள்ளது. மக்கள் அதிகாரம் பற்றி போலீசு தரும் தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம். போலீசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் மக்களின் பக்கம் நிற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:
முத்து குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
பேச: 90477 85572