ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு

ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்களை போலி மோதலில் சுட்டுக் கொன்றிருக்கிறது ஹைதராபாத் போலீசு. வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண் கால்நடை மருத்துவர் ரெட்டி எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் விவசாயக் கூலிகள். அவர்களது குடும்பத்தினரது நேர்காணலை பிபிசி விரிவாக பதிவு செய்திருக்கிறது. தங்களது மகன் குற்றம் புரிந்திருந்தால் அவனை தூக்கிலிடட்டும் என்கிறார் ஒரு தந்தை.

இப்படி இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வாங்கிக் கொடுப்பதில் என்ன பிரச்சினை? மாவோயிஸ்டுகளை போலி மோதலில் கொன்று இழிபுகழ் அடைந்திருக்கும் தெலுங்கானா போலீசு இப்போது நடுத்தர வர்க்கத்தினை திருப்திபடுத்த இந்த போலி மோதலைக் கொன்றிருக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் உண்மையிலயே அந்தக் குற்றம் செய்திருப்பின் அவர்கள் பால் இரக்கம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அவர்களை நீதிமன்றம் மூலம் தண்டிக்காமல் போலீசாரால் சுட்டுக் கொன்றிருப்பது என்ன நியாயம்?

இதே நியாயத்தை கீழ்க்கண்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் வழங்குவார்களா? என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவார்களா? நாளையே நீரவ் மோடியும், மல்லையாவும், நித்தியானந்தாவும் இந்தியாவில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் போது தப்பிச் செல்ல முயன்றார்கள் என்று சுட்டுக் கொல்லப்படுவார்களா? இந்தப் போலீசும், நீதிமன்றமும் யாருக்கானது?

“நான்கு பேரும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இதுதான் நீதியா? நீதிமன்றத்தை மூடிவிட்டு இதுபோன்ற என்கவுண்டர்களை பார்க்க வேண்டுமா? ஒருபுறம் ஆதித்யநாத் ஒரு மாநிலத்தையே ஆள்கிறார், நித்தியானந்தா புதிய நாட்டை அறிவிக்கிறார், மறுபுறம் உன்னாவில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர் மீது தீ வைக்கப்படுகிறது. அவரை போன்ற எண்ணற்றவர்களின் குடும்பத்தினர் நீதிக்காக போராடி வருகின்றனர். என்கவுன்டர்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த சட்டத்துறை பேராசிரியரான கல்பனா.

உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவு வழக்கில் சாட்சி சொல்லச் சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணை பிணையில் வந்த குற்றவாளிகள் எரித்து கொல்ல முயன்றார்கள். அப்பெண் 90% தீக்காயம் அடைந்துள்ளார் – இது சமீபத்திய செய்தி. இந்தக் குற்றவாளிகளை, ஆஷிபாவைக் கொன்ற குற்றவாளிகளை, அந்தக் கோவில் பூசாரியை, உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை, 

அரியலூரில் நந்தினி என்ற சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டனை,

சென்னையில் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, தனது தாயையும் கொலை செய்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட துஷ்வந்தை,

சென்னை எர்ணாவூர் மீனவக்குடியிருப்பை சேர்ந்த 3 வயது சிறுமி ரித்திகாவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சேகரை,

சேலத்தில் தலித் சிறுமி ராஜலெட்சுமியை சாதி ஆணவத்தால் வன்கொடுமை செய்ய முயன்று தலையை வெட்டிக்கொன்ற பா.ம.க கட்சியில் இருந்த கொடூரனை,

பொள்ளாச்சியில் பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய கொடூரர்களை, அ.தி.மு.க பின்னணி உள்ள குற்றவாளிகளை,

பல பெண்கள் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சாமியார்கள் ராம் ரஹீமை, ஆசாரம் பாபுவை, நித்தியானந்தாவை

இவர்களையெல்லாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்வார்களா? இன்னும் இர்ஷத் ஜஹான் வழக்கில் போலி மோதலில் ஈடுபட்ட போலீசார், பா.ஜ.க.வினரை என்கவுண்டர் செய்வதில் என்ன தயக்கம்?

ஐ.ஐ.டி.யில் மூன்று பேரை அடையாளம் காட்டி விட்டு வாழ முடியாமல் செத்துப் போனார் பாத்திமா. அவர்கள் மீது கைது நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா? அல்லது இனிமேலும் எடுக்கப்படுமா?

என்கவுண்ட்டரும் கூட வர்க்கம் பார்த்துதான் பாயும் என்பது வரலாறு.

இன்றைய கேள்வி!

ஹைதராபாத் போலி என்கவுண்டர் பற்றி உங்கள் கருத்து என்ன?

♦ ஆதரிக்கிறேன்
♦ எதிர்க்கிறேன்
♦ குழப்பத்தில் இருக்கிறேன்

டிவிட்டரில் வாக்களிக்க :

யூடியூப்பில் :

வாக்களிக்க !

ஃபேஸ்புக்கில் :

1 மறுமொழி

  1. ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தை இது காட்டுகிறது…. சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்படுகிறது…. இந்த தரம் தாழ்ந்த செயலில் வர்க்க பேத வாடை அடிக்கிறது….. மேல்தட்டு வர்க்கத்தினருக்கு சட்டம் வளைந்து கொடுப்பதும் சட்டத்தை கையாள்பவர்கள் கைக்குலுக்கி நிற்பதும் அடித்தட்டு வர்க்கத்தினரை கேள்வியின்றி கொல்வதும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க