தெலுங்கானா காவல்துறையின் புனையப்பட்ட திரைக்கதையில் உருவான முந்தைய என்கவுண்டர்கள்

ஹைதராபாத் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்களையும் தெலுங்கானா போலீசார் வெள்ளிக்கிழமை (06-12-2019) அதிகாலை, ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொன்ற செய்தி, நாடு முழுவதும் பரபரப்புக்குள்ளானது. “குற்றம் புனரமைப்பு” விசாரணைக்காக சந்தேக நபர்களான அரீஃப், சிவா, நவீன் மற்றும் சென்னகேஷவுலு ஆகியோரை காவல்துறையினர் குற்ற சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவித்தன. அப்போது அவர்கள் “காவல்துறையைத் தாக்கிவிட்டு தப்பிக்க” முயன்றதாகவும்  “தற்காப்புக்காக” காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா.

கழுகுப் பார்வை கொண்ட பலருக்கு, இந்த ‘என்கவுண்டர்’ முந்தைய இரண்டு சம்பவங்களுடன் முற்றிலும் ஒத்திருந்தது: ஒன்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த  ஆந்திர மாநிலத்தில் நடத்தப்பட்டது; இரண்டாவது 2015-ம் ஆண்டு தெலுங்கானா உருவானதும் நடத்தப்பட்டது.

2008 டிசம்பரில், வாரங்கலில் இரண்டு பொறியியல் மாணவர்கள் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஆந்திர அரசு போலீசார் சுட்டுக் கொன்றனர். பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு மோதலில் மூன்று பேரும் கொல்லப்பட்டனர் என்று அப்போது பரவலாக நம்பப்பட்டது. தற்போதைய கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கைக் கையாளும் சைபராபாத் காவல்துறைத் தலைவர் வி.சி. சஜ்ஜனர்,  குற்றம் சாட்டப்பட்ட இந்த மூன்று பேரும் கொல்லப்பட்டபோது வாரங்கலில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

காவல்துறை தரப்பில்  குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றச் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டுகளால் தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 2015-ல், தெலுங்கானா மாநிலம் உருவான பின்னர், தல்க்ரீக் கல்பா-இ-இஸ்லாம் (டிஜிஐ) உறுப்பினரான விகாருதீன் அகமது மற்றும் நான்கு பேரை நல்கொண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு ‘என்கவுண்டரில்’ போலீசார் கொன்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கை என்னவென்றால், வாரங்கல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகளான ஐந்து பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது, காவல்துறையினரை தாக்கி, ஆயுதங்களை பறிக்க முயன்றதாகக்கூறி, என்கவுண்டர் செய்யப்பட்டனர். காவல்துறையினர் கொல்லப்பட்டது உள்ளிட்ட பயங்கரவாத வழக்குகளில் கைதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

படிக்க :
♦ ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு
♦ ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !

சிறுநீர் கழிக்க வாகனத்தை நிறுத்துமாறு விகாருதீன் கேட்டுக் கொண்டதாகவும் ஐந்து கைதிகள்  ஒரு போலீசைத் “தாக்கி” ஆயுதத்தை பறித்தபோது  மற்ற போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைக் கொன்றதாகவும் சொல்லப்பட்டது.

என்கவுன்டர் காட்சியின் புகைப்படங்கள் ஆண்கள் கைவிலங்கு மற்றும் சங்கிலியால் கட்டப்பட்ட்டிருந்ததைக் காட்டின. மேலும் விகாருதீனின் தந்தை, இப்படிப்பட்ட நிலையில்போலீசாரிடமிருந்து ஆயுதத்தை அவர்கள் எப்படி பறித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். எழுத்தாளர் வரவர ராவும் இந்தக் கொலை குறித்து கேள்வி எழுப்பினார், இது “முன் திட்டமிடப்பட்டதாகும்” என்று கூறினார்.  இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன், இரண்டு சிமி செயற்பாட்டாளர்கள் இரண்டு போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த  ‘என்கவுண்டர்’ என அறிக்கைகள் தெரிவித்தன.

மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் என கூறப்படுபவர்களின் என்கவுண்டர்கள்:

தெலுங்கானா உருவான ஒரு வருடம் கழித்து, நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் குழுக்களின் உறுப்பினர்களைக் கையாள்வதற்கு விரைவாக அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு ‘என்கவுண்டர்கள்’, அரசு கடைப்பிடித்துவரும் அணுகுமுறையைக் காட்டியது.

ஜூன் 2015-ல், தெலுங்கானா-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே 19 வயது விவேக் கோடமகுண்ட்லா மற்றும் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

விவேக்கின் தந்தை, தனது மகனை என்கவுன்டருக்கு முன்பு காவல்துறையினரால் பிடித்து, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறினார். மாவோயிஸ்ட் தியாகிகள் பெற்றோர் சங்கம் என்று அழைக்கப்படும் ஒரு குழுவின் உறுப்பினர், மூவரும் “போலி என்கவுண்டரில்” கொல்லப்பட்டதாகக் கூறினார். “அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்களின் கைகள் முறுக்கப்பட்டன, மேலும் அவர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. மாவோயிஸ்டாக இருந்தாலும் ஒரு சிறுவனை சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? ” என்று ஒரு உறுப்பினர் கேட்டார்.

வரவர ராவ்

சில மாதங்களுக்குப் பிறகு, 2015 செப்டம்பரில், மாவோயிஸ்டுகள் எனக் கூறப்படும் ஸ்ருதி என்ற மஹிதா (23) மற்றும் வித்யாசாகர் ரெட்டி என்ற சாகர் (32) ஆகியோர் ஒரு மோதலில் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்  அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வரவர ராவ், என்கவுண்டரை ‘போலி’ எனக்கூறியதோடு, காவல்துறையினர் “கொடூரமாக சித்திரவதை செய்து” இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டினார்.

இது மாவோயிஸ்டுகள் எதிர்காலத்தில் நடத்தப்படவிருக்கும் ‘போலி என்கவுண்டர்களுக்கான’ வார்ப்புருவாக மாறும் என கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் தெரிவித்தன. காவல்துறையினர் முதலில் அவர்களைக் கைது செய்து, கொல்லப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு அவர்கள் சித்ரவதை செய்தது என அவர்கள் கூறினர்.

பழங்குடிகள் மற்றும் லம்பாதாக்களின் கொலைகள்:

டிசம்பர் 2017-ல், தெலுங்கானாவில் உள்ள பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் எட்டு ‘நக்சலைட்டுகள்’ போலீசாரால் கொல்லப்பட்டனர், அவர்கள் அனைவரும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கிலும், நக்சலைட்டுகள்  சுட்டதற்கு திருப்பிச் சுட்டதாக போலீசு கூறியது. அதை தொடர்புடைய குடும்பங்கள் மறுத்தன.

கொல்லப்பட்டவர்களின் உடல்களை பரிசோதித்தபோது புல்லட் துளைகள் எதுவும் இல்லை என சில குடும்பங்கள் கூறியதாக என்று தி வயரின் சுகன்ய சாந்தாவின் கள செய்தி அறிக்கை சொன்னது. உடல்கள் மற்றும் முகங்கள் தாடைகள் உட்பட பல இடங்களில் வாயு செலுத்தப்பட்டதும் பல இடங்கள் உடைக்கப்பட்டிருந்ததையும் அந்த அறிக்கை பதிவு செய்திருந்தது. எட்டு பேரை காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாகவும் அவர்கள் குடும்பத்தினர் கூறினர்.

மற்றொரு போலி என்கவுண்டரின் மிக சமீபத்திய வழக்கில், அதே போன்ற புனைவே வெளிப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம், தெலுங்கானா காவல்துறை, சிபிஐ (எம்.எல்) புதிய ஜனநாயகத்தின் ஆயுதமேந்திய எதிர்ப்பு பிரிவின் “பகுதி தளபதி” என்று கூறப்படும் பழங்குடியான லிங்கண்ணாவைக் கொன்றது. லிங்கண்ணா உண்மையில் பழங்குடி மக்களின் பிரச்சினைகளுக்காக போராடிய ஒரு செயல்பாட்டாளர் என அவரது மகன் ஹரி அந்த சமயத்தில் தி நியூஸ் மினிட்டிடம் கூறியிருந்தார்.

படிக்க :
♦ சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !
♦ சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !

இந்த சம்பவத்திலும், சத்தீஸ்கர் எல்லையில் உள்ள காட்டில் லிங்கண்ணாவையும் மற்ற ஏழு மாவோயிஸ்டுகளையும் சுற்றி வளைத்ததாக போலீசார் கூறினர். பதிலடி கொடுக்கும் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் போலீசார் கூறினர். காவல்துறையின் கூற்றுக்களை மனித உரிமை அமைப்புகள் சந்தேகித்தன. லிங்கண்ணாவின் உடலில் அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தெளிவான அறிகுறிகள் இருந்ததாகவும் அவர்கள் கூறினார்.

மாவோயிஸ்டாக இருந்து போலீசு உளவாளியாக மாறிய நயீம் கொலை:

இவற்றில் மிகுந்த பரபரப்பான ‘என்கவுண்டர்’ என்பது 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் மாவோயிஸ்டாக இருந்து போலீசு உளவாளியாக மாறிய முகமது நயீமுதீன் கொல்லப்பட்டதுதான். 1993-ல் ஐ.பி.எஸ் அதிகாரி கே.எஸ். வியாஸைக் கொன்ற கும்பலில் இருந்த  நயீம், அதே ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

2000-ம் ஆண்டில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், நயீம் காவல்துறையினருக்கு ஒரு தகவலாளியாக ஆனார். அவருடைய முன்னாள் தோழர்கள் பலரைக் கொல்ல அவர்களுக்கு உதவினார். (அவர் மிரட்டி பணம் பறித்ததில் ஈடுபட்டதால் மக்கள் போர் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார்). பின்னர்  அவர் ரவுடியாக மாறினார். அவர் மீது பல கொலை மற்றும் மிரட்டல் வழக்குகள் இருந்தன.  அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர் மீது 20 கொலை உள்ளிட்ட 100 கிரிமினல் வழக்குகள் இருந்தன.

அவர் கொல்லப்பட்ட பின்னர், பல அரசியல்வாதிகள் பற்றிய “பல ரகசியங்களை” அறிந்திருந்ததால் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. அவர்களில் சிலருக்கு நிலத்தை அபகரிக்க நயீம் உதவியதாகக் கூறப்படுகிறது. சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் காணாமல் போன ஒரு இணைப்பு அவர் என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறியிருந்தார். குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு பிரிவு உருவாக்கப்பட்டாலும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மக்களின் தூண்டப்பட்ட உணர்ச்சிகளின் பேரிலும் அரசியல்வாதிகளுக்காகவும் தன்னுடைய சுய வன்மத்தை தணித்துக்கொள்ளவும் கொலைவெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது தெலுங்கானா போலீசு.


செய்திக் கட்டுரை: அம்ரித்.
தமிழாக்கம் : அனிதா
நன்றி: தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க