தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து மார்ச் 26 முதல் மே 4-ம் தேதிவரை, 550 அறிஞர்கள் – வல்லுநர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

கருத்துக்கணிப்பு முடிவின்படி உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு, ஆபத்தான நாடு இந்தியாதான் என்பது தெரியவந்துள்ளது. இதில் முதல் 10 இடங்களில் 9 இடங்களில் ஆசிய நாடுகளும், பத்தாவதாக அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளன.

பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்புணர்ச்சி, வீட்டு வேலை, கொத்தடிமை வேலைகளுக்கு கடத்துதல், கட்டாயத் திருமணம், விபச்சாரத்தில் தள்ளப்படுதல் போன்றவற்றில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

இது போக ஆசிட் வீச்சு, உடல் உறுப்புகளை சிதைத்தல், குழந்தை திருமணம், உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்றவைகளும் இந்தியாவில் அதிகம்.

கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று முதலிடத்தில் இருக்கிறது. நாலாவது இடமே மோசம் என்றால் முதல் இடம் படுமோசம் என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறது.

உள்நாட்டுப் போரில் சிதையும் ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும், சிரியா 3-வது இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் சோமாலியாவும், 5-வதில் சவுதி அரேபியாவும் பெண்களுக்கு ஆபத்து மிகுந்த நாடுகளாக இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் பெண்களுக்கு காரோட்டும் உரிமை வழங்கிய முஸ்லீம் நாடு, பெண்களை ‘தெய்வமாக’ மதிக்கும் பாரதத்தை முந்திவிட்டது.

இந்த தரங்கெட்ட தரவரிசையில் வல்லரசு நாடான அமெரிக்கா 10-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. என்னதான் முன்னேறிய நாடாக இருந்தாலும், பெண்கள் மீதான வன்முறையில் அமெரிக்காவை விஞ்சுவதற்கு ஆளில்லை.

கதுவா, உன்னாவ் வன்புணர்வு சம்பவங்களை கண்டித்து ஹைதராபாத்தில் நடந்த போரட்டம்!

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட சம்பவம், சமீபத்தில் காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டது, உ.பியில் 16 வயது சிறுமி மீதான பாலியல் வன்முறை ஆகியவை உலக அளவில் இந்தியாவின் தற்போதைய முதல் இடத்தை பெற்றுத் தந்துள்ளது.

மத்திய அரசின் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2007 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு இடையே பெண்களுக்கு எதிரான வன்முறை 83 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் . ஒவ்வொரு நாளும் 100 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன, கடந்த 2016-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 39 ஆயிரம் தாக்குதல்கள் நடந்துள்ளது. இது கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகம்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பெண்ணடிமைத்தனத்தை போற்றும் வண்ணம் சங்கராச்சாரி முதல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வரை அவ்வப்போது பெண்கள் ஏன் வெளியே வேலைக்கு போகிறார்கள் என்று கேட்பார்கள். நிர்பயா கொலையைக் கூட பல்வேறு இந்துத்துவத் தலைவர்கள் இப்படித்தான் நியாயப்படுத்தினர். வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்படும் ஒரு பெண் மரியாதைக்குரிய ஆடையை அணியவில்லை என்றும் இவர்கள் புத்திமதி செய்வார்கள். மறுபுறம் சாதி, மத, கிராம வட்டாரங்களில் இத்தகைய வன்புணர்ச்சிகளை கட்டவிழ்த்து விடுவதும் இவர்கள்தான்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கண்ணோட்டத்திற்கு ஒரு அரசு மரியாதை கிடைத்திருப்பதால் இந்தக் கொடுமைகளை முன்னிலும் அதிகமாய் நடக்கின்றன. அரியலூர் நந்தினி முதல் கதுவா சிறுமி வரை ஆர்.எஸ்.எஸ்  கூட்டமே நேரடி குற்றவாளிகளாய் முன் நிற்கிறது. முசுலீம்களை கொல்வது, தலித்துக்களை அடிப்பது, பெண்களை வன்புணர்வது என்பதே இந்துத்துவத்தின் திரிசூல திட்டமென்றால் மிகையில்லை.

மோடி ஆளும் வரை இந்தியா இத்தகைய முதலிடத்தில் இருந்தே தீர வேண்டும்!

(பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் முதல் 10 நாடுகள் பட்டியல்: 1. இந்தியா, 2.ஆப்கானிஸ்தான், 3. சிரியா, 4.சோமாலியா, 5.சவுதிஅரேபியா, 6. பாகிஸ்தான், 7. காங்கோ, 8. ஏமன், 9. நைஜிரியா, 10. அமெரிக்கா.)

கேள்வி: பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா ! ஏன் ?

  • மோடி – பாஜக ஆட்சிதான் முதன்மையான காரணம்
  • பெண்கள் வேலைக்கு போவது அதிகரித்திருப்பதே காரணம்
  • உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை குறைக்க அமெரிக்க சதி
  • தெரியவில்லை, கருத்தில்லை!

வாக்களியுங்கள் !