தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு கடந்த 23-6-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில்  விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் நடைபெற்ற அன்று காலையில் கலைஞர் அறிவாலத்திற்கு வந்த போலீசு, ”மக்கள் அதிகார அமைப்பிற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள், அவர்கள் குண்டு வைப்பார்கள். அவர்களுடைய அனுமதியை உடனே ரத்து செய்யுங்கள். இல்லையென்றால் உங்களை கைதுசெய்ய நேரிடும்” என்று மிரட்டியுள்ளனர். அதற்கு மண்டப மேலாளர் ”என்னால் ரத்து செய்ய முடியாது, வேண்டும் என்றால் மேலிடத்தில் பேசிக் கொள்ளுங்கள்” என்று கூறியதால் வேறுவழியின்றி திரும்பிச் சென்றனர்.

மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர்  தோழர் A.V. சரவணன், ம.தி.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் A.K. மணி, வி.சி.க. மாநில துணை செயலாளர் சே.சேரலாதன், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் V.பாபு கோவிந்தராஜ், வி.சி.க. மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேந்தர், மருதம் ஒருங்கிணைப்பாளர் ரவி கார்த்திகேயன், வழக்கறிஞர் செம்மலை, வி.வி.மு. விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.

உரையாற்றிய அனைவரும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு தங்களது வன்மையான கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், மக்கள் அதிகாரம் சரியான பாதையில் பயணிக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்றனர். இப்போதுள்ள அரசியல் சூழலில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலின் ஜனநாயக விரோத அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அறைகூவல் விடுத்தனர். மேலும் அரசின் சமீபத்திய மக்கள் விரோத திட்டங்கள் குறித்தும், மக்கள் போராட்டங்களின் மீதான காட்டுத்தனமான ஒடுக்குமுறை குறித்தும் பேசினர்.

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

  • தகவல்:
    மக்கள் அதிகாரம்
    விழுப்புரம் மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க