ஜெயங்கொண்டம் மக்கள் அதிகாரம் தோழர் கதிரவன் என்ற கொளஞ்சியை தேசதுரோக வழக்கில் கைது செய்துள்ளது போலீசு.
கடலூர், சீர்காழி பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை முழுமையாக அமல்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு. இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் போராடி வருகின்றனர்.
கடலூர், ஜெயங்கொண்டம் பகுதியில் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துப் போராட அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்ட முன்னணியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 20/06/2018 அன்று மக்கள் அதிகாரம், சி.பி.எம்., சி.பி.ஐ., ஒ.வி.மு., ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் கமிட்டி உருவாக்குவது பற்றி கூடிப் பேசியுள்ளனர். அதில் மஃப்டியில் கலந்து கொண்ட போலீசு, அந்நிகழ்வுக்குப் பிறகு ஒருங்கிணைப்புக் கமிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் இப்போராட்டக் கூட்டமைப்பில் இருந்து மக்கள் அதிகாரத்தை வெளியேற்றுமாறு மிரட்டியிருக்கிறது. அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசு, மக்கள் அதிகாரம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த தோழர் கொளஞ்சி என்ற கதிரவனைக் கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது. அச்சமயத்தில் அவர் அங்கு இல்லாததால், அவரது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் கலைத்துப் போட்டு, அங்கிருந்த பிரசுரங்களை வீசியெறிந்து அவ்விடத்தையே களேபரமாக்கியது. அங்கு கூடிய ஊர் மக்கள், இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கிருந்து ஓடியது போலீசு.
இந்நிலையில், கடந்த 22/06/2018 அன்று மதியம் தனது வீட்டில் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தோழர் கொளஞ்சியை, 10-க்கும் மேற்பட்ட போலீசு சூழந்து கொண்டு சாப்பிட்டு முடிக்கக்கூட விடாமல், கையோடு இழுத்துச் சென்றுள்ளது.
எதிர்த்துக் கேட்ட ஊர்க்காரர்களையும், உறவினர்களையும் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறது போலீசு. “ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக நோட்டீசு கொடுத்தார், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்” எனக் கூறி அவர்மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153 A, 124 A, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது மோடி – எடப்பாடிகளின் எடுபிடி போலீசு.
மண்ணின் விடுதலைக்காக போராடுபவன் தேசதுரோகி என்றால், அதை மீண்டும் மீண்டும் செய்வோம். தொடரும் அரசு அடக்குமுறைகளுக்கு எதிராக கரம் கோப்போம்!
கடந்த மே (2018) மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான தங்கபாண்டியன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் சந்தேகப்படுவோரின் வீடுகளுக்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. இந்த உத்தரவை போலீசு எப்படி மதிக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள்.
சம்பவம் 1 (இடம் : கோவில்பட்டி)
கடந்த வாரம் (தீர்ப்பு வழங்கி 20 நாட்களுக்குப் பின்னர்) கோவில் பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற மக்கள் அதிகாரம் உறுப்பினரின் வீட்டுக்கு இரவு இரண்டு மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட போலீசு திடீரென நுழைகிறது. உறங்கிக்கொண்டு இருந்த அவரின் அம்மாவைப் பார்த்து “தூங்கறீயா, ஒழுங்கா எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மிதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒரு போலீசு. “என்ன புள்ளய வளர்த்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும்” என்று கண்டபடி கத்துகிறார். மற்ற போலீசு சேர்ந்து கொண்டு வசை பாடுகிறது. பள்ளியில் படிக்கும் அவரது தம்பியின் முகவரியை வாங்கிக்கொண்டு “டேய்… மாரி வரல உன்னை நாளைக்கு தூக்கிக்கிட்டு போயிடுவோம்” என்று மிரட்டல் விடுக்கிறது. வீட்டில் உள்ள பொருட்களை கலைத்துப்போடுகிறது. தொடர்ந்து வந்து வீட்டில் மிரட்டிக்கொண்டே இருக்கிறது. “எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமத்தான நான் எம் மவன வளர்த்தேன், அவனை கொலைகாரன்னு சொல்றாங்களே” என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார் அந்தத் தாய். துப்பாக்கியால் 13 பேர்களை சுட்டுக் கொன்ற போலீசு கூச்சநாச்சமே இல்லாமல் எப்படி பச்சையாக புளுகுகிறது பாருங்கள!
“தூங்கறீயா, ஒழுங்கா எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மிதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒரு போலீசு. “என்ன புள்ளய வளர்த்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும்”
சம்பவம் 2 (தூத்துக்குடி இலுப்பையூரணி)
ராமர் என்பவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளர். ராமரின் மனைவியும் அவரின் தம்பி மனைவியும் மற்றும் அவர்களது சிறு வயது குழந்தைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருக்கும் போது, (ஜூன் 10ஆம் தேதி இரவு 3 மணிக்கு) சுமார் 40 போலீசுக்காரர்கள் சுவரேறி குதிக்கிறார்கள். பெண்கள் உறங்கிக் கொண்டு இருக்கும் போது டார்ச் லைட் அடித்துப் பார்க்கிறார்கள். கதவுகளை ஓங்கி டமால் டமால் என்று அடிக்கிறார்கள். பதறி எழுந்த பெண்களை வெளியே வரச்சொல்லி வீடுகளுக்குள் சென்று துழாவுகிறார்கள். சுவரேறிக் குதித்து வந்த போலீசு வெளியே செல்வதற்கு கதவை திறந்து விடச் சொல்லியிருக்கிறது. “எதுக்கு இந்த நேரத்துக்கு வந்தீங்க, பகல்ல தினமும் வர்ரீங்க, பதில் சொல்றோமா இல்லையா, சுவரேறிக் குதிச்சு வர்ரீங்கலே இதெல்லாம் சரியா இருக்கா” என்று இரு பெண்களும் கேட்க, “சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும்” என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. “நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிறோம் கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும் பூட்டாம வெக்கிறோம்” என்று பதிலளித்து இருக்கிறார்கள், அந்தப் பெண்கள்.
அடுத்த இரு நாட்கள் கழித்து மாறு வேடத்தில் வந்த போலீசு “வண்டி வாடகை எடுத்துட்டு காசு தராம இருக்கான் உன் வீட்டுக்காரன், போனும் எடுக்க மாட்டேங்கிறான்” என்று காலையில் சத்தம் போட்டு இருக்கிறது. பின்னர் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய் தனியே விசாரிக்க ஆரம்பித்தவுடன், போலீசுதான் என்பது உறுதிப்படுத்தியதையடுத்து கேள்வியெழுப்புகின்றனர் பெண்கள். தப்பிச் செல்கிறது, போலீசு. எப்போது போலீசு வீட்டுக்கு வருமோ என்ற பயத்தில் இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள் பெண்களும் குழந்தைகளும்.
“சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும்” என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. “நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிறோம் கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும் பூட்டாம வெக்கிறோம்” என்று பதிலளித்து இருக்கிறார்கள்.
இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் ராமரின் வீட்டுக்கு 10 வீடு தள்ளி இருக்கும் ஜெபமாலை என்பவரை பிடித்துச்சென்று சித்தரவதை செய்திருக்கிறது. அதனால் உடலெல்லாம் காயங்கள் ஏற்படுகின்றன. அவரை ரிமாண்ட் செய்திருக்கிறது.
சம்பவம் : 3 (இடம் : ஒத்தகடை)
இப்பகுதியில் உள்ள எவர்சில்வர் பட்டறையில் பணியாற்றும் தொழிலாளரான சரவணன் என்பவரது வீட்டின் கதவை இரவு 3 மணிக்கு ஓங்கி பலமாக அடிக்கிறது போலீசு. சரவணனின் மனைவி “யார்” என்று கேட்கிறார். “போலீசு வந்திருக்கோம், கதவைத்திற என்கிறார்கள்.” “நைட் 3 மணிக்கு வந்தா கதவைத்திறக்க முடியாது, பகல்ல வாங்க” என்கிறார். ஒரு மணி நேரம் அந்த ஏரியாவையே அதகளப்படுத்திவிட்டு செல்கிறது போலீசு.
தொடர்ந்து பக்கத்து வீட்டில் சரவணனின் போட்டோவை காட்டி “யார் தெரியுமா” என்று பீதியூட்டிக்கொண்டு இருக்கிறது போலீசு.
சம்பவம் : 4 (இடம் : ஒத்தகடை)
அதிகாலை மூன்று மணிக்கு ஒத்தக்கடைக்கு அருகே உள்ள காயாம்பட்டி ஊரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் வீட்டுக் கதவைத் தட்டி, மக்கள் அதிகாரம் தோழர் முருகேசன் வீட்டைக் காட்டச் சொல்லி அழைத்துச் சென்று உள்ளனர். தோழர் முருகேசனின் துணைவியார், ” நள்ளிரவில் கதவை திறக்க முடியாது” எனக் கூறியதும், கதவை உடைக்க முயன்று உள்ளது போலீசு.
பக்கத்திலிருக்கும் தோழர் ஒருவர் வீட்டிலிருந்து கதவைத் திறந்து வெளியே வந்த தோழர் முருகேசனை. லத்திக் கம்பு, சீருடை அணிந்த 10 போலீசு மிரட்டி ஜீப்பில் ஏற்றி, அருகில் இருந்த மலம்பட்டியில் உள்ள தோழர் சதீஷின் வீட்டிற்குச் சென்று, அவரையும் கைது செய்து உள்ளனர். பின்பு பகுதியில் வாழும் பிற தோழர்களையும் கைது செய்ய தோழர் வீட்டில், உறவினர்கள் போலீசுடன் வாக்குவாதம் செய்ததால், அண்டை வீட்டு மாடிகளில் எல்லாம் ஏறி இறங்கி அனைவரையும் மிரட்டி உள்ளனர்.
வேறு உறவினர் ஒருவரை அழைத்து அவரது உறவினர்களின் வீடுகளை காட்டுமாறும், தோழரை பிடிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர். அதற்கு அவர், ” நீங்க தான் போலீசு, நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க. நான் வரமாட்டேன்” என உறுதியாக பதிலளித்து உள்ளார். வேறி வழியில்லாமல் பின் வாங்கியுள்ளது போலீசு.
மற்றொரு தோழரின் வீட்டில் கதவை திறக்கச் சொன்ன போது, “ஆம்பள இல்லாத வீட்டுக்கு ஏன்யா வர்ரீங்க. காலேல பொம்பள போலீச கூட்டிட்டு வாங்க” என்று கூறி உள்ளனர். உடன், ” நாங்க ஒத்தக்கடை போலீசு தான்மா. சும்மா அவர பாக்கணும்னு தான் வந்தோம்” என நைச்சியமாக பேசி உள்ளனர். அதற்கு, “ஒத்தக்கடை போலீசா? இந்த ஊர்ல உங்கள பாத்ததே இல்லையே” என பதிலடி கொடுத்ததால், இங்கும் அண்டை வீடுகளின் மாடிகளில் தேடிச் சென்று உள்ளனர்.
அதன் பின் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து நள்ளிரவில் தோழர்களின் வீடுகளுக்கு படை எடுத்துள்ளது போலீசு. தோழர்களின் குழந்தைகளையும் விடாமல் நள்ளிரவில், “அப்பா எங்கே?” என விசாரித்து உள்ளனர்.
தோழர் பரமன்.
சம்பவம் : 5
(இடம்: திருமங்கலம்)
பரமன் வயது 55, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளராக இருக்கிறார். இவரை கடந்த 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசு ஒரு நாள் முழுக்க விசாரித்துவிட்டு தூத்துக்குடிக்கு செல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு விடுவித்தது. இந்த நிலையில் 22.06.2018 அன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி போலீசு 7 பேர் அவரின் வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு செல்கின்றனர். போலீசு வேனில் வைத்து பலமாக அடித்துள்ளனர்.
பின்னர் கண்ணில் துணியைக் கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப் பார்க்கச்சொல்லி அங்கேயும் அடித்துள்ளனர். “டேய் அவுசாரி மவனே இந்தத் துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி (உசிலம்பட்டி தோழர்)” என்று தொடர்ந்து அடித்துள்ளனர். இரவுவரை வண்டியில் தூக்கிக்கொண்டு சென்ற போலீசு பின்னர் ஒரு லாட்ஜில் வைத்து இரவு 9 வரை அடித்துள்ளனர். பிறகு திருமங்கலம் தாண்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். கிளம்பும் போது “உன்னை பாவம்னு மன்னிச்சுட்டேன், குருசாமி போன் செஞ்சா இந்த நம்பருக்கு சொல்லு என்று” ராஜமாணிக்கம் என்ற எஸ்.ஐ. சொல்லி விட்டு சென்றுள்ளார். மகனோ இராணுவத்தில் உள்ள நிலையில் மாடு கன்றை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ள அவரால் வீட்டை விட்டும் போக முடியாத நிலை. வீட்டில் இருந்தாலும் எப்போது வந்து போலீசு கடத்திக்கொண்டு செல்லும் என்ற நிலை.
1 of 5
இதுபோன்ற நள்ளிரவு தேடுதல்கள் பற்றி செய்தி அறிந்த வழக்கறிஞர் ஒருவர், ஒத்தக்கடை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, உச்ச நீதி மன்ற உத்தரவை மீறி இது போல் வீடுகளுக்குச் சென்று மிரட்டுவது பற்றி கேட்டுள்ளார். அதற்கு, ” நாங்க யாரும் வரல சார். எங்களுக்கு தெரியாது” என கூறி உள்ளனர். அந்த வழக்கறிஞர், “உங்க லிமிட்ல தான் இப்படி நடக்குது. உங்க மேல தான் கேஸ் போடுவோம்” என கூறிய பின். “மேலிடத்து பிரஷர் சார்” என கூறிவிட்டு தொடர்பை துண்டித்து உள்ளனர்.
உறவினர்களை மிரட்டியது போலவே, தோழர்களின் நண்பர்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, “ஒழுங்கா அவன் (தோழர்) எங்க இருக்கான்னு சொல்லு, இல்ல நீயும் தூத்துக்குடில கலவரம் பண்ணினன்னு கேஸ் போட்டு உள்ள தள்ளிருவேன். அப்பறம் எத்தன வருசம்ன்னு சொல்லமுடியாது” என மிரட்டி உள்ளனர். கைபேசிகளை வாங்கி சோதித்து உள்ளனர். “உள்ள போடறதுன்னா போட்டுக்கங்க சார். எங்களுக்கு ஒன்னும் தெரியாதுங்கறது தான் உண்மை” என உறுதியாக தெரிவித்து உள்ளனர். மேலும் தோழர்களின் சாதியைக் குறிப்பிட்டு அந்த அடிப்படையில் விசாரித்து உள்ளனர்.
நாம் விசாரித்தவரை, அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்ட போலீசு அனைவரும் தூத்துக்குடி, நெல்லை பேச்சு வழக்கில் பேசியதாக உறுதியாக கூறுகின்றனர்.
சில நண்பர்களை 12 மணி நேரம் வரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து உள்ளனர். தோழர் ஒருவரின் நண்பரையும் அவரது தகப்பனாரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று 2 நாட்கள் எந்த ஒரு இடத்திற்கும் அழைத்துச் சென்று விசாரிக்காமல், வாகனத்திலேயே வைத்து ஊர் முழுவதும் சுற்றி விசாரித்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட தோழர்களின் உறவினர்களையும் கைது செய்யப் போவதாக மிரட்டி உள்ளனர்.
மேலும், ஜூன் 9-ஆம் தேதி முதல் தற்போது வரை தோழர்களின் வீடுகள், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளை எல்லாம் நாள் முழுவதும் உளவுப்பிரிவும், மற்றவர்களும் மாறி மாறி கண்காணித்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் அறிவிக்கப்படாத போலீசு காட்டு தர்பார் நடந்தேறி வருகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு மக்கள் அதிகாரம் ஒருபோதும் பணியாது. தமிழக மக்கள் போலீசின் காட்டுதர்பாருக்கு விரைவிலேயே முடிவு கட்டுவார்கள்!
உலக யோகா தினத்தை முன்னிட்டு, மோடியின் ’யோகா’ நாடகத்தை துகிலுரித்து அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல்
காணொளியை பாருங்கள் ! பாடுங்கள் ! பகிருங்கள் !
பாடல் வரிகள் யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2
நீ கண்ண மூடி செய்யிற யோகா – மோடி
கார்ப்பரேட்டுக்கு கொடுக்குறார் நேக்கா
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2
மோடிக்கு கார்ப்பரேட் சேவை – அதுக்கு
பாடுபட லேபர் தேவை -2
பதினெட்டு மணி நேரம் உழைக்க
பலமான ஒடம்பு தேவை
பலமான ஒடம்பு தேவை – நீ
ஒடம்ப வளச்சி தரையில உருள –
அது ஒனக்கு இல்ல கார்ப்பரேட் வளர
தோழர் கோட்டையன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது ! மக்கள் அதிகாரத்தை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசு !
கடந்த மே22, 2018 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, 25, மே, 2108 அன்று இரவில் தோழர் கோட்டையனை உசிலம்பட்டிக்கு அருகில் இருக்கும் ஆரியப்பட்டியில் கைது செய்தது போலீசு.
இந்தக் கைதுக்கான, காரணம் கேட்டிருக்கிறார் கோட்டையனின் மனைவி செல்வி. தூத்துக்குடி போராட்டத்திற்கு சென்றதால் கைது செய்கிறோம் என்று பதிலளித்திருக்கிறது போலீசு. அப்படியெனில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பேரையுமல்லவா கைது செய்திருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கைதிற்குப் பின்னர் ஒருநாள் கடிதம் கொடுக்க வந்ததாகக் கூறி நள்ளிரவில் வந்து தொல்லை கொடுத்திருக்கிறது போலீசு.
“எங்க அப்பா எந்தத் தப்புமே செய்யல. பொதுமக்களுக்காக கண்டிப்பா போராடணும். அவர் என்ன கொலையா செஞ்சார்?, அவரை எதுக்கு கைது பண்ணீங்க?” என அதிகாரவர்க்கத்தை நோக்கி வினவுகிறார் அவரது மகள் நிவேதா.
”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மீண்டும் அங்கு போய் நாங்கள் போராடுவோம். நீ எத்தனை பேரை சுட்டாலும் சரி, எத்தனை பேரைக் கைது செய்தாலும் சரி நாங்கள் எங்கள் வேலையை தொடர்ந்து செய்வோம்” என உறுதியோடு கூறுகிறார் செல்வி !
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் வேல்முருகனை கடந்த மே 25 அன்று நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது போலீசு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றிய போலீசு அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்க வெறிகொண்டு திரிந்து, அவ்வமைப்பின் தோழர்களை வீடு புகுந்து கைது செய்தது.
தோழர் வேல்முருகனை நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய போலீசு கும்பலின் நடவடிக்கைகளையும், குழந்தைகளை வைத்து போலீசு மிரட்டியதையும் விவரிக்கிறார்கள் வேல்முருகனின் மனைவி அமுதா, தாயார் மற்றும் உறவினர் ஆனந்தராஜ்.
தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை அநியாயமாக திட்டமிட்டு சுட்டுக் கொன்றது அரசு. அதனைத் தொடர்ந்து, நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கான பழியை மக்கள் அதிகாரத்தின் மேல் போடும் முயற்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்தது போலீசு.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக எந்த ஒரு நிகழ்வுக்கும் அனுமதி கொடுக்காமல் மறுத்தது அடிமை எடப்பாடி அரசு. அதனைத் தொடர்ந்து சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் கடலூர் பகுதியின் சார்பாக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24.06.2018) மாலை 4 மணியளவில் இரங்கற் கூட்டம் நடைபெறவுள்ளது.
இடம்:நகர அரங்கம் (டவுன் ஹால்) கடலூர்.
கடலூர் மக்கள் அதிகாரம் இரங்கல் கூட்டம்
1 of 2
நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர் முருகானந்தம் (மண்டலக் குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம், விருதாச்சலம்)
இரங்கல் உரை:
திரு இள.புகழேந்தி (வழக்கறிஞர், திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர்) திரு ஏ.எஸ். சந்திர சேகர் (வழக்கறிஞர், உறுப்பினர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி) திரு பா. தாமரைச்செல்வன் (வழக்கறிஞர், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர், சேலம் மாவட்ட நெறியாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி) தோழர் குலோப் (மா.இ. செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கடலூர்) தோழர் அமர்நாத் (நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கடலூர்) திரு என்.இராமலிங்கம் (மாவட்ட செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கடலூர்)
திரு தென். சிவகுமார் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம், கடலூர்) திரு ஆனந்த் (மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கடலூர்) தோழர் ஸ்ரீதர் (பொறியாளர், மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மின் ஊழியர் ஜனநாயக முன்னணி) திரு இரா. மங்கையர்செல்வன் (மாநிலத் தலைவர், மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழ்நாடு, புதுச்சேரி) திரு C.குமார் (ஒருங்கிணைப்பாளர், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு, கடலூர்) திரு பூங்குன்றன் (மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், பெரியப்பட்டு) திரு செந்தில்குமார் (வழக்கறிஞர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்)
நிறைவுரை: தோழர் பாலு (மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், கடலூர்)
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது!
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், செல்லத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு 20-06-2018 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கிற்காக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் டெல்லி சென்றார். வழக்கை முடித்து விட்டு வரும் போது சென்னை விமான நிலையத்தில் 20-6-2018 அன்று இரவு 12 மணியளவில் மப்டியில் வந்த போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீசு வேனில் தூத்துக்குடி அழைத்துச் செல்லப்பட்டார்.
ஸ்டெர்லைட் பாதிப்பே பரவாயில்லை என நினைக்கும் அளவிற்கு தூத்துக்குடி மக்களுக்கு போலீசு தொல்லை, அச்சுறுத்தல் தொடர்கிறது. கிராம போராட்டக்குழுவினர் பலர் இன்றுவரை தலைமறைவாக உள்ளனர். கிராமங்களில் ஆண்கள், இளைஞர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. பெண்கள் இரவில் போலீசுக்கு பயந்து மாதா கோவிலில் தங்குகின்றனர். உயர்நீதி மன்றம் இப்படி சட்ட விரோத கைதுகளை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் அதை மதிக்காமல் தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவிற்கு சட்ட உதவிகளை செய்ததற்காக பழிவாங்கும் நோக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலர் வழக்கறிஞர் அரிராகவன் மீதும், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் இருபதுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். இதை அம்பலப்படுத்தி இருவரும் சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.
மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடும் பொழுதெல்லாம், அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் களத்திலும், சட்ட ரீதியாகவும் போராடியுள்ளது. வாழ்வுரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு சட்ட உதவிகளையும் போராட்டத்திற்கு ஆதரவையும் தருவது குற்றமல்ல. அது வழக்கறிஞர்களின் கடமை. அதற்காக கைது, சிறை, பொய் வழக்கு என்றால் அதை அனைவரும் ஒன்று திரண்டு போராடி முறியடிக்க வேண்டும்.
நடப்பது போலீசு ஆட்சி, கிரிமினல்களின் ஆட்சி. சட்டம், நேர்மை, நியாயம், மக்கள் நலன் எதற்கு மதிப்பில்லை. போராட்டம் ஒன்றே தீர்வு. அதைதான் தூத்துக்குடி மக்கள் செய்தார்கள். தமிழக மக்களும் செய்வார்கள்.
அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்தால் படிக்க மாட்டார்கள், கெட்ட பழக்கங்கள் வரும், வாழ்க்கையே நாசமாகிவிடும் என்ற கருத்தும் காசு கொடுத்தாலும் தனியார் பள்ளிக்கூடம்தான் தரமானது, அங்கு படித்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதும் பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது. இதெல்லாம் தானாகவே நடக்கிறதா? இல்லை, இல்லை. ஒரு சினிமாப்படம் போல திட்டமிட்டு, சீன் சீனாக நடந்து கொண்டிருக்கிறது.
அதில் ஒரு சீன் தான் ஓசூர் அருகே உள்ள மாசிநாயக்கன்பள்ளி கிராமத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆம், தெலுங்குவழி மேல்நிலைப்பள்ளியான இங்கு +2 படித்த 29 மாணவர்களும் பெயிலாகியிருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், மாணவர்கள் எண்ணிக்கை 12 வருடத்தில் 1100 – லிருந்து 130 பேராக குறைந்திருக்கிறது.
சென்ற மே மாதம் +2 தேர்வு முடிவு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் 87.13% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 26 வது இடத்தை பிடித்தது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 177 பள்ளிகள் இயங்குகின்றன. ஓசூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மாசிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 மாணவர்கள், 4 மாணவிகள் என மொத்தம் 29 பேர் +2 தேர்வு எழுதினார்கள். இதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
புதர் மண்டிக் கிடக்கும் கழிப்பறைகள்
மாணவர்கள் தேர்ச்சி பெறாததைக் குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டால் ஆசிரியர்கள் பற்றாக்குறைதான் காரணம் என்கிறார். அப்படியானால் ஆசிரியர் இருக்கும் பாடப்பிரிவுகளில் 100% தேர்ச்சிப்பெற்று உள்ளனரா? எனக் கேட்டால் மாணவர்கள் ஒழுக்கம் இல்லை எனவும், பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் மீது அக்கறையில்லை எனவும் மாணவர்களையும் பெற்றோர்களையும் குற்றம் சொல்கிறார்கள் சில ஆசிரியர்கள். இப்பள்ளியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் விவசாயி வீட்டுப்பிள்ளைகள், உதிரித் தொழிலாளி, அடித்தட்டு உழைக்கும் மக்களின் குழந்தைகள்தான் இப்பள்ளியில் படித்துவருகின்றனர். இவர்களில் ஆகப் பெரும்பான்மையோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்.
2004-ம் ஆண்டு 1100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் பள்ளியாக பிரம்மாண்டமாக இருந்தது. 2010-11-ல் +2 ஆரம்பிக்கப்பட்டு மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது. ஆனால் பல ஆண்டுகளாக 11 மற்றும் 12 வகுப்பில் கணிதம், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. 2004-ம் ஆண்டில் 1100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தநிலை மாறி, படிப்படியாக குறைந்து 2014-15 ல் 200 மாணவர்களும் 2016-17-ல் 230 மாணவர்களும், 2017-18-ல் 130 மாணவர்களும் என்ற நிலை உள்ளது. குறைந்த மாணவர்களே உள்ளனர் என கணக்குக்காட்டி இழுத்து மூடும் அபாய நிலைக்கு வந்துள்ளது இப்பள்ளி.
இந்நிலையில்தான் 2017- 18 ஆண்டின் பொதுத்தேர்வில் +1 வகுப்பில் கணிதம் 22/24, உயிரியல் 22/24, வேதியியல் 21/24, இயற்பியல் 12/24, கம்ப்யூட்டர் சயின்ஸ் 12/24 என தோல்வி அடைந்துள்ளனர். +2 தேர்வில் கணிதம் 29/29, வேதியியல் 22/29, இயற்பியல் 25/29, உயிரியியல் 11/13, கம்யூட்டர் சயின்ஸ் 6/16 பேர் தோல்வியடைந்துள்ளனர். ஆசிரியர்கள் இருக்கும் பாடத்தில் கூட +2-வில் 29 பேர்களுக்கும் +1 ல் 24 பேர்களுக்கும் பாடத்தை நடத்தி தேர்ச்சியடைய வைக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு குறைந்தபட்ச நேர்மையுடன் கூட வேலை செய்யவில்லை. இங்கு, உடற்கல்வி ஆசிரியர் கணிதப் பாடம் நடத்துகிறார். ஆனால், இப்பள்ளியில் +2 வகுப்பில் இல்லாத பாடப்பிரிவிற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வேலையே செய்யாமல் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஏழு வருடமாக இப்பள்ளி, பெரும்பான்மையான ஆதிக்க சாதி பின்னணி கொண்ட ஆசிரியர்கள், அவர்களுக்கு ஆதரவான தலைமை ஆசிரியர் என மாணவர் நலனில் அக்கறையே இல்லாமல் இயங்கியது. இப்போது உள்ள தலைமை ஆசிரியர், 12 மணிக்கு பள்ளிக்கு வந்து 3 மணிக்கு சென்று விடுவார். ஒரு சில ஆசிரியர் தவிர பெரும்பான்மை ஆசிரியர்கள் 11 மணிக்கு வந்து 3.30 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டு விடுவார்கள். மதியம் சாப்பிட்ட பிறகு ஆசிரியர் வகுப்பறைக்கு வருவது கடினம், வந்தாலும் பாடம் நடத்துவதில்லை என்கிறாகள் மாணவர்கள்.
குறிப்பாக ரெட்டி சாதியை சேர்ந்த ஒரு ஆசிரியை தொடர்ந்து தாமதமாக வருவது குறித்து முன்பிருந்த தலைமை ஆசிரியர் கேட்டதற்கு, இந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் எனக்கு சொந்தக்காரர்தான் என்று மிரட்டியுள்ளார். இதற்குமேல் பேசமுடியாது என்ற நிலையில், வேறு ஊருக்கு பணிமாறுதல் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர். ஆதிக்கசாதி பின்புலம் கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மத்தியில், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படித்து என்ன கிழிக்கப் போகிறார்கள் என்ற கருத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதை நாம் சந்தித்த பலரும் கூறுகின்றனர்.
இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கும். மொத்தமாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்வில் தோல்வியடைந்ததற்கும் முழு பொறுப்பு, கடமையை செய்யாத ஆசிரியர்களும், இதனை கண்டுகொள்ளாத கல்வித்துறை அதிகாரிகளும்தான். அதனால்தான் சொல்கிறோம், தோற்றுக் கொண்டிருப்பது மாணவர்கள் அல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையும்தான்.
ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்தவில்லை என்பதைத் தாண்டி, மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கும் சூழலே இல்லை என்பதுதான் இன்னும் மோசமானது. இதை இப்பள்ளியின் புகைப்படங்களை பார்த்தாலே உணர முடியும்.
1 of 26
கட்டப்பட்ட 6 வருடங்களுக்குள்ளாகவே முறையான பராமரிப்பில்லாமல் பாழடைந்து, புதர்கள் மண்டி பயன்படுத்தவே முடியாத நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறியிருக்கின்றன கழிவறைகள். இந்த நிலையால் பாதிக்கப்படுவது குறிப்பாக மாணவிகள்தான். எந்த நம்பிக்கையில் இங்கு வந்து படிக்க முடியும்? பெற்றோர்கள் எப்படி அனுப்புவார்கள்? 1100 பேரிலிருந்து 130 பேராக குறைந்ததன் காரணம் இங்குதான் அடங்கியிருக்கிறது.
கட்டப்பட்ட காலம் முதல் பராமரிப்பில்லாமல் இருக்கும் வகுப்பறைகள், கழிவறைகள், போதிய ஆசிரியர்கள் இல்லை, இருப்பவர்களும் ஒழுங்காக வகுப்புகளுக்கே வருவதில்லை, பாதுகாப்பற்ற சூழல், வேதியியல், இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் தேவையான பயிற்சி உபகரணங்கள் இல்லை என எல்லாப் பிரச்சினைகளும் குடிகொண்ட கூடாரமாக இருக்கிறது இப்பள்ளி. இது எதுவும் தனக்குத் தெரியாத மாதிரி கண்ணை மூடிக் கொண்டு நாடகமாடுகிறது பள்ளி கல்வித்துறை.
100% தேர்ச்சி விகிதம் கொடுக்கும் பள்ளியைப் போலவே மோசமான தேர்ச்சி விகிதம் தரும் பள்ளியும் எந்த நேரமும் அதிகாரிகளின் கவனத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும், யார் எக்கேடு கெட்டால் என்ன?, நமக்கு மாதமானால் சம்பளம் வந்தால் சரி; பினாமி மூலம் தாம் நடத்தும் தனியார் பள்ளியில் ஆள் சேர்ந்தால் சரி; கந்து வட்டிக்கு பணம் வந்தால் சரி என கல்வித்துறையின் ஒவ்வொரு அதிகாரியும், அவர்களின் செல்லப்பிள்ளைகளான ஆசிரியர்களுமாக சேர்ந்து கல்வித்துறையை சீரழித்து வருகின்றனர். இதற்கு மாசிநாயக்கன்பள்ளி கிராமத்தின் மேல்நிலைப் பள்ளியே சிறந்த உதாரணமாக இருக்கிறது.
இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மட்டுமே தோராயமாக ஆண்டுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய். அத்தனையும் மக்களின் வரிப்பணம். ஆனால், வரிப்பணம் கட்டும் மக்களின் பிள்ளைகளுக்கு முறையான கல்வி கிடைக்கிறதா? கல்வி கொடுத்து, நல்ல குடிமகனாக, சமூக மனிதனாக மாற்ற வேண்டிய அரசுதான் இம்மாணவர்கள் சீரழிய காரணமாக மாறியுள்ளது. தான் செய்ய வேண்டிய வேலைக்கு நேர் எதிரான வேலையை செய்து வருகிறது.
இந்த மோசமான நிலைமையை மாற்ற வேண்டும் என, சமூக அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து மனுக்கள் அனுப்பி வந்துள்ளனர். இந்த ஆண்டு அனைவரும் தோல்வியடைந்ததைக் கண்டு, வேதனையடைந்த ஜனநாயக சக்திகள், பெற்றோர் சிலர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதற்கு முன்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் சிலர், பத்திரிக்கை செய்தி அடிப்படையில் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். எங்கள் ஊர் பிரச்சினைக்கு எங்கிருந்தோ வந்து அக்கறை காட்டுகிறீர்களே என மக்கள் நெகிழ்ந்துள்ளனர். இன்னாரைப் பாருங்கள் என சிலரை கை காட்டியுள்ளனர்.
குறைவான மாணவர்கள் இருப்பதும், பல்வேறு கிராமங்களில் இருந்து வருவதும், சட்டென ஒருங்கிணைக்க முடியாத நிலையும் இருக்கும்போதுதான், இரண்டு நாட்கள் பிரச்சாரமும், ஆய்வும் நடத்திய நிலையில் கண்டன ஆர்ப்பாட்ட செய்தி வந்ததாக நம்மிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 04.06.2018 அன்று பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி முன்னாள் மாணவர்கள், கிராமப் பொது மக்கள் என அனைவரும் தனது பணியை ஒழுங்காக செய்யாத ஆசிரியர் மீதும், கல்வி முதன்மை அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 12 ம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தோல்வியைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் என அறிவித்து நோட்டீஸ் விநியோகம் செய்து பள்ளி முன்பு திரண்டனர். இச் ‘சமூக விரோதிகளை’ கண்காணிக்ககவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் காலை 8 மணிக்கே பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தும் பெற்றோர் ஆசிரியர் சங்க குழுவினரிடமும், மக்களிடமும், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க முடியாது எங்களுக்கு கலெக்டர் நேரடியாக வரும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்ற பிறகு 10.30 க்கு தாசில்தார் வந்தார். அவரும் சமரசம் பேசினார். உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்கிறேன், துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் மக்களும் ஆர்ப்பாட்ட குழுவும் ஏற்றுக் கொள்ளவில்லை. 11.30 மணி அளவில் சி.இ.ஓ மகேஸ்வரி வந்தார்.
ஓசூர் கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருக்கிறது; நான் இந்தப் பகுதிக்கு வந்து நான்கு மாதம் தான் ஆகிறது; அரசுப்பள்ளி பற்றியும் இங்கு படிக்கும் மாணவர்கள் மீதும் எனக்கு அக்கறை உண்டு; இந்த பள்ளி பற்றி எனக்கு இவ்வளவு நாள் தெரியாது; தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; ஆசிரியர் இல்லாத பாடத்திற்கு உடனடியாக ஆசிரியர் நியமனம் செய்கிறேன்; இத்துடன் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்றார்.
இவருக்கு வேண்டுமானால் அப்பள்ளி குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது இதை விடவும் ‘முக்கியமான’ வேலைகள் இருந்திருக்கலாம். இத்தனை ஆண்டுகளாகவே 25 – 30% அளவுக்கே தேர்ச்சி விகிதம் இருந்துவரும் இந்தப் பள்ளியின் அவலநிலை பற்றி ஏன் எந்த அதிகாரிக்கும் தெரியாதா? அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா?
மக்கள் இதனை ஏற்க மறுத்து கடந்த சில வருடமாக வரும் எல்லா சி.இ.ஓ.வும் இதனை தான் கூறுகின்றனர், ஆனால் செய்யவில்லை. இதன் விளைவு 12 -ம் வகுப்பில் 100% தோல்வி என்கிற நிலைமை. 1100 மாணவர்கள் படித்த இப்பள்ளி தற்போது 130 மாணவர்கள் என்ற மூடும் நிலைக்கு வந்துவிட்டது. இப்பள்ளியை மூட அரசுக்கு திட்டம் இருக்கிறதா? சொல்லுங்கள் என்று பெற்றோர்கள் குரல் எழுப்பினர். அடிப்படை வசதி கூட இல்லை என மாணவர்களும் புகார் கூறினர்.
இதனைக் கேட்ட சி.இ.ஓ மகேஸ்வரி, உடனடியாக உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடத்திற்கு ஆசிரியர்களை நியமித்தார். தற்காலிகமாக தேன்கனிக்கோட்டை தலைமை ஆசிரியரை பொறுப்பேற்று இப்பள்ளியை நடைமுறைப்படுத்த கூறுகிறேன் என்று உறுதி அளித்தார். மாசிநாயகன்பள்ளி தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டார். 5 நிமிடத்தில் கையெழுத்துப் போட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்றால், இத்தனை வருடமாக ஏன செய்யவில்லை? இத்தனை நாள் மனு கொடுத்தவர்கள், இன்று உத்தரவு போட்டுள்ளனர், அதனால்தான் வேலை நடக்கிறது.
போராடத் திரண்ட சமூக விரோதிகள்
12-ம் வகுப்பில் 100% தோல்வி அடைந்ததை கண்டித்து ‘சமூக விரோதிகள்’ போராடிய பிறகு தான் ஆசிரியர்கள் நியமித்தல், பள்ளி மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளியை தொடர்ந்து நடத்த மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை இப்பள்ளியை தத்தெடுத்து செயல்படுத்தும் என உறுதி அளித்தார், சி.இ.ஓ. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று, மக்களுக்கு கல்வியை சொல்லி கொடுக்காமல், ஏற்றுக்கொண்ட கடமையை நிறைவேற்றாமல் இருக்கும் அரசு மக்களுக்கான அரசா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
தமிழக அளவில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு, மாணவர்கள் தங்களின் பாடங்களை செல்போனில் படிக்க நடவடிக்கை என சீன் போட்டுக் கொண்டே, பின்தங்கிய கிராமங்களில் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளை ஒன்றாக இணைப்பது, மாசிநாயக்கன்பள்ளியில் நடப்பதைப் போல படிப்படியாக அழிந்துபோக அனுமதிப்பது என அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி தனியார் பள்ளிகளை ஊக்குவித்து வருகிறது தமிழக அரசு.
தமிழிசை சௌந்தரராசனை ஆபாசமாக ஒரு பெண் திட்டியதும் தனிப்படை அமைத்து இரண்டு நாளில் கைது செய்கிறது அரசு. ஆனால், இந்தப் பள்ளியில் ஆசிரியர் இல்லை எனவும் பள்ளி நிர்வாகம் ஒழுங்காக இல்லை எனவும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வைக்க 7 ஆண்டுகளாகியுள்ளது. இந்த ஏழு வருடமாக இந்த பள்ளிக்கு சுண்ணாம்பு கூட அடிக்கவில்லை என்பதில் இருந்தே அரசின் நோக்கமும் இலட்சணமும் பளிச்செனப் புரிகிறது.
இத்தனை வருடங்களாக மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் என சகல அதிகாரிகளிடமும், அவர்களின் அலுவலகங்களுக்கே சென்று மனு கொடுத்தார்கள் மக்கள். அவர்களோ மனுக்களை வாங்கி, அடியில் போட்டு உட்கார்ந்து கொண்டு, அசைய மறுத்தார்கள். தனியார் பள்ளிகளே தரமானவை என்ற சினிமாவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இன்றோ, பள்ளிக்கூட வாசலுக்கு வந்த மக்கள், அதிகாரிகளை அங்கேயே வர வைத்தார்கள், வேலை வாங்கினார்கள், மாற்றத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அரசுப்பள்ளி மோசம் – தனியார் பள்ளிதான் தரம் என்ற சினிமாவுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள் இப்பள்ளியில். தமிழகம் முழுவதும், நாடு முழுவதும் மக்கள் தங்களது வேலைக்காரர்களை வேலை வாங்கும் நாள் வரும். நூறு சதவீத வெற்றி எல்லா அரசுப் பள்ளியிலும் சாத்தியமாகும் நாளும் வரும்.
”மக்கள் அதிகாரத்தை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசு! தோழர் சரவணன் NSA -ல் கைது!”
தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை அநியாயமாக திட்டமிட்டுக் கொன்ற அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் மக்களை பயமுறுத்தும் விதமாகவும், மக்களோடு துணை நிற்கும் மக்கள் அதிகாரம் அமைப்பை தடை செய்யும் முனைப்போடும், பல்வேறு பொய்வழக்குகளைப் புனைந்து வந்தது போலீசு.
கடந்த மே 25, அன்று கோவில்பட்டியில் தோழர் சரவணனை அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் ஏறிக் குதித்து கைது செய்தது போலீசு. அவருக்கு வலிப்பு நோய் வரும் என்பது குறித்து கைது செய்த போலீசிடம் எடுத்துக் கூறிய அவரது மனைவி சுப்புலட்சுமியை எகத்தாளமாக கேலி பேசியுள்ளது கிரிமினல் போலீசு.
மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும், பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். மக்கள் அதிகாரம் என்றும் மக்களோடு நிற்கும் என்று கூறுகிறார் சுப்புலட்சுமி.
திருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க விவரிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்
ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.
*****
முன்னுரை
“ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மாயை” என்பது பயன்பாட்டில் உள்ள பொருளாதாரத் தரவுகள் திரட்டப்படுவதிலும், பொருள் கொள்ளப்படுவதிலும் உள்ள குறைபாடுகளின் காரணமாக ஏற்படும் தவறான புரிதலே. மூன்றாம் உலக நாடுகளின் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்கள் உலக வருமானத்துக்கு அளிக்கும் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதும், அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை மிகைப்படுத்துவதும் இதன் முக்கிய விளைவு ஆகும்.
இந்தக் குறைபாடுகளும், உருக்குலைக்கப்பட்ட புரிதல்களும் ஜி.டி.பி, வர்த்தகம், உற்பத்தித் திறன் போன்றவை தொடர்பான புள்ளிவிபரங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன, எவ்வாறு விளக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கும், விலை, மதிப்பு, மதிப்புக் கூடுதல் ஆகியவை குறித்த புதிய தாராளவாத கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக ஜி.டி.பி, உற்பத்தித் திறன், வர்த்தகம் ஆகியவை தொடர்பான அடிப்படை தரவுகள் பருண்மையானதாகவோ குறைகளற்றதாகவோ இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.
இந்தப் புள்ளி விபரங்களின் அடிப்படையிலான பொருளாதாரவியல் விளக்கங்கள், உலகப் பொருளாதாரத்தில் மதிப்பும் லாபமும் எங்கிருந்து தோன்றுகின்றன என்பதைப் பற்றி தெளிவுபடுத்துவதை விட அதிகமாக மறைக்கவே செய்கின்றன.
“சர்வதேச விற்பனை பண்டங்களுக்கான” மூன்று பொருத்தமான உதாரணங்களாக ஐஃபோன், சட்டை, ஒரு கப் காஃபி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பொருட்கள் மேலே சொன்ன வாதத்தை விளக்குவதாகவும், உறுதி செய்வதாகவும் உள்ளன. இந்தப் பொருட்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவையாக இருப்பது அவற்றுக்கும், சர்வதேச உற்பத்தி நடைமுறையில் உள்ள மற்ற அனைத்து பொருட்களுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சங்களை தெளிவுபடுத்த உதவுகின்றது.
பொருளாதாரவியல் தரவுகள் அல்லாது நமக்குக் கிடைக்கும் பிற தரவுகளும், நமது சொந்த அனுபவங்களும் குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் கடுமையாக உழைத்து பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் ஆப்பிள் போன்ற மேற்கத்திய நிறுவனங்களின் லாபத்துக்கு கணிசமான பங்களிப்பு செய்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும், பொருளாதாரவியல் தரவுகள் அத்தகைய பங்களிப்புக்கான எந்த ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை.
மாறாக, இந்தப் பொருட்களின் விற்பனையில் பெறப்படும் மதிப்பில் பெரும்பகுதியும், ஆப்பிள், ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்கள் அவற்றிலிருந்து அறுவடை செய்யும் லாபங்களும் அந்தப் பொருட்கள் நுகரப்படும் நாட்டில் உருவானது போன்ற தோற்றத்தை அவை ஏற்படுத்துகின்றன. இந்த மூன்று சர்வதேச விற்பனை பண்டங்களும் முதலாளித்துவ உற்பத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ள உருமாற்றத்தின் உண்மையான பிரதிநிதிகளாக உள்ளன.
பொருளாதாரவியல் புள்ளிவிவரங்களும் அவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் விளக்கங்களும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மூன்றாம் உலக நாடுகளின் ஆலை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான சுரண்டல் அடிப்படையிலான உறவுகளை குழப்பி மறைக்கின்றன. இருப்பினும் இந்தச் சுரண்டல் உறவு முற்றிலும் நம் கவனத்திலிருந்து தப்பி விடுவதில்லை.
மாறாக, சர்வதேச அரசியல் பொருளியலின் பயன்பாட்டில் உள்ள கணக்கீடுகளை பீடித்திருக்கும் சுயமுரண்களிலும், விதிவிலக்குகளிலும் அவை வெளிப்படுகின்றன. இத்தகைய சுயமுரண்களும், விதிவிலக்குகளும் உருவத்தை திரித்துக் காட்டும் கண்ணாடியில் உள்ள குறைபாடுகளை போலவே தமது இருப்பை அறிவித்துக் கொண்டிருக்கின்றன; இது இந்த உருமாற்றத்தை அடையாளம் கண்டு வகைப்படுத்த வேண்டியதை அவசியமாக்குகின்றது. மதிப்பு கைப்பற்றலையும், மதிப்பு கூட்டலையும் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உருமாற்றத்தை சரியாகப் புரிந்து கொண்டால்தான் உள்ளது உள்ளபடியே உலகை புரிந்து கொள்வது சாத்தியமாகும்.
பகுதி ஒன்று : ஆப்பிள், டெல் போன்ற நிறுவனங்களின் லாபத்துக்கு ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் என்ன பங்களிப்பு செய்கிறார்கள்?
சீனாவின் ஷென்செனில் பாக்ஸ்கான் இன்டர்நேஷனல் வேலைக்கு அமர்த்தியுள்ள மூன்று லட்சம் தொழிலாளர்கள் டெல் மடிக் கணினிகளையும், ஆப்பிள் ஐஃபோன்களையும் உற்பத்தி செய்கின்றனர். அவர்களைப் போலவே மூன்றாம் உலக நாடுகளின் கோடிக்கணக்கான குறைகூலி தொழிலாளர்கள் மேற்கத்திய சந்தைகளுக்காக இடைநிலை பொருட்களையும் நுகர்வுப் பொருட்களையும் குறைந்த செலவில் உற்பத்தி செய்கின்றனர்.
இந்தத் தொழிலாளர்கள் டெல், ஆப்பிள் மற்றும் பிற முன்னணி மேற்கத்திய நிறுவனங்களுக்கும், அவர்களது பொருட்களை விற்பதற்கான சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கும் லாபத்திலும், வருமானத்திலும் என்ன பங்களிக்கின்றனர்? ஜி.டி.பி, வர்த்தகம் மற்றும் நிதி பாய்ச்சல்கள் தொடர்பான புள்ளிவிபரங்களின் படியும், பயன்பாட்டில் உள்ள பொருளாதாரவியல் கோட்பாட்டின்படியும் அவர்கள் எந்தப் பங்களிப்பும் செய்வதில்லை.
அதன் பொருட்களை உற்பத்தி செய்து பொருத்தி தயாரிக்கும் சீன, மலேசிய மற்றும் பிற உற்பத்தி நிலையங்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமானவை அல்ல. முன்பு வழக்கமாக பயன்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலான, அன்னிய நேரடி முதலீட்டின் அடிப்படையிலான சர்வதேச உறவுக்கு மாறாக இப்போது ஆப்பிள் தனது பொருட்களை செய்து வாங்கும் ‘கைக்கு எட்டிய உறவிலான’ உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து லாபம் நாடு கடந்து எடுத்துச் செல்வதாக புள்ளிவிபரங்கள் பதிவு செய்வதில்லை.
சந்தை பரிமாற்றங்களின் விளைவுகளை மட்டும் பதிவு செய்யும் பொருளாதாரவியல் புள்ளி விவரங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் ஐஃபோனின் இறுதி விற்பனை விலையில் ஒவ்வொரு அமெரிக்க அல்லது சீன நிறுவனம் கைப்பற்றும் பங்கு, அவை ஒவ்வொன்றும் பங்களிக்கும் மதிப்பு கூடுதலுக்கு சமமானது என்று கருதுகின்றன. ஆப்பிள் மற்றும் அதன் பொருட்களை உற்பத்தி செய்து தரும் பல்வேறு உற்பத்தியாளர்களின் லாபங்கள் மீது அந்தப் பரிவர்த்தனைகள் செலுத்தும் தாக்கம் பற்றி எந்த தடயத்தையும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவதில்லை. ஆப்பிளின் லாபத்தில் சீனாவிலிருந்து கிடைக்கும் ஒரே பகுதி ஆப்பிள் பொருட்கள் சீனாவில் விற்கப்படுவதன் மூலம் கிடைப்பது மட்டுமே என்று தோன்றுகிறது.
ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள்
பொருளாதாரத் தரவுகள் பற்றிய நடப்பில் உள்ள விளக்கத்தின்படி, பொருட்களின் மதிப்பு “சுற்றோட்டத்தில் பெறப்படுவது போல மட்டுமின்றி, அதிலிருந்து உருவாவது போல தோன்றுகிறது”1(காரல் மார்க்ஸ்). எனவே சீன மற்றும் பிற குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கடத்தப்படும் மதிப்பு, பொருளாதாரத் தரவுகளிலும், பொருளியலாளர்களின் மூளைகளிலும் மாயமாக மறைந்து விடுகிறது.
ஆப்பிள், டெல், மோட்டரோலா, பிற அமெரிக்க, ஐரோப்பிய, தென் கொரிய, ஜப்பானிய நிறுவனங்களின் பொருட்கள் தாய்வானைச் சேர்ந்த ஹோன் ஹாய் பிரிசிசன் இண்டஸ்ட்ரீசின் பிரதான துணை நிறுவனமான ஃபாக்ஸ் கானால் பொருத்தி தயாரிக்கப்படுகின்றன. ஃபாக்ஸ்கானின் 10 லட்சம் ஊழியர்கள், “உலகின் நுகர்வு மின்னணு பொருட்களில் 40%-ஐ” உற்பத்தி செய்வதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது2.
தென் சீனாவின் ஷென்செனில் (Shenzhen) உள்ள பதினான்கு தொழிற்சாலைகள் கொண்ட அதன் கட்டமைப்பு 2010-ம் ஆண்டு அதன் பிரம்மாண்டத்திற்காகவும், தொழிலாளர்கள் மத்தியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகளுக்காகவும் உலக அளவில் பேசப்பட்டது. அந்த ஆண்டு ஃபாக்ஸ்கான் ஷென்செனில் அமர்த்தியிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 4.3 லட்சத்தை எட்டியது. தற்போது சீனாவின் பிற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி நகர்த்தப்படுவதன் மூலமாக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 2012-ல் ஹோன் ஹாயின் சேர்மன் டெரி கோவ், தாய்பே உயிரியல் பூங்காவுக்கு சென்றிருந்த போது “மனிதர்களும் விலங்குகள்தான் என்பதால் 10 லட்சம் விலங்குகளை நிர்வகிப்பது எனக்கு தலைவலியை தருகிறது” என்று கூறினார். தொடர்ந்து இந்த “விலங்குகளை” எப்படி நிர்வகிப்பது என்று அறிவுரை சொல்லுமாறு உயிரியல் பூங்கா காப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்தக் கருத்து கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. ”வான்ட் சைனா டைம்ஸ்” பத்திரிகை, “கோவ் வார்த்தைகளை கொஞ்சம் கவனமாக பயன்படுத்தியிருக்கலாம். [ஃபாக்ஸ்கானின் பிரம்மாண்டமான சீன ஆலைகளில்] வேலைச் சூழலும், தங்குமிட சூழலும் பராமரிக்கப்படும் நிலைமையில், அதன் சீன ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தாம் விலங்குகள் போல நடத்தப்படுவதாக ஒத்துக் கொள்வார்கள்” என்று எழுதியது3.
Karl Marx, Capital, vol. 3 (London: Penguin, 1991), 966.
பிக்பாஸ்இல்லத்தில் சீசன் 2 வில் பிக்பாஸிற்குஎதிராக விரிவானரகசியதிட்டங்கள்தீட்டப்படுகின்றன பிக்பாஸ்இப்போதுபாதுகாப்பற்றுஉணர்வதுபோல வேறெப்போதும்உணர்ந்ததில்லை.
தாமிர உருக்காலைக்கு தமிழகத்தில் அனுமதியில்லையென சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தி, ”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) புதன்கிழமை மாலை 6 மணிக்குபொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இடம்:பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, உறையூர் கடைவீதி, திருச்சி
தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏதுமில்லை என்றால் இந்தப் பொதுக்கூட்டத்தை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக காட்ட முயற்சிக்கிறோம். இணைந்திருங்கள்!
தலைமை: தோழர் செழியன் (மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி, மக்கள் அதிகாரம்)
கண்டன உரையாற்றுவோர்: திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ் கட்சி, திருச்சி)
தோழர் செல்வராஜ், BHEL (மாநிலக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
வழக்கறிஞர் வேலு. குணவேந்தன் (மேலிட நிர்வாக நெறியாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருச்சி)
திரு. ம.ப. சின்னத்துரை (மாவட்ட தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம், திருச்சி)
தோழர் தினேஷ் (மாவட்ட செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், திருச்சி)
தோழர் புதியவன் (மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், திராவிரட் விடுதலைக் கழகம், திருச்சி
சிறப்புரை: தோழர் காளியப்பன் (மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்)
தோழர் ராஜூ (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்)
கடந்த மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கடந்த மே 25-ம் தேதி இரவு மக்கள் அதிகாரம் தோழர் கலிலூர் ரகுமான் மற்றும் அவரது இரு மகன்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது போலீசு.
தமிழகம் முழுவதும் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்கி விடலாம் என நினைக்கிறது அடிமை எடப்பாடி அரசு.
தோழர் கலிலூர் ரகுமான் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கடையநல்லூரில், கலிலூர் ரகுமானின் தாயார் ஆயிஷா பீவி, அவரது மனைவி நசீபா பானு மற்றும் அவரது சகோதரர் ரசீத் அலி ஆகியோர் அளித்த நேர்காணல்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததையடுத்து லாரி உரிமையாளர்கள் 18-06-2018 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளன. 15 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் தரைவழிப் போக்குவரத்து துறையும் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. சேவை என்ற அடிப்படையிலும் பொதுமக்களின் அன்றாட தேவையான காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் இந்த லாரிகள் மூலம்தான் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பதால் லாரி வாடகை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசுதரப்பில் கொடுக்கப்பட்ட வெற்று வாக்குறுதியை நம்பி போராட்டத்தைக் கைவிட்டனர். இன்று வரை மத்திய மாநில அரசுகள் இவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை.
திரு ரவிச்சந்திரன் (கோப்புப் படம்)
அதனையொட்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் நேற்று (18.6.2018) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக ”அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர்” அறிவித்தனர். இதற்கு தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கின்றன. இதனால் தமிழகத்தில் சுமார் 3 லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன், வினவு இணையதளத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தவை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு, தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை கடந்தாண்டு ஜுன் 16 முதல் அமல்படுத்தியது. அதன் பிறகு தங்கள் விருப்பம் போல எண்ணை நிறுவனங்கள் விலையை உயர்த்தி வந்தன. அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.58.32 எனவும், பெட்ரோல் விலை ரூ.68.13 எனவும் இருந்தது. ஓராண்டுக்குப் பிறகு கடந்த சனியன்று (16.06.2018) டீசல் விலை ரூ.71.25, பெட்ரோல் விலை ரூ.78.18 என உயர்த்தப் பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 147 டாலராக விலை உயர்ந்த போதும்கூட டீசலுக்கு ரூ.64.50 ஆகவே இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் பேரலுக்கு 65.74 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் டீசல் விலை ரூ.71.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோடி ஆட்சி பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் எண்ணெய் விலை மளமளவென்று ஏறி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 15 நாளுக்கு ஒருமுறைதான் விலையேற்றம் இருந்தது. அதில் பெரிய பாதிப்புகள் இல்லை. லாரியை பொறுத்தவரை வாடகை ஒப்பந்தம் மூலம் நடைபெறுகிறது. எந்த மாநிலங்களுக்கு சரக்கு கொண்டு செல்கிறோம். எவ்வளவு தூரம், சென்று-வரும் நாட்கள் இதனை எல்லாம் கணக்கில் கொண்டுதான் வாடகை ஒப்பந்தம் செய்வோம்.
உதாரணமாக டெல்லி சென்று வர ஆறு-ஏழு நாட்கள் வரை ஆகும். இந்த நாட்களை கணக்கில் கொண்டுதான் நாங்கள் ஒப்பந்தம் போடுவோம். இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் தினந்தோறும் விலை ஏற்றம் செய்தால் நாங்கள் எப்படி ஒப்பந்தம் போடுவது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தினந்தோறும் விலையேற்றத்தின் காரணமாக ஒப்பந்தம் போடுவதற்கு பயமாக இருக்கிறது. காரணம் டீசல் விலையேற்றத்தின் காரணமாக எங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது அதாவது, நாங்கள் ஒரு விலை பேசி பணம் பெற்று விடுகிறோம். விலையேற்றத்தால் எங்களுடைய பணத்திலிருந்துதான் நாங்கள் டீசல் போட வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
எங்களுடைய வருவாயில் பெரும் அளவு டீசலுக்கு நாங்கள் செலவிட வேண்டியதாகின்றது. ஓட்டுனர் மற்றும் கிளீனருக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மீதமிருக்கும் தொகையை கொண்டு நாங்கள் லாரிகளுக்கு வட்டி கட்டுவதை பார்ப்பதா? அல்லது குடும்பத்தை பார்ப்பதா? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதா? என்று தெரியவில்லை. ஏற்கனவே லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், இத்தொழிலுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வரும் இச்சூழலில் இது போன்ற விலை ஏற்றம் எங்களை திக்குமுக்காடச் செய்கிறது.
இரண்டாவது கோரிக்கையாக, பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவேண்டும். ஓரே இந்தியா ஒரே நாடு ஒரே வரி என்றெல்லாம் பேசிக் கொள்ளும் மத்திய அரசு, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரும்போது பெட்ரோல் டீசலை மட்டும் ஏன் கொண்டு வர மறுக்கிறது? அவ்வாறு கொண்டு வந்தால் தங்கள் லாபத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறது. ஏற்கனவே உற்பத்தி வரியாக மத்திய அரசு 34 சதவீதமும், மாநில அரசு 18 சதவீதமும் பிடுங்கிக் கொழுக்கிறது.
பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டியதாக இருந்தால் பெட்ரோல் விலை 30 ரூபாயும் டீசல் விலை 20 ரூபாயும் குறையும் என்பதால் அவ்வாறு செய்வதற்கு தயாராக இல்லை. இது முழுக்க முழுக்க எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது
மூன்றாவதாக, இந்தியா முழுவதும் 354 சங்கச் சாவடிகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இருபது சதவீதம் முதல் முப்பது சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு சுங்கச் சாவடியையும் கடந்து செல்ல அரைமணி நேரம் ஆகிறது. இதனால் எரிபொருள் வீணாகிறது. இதைப்பற்றி அரசு கண்டுகொள்வதில்லை. எரிபொருள் சிக்கனம் என்று விளம்பரம் செய்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலையே என்றுதான் தோன்றுகிறது.
சுங்க கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வம் முறையாக சாலைகளை பராமரிப்பதில் காட்டுவதில்லை. இதனால் ஆண்டுதோறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுகுறித்து கொஞ்சமும் கவலை கொள்வதில்லை.
சுங்கச் சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்
அதேபோல் இந்தியா முழுவதும் பல்வேறு சுங்க சாவடிகளின் டெண்டர் முடிந்த பிறகும் அவர்கள் அடாவடியாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தை பொருத்தவரை செங்கல்பட்டு, போரூர் உள்ளிட்ட சுங்க சாவடியின் டெண்டர் முடிவடைந்து விட்டது. ஆனால் இன்னும் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல சுங்க சாவடியில் வாகனங்கள் 3 நிமிடங்களுக்கு மேல் நின்றால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. அந்த விதியை சுங்கச்சாவடிகள் கடைபிடிப்பதே இல்லை. இதைப் போன்று பல சுங்கச்சாவடிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. எனவேதான் சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும். சாலை பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு அரசே ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையை கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.
தற்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அடாவடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் புதிய மாடல் வண்டிகளுக்கு 90 ஆயிரம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் விபத்து ஏற்பட்டால் பத்து லட்சத்துக்கான தொகையை மட்டும்தான் தருகிறார்கள். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் தான் பாதிக்கபட்ட நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். கார்ப்பரேட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க அரசும் அவர்களுக்கு துணை நிற்கிறது. ஏற்கனவே பல்வேறு சிரமங்களை நாங்கள் அனுபவித்து வரும் நிலையில் இது போன்ற புதிய புதிய பிரச்சனைகள் எங்களை அபாய நிலைக்கு தள்ளி வருகிறது.
இத்தொழிலை நம்பி லட்சக்கனக்கானோர் மறைமுகமாக வேலை வாய்ப்பை பெறுகின்றனர். குறிப்பாக வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் இதனை நம்பித்தான் இருக்கிறார்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு, சங்ககிரி போன்ற இடங்களில் அதிக அளவில் பாடி பில்டிங் தொழில் மூடப்பட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்கள். முக்கிய காரணம் இப்போதெல்லாம் வண்டி தயாரிக்கும் பெரிய நிறுவனங்களான ஈச்சர், வால்வோ, அசோக் லேலாண்ட், பாரத் ஆகிய நிறுவனங்களே பாடிகட்டி வெளியே அனுப்புகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக தரைவழி போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள், நெருக்கடிகள்தான் எங்களை போராட்டத்தை நோக்கித் தள்ளியுள்ளன. ”அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்” என்பார்கள். அதுதான் எங்கள் நிலை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.