சேலம் – சென்னை எட்டுவழி பசுமை விரைவுச் சாலை அமைப்பதை எதிர்த்து சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை தமிழக மக்கள் முழுமையாக ஆதரித்து வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கைது, சிறை, பொய் வழக்கு, மிரட்டல் என்று ரவுடி ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறது அடிமை எடப்பாடி அரசு.

salem chennai 8 ways road2
2 மணி நேரத்தை குறைக்க மலைகளை, காடுகளை, நீராதாரத்தை, விவசாயத்தை அழித்து மத்திய மாநில அரசால் கொண்டுவரப்படும் இந்த திட்டம் யாருக்கானது ?

“கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதற்காக 2,200 ஹெக்டேர் பரப்பளவு நிலம் கையகப்படுத்த அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த 8 வழி பசுமை விரைவுச்சாலை சென்னை அருகேயுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் 59.1 கி.மீ., திருவண்ணாமலையில் 123.9 கி.மீ., கிருஷ்ணகிரியில் 2 கி.மீ., தருமபுரியில் 56 கி.மீ., மற்றும் சேலத்தில் 36.3 கி.மீ., என இம்மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளன. இந்த பசுமைவழிப் பாதைக்கு சேலம் முதல் அரூர் வரை என்.ஹெச் 179A என்றும், அரூர் முதல் சென்னை வரை என்.ஹெச் 179B என்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டரிலும்,  சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணிநேரமாகும். ஆனால் எட்டு வழிசாலையில் வெறும் மூன்று மணி நேரத்தில் சென்னையை சென்றடையலாம் என்று கொக்கரிக்கிறார்கள்.

உட்கட்டமைப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது என்று பேசுபவர்கள் யாருடைய வளர்ச்சி என்பதை பேச மறுக்கிறார்கள்.

நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து 28,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. சாலைப் பணிகளுக்காக மட்டுமே ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. சராசரிக் கணக்கில் நாளொன்றுக்கு 27 கி.மீ. சாலை போடப்படுகிறது என்கிறார் நிதின் கட்கரி. உட்கட்டமைப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது என்று பேசுபவர்கள் யாருடைய வளர்ச்சி என்பதை பேச மறுக்கிறார்கள். மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் 2.12 லட்சம் கோடி. பெரும்பான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வி்வசாயத்தை திட்டமிட்டு புறக்கணித்ததின் விளைவுதான் நாடெங்கும் தொடரும் விவசாயி தற்கொலைகள்!

இந்த சேலம் – சென்னை எட்டுவழி பசுமை விரைவுச் சாலையால் பயன் யாருக்கு?

“தற்போது இருக்கும் இரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவை விட 130 சதவீதம் மற்றும் 160 சதவீதம் அதிகமாக போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலையில் விபத்துகள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன. இன்னும் 10 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 பி.சி.யு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் பி.சி.யு. ( Passenger Car Unit- PCU) விலிருந்து 1 லட்சம் பி.சி.யு. வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களுள் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது தெரிந்திருந்தும் மது விற்பனையை தீவிரப்படுத்தும் இந்த அடிமை அரசுக்கு மக்கள் உயிரின் மீது திடீரென பிறந்திருக்கும் பாசம் கேலிக்கூத்தானது.

ஆனால், இந்த புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000 போக்குவரத்து செறிவாக இருந்தாலும், இச்சாலையானது விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும். எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் பி.சி.யு. உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் பி.சி.யு. கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். மேலும், இந்த பசுமைவழி விரைவுச் சாலையுடன் நேரடியாக பிற குறுக்கு சாலையில் இணைவது முறைப்படுத்தப்பட்டு அணுகுசாலை மூலமாக அல்லது கீழ்மட்ட பாலங்களின் வழியாக கடப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால், விபத்துகள் பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்” என்று எடப்பாடி 11 ஜுன் அன்று சட்டமன்றத்தில் விளக்கமளித்தார்.

தமிழகம் சாலை விபத்தில் முதலிடம் வகிக்கிறது என்பது உன்மைதான். ஆனால், இந்த விபத்துக்கள் பெரும்பாலும் சென்னையிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் தான் அதிகமாக நடந்துள்ளது. இன்னும் சொல்லப்போனாலும் விபத்திற்கு முக்கிய காரணம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும், ஓட்டுநர்களின் அதீத பணிச்சுமையும்தான் காரணமென பல்வேறு ஆதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதனை எல்லாம் சிறிதளவும் மதிக்காமல், மது விற்பனையை தீவிரப்படுத்தும் இந்த அடிமை அரசுக்கு  மக்கள் உயிரின் மீது திடீரென பிறந்திருக்கும் பாசம் கேலிக்கூத்தானது.

இது ஒருபுறம் இருக்கட்டும், இந்த விரைவு சாலையில் யார் பயணிக்கிறார்கள்? அதிகம் யார் பயன்படுத்துகிறார்கள்? பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லவும், அதிகார வர்க்க-போலீசு-இராணுவம் மற்றும் பணக்கார மேட்டுக்குடி மக்கள் தங்கு தடையின்றி விரைவான பயணம் மேற்கொள்ளவும்தான் பயன்படுகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.

நாசகார திட்டங்களை தொடர்ந்து தமிழக மக்கள் மீது திணித்து வரும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளின் ஓரணி

இந்தத்திட்டம் தங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்பதை நன்கு உணர்ந்த மக்கள் எதிர்க்கிறார்கள். வளர்ச்சி என்ற பொய்யான கோசத்தை நம்பி ஏற்கனவே நிலங்களை இழந்த மக்கள் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

“பசுமை வழிச்சாலை என்ற பெயரில் கையகப்படுத்தி, சொந்த ஊரிலேயே எங்களை அகதிகளாக ஆக்காதீர்கள். அதை விட, இந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள்” என்று கதறுகிறார்கள் பெண்கள்.

தமிழகத்தை இராணுவ தளவாட உற்பத்தியின் பின்களமாக்கி செயல்படுவதற்கு இந்த 8 வழிச்சாலை அவசியம் என்கிறார்கள். ஆவடியில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் இருந்து  இதுவரை உருப்படியாக  ஒரு சுதேசி பீரங்கி கூட வெளிவந்ததில்லை.தற்போது இந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் 90 % வெளிநாடுகளில் வாங்கியவைதான்.

இந்நிலையில் தமிழகத்தில் உருவாக்கப்படும் இராணுவ வளையம் என்பது இறக்குமடி செய்யப்படும் எந்திரங்களை கோர்ப்பதற்கும், அல்லது அவற்றை கிட்டங்கிகளில் வைப்பதற்கும்தான் பயன்படும். மற்றபடி இதில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்பதில் துளியும் உண்மை இல்லை. மேலும் இராணுவ தளவாட தொழிலுக்காக சாலை போடுவது என்பது அழிவுக்கான வேலையே அன்றி வளர்ச்சிக்கான வேலை அல்ல.

கடலின் ஆழத்தில் உள்ள ராமர் பாலம் எனும் புரட்டுக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தியவர்கள், பசுமை வழிச்சாலை என்ற பெயரில் மழை தரக்கூடிய வனப்பகுதிகளையும் விவசாயத்தையும் அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து புதிய சாலை அமைப்பது யாருடையை வளர்ச்சிக்கானது என்று பதில் சொல்லட்டும்!

சென்னை- பெங்களூரு இடையே தொழில் வழித்தடம் (Industrial Corridor) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. ஆனால், சேலம்- சென்னைக்கு 8 வழிச்சாலை அமைக்கும் அளவுக்கு முக்கிய வர்த்தக காரணங்கள், வேலைவாய்ப்பு காரணங்கள், சாலையோர தொழிற்சாலைகள் என எவ்வித தேவையும், மக்களிடம் கோரிக்கையும் இல்லாதபோது ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்து, இயற்கை சமநிலையை சீர்குலைத்து பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

கதறும் கிராம மக்கள்:

த்திட்டத்தால் 30 ஆயிரம் ஏழை விவசாய குடும்பத்தினர், 72,273 விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இச்சாலையை அமைக்க 8,000 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 8 மலைகள் அழிக்கப்படவுள்ளது.  மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள், 10 ஆயிரம் கிணறுகள், 100-க்கும் மேற்பட்ட ஏரி-குளங்கள், குட்டைகள், லட்சக்கணக்கான மா, தென்னை, வாழை, பாக்கு போன்ற மரங்கள் அழிக்கப்படும். 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், இடிக்கப்படவுள்ளது. இந்த படுபாதக செயலை “வளர்ச்சி” என்கிறார்கள்.

சேலம் அருகே இராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அந்த நிலத்தில் அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளிடம் தோட்டத்து உரிமையாளரின் குடும்பத்தினர்,

ஊருக்கே சோறுடைத்த விவசாயின் நிலை

மாதக்கணக்கில் உழைத்து, உருவாக்கிய இந்த மரவள்ளி தோட்டம் தான் எங்கள் வாழ்வாதாரம். அது பறிபோகும் போது, உயிரை மாய்ப்பதை தவிர வழியில்லை. பயிரை காக்க உயிரை இழக்க தயார் என்று கதறினர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை.

மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம் பகுதிகளில் மரவள்ளி தோட்டத்தில் முட்டுக்கல் நட்டபோது, நிலத்திற்கு சொந்தமான கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர், ஒருவரையொருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். அனைத்து இடங்களிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “இது நாங்கள் வாக்கப்பட்ட பூமி. தலைமுறைகள் கடந்து எங்களது நல்லது, கெட்டது எல்லாம் இந்த மண்ணில் தான் நடக்கிறது” என்ற மக்களை மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை.

“பசுமை வழிச்சாலை என்ற பெயரில் கையகப்படுத்தி, சொந்த ஊரிலேயே எங்களை அகதிகளாக ஆக்காதீர்கள். அதை விட, இந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள்” என்று பெண்கள் கண்ணீர் விட்டு கதறியது மக்களின் எதிர்ப்பையும் மீறி  நிலத்தை  அளந்து, முட்டுக்கல்லை அதிகாரிகள்  நட்டனர்.

அதேபோல இத்திட்டத்துக்காக தருமபுரி மாவட்டத்தில் 1846 விவசாயிகளிடம் இருந்து 439 ஹெக்டேர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வேடகட்டமடுவு, தீர்த்தமலை, பாளையம், வீரப்பநாயக்கன்பட்டி, எம்.தாதம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, சுமைதாங்கிமேடு, அச்சல்வாடி, பேதாதம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நில அளவைப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டியில் நிலத்தை அளவீடு செய்து கல் நடும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரகுமார் என்பவர் தனது விளைநிலத்தில் கருப்புக் கொடி நட்டு வைத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனைப் பொருட்படுத்தாமல் போலீஸாருடன் வந்த அலுவலர்கள், நிலத்தை அளவிட்டு கற்களை நட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரகுமார், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மனோகரன், வேலன் ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தனர்.

அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், 3 விவசாயிகளின் நிலத்தை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவுக்குப் பின்னர் அளவீடு செய்யும் பணிகளை அரூர் டி.எஸ்.பி. செல்லபாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார், நில அளவீட்டுப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படவிருக்கும் மலைகள்!

5 மாவட்டங்களில் 8 மலைகளை அழிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை, தர்மபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்திமலை, வேதிமலைகள் உடைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக இயற்கை வளங்களை அழித்ததால், நாம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம். எனவே, இயற்கை கொடுத்த கொடையான மலை வளத்தை அழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

வட தமிழகத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்

மலைகளை அழிப்பதால், அங்கு வாழும் உயிரினங்கள் மடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மலைகளில் இருந்து வரும் நீர் வழித்தடங்கள் முற்றிலும் காணாமல் போகும் நிலையும் உருவாகியுள்ளது.

இச்சாலையை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைக்க முடிவு செய்துள்ளனர். இந்த மலைத்தொடரில் ஜருகுமலையின் பகுதியான சேலம் நிலவாரப்பட்டியில் இருந்து அயோத்தியாப்பட்டணத்திற்கு இடைப்பட்ட இடங்களில் மூன்று இடங்களில் மலையை குடைந்து சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.

இதுதவிர அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, கல்வராயன் மலையையொட்டி சாலை அமைக்கப்படுகிறது. இதில், 16 வனப்பகுதிகள் உள்ளன. சுமார் ஆயிரம் ஏக்கர் வன நிலங்கள் பாதிக்கப்படும். இவ்வனப்பகுதிகளில் கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், பறவையினங்களும் உள்ளன. குறிப்பாக சேர்வராயன் மலைத்தொடரில், அரிய வகை பறவையினங்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் பெருமளவு அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ராவண்டவாடி, அனந்தவாடி ஆகிய இடங்களும் பெரிய வனப்பகுதியாகும். அதேபோல், செங்கல்பட்டில் நம்பேடு, சிறுவாச்சூர் என்ற இடங்களும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. செய்யாறு பகுதியில் சிறு மலைகள் இருக்கின்றன. இங்கு வாழும் உயிரினங்களும் மடியும் நிலை உள்ளது. இம்மலைகளில் உற்பத்தியாகும் நீர்வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கும். வன நிலங்களை கையகப்படுத்தும்போது, வனத்தில் இருக்கும் விலங்குகள் ரோட்டுக்கு வந்து வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் சம்பவம் நிகழும்.

மேலும், வாகனங்களின் இரைச்சல் சத்தம் அதிகரிக்கும்போது, பறவைகள் இடம் பெயர்ந்துவிடும். ஜருகுமலை, அருநூற்று மலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, சித்தேரிமலை, கவுத்திமலை, வேதிமலையில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.

இத்திட்டத்தை நடைமுறை படுத்தியே தீருவேன் என்று தூத்துக்குடி மாடலை முன்னிறுத்தி கொக்கரிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இந்த அடக்குமுறைக்கெல்லாம் பாடம் கற்பிக்கும் விதமாக நாமும் ஜல்லிக்கட்டு மாடலை தொடங்குவோம் !

கடந்த 1990-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலையில் வனப்பகுதிகள் அழிப்பால் 50 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது. தற்போது 8 வழிச்சாலை அமைத்தால், இயற்கை வளம் முழுமையாக பாதிக்கும். இதனால் மழைப்பொழிவு குறைந்து வறண்ட பூமியாக இந்த 5 மாவட்டங்களும் மாறும். வெயிலின் தாக்கம் அதிகரித்து தட்பவெட்ப நிலையும் நிரந்தரமாக மாற வாய்ப்புள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சேர்வராயன்மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. இந்த அணையையொட்டி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் சேர்வராயன்மலையில் இருந்து வழிந்தோடும் நீர், வாணியாறு அணைக்கு வந்து சேராது. இப்படி பல்வேறு வகையில் விவசாயிகள், மலைகளில் வாழும் பழங்குடியின மக்கள், விலங்கினங்கள் பாதிக்கும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் எருமபாளையம், நிலவாரப்பட்டியில் விவசாயிகள், பொதுமக்கள் கடந்த சில நாட்களாக சாலை மறியல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரமாகும் மக்கள் போராட்டங்களும்- அரசின் ஒடுக்குமுறையும்:

மிகப்பெரும் அழிவுத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த சேலம் சமூக ஆர்வலர் பியுஸ் மானுஸ், மாணவி வளர்மதி மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புரட்சிகர அமைப்பினரை கைது செய்து வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை சொல்லியே மக்களை அச்சுறுத்துகிறது.

துத்துக்குடிக்கு பிறகு மக்களின் பிரச்சினைக்களுக்கு குரல் கொடுப்பவர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள்.

சேலம், தர்மபுரியைத் தவிர பசுமை வழிச்சாலை திட்டத்தினால், திருவண்ணாமலை, செங்கம்,  கலசபாக்கம், சேத்துப்பட்டு, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுகாவில்,  122 கிமீ தொலைவு சாலை அமைவதால், இம்மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படும்  நிலை உருவாகியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரம்  குடும்பங்களுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படும் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பசுமை  வழிச்சாலைத் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் கடந்த ஜூன் 20-ஆம் தேதி  வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மணிலா ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்பே அங்கு குவிந்திருந்த போலீசார், இங்கு கூட்டம்  நடத்த அனுமதியில்லை, மணிலா ஆலைக்குள் யாரும் செல்லக்கூடாது என்று கூறி விவசாய  சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், பலராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மணிலா ஆலை உரிமையாளரை கூட்டம் நடத்த அனுமதித்தால் கைது  செய்வோம் என மிரட்டியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் விவசாயிகள் யாரையும்  அனுமதிக்கவில்லை. கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை விரட்டி, விரட்டி போலீசு கைது செய்துள்ளது.

தற்போது ஆங்காங்கே விவசாயிகள் மண்ணெண்ணெய் டின்னுடன் தீக்குளிப்பதாக அதிகாரிகளுடன் போராடி வருகின்றனர். தற்போது ஆசிரியர் ராமலிங்கம் என்பவர் தனது மகன்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவற்றை தமிழக ஊடகங்கள் முற்றிலும் காண்பிப்பதில்லை. எடப்பாடி அரசின் மிரட்டலை ஏற்று போராடும் விவசாயிகளது குரலை இருட்டடிப்பு செய்கின்றனர். இந்த எட்டு வழிசாலை திட்டத்திற்கு எடப்பாடியின் உறவினர்களும் இதர அதிமுக-வினரும் ஒப்பந்ததாரர்கள் என்பதால் எடப்பாடி அரசு இந்த ஒடுக்குமுறையை தனது சொந்த குடும்ப வேலையாகவும் செய்து வருகிறது.

“தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை (எமர்ஜென்சி)  அமல்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர். முக்கியமாக இத்திட்டத்தை எதிர்த்து நாங்கள் கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம். ஐந்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து களத்தில் போராட்டம் நடத்துவோம்” என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இத்திட்டத்தை நடைமுறை படுத்தக் கூடாது என்று தமிழம் குரல் கொடுத்தாலும் இத்திட்டத்தை நடைமுறை்ப்படுத்தியே தீருவேன் என்று தூத்துக்குடி மாடலை முன்னிறுத்தி கொக்கரிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இந்த அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சாமல் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்!

– வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க