இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் காவிக் குண்டர்கள்!

இசுலாமியர்களை இழிவுபடுத்துவது, தாக்குவது, கொலை செய்வது போன்றவற்றையே தனது முழுநேர பணியாக கொண்டு காவி பயங்கரவாத கும்பல் நாடுமுழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

0

தெலுங்கானா மாநிலத்தில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூச்சலிட்டுக்கொண்டு, ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல் தொடுக்கும் வீடியோ வெளியாக வைரலாக பரவி வருகிறது.

மேடக் மாவட்டத்தின் நர்சாபூரில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 15 – 20 பேர் கொண்ட காவிக் குண்டர் படை இம்ரான் அகமது என்ற நபரைத் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூச்சலிட்டுக்கொண்டு தாக்குவது வீடியோ பதிவுகள் காட்டுகின்றன.

இம்ரான் அகமது பிரியாணி கடை உரிமையாளர். அவரது கடைக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை டெலிவரி செய்ய வந்தவர்தான் காவிக் குண்டர்களில் ஒருவரான லிங்கம். இவர்களுக்குக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் தான் பின் வகுப்புவாத வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது.

இம்ரானின் பார்வையற்ற கர்ப்பிணி சகோதரி ஆயிஷா, இம்ரானை காவிக் குண்டர்களிடமிருந்து காப்பாற்ற முயற்சிக்கும்போது, ஆயிஷாவையும், இமரானின் தாயையும் தாக்கியுள்ளது அக்கும்பல். காவி உடை அணிந்திருந்த அக்கும்பல், இம்ரானின் சட்டையைக் கிழித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

படிக்க : காவிகளின் கற்பனைகளை பொடியாக்கிய, கர்நாடக உழைக்கும் மக்கள்!

மே 7 அன்று நடந்துள்ள இத்தாக்குதல் சம்பவம், மே 25 அன்று வெளியான வீடியோக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் கர்ப்பிணியான ஆயிஷாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ கவுசர் மொகிதீன், இம்ரான் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோதும், லிங்கம் ‘மாலா’வில் இருந்ததால் அவர் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. “அவர் ‘மாலா’வை அகற்றியதும், போலீசார் அவர்களை கைது செய்வார்கள்” என்று எம்.எல்.ஏ கவுசர் கூறினார். இம்ரான் மற்றும் காவிக் குண்டர்கள் பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு இம்ரான் மட்டும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். கும்பலில் இருந்து அடையாளம் காணப்பட்ட லிங்கம் மற்றும் சில குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அதன்பிறகு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

இம்ரான் மீது 295A, 324, மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவிக் குண்டர்கள் மீது பிரிவுகள் 448, 323 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

000

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் போலீசு துறையினரால் ஹிஜாப் அணிந்ததற்காக பெண் மருத்துவரை துன்புறுத்தியதற்காக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உள்ளூர் நிர்வாகி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணியில் இருந்த மருத்துவரிடம் பாஜகவை சார்ந்த சங்கி வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புவனேஷ்வர் ராம் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் தலைமறைவாக இருப்பதாக போலீசு தெரிவித்துள்ளது.

வீடியோவில், பவனேஷ்வர் ராம், “நீங்கள் பணியில் இருக்கிறீர்கள், உங்கள் சீருடை எங்கே? நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்? நீங்கள் கடமையில் இருக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் டாக்டரா என்று சந்தேகமாக இருக்கிறது. எம்.டி டாக்டர் எங்கே? அவளுக்கு ஏன் சீருடை இல்லை? அவள் மருத்துவரா? மருத்துவராக இருக்க அவளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவள் ஹிஜாப் அணிந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாள்.

படிக்க : நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!

பாஜக நிர்வாகி புவனேஷ்வர் மே 24 அன்று இரவு திருத்துறைப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, ஹிஜாப் அணிந்திருந்த மருத்துவரை பார்த்து அவருடன் தகராறு செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பலர் புவனேஸ்வரைக் கைது செய்யக் கோரினர். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஷ்வரை தேடி வருகின்றனர். அவர் மீது 294b, 353, 298 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இசுலாமியர்களை இழிவுபடுத்துவது, தாக்குவது, கொலை செய்வது போன்றவற்றையே தனது முழுநேர பணியாக கொண்டு காவி பயங்கரவாத -ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார- கும்பல் நாடுமுழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இவ்விரு சம்பவங்களும் மற்றுமொரு உதாரணம்.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க