தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் களப்பலியான தியாகிகளுக்கு கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் 24.06.2018 ஞாயிறு அன்று கடலூர் டவுன் ஹாலில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மண்டல குழு உறுப்பினர் முருகானந்தம், தமிழக அரசினுடைய அடக்குமுறையை விவரித்து விட்டு தனிநபர்கள், இயக்கங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஜனநாயகம் மறுக்கப்படுவதை அம்பலப்படுத்தினார்.

மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த பூங்குன்றன், “நச்சு ஆலைகளால் ஏற்படுகின்ற கழிவுகளால் மக்கள் கொல்லப்படுவது ஒருபுறம் இருக்க இதை எதிர்க்கும் மக்களை அரசே கொல்வது வெட்கக் கேடானது” என்றார்.

மக்கள் உரிமை கழகத்தின் வழக்கறிஞர் செந்தில்குமார், “போராடுகின்றவர்கள் வெளியூர்காரர்கள், விசமிகள் என்றால் அனில் அகர்வால் எந்த ஊர், சந்தீப் நந்தூரி எந்த ஊர்” என்று கேள்வியெழுப்பினார்.

மின் ஊழியர் ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் பேசுகையில், “தாமிரமும், காப்பரும் வேண்டுமென்றால் அதை இறக்குமதி செய்து கொள்ளலாமே இதற்கு ஏன் மக்களை கொல்ல வேண்டும்.” என்றார்.

தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாமரைச்செல்வன், “இந்த தூத்துக்குடி கொலைக்காரர்கள் இப்போது எட்டு வழிசாலைக்கு வந்துவிட்டார்கள்.  இந்தியாவில் பல கிராமங்களுக்கு ரோடு கிடையாது.  ஆனால் கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு மட்டும் பல கோடி ரூபாயில் சாலை வசதி. பல இலட்சம் விவசாய மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வருகிறது” என்றார்.

மீனவர் விடுதலை வேங்கைகளின் தலைவர் மங்கையர்ச்செல்வன், “இவன் ஒன்று திரளமாட்டான் என்ற திமிரில்தான் இந்த கொலைக்கார ஆலைகள் எல்லாம் கொண்டு வந்து மண்ணை நஞ்சாக்கி நம்மை சாகடிக்கிறார்கள்.  இதனை  வீழ்த்த வேண்டுமென்றால் நாம் பெரியார், அம்பேத்கரை உயர்த்தி பிடிக்க வேண்டும்.  நாட்டை பாதுகாக்க வேண்டுமென்றால் லெனின், ஸ்டாலின் வழியிலேயே போராடி மீட்டெடுக்க வேண்டும்.  இந்த அரசு அதிகாரவர்க்கம் நம்மை பாதுகாக்காது” என்றார்.

இள.புகழேந்தி, மாநில தேர்தல் குழு பொறுப்பாளர், தி.மு.க.

தி.மு.க.வின் மாநில தேர்தல் குழு பொறுப்பாளர் இள.புகழேந்தி பேசுகையில் “மோடி, அமித்ஷா கார்ப்பேரட் முதலாளி கும்பலின் கூட்டணிதான் இந்த தூத்துக்குடி கொலையை செய்தது.  இந்த கொலைக்கார கூட்டத்திற்கு அனைத்து அடியாள் வேலைகளையும் செய்து முடித்தது கேடு கெட்ட எடப்பாடி அரசு.  மக்களை சுட்டுகொல்வதற்கு சட்ட விரோதமான முறையில் நடந்த இந்தக் கொலையை இவர்கள் மூடிமறைக்க முடியாது.  மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்பட்டே தீரவேண்டுமென்று” பேசினார்.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு பேசுகையில், “தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் சமீபகாலமாக மக்கள் எங்களை வாழவிடு என்று போராடி வருகிறார்கள்.  ஜல்லிகட்டுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு பின்பு என்பது போல் மே 22 தூத்துக்குடி துப்பாக்கிசூட்டுக்கு பின்பு துப்பாக்கிசூட்டுக்கு முன்பு என நிலைமை மாறியுள்ளது. இது வேதாந்தாவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தராமனும், குருமூர்த்தியும்  ஐ.பி.யும் சேர்ந்து நடத்திய கொலை வெறியாட்டம். தமிழகத்தில் தனித்தனியே நடக்கும் போராட்டங்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.  அதைத்தான் மக்கள் அதிகாரம் செய்கிறது அதை கண்டுதான் அரசு அஞ்சுகிறது.  எத்தனை அடக்குமுறைகள், சிறை, வழக்கு, உயிர்ப்பலி தொடர்ந்தாலும் மக்கள் அதிகாரம் தமது போராட்டத்தைத் தொடரும்.” என்றார்.

தகவல்: மக்கள் அதிகாரம்,கடலூர். (செல்:8110815963)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க