தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களாக இருந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோர் மீது பல்வேறு பொய் வழக்குகளை ஜோடித்தது போலீசு. அதன் தொடர்ச்சியாக கடந்த 20.06.2018 அன்று நள்ளிரவில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை கைது செய்தது . இக்கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

26.06.2018 செவ்வாய் அன்று சிதம்பரம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைதைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் ஆர்.டி.ஓ அலுவலக வாயில் அருகில், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எவ்வாறு மக்கள் போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதை விளக்கிப் பேசினார். டாஸ்மாக் போராட்டம், சிதம்பரம் கோவிலில் தமிழ் பாடும் உரிமைப் போராட்டம், காவிரி உரிமைப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முன்நின்று, சமரசமற்ற வகையில் போராட்டம் நடத்தினார் என்பதை விவரித்துப் பேசினார். போராடும் மக்களுக்கு எந்நேரமும் உடன் நிற்கக் கூடியவர் வாஞ்சிநாதன் என்றும் அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி தனது தலைமை உரையை முடித்துக் கொண்டார்.

அடுத்ததாக மூத்த வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் அவர்களின் கண்டன உரையில், கார்ப்பரேட்டுகளின் அடிமை மத்திய அரசும், எடப்பாடி அரசும் எவ்வாறு மக்கள் விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதை விவரித்துப் பேசினார். போராடும் மக்களின் மீதான அரசின் ஒடுக்குமுறையின் போது மக்களுக்காக சட்ட காவலராக வாஞ்சிநாதன் செயல்பட்டார் என்பதால்தான் அவரை இந்த அரசு கைது செய்திருக்கிறது என்றும் இந்தக் கைது கடும் கண்டனத்திற்கு உரியது  கண்டன உரையாற்றினார்.

அதன் பின்னர் வழக்கறிஞர் மணிவண்ணன் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து அவர் பேசுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களின் தன்னெழுச்சியையும், அதற்கு உறுதுணையாக நின்ற மக்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களின் தன்னலமற்ற போராட்டத்தைப் பற்றியும் பேசினார். அவரைக் கைது செய்வதன் மூலம் போராட்டங்களை முடக்கிவிடலாம் என அரசு நினைக்கிறது. வாஞ்சிநாதனைக் கைது செய்தது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்தார்.

வழக்கறிஞர் தயாநிதி அவர்கள் பேசுகையில், மத்திய அரசும், அடிமை மாநில அரசும் எவ்வாறு தமிழக மக்களையும் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் அழிக்க நினைக்கின்றன என்பதை விவரித்துப் பேசினார். மத்திய அரசு தமிழகத்தை மற்றுமொரு காஷ்மீராக எவ்வாறு மாற்ற நினைக்கிறது என்பதைக் குறித்தும் பேசினார். மக்களின் போராட்டங்களுக்கு உடன் நின்று சட்ட உதவியளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், இந்தக் கைது நடவடிக்கை என்பது அடக்குமுறையின் உச்சகட்டம் என்றும் உரையாற்றினார்.

இறுதியாக வழக்கறிஞர் செந்தில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, நின்று கவனித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

தகவல்:
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சிதம்பரம்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க