”நான் ஐந்து வயிறுகளுக்குச் சோறு போட வேண்டும். ஒரு வேலைக்காரியின் சம்பளத்தை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி முடியும்” என்கிறார் ஷபானா மேமோன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). முப்பத்தோரு வயதான ஷபானா மும்பையைச் சேர்ந்தவர்; மும்பையை அடுத்துள்ள வடாலாவில் வசிக்கிறார். மூன்று குழந்தைகளும், வாய்ப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கணவரையும் ஷபானா தான் கவனித்துக் கொள்ள வேண்டும்; ஏழ்மையான குடும்பம். தனது குடும்பத்தின் பணத் தேவையை சமாளிக்க தன்னார்வக் கருமுட்டைக் கொடையாளியாக இருக்கிறார் ஷபானா.

கடந்த 2009-ஆம் ஆண்டு துவங்கி இதுவரை எட்டுமுறை கருமுட்டைகளைக் கொடையளித்துள்ள ஷபானா, எட்டாவது முறையாகக் கொடையளித்ததற்கு 28,000 ரூபாயைக் கட்டணமாகப் பெற்றுள்ளார். கருமுட்டைகளைக் கொடையளிப்பது இரத்த தானம் போல் அத்தனை எளிதான காரியமல்ல; மிகச் சிக்கலான  மருத்துவ நடைமுறைக்கு கொடையாளியின் உடல் ஆட்படுத்தப்படும். இதன் காரணமாகப் பல்வேறு பின்விளைவுகளும் உடல்ரீதியான சீர்கேடுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த முறை  பெற்ற கட்டணத்தில் சுமார் பத்தாயிரம் ரூபாயை கொடையளித்ததால் உண்டான மருத்துவப் பிரச்சினைகளைச் சரி செய்ய செலவிட்டுள்ள ஷபானா, இனிமேல் கொடையளிப்பதில்லை என முடிவெடுத்துள்ளார்.

”தாங்க முடியாத துன்பத்தில் நான் இதைச் செய்கிறேன். ஆனால், எனது மோசமான எதிரிக்கும் கூட இந்த நிலை ஏற்படக் கூடாது” என்கிறார் ஷபானா மேமோன்.

ஷீலா படேல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தானேயிலுள்ள தனது வீட்டில்.

ஆனால், அதே மும்பையைச் சேர்ந்த 26 வயது ஷகீதா கானின் கதை வேறு. கடந்த எட்டாண்டுகளில் ஐந்து முறை கருமுட்டைக் கொடையளித்துள்ளார் ஷகீதா. ஐந்து முறையும் வெற்றிகரமாக கருத்தரிப்பு நடந்துள்ளது. எனவே ஷகீதாவுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. முதல் முறை 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்ற ஷகீதா, இறுதியாக கொடையளித்த போது 45 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ஷகீதா இரண்டு பிள்ளைகளின் தாய். புத்தகம் பைண்ட் செய்யும் கம்பெனிக்கு கூலி வேலைக்குச் செல்லும் ஷகீதாவின் கனவருக்கு பெரும்பாலான நாட்கள் வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைக்கும் நாட்களில் 300ல் இருந்து 400 ரூபாய் வரை கூலி கிடைக்கலாம்.

“மும்பையில் இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மிகவும் சிரமம்” எனக் குறிப்பிடும் ஷகீதா, தனது மூத்த மகளின் கல்விக் கட்டணத்தைக் கட்டும் வழி தெரியாமல் அவளை மதரஸா பள்ளிக்கு அனுப்பியுள்ளார். இரண்டாவது மகனின் கல்விச் செலவும் கையைக் கடிக்க ஆரம்பித்துள்ளதால் அவனையும் மதரசாவுக்கே அனுப்பும் முடிவில் இருக்கிறார். “எனது உறவினர்கள் நான் சுலபமாக பணம் சம்பாதிக்கிறேன் என நினைக்கின்றனர். நான் சம்பாதிப்பதை எல்லாம் உறவினர்களுக்கே கொடுக்க வேண்டியுள்ளது… கடைசியில் எனக்கென்று எந்தச் சேமிப்பும் இல்லை” எனக்கூறும் ஷகீதா ஒன்பதாம் வகுப்பு வரையே படித்துள்ளார்.

***

‘வெளிச் சோதனை முறை கருக்கட்டல்’ (In Vitro Fertilisation-IVF) எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவத்தின் உலகளாவிய சந்தையின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் (15 பில்லியன் டாலர்).  கருமுட்டைகளைக் கொடையாளிகளிடம் இருந்து  பெற்று சோதனைச் சாலைகளில் வைத்து அதனுள் உயிரணுக்களைச் செலுத்துவது, பின்னர் கரு (அல்லது முளையம் – Embryo) வளர்ந்த பின் அதை இயற்கையாக கருத்தரிப்பதில் பிரச்சினை உள்ள பெண்களின் கருப்பையிலோ அல்லது வாடகைத் தாய்களின் கருப்பையிலோ வைத்து வளரச் செய்வார்கள். இந்த மருத்துவ (அல்லது வியாபார) நடைமுறையின் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர்கள் கருமுட்டைக் கொடையாளிகள்.

பெரும்பாலும் வறுமையான பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு இந்தச் சிக்கலான மருத்துவ நடைமுறைகளைக் குறித்து எதுவும் தெரியாது என்பதோடு மருத்துவர்களும் விளக்கிச் சொல்வதில்லை. கருமுட்டைகளைக் கொடையளிக்க முன்வருகிறவர் மாதவிடாய் துவங்கிய இரண்டாம் நாளில் இருந்தே ஹார்மோன் ஊசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சாதாரணமாக ஆரோக்கியமான ஒரு பெண்ணின் சினைப்பையில் ஓரிரு கருமுட்டைகளே உருவாகும்; ஹார்மோன்களை உடலில் ஏற்றிக் கொள்ளும் போது குறைந்தபட்சம் மூன்றில் இருந்து அதிகபட்சம் 15 கருமுட்டைகள் வரும் உருவாகும். அடுத்து, முட்டைகளின் வளர்ச்சியை தொடர்ந்து மீயொலிச் சோதனைகளின் (Ultrasound) மூலம் மருத்துவர்கள் கண்காணித்து வருவார்கள்.

கருமுட்டைகள் ‘அறுவடைக்கு’ தயாரானவுடன், அவற்றை சேகரிக்கும் மருத்துவ நடைமுறையை ’பிக்-அப்’ என மருத்துவர்கள் அழைக்கின்றனர். கொடையாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மீயொலி உணர்வியால் (Ultrasound sensor) வழிநடத்தப்படும் மெல்லிய ஊசி ஒன்று பெண்ணுறுப்பினுள் செலுத்தப்பட்டு அதன் மூலம் கருமுட்டைகள் சேகரிக்கப்படும். சுமார் முப்பது நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் இந்த மருத்துவ நடைமுறைக்குப் பின் அதே நாளில் கொடையாளியை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.

தொடர்ந்து உடலில் ஹார்மோன்களை ஏற்றுவதாலும், உட்கொள்ளப்படும் மருந்துகளின் வீரியத்தின் விளைவாலும் பெரும்பாலான கருமுட்டைக் கொடையாளிகளுக்கு சினைப்பை வீக்கம் (Ovarian Hhyperstimulation Syndrome – OHSS) ஏற்படும். கருமுட்டைகளைக் கொடையளித்த பின் 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு மீயொலிச் சோதனை மேற்கொண்டு சினைப்பை வீக்க நிலையையும் இரத்தக் கசிவையும் கண்காணிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கொடையாளிகள் செலவைத் தவிர்க்க இந்தச் சோதனையை மேற்கொள்வதில்லை. மேலும், கருமுட்டை சேகரிப்பு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றால் சினைப்பை கிழிந்து இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதீத ஊக்க மருந்துகளின் எதிர்விளைவுகள் குறித்து கொடையாளிகளுக்கு எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லை; மருத்துவர்களும் அவ்வாறாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை. இந்தியச் சட்டங்களின் படி, இவ்வாறு கொடையளிக்க முன்வரும் பெண்களிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த நடைமுறை வெறும் சடங்காகவே பின்பற்றப்படுகின்றது. மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் ஒரு தாளில் கையெழுத்தையும்  வாக்காளர் அடையாள அட்டையின் நகல் ஒன்றையும்  வாங்கிக் கொண்டார்கள் என்றும், அதில் என்ன இருந்ததென்று தனக்குத் தெரியாதென்றும் குறிப்பிடுகிறார் ஷீலா பாட்டீல் (மாற்றுப் பெயர்) எனும் கொடையாளி.

***

ருமுட்டைக் கொடை என அழைத்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இது மொத்தமும் ஒழுங்கமைக்கப்பட்ட வியாபாரமாகவே நடந்து வருகிறது. பெரும் செலவு பிடிக்கும் செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சையை மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், பணக்காரர்களுமே மேற்கொள்கின்றனர். நடுத்தர வயது வரை பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போடும் இவர்கள், இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்புகள் அருகிப் போகும் வயதில் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இந்தியாவில் கருத்தரிப்புச் சிக்கல் எத்தனை பேரிடம் உள்ளது என்பதைக் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை. எனினும், சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படி (Indian IVF & PGD Market, By Structure) 2016-ஆம் ஆண்டில் 1,078 கோடியாக இருந்த செயற்கைக் கருவூட்டல் தொழில் 2022-இல் 2,600 கோடியாக உயரும் எனத் தெரிவிக்கிறது (15.8 சதவீத ஆண்டு வளர்ச்சி)

கருமுட்டைக் கொடையாளிகளை இதற்காக மனதளவில் ’தயாரிக்க’ இடைத்தரகர்களும் உண்டு. அதே போல், இந்தியச் சட்டங்களின் படி கருமுட்டைக் கொடை அளிப்பவர்களை பயனாளிகள் சந்திக்க கூடாது; ஆனால்,  எதார்த்தத்தில் இது மீறப்படுவதாக குறிப்பிடுகிறார் இதற்காகவே தரகு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் கவுரவ் வான்கடே. பணக்கார பயனாளிகள் தமக்கு கருமுட்டை தானம் செய்பவர்கள் சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும் எனவும், படித்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், கல்லூரி மாணவிகளாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பதாகச் சொல்கிறார் வான்கடே. ஒரு சில சந்தர்பங்களில் வெளிநாடுகளில் இருந்து காகாசிய இனத்தைச் (வெள்ளையினம்) சேர்ந்த கொடையாளிகளையும் தான் ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிடுகிறார் வான்கடே.

2005-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, கொடையளிக்க முன்வருகிறவர்கள் 21 இல் இருந்து முப்பத்தைந்து வயதுக்குள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது – ஆனால், ஒரு பெண் எத்தனை முறை கொடையளிக்கலாம், ஒருமுறைக்கும் மறுமுறைக்கும் என்ன இடைவெளி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து எந்த விளக்கமும் இல்லை. 2012ம் ஆண்டு சுஷ்மா பாண்டே எனும் 17 வயதே நிரம்பிய  கருமுட்டை கொடையாளி அதீத ஊக்க மருந்துகளின் எதிர்விளைவால் மரணமடைந்தார்.

ஊக்க மருந்துகளின் எதிர்விளைவால் சினைப்பை வீக்கம், இரத்தக் கசிவு மட்டுமின்றி கான்சர் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர் – இதைக் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2017 ஆம் ஆண்டு ரீப்ரொடக்டிவ் பயோமெடிக்கல் ஆன்லைன் எனும் அறிவியல் இதழில் ஐந்து செயற்கைக் கருவுறுதல் மற்றும் கருமுட்டை வளர்ச்சிக்காக ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்ட ஐந்து பெண்களின்  மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஐந்து பெண்களுமே சிகிச்சைக்குப் பின் சினைப்பை வீக்கப் பிரச்சினையைச் சந்தித்ததும், பின்னர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானதும் தெரியவந்தது.

வறுமையின் கொடுமை தாளாமல் கருமுட்டைக் கொடையாளிகளாக முன்வரும் பெண்களுக்கு, மருத்துவ அலட்சியத்தால் பாதிப்புக்கு ஆளான பின் எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை. சுஷ்மா பாண்டேவின் தாயார் தனது மகளின் மரணத்தைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மேல் தொடர்ந்த வழக்கு இதுநாள் வரை எந்த முன்னேற்றமும் இன்றி அப்படியே தேங்கி நிற்கிறது. வழக்கின் நிலை குறித்து 2016ம் ஆண்டு மகாராஷ்டிரா மனித உரிமை கமிஷனில் செய்யப்பட்ட முறையீடும் எந்த முன்னேற்றமும் இன்றியே உள்ளது.

ஆரோக்கியமான ஒரு பெண் அதிக கருமுட்டைகள் உருவாவதற்கான ஊக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதை அப்பெண்ணின் உடல் ஏற்றுக் கொள்வதில்லை. கருமுட்டைக் கொடையாளிகளாக முன்வருகிறவர்களை மருந்துகளைப் பரிசோதிக்க முன்வரும் தன்னார்வலர்களைப் போல் கருத வேண்டும் என்றும் அவர்களுக்கு வழங்கப்படும் தொகையைக் கட்டனமாக அல்லாமல் இழப்பீடாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்குப் போதிய மருத்துவ வசதிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார் மருத்துவர் ஆனந்த் பாஹ்ன்.

எவ்வாறாயினும், ஒருபக்கம் வறுமையும் , இன்னொரு புறம் காகிதத்தில் மட்டுமே உயிர்வாழும் சட்டங்களும், மற்றொருபுறம் ஏழைகளின் உயிர்களை புழுக்களைப் போல் மதிக்கும் அதிகார வர்க்கம் கைகோர்த்துக் கொள்கின்றன. எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள அப்பாவி ஏழைப் பெண்கள் இந்தச் சூழலுக்குப் பலியாகின்றனர்.

நன்றி: scroll.in (ஸ்க்ரோல் இணையதளத்தில் Priyanka Vora எழுதிய கட்டுரைகளின் சுருக்கப்பட்ட வடிவம்.)

தமிழாக்கம்: சாக்கியன்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க