ராசுவின் சடலத்தை அலைபேசியில் பார்க்கின்றனர் கட்டெபள்ளி கிராம மக்கள்

ராட்டிய மாநிலம், கட்ச்ரோலி மாவட்டத்தின் ஒரு குக்கிராமம் கட்டெப்பள்ளி. அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நடக்கவிருந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏப்ரல் 21 அன்று இரவு கிளம்பிய 8 பதின்வயதினரின் கதி என்ன எனத் தெரியாமல் அக்கிராமமே தவித்துக் கொண்டிருக்கையில் தற்செயலாக ஒரு துயரச் செய்தி அவர்களை வந்தடைகிறது.

கட்ச்ரோலி பகுதியில் கொல்லப்பட்ட ‘மாவோயிஸ்டுகளின்’ புகைப்படங்கள் அடங்கிய கோப்பு ஒன்றை நகோடி என்ற வழக்கறிஞரின் அலைபேசியில் கடந்த ஏப்ரல் 27 அன்று கட்டெபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தற்செயலாகப் பார்க்கையில்தான் அப்பதின்வயதினர் போலீசு துப்பாக்கிச்சூட்டில் பலியாகியிருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.

அந்தப் புகைப்படத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ராசு சக்கொ மாதவி என்ற சிறுமி கொல்லப்பட்ட 16 ‘மாவோயிஸ்டுகளில்’ ஒருவராக அப்புகைப்படத்தில் காட்டப்பட்டிருந்தார்.

ராசுவின் சகோதரிகளான வஞ்சி (இடமிருந்து இரண்டாமவர்) மற்றும் ஜனோ (இடமிருந்து மூன்றாமவர்)

இவ்விசயத்தைக் கேட்டு ராசு மாதவியின் சகோதரிகளான வஞ்சி, ஜனோ இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏப்ரல் 22 அன்று இந்திராவதி ஆற்றங்கரையில் நடத்தப்பட்ட மோதலில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத நபர் என ராசு மாதவியைக் குறிப்பிட்டிருந்தது போலீசு.

ராசுவின் முகம் ஆழமான வெட்டுகளோடு வீங்கியிருந்தது. இடது கண் பெரிதாக வீங்கியிருந்தது. அவளது முகமே விகாரமாக மாறியிருந்தது. அடையாளம் காண சிரமம் இருந்தாலும், அது அவள்தான் என்பதை கிராம மக்கள் உறுதி செய்தனர்.

நகோடியின் அலைபேசியில் உள்ள அந்தக் கோப்பில் சவ எண் 10 என அடையாளமிடப்பட்ட உடல், அதே நாளில் காணாமல் போன மற்றொரு பதின்வயது சிறுவனான நுஸ்ஸேவின் உடலாக இருக்குமோ என சந்தேகம் தெரிவித்தனர் அக்கிராம மக்கள். கடுமையாகத் தாக்கப்பட்டதன் காரணமாக முகம் வீங்கியிருப்பதால் அது நுஸ்ஸேதானா என அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

போலீசில் புகாரளித்தாலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட C-60 கமாண்டோக்களின் விசாரணையைத் தாண்டி, அச்சிறுவர், சிறுமியரின் இருப்பிடம் குறித்தோ, மரணம் குறித்தோ அரசுத ரப்பில் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

000

ட்சிரோலி மாவட்டம் எடப்பள்ளி தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமம் கட்டெபள்ளி. இங்கு வாழும் 35 குடும்பங்களுக்கு காட்டில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பீடி சுற்றும் ‘தெண்டு’ இலை சேகரிப்பு ஆகியவைதான் வாழ்க்கை ஆதாரமாக இருக்கின்றது.

இக்கிராமத்திலிருந்து சுமார் 66 கிமீ தொலைவில் இருக்கும் எடப்பள்ளி வரைதான் அரசு, தனியார் பேருந்துகளின் சேவை கிடைக்கப் பெறுகிறது. அங்கிருந்து இக்கிராமம் வரை தனிப்பட்ட இருசக்கர மோட்டார் வண்டிகளில் மட்டும்தான் சென்றடைய முடியும். அதுவும் இரவு நேரப் பயணம் என்பது சவாலானது. இக்காரணத்தினாலேயே இக்கிராமத்தினர் வெளியூருக்கு எப்போதாவது தான் பயணிக்கிறார்கள்.

கட்சிரோலி, எடப்பள்ளி, கசன்சூர்

ஏப்ரல் 21 அன்று பதின்வயது சிறுமியான ராசுவும் அவளது வயதை ஒத்த வேறு ஏழு பேரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள காசனூர் கிராமத்திற்கு ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றனர். கட்ச்ரோலி சிலா பரிஷத் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் நகோடி கூறுகையில், ”இவர்கள் திருமண நிகழ்விற்கு சென்று சேரவில்லை. ஒன்று மாவோயிஸ்டுகளின் இருப்பிடத்திற்கு அவர்கள் சென்றிருக்க வேண்டும்  அல்லது அவர்கள் போலீசால் கடத்திச் செல்லப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

ஏப்ரல் 21 அன்று சென்ற தமது பிள்ளைகள் திரும்புவதற்கு ஏப்ரல் 22 இரவு வரை காத்திருந்தனர் கிராம மக்கள். போலீசு மோதலில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் அவர்களுக்கு எவ்விவரமும் தெரியவில்லை.  பின்னர் மறுநாள் பகுதி முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு, ஏப்ரல் 24 அன்று, 140 கி,மீ தொலைவில் உள்ள கட்ச்ரோலி மாவட்ட தலைமை போலீசு அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.

அதற்கு முன்னரே சுட்டுக் கொல்லப்பட்ட ‘மாவோயிஸ்டுகளின்’ படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது போலீசு. ஆனால் அந்த பட்டியலை குழந்தைகளை இழந்த கிராமத்தினருக்குக் காட்டாமல், அவர்களை நேராக பிணவறைக்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறது.

”குளிரூட்டப்படாத, அதிக வெப்பத்தில் வைக்கப்பட்ட உடல்களில் இருந்து அழுகல் வாடை வந்த்து. முகங்கள் சிதைந்து அழுகத் தொடங்கியிருந்த நிலையில் யாருடைய முகத்தையும் எங்களால் அடையாளம் காட்ட இயலவில்லை” என்கிறார் பிஜ்ஜா.

பிஜ்ஜாவின் 16 வயது சகோதரன் மங்கேஷும் ராசுவுடன் அன்று வெளியூர் சென்ற ஒருவன். மங்கேஷ் எட்டப்பள்ளியில் உள்ள கல்வி நிலையத்தில் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

இக்கிராமத்தைச் சேர்ந்த 8 பதின்வயதினர் கொல்லப்பட்டது குறித்து பலவகையான செய்திகள் உள்ளூர் செய்தித்தாள்களில் வர ஆரம்பித்தன. வெவ்வேறு போலீசு அதிகாரிகள், ஒவ்வொருவரும்  ஒவ்வொருவிதமாக கூறிய தகவல்களை செய்தித் தாள்கள் வெளியிட்டன.

முதலில் பெயர், ஊர் எதுவும் குறிப்பிடாமல் “பயங்கர ஆயுதங்களைக் கொண்டிருந்த போராளிகள்” என குறிப்பிட்டன. பின்னர் மாவட்ட போலீசு அவர்களுக்கு வேறு விதமான ‘கதையைச்’ சொல்லியது. அவர்கள் 8 பேரும் அக்கிராமத்திலிருந்து மாவோயிஸ்டுகளின் படைக்குத் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், முதல் முறையாக அவர்கள் தங்களது கமாண்டரை பார்க்கச் சென்றிருந்தனர் என்றும் கூறியது போலீசு.

பெர்மெல்லி தளம் என்ற பகுதியின் மாவோயிஸ்ட் படைப்பிரிவின் கமாண்டரான தோலேஷ் மதி அட்ராம் (சாய்நாத்) என்பவர் குட்டெபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதையும், தற்போது இந்த 8 சிறுவர்கள் குறித்து போலீசு கூறும் ‘கதையையும்’ சேர்த்துக் கோர்த்து எழுதத் தொடங்கிவிட்டன உள்ளூர் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள்.

ஒரு பச்சைப் படுகொலையை நடத்திவிட்டு, அதனை மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலாக சித்தரிக்கவும், அச்சிறுவர்களின் குடும்பத்தினரை மிரட்டவும் பல்வேறு முயற்சிகளை செய்திருக்கிறது போலீசு.

பழங்குடியின மக்கள் தங்களை போலீசு தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள அவர்களுக்கு அடிப்படையான, அவசியமான தேவையாக இருப்பது அடையாள அட்டைகளே. தற்போது புகார் அளித்துள்ள குடும்பத்தினரின் ஆதார் அட்டைகளை விசாரணைக்குத் தேவை என பிடுங்கி எடுத்துச் சென்றிருக்கிறது போலீசு. இது தங்களை மிரட்டுவதற்காகவே போலீசு செய்திருக்கிறது என்கின்றனர் கட்டெபள்ளி  கிராமத்தினர்.

மாவோயிஸ்ட் கமாண்டர் சாய்நாத் அக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு, சாய்நாத்தின் தொடர்பில் அந்த  8 சிறுவர்களும் இருந்தனர் எனக் கூறுகிறது போலீசு. ஆனால் அக்கிராம மக்கள் இதனை தெளிவாக மறுக்கின்றனர்.

“சாய்நாத் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரைவிட்டு வெளியேறிய போது, திரும்பவர மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். போராளிகளோடு போய் சேர்வதாக இருந்தால் அவர்கள் அனைவரும் கும்பலாக போயிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார் கட்டெபள்ளி ஊர்ப் பெரியவர் ஒருவர்.

மாவோயிஸ்டுகளோடு ஏற்கனவே தொடர்பு கொண்டிருப்பார்களோ என சந்தேகிக்க கூட வாய்ப்பில்லாதபடிக்கு அச்சிறுவர்கள் இதற்கு முன்னாள் ஒருமுறை கூட காணாமல் போனதில்லை, என்கின்றனர் அக்கிராம மக்கள்.

மேலும் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுவர்கள் அனைவரும் மதிப்புமிக்க உடைகள் மற்றும் அணிகலன்களை தங்களுடன் கொண்டு சென்றிருக்கின்றனர். மாவோயிஸ்டுகளோடு இணைந்து போர் புரியச் செல்பவர்கள் அணிகலன்களையும் எடுத்துச் செல்வார்களா என்ன ?

அப்பதின்வயதினரின் முகத்தில் இருக்கும் ஆழமான வெட்டும், முகம் மற்றும் கண்கள் வீங்கியிருப்பதும், போலீசு அவர்களை சுட்டுக் கொல்வதற்கு முன்னால் கடுமையாக தாக்கியிருப்பதையே காட்டுகிறது.

போலீசு வெறியாட்டத்திற்கு தமது உறவுகளை இழந்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் கொல்லப்பட்டது நியாயமென சித்தரிக்கும் ஊடகங்ளின் கொடுமையைுயும் அனுபவித்து வருகிறது கட்டெபள்ளி கிராமம். இறுதியில் மாவோயிஸ்டுகளை விட அதிகம் கொல்லப்பட்டது பழங்குடி மக்களே என்பது இந்த என்கவுண்டரிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் சிறுவர்களை இப்படி ஈவிரக்கமின்றி கொன்றிருக்கிறார்கள். குழந்தைகளுக்காக அதுவும் ஓநாயக் கண்ணீர் விடும் குரலைக்கூட இங்கே நாம் காண முடியவில்லை.

– வினவு செய்திப் பிரிவு

செய்தி மூலம்:
One of 40 ‘Naxals’ Killed in ‘Encounter’ Was Child, Say Villagers, 7 More Missing

2 மறுமொழிகள்

  1. ஓநாய்களும் செய்யமுடியாத குழந்தைப்படுகொலைகளை இந்த RSS,BJP பாசிசக் கும்பல் தொடர்ந்து செய்துவருகிறது. கோரக்பூர் பச்சைக்குழந்தைகள், காஷ்மீர் குட்டிகுழந்தை ஆஷிபா(காமவெறி க்கொலை) இன்னும் எத்தனை எத்தனை குழந்தைகள்….
    இன்று கட்டெப்பள்ளி படுகொலை இந்த பாசிச கும்பல் நாட்டைவிட்டு முற்றிலும் அழிக்கும்வரை இந்த கொடூரம் தொடரவே செய்யும்.உழைக்கும் வர்க்கமாக நாம்தான் இவற்றுக்கெல்லாம் முடிவுகாணவேண்டும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க