மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கருத்தரங்கம்

நாள்: 30.06.2018 சனிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்

சிறப்புரை:
தோழர் தியாகு
, ஆசிரியர், தமிழ்த்தேசம்.
தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலர், ம.க.இ.க.

ன்பார்ந்த பெரியோர்களே,
உலகம் எவ்வளவோ தத்துவ ஞானிகளைக் கண்டிருக்கிறது. மேலை நாடுகளில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ, வால்டேர், ரூசோ, சீனத்தில் கன்பியூசியஸ், இந்தியாவில் புத்தர் முதல் சித்தர்கள் வரை மனித வாழ்கையை விளக்கினார்கள். அரசனுக்கு அறிவுரை கூறினார்கள். ஆட்சிக்கு இலக்கணம் வகுத்தார்கள். எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணினர் பலர். தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திட ஆவேசம் கொண்டோரும் உண்டு. ஆனால் மனித குல வரலாற்றில் இன்றுவரை உழைப்பாளி மக்களின் வறுமை, துயரம், அடிமைத்தனம், ஒடுக்குமுறை, சுரண்டல் என்ற கொடுமை ஒழியவில்லையே, ஏன்?

நவீன குடியாட்சிக் கோட்பாடுகள் வந்ததும் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை நிலைநாட்டிவிட்டதாக எக்காளமிடுகிறார்களே! மக்கள் வாழ்க்கை மாறியதா? நிலம், நீர், காற்றை நஞ்சாக்காதே எனக் கேட்டதற்காக, அரசே 13 பேரை தூத்துக்குடியில் படுகொலை செய்ததே ஏன்?

அறிவியல் வளர்ச்சி, முன் எப்போதுமில்லா விந்தைகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது. செல்போன் என்ற கையடக்கக் கருவி உலகத்தை உங்களிடமும் உங்களை உலகத்திற்கும் நொடியில் கொண்டு சேர்க்கிறது. ஆனால் அண்டை வீட்டானை அயலானாக மாற்றிவிட்டதே எப்படி?

“மக்களால் மக்களுக்காக” நடத்தப்படும் ஒரு அரசாங்கத்தையே விலைக்கு வாங்கும் ஆற்றலை ஸ்டெர்லைட் முதலாளியின் பணம் எப்படிப் பெற்றது? உற்பத்திப் பெருகினால் பொருளாதாரம் வளரும், வறுமை நீங்கும் என்கிறார்களே? விவசாயம், தொழில் அனைத்திலும் உற்பத்தி அசுர வேகத்தில் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. பால், பழம் முதல் கட்டில், மெத்தை வரை கண்ணாடிக்குவளை முதல் கார், பைக் வரை வீதியோரங்களில் விலை போகாமல் சீந்துவாரின்றி கிடக்கின்றனவே ஏன்? விவசாயிகளும், தொழிலாளிகளும் மேலும் மேலும் வறுமையிலல்லவா தள்ளப்படுகிறார்கள். பட்டினிச் சாவுகள் தொடர்கின்றனவே ஏன்?

கோவை பகுதியில் இவ்வாண்டு 50,000 தொழில்கள் அழிந்து ஐந்து லட்சம் பேர் வேலை இழந்தல்லவா நிற்கிறார்கள், எப்படி? படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். படித்துவிட்டுத்தான் வேலையின்றி கோடிக்கணக்கில் அலைகிறார்கள். கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு?

மண்டையைக் குடையும் இந்த கேள்விகளுக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தீர்வுகாண முடியாத இந்த சிக்கல்களுக்கு முரணற்ற வகையில் விடை கண்டவர்தான் கார்ல் மார்க்ஸ். அதுதான் பொது உடைமைக் கோட்பாடு. உலக வரலாற்றை மாற்றியமைத்த மகத்தான தத்துவம். மார்க்சியம் வறட்டுத்தத்துவம் அல்ல; அது நடைமுறைக்கான அறிவியல். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வந்த, மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை ஒழித்து மனித வாழ்க்கையைப் பேரழகு மிக்கதாக மாற்றிக்காட்டிய ஒரே தத்துவம்.

சூழ்ச்சி, வஞ்சகம், பொய், பித்தலாட்டம், கொலை, கொள்ளை, பிச்சையெடுத்தல், விபச்சாரம், வறுமை, வளங்களைக் கொள்ளையடிக்கும் கழுத்தறுப்புப் போட்டி, யுத்தங்கள், சுற்றுச்சூழல் நாசம் என உலகையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கி அழித்துக்கொண்டிருப்பது முதலாளித்துவம். அது ஒரு நாசகார சக்தி! அதை அழிக்காமல் உழைப்பாளி மக்களுக்கு வாழ்வில்லை.

மார்க்சியம் தோற்றுவிட்டதாகப் பிதற்றும் வெற்று மனிதர்களுக்கும், சூதுமதியாளர்களுக்கும் சொல்வோம், மார்க்சியம் வெல்லப்பட முடியாததென்று! மார்க்சை போற்றுவோம்! மார்க்சியம் கற்போம்!

“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதையெங்கள் உயிரென்று காப்போம்”
– பாவேந்தர்.

அனைவரும் வருக!

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9443188285

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க