“எங்களது தொழில் செய்தித் தாள்கள் நடத்துவதல்ல; நாங்கள் விளம்பரத் தொழில் செய்து கொண்டிருக்கிறோம்” (We are not in the newspaper business, we are in the advertising business) – 2012 ஆம் ஆண்டு நியூயார்க்கர் பத்திரிகையின் செய்தியாளர் கென் ஔலெட்டாவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் வினீத் ஜெயின். வினீத் ஜெயின் இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை குழுமத்தின் முதலாளி.

முன்பெல்லாம் பத்திரிகைகள் அறிவுத்துறையினருக்கானதாக நடத்தப்பட்டு வந்ததென்றும் அப்போதெல்லாம் அத்தொழில் காத்திரமானதாக இருந்ததென்றும் குறிப்பிடும் வினீத் ஜெயின் தங்களது வாசகர்களைப் பொருத்தவரை இவையெல்லாம் அனாவசியமானவை என்கிறார். பென்னட் கோல்மன் குழுமத்துச் சொந்தமான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை இந்தியாவின் மிகப் பெரிய ஊடகம். கடந்தாண்டு டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் மொத்த வருவாய் 10,000 கோடி.  இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆங்கிலப் பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியாவின் சார்பாக வெளியாகும் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை, மிக அதிகமாக விற்பனையாகும் பொருளாதாரப் பத்திரிகையாக உள்ளது.

அச்சு ஊடகங்கள் தவிர ரேடியோ மிர்ச்சி எனும் பண்பலை வானொலியும், டைம்ஸ் நௌ மற்றும் மிரர் நௌ ஆகிய ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளும், மூவீஸ் நௌ எனும் ஆங்கிலத் திரைப்படச் சேனலும் இக்குழுமத்திற்குச் சொந்தமானதாகும். நடுத்தர வர்க்கத்திடையே கருத்துருவாக்கம் செய்வது மாத்திரமின்றி அரசியல் அரங்கின் நிகழ்ச்சி நிரல்களையே தீர்மானிக்கும் வல்லமை டைம்ஸ் குழுமப் பத்திரிகைகளை நடத்தும் பென்னட் கோல்மன் நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர்களான ஜெயின் சகோதரர்களுக்கும் உண்டு. ராலேகான் சித்தி எனும் வரப்பட்டிக்காட்டில் யாரும் சீந்தாமல் கிடந்த அன்னா ஹசாரேவை தேசத்தின் அரசியல் அரங்கின் மத்தியில் நிறுத்தியதாகட்டும், பாபா ராம்தேவ், கேஜ்ரிவால் உள்ளிட்டவர்களை ‘ஆளுமைகள்” ஆக்கியதாகட்டும், தில்லி மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதற்கு எதிராக தேசத்தின் மனசாட்சியை உலுக்கியதாகட்டும் – இவை தவிற ஏராளமான சந்தர்பங்களில் டைம்ஸ் குழுமப் பத்திரிகைகளால் முன்னெடுக்கப்பட்ட விசயங்கள் அந்தந்த காலகட்டத்தின் பேசு பொருளாக இருந்துள்ளன.

டைம்ஸ் குழுமம் தலையிட்ட பிரச்சினைகள் அனைத்தையும் மக்கள் பார்த்த கண்ணோட்டம் வேறு அப்பத்திரிகை முதலாளி பார்த்த கண்ணோட்டம் வேறு என்பதையே நியூயார்க்கர் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி உணர்த்துகின்றது. முதலாளித்துவ பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவின் செயல்பாடுகளும் அந்தப் பத்திரிகைகளின் விளம்பரப் பிரிவுக்கும் இடையே நிலவிய  எல்லைக் கோட்டின் பின் மற்ற பத்திரிகைகள் ஒளிந்து கொண்டு பம்மாத்து செய்து கொண்டிருந்த போது அதை பகிரங்கமாக மீறி – அப்படி மீறுவதற்கான முன்னுதாரணத்தை நிறுவிக் காட்டியது டைம்ஸ் குழுமப் பத்திரிகைகள். எது செய்தி, எது விளம்பரம் என்பதற்கான அளவீடுகள் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு முற்றும் துறந்த நிர்வாண நிலையை ஏற்கனவே அடைந்திருந்த டைம்ஸ் ஆப் இந்தியாவைத் தனது ஆப்பரேஷன்-136 இன் ஒரு பகுதியாகச் சந்திக்கிறார் ‘ஆச்சார்யா அடல்’.

***

’ஆச்சார்யா அடல்’

‘ஆச்சார்யா அடல்’ அணிந்து கொண்ட முகமூடியும் அவிழ்த்து விட்ட கதைகளிலும் எந்த மாறுபாடும் இல்லை. இந்துத்துவத்தை ஆன்மீக முகமூடியுடன் களமிறக்குவது, அதற்கு பகவத் கீதையை பயன்படுத்திக் கொள்வது, இந்தப் பிரச்சாரத்தை ’செய்திகளாகவும்’,’விளம்பரங்களாகவும்’ மறைமுகமாகவும் நுட்பமாகவும் செய்வது, இதனால் உருவாகும் ஒருவிதமான ’ஆன்மீக சூழலை’ ஓட்டுக்களாக அறுவடை செய்வது, அரசியல் ரீதியிலான எதிர்தரப்பு ஆளுமைகளை கிண்டல் கேலி செய்து மக்களிடம் அவர்களின் மேல் அதிருப்தியை உண்டாக்குவது – இது தான் புஷ்ப ஷர்மா எனும் கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் பத்திரிகையாளர் முன்வைத்த திட்டம்.

புஷ்ப ஷர்மா

தனது மறைபுலனாய்வின் (Sting operation) அங்கமாக மற்ற பத்திரிகைகளை அணுகியது போலவே இரகசிய கேமராவுடன் டைம்ஸ் பத்திரிகையையும் அணுகியுள்ளார் புஷ்ப ஷர்மா. தான் முன்வைக்கும் திட்டம் ‘நாக்பூரில்’ தயாரானது என்றும் இதற்காக 500 கோடி வரை செலவிடத் தயார் என்றும் டைம்ஸ் குழுமத்தை நம்பவைத்துள்ளார். ஐநூறு கோடி என்பது கடந்தாண்டில் டைம்ஸ் குழுமம் ஈட்டிய மொத்த வருவாயில் (10,000 கோடி) ஐந்து சதவீதம் என்பதால் ஆச்சார்ய அடலுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

’ஆச்சார்ய அடலின்’ நன்மதிப்பையும் அவரது வியாபாரத்தையும் பெற மற்ற ஊடகங்களை விட பல படிகள் இறங்கி வந்த டைம்ஸ் குழுமம், செய்தித் தாள் மட்டுமின்றி அவற்றோடு தாம் இலவசமாக வழங்கும் பேஜ் 3 பக்கங்களிலும் ’ஆன்மீக விழிப்புணர்வை’ ஊட்டுவதற்குத் தயார் என முன்வந்துள்ளனர். மேலும், தமது குழுமத்தைச் சேர்ந்த பிற பத்திரிகைகளான பெமினா, ஹெலோ, க்ரேஸியா, டாப் கியர், குட் ஹோம்ஸ் போன்ற பத்திரிகைகளையும் இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதில் டாப் கியர் என்பது மோட்டார் வாகனங்களுக்காகவும், குட் ஹோம்ஸ் என்பது ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் பிரத்யேகமாக நடத்தப்படும் பத்திரிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர தாம் நடத்தி வரும் 12 தொலைக்காட்சி சேனல்களின் மூலம் ஒருகோடியே இருபது லட்சம் நேயர்களையும், பண்பலை ரேடியோ மூலம் 13 கோடி நேயர்களையும் அடைய முடியும் என எடுத்துக் கொடுக்கிறார்கள்.  தவிர ’ஆச்சார்ய அடல்’ வழங்கும் நிகழ்ச்சிக்கான விளம்பரங்களையும் தாமே பார்த்துக் கொள்வதாகவும், முக்கிய நகரங்களில் விளம்பரப் பதாகைகளை தாமே நிறுவிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  போலவே தாம் நடத்தும் பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டிகள், எகனாமிக் டைம்ஸ் மற்றும் ரேடியோ மிர்ச்சி நடத்தும் விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டு எல்லா தளங்களையும் இந்துத்துவ பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கதவுகளை அகலத் திறந்து வைத்துள்ளனர். மட்டுமின்றி, இந்துத்துவ பிரச்சார வீடியோக்களை தயாரிக்க வேறெங்கும் அலைந்து சிரமப்பட வேண்டாமென்றும் தங்களது பிரத்யேகமான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் டைம்ஸ் ஸ்டூடியோவையே பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

***

வினீத் ஜெயின்

’ஆச்சார்ய அடல்’ டைம்ஸ் குழும உயரதிகாரிகளோடும் முதலாளி வினீத் ஜெயினுடனும் நடத்திய இரண்டாவது சந்திப்பின் போது பணப்பரிவர்த்தனை குறித்து விவாதிக்கப்படுகிறது. அப்போது ஆரம்ப கட்டமாக 10 சதவீத தொகையை (50 கோடி) பணமாகத் தான் தரமுடியும் என்கிறார். இதற்கு ஆரம்பத்தில் தயங்கிய வினீத் ஜெயின், பின்னர் பணமாகவே பெற்றுக் கொள்ள சம்மதிக்கிறார். அடுத்து, இந்தப் பணத்தை நேர் வழியில் அல்லாமல் முறைகேடாக பெற்றுக் கொள்ளும் வழிகளை விவாதிக்கின்றனர். அதன்படி, டால்மியா, அதானி, அம்பானி அல்லது எஸ்ஸார் குழுமத்திடம் பணமாகக் கொடுத்து விட்டால் அவர்கள் அதை டைம்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுத்து விடுவார்கள் என ஆச்சார்யா முன்வைக்கும் ஆலோசனையை ஜெயின் ஏற்றுக் கொண்டு இன்னொரு பெயரையும் பரிந்துரைக்கிறார்.

கரீனா கபூருடன் வினீத் ஜெயின்.

அதாவது டைம்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டனத்தை மேற்சொன்ன நிறுவனங்களுக்கு கருப்பில் கொடுத்தால் அதை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதே பணப்பரிவர்த்தனை குறித்து நடந்த ஆலோசனைகளின் சாரம். பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் நாடே துன்பத்தில் கதறிக் கொண்டிருந்த போது அந்த நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழித்து விடும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளே நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்க கூடியது என்றும் டைம்ஸ் குழுமப் பத்திரிகைகள் ஒரு பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறதா?

அது மட்டுமின்றி ஐந்தாண்டுகளுக்கு முன் அன்னா ஹசாரேவும், பாபா ராம் தேவும் ஊழல் மற்றும் கருப்புப் பண பிரச்சினையை முன்வைத்து புழுதியைக் கிளப்பிக் கொண்டிருந்த போது அவர்கள் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டது மட்டுமின்றி கருப்புப் பண மீட்பு என்பதை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந்ததிலும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டைம்ஸ் நௌ சேனலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. கார்ப்பரேட்மயமாகிப் போன ஊடகங்களிடம் இருந்து அற மதிப்பீடுகளை எதிர்பார்ப்பதோ, இந்துத்துவ விசமப் பிரச்சாரங்களுக்கு எதிர்த்து நிற்கும் யோக்கியதையையோ எதிர்ப்பார்ப்பதைக் கூட முட்டாள்தனம் எனச் சொல்லலாம். ஆனால், வருமானத்திற்காக கருப்புப் பணத்திலும் கூட கை நனைக்க தயாராக இருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

***

கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் புலனாய்வு முக்கியமான சில உண்மைகளை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது. முதலில், ஊடகங்களுக்கென்று இருப்பதாக ஊடகவியலாளர்கள் சொல்லிக் கொள்ளும் அறம், கடமை, பொறுப்புணர்வு உள்ளிட்ட கந்தாயங்கள் அனைத்தும் பணம் என்கிற வஸ்துவின் முன் உருகிக் காணாமல் போய் விடும் என்பது. பல்வேறு விவாதங்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும் குறித்து கருத்து சொல்வதற்கான யோக்கியதையை (High Moral Ground) அந்த ஆண்டவனே தமக்கு அளித்திருப்பதைப் போல் நடந்து கொள்வது அறுவெறுப்பான நடிப்பு என்பதை இந்த அம்பலப்படுத்தல் உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டாவதாக, செய்தி ஊடகங்களை வழிநடத்துவது ஆசிரியக் குழுவின் சுதந்திரம் (Editorial freedom) அல்ல; மாறாக அந்த ஊடக நிறுவனத்தின் விளம்பரப் பிரிவும் அதன் தலைவரும் தான். சில ஆண்டுகளுக்கு முன் டைம்ஸ் ஆப் இந்தியா தனது முகப்பு  இலட்சினையை (Mast) விளம்பரங்களுக்காக வாடகைக்கு விட்டது பெரும் விவாதங்களைக் கிளப்பியது நினைவிருக்கலாம். ஆனால், வெகு சில ஆண்டுகளுக்குள்ளாகவே மொத்த பத்திரிகையையும் விளம்பர பேனராக மாற்றும் அளவுக்கு ஆசிரியக் குழுவின் மீது விளம்பரப் பிரிவின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது.

மூன்றாவதாக, ஏற்கனவே பலமுறை அம்பலமான பத்திரிகைகள் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்கள் என்கிற மாயை மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. நான்காவதாக, பாசிசம் என்பது இனிமேல் ஆர்.எஸ்.எஸ். அல்லது அதன் துணை அமைப்புகளால் உண்டாகும் அச்சுறுத்தல் எனும் நிலையைக் கடந்து அரசு இயந்திரம் மட்டுமின்றி ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணும்’ அதற்கு உடந்தை என்கிற உண்மை அம்பலமாகியுள்ளது. டைம்ஸ் குழும முதலாளி மட்டுமின்றி தனது இரகசிய புலனாய்வின் அங்கமாக கோப்ராபோஸ்ட் பத்திரிகையாளர் சந்தித்த அனேக ஊடகங்கள் தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இருந்தே இந்துத்துவ பிரச்சாரத்துக்கு முன்வந்துள்ளன.

பத்திரிகைகள் மட்டுமல்ல; பொதுமக்களின் நிதி விவகாரங்களைக் கையாளும் சில தனியார் நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இருப்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

– தொடரும்.

  • சாக்கியன்

முந்தைய பகுதி: கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க