மானாமதுரை ஆகாஷ் டெலிசன் கொட்டடிப் படுகொலை நடந்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஆனால் ‘நீதி மறுக்கப்பட்டவர்களின் கடைசி புகலிடம்’ என்று சொல்லப்படும் நீதிமன்றமோ, நீதிக்கான வாசல்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, ஆகாஷின் உடலை எரிக்க உத்தரவிட்டுள்ளது. கொடூரமாக சித்திரவதை செய்து போலீசாரால் ஆகாஷ் அன்று கொல்லப்பட்டார். தனது வன்முறையான தீர்ப்பின் மூலம் ஆகாஷை மீண்டும் ஒரு முறை நீதிமன்றம் கொலை செய்துள்ளது.
மேலும், நீதிபதி தனது தீர்ப்பில், உடல் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளதாலும், சட்டம்-ஒழுங்கு காரணங்களினாலும், உடலை காலவரையன்றி வைத்திருக்க முடியாது. எனவே, ஆகாஷின் உடலை அரசே நேரடியாகப் பொறுப்பேற்று, அரசு செலவிலேயே கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொட்டடிப் படுகொலையை எந்த சட்டம் அனுமதிக்கிறது? சட்டத்தை மீறி கொலை செய்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று நீதி வேண்டி போராடினால், அது எப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறும்?
மேலும், கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எது கண்ணியம்? சட்டத்தின் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, ஒருவரை விசாரணை என்ற பெயரில் அழைத்துக் கொண்டு போய் சொல்ல முடியாத வகையில் சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டு, அந்த கொலைக்கு காரணமான போலீசு கிரிமினல் குற்றவாளிகளின் மீது வழக்கு கூட பதிவு செய்யாமல், மகனை இழந்த அந்த குடும்பத்தை உருக்குலைத்து வீதியில் வீசி எறிந்துவிட்டு, சிதைந்த உடலை மட்டும் மத அடையாளங்களோடு மண்ணில் புதைத்து விடுவதற்கு பெயர்தான் கண்ணியமா?
போலீசு, சட்டம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளால் நசுக்கப்பட்ட குரல்கள் ஓராயிரம். அதில் ஒருசில போராட்டங்கள் மட்டுமே அநீதிக்கு எதிராக நடத்தப்படுகின்றன. இந்த கட்டமைப்புகள் அனைத்தும் கைவிட்ட பிறகும், பாதிக்கப்பட்ட தங்களது குரல் இந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியுடன் ஒன்றிணைந்து தங்களுக்கான நீதியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் ஆகாஷின் உடலையே ஆயுதமாக வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அந்த ஆயுதத்தையும் நீதிமன்றம் பறித்துவிட உத்தரவிடுகிறது. கையறு நிலையில் நிர்கதியாய் நிறுத்திவிட்டு, ‘சட்டத்தின் ஆட்சியை’ நிலைநாட்ட, குற்றவாளிகளை காப்பாற்றத் துடிக்கிறது.
இதற்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்களின் குரலோடு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து களப்போராட்டங்களை கட்டியமைத்து, அதன் வழியாக நீதியை நிலைநாட்ட வேண்டும்.
![]()
ரஞ்சித்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











