மது சமூகத்தைக் காப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ், சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததன் பிறகு, போலீஸின் கட்டுப்பாட்டில் அவர் இருக்கும் வேளையில் போலீஸாரின் தாக்குதலில் அந்த சந்தேக நபர்படுகொலை செய்யப்படுவது என்பது எந்தளவு பயங்கரமானது என்பதைப் புரிந்து கொள்ள அதிகம் யோசிக்கத் தேவையில்லை. மாறாக, சட்டத்தை செயற்படுத்தவென நியமிக்கப்பட்டிருக்கும் போலீஸ் பற்றிதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

போலீஸ் எனப்படுவது மக்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு காவல் நிலையம். அந்தப் பாதுகாப்பு சந்தேக நபருக்கும் உரித்தானது. காரணம், நாம் அனைவரும் அறிந்த வகையில் எந்தவொரு சந்தேக நபரும் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் அவர் சந்தேக நபர் மாத்திரம்தான். ஆகவே அந்த சந்தேக நபருக்கு எந்தவொரு ஆபத்தும் நேராமல் அவரை உயிரோடு பாதுகாப்பது போலீஸின் கடமைகளில் ஒன்றாகும்.

அண்மைக்காலங்களில் போலீஸாரால் திடீரெனக் கைது செய்யப்படுபவர்களும், பாதாள உலகக் குழுவினரும் (நிழலுலக மாஃபியாக்கள்) ஒரே விதமாகத்தான் கொல்லப்படுகிறார்கள். பெரும்பாலான கொலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களைக் காட்டுவதற்காகக் கூட்டிச் செல்லப்பட்ட வேளைகளில் செய்யப்பட்ட படுகொலைகளாக இருக்கின்றன.

படிக்க:
♦ இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்
♦ “பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் !

கை விலங்குகள் இடப்பட்டு, போலீஸ் பாதுகாவலோடு ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்ட கைதிகள் திடீரென போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டோ, கைக்குண்டுகளை எறிந்து விட்டோ தப்பிச் செல்ல முயற்சிப்பார்கள். அதன் பிறகு சுய பாதுகாப்புக்காக போலீஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் பாதாள உலகத்தைச் சேர்ந்த கைதி கொல்லப்பட்டார்என போலீஸ் ஒரு அறிக்கையை வெளியிடும். அவ்வாறான சம்பவத்தைஅவ்விதமே நம்ப வேண்டும் என போலீஸும், அதை அப்படியே செய்தியாக வெளியிடும் ஊடகங்களும் எமக்கு சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. கடந்த காலத்திலிருந்து இதைத்தான் பார்த்தும், கேட்டும் வருகிறோம்.

கைது செய்யப்பட்டவர்கள் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள்தானே? போதைப்பொருள் பாவனையாளர்கள்தானே? அதனால் பரவாயில்லைஎன்று உங்களில் சிலர் கூறுவீர்கள். ‘அவர்களுக்கு இந்தத் தண்டனைதான் வேண்டும்என்றும் சிலர் கூறுவீர்கள். உண்மைதான். பாதாள உலகச் செயற்பாடுகளும், போதைப்பொருள் பாவனையாளர்களின் செயற்பாடுகளும் எந்தவொரு சமூகத்திற்கும் தீங்கானவைதான். அவை சமூகத்தின் அமைதிக்கும், அபிவிருத்திக்கும் பாதகமானவைதான். ஆகவே அவை சமூகத்திலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்பது உறுதி.

ஆனால் நாம் மற்றுமொன்றை மனதில் நிலைநிறுத்த வேண்டும். எந்தவொரு குற்றவாளியும் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதே குற்றவாளியாகப் பிறப்பதில்லை. அந்தக் குழந்தை வளர்ந்து குற்றவாளியாக மாறுவதற்கு சமூகத்தில் நிலவும் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகள்தான் காரணமாகும். ஆகவே அந்த சமூகக் காரணிகளை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்துவதே பிரதானமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அதை சட்டத்துக்கு புறம்பாக செய்வது கூடாது.

ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்ற அமைப்புகள், சிறைச்சாலைகள் போன்றவைகள் அதற்காகத்தான் உள்ளன. ஒரு சந்தேக நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் பிறகு அந்தக் குற்றவாளிக்கான தண்டனையை நீதிமன்றம் மாத்திரமே தீர்மானிக்க முடியும். அது போலீஸிற்குரிய செயற்பாடு அல்ல. எவருக்கும் தண்டனை வழங்கும் அதிகாரம் போலீஸுக்குக் கிடையாது.

ஆகவே போலீஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் வேளையில் சந்தேக நபர்கள் இவ்வாறு கொல்லப்படுவதானது, போலீஸ் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாதிப்படையச் செய்யும். அதன் பிறகு, போலீஸ் எமது பாதுகாப்புக்காகத்தான் இருக்கிறார்கள் என மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். இது சமூகத்தின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் பங்கம் விளைவிக்கும்.

கடந்த காலம் முழுவதும் இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளைத்தான் கண்டு வருகிறோம். எவ்வாறாயினும் சந்தேக நபர்களுக்கும், கைதிகளுக்கும் இலங்கையின் சட்டத்துக்கேற்ப நீதி வழங்காமல் ஒரு சமூகம் செயற்படுமாயின் அந்த சமூகமானது ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்காமல் பின்னடைந்து வருகிறது என்பதே அர்த்தமாகும்.

ரிஷான் ஷெரிஃப்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க