ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

பாகம் :3

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

ப்பிள் ஐ-ஃபோன் உலகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் பொதுவான போக்குகளையும், அடிப்படை உறவுகளையும் மிகைப்படுத்தப்பட்ட அதீத வடிவில் வெளிப்படுத்துகிறது. 2010-ல் ஹோன் ஹாய் ஒரு ஊழியருக்கு $2,400 என்ற வீதத்தில் மொத்தம் $240 கோடி லாபம் ஈட்டியது. ஹோன் ஹாயின் லாபத்தை ஆப்பிளின் லாபத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆப்பிள் தனது 63,000 ஊழியர்கள் (அவர்களில் 43,000 பேர் அமெரிக்காவில் உள்ளனர்) ஒவ்வொருவருக்கும் தலா $2.63 லட்சம் லாபம் ஈட்டியது. 2012-ல் ஆப்பிளின் ஒரு ஊழியருக்கான லாபத் தொகை $4.05 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 11, 2011ல் ஹோன் ஹாயின் பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு $3,690 கோடி. தனது பெயரில் ஒரு தொழிற்சாலை கூட இல்லாத ஆப்பிளின் பங்குச் சந்தை மதிப்பு $32,430 கோடி. 11

apple head office
தனது பெயரில் ஒரு தொழிற்சாலை கூட இல்லாத ஆப்பிளின் பங்குச் சந்தை மதிப்பு $32,430 கோடி

அதற்குப் பிந்தைய ஒரு ஆண்டில் ஆப்பிளின் பங்கு விலை இன்னும் பல மடங்கு அதிகரித்து அதன் பங்குச் சந்தை மதிப்பு $60,000 கோடியை தாண்டியது. அதன் மூலம் எக்சான் மொபில் நிறுவனத்தை தாண்டி உலகின் மிக அதிக பங்குச்சந்தை மதிப்புடைய நிறுவனம் என்ற பெருமையைக் கைப்பற்றியது ஆப்பிள். அதன் பங்கு விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, ஆப்பிள் $11,000 கோடி நிதிக் கையிருப்பை குவித்திருக்கிறது, அந்த நிதியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் எந்த வழிமுறையும் அதனிடம் இல்லை.

“அதிகரித்து வந்த தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்த சீன கூலி அதிகரிப்பு, ஆப்பிள் (மற்றும் பிற நிறுவனங்களின்) உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களின் சிக்கல் அதிகரிப்பதால் தேவைப்படும் கூடுதல் உற்பத்தி நேரம், கடுமையான ஒப்பந்த நிபந்தனைகள்” ஆகிய இரட்டைத் தாக்குதலுக்கு ஹோன் ஹாயின் லாபங்களும், பங்கு விலையும் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன.12 இதை “உற்பத்தியாளரின் துயரநிலையும், வணிகமுத்திரையின் வளமும்” என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. 2005-க்குப் பிறகு ஆப்பிளின் பங்கு விலை 10 மடங்கு அதிகரித்த நிலையில், அக்டோபர் 2006-க்கும் ஜனவரி 2011-க்கும் இடையே ஹோன் ஹாயின் பங்கு விலை கிட்டத்தட்ட 80% வீழ்ச்சியடைந்தது. “முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஊழியருக்குமான செலவு சரியாக மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து $2,900-க்கு சற்றுக் குறைவாக இருந்தது. மொத்த ஊதியச் செலவு $27.2 கோடி; இது மொத்த லாபத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு… சீனாவில் அதிகரித்து வரும் ஊதிய அளவு மின்னணு பொருட்களுக்கான உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தி நிறுவனத்தின் மொத்த லாபத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு 4-5% என்பதிலிருந்து இப்போது 1.2% அளவுக்குக் குறைத்திருக்கிறது.”13

foxconn
“உற்பத்தியாளரின் துயரநிலையும், வணிகமுத்திரையின் வளமும்” – Hon Hai

இன்னும் மலிவான உழைப்பைத் தேடியும், மேலும் மேலும் போராட்ட குணம் அதிகமாகும் ஷென்சென் தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்காகவும், ஹோன் ஹாய் “சீனாவின் கடலோர பிரதேசங்களிலிருந்து உள்நாட்டுக்கு உற்பத்தியை மாற்றுவதற்காக கணிசமான அளவு முதலீடு செய்திருக்கிறது. மேலும், அதன் தொழிற்சாலைகளில் எந்திரமயமாக்கலை அதிகரித்து வருகிறது. இவற்றின் விளைவாக ஏற்கனவே பலவீனமாக இருக்கும் ஹோன் ஹாயின் லாப வீதம் சென்ற ஆண்டு மேலும் சுருங்கியது..”14 என்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையாளர் ராபின் க்வாங் தகவல் தெரிவிக்கிறார். கணிசமாக அதிகரிக்கும் ஊதியச் செலவுகள், பெருமளவு முதலீட்டுச் செலவு, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து தமது செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகள் (அதாவது ஏற்றுமதி விலை வீழ்ச்சி) ஆகியவை மட்டும் போதாது என்று, ஹோன் ஹாய்க்கும் சீனாவுக்கும் பிரதானமாக உள்ள மேற்கத்திய ஏற்றுமதி சந்தைகளில் வேண்டல் குறைந்து அவை நெருக்கடியில் உள்ளன. இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. “சீனாவில் அத்தனை தொழிற்சாலைகளை கட்டியிருக்கும் இந்நிலையில் கோவ் எதிர்கொள்ள விரும்பாத ஒரு விஷயம் வேண்டல் வீழ்ச்சி” என்று முடிக்கிறார் குவாங். 15

சட்டை

ஐ-ஃபோனின் கண்ணைக் கவரும் கவர்ச்சியும், போற்றப்படும் அதன் வணிகமுத்திரை (பிராண்ட்) அந்தஸ்தும் அதன் உற்பத்தி உலகளாவிய சமூக பொருளாதார உறவுகளில் சுரண்டலும் ஏகாதிபத்தியமும் அடங்கியிருப்பதைப் பார்க்க முடியாதபடி நம்மை மயக்கி விடலாம். ஆனால், இந்த அடிப்படையிலான உறவுகள், பல்வேறு வகையான நுகர்வு பண்டங்கள் அனைத்தின் உற்பத்தியிலும் செயல்படுகின்றன. உதாரணமாக, ஒரு எளிய சட்டையை எடுத்துக் கொள்வோம். “சீன விலையின் உண்மையான பொருள் என்ன?” என்ற கட்டுரையில் டோனி நார்ஃபீல்ட் வங்கதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ஸ்வீடனைச் சேர்ந்த நுகர்பொருள் விற்பனையாளர் ஹென்னஸ் & மவுரிட்ஸ் (H&M) ஜெர்மனியில் விற்கும் ஒரு சட்டையின் கதையைச் சொல்கிறார். H&M வங்கதேச உற்பத்தியாளருக்கு ஒவ்வொரு சட்டைக்கும் €1.35 விலை கொடுக்கிறது. அது இறுதி விற்பனை விலையில் 28 சதவீதம் ஆகும். இந்த விலையில் 0.40 யூரோ அமெரிக்காவிலிருந்து வங்கதேசத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் 400 கிராம் பருத்தி மூலப்பொருளுக்குப் செலவழிக்கப்பட்டு விடுகிறது.

h&m
ஏழை நாடுகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது, பணக்கார நாடுகளின் மக்களுக்கு நேரடி பொருளாதார ஆதாயத்தை அளிக்கிறது

இந்த €1.35-க்கு மேல் சட்டையை ஹாம்பர்க் நகருக்கு அனுப்புவதற்கு 0.06 யூரோ செலவாகிறது. விற்பனை விலையான €4.95-ல் எஞ்சிய €3.54 சட்டை நுகரப்படும் ஜெர்மனியின் ஜி.டி.பி-ல் சேர்க்கப்படுகிறது. அந்தத் தொகை பின்வருமாறு பிரித்துக் கொள்ளப்படுகிறது:

  • ஜெர்மன் போக்குவரத்து நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனைக் கடைகள், விளம்பரதாரர்கள் ஆகியோருக்கான செலவுகளுக்கும் லாபத்துக்கும் €2.05 (அவற்றில் சிறுபகுதி பல்வேறு வரிகள் மூலமாக அரசுக்கு திருப்பி விடப்படுகிறது).
  • ஒவ்வொரு சட்டைக்கும் H&M 0.60 யூரோ லாபம் சம்பாதிக்கிறது.
  • ஜெர்மன் அரசு 19 சதவீதம் மதிப்புக் கூடுதல் வரி (வாட்) மூலம் விற்பனை விலையில் 0.79 யூரோக்களை கைப்பற்றுகிறது;
  • எஞ்சிய 0.16 யூரோ இதர செலவுகளுக்கு செல்கிறது.16

இவ்வாறாக, “விற்பனை விலையிலிருந்து பெறப்படும் வருமானத்தில் பெரும்பகுதி, வரிகளாக அரசுக்கும், ஜெர்மனியின் பலதரப்பட்ட தொழிலாளர்கள், மேலாளர்கள், கட்டட உரிமையாளர்கள், மற்றும் நிறுவனங்களுக்கு செல்கின்றது“. மலிவான சட்டைகளும், இறக்குமதி செய்யப்பட்ட பலவகையான பண்டங்களும், ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் கிடைப்பதோடு, அந்நாடுகளின் அரசுக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானத்துக்கான முக்கிய தோற்றுவாயாகவும் உள்ளன.”

bangaladesh workers protest
குறைந்த கூலியை எதிர்த்து போராடும் வங்கதேச தொழிலாளர்கள்

வங்கதேச தொழிற்சாலை ஒரு நாளைக்கு 1.25 லட்சம் சட்டைகளை உற்பத்தி செய்கிறது. அவற்றில் பாதி H&M-க்கும் எஞ்சியவை பிற மேற்கத்திய நுகர்பொருள் விற்பனை நிறுவனங்களுக்கும் விற்கப்படுகின்றன. 85 சதவீதம் பெண்களால் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 10-12 மணி நேரத்திலான ஒரு வேலை நாளுக்கு €1.36 கூலி பெறுகின்றனர். ஒவ்வொரு தொழிலாளியும் இயக்கும் எந்திரம் மணிக்கு 250 சட்டைகளை உற்பத்தி செய்கிறது, அல்லது தொழிலாளியின் கூலியில் ஒவ்வொரு 0.01 யூரோவுக்கும் 18 சட்டைகள் உற்பத்தியாகின்றன.

இந்த ஆலை வங்க தேசத்தில் உள்ள 35 லட்சம் பேரை உற்பத்தியில் ஈடுபடுத்தியுள்ள 4,500 ஆடை நிறுவனங்களில் ஒன்று. “ஏகாதிபத்திய நாடுகளில் பல தரப்பட்ட விற்பனை உதவியாளர்கள், சுமை வண்டி ஓட்டுனர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், கணக்காளர்கள், விளம்பர அலுவலர்கள் மற்றும் விரிவான மக்கள் நல வழங்கல்கள், மற்றும் பலவும் எப்படி சாத்தியமாகின்றன என்பதற்கு இந்தக் குறைந்த கூலிகள் பகுதியளவு விளக்கம் தருகின்றன” என்று கூறுகிறார் நார்ஃபீல்ட். வங்கதேசத்தின் கூலி அளவுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவுதான், ஆனால் ஒப்பீட்டளவில் அதிகக் கூலி மட்டம் நிலவும் மற்ற மூன்றாம் உலக நாடுகள் பற்றிய ஆய்வுகளும் இதே மாதிரியான முடிவுக்கே நம்மை இட்டுச் செல்கின்றன : ஒப்பீட்டளவில் ஏழை நாடுகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது, பணக்கார நாடுகளின் மக்களுக்கு நேரடி பொருளாதார ஆதாயத்தை அளிக்கிறது.17

11.Source for Hon Hai and Apple’s profits is “The World’s Biggest Public Companies,” Forbes, April 2012, http://forbes.com.
12.Julie Froud, et. al., Apple Business Model—Financialization Across the Pacific, CRESC Working Paper No. 111, April 2012, http://cresc.ac.uk , 20.
13.Lex, “Hon Hai / Foxconn: wage slaves,” Financial Times, August 30, 2011, http://ft.com.
14.Robin Kwong, “Hon Hai Bracing for Recession,” Beyond Brics (Financial Times blog), January 10, 2012, http://blogs.ft.com.
15.Ibid.
16.Tony Norfield, “What the ‘China Price’ Really Means,” June 4, 2011, http://economicsofimperialism.blogspot.com. His source for this data is “Das Welthemd” [“The World Shirt”], December 17, 2010, http://zeit.de.
17.Ibid.

– தொடரும்

முந்தைய பாகங்கள்:

  1. ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
  2. ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம் : Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review

நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க