டந்த 14.06.2018 அன்று மதுரையிலிருந்து குருவாயூர் வரை செல்லும் ரயிலில் மணப்பாறை மக்கள் அதிகாரம் தோழர்கள், ஸ்டெர்லைட் அரசின் படுகொலையை கண்டித்து திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். அதனை பயணிகளும் ஆர்வமாக வாங்கி படித்து நிதியளித்தனர்.

பொதுமக்கள் ஆர்வமாக படிப்பதையும் வாங்குவதும் நிதியளிப்பதையும் கவனித்துக் கொண்டிருந்த இருவர் திடீரென எழுந்து கத்தத் துவங்கினர். பொது இடத்தில் அரசை விமர்சித்துப் பேசுவது, பிரசுரம் தருவது தவறு என்றும் கூறி பிரச்சாரத்தைத் தடுத்தனர். ”உங்களுக்கு பிடிக்கலைனா  வாங்காதீங்க, இதை கேட்பவர்களுக்கு கொடுக்கிறோம் உங்களுக்கு என்ன பிரச்சனை?“  என்று மக்கள் அதிகாரம் தோழர்கள் கேள்வி கேட்டதும், அவர்கள் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்றும் சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் என்றும் பேசினர். இவர்களின் காவி நிறத்தைப் புரிந்து கொண்ட தோழர்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் முகத்தை அம்பலப்படுத்தி பேசினர். உடனே தோழர்களின் முகத்க்தை வீடியோ எடுத்து, ”உங்களை என்ன செய்கிறேன் பார்” என மிரட்டிப் பணிய வைக்க முயன்றனர். அதைப் பற்றி கவலைப்படாமல் பிரச்சார வேலையில் கவனம் செலுத்தத் துவங்கினர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

காவிகள் இருவரும் முகநூலில் பரப்பிய செய்தி மக்களுக்கு முன்னதாகவே போலீசாருக்கு போனதுதான் மிக ஆச்சரியம். இறுதியாக அச்செய்தி, மணப்பாறை கியூ பிரிவு போலீசுக்கும் போய்ச் சேர்ந்தது போலும். மணப்பாறை கியூ பிரிவு போலீசு தமது பங்குக்கு புகைப்படத்தையும் வீடியோவையும் காட்டி பூச்சாண்டி காட்டியது.

கடந்த 22-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் மதுரை ரயில்வே ஆய்வாளர் உட்பட 6 போலீசார் மணப்பாறை உள் கிராமம் வரை தேடித் துலாவி  சிவகுமார் என்ற தோழரைக் கைது செய்தனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட மற்றொரு தோழரான முரளியை பிடிக்க பெரும் பாடுபட்டனர். பகல் 12 மணி வரை அவரை பிடிப்பதற்கு பெருமுயற்சி செய்தனர். ஆனால் அவர் தனது உறவினர் இறப்புக்காக வெளியூர் சென்றிருந்ததால் கைது செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி மாலை 3 மணியளவில் கடத்தி செல்லப்பட்ட தோழர் சிவகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த பெண் நீதிபதியிடம் ஏற்கனவே ஆர்எஸ்எஸ்-காரர்கள் எடுத்த வீடியோவை போட்டு காட்டினர். வீடியோவை பார்த்த நீதிபதி புகார் பெறபட்டதா என கேள்வி எழுப்பினார். புகார் எதுவும் இல்லை என்ற போலீசு, ”மேடம், இவர்கள் அரசின் ஸ்டெர்லைட் கொள்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர்” என்று மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பை நீதிபதியிடம் கூறினர்.

அதற்கு அந்த நீதிபதி ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் அரசின் கொள்கையை விமர்சிக்கவும் தனக்குப் பிடிக்காத கொள்கையின் மீது கருத்து சொல்லவும் உரிமை இல்லையா என்று வினவினார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அடுத்த விஷயத்திற்கு தாவினர்.

“மேடம், இவர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தனர்” என்று பொய்யான தகவலைக் கூறினர். உடனே நமது தோழர் ரயிலில் பயணம் செய்ததற்கான டிக்கெட் தம்மிடமுள்ளது என்றும் அவசியமானால் மறுநாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிபதாகவும் கூறி போலிசாரின் பொய் முகத்தைக் கிழித்தெறிந்தார்.

நீதிபதி போலீசிடம், ”பிரிவு 153 B-ல் கைது செய்து இருக்கிறீர்கள், எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்?, எப்போது கைது செய்திர்கள்?” என கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். அப்போதும் திருந்தாத போலீசு மதுரை பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்தபோது பாய்ந்து சென்று பிடித்ததாக ஒரு கதையை கட்டியது. அதனை மறுத்த நமது தோழர், நடந்த சம்பவத்தைக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ”இவர்கள் எப்போதுமே இப்படித்தான் கூறுவார்கள். ஆகவே இந்த வழக்கை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் எந்தவிதமான அடிப்படையுமில்லை சிறைக்கு அனுப்புவதற்கான முகாந்திரமும் இல்லை. ஆகவே நீங்கள் வெளியே செல்லலாம். தேவைப்படும் போது உங்களுக்கு சம்மன் அனுப்புகிறோம். அப்போது மட்டும் வந்தால் போதும்” எனக் கூறி நமது தோழரை வெளியே அனுப்பி வைத்தார் நீதிபதி.

அதோடு நிற்காமல் இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் ஆதாரங்கள், ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் வேறு நீதிபதியிடம் செல்லக்கூடாது என்றும் தன்னிடமே வர வேண்டும் என்றும்  கறாராகவும்  கண்டிப்போடும் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இறுகிய முகத்தோடு வெளியே வந்த போலீசாரை விரட்டிப் பிடித்த தோழர், ”அப்படியே விட்டுட்டு போனா என்ன அர்த்தம்?  எப்படி அழைத்துக் கொண்டு வந்தீர்களோ அதேபோல திரும்பவும் என்னை ஊரில் கொண்டு போய் விட வேண்டும்” என்றார். ”எங்கள் வண்டி கைது செய்யத்தான் இருக்கிறது. திரும்ப அழைத்துச் செல்ல முடியாது” என்றனர். இதை ஏற்காமல் விடாப்பிடியாக நின்று போராடினார் வேறு வழியில்லாமல் தோழரின் போக்குவரத்திற்கு தனது சொந்தப் பணத்தை வாழ்க்கையில் முதன்முதலாக கொடுத்து அனுப்பியது போலீசு.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்புக்கு வந்த போலீசார், காலையிலிருந்து தோழர் சிவக்குமாருக்கும், அதிகாரிக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தையும், விசாரணையின் போது நமது தோழர்கள் எதிர்கொண்ட துணிச்சலையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இடையில், தோழரிடம் தொலைபேசியில் பேசிய  DSP, புரட்சிகர அமைப்பில் இருக்காதீர்கள் அதிலிருந்து வெளியேறுங்கள்” என வகுப்பெடுத்தார். ” நாங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம். நாளைய தேவைக்கு  சுத்தமான காற்று, தண்ணீர் வேண்டுமென்றுதான் போராடுகிறோம்” என DSP-க்கு மக்கள் அதிகாரம் தோழர் வகுப்பெடுத்தார். அதை அங்கிருந்த போலீசார் கவனித்துக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து வெளியே வந்தவுடன், ”நீங்கள் ஜெயிச்சிட்டீங்க தம்பி, வாழ்த்துக்கள்” என்று கைகுலுக்கி வெளியே  அனுப்பி வைத்தனர்.

ரயிலில் பயணிகள் கொடுத்த ஆதரவு காவிகளுக்கும், போலீசு கும்பலுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

”சமூகவிரோதிகள்-பட்டியல்துறை அமைச்சர்” பொன்னார் நாளை, “சமூகவிரோதிகள் காவல்துறையில் மட்டுமல்ல,  நீதித்துறையிலும் புகுந்து விட்டனர் என்றும் அறிக்கை விடலாம். நல்ல முன்னேற்றம் தான்!

ஆளுகின்ற மோடி எடப்பாடி அரசுகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக நமது கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. க்கு அடியாட்களாக காவல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருப்பதோடு, மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின் தேவையையும் உணர்த்தியிருக்கிறது, இந்த சம்பவம்.

தமிழகமே அஞ்சாதே!!!
எதிர்த்து நில்!!!

தகவல்: மக்கள் அதிகாரம், மணப்பாறை.
தொடர்புக்கு : 98431 30911

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க