Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 460

மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !

மாவோயிஸ்டு என்று முத்திரை குத்தப்பட்டு போலிமோதல் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராசு மாதவியின் சகோதரிகள் வஞ்சி (இடமிருந்து இரண்டாமவர்) மற்றும் ஜனோ (இடமிருந்து மூன்றாமவர்) .

திருமண நிகழ்ச்சிக்காக சென்ற சிறுவர் சிறுமியரை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி மராட்டிய போலீசு, போலி மோதல் படுகொலை செய்தது ஏற்கனவே வினவில் வந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களின் கிராமத்திற்கு சென்று ’தி வயர்’ ஊடகம் நடத்திய கள ஆய்வின் தமிழாக்கம் இங்கே.

“எங்களது குழந்தைகள் காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகின்றன. வ்வொரு முறையும் எங்களது கிராமத்திற்கு போலீசு வரும் போதும் அல்லது எங்களை போலீசு நிலையத்திற்கு வரச் சொல்லும் போதும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இப்பொழுதாவது எங்களது குழந்தைகளுக்கு என்ன நடந்தது என போலீசு சொல்ல வேண்டும்” என கட்டெபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் கடந்த ஜூன் 18 அன்று தி வயர் இணையதளத்திற்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, தமது கிராமத்திற்கு அருகே 40 ‘மாவோயிஸ்டுகளை’ சுட்டுக் கொன்றதாகக் கூறிய அதே காலகட்டத்தில் தனது பிள்ளையை இழந்த பெற்றோர் இவர்.

கட்ச்ரோலி, எடப்பள்ளி, கசன்சூர்

மராட்டியத்தின் எடப்பள்ளி (Etapalli) வட்டத்தின் கட்டெபள்ளி (Gattepalli) கிராமத்தைச் சேர்ந்த எட்டு சிறுவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கசன்சூர் கிராமத்திற்கு சென்றிருந்தனர். அடுத்த நாள் (ஏப்ரல் 22) காலை கசன்சூர் கிராமத்துக்கு வெளியே இந்திராதேவி ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்தாகக் கூறப்படும் 50 ‘நக்சல்கள்’ கட்ச்ரோலி (Gadchiroli) கமாண்டோ படையினரால் சுடப்பட்டதில் 34 பேர் அங்கேயே பலியானார்கள். மேலும் அறுவர் இராஜாராம்-கான்ட்லா (Rajaram-Khandla) காட்டுப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஊடகங்களில் வெளியான செய்திகளும், மோதல் படுகொலை செய்த இடத்திலிருந்து போலீசு வெளியிட்ட புகைப்படங்களும் ஆற்றங்கரையினில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு பேர் காணாமற் போன சிறுவர் குழுவைச் சேர்ந்தவர்கள்  என்பதை உறுதி செய்தன. அவ்விரண்டு பேரில் ஒருவரது உடலை மட்டுமே போலீசு ஒப்படைத்துள்ளது. மற்றொரு சிறாரின் உடல் குறித்து போலீசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்று கிராமத்துவாசிகள் கூறுகின்றனர்.

காணாமல் போன குழந்தைகள் பற்றிய புதிர் ஒருபுறம் தொடர, அவர்கள் மாவோயிச நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று பொய்யாக புனையப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு பெற்றோர்கள் மிரட்டப்படுவதாகவும் கிராமத்துவாசிகள் தெரிவிக்கின்றனர். “எங்களைப் பயன்படுத்தி எங்கள் குழந்தைகளின் படுகொலைகளை போலீசு நியாயப்படுத்த முயல்கிறது” என்று பெற்றோர்களில் ஒருவர் ‘தி வயர்’ இணையதளத்திடம் தெரிவித்திருக்கிறார்.

கிராமத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிமில்லி(Perimili) துணை போலீசு நிலையத்திற்கு ஜூன் 18-ம் தேதி அன்று 5 பேர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். காணாமல் போன தங்களது குழந்தைகள் பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று அறிய அந்த ஐவருடன் மேலும் பத்துப் பேர்கள் துணைக்கு சென்றனர். போலீசு நிலையத்தை அடைந்தவுடன் அந்த ஐந்து பேர்களையும் பிடித்து வைத்துக்கொண்டு மீதி நபர்களை வெளியேறுமாறு போலீசார் மிரட்டினார்கள். “எங்களுக்கு என்ன நடந்தேன்றே தெரியவில்லை. ஒரு அறையில் அடைக்கப்பட்டதும் சத்தம் போடக்கூடாது என்று நாங்கள் மிரட்டப்பட்டோம்” என்று அவர்களில் ஒருவர் பின்னர் கூறினார். போலீசார் அவர்கள் ஐவரையும் மிரட்டி கையெழுத்து வாங்கினர்.

அந்த ஆவணங்கள் மராத்தி மொழியில் கையால் எழுதப்பட்டிருந்தன. கிராமத்திலிருந்து கிளம்பிய சிறுவர்கள் கசன்சூர் (Kasansur) கிராமத்திலிருந்து கமாண்டர் சாய்நாத்தை சந்திக்கச் சென்றதாக அந்த ஆவணம் கூறியது. “நான் கையெழுத்துப் போட மறுத்தவுடன் நீயும் சாக விரும்புகிறாயா? என்று அவர்கள் கேட்டனர்” என்று பெற்றோர்களில் ஒருவர் கூறினார். போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட எட்டு சிறுவர்களில் கல்லூரிக்கு செல்லும் அவரது பதின்ம வயது மகனும் ஒருவனாக இருக்கக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார்.

இந்த எட்டு சிறுவர்களுக்கும் மாவோயிச கமாண்டர் சாய்நாத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்துது போல அந்த ஆவணங்களில் எழுதப்பட்டிருந்ததாக அந்த கிராமத்து மக்கள் கூறுகின்றனர். போலி மோதலில் படுகொலை செய்யப்பட மூன்று மாவோயிச கமாண்டர்களில் கட்டெபள்ளியைச் சேர்ந்த சாய்நாத்தும் ஒருவர். கொல்லப்பட்ட மற்ற இருவர் மாவோயிச கமிட்டி உறுப்பினர்களான ஸ்ரீநாத் மற்றும் நந்து. ஸ்ரீனு மற்றும் சாய்நாத் இருவரும் இந்திராதேவி ஆற்றங்கரையில் கொல்லப்பட்டனர். நந்து மற்றும் அவருடன் மேலும் ஐவர் இராஜாராம் கான்ட்லா காட்டுப்பகுதியில் ஏப்ரல் 23-ம் தேதி கொல்லப்பட்டனர்.

போலீசு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது அங்கே ஆறு பேர் இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் சீருடையணிந்தும் மேலும் ஐவர் சீருடை அணியாமலும் இருந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். போலீசு நிலையத்தில் இருந்த அதிகாரிகளில் மகேஷ் மத்கார் மற்றும் மண்டிவார் ஆகிய இருவரை அவர்கள் அடையாளம் கூறுகின்றனர். “இந்த இருவர்தான் தொடர்ச்சியாக எங்களை கையெழுத்து போடுமாறு கட்டாயப்படுத்தினார்கள். ஒரு நான்கு மணி நேரம் கையெழுத்துப் போடுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் நாங்கள் பயத்தில் இருந்ததால் அதைத் தவிர கடைசியில் எங்களுக்கு வேறு வழியில்லை” என்று கூறினார் ஒரு கிராமத்துவாசி.

தாங்கள் கையெழுத்துப்போட்ட அந்த ஆவணங்களை விரைவில் போலீசார், நீதிபதி முன் வைத்து குற்றவியல் நடைமுறை சட்டம் 167-ன் படி வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும் எங்களால் அதை திரும்பப்பெற முடியாது என்றும் கிராம மக்கள் கூறினர். கையெழுத்துப் போட்ட அந்த ஆவணங்களின் நகலை கேட்டும் கொடுக்க முடியாது என்றும் வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் இருந்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு போலீசு எங்களிடம் கூறிவிட்டது என்று அவர்கள் கூறினார்கள்.

பெர்மிலி துணை போலீசு நிலையப் பொறுப்பாளரான கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் இராஜாவை தொடர்பு கொண்டபோது அவர் பதிலேதும் சொல்லவில்லை. கட்ச்ரோலி போலீசு கண்காணிப்பாளர் அபினவ் தேஷ்முக்கிடம் கிராம மக்களின் குற்றச்சாட்டைப் பற்றி கேட்ட போது அது ”தவறான தகவல்” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே பதிலாகக் கூறியிருக்கிறார்.

நாக்பூரில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எடப்பள்ளி வட்டத்தை சேர்ந்த ஒரு சிறு கிராமம்தான் கட்டெபள்ளி. கட்ச்ரோலி பகுதியில் உள்ள பெரும்பாலான பழங்குடி மக்களைப் போல கட்டெபள்ளியின் 35 குடும்பங்கள் பீடி சுற்ற உதவும் ‘தெண்டு’ இலைகளை பறித்தும் காடுகளில் விளையும் ஏனைய பொருட்களை வைத்தும்தான் வாழ்க்கையை நடத்துகின்றனர். பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது. அவர்களில் வெகு சிலருக்குத்தான் மராத்தி மொழியில் எழுதப்படிக்கத் தெரியும்.

போலீசால் பிடித்துச்செல்லப்பட்ட ஐவரில் மூவர் காணாமல் போன எட்டு சிறுவர்களுக்கு நேரடியாக தொடர்பு உள்ளவர்கள். அக்கிராமத்தின் கல்வியறிவு கொண்ட வெகு சிலரில் இந்த ஐந்து பேர்களும் உள்ளனர். அவர்களைப் பிடித்து சென்றதற்கு இதுதான் முதன்மையான காரணம் என்று கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். “நாங்களாகவே போலீசுக்கு சாட்சியமளிக்க முன்வந்ததைப் போல், நீதிமன்றத்திற்கு காட்ட அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அளித்த வாக்குமூலத்தை பின்னாளில் திரும்பப் பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

தங்களது கிராமத்திலிருந்து வெறும் 15 கிலோமீட்டர் தொலைவேயுள்ள கசன்சூர் கிராமத்தில் நடந்த போலிமோதல் படுகொலைகள் குறித்து ஏப்ரல் 22 ம் தேதி மாலை வரை கட்டெபள்ளி கிராம மக்களுக்கு தெரியவில்லை. அந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய மற்ற கிராம மக்கள் மூலமாக தெரிய வந்த பிறகு தான் அவர்கள் போலீசு நிலையத்திற்கு விரைந்து சென்றார்கள். மேலும் காணாமல் போனது குறித்து ஒரு புகாரையும் கட்ச்ரோலி போலீசு நிலையத்தில் பதிவு செய்தனர். அடுத்த ஐந்து நாட்களுக்கு போலீசு நிலையத்தில் இருந்தோ ஊடகங்களிடம் இருந்தோ எந்த தகவலும் கிராமத்து மக்களுக்கு கிடைக்கவில்லை.

ஏப்ரல் 27-ம் தேதி அந்த கிராமத்தைப் பார்வையிடச் சென்ற முதல் ஊடகம் ’தி வயர்’. அங்கு நடந்த உரையாடலின் போது எதேச்சையாக வழக்குரைஞரும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான லால்சு சோமா நகோடியுடைய கைப்பேசியிலிருந்த சிறார்களின் படங்களில் ஒன்றைப் பார்த்ததும், அதுதான் காணாமற்போன சிறார்களில் ஒருவரான 16 வயதான ராசு சாக்கோ மாதவி என்று கண்டு கொண்டார் கிராமவாசி ஒருவர். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த செய்தியை கிராம மக்களுடன் பகிர்ந்து கொண்டார். நக்சலைட்டுகள் என்று சந்தேகிக்கப்பட்டு போலீசால் படுகொலை செய்யப்பட்ட 16 பேரில் அந்த சிறுமியின் புகைப்படமும் ஒன்று. தங்களது மகள் என்று அடையாளம் காட்டிய பின்னரும் மாதவியின் குடும்பத்தாரிடம் அவளது உடலை போலீசு இன்னமும் ஒப்படைக்கவில்லை.

சிறுவர்களை போலிமோதல் படுகொலை செய்துவிட்டு கிராம மக்களுக்கு துணிமணி, பாத்திரங்களை நன்கொடை தருவது போல நாடகமாடுகிறது மராட்டிய போலீசு

கிராமத்து மக்களிடம் பொய்யான வாக்குமூலங்களை வாங்கியது மட்டுமல்ல கிராம மக்களை திசை திருப்ப வேறு குறுக்குவழிகளையும் போலீசு மேற்கொள்கிறது.  கிராம மக்களுடனான உறவினை மேம்படுத்துவதாக கூறிக்கொண்டு எட்டு சேலைகள், 20 சோடி செருப்புகள், 15 குடைகள் மற்றும் இரண்டு அலுமினிய பாத்திரங்களை கிராம மக்களிடம் நன்கொடையாக போலீசு வழங்கியது. “திடீரென்று அவர்கள் இங்கே வந்து இவற்றை கொடுக்க தொடங்கிவிட்டனர். சிலர் அதை எதிர்த்தனர். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை” என்று கிராம பெரியவர் ஒருவர் கூறினார். வேறு வழியில்லாமல் கிராம மக்களும் அவற்றை வாங்கினாலும் பயன்படுத்தவில்லை. “அவர்கள் எங்களை கொலை செய்து பின்னர் பரிசுகளை தருவார்கள். எப்படி அவற்றை நாங்கள் பயன்படுத்துவது?” என்று கோபத்துடன் ஒரு கிராமவாசி கேட்டார்.

சட்டரீதியிலான ஆதரவின்மை:

படுகொலை செய்யப்பட்ட அனைவரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று முதலில் போலீசின் கதையை பத்திரிகைகள் அப்படியே வெளியிட்டன. ஆனால் கிராம மக்கள் நடந்ததை சொல்ல தொடங்கிய பின்னர் போலீசின் கட்டுக்கதைகள் அம்பலமாக தொடங்கின.

சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்கள் என 40 பேர்கள் அந்த கிராமத்திற்குள் உடனடியாக சென்று போலீசின் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தினர். விளைவாக, படுகொலை செய்யப்பட சிறுவர்களின் குடும்பத்தாருக்கு உடனிருந்து உதவி செய்த மூத்த வழக்குரைஞர் சுரேந்திரா காட்லிங் மற்றும் நில உரிமை செயற்பாட்டாளர் மகேஷ் இரவுத் இருவரும் நக்சல் இயக்கத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு புனே போலீசால் கைது செய்யப்பட்டனர். “நாங்கள் போலீசின் கட்டுக்கதையை எதிர்த்து உயர்நீதி மன்றம் செல்ல இருந்தோம். சட்டரீதியான உத்திகளை முடிவு செய்து கொண்டிருந்த நேரத்தில்தான் காட்லிங் கைது செய்யப்பட்டார்” என்று நோகோட்டி கூறினார்.

___________________

நன்றி: தி வயர் (’தி வயர்’ இணையதளத்தில் சுகன்யா சாந்தா எழுதிய கட்டுரை) தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு
Maharashtra Police Forced Us to Sign Letters Implicating Missing Children as Maoists: Villagers

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் இரங்கல் கூட்டம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு கடந்த 23-6-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில்  விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் நடைபெற்ற அன்று காலையில் கலைஞர் அறிவாலத்திற்கு வந்த போலீசு, ”மக்கள் அதிகார அமைப்பிற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள், அவர்கள் குண்டு வைப்பார்கள். அவர்களுடைய அனுமதியை உடனே ரத்து செய்யுங்கள். இல்லையென்றால் உங்களை கைதுசெய்ய நேரிடும்” என்று மிரட்டியுள்ளனர். அதற்கு மண்டப மேலாளர் ”என்னால் ரத்து செய்ய முடியாது, வேண்டும் என்றால் மேலிடத்தில் பேசிக் கொள்ளுங்கள்” என்று கூறியதால் வேறுவழியின்றி திரும்பிச் சென்றனர்.

மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர்  தோழர் A.V. சரவணன், ம.தி.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் A.K. மணி, வி.சி.க. மாநில துணை செயலாளர் சே.சேரலாதன், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் V.பாபு கோவிந்தராஜ், வி.சி.க. மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேந்தர், மருதம் ஒருங்கிணைப்பாளர் ரவி கார்த்திகேயன், வழக்கறிஞர் செம்மலை, வி.வி.மு. விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.

உரையாற்றிய அனைவரும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு தங்களது வன்மையான கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், மக்கள் அதிகாரம் சரியான பாதையில் பயணிக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்றனர். இப்போதுள்ள அரசியல் சூழலில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலின் ஜனநாயக விரோத அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அறைகூவல் விடுத்தனர். மேலும் அரசின் சமீபத்திய மக்கள் விரோத திட்டங்கள் குறித்தும், மக்கள் போராட்டங்களின் மீதான காட்டுத்தனமான ஒடுக்குமுறை குறித்தும் பேசினர்.

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

  • தகவல்:
    மக்கள் அதிகாரம்
    விழுப்புரம் மண்டலம்.

கருத்துக் கணிப்பு : பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா ! ஏன் ?

தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து மார்ச் 26 முதல் மே 4-ம் தேதிவரை, 550 அறிஞர்கள் – வல்லுநர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

கருத்துக்கணிப்பு முடிவின்படி உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு, ஆபத்தான நாடு இந்தியாதான் என்பது தெரியவந்துள்ளது. இதில் முதல் 10 இடங்களில் 9 இடங்களில் ஆசிய நாடுகளும், பத்தாவதாக அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளன.

பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்புணர்ச்சி, வீட்டு வேலை, கொத்தடிமை வேலைகளுக்கு கடத்துதல், கட்டாயத் திருமணம், விபச்சாரத்தில் தள்ளப்படுதல் போன்றவற்றில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

இது போக ஆசிட் வீச்சு, உடல் உறுப்புகளை சிதைத்தல், குழந்தை திருமணம், உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்றவைகளும் இந்தியாவில் அதிகம்.

கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று முதலிடத்தில் இருக்கிறது. நாலாவது இடமே மோசம் என்றால் முதல் இடம் படுமோசம் என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறது.

உள்நாட்டுப் போரில் சிதையும் ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும், சிரியா 3-வது இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் சோமாலியாவும், 5-வதில் சவுதி அரேபியாவும் பெண்களுக்கு ஆபத்து மிகுந்த நாடுகளாக இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் பெண்களுக்கு காரோட்டும் உரிமை வழங்கிய முஸ்லீம் நாடு, பெண்களை ‘தெய்வமாக’ மதிக்கும் பாரதத்தை முந்திவிட்டது.

இந்த தரங்கெட்ட தரவரிசையில் வல்லரசு நாடான அமெரிக்கா 10-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. என்னதான் முன்னேறிய நாடாக இருந்தாலும், பெண்கள் மீதான வன்முறையில் அமெரிக்காவை விஞ்சுவதற்கு ஆளில்லை.

கதுவா, உன்னாவ் வன்புணர்வு சம்பவங்களை கண்டித்து ஹைதராபாத்தில் நடந்த போரட்டம்!

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட சம்பவம், சமீபத்தில் காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டது, உ.பியில் 16 வயது சிறுமி மீதான பாலியல் வன்முறை ஆகியவை உலக அளவில் இந்தியாவின் தற்போதைய முதல் இடத்தை பெற்றுத் தந்துள்ளது.

மத்திய அரசின் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2007 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு இடையே பெண்களுக்கு எதிரான வன்முறை 83 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் . ஒவ்வொரு நாளும் 100 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன, கடந்த 2016-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 39 ஆயிரம் தாக்குதல்கள் நடந்துள்ளது. இது கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகம்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பெண்ணடிமைத்தனத்தை போற்றும் வண்ணம் சங்கராச்சாரி முதல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வரை அவ்வப்போது பெண்கள் ஏன் வெளியே வேலைக்கு போகிறார்கள் என்று கேட்பார்கள். நிர்பயா கொலையைக் கூட பல்வேறு இந்துத்துவத் தலைவர்கள் இப்படித்தான் நியாயப்படுத்தினர். வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்படும் ஒரு பெண் மரியாதைக்குரிய ஆடையை அணியவில்லை என்றும் இவர்கள் புத்திமதி செய்வார்கள். மறுபுறம் சாதி, மத, கிராம வட்டாரங்களில் இத்தகைய வன்புணர்ச்சிகளை கட்டவிழ்த்து விடுவதும் இவர்கள்தான்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கண்ணோட்டத்திற்கு ஒரு அரசு மரியாதை கிடைத்திருப்பதால் இந்தக் கொடுமைகளை முன்னிலும் அதிகமாய் நடக்கின்றன. அரியலூர் நந்தினி முதல் கதுவா சிறுமி வரை ஆர்.எஸ்.எஸ்  கூட்டமே நேரடி குற்றவாளிகளாய் முன் நிற்கிறது. முசுலீம்களை கொல்வது, தலித்துக்களை அடிப்பது, பெண்களை வன்புணர்வது என்பதே இந்துத்துவத்தின் திரிசூல திட்டமென்றால் மிகையில்லை.

மோடி ஆளும் வரை இந்தியா இத்தகைய முதலிடத்தில் இருந்தே தீர வேண்டும்!

(பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் முதல் 10 நாடுகள் பட்டியல்: 1. இந்தியா, 2.ஆப்கானிஸ்தான், 3. சிரியா, 4.சோமாலியா, 5.சவுதிஅரேபியா, 6. பாகிஸ்தான், 7. காங்கோ, 8. ஏமன், 9. நைஜிரியா, 10. அமெரிக்கா.)

கேள்வி: பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா ! ஏன் ?

  • மோடி – பாஜக ஆட்சிதான் முதன்மையான காரணம்
  • பெண்கள் வேலைக்கு போவது அதிகரித்திருப்பதே காரணம்
  • உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை குறைக்க அமெரிக்க சதி
  • தெரியவில்லை, கருத்தில்லை!

வாக்களியுங்கள் !

முஸ்லீமை திருமணம் செய்தால் பாஸ்போர்ட் கிடையாது !

முசுலீம்கள் என்றாலே தீவிரவாதிகள், வெறுக்கப்படவேண்டியவர்கள், இந்த நாட்டின் குடிமக்களாக கருதப்படக் கூடாதவர்கள் என்றொரு பொதுக்கருத்து சங்கிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் அடித்தளமான வடமாநிலங்களில் இந்த நிலைமை இன்னும் மோசம். சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் ஒரு பாஸ்போர்ட் அதிகாரி, ஒரு கலப்பு மண தம்பதியினரை, ”மதம் மாறினால்தான் பாஸ்போர்ட் தரமுடியும்” எனக் கூறி கடுமையாகச் சாடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த முகமது அனஸ் சித்திக்கும், தன்வி சேத்தும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். நொய்டாவில் உள்ள தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இருவரும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து நேர்காணலுக்காக இருவரும் லக்னோ பாஸ்போர்ட் கிளை அலுவலகத்துக்கு கடந்த 20-ஆம் தேதி (20.06.2018) அழைக்கப்பட்டனர். இதில் 3-வது சுற்று நேர்காணலின் போது தன்வியை நேர்காணல் செய்த அதிகாரி விகாஸ் மிஸ்ரா என்பவர் தன்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தன்வி சேத், முகமது அனஸ் சித்திக் தம்பதியினர்

”இரண்டு சுற்று நேர்காணல்கள் முடிவுற்ற நிலையில், மூன்றாவது சுற்று நேர்காணலுக்காக முதலில் தன்வி அழைக்கப்பட்டார். தன்வியின் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்த பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, கணவர் என்ற இடத்தில் என்னுடைய பெயர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று, என் மனைவி தன்வியிடம் ’உன் பெயரை மாற்றிவிடு, இல்லாவிட்டால் உன்னுடைய விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்படும்’ என்று மிரட்டியுள்ளார்” என்கிறார் முகமது அனஸ் சித்திக்.

மேலும் முகமது அனஸ் சித்திக் இந்து மதத்துக்கு மாறி, பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் விகாஸ் மிஸ்ரா. தனது பெயரை மாற்ற முடியாது என்று கூறிய தன்வி, “எனது கணவர் முசுலீமாக இருப்பதில் எனது குடும்பத்திற்கே எந்த பிரச்சினையும் இல்லை. எனவே நான் ஏன் பெயரை மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த பதிலால் ஆத்திரமடைந்த பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, அங்கிருந்தவர்கள் முன்னிலையிலும் சப்தம் போட்டு தன்வியை திட்டி அவமதித்துள்ளார். அவமானம் தாங்காமல் தன்வி அழ ஆரம்பித்திருக்கிறார்.

அடுத்ததாக முகமது அனஸ் சித்திக்கை அழைத்த விகாஸ் மிஸ்ரா, அவரையும் கடுமையான வார்த்தைகளால் அவமதித்திருக்கிறார். இது குறித்து முகமது அனஸ் கூறுகையில், “அவர் என்னை நோக்கி, ‘நீங்கள் இந்து மதத்திற்கு மாறிவிட வேண்டும், இல்லையெனில் உங்கள் திருமணம் செல்லுபடி ஆகாது; எனவே இந்துமத முறைப்படி தன்வியைத் திருமணம் செய்து அதற்கான ஆதாரங்களைத் துணை பாஸ்போர்ட் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று கூறி என்னுடைய விண்ணப்பத்தையும் நிராகரித்தார்” என்றார்.

பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா

இதையடுத்து இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து நிகழ்ந்தது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டனர், அதில் தன்வி குறிப்பிடுகையில், “ஆதங்கத்துடன் இதைப் பதிவிடுகிறேன், எனது கணவர் முசுலீம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. 12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

ஊடகங்களில் இந்த சம்பவம் அம்பலப்பட்ட சில மணி நேரத்தில் வெளிவிவகார அமைச்சகம் இந்த விசயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டது. முகமது அனஸ் சித்திக் மற்றும் தன்வி இருவரும் வியாழக்கிழமை (21.06.2018) பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இவர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி விகாஸ் மிஸ்ரா இப்போது தண்டனை ஏதுமின்றி வெறுமனே இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளார்.

பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, இந்தக் கணம் வரை தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றே சொல்லி வருகிறார். தான் சட்ட விதிகளின் படியே நடந்து கொண்டதாகவும், மேலும் போலி பாஸ்போர்ட்டுகளைத் தடுப்பதற்காகவே இப்படி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் நியாயப்படுத்தியுள்ளார். இவருக்கு ஆதரவாக டெல்லி ஆர்.எஸ்.எஸ். வானரங்களும் களமிறங்கியுள்ளன.
பாஸ்போர்ட் அதிகாரியின் வேலை என்பது விண்ணப்பதாரரின் ஆவணங்களைச் சரிபார்ப்பதேயன்றி அவர் யாரைத் திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருத்து சொல்வதல்ல.

டிவிட்டரில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பாக விளம்பரம் தேடும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  பாஸ்போர்ட் அதிகாரியின் இடமாற்றதை குறிப்பிட்டு உடன் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக கூறியதும், சங்கிகளின் ட்ரோல் இராணுவம் சுஷ்மாவை உண்டு இல்லை என பின்னி எடுத்து விட்டது. இதனால் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் ரேட்டிங் ஸ்டார் ஆப்சனை எடுத்து விட்ட சுஷ்மா இஞ்சி தின்ற சங்கி போல திணறுகிறார்.

போராடி கிடைக்கப்பெற்ற பாஸ்போர்ட்

முசுலீம் என்ற பெயரைப் பார்த்தவுடனேயே அந்த பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஏன் இத்தனை வெறுப்பு ஏற்பட்டது? ஒருவரையொருவர் காதலித்து, அவரவர் தத்தமது மத நம்பிக்கைகளை கடைபிடித்துக் கொண்டே மதக் கலப்புத் திருமணம் புரிந்து வாழ்வதென்பது, ஜனநாயக உரிமையின் ஒரு பகுதியே. இங்கு இந்த அடிப்படை ஜனநாயக உரிமையைத்தான் மதவெறி பிடித்த விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். இதையேதான் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘லவ் ஜிகாத்’ என்ற போலிச் சொல்லாடலை பயன்படுத்தி செய்துவருகிறது.

’லவ் ஜிகாத்’ என்ற பெயரில் முசுலீம் இளைஞர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து இசுலாத்திற்கு மதம் மாற்றுவதாக இதே பொய்யைக் கூறிதான் உத்திரப் பிரதேசத்தில் ஒரு இந்துவெறிச் சாமியாரான யோகி ஆதித்யநாத், முதல்வர் பதவியையும் பிடித்து விட்டார்.

இதே லவ் ஜிகாத்தை முன்னிறுத்திதான், உ.பி மாநிலம் காசியாபாத்தில் 22.12.2017 அன்று நடக்கவிருந்த இந்து-முஸ்லீம் மதக்கலப்புத் திருமண விழாவில் புகுந்து ஆர்.எஸ்.எஸ் – பார்ப்பன மதவெறியர்கள் கலவரம் செய்தனர். அப்போது மணப்பெண்ணின் தந்தை புஷ்பேந்திர குமார் கூறியதுதான் இங்கு முக்கியமானது. “இது எனது தனிப்பட்ட விவகாரம். உங்களது குறுக்கீடு எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு மனிதர்கள்தான் முக்கியம். மதம் இரண்டாம்பட்சமானதுதான். ஒரு மனிதரை எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம், அந்த நபர் இந்துவா அல்லது முஸ்லீமா என்று நான் பார்க்கவில்லை” என்று இந்துத்துவக் கிரிமினல் கும்பலுக்கு அப்போதே பதிலடி கொடுத்தார் புஷ்பேந்திர குமார்.

இந்தி நடிகர் சையப் அலிகான் – கரீனா கபூர் திருமணத்தின் போதும், இதே லவ் ஜிகாத்தை முன்னிறுத்தி அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டது.

எங்கு பார்க்கிலும் இசுலாமிய எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோருக்கெதிரான தாக்குதல், பெண்களுக்கெதிரான வன்முறை என்பது தான் இந்துத்துவ பாசிச அரசியலின் அடிப்படை. ’இந்துப்’ பெண்கள் தமது வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் எனும் வன்முறைக் கூட்டமா முடிவு செய்வது?

  • வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க
Lucknow passport officer ‘humiliates’ inter-faith couple, tells husband to ‘convert’

கருமுட்டை விற்பனை : இரத்தப் போக்கும் மரணமும்தான் பரிசு

1

”நான் ஐந்து வயிறுகளுக்குச் சோறு போட வேண்டும். ஒரு வேலைக்காரியின் சம்பளத்தை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி முடியும்” என்கிறார் ஷபானா மேமோன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). முப்பத்தோரு வயதான ஷபானா மும்பையைச் சேர்ந்தவர்; மும்பையை அடுத்துள்ள வடாலாவில் வசிக்கிறார். மூன்று குழந்தைகளும், வாய்ப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கணவரையும் ஷபானா தான் கவனித்துக் கொள்ள வேண்டும்; ஏழ்மையான குடும்பம். தனது குடும்பத்தின் பணத் தேவையை சமாளிக்க தன்னார்வக் கருமுட்டைக் கொடையாளியாக இருக்கிறார் ஷபானா.

கடந்த 2009-ஆம் ஆண்டு துவங்கி இதுவரை எட்டுமுறை கருமுட்டைகளைக் கொடையளித்துள்ள ஷபானா, எட்டாவது முறையாகக் கொடையளித்ததற்கு 28,000 ரூபாயைக் கட்டணமாகப் பெற்றுள்ளார். கருமுட்டைகளைக் கொடையளிப்பது இரத்த தானம் போல் அத்தனை எளிதான காரியமல்ல; மிகச் சிக்கலான  மருத்துவ நடைமுறைக்கு கொடையாளியின் உடல் ஆட்படுத்தப்படும். இதன் காரணமாகப் பல்வேறு பின்விளைவுகளும் உடல்ரீதியான சீர்கேடுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த முறை  பெற்ற கட்டணத்தில் சுமார் பத்தாயிரம் ரூபாயை கொடையளித்ததால் உண்டான மருத்துவப் பிரச்சினைகளைச் சரி செய்ய செலவிட்டுள்ள ஷபானா, இனிமேல் கொடையளிப்பதில்லை என முடிவெடுத்துள்ளார்.

”தாங்க முடியாத துன்பத்தில் நான் இதைச் செய்கிறேன். ஆனால், எனது மோசமான எதிரிக்கும் கூட இந்த நிலை ஏற்படக் கூடாது” என்கிறார் ஷபானா மேமோன்.

ஷீலா படேல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தானேயிலுள்ள தனது வீட்டில்.

ஆனால், அதே மும்பையைச் சேர்ந்த 26 வயது ஷகீதா கானின் கதை வேறு. கடந்த எட்டாண்டுகளில் ஐந்து முறை கருமுட்டைக் கொடையளித்துள்ளார் ஷகீதா. ஐந்து முறையும் வெற்றிகரமாக கருத்தரிப்பு நடந்துள்ளது. எனவே ஷகீதாவுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. முதல் முறை 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்ற ஷகீதா, இறுதியாக கொடையளித்த போது 45 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ஷகீதா இரண்டு பிள்ளைகளின் தாய். புத்தகம் பைண்ட் செய்யும் கம்பெனிக்கு கூலி வேலைக்குச் செல்லும் ஷகீதாவின் கனவருக்கு பெரும்பாலான நாட்கள் வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைக்கும் நாட்களில் 300ல் இருந்து 400 ரூபாய் வரை கூலி கிடைக்கலாம்.

“மும்பையில் இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மிகவும் சிரமம்” எனக் குறிப்பிடும் ஷகீதா, தனது மூத்த மகளின் கல்விக் கட்டணத்தைக் கட்டும் வழி தெரியாமல் அவளை மதரஸா பள்ளிக்கு அனுப்பியுள்ளார். இரண்டாவது மகனின் கல்விச் செலவும் கையைக் கடிக்க ஆரம்பித்துள்ளதால் அவனையும் மதரசாவுக்கே அனுப்பும் முடிவில் இருக்கிறார். “எனது உறவினர்கள் நான் சுலபமாக பணம் சம்பாதிக்கிறேன் என நினைக்கின்றனர். நான் சம்பாதிப்பதை எல்லாம் உறவினர்களுக்கே கொடுக்க வேண்டியுள்ளது… கடைசியில் எனக்கென்று எந்தச் சேமிப்பும் இல்லை” எனக்கூறும் ஷகீதா ஒன்பதாம் வகுப்பு வரையே படித்துள்ளார்.

***

‘வெளிச் சோதனை முறை கருக்கட்டல்’ (In Vitro Fertilisation-IVF) எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவத்தின் உலகளாவிய சந்தையின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் (15 பில்லியன் டாலர்).  கருமுட்டைகளைக் கொடையாளிகளிடம் இருந்து  பெற்று சோதனைச் சாலைகளில் வைத்து அதனுள் உயிரணுக்களைச் செலுத்துவது, பின்னர் கரு (அல்லது முளையம் – Embryo) வளர்ந்த பின் அதை இயற்கையாக கருத்தரிப்பதில் பிரச்சினை உள்ள பெண்களின் கருப்பையிலோ அல்லது வாடகைத் தாய்களின் கருப்பையிலோ வைத்து வளரச் செய்வார்கள். இந்த மருத்துவ (அல்லது வியாபார) நடைமுறையின் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர்கள் கருமுட்டைக் கொடையாளிகள்.

பெரும்பாலும் வறுமையான பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு இந்தச் சிக்கலான மருத்துவ நடைமுறைகளைக் குறித்து எதுவும் தெரியாது என்பதோடு மருத்துவர்களும் விளக்கிச் சொல்வதில்லை. கருமுட்டைகளைக் கொடையளிக்க முன்வருகிறவர் மாதவிடாய் துவங்கிய இரண்டாம் நாளில் இருந்தே ஹார்மோன் ஊசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சாதாரணமாக ஆரோக்கியமான ஒரு பெண்ணின் சினைப்பையில் ஓரிரு கருமுட்டைகளே உருவாகும்; ஹார்மோன்களை உடலில் ஏற்றிக் கொள்ளும் போது குறைந்தபட்சம் மூன்றில் இருந்து அதிகபட்சம் 15 கருமுட்டைகள் வரும் உருவாகும். அடுத்து, முட்டைகளின் வளர்ச்சியை தொடர்ந்து மீயொலிச் சோதனைகளின் (Ultrasound) மூலம் மருத்துவர்கள் கண்காணித்து வருவார்கள்.

கருமுட்டைகள் ‘அறுவடைக்கு’ தயாரானவுடன், அவற்றை சேகரிக்கும் மருத்துவ நடைமுறையை ’பிக்-அப்’ என மருத்துவர்கள் அழைக்கின்றனர். கொடையாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மீயொலி உணர்வியால் (Ultrasound sensor) வழிநடத்தப்படும் மெல்லிய ஊசி ஒன்று பெண்ணுறுப்பினுள் செலுத்தப்பட்டு அதன் மூலம் கருமுட்டைகள் சேகரிக்கப்படும். சுமார் முப்பது நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் இந்த மருத்துவ நடைமுறைக்குப் பின் அதே நாளில் கொடையாளியை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.

தொடர்ந்து உடலில் ஹார்மோன்களை ஏற்றுவதாலும், உட்கொள்ளப்படும் மருந்துகளின் வீரியத்தின் விளைவாலும் பெரும்பாலான கருமுட்டைக் கொடையாளிகளுக்கு சினைப்பை வீக்கம் (Ovarian Hhyperstimulation Syndrome – OHSS) ஏற்படும். கருமுட்டைகளைக் கொடையளித்த பின் 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு மீயொலிச் சோதனை மேற்கொண்டு சினைப்பை வீக்க நிலையையும் இரத்தக் கசிவையும் கண்காணிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கொடையாளிகள் செலவைத் தவிர்க்க இந்தச் சோதனையை மேற்கொள்வதில்லை. மேலும், கருமுட்டை சேகரிப்பு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றால் சினைப்பை கிழிந்து இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதீத ஊக்க மருந்துகளின் எதிர்விளைவுகள் குறித்து கொடையாளிகளுக்கு எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லை; மருத்துவர்களும் அவ்வாறாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை. இந்தியச் சட்டங்களின் படி, இவ்வாறு கொடையளிக்க முன்வரும் பெண்களிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த நடைமுறை வெறும் சடங்காகவே பின்பற்றப்படுகின்றது. மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் ஒரு தாளில் கையெழுத்தையும்  வாக்காளர் அடையாள அட்டையின் நகல் ஒன்றையும்  வாங்கிக் கொண்டார்கள் என்றும், அதில் என்ன இருந்ததென்று தனக்குத் தெரியாதென்றும் குறிப்பிடுகிறார் ஷீலா பாட்டீல் (மாற்றுப் பெயர்) எனும் கொடையாளி.

***

ருமுட்டைக் கொடை என அழைத்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இது மொத்தமும் ஒழுங்கமைக்கப்பட்ட வியாபாரமாகவே நடந்து வருகிறது. பெரும் செலவு பிடிக்கும் செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சையை மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், பணக்காரர்களுமே மேற்கொள்கின்றனர். நடுத்தர வயது வரை பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போடும் இவர்கள், இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்புகள் அருகிப் போகும் வயதில் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இந்தியாவில் கருத்தரிப்புச் சிக்கல் எத்தனை பேரிடம் உள்ளது என்பதைக் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை. எனினும், சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படி (Indian IVF & PGD Market, By Structure) 2016-ஆம் ஆண்டில் 1,078 கோடியாக இருந்த செயற்கைக் கருவூட்டல் தொழில் 2022-இல் 2,600 கோடியாக உயரும் எனத் தெரிவிக்கிறது (15.8 சதவீத ஆண்டு வளர்ச்சி)

கருமுட்டைக் கொடையாளிகளை இதற்காக மனதளவில் ’தயாரிக்க’ இடைத்தரகர்களும் உண்டு. அதே போல், இந்தியச் சட்டங்களின் படி கருமுட்டைக் கொடை அளிப்பவர்களை பயனாளிகள் சந்திக்க கூடாது; ஆனால்,  எதார்த்தத்தில் இது மீறப்படுவதாக குறிப்பிடுகிறார் இதற்காகவே தரகு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் கவுரவ் வான்கடே. பணக்கார பயனாளிகள் தமக்கு கருமுட்டை தானம் செய்பவர்கள் சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும் எனவும், படித்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், கல்லூரி மாணவிகளாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பதாகச் சொல்கிறார் வான்கடே. ஒரு சில சந்தர்பங்களில் வெளிநாடுகளில் இருந்து காகாசிய இனத்தைச் (வெள்ளையினம்) சேர்ந்த கொடையாளிகளையும் தான் ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிடுகிறார் வான்கடே.

2005-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, கொடையளிக்க முன்வருகிறவர்கள் 21 இல் இருந்து முப்பத்தைந்து வயதுக்குள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது – ஆனால், ஒரு பெண் எத்தனை முறை கொடையளிக்கலாம், ஒருமுறைக்கும் மறுமுறைக்கும் என்ன இடைவெளி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து எந்த விளக்கமும் இல்லை. 2012ம் ஆண்டு சுஷ்மா பாண்டே எனும் 17 வயதே நிரம்பிய  கருமுட்டை கொடையாளி அதீத ஊக்க மருந்துகளின் எதிர்விளைவால் மரணமடைந்தார்.

ஊக்க மருந்துகளின் எதிர்விளைவால் சினைப்பை வீக்கம், இரத்தக் கசிவு மட்டுமின்றி கான்சர் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர் – இதைக் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2017 ஆம் ஆண்டு ரீப்ரொடக்டிவ் பயோமெடிக்கல் ஆன்லைன் எனும் அறிவியல் இதழில் ஐந்து செயற்கைக் கருவுறுதல் மற்றும் கருமுட்டை வளர்ச்சிக்காக ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்ட ஐந்து பெண்களின்  மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஐந்து பெண்களுமே சிகிச்சைக்குப் பின் சினைப்பை வீக்கப் பிரச்சினையைச் சந்தித்ததும், பின்னர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானதும் தெரியவந்தது.

வறுமையின் கொடுமை தாளாமல் கருமுட்டைக் கொடையாளிகளாக முன்வரும் பெண்களுக்கு, மருத்துவ அலட்சியத்தால் பாதிப்புக்கு ஆளான பின் எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை. சுஷ்மா பாண்டேவின் தாயார் தனது மகளின் மரணத்தைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மேல் தொடர்ந்த வழக்கு இதுநாள் வரை எந்த முன்னேற்றமும் இன்றி அப்படியே தேங்கி நிற்கிறது. வழக்கின் நிலை குறித்து 2016ம் ஆண்டு மகாராஷ்டிரா மனித உரிமை கமிஷனில் செய்யப்பட்ட முறையீடும் எந்த முன்னேற்றமும் இன்றியே உள்ளது.

ஆரோக்கியமான ஒரு பெண் அதிக கருமுட்டைகள் உருவாவதற்கான ஊக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதை அப்பெண்ணின் உடல் ஏற்றுக் கொள்வதில்லை. கருமுட்டைக் கொடையாளிகளாக முன்வருகிறவர்களை மருந்துகளைப் பரிசோதிக்க முன்வரும் தன்னார்வலர்களைப் போல் கருத வேண்டும் என்றும் அவர்களுக்கு வழங்கப்படும் தொகையைக் கட்டனமாக அல்லாமல் இழப்பீடாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்குப் போதிய மருத்துவ வசதிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார் மருத்துவர் ஆனந்த் பாஹ்ன்.

எவ்வாறாயினும், ஒருபக்கம் வறுமையும் , இன்னொரு புறம் காகிதத்தில் மட்டுமே உயிர்வாழும் சட்டங்களும், மற்றொருபுறம் ஏழைகளின் உயிர்களை புழுக்களைப் போல் மதிக்கும் அதிகார வர்க்கம் கைகோர்த்துக் கொள்கின்றன. எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள அப்பாவி ஏழைப் பெண்கள் இந்தச் சூழலுக்குப் பலியாகின்றனர்.

நன்றி: scroll.in (ஸ்க்ரோல் இணையதளத்தில் Priyanka Vora எழுதிய கட்டுரைகளின் சுருக்கப்பட்ட வடிவம்.)

தமிழாக்கம்: சாக்கியன்

இது போராட்டக்காலம் ! புரட்சி வெற்றி கொள்ளும் !! ம.க.இ.க பாடல்

திராமங்கலம், நெடுவாசல் தொடங்கி ’பசுமை’ வழிச்சாலை வரை, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது மோடி அரசு. எதிர்த்துக் கேட்பவர்களின் குரல்வளையை இறுகப் பிடிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இனி என்ன செய்யப் போகிறோம்? எதிர்வரும் தேர்தல் களத்தினை வைத்து இப்பிரச்சினைகளை முடிவு செய்ய முடியமா? இல்லை, போராட்டக் களத்தில்தான் தீர்வு கிடைக்கும் என்பதை உரக்கச் சொல்கிறது இப்பாடல்.

1998-ம் ஆண்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட “ஓட்டு போடாதே புரட்சி செய்” என்ற பாடல் தொகுப்பில் இடம்பெற்ற பாடல் இது.

பாடல் வரிகள்

காலங்கள் மாறும் ! கரங்கள் ஒன்று சேரும் !
மழை காளான்கள் போல் தேர்தல் மாயங்கள் சாகும் !
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!

நாணல்கள் போலே வளைந்த நாட்கள் போதும் !
ஓநாய்கள் பின்னே நடந்து என்ன இலாபம் ?
தேர்தல்கள் போகும் .. ஏமாற்றம் நெஞ்சில் தேங்கும் ..
வேறென்ன மார்க்கம் ? வினாக்கள் நெஞ்சை தாக்கும் ..
உடல் நோகாமல் சாகாமல் வாராது மாற்றம் ..
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!

அதிகாரம் இன்று இல்லை !
அடையாமல் வாழ்க்கை இல்லை !
புதுவாழ்க்கை, நீதி, பண்பாடு ..
வாக்கு சீட்டாலே மாற்றம் வராது !
மணல் கோபுரம் போல் பணநாயகம் வீழும் !
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும்​ !!

பாருங்கள் ! பகிருங்கள் !

வாஞ்சிநாதன் கைது : சிதம்பரம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களாக இருந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோர் மீது பல்வேறு பொய் வழக்குகளை ஜோடித்தது போலீசு. அதன் தொடர்ச்சியாக கடந்த 20.06.2018 அன்று நள்ளிரவில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை கைது செய்தது . இக்கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

26.06.2018 செவ்வாய் அன்று சிதம்பரம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைதைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் ஆர்.டி.ஓ அலுவலக வாயில் அருகில், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எவ்வாறு மக்கள் போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதை விளக்கிப் பேசினார். டாஸ்மாக் போராட்டம், சிதம்பரம் கோவிலில் தமிழ் பாடும் உரிமைப் போராட்டம், காவிரி உரிமைப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முன்நின்று, சமரசமற்ற வகையில் போராட்டம் நடத்தினார் என்பதை விவரித்துப் பேசினார். போராடும் மக்களுக்கு எந்நேரமும் உடன் நிற்கக் கூடியவர் வாஞ்சிநாதன் என்றும் அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி தனது தலைமை உரையை முடித்துக் கொண்டார்.

அடுத்ததாக மூத்த வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் அவர்களின் கண்டன உரையில், கார்ப்பரேட்டுகளின் அடிமை மத்திய அரசும், எடப்பாடி அரசும் எவ்வாறு மக்கள் விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதை விவரித்துப் பேசினார். போராடும் மக்களின் மீதான அரசின் ஒடுக்குமுறையின் போது மக்களுக்காக சட்ட காவலராக வாஞ்சிநாதன் செயல்பட்டார் என்பதால்தான் அவரை இந்த அரசு கைது செய்திருக்கிறது என்றும் இந்தக் கைது கடும் கண்டனத்திற்கு உரியது  கண்டன உரையாற்றினார்.

அதன் பின்னர் வழக்கறிஞர் மணிவண்ணன் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து அவர் பேசுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களின் தன்னெழுச்சியையும், அதற்கு உறுதுணையாக நின்ற மக்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களின் தன்னலமற்ற போராட்டத்தைப் பற்றியும் பேசினார். அவரைக் கைது செய்வதன் மூலம் போராட்டங்களை முடக்கிவிடலாம் என அரசு நினைக்கிறது. வாஞ்சிநாதனைக் கைது செய்தது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்தார்.

வழக்கறிஞர் தயாநிதி அவர்கள் பேசுகையில், மத்திய அரசும், அடிமை மாநில அரசும் எவ்வாறு தமிழக மக்களையும் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் அழிக்க நினைக்கின்றன என்பதை விவரித்துப் பேசினார். மத்திய அரசு தமிழகத்தை மற்றுமொரு காஷ்மீராக எவ்வாறு மாற்ற நினைக்கிறது என்பதைக் குறித்தும் பேசினார். மக்களின் போராட்டங்களுக்கு உடன் நின்று சட்ட உதவியளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், இந்தக் கைது நடவடிக்கை என்பது அடக்குமுறையின் உச்சகட்டம் என்றும் உரையாற்றினார்.

இறுதியாக வழக்கறிஞர் செந்தில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, நின்று கவனித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

தகவல்:
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சிதம்பரம்

Swiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் !

ஸ்விக்கி, சோமேட்டோ, உபர் ஈட். ஃபுட் பண்டா, ஜஸ்ட் ஈட், டேஸ்டி கண்ணா, டோமினோ, பிட்ஸா ஹட். இப்படி 10-க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஃபுட் டெலிவரி சர்விஸ் இணைய டப்பா வாலாக்கள்   சென்னை நகர சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருக்கிறார்கள். சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு வண்ண உடைகளில் உணவு பெட்டிகளை சுமந்துகொண்டு மூச்சு விட முடியாத வாகன நெருக்கடியில் முகத்தை முழுவதும் மூடிக் கொண்டு இரண்டு சக்கர வாகனங்களில் காற்றாய்  பறந்து வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட உணவுகளை கொடுக்கிறார்கள். ”டெலிவரி பாய்ஸ்” என்று மேட்டுக்குடி நுகர்வோரால் அழைக்கப்படும் இவ்வூழியர்களின் ஒரு நாள் உழைப்பு, சக்கரமாக சாலையில் தேய்ந்து ஓய்கிறது.

சென்னை வடபழனி அருகே உள்ள முருகன் இட்லிக்கடை என்ற சங்கிலி உணவு நிறுவனத்தின் வாசலில் 10 க்கும் மேற்பட்ட ”ஸ்விக்கி ஊழியர்கள்” பரபரவென தங்கள்  ஸ்மார்ட் போனில் ஆர்டர் கால்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் நம் கேள்வியில் நாட்டமின்றி தந்தி பாணியில் பதில் பேசினர்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

முதலில் பேசிய ஜெய்சங்கர் ஸ்விக்கியின் விளம்பர வீடியோவாக பேசினார்.

“சென்னையில் ஸ்விக்கி  தான் நம்பர் ஒன் ஆன்லைன் புட் சப்ளையர். டெல்லியில் இருந்து கோயம்பத்தூர் வரை பதினாறு கிளைகள், முப்பத்தைந்தாயிரம் ரெஸ்டாரண்டுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை ஸ்விக்கியில் ஆர்டர் செய்யலாம்.

ஆர்டர் செய்த அரைமணி நேரத்தில் அவர்கள் முன் உணவுடன் இருப்போம். எந்த நேரத்தில் ஆர்டர் கொடுத்தாலும் அவர்கள் விரும்பிய உணவுகளை உடனடியாக கொடுத்து விடுவோம். குழந்தைகளுக்கு என்று இரண்டு இட்லி மட்டும் ஆர்டர் கொடுத்தாலும் எடுத்துக் கொண்டு ஓடுவோம். முதியவர்கள் சிங்கிள் காபி மட்டும் ஆர்டர் சொன்னாலும் சுட சுட அங்கு நிற்போம்.

வெஜ்ஜா, நான் வெஜ்ஜா, சைனிசா, தந்தூரியா, இபாக்கோ  ஐஸ்கிரீமா, சாக்லெட்டா, பிரட் டோஸ்ட் என்ன வேண்டும் எங்கிருந்து வேண்டும் என்று மட்டும் சொன்னால் போதும். சரவணபவனில் இருந்து தலப்பாக்கட்டு பிரியாணி வரை –  இபாக்கோ ஐஸ்கிரீமிலிருந்து ஹைவே கடை வரை நுழைந்து வாங்கி எடுத்துக்கொண்டு ஓடுவோம்” என்று ரேடியோ ஜாக்கி போல வேகமாக பேசினார் ஜெய்சங்கர்.

***

சுலோஜன்

வீடியோகிராபராக இருக்கும் சுலோஜன், “இந்த வேலையை பார்ட் டைம்மா செய்யுறேன். வீடியோ புரோகிராம் ஏதாவது வரும்போது ஒரு லெட்டர் எழுதி கொடுத்து விட்டு போயிடுவேன்.  நாங்க எவ்ளோ ஆர்டர் எடுக்கிறோமோ அதற்கான அமெளண்ட் எங்களுக்கு ஆட் ஆகும். இப்ப நாங்க நாலு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் ஆர்டர் எடுத்துட்டு போனா 36 ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் எக்ஸ்ட்ரா கொடுப்பார்கள். அதேபோல ரெஸ்டாரண்டுகளில் வெயிட்டிங் சார்ஜ் ஆட் ஆகும்.பார்ட் டைமா வேலை செய்யிறதால ஒரு நாளைக்கு 8 முதல் 10 ஆர்டர் வரை எடுப்பேன். ஆர்டருக்கு ஏத்த மாதிரி இன்சென்டிவ் கிடைக்கும்” என்றார்.

கணேஷ்

ருகில் இருந்த கணேஷ், “இந்த வேலையில் ’டைமிங்’ ரொம்ப முக்கியம். அதாவது ஒரு ரெஸ்டாரெண்டில் இருந்து ஆர்டர் எடுக்கிறோம் என்றால் முப்பது நிமிடம் டைம் கொடுப்பார்கள். அதற்குள் வாடிக்கையாளரிடம் சென்று ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் இன்சென்டிவ் ஆட் ஆகும். அதிகமாக எங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறவங்க பேச்சுலர்ஸ், மாணவர்கள், வயதானவர்கள், போன்றோர்களிடம் இருந்து தான் ஆர்டர்கள் குவியும்” என்று சொல்லி முடித்தவுடன் மீண்டும் சுலோஜன் ஆரம்பித்தார்.

கணேஷ்

“ட்ராபிக் இல்லாத நேரம் தான் எங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும்….  எவ்வளவு மழையாக இருந்தாலும் நாங்க சமாளிச்சிடுவோம். கஸ்டமருக்கு உடனேயே டெலிவரி பண்ணா எங்கள பாராட்டுவாங்க. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏன்னா எங்களுக்கும் ”ரேட்டிங் ஸ்டார்ஸ்” உண்டு. நாங்க சீக்கிரமாக டெலிவரி செய்தால் ”ஃபைவ் ஸ்டார்” கொடுப்பாங்க. இதனால எங்களுக்கு இன்சென்டிவ் கிடைக்கும். அதேமாதிரி எங்க கிட்ட அன்பா அணுசரனையா நடந்துக்கிற கஸ்டமருக்கு நாங்களும் ”ரேட்டிங் ஸ்டார்” கொடுப்போம். அந்த  கஸ்டமர் மீண்டும் எதாவது ஆர்டர் கொடுத்தால் அவர்களுக்கு பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை ஆஃபர் கொடுப்பார்கள். பல நேரம் கஸ்டமரோட நச்சரிப்புதான் அதிகமா இருக்கும். ட்ராபிக்ல மாட்டிப்போம்…போனையும் எடுக்க முடியாது அத புரிஞ்சிக்கவே மாட்டாங்க…”என்று பொறிந்து தள்ளினார்.!

முத்து தன் சக ஊழியர்களுடன்.

ருகாமையில் இருந்த ஊழியர் முத்து, “அவர்களுக்கு பிடித்த விதவிதமான உணவுகளை சொன்ன நேரத்தில் எடுத்துக் கொண்டு ஓடினாலும் பல வாடிக்கையாளர்கள் கதவு ஓட்டை வழியாக வாங்கி இயந்திரம் போல் எங்களை அனுப்பி விடுவார். சிலர் ஆர்டர் கொடுத்த அரைமணி நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விடுவார்கள். போனில் கூப்பிட்டால் ஏன் இவ்வளவு லேட்  இப்பதான் வெளியே போனேன்” என்பார்கள்.

“ஆர்டரை முறையாக கேன்சல் செய்ய மாட்டார்கள். குறை கூறி முறைத்துக் கொண்டுதான் திருப்பி அனுப்புவார்கள். மதியம் பீக் ஹவரில் பன்னிரண்டு டூ  இரண்டு உணவு ஆர்டர்கள் குவியும். அப்போது எடுத்து செல்லும் உணவு பார்சல்களை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து பிறகு கையெழுத்து போடுவார்கள். இப்படி ஒவ்வோரிடமும் அரை மணி நேரம் வீணாகும். இதனால் ஆர்டர்கள் பல கேன்சல் ஆகும். அன்றைக்கு எங்கள் சம்பளமும் குறையும்.”

டோமினோஸ் பீட்சா, ஃபோரம் மால்.

“எடுத்து சென்ற உணவுப்பொருட்கள் ஒவ்வொன்றையும் குறை சொல்வார்கள். காப்பியா இது சூடு இல்ல, ஐஸ்கிரீம் இப்படி ஒழிவிடுதே, ஏன்? எக்ஸ்டரா சாம்பார் கேட்டேன் இல்லையே. நான் கையெழுத்து போட மாட்டேன் உங்க ஆபிசுக்கு போன் பண்ணு என்பார்கள். வெகு சிலர் தான் தண்ணீர் குடிக்கிறீர்களா? நீங்கள் சாப்பிட்டீர்களா என்று விசாரிப்பார்கள்.”

“சிலர் ஐம்பது ரூபாய் பில்லுக்கு இரண்டாயிரம் ரூபாய் நீட்டுவார்கள். சில்லறை இல்லன்னா பார்சலை எடுத்துக்கினு போங்க என்று எரிந்து விழுவார்கள். சிலர் இருநூத்தி ஐந்து ரூபாய் பில்லுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து சில்லறை ஐந்து கேட்டால்  இல்லை என்று சொல்வார்கள். மீதி முன்னூறு ரூபாயை வாங்கிக்கொண்டு பட்டுனு கதவை மூடுவார்கள்”என்றார்.

பாம்பேஸ்தான், ஃபோரம் மால்.

ஆர்டர் முடித்து திரும்பி வந்த கணேசன், “சார்…..! ஆயிரம் குறை இருந்தாலும் இந்த வேலை எங்களுக்கு நிம்மதியை தருது சார். ஆபிஸ் மாதிரி இங்க எங்களுக்கு யாரும் மேய்க்கிறதுக்கு இல்ல. நானே ராஜா, வேலை செய்யணும்னு நெனச்சா ஆஃப்பை  ஓப்பன் பண்ணி ஆர்டர் எடுப்பேன். உடம்பு சரியில்ல ரெஸ்ட்  வேணும்னா  ஆப்பை ஆப் பண்ணிடுவேன்.

திடீர்னு வீட்டுக்கு போணும்னா உடனே ஆப்பை குளோஸ் பண்ணிட்டு போயிடுவேன். அடுத்த வாரம் வீட்டு செலவுக்கு பணம் தேவைன்னா, இரவு பகல் பார்க்காம வேலை செய்வோம். திங்கள் டூ  வெள்ளி அஞ்சு நாள் என்பத்தி ஐந்து ஆர்டர் விடாமல் செஞ்சி சம்பளம் கூட இன்சென்டிவ் ஆயிரம் கிடைக்கும். சனி, ஞாயிறு இரண்டு நாள்ல வீக் எண்டு ஆர்டர் இருபத்தி ஐந்து எடுத்தா ரூபாய் எழுநூத்தி ஐம்பது தனியா இன்சென்டிவ் கிடைக்கும். இப்படி ஒரு வாரத்துல திடீர்னு ஏழாயிரம் எட்டாயிரம் சம்பாதிப்போம்” என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் அடுத்த ஆர்டர் வந்து விட்டது என்று ஓடினார்.

கே.எஃப்.சி., ஃபோரம் மால்.

அங்கிருந்த வெங்கட், “சார் இங்க இன்ஜினியர் ஐ.டி.ஐ. டிகிரி டிப்ளமோ படிச்சவங்க எல்லோரும் வேலை செய்யிறாங்க. ஒரு ஸ்மார்ட் போனும், ஒரு டூ வீலரும் இருந்தா போதும் இந்த வேலைய செய்யலாம். குறைந்த பட்சம் மொபைல்ல வர இங்கிலீஸ் அட்ரஸை படிக்க தெரியனும். வெய்யிலு மழை தூசு தும்பு ரோடு டிராபிக்கினு  பாக்காம வண்டியில அலையனும். தினமும் நூத்தி ஐம்பது கிலோ மீட்டருக்கு குறையாம வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கினு தெருவுல சுத்தணும். பெட்ரோலுக்கு இருநூறு ரூபா, சாப்பாடு மேல் செலவு இருநூறு ரூபா போக வீட்டுக்கு வாரம் நாலாயிரம் ஐயாயிரம் நிக்கும். இரண்டு வாரம் தொடர்ச்சியா நிக்காம வேலை செய்வோம்.

அடுத்து உடம்பு அடிச்சி போட்ட மாதிரி ஆயிடும். நம்ம பேச்ச நம்ம உடம்பு கேக்காது. உடம்பு பச்சை புண்ணா நோவும். லீவு போட்டு ரெஸ்ட் எடுப்போம். இதுல அடிக்கடி பல பேருக்கு ஆக்சிடென்ட் ஆகும். அந்த செலவை நாம தான் பார்த்துக்கணும். இரண்டு மாசம் முன்ன அரி என்ற பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகி கையை எடுத்துட்டாங்க. என்ன செய்யறது?

டிராபிக் எவ்ளோ இருந்தாலும் பேய் மாதிரி பாரப்போம். அப்ப சேஃப்டியா  போகணும்னு தோணாது. இதை பாருங்க போனை கஸ்டமருங்க ஆர்டர் கொடுக்கும்போது ரெக்வஸ்ட்ல பல கண்டிஷன் போடுவாங்க. பாஸ்ட்டா (வேகமா) குயிக்கா ( சீக்கிரமா) ஹாட்டா (சூடா) ஸ்பைசியா (காரமா) எக்ட்ஸ்ரா (சட்னி-சாம்பார்) ஃபிரீசா (ஐஸ்) இப்படி இங்கிலீஷிலே டைப் பண்ணிட்டு ஒரு நிமிஷம் லேட்டா போனாலும் ஆயிரம் கேள்வி கேட்பாங்க. ஆர்டர் கேன்சல்னு சப்ளையர் டேபிள்ல கத்துற மாதிரி கதவை மூடிடுவாங்க. இருந்தாலும் இந்த வேலை எங்களுக்கு புடிச்சி இருக்கு. அதான் இங்க இவ்ளோ பேர் வேலைக்கு வர்றாங்க.

இங்க  சுதந்திரமா (?)  இருக்கலாம். ஆபிஸ்ல ஒருநாள் லீவ் எடுத்தாலும் ஒருமணி நேரம் தலையை சொரியணும். இங்க அது இல்ல. ஆஃப்பை ஆப் பண்ணினா லீவு. ஆஃப்ப ஆன் பண்ணி ராவும் பகலும் காலை லாக் பண்ணி ஆர்டர் எடுத்தா எக்ஸ்டரா பணம் இன்சென்டிவ் கிடைக்கும்.

சொந்தமா பிசினஸ் பண்ணி லாஸ் ஆனவங்க, ஆபிஸ் வேலை பிடிக்காதவங்க, பார்ட் டைமா பணம் சம்பாதிக்க நெனைக்கிறவங்க.. ஸ்டூடென்ட்ஸ் எல்லாரும் இங்க வராங்க… முடிஞ்ச வரைக்கும் வேலை செய்யலாம். முடியலண்ணா போயிடலாம். இந்த சுதந்திரம் வேற எங்க கிடைக்கும். சார் நான் வர்றேன்……” கஸ்டமர் ஆர்டர் ரிங் சவுண்டு கேட்டு 108 ஆம்புலன்ஸ் சவுண்டு மாதிரி பதட்டத்தோடு வண்டியை நோக்கி ஓடினார்.

குறிப்பு: உணவு டெலிவரி சந்தையில் இந்தியா முழுவதும் எண்ணற்ற ஊழியர்களின் கடினமான உழைப்பில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது ஸ்விக்கி. அந்த வளர்ச்சியின் குறியீடாக மைக்ரோ டெலிவரி என்று அழைக்கப்படும் பால், மருந்து, மளிகை சாமான்கள், செய்தி தாள்கள் போன்றவற்றை தற்போது வழங்கி வரும் ”ஸ்பர் டெய்லி(Spur Daily)” நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த ” ஸ்பர் டெய்லி” நிறுவனத்தில் பல ”வெஞ்சர் கேப்பிடல்” நிறுவனங்கள் பல லட்சங்களில் முதலீடு செய்துள்ளன.
பத்திருபது வருடங்களுக்கு முன்னர் விற்பனையாளர் பிரதிநிதிகள் வேலை போல தற்போது இந்த உணவு விநியோக வேலை இளைஞர்களை இழுக்கிறது. ஆனால் யாரும் இங்கே நிரந்தரமாக வேலை பார்க்க இயலாது. குறிப்பிட்ட ஆண்டுகளில் கடும் உடல் வலி, இடுப்பு வலியுடன் வண்டியே ஓட்ட முடியாது என்ற நிலையை இவர்கள் அடைகிறார்கள்.
மேலும் இன்சென்டிவ் என்ற பெயரில் இவர்களது சம்பளம் பல்வேறு நிபந்தனைகளோடு பிணைக்கப்பட்டிருப்பதால் இவர்களும் ஓலா, உபர் ஓட்டுநர்கள் போல அதிக சவாரிகளுக்குகாக அபாயகரமாக ஓட்டுகிறார்கள். சென்னையில் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம் அதிகரித்து வரும் தீனி வெறியும், சோம்பேறித்தனமும் இத்தகைய விநியோக வேலைகளுக்கான கிராக்கியை அதிகரித்து வந்தாலும் இதை ஒரு “வளர்ச்சி” என்று பார்க்க முடியாது. உட்கார்ந்து தின்பவர்களுக்காக ரிஸ்க் எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இந்த ஸ்விக்கி இளைஞர்கள்!
  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல ! கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம் !

0

“எங்களது தொழில் செய்தித் தாள்கள் நடத்துவதல்ல; நாங்கள் விளம்பரத் தொழில் செய்து கொண்டிருக்கிறோம்” (We are not in the newspaper business, we are in the advertising business) – 2012 ஆம் ஆண்டு நியூயார்க்கர் பத்திரிகையின் செய்தியாளர் கென் ஔலெட்டாவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் வினீத் ஜெயின். வினீத் ஜெயின் இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை குழுமத்தின் முதலாளி.

முன்பெல்லாம் பத்திரிகைகள் அறிவுத்துறையினருக்கானதாக நடத்தப்பட்டு வந்ததென்றும் அப்போதெல்லாம் அத்தொழில் காத்திரமானதாக இருந்ததென்றும் குறிப்பிடும் வினீத் ஜெயின் தங்களது வாசகர்களைப் பொருத்தவரை இவையெல்லாம் அனாவசியமானவை என்கிறார். பென்னட் கோல்மன் குழுமத்துச் சொந்தமான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை இந்தியாவின் மிகப் பெரிய ஊடகம். கடந்தாண்டு டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் மொத்த வருவாய் 10,000 கோடி.  இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆங்கிலப் பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியாவின் சார்பாக வெளியாகும் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை, மிக அதிகமாக விற்பனையாகும் பொருளாதாரப் பத்திரிகையாக உள்ளது.

அச்சு ஊடகங்கள் தவிர ரேடியோ மிர்ச்சி எனும் பண்பலை வானொலியும், டைம்ஸ் நௌ மற்றும் மிரர் நௌ ஆகிய ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளும், மூவீஸ் நௌ எனும் ஆங்கிலத் திரைப்படச் சேனலும் இக்குழுமத்திற்குச் சொந்தமானதாகும். நடுத்தர வர்க்கத்திடையே கருத்துருவாக்கம் செய்வது மாத்திரமின்றி அரசியல் அரங்கின் நிகழ்ச்சி நிரல்களையே தீர்மானிக்கும் வல்லமை டைம்ஸ் குழுமப் பத்திரிகைகளை நடத்தும் பென்னட் கோல்மன் நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர்களான ஜெயின் சகோதரர்களுக்கும் உண்டு. ராலேகான் சித்தி எனும் வரப்பட்டிக்காட்டில் யாரும் சீந்தாமல் கிடந்த அன்னா ஹசாரேவை தேசத்தின் அரசியல் அரங்கின் மத்தியில் நிறுத்தியதாகட்டும், பாபா ராம்தேவ், கேஜ்ரிவால் உள்ளிட்டவர்களை ‘ஆளுமைகள்” ஆக்கியதாகட்டும், தில்லி மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதற்கு எதிராக தேசத்தின் மனசாட்சியை உலுக்கியதாகட்டும் – இவை தவிற ஏராளமான சந்தர்பங்களில் டைம்ஸ் குழுமப் பத்திரிகைகளால் முன்னெடுக்கப்பட்ட விசயங்கள் அந்தந்த காலகட்டத்தின் பேசு பொருளாக இருந்துள்ளன.

டைம்ஸ் குழுமம் தலையிட்ட பிரச்சினைகள் அனைத்தையும் மக்கள் பார்த்த கண்ணோட்டம் வேறு அப்பத்திரிகை முதலாளி பார்த்த கண்ணோட்டம் வேறு என்பதையே நியூயார்க்கர் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி உணர்த்துகின்றது. முதலாளித்துவ பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவின் செயல்பாடுகளும் அந்தப் பத்திரிகைகளின் விளம்பரப் பிரிவுக்கும் இடையே நிலவிய  எல்லைக் கோட்டின் பின் மற்ற பத்திரிகைகள் ஒளிந்து கொண்டு பம்மாத்து செய்து கொண்டிருந்த போது அதை பகிரங்கமாக மீறி – அப்படி மீறுவதற்கான முன்னுதாரணத்தை நிறுவிக் காட்டியது டைம்ஸ் குழுமப் பத்திரிகைகள். எது செய்தி, எது விளம்பரம் என்பதற்கான அளவீடுகள் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு முற்றும் துறந்த நிர்வாண நிலையை ஏற்கனவே அடைந்திருந்த டைம்ஸ் ஆப் இந்தியாவைத் தனது ஆப்பரேஷன்-136 இன் ஒரு பகுதியாகச் சந்திக்கிறார் ‘ஆச்சார்யா அடல்’.

***

’ஆச்சார்யா அடல்’

‘ஆச்சார்யா அடல்’ அணிந்து கொண்ட முகமூடியும் அவிழ்த்து விட்ட கதைகளிலும் எந்த மாறுபாடும் இல்லை. இந்துத்துவத்தை ஆன்மீக முகமூடியுடன் களமிறக்குவது, அதற்கு பகவத் கீதையை பயன்படுத்திக் கொள்வது, இந்தப் பிரச்சாரத்தை ’செய்திகளாகவும்’,’விளம்பரங்களாகவும்’ மறைமுகமாகவும் நுட்பமாகவும் செய்வது, இதனால் உருவாகும் ஒருவிதமான ’ஆன்மீக சூழலை’ ஓட்டுக்களாக அறுவடை செய்வது, அரசியல் ரீதியிலான எதிர்தரப்பு ஆளுமைகளை கிண்டல் கேலி செய்து மக்களிடம் அவர்களின் மேல் அதிருப்தியை உண்டாக்குவது – இது தான் புஷ்ப ஷர்மா எனும் கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் பத்திரிகையாளர் முன்வைத்த திட்டம்.

புஷ்ப ஷர்மா

தனது மறைபுலனாய்வின் (Sting operation) அங்கமாக மற்ற பத்திரிகைகளை அணுகியது போலவே இரகசிய கேமராவுடன் டைம்ஸ் பத்திரிகையையும் அணுகியுள்ளார் புஷ்ப ஷர்மா. தான் முன்வைக்கும் திட்டம் ‘நாக்பூரில்’ தயாரானது என்றும் இதற்காக 500 கோடி வரை செலவிடத் தயார் என்றும் டைம்ஸ் குழுமத்தை நம்பவைத்துள்ளார். ஐநூறு கோடி என்பது கடந்தாண்டில் டைம்ஸ் குழுமம் ஈட்டிய மொத்த வருவாயில் (10,000 கோடி) ஐந்து சதவீதம் என்பதால் ஆச்சார்ய அடலுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

’ஆச்சார்ய அடலின்’ நன்மதிப்பையும் அவரது வியாபாரத்தையும் பெற மற்ற ஊடகங்களை விட பல படிகள் இறங்கி வந்த டைம்ஸ் குழுமம், செய்தித் தாள் மட்டுமின்றி அவற்றோடு தாம் இலவசமாக வழங்கும் பேஜ் 3 பக்கங்களிலும் ’ஆன்மீக விழிப்புணர்வை’ ஊட்டுவதற்குத் தயார் என முன்வந்துள்ளனர். மேலும், தமது குழுமத்தைச் சேர்ந்த பிற பத்திரிகைகளான பெமினா, ஹெலோ, க்ரேஸியா, டாப் கியர், குட் ஹோம்ஸ் போன்ற பத்திரிகைகளையும் இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதில் டாப் கியர் என்பது மோட்டார் வாகனங்களுக்காகவும், குட் ஹோம்ஸ் என்பது ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் பிரத்யேகமாக நடத்தப்படும் பத்திரிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர தாம் நடத்தி வரும் 12 தொலைக்காட்சி சேனல்களின் மூலம் ஒருகோடியே இருபது லட்சம் நேயர்களையும், பண்பலை ரேடியோ மூலம் 13 கோடி நேயர்களையும் அடைய முடியும் என எடுத்துக் கொடுக்கிறார்கள்.  தவிர ’ஆச்சார்ய அடல்’ வழங்கும் நிகழ்ச்சிக்கான விளம்பரங்களையும் தாமே பார்த்துக் கொள்வதாகவும், முக்கிய நகரங்களில் விளம்பரப் பதாகைகளை தாமே நிறுவிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  போலவே தாம் நடத்தும் பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டிகள், எகனாமிக் டைம்ஸ் மற்றும் ரேடியோ மிர்ச்சி நடத்தும் விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டு எல்லா தளங்களையும் இந்துத்துவ பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கதவுகளை அகலத் திறந்து வைத்துள்ளனர். மட்டுமின்றி, இந்துத்துவ பிரச்சார வீடியோக்களை தயாரிக்க வேறெங்கும் அலைந்து சிரமப்பட வேண்டாமென்றும் தங்களது பிரத்யேகமான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் டைம்ஸ் ஸ்டூடியோவையே பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

***

வினீத் ஜெயின்

’ஆச்சார்ய அடல்’ டைம்ஸ் குழும உயரதிகாரிகளோடும் முதலாளி வினீத் ஜெயினுடனும் நடத்திய இரண்டாவது சந்திப்பின் போது பணப்பரிவர்த்தனை குறித்து விவாதிக்கப்படுகிறது. அப்போது ஆரம்ப கட்டமாக 10 சதவீத தொகையை (50 கோடி) பணமாகத் தான் தரமுடியும் என்கிறார். இதற்கு ஆரம்பத்தில் தயங்கிய வினீத் ஜெயின், பின்னர் பணமாகவே பெற்றுக் கொள்ள சம்மதிக்கிறார். அடுத்து, இந்தப் பணத்தை நேர் வழியில் அல்லாமல் முறைகேடாக பெற்றுக் கொள்ளும் வழிகளை விவாதிக்கின்றனர். அதன்படி, டால்மியா, அதானி, அம்பானி அல்லது எஸ்ஸார் குழுமத்திடம் பணமாகக் கொடுத்து விட்டால் அவர்கள் அதை டைம்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுத்து விடுவார்கள் என ஆச்சார்யா முன்வைக்கும் ஆலோசனையை ஜெயின் ஏற்றுக் கொண்டு இன்னொரு பெயரையும் பரிந்துரைக்கிறார்.

கரீனா கபூருடன் வினீத் ஜெயின்.

அதாவது டைம்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டனத்தை மேற்சொன்ன நிறுவனங்களுக்கு கருப்பில் கொடுத்தால் அதை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதே பணப்பரிவர்த்தனை குறித்து நடந்த ஆலோசனைகளின் சாரம். பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் நாடே துன்பத்தில் கதறிக் கொண்டிருந்த போது அந்த நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழித்து விடும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளே நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்க கூடியது என்றும் டைம்ஸ் குழுமப் பத்திரிகைகள் ஒரு பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறதா?

அது மட்டுமின்றி ஐந்தாண்டுகளுக்கு முன் அன்னா ஹசாரேவும், பாபா ராம் தேவும் ஊழல் மற்றும் கருப்புப் பண பிரச்சினையை முன்வைத்து புழுதியைக் கிளப்பிக் கொண்டிருந்த போது அவர்கள் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டது மட்டுமின்றி கருப்புப் பண மீட்பு என்பதை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந்ததிலும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டைம்ஸ் நௌ சேனலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. கார்ப்பரேட்மயமாகிப் போன ஊடகங்களிடம் இருந்து அற மதிப்பீடுகளை எதிர்பார்ப்பதோ, இந்துத்துவ விசமப் பிரச்சாரங்களுக்கு எதிர்த்து நிற்கும் யோக்கியதையையோ எதிர்ப்பார்ப்பதைக் கூட முட்டாள்தனம் எனச் சொல்லலாம். ஆனால், வருமானத்திற்காக கருப்புப் பணத்திலும் கூட கை நனைக்க தயாராக இருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

***

கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் புலனாய்வு முக்கியமான சில உண்மைகளை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது. முதலில், ஊடகங்களுக்கென்று இருப்பதாக ஊடகவியலாளர்கள் சொல்லிக் கொள்ளும் அறம், கடமை, பொறுப்புணர்வு உள்ளிட்ட கந்தாயங்கள் அனைத்தும் பணம் என்கிற வஸ்துவின் முன் உருகிக் காணாமல் போய் விடும் என்பது. பல்வேறு விவாதங்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும் குறித்து கருத்து சொல்வதற்கான யோக்கியதையை (High Moral Ground) அந்த ஆண்டவனே தமக்கு அளித்திருப்பதைப் போல் நடந்து கொள்வது அறுவெறுப்பான நடிப்பு என்பதை இந்த அம்பலப்படுத்தல் உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டாவதாக, செய்தி ஊடகங்களை வழிநடத்துவது ஆசிரியக் குழுவின் சுதந்திரம் (Editorial freedom) அல்ல; மாறாக அந்த ஊடக நிறுவனத்தின் விளம்பரப் பிரிவும் அதன் தலைவரும் தான். சில ஆண்டுகளுக்கு முன் டைம்ஸ் ஆப் இந்தியா தனது முகப்பு  இலட்சினையை (Mast) விளம்பரங்களுக்காக வாடகைக்கு விட்டது பெரும் விவாதங்களைக் கிளப்பியது நினைவிருக்கலாம். ஆனால், வெகு சில ஆண்டுகளுக்குள்ளாகவே மொத்த பத்திரிகையையும் விளம்பர பேனராக மாற்றும் அளவுக்கு ஆசிரியக் குழுவின் மீது விளம்பரப் பிரிவின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது.

மூன்றாவதாக, ஏற்கனவே பலமுறை அம்பலமான பத்திரிகைகள் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்கள் என்கிற மாயை மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. நான்காவதாக, பாசிசம் என்பது இனிமேல் ஆர்.எஸ்.எஸ். அல்லது அதன் துணை அமைப்புகளால் உண்டாகும் அச்சுறுத்தல் எனும் நிலையைக் கடந்து அரசு இயந்திரம் மட்டுமின்றி ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணும்’ அதற்கு உடந்தை என்கிற உண்மை அம்பலமாகியுள்ளது. டைம்ஸ் குழும முதலாளி மட்டுமின்றி தனது இரகசிய புலனாய்வின் அங்கமாக கோப்ராபோஸ்ட் பத்திரிகையாளர் சந்தித்த அனேக ஊடகங்கள் தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இருந்தே இந்துத்துவ பிரச்சாரத்துக்கு முன்வந்துள்ளன.

பத்திரிகைகள் மட்டுமல்ல; பொதுமக்களின் நிதி விவகாரங்களைக் கையாளும் சில தனியார் நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இருப்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

– தொடரும்.

  • சாக்கியன்

முந்தைய பகுதி: கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்

பா.ஜ.க + மதுரை ரயில்வே போலீசால் புனையப்பட்ட பொய்வழக்கு முறியடிப்பு

டந்த 14.06.2018 அன்று மதுரையிலிருந்து குருவாயூர் வரை செல்லும் ரயிலில் மணப்பாறை மக்கள் அதிகாரம் தோழர்கள், ஸ்டெர்லைட் அரசின் படுகொலையை கண்டித்து திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். அதனை பயணிகளும் ஆர்வமாக வாங்கி படித்து நிதியளித்தனர்.

பொதுமக்கள் ஆர்வமாக படிப்பதையும் வாங்குவதும் நிதியளிப்பதையும் கவனித்துக் கொண்டிருந்த இருவர் திடீரென எழுந்து கத்தத் துவங்கினர். பொது இடத்தில் அரசை விமர்சித்துப் பேசுவது, பிரசுரம் தருவது தவறு என்றும் கூறி பிரச்சாரத்தைத் தடுத்தனர். ”உங்களுக்கு பிடிக்கலைனா  வாங்காதீங்க, இதை கேட்பவர்களுக்கு கொடுக்கிறோம் உங்களுக்கு என்ன பிரச்சனை?“  என்று மக்கள் அதிகாரம் தோழர்கள் கேள்வி கேட்டதும், அவர்கள் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்றும் சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் என்றும் பேசினர். இவர்களின் காவி நிறத்தைப் புரிந்து கொண்ட தோழர்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் முகத்தை அம்பலப்படுத்தி பேசினர். உடனே தோழர்களின் முகத்க்தை வீடியோ எடுத்து, ”உங்களை என்ன செய்கிறேன் பார்” என மிரட்டிப் பணிய வைக்க முயன்றனர். அதைப் பற்றி கவலைப்படாமல் பிரச்சார வேலையில் கவனம் செலுத்தத் துவங்கினர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

காவிகள் இருவரும் முகநூலில் பரப்பிய செய்தி மக்களுக்கு முன்னதாகவே போலீசாருக்கு போனதுதான் மிக ஆச்சரியம். இறுதியாக அச்செய்தி, மணப்பாறை கியூ பிரிவு போலீசுக்கும் போய்ச் சேர்ந்தது போலும். மணப்பாறை கியூ பிரிவு போலீசு தமது பங்குக்கு புகைப்படத்தையும் வீடியோவையும் காட்டி பூச்சாண்டி காட்டியது.

கடந்த 22-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் மதுரை ரயில்வே ஆய்வாளர் உட்பட 6 போலீசார் மணப்பாறை உள் கிராமம் வரை தேடித் துலாவி  சிவகுமார் என்ற தோழரைக் கைது செய்தனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட மற்றொரு தோழரான முரளியை பிடிக்க பெரும் பாடுபட்டனர். பகல் 12 மணி வரை அவரை பிடிப்பதற்கு பெருமுயற்சி செய்தனர். ஆனால் அவர் தனது உறவினர் இறப்புக்காக வெளியூர் சென்றிருந்ததால் கைது செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி மாலை 3 மணியளவில் கடத்தி செல்லப்பட்ட தோழர் சிவகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த பெண் நீதிபதியிடம் ஏற்கனவே ஆர்எஸ்எஸ்-காரர்கள் எடுத்த வீடியோவை போட்டு காட்டினர். வீடியோவை பார்த்த நீதிபதி புகார் பெறபட்டதா என கேள்வி எழுப்பினார். புகார் எதுவும் இல்லை என்ற போலீசு, ”மேடம், இவர்கள் அரசின் ஸ்டெர்லைட் கொள்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர்” என்று மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பை நீதிபதியிடம் கூறினர்.

அதற்கு அந்த நீதிபதி ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் அரசின் கொள்கையை விமர்சிக்கவும் தனக்குப் பிடிக்காத கொள்கையின் மீது கருத்து சொல்லவும் உரிமை இல்லையா என்று வினவினார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அடுத்த விஷயத்திற்கு தாவினர்.

“மேடம், இவர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தனர்” என்று பொய்யான தகவலைக் கூறினர். உடனே நமது தோழர் ரயிலில் பயணம் செய்ததற்கான டிக்கெட் தம்மிடமுள்ளது என்றும் அவசியமானால் மறுநாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிபதாகவும் கூறி போலிசாரின் பொய் முகத்தைக் கிழித்தெறிந்தார்.

நீதிபதி போலீசிடம், ”பிரிவு 153 B-ல் கைது செய்து இருக்கிறீர்கள், எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்?, எப்போது கைது செய்திர்கள்?” என கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். அப்போதும் திருந்தாத போலீசு மதுரை பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்தபோது பாய்ந்து சென்று பிடித்ததாக ஒரு கதையை கட்டியது. அதனை மறுத்த நமது தோழர், நடந்த சம்பவத்தைக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ”இவர்கள் எப்போதுமே இப்படித்தான் கூறுவார்கள். ஆகவே இந்த வழக்கை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் எந்தவிதமான அடிப்படையுமில்லை சிறைக்கு அனுப்புவதற்கான முகாந்திரமும் இல்லை. ஆகவே நீங்கள் வெளியே செல்லலாம். தேவைப்படும் போது உங்களுக்கு சம்மன் அனுப்புகிறோம். அப்போது மட்டும் வந்தால் போதும்” எனக் கூறி நமது தோழரை வெளியே அனுப்பி வைத்தார் நீதிபதி.

அதோடு நிற்காமல் இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் ஆதாரங்கள், ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் வேறு நீதிபதியிடம் செல்லக்கூடாது என்றும் தன்னிடமே வர வேண்டும் என்றும்  கறாராகவும்  கண்டிப்போடும் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இறுகிய முகத்தோடு வெளியே வந்த போலீசாரை விரட்டிப் பிடித்த தோழர், ”அப்படியே விட்டுட்டு போனா என்ன அர்த்தம்?  எப்படி அழைத்துக் கொண்டு வந்தீர்களோ அதேபோல திரும்பவும் என்னை ஊரில் கொண்டு போய் விட வேண்டும்” என்றார். ”எங்கள் வண்டி கைது செய்யத்தான் இருக்கிறது. திரும்ப அழைத்துச் செல்ல முடியாது” என்றனர். இதை ஏற்காமல் விடாப்பிடியாக நின்று போராடினார் வேறு வழியில்லாமல் தோழரின் போக்குவரத்திற்கு தனது சொந்தப் பணத்தை வாழ்க்கையில் முதன்முதலாக கொடுத்து அனுப்பியது போலீசு.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்புக்கு வந்த போலீசார், காலையிலிருந்து தோழர் சிவக்குமாருக்கும், அதிகாரிக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தையும், விசாரணையின் போது நமது தோழர்கள் எதிர்கொண்ட துணிச்சலையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இடையில், தோழரிடம் தொலைபேசியில் பேசிய  DSP, புரட்சிகர அமைப்பில் இருக்காதீர்கள் அதிலிருந்து வெளியேறுங்கள்” என வகுப்பெடுத்தார். ” நாங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம். நாளைய தேவைக்கு  சுத்தமான காற்று, தண்ணீர் வேண்டுமென்றுதான் போராடுகிறோம்” என DSP-க்கு மக்கள் அதிகாரம் தோழர் வகுப்பெடுத்தார். அதை அங்கிருந்த போலீசார் கவனித்துக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து வெளியே வந்தவுடன், ”நீங்கள் ஜெயிச்சிட்டீங்க தம்பி, வாழ்த்துக்கள்” என்று கைகுலுக்கி வெளியே  அனுப்பி வைத்தனர்.

ரயிலில் பயணிகள் கொடுத்த ஆதரவு காவிகளுக்கும், போலீசு கும்பலுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

”சமூகவிரோதிகள்-பட்டியல்துறை அமைச்சர்” பொன்னார் நாளை, “சமூகவிரோதிகள் காவல்துறையில் மட்டுமல்ல,  நீதித்துறையிலும் புகுந்து விட்டனர் என்றும் அறிக்கை விடலாம். நல்ல முன்னேற்றம் தான்!

ஆளுகின்ற மோடி எடப்பாடி அரசுகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக நமது கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. க்கு அடியாட்களாக காவல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருப்பதோடு, மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின் தேவையையும் உணர்த்தியிருக்கிறது, இந்த சம்பவம்.

தமிழகமே அஞ்சாதே!!!
எதிர்த்து நில்!!!

தகவல்: மக்கள் அதிகாரம், மணப்பாறை.
தொடர்புக்கு : 98431 30911

இதுதான் ராமராஜ்யம் | நூல் அறிமுகம்

ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பு குறித்துச் சரியான புரிதல் இன்றி, அவர்கள் மதத்தை அவர்கள் பரப்பக்கூடாதா என்று சிலர் கேட்டனர். ராம ராஜ்யம் என்பது வெறும் ஆன்மீகப் பரப்புரை அன்று, அது ஓர் அரசியல் முழக்கம். ராம ராஜ்யம் ஏற்படுமானால் அது எப்படி இருக்கும் என்பதை விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இப்போது அது காலத்தின் பெரும் தேவையாக உருவெடுத்துள்ளது.

சங் பரிவாரத்தின் முதன்மையான நோக்கமே, ‘பாரத வர்ஷத்தில் ராம ராஜ்யத்தை’ அமைப்பதுதான். அவர்களின் முதல் எதிரியான காந்தியாரின் வேட்கையும்           ராமராஜ்யத்தை உருவாக்குவதுதான். எனவே ராமராஜ்யம் என்பது, இரு துருவங்களின் ஒரு கனவு.

எனவே, அந்த ராமராஜ்யம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள நமக்கு ஆவல் ஏற்பட்டது. அந்த ஆசையைக் கம்பராமாயணம் நிறைவேற்றாது. இராமன் முடிசூடி, எல்லோர்க்கும் பரிசுகளை நல்குவதோடு கம்பராமாயணம் முடிந்துவிடுகிறது.

மௌலி (மகுடம்) புனைந்தப்பின் இராமன் எவ்வாறு ஆட்சி நடத்தினான் என்னும் செய்திகள் கம்பர் நூலில் இல்லை.

பாலகாண்டம் தொடங்கி, உத்தரகாண்டம் வரை ஏழு காண்டங்களை வால்மீகி ராமாயணம் கொண்டிருக்க, கம்பரோ, ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தோடு,  தன் காப்பியத்தை நிறைவு செய்துவிட்டார். ஏழாவது காண்டத்தை ஏன் தமிழிலே படைக்கவில்லை என்பது தெரியவில்லை.

ஆதலால், ராமராஜ்யம் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், வால்மீகியின் உத்தரகாண்டத்தையோ, அதைத் தமிழில் ஆக்கியிருக்கின்ற ஒட்டக்கூத்தரின் படைப்பையோ படிக்க வேண்டும். வழிநூலைக் காட்டிலும், மூல நூலிலிருந்தே செய்திகளைத் தொகுக்கலாம் என்று தோன்றியது…

வால்மீகி எழுதிய உத்திரகாண்டத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு எங்கும் கிடைக்கவில்லை. அதனை வெளியிட்ட ‘தி லிட்டில் பிளவர்’ பதிப்பகத்திலேயே அது இல்லை.

ஆனால், அங்குதான் ஒரு செய்தி கிடைத்தது. 1963 ஆம் ஆண்டிற்குப் பிறகு, உத்தரகாண்டத்தை மறுபதிப்புச் செய்வதில்லை என்பதே அச்செய்தி. ஏன் என்று கேட்டோம். ‘’உத்தரகாண்டம் படிப்பது குடும்பத்துக்கு நல்லதில்லேன்னு பெரியவா சொல்லிட்டா’’ என்றார்கள்.

பொதுவாகவே, நம்மவர்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்துகொண்டு வருகிறது. இதில் ‘குடும்பத்துக்கு நல்லதில்லை’ என்று வேறு சொல்லிவிட்டால், பிறகு யார் படிக்கப் போகிறார்கள்.

ஒன்று மட்டும் புரிந்தது, அந்த நூல் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது.

நேராகப் பெரியார் திடல் நூலகத்திற்குச் சென்றோம். அடடா, பலரது உரைகளோடு உத்தரகாண்டம் அங்கே பத்திரமாக இருந்தது. பண்டித இ.மு. சுப்பிரமணிய பிள்ளை (சந்திரசேகரப் பாவலர்) எழுதிய, ‘இராமயண ஆராய்ச்சி – உத்தரகாண்டம்’ என்னும் நூலும் கிடைத்தது.

படி எடுத்து வந்து, மொத்த உத்தரகாண்டத்தையும் படித்தபோது, தலை சுற்றியது. பொருளற்ற, ஆபாசமான பல புராணக் கதைகள் நிரம்பி வழிந்தன. அந்நூலைப் படிப்பது குடும்பத்திற்கு நல்லதோ இல்லையோ, மூளைக்கு நல்லதில்லை என்று புரிந்தது.

படித்து முடித்தபோதுதான், ஏன் அதை மறைக்கின்றனர் என்பது தெளிவானது.

அந்நூலிலிருந்து சில துளிகளை மட்டும் இங்கு எடுத்து தந்துள்ளேன். படியுங்கள் ராமராஜ்யம் எப்படிப் பட்டதென்று எல்லோருக்கும் புரியும். (சுப.வீரபாண்டியன், நூல் முன்னுரையில்…)

நூல்: இதுதான் ராமராஜ்யம்
ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்
வெளியீடு: திராவிட இயக்கத் தமிழர் பேரவை,
122/130, என்.டி.ஆர். தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை 600 024.
தொலைபேசி: 044 – 42047162

பக்கங்கள்: 24
விலை: ரூ.20.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
  • வினவு செய்திப் பிரிவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : தியாகிகளுக்கு கடலூரில் இரங்கல் கூட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் களப்பலியான தியாகிகளுக்கு கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் 24.06.2018 ஞாயிறு அன்று கடலூர் டவுன் ஹாலில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மண்டல குழு உறுப்பினர் முருகானந்தம், தமிழக அரசினுடைய அடக்குமுறையை விவரித்து விட்டு தனிநபர்கள், இயக்கங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஜனநாயகம் மறுக்கப்படுவதை அம்பலப்படுத்தினார்.

மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த பூங்குன்றன், “நச்சு ஆலைகளால் ஏற்படுகின்ற கழிவுகளால் மக்கள் கொல்லப்படுவது ஒருபுறம் இருக்க இதை எதிர்க்கும் மக்களை அரசே கொல்வது வெட்கக் கேடானது” என்றார்.

மக்கள் உரிமை கழகத்தின் வழக்கறிஞர் செந்தில்குமார், “போராடுகின்றவர்கள் வெளியூர்காரர்கள், விசமிகள் என்றால் அனில் அகர்வால் எந்த ஊர், சந்தீப் நந்தூரி எந்த ஊர்” என்று கேள்வியெழுப்பினார்.

மின் ஊழியர் ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் பேசுகையில், “தாமிரமும், காப்பரும் வேண்டுமென்றால் அதை இறக்குமதி செய்து கொள்ளலாமே இதற்கு ஏன் மக்களை கொல்ல வேண்டும்.” என்றார்.

தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாமரைச்செல்வன், “இந்த தூத்துக்குடி கொலைக்காரர்கள் இப்போது எட்டு வழிசாலைக்கு வந்துவிட்டார்கள்.  இந்தியாவில் பல கிராமங்களுக்கு ரோடு கிடையாது.  ஆனால் கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு மட்டும் பல கோடி ரூபாயில் சாலை வசதி. பல இலட்சம் விவசாய மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வருகிறது” என்றார்.

மீனவர் விடுதலை வேங்கைகளின் தலைவர் மங்கையர்ச்செல்வன், “இவன் ஒன்று திரளமாட்டான் என்ற திமிரில்தான் இந்த கொலைக்கார ஆலைகள் எல்லாம் கொண்டு வந்து மண்ணை நஞ்சாக்கி நம்மை சாகடிக்கிறார்கள்.  இதனை  வீழ்த்த வேண்டுமென்றால் நாம் பெரியார், அம்பேத்கரை உயர்த்தி பிடிக்க வேண்டும்.  நாட்டை பாதுகாக்க வேண்டுமென்றால் லெனின், ஸ்டாலின் வழியிலேயே போராடி மீட்டெடுக்க வேண்டும்.  இந்த அரசு அதிகாரவர்க்கம் நம்மை பாதுகாக்காது” என்றார்.

இள.புகழேந்தி, மாநில தேர்தல் குழு பொறுப்பாளர், தி.மு.க.

தி.மு.க.வின் மாநில தேர்தல் குழு பொறுப்பாளர் இள.புகழேந்தி பேசுகையில் “மோடி, அமித்ஷா கார்ப்பேரட் முதலாளி கும்பலின் கூட்டணிதான் இந்த தூத்துக்குடி கொலையை செய்தது.  இந்த கொலைக்கார கூட்டத்திற்கு அனைத்து அடியாள் வேலைகளையும் செய்து முடித்தது கேடு கெட்ட எடப்பாடி அரசு.  மக்களை சுட்டுகொல்வதற்கு சட்ட விரோதமான முறையில் நடந்த இந்தக் கொலையை இவர்கள் மூடிமறைக்க முடியாது.  மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்பட்டே தீரவேண்டுமென்று” பேசினார்.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு பேசுகையில், “தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் சமீபகாலமாக மக்கள் எங்களை வாழவிடு என்று போராடி வருகிறார்கள்.  ஜல்லிகட்டுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு பின்பு என்பது போல் மே 22 தூத்துக்குடி துப்பாக்கிசூட்டுக்கு பின்பு துப்பாக்கிசூட்டுக்கு முன்பு என நிலைமை மாறியுள்ளது. இது வேதாந்தாவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தராமனும், குருமூர்த்தியும்  ஐ.பி.யும் சேர்ந்து நடத்திய கொலை வெறியாட்டம். தமிழகத்தில் தனித்தனியே நடக்கும் போராட்டங்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.  அதைத்தான் மக்கள் அதிகாரம் செய்கிறது அதை கண்டுதான் அரசு அஞ்சுகிறது.  எத்தனை அடக்குமுறைகள், சிறை, வழக்கு, உயிர்ப்பலி தொடர்ந்தாலும் மக்கள் அதிகாரம் தமது போராட்டத்தைத் தொடரும்.” என்றார்.

தகவல்: மக்கள் அதிகாரம்,கடலூர். (செல்:8110815963)

சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி !

சேலம் – சென்னை எட்டுவழி பசுமை விரைவுச் சாலை அமைப்பதை எதிர்த்து சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை தமிழக மக்கள் முழுமையாக ஆதரித்து வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கைது, சிறை, பொய் வழக்கு, மிரட்டல் என்று ரவுடி ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறது அடிமை எடப்பாடி அரசு.

salem chennai 8 ways road2
2 மணி நேரத்தை குறைக்க மலைகளை, காடுகளை, நீராதாரத்தை, விவசாயத்தை அழித்து மத்திய மாநில அரசால் கொண்டுவரப்படும் இந்த திட்டம் யாருக்கானது ?

“கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதற்காக 2,200 ஹெக்டேர் பரப்பளவு நிலம் கையகப்படுத்த அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த 8 வழி பசுமை விரைவுச்சாலை சென்னை அருகேயுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் 59.1 கி.மீ., திருவண்ணாமலையில் 123.9 கி.மீ., கிருஷ்ணகிரியில் 2 கி.மீ., தருமபுரியில் 56 கி.மீ., மற்றும் சேலத்தில் 36.3 கி.மீ., என இம்மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளன. இந்த பசுமைவழிப் பாதைக்கு சேலம் முதல் அரூர் வரை என்.ஹெச் 179A என்றும், அரூர் முதல் சென்னை வரை என்.ஹெச் 179B என்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டரிலும்,  சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணிநேரமாகும். ஆனால் எட்டு வழிசாலையில் வெறும் மூன்று மணி நேரத்தில் சென்னையை சென்றடையலாம் என்று கொக்கரிக்கிறார்கள்.

உட்கட்டமைப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது என்று பேசுபவர்கள் யாருடைய வளர்ச்சி என்பதை பேச மறுக்கிறார்கள்.

நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து 28,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. சாலைப் பணிகளுக்காக மட்டுமே ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. சராசரிக் கணக்கில் நாளொன்றுக்கு 27 கி.மீ. சாலை போடப்படுகிறது என்கிறார் நிதின் கட்கரி. உட்கட்டமைப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது என்று பேசுபவர்கள் யாருடைய வளர்ச்சி என்பதை பேச மறுக்கிறார்கள். மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் 2.12 லட்சம் கோடி. பெரும்பான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வி்வசாயத்தை திட்டமிட்டு புறக்கணித்ததின் விளைவுதான் நாடெங்கும் தொடரும் விவசாயி தற்கொலைகள்!

இந்த சேலம் – சென்னை எட்டுவழி பசுமை விரைவுச் சாலையால் பயன் யாருக்கு?

“தற்போது இருக்கும் இரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவை விட 130 சதவீதம் மற்றும் 160 சதவீதம் அதிகமாக போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலையில் விபத்துகள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன. இன்னும் 10 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 பி.சி.யு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் பி.சி.யு. ( Passenger Car Unit- PCU) விலிருந்து 1 லட்சம் பி.சி.யு. வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களுள் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது தெரிந்திருந்தும் மது விற்பனையை தீவிரப்படுத்தும் இந்த அடிமை அரசுக்கு மக்கள் உயிரின் மீது திடீரென பிறந்திருக்கும் பாசம் கேலிக்கூத்தானது.

ஆனால், இந்த புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000 போக்குவரத்து செறிவாக இருந்தாலும், இச்சாலையானது விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும். எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் பி.சி.யு. உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் பி.சி.யு. கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். மேலும், இந்த பசுமைவழி விரைவுச் சாலையுடன் நேரடியாக பிற குறுக்கு சாலையில் இணைவது முறைப்படுத்தப்பட்டு அணுகுசாலை மூலமாக அல்லது கீழ்மட்ட பாலங்களின் வழியாக கடப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால், விபத்துகள் பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்” என்று எடப்பாடி 11 ஜுன் அன்று சட்டமன்றத்தில் விளக்கமளித்தார்.

தமிழகம் சாலை விபத்தில் முதலிடம் வகிக்கிறது என்பது உன்மைதான். ஆனால், இந்த விபத்துக்கள் பெரும்பாலும் சென்னையிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் தான் அதிகமாக நடந்துள்ளது. இன்னும் சொல்லப்போனாலும் விபத்திற்கு முக்கிய காரணம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும், ஓட்டுநர்களின் அதீத பணிச்சுமையும்தான் காரணமென பல்வேறு ஆதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதனை எல்லாம் சிறிதளவும் மதிக்காமல், மது விற்பனையை தீவிரப்படுத்தும் இந்த அடிமை அரசுக்கு  மக்கள் உயிரின் மீது திடீரென பிறந்திருக்கும் பாசம் கேலிக்கூத்தானது.

இது ஒருபுறம் இருக்கட்டும், இந்த விரைவு சாலையில் யார் பயணிக்கிறார்கள்? அதிகம் யார் பயன்படுத்துகிறார்கள்? பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லவும், அதிகார வர்க்க-போலீசு-இராணுவம் மற்றும் பணக்கார மேட்டுக்குடி மக்கள் தங்கு தடையின்றி விரைவான பயணம் மேற்கொள்ளவும்தான் பயன்படுகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.

நாசகார திட்டங்களை தொடர்ந்து தமிழக மக்கள் மீது திணித்து வரும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளின் ஓரணி

இந்தத்திட்டம் தங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்பதை நன்கு உணர்ந்த மக்கள் எதிர்க்கிறார்கள். வளர்ச்சி என்ற பொய்யான கோசத்தை நம்பி ஏற்கனவே நிலங்களை இழந்த மக்கள் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

“பசுமை வழிச்சாலை என்ற பெயரில் கையகப்படுத்தி, சொந்த ஊரிலேயே எங்களை அகதிகளாக ஆக்காதீர்கள். அதை விட, இந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள்” என்று கதறுகிறார்கள் பெண்கள்.

தமிழகத்தை இராணுவ தளவாட உற்பத்தியின் பின்களமாக்கி செயல்படுவதற்கு இந்த 8 வழிச்சாலை அவசியம் என்கிறார்கள். ஆவடியில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் இருந்து  இதுவரை உருப்படியாக  ஒரு சுதேசி பீரங்கி கூட வெளிவந்ததில்லை.தற்போது இந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் 90 % வெளிநாடுகளில் வாங்கியவைதான்.

இந்நிலையில் தமிழகத்தில் உருவாக்கப்படும் இராணுவ வளையம் என்பது இறக்குமடி செய்யப்படும் எந்திரங்களை கோர்ப்பதற்கும், அல்லது அவற்றை கிட்டங்கிகளில் வைப்பதற்கும்தான் பயன்படும். மற்றபடி இதில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்பதில் துளியும் உண்மை இல்லை. மேலும் இராணுவ தளவாட தொழிலுக்காக சாலை போடுவது என்பது அழிவுக்கான வேலையே அன்றி வளர்ச்சிக்கான வேலை அல்ல.

கடலின் ஆழத்தில் உள்ள ராமர் பாலம் எனும் புரட்டுக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தியவர்கள், பசுமை வழிச்சாலை என்ற பெயரில் மழை தரக்கூடிய வனப்பகுதிகளையும் விவசாயத்தையும் அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து புதிய சாலை அமைப்பது யாருடையை வளர்ச்சிக்கானது என்று பதில் சொல்லட்டும்!

சென்னை- பெங்களூரு இடையே தொழில் வழித்தடம் (Industrial Corridor) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. ஆனால், சேலம்- சென்னைக்கு 8 வழிச்சாலை அமைக்கும் அளவுக்கு முக்கிய வர்த்தக காரணங்கள், வேலைவாய்ப்பு காரணங்கள், சாலையோர தொழிற்சாலைகள் என எவ்வித தேவையும், மக்களிடம் கோரிக்கையும் இல்லாதபோது ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்து, இயற்கை சமநிலையை சீர்குலைத்து பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

கதறும் கிராம மக்கள்:

த்திட்டத்தால் 30 ஆயிரம் ஏழை விவசாய குடும்பத்தினர், 72,273 விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இச்சாலையை அமைக்க 8,000 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 8 மலைகள் அழிக்கப்படவுள்ளது.  மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள், 10 ஆயிரம் கிணறுகள், 100-க்கும் மேற்பட்ட ஏரி-குளங்கள், குட்டைகள், லட்சக்கணக்கான மா, தென்னை, வாழை, பாக்கு போன்ற மரங்கள் அழிக்கப்படும். 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், இடிக்கப்படவுள்ளது. இந்த படுபாதக செயலை “வளர்ச்சி” என்கிறார்கள்.

சேலம் அருகே இராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அந்த நிலத்தில் அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளிடம் தோட்டத்து உரிமையாளரின் குடும்பத்தினர்,

ஊருக்கே சோறுடைத்த விவசாயின் நிலை

மாதக்கணக்கில் உழைத்து, உருவாக்கிய இந்த மரவள்ளி தோட்டம் தான் எங்கள் வாழ்வாதாரம். அது பறிபோகும் போது, உயிரை மாய்ப்பதை தவிர வழியில்லை. பயிரை காக்க உயிரை இழக்க தயார் என்று கதறினர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை.

மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம் பகுதிகளில் மரவள்ளி தோட்டத்தில் முட்டுக்கல் நட்டபோது, நிலத்திற்கு சொந்தமான கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர், ஒருவரையொருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். அனைத்து இடங்களிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “இது நாங்கள் வாக்கப்பட்ட பூமி. தலைமுறைகள் கடந்து எங்களது நல்லது, கெட்டது எல்லாம் இந்த மண்ணில் தான் நடக்கிறது” என்ற மக்களை மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை.

“பசுமை வழிச்சாலை என்ற பெயரில் கையகப்படுத்தி, சொந்த ஊரிலேயே எங்களை அகதிகளாக ஆக்காதீர்கள். அதை விட, இந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள்” என்று பெண்கள் கண்ணீர் விட்டு கதறியது மக்களின் எதிர்ப்பையும் மீறி  நிலத்தை  அளந்து, முட்டுக்கல்லை அதிகாரிகள்  நட்டனர்.

அதேபோல இத்திட்டத்துக்காக தருமபுரி மாவட்டத்தில் 1846 விவசாயிகளிடம் இருந்து 439 ஹெக்டேர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வேடகட்டமடுவு, தீர்த்தமலை, பாளையம், வீரப்பநாயக்கன்பட்டி, எம்.தாதம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, சுமைதாங்கிமேடு, அச்சல்வாடி, பேதாதம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நில அளவைப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டியில் நிலத்தை அளவீடு செய்து கல் நடும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரகுமார் என்பவர் தனது விளைநிலத்தில் கருப்புக் கொடி நட்டு வைத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனைப் பொருட்படுத்தாமல் போலீஸாருடன் வந்த அலுவலர்கள், நிலத்தை அளவிட்டு கற்களை நட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரகுமார், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மனோகரன், வேலன் ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தனர்.

அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், 3 விவசாயிகளின் நிலத்தை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவுக்குப் பின்னர் அளவீடு செய்யும் பணிகளை அரூர் டி.எஸ்.பி. செல்லபாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார், நில அளவீட்டுப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படவிருக்கும் மலைகள்!

5 மாவட்டங்களில் 8 மலைகளை அழிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை, தர்மபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்திமலை, வேதிமலைகள் உடைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக இயற்கை வளங்களை அழித்ததால், நாம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம். எனவே, இயற்கை கொடுத்த கொடையான மலை வளத்தை அழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

வட தமிழகத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்

மலைகளை அழிப்பதால், அங்கு வாழும் உயிரினங்கள் மடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மலைகளில் இருந்து வரும் நீர் வழித்தடங்கள் முற்றிலும் காணாமல் போகும் நிலையும் உருவாகியுள்ளது.

இச்சாலையை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைக்க முடிவு செய்துள்ளனர். இந்த மலைத்தொடரில் ஜருகுமலையின் பகுதியான சேலம் நிலவாரப்பட்டியில் இருந்து அயோத்தியாப்பட்டணத்திற்கு இடைப்பட்ட இடங்களில் மூன்று இடங்களில் மலையை குடைந்து சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.

இதுதவிர அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, கல்வராயன் மலையையொட்டி சாலை அமைக்கப்படுகிறது. இதில், 16 வனப்பகுதிகள் உள்ளன. சுமார் ஆயிரம் ஏக்கர் வன நிலங்கள் பாதிக்கப்படும். இவ்வனப்பகுதிகளில் கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், பறவையினங்களும் உள்ளன. குறிப்பாக சேர்வராயன் மலைத்தொடரில், அரிய வகை பறவையினங்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் பெருமளவு அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ராவண்டவாடி, அனந்தவாடி ஆகிய இடங்களும் பெரிய வனப்பகுதியாகும். அதேபோல், செங்கல்பட்டில் நம்பேடு, சிறுவாச்சூர் என்ற இடங்களும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. செய்யாறு பகுதியில் சிறு மலைகள் இருக்கின்றன. இங்கு வாழும் உயிரினங்களும் மடியும் நிலை உள்ளது. இம்மலைகளில் உற்பத்தியாகும் நீர்வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கும். வன நிலங்களை கையகப்படுத்தும்போது, வனத்தில் இருக்கும் விலங்குகள் ரோட்டுக்கு வந்து வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் சம்பவம் நிகழும்.

மேலும், வாகனங்களின் இரைச்சல் சத்தம் அதிகரிக்கும்போது, பறவைகள் இடம் பெயர்ந்துவிடும். ஜருகுமலை, அருநூற்று மலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, சித்தேரிமலை, கவுத்திமலை, வேதிமலையில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.

இத்திட்டத்தை நடைமுறை படுத்தியே தீருவேன் என்று தூத்துக்குடி மாடலை முன்னிறுத்தி கொக்கரிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இந்த அடக்குமுறைக்கெல்லாம் பாடம் கற்பிக்கும் விதமாக நாமும் ஜல்லிக்கட்டு மாடலை தொடங்குவோம் !

கடந்த 1990-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலையில் வனப்பகுதிகள் அழிப்பால் 50 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது. தற்போது 8 வழிச்சாலை அமைத்தால், இயற்கை வளம் முழுமையாக பாதிக்கும். இதனால் மழைப்பொழிவு குறைந்து வறண்ட பூமியாக இந்த 5 மாவட்டங்களும் மாறும். வெயிலின் தாக்கம் அதிகரித்து தட்பவெட்ப நிலையும் நிரந்தரமாக மாற வாய்ப்புள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சேர்வராயன்மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. இந்த அணையையொட்டி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் சேர்வராயன்மலையில் இருந்து வழிந்தோடும் நீர், வாணியாறு அணைக்கு வந்து சேராது. இப்படி பல்வேறு வகையில் விவசாயிகள், மலைகளில் வாழும் பழங்குடியின மக்கள், விலங்கினங்கள் பாதிக்கும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் எருமபாளையம், நிலவாரப்பட்டியில் விவசாயிகள், பொதுமக்கள் கடந்த சில நாட்களாக சாலை மறியல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரமாகும் மக்கள் போராட்டங்களும்- அரசின் ஒடுக்குமுறையும்:

மிகப்பெரும் அழிவுத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த சேலம் சமூக ஆர்வலர் பியுஸ் மானுஸ், மாணவி வளர்மதி மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புரட்சிகர அமைப்பினரை கைது செய்து வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை சொல்லியே மக்களை அச்சுறுத்துகிறது.

துத்துக்குடிக்கு பிறகு மக்களின் பிரச்சினைக்களுக்கு குரல் கொடுப்பவர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள்.

சேலம், தர்மபுரியைத் தவிர பசுமை வழிச்சாலை திட்டத்தினால், திருவண்ணாமலை, செங்கம்,  கலசபாக்கம், சேத்துப்பட்டு, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுகாவில்,  122 கிமீ தொலைவு சாலை அமைவதால், இம்மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படும்  நிலை உருவாகியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரம்  குடும்பங்களுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படும் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பசுமை  வழிச்சாலைத் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் கடந்த ஜூன் 20-ஆம் தேதி  வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மணிலா ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்பே அங்கு குவிந்திருந்த போலீசார், இங்கு கூட்டம்  நடத்த அனுமதியில்லை, மணிலா ஆலைக்குள் யாரும் செல்லக்கூடாது என்று கூறி விவசாய  சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், பலராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மணிலா ஆலை உரிமையாளரை கூட்டம் நடத்த அனுமதித்தால் கைது  செய்வோம் என மிரட்டியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் விவசாயிகள் யாரையும்  அனுமதிக்கவில்லை. கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை விரட்டி, விரட்டி போலீசு கைது செய்துள்ளது.

தற்போது ஆங்காங்கே விவசாயிகள் மண்ணெண்ணெய் டின்னுடன் தீக்குளிப்பதாக அதிகாரிகளுடன் போராடி வருகின்றனர். தற்போது ஆசிரியர் ராமலிங்கம் என்பவர் தனது மகன்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவற்றை தமிழக ஊடகங்கள் முற்றிலும் காண்பிப்பதில்லை. எடப்பாடி அரசின் மிரட்டலை ஏற்று போராடும் விவசாயிகளது குரலை இருட்டடிப்பு செய்கின்றனர். இந்த எட்டு வழிசாலை திட்டத்திற்கு எடப்பாடியின் உறவினர்களும் இதர அதிமுக-வினரும் ஒப்பந்ததாரர்கள் என்பதால் எடப்பாடி அரசு இந்த ஒடுக்குமுறையை தனது சொந்த குடும்ப வேலையாகவும் செய்து வருகிறது.

“தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை (எமர்ஜென்சி)  அமல்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர். முக்கியமாக இத்திட்டத்தை எதிர்த்து நாங்கள் கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம். ஐந்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து களத்தில் போராட்டம் நடத்துவோம்” என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இத்திட்டத்தை நடைமுறை படுத்தக் கூடாது என்று தமிழம் குரல் கொடுத்தாலும் இத்திட்டத்தை நடைமுறை்ப்படுத்தியே தீருவேன் என்று தூத்துக்குடி மாடலை முன்னிறுத்தி கொக்கரிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இந்த அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சாமல் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்!

– வினவு செய்திப் பிரிவு

தஞ்சையில் கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் கருத்தரங்கம் ! அனைவரும் வருக !

மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கருத்தரங்கம்

நாள்: 30.06.2018 சனிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்

சிறப்புரை:
தோழர் தியாகு
, ஆசிரியர், தமிழ்த்தேசம்.
தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலர், ம.க.இ.க.

ன்பார்ந்த பெரியோர்களே,
உலகம் எவ்வளவோ தத்துவ ஞானிகளைக் கண்டிருக்கிறது. மேலை நாடுகளில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ, வால்டேர், ரூசோ, சீனத்தில் கன்பியூசியஸ், இந்தியாவில் புத்தர் முதல் சித்தர்கள் வரை மனித வாழ்கையை விளக்கினார்கள். அரசனுக்கு அறிவுரை கூறினார்கள். ஆட்சிக்கு இலக்கணம் வகுத்தார்கள். எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணினர் பலர். தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திட ஆவேசம் கொண்டோரும் உண்டு. ஆனால் மனித குல வரலாற்றில் இன்றுவரை உழைப்பாளி மக்களின் வறுமை, துயரம், அடிமைத்தனம், ஒடுக்குமுறை, சுரண்டல் என்ற கொடுமை ஒழியவில்லையே, ஏன்?

நவீன குடியாட்சிக் கோட்பாடுகள் வந்ததும் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை நிலைநாட்டிவிட்டதாக எக்காளமிடுகிறார்களே! மக்கள் வாழ்க்கை மாறியதா? நிலம், நீர், காற்றை நஞ்சாக்காதே எனக் கேட்டதற்காக, அரசே 13 பேரை தூத்துக்குடியில் படுகொலை செய்ததே ஏன்?

அறிவியல் வளர்ச்சி, முன் எப்போதுமில்லா விந்தைகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது. செல்போன் என்ற கையடக்கக் கருவி உலகத்தை உங்களிடமும் உங்களை உலகத்திற்கும் நொடியில் கொண்டு சேர்க்கிறது. ஆனால் அண்டை வீட்டானை அயலானாக மாற்றிவிட்டதே எப்படி?

“மக்களால் மக்களுக்காக” நடத்தப்படும் ஒரு அரசாங்கத்தையே விலைக்கு வாங்கும் ஆற்றலை ஸ்டெர்லைட் முதலாளியின் பணம் எப்படிப் பெற்றது? உற்பத்திப் பெருகினால் பொருளாதாரம் வளரும், வறுமை நீங்கும் என்கிறார்களே? விவசாயம், தொழில் அனைத்திலும் உற்பத்தி அசுர வேகத்தில் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. பால், பழம் முதல் கட்டில், மெத்தை வரை கண்ணாடிக்குவளை முதல் கார், பைக் வரை வீதியோரங்களில் விலை போகாமல் சீந்துவாரின்றி கிடக்கின்றனவே ஏன்? விவசாயிகளும், தொழிலாளிகளும் மேலும் மேலும் வறுமையிலல்லவா தள்ளப்படுகிறார்கள். பட்டினிச் சாவுகள் தொடர்கின்றனவே ஏன்?

கோவை பகுதியில் இவ்வாண்டு 50,000 தொழில்கள் அழிந்து ஐந்து லட்சம் பேர் வேலை இழந்தல்லவா நிற்கிறார்கள், எப்படி? படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். படித்துவிட்டுத்தான் வேலையின்றி கோடிக்கணக்கில் அலைகிறார்கள். கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு?

மண்டையைக் குடையும் இந்த கேள்விகளுக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தீர்வுகாண முடியாத இந்த சிக்கல்களுக்கு முரணற்ற வகையில் விடை கண்டவர்தான் கார்ல் மார்க்ஸ். அதுதான் பொது உடைமைக் கோட்பாடு. உலக வரலாற்றை மாற்றியமைத்த மகத்தான தத்துவம். மார்க்சியம் வறட்டுத்தத்துவம் அல்ல; அது நடைமுறைக்கான அறிவியல். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வந்த, மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை ஒழித்து மனித வாழ்க்கையைப் பேரழகு மிக்கதாக மாற்றிக்காட்டிய ஒரே தத்துவம்.

சூழ்ச்சி, வஞ்சகம், பொய், பித்தலாட்டம், கொலை, கொள்ளை, பிச்சையெடுத்தல், விபச்சாரம், வறுமை, வளங்களைக் கொள்ளையடிக்கும் கழுத்தறுப்புப் போட்டி, யுத்தங்கள், சுற்றுச்சூழல் நாசம் என உலகையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கி அழித்துக்கொண்டிருப்பது முதலாளித்துவம். அது ஒரு நாசகார சக்தி! அதை அழிக்காமல் உழைப்பாளி மக்களுக்கு வாழ்வில்லை.

மார்க்சியம் தோற்றுவிட்டதாகப் பிதற்றும் வெற்று மனிதர்களுக்கும், சூதுமதியாளர்களுக்கும் சொல்வோம், மார்க்சியம் வெல்லப்பட முடியாததென்று! மார்க்சை போற்றுவோம்! மார்க்சியம் கற்போம்!

“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதையெங்கள் உயிரென்று காப்போம்”
– பாவேந்தர்.

அனைவரும் வருக!

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9443188285

தொடரும் மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறைகள் | வழக்கு நிதி தாரீர் !

ன்புடையீர் வணக்கம்!
தமிழக போராட்ட வரலாற்றில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, பெரும் மக்கள் பங்கேற்று போராடி, அரசை பணிய வைத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தூத்துக்குடி மக்களின் வீரம்செறிந்த அர்ப்பணிப்பான போராட்டம் முக்கியமானது. சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை போராட்டங்களுக்கு இது முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான், போராடிய மக்கள் மீது பெரும் வன்முறையை − படுகொலையை திட்டமிட்டு நடத்தியுள்ளது போலீசு.

துப்பாக்கிச் சூடு படுகொலை, குண்டடிபட்டு காயம், நூற்றுக்கணக்கான வழக்குகள், கைது, சிறை, அடக்குமுறை என ஒரு மாத காலமாக தூத்துக்குடி மக்கள் நிம்மதி இழந்து நிற்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆபத்தைவிட போலீசு ஆபத்து அவர்களுக்கு சவாலாக உள்ளது. ஆண்கள், இளைஞர்கள், மாணவர்கள் வீட்டில் தங்க முடியவில்லை. பெண்களும் இரவில் மாதா கோவிலில் தஞ்சமடைகிறார்கள். மக்கள் அதிகாரம் மட்டுமல்ல போராடிய மக்கள் பலரையும் தூத்துக்குடி போலீசு கைது செய்து மிரட்டி வருகிறது. போராடுவதை குற்றமாக – தீவிரவாத நடவடிக்கையைப் போல சித்தரித்து கைது செய்வது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைப்பது அடக்குமுறையின் உச்சம்.

துப்பாக்கிச் சூடு படுகொலை நடத்திய குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  • 144 தடை உத்திரவு போட்டது யார்?
  • அதன் நகலை ஏன் வெளியிடவில்லை?
  • முற்றுகைப் போராட்டம் நடந்த அன்று கலெக்டர் எங்கே போனார்?
  • தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துப்பாக்கி சூடு நடந்தபோது என்ன செய்தார்?
  • துணை ஆட்சியர் பிராசாந்த் நியமித்த கண்காணிப்பு அதிகாரிகள் இல்லாமல் யாரோ மூன்று ஊழல் பேர்வழி துணை தாசில்தாரை வைத்து துப்பாக்கி சூடு நடத்தியதாக ஏன் சொன்னார்கள்?
  • துப்பாக்கிச் சூட்டில் எனக்கு சம்பந்தமில்லை என்பதை ஒரு தாசில்தார் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் ஏன் தனிச்சட்டம் போடவில்லை?
  • நூறு நாட்களாக பெருமளவில் நடந்த மக்கள் போராட்டத்தை வைத்து முன்பே ஏன் ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருக்கக் கூடாது?
  • முதல்வர் எடப்பாடியும், டி.ஜி.பி. ராஜேந்திரனும் சதித்திட்டம் தீட்டிதான் இந்த படுகொலை நடந்துள்ளது.

– எனவே, இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். இவை எதற்கும் உரிய முடிவு காணாமல், போராடிய மக்களை, பங்கேற்ற மக்கள் அதிகார தோழர்களைத் துரத்தி கைது செய்வது ஏன்?

அனைத்து காவல் நிலையத்திலும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு தூத்துக்குடி போலீசார், மதுரை, உசிலம்பட்டி, கோவில்பட்டி, ஆலங்குளம், நெல்லை ஆகிய ஊர்களில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் தேடுதல் வேட்டை நடத்தி, கைது செய்யப்பட்டவர்களை அனைத்து வழக்குளிலும் சேர்க்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆரியபட்டி தோழர் ஜெயராமன் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அவர் கூட இருந்தார் என்பதற்காகவே கோட்டையன் என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது.கலிலூர் ரகுமான், அவரது மகன்கள் முகம்மது அனஸ், நான்காம் ஆண்டு ஹோமியோ மருத்துவம் படிக்கிறார். முகம்மது இர்ஷாத் எம்.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மேலும் கோட்டையன், முருகன், சரவணன் இவர்கள் சாதாரண கூலித் தொழிலாளிகள். இவர்கள் ஆறு பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது எடப்பாடி அரசு. இவர்களால் இந்த தேசத்திற்கு என்ன ஆபத்து?

தமிழகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் எந்த மக்கள் பிரச்சினைக்கும் போஸ்டர் ஒட்டினால், பிரச்சாரம் செய்தால் கூட கைது –  சிறை; பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை. நீதிமன்ற அனுமதி பெற்று நடத்தும்  கூட்டங்களுக்குக் கூட அதிக அளவில் போலீசாரை குவித்து, மக்கள் அனைவரையும் வீடியோ எடுப்பது, அச்சுறுத்துவது என பிரிட்டிஷ் காலனி ஆட்சியை கண்ணில் நிறுத்துகிறார்கள். மக்கள் அதிகாரம் வைக்கும் அரசியல் இந்த அரசை – அதிகார வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. போராடும் மக்களுக்கோ உற்சாகத்தை, நம்பிக்கையைக் கொடுக்கிறது. எனவே மக்கள் அதிகாரத்தை எப்படி முடக்குவது என மோடி, எடப்பாடி அரசு தீவிரமாக செயல்படுகிறது. தடை செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் வதந்தியை பரப்புகிறது. தமிழக மக்கள் மத்தியில் போலீசின் இந்த அச்சுறுத்தல், பொய் பிரச்சாரம் தோற்றுவிட்டது.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் போராடும் மக்களை, முன்னணியாளர்களை குறிபார்த்து சுட்டுக் கொல்வது என்ற வகையில் தூத்துக்குடி மாடல் படுகொலை” நடத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி – மோடி அரசுகளின் இத்தகைய ஒடுக்குமுறையால் அர்ப்பணிப்போடு மக்களுக்காகப் போராடும் இயக்கங்களை பணிய வைக்க முடியாது. மக்கள் போராட்டங்களில் முன் வரிசையில் நிற்பதிலிருந்து சற்றும் மக்கள் அதிகாரம் பின் வாங்காது. ஆனால், எங்களுடைய பணியை தொடர, கொள்கை உறுதியும் மனவலிமையும் மட்டுமே போதாது. உங்கள் ஆதரவுக்கரம் எங்களுக்கு வேண்டும்.

தேசிய பாதுகாப்பு சட்டத்திலிருந்து தோழர்களை மீட்க, எண்ணற்ற வழக்குகளை எதிர்கொள்ள, சிறையில் இருப்பவர்களின் குடும்பங்களை பராமரிக்க மற்றும் அரசியல் பணிகளை தடையின்றி தொடர ஏராளமான நிதி தேவைப்படுகிறது. போலீசின் துப்பாக்கியும் சிறையும் எம்மை அச்சுறுத்தியதில்லை. ஆனால் நிதி நெருக்கடிதான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

உங்கள் பங்களிப்பாக பெரும் தொகையாக நிதி தாருங்கள்! உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் நிதி கொடுக்க உதவுங்கள். நீங்கள் தரும் நிதி நமது எதிரிகளை வீழ்த்தும் போராட்டத்திற்கு பெரிதும் உதவும். நன்றி!

வழக்குநிதி அனுப்ப வேண்டிய முகவரி:

C. VETRIVEL CHEZHIYAN,
SB A/C NO:62432032779,
STATE  BANK OF INDIA,
POZHICHALUR BRANCH,
CHENNAI.
IFSC: SBIN0021334

தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.