ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

பாகம் :7 (இறுதிப்பாகம்)

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

“மதிப்புக் கூடுதலா” — அல்லது மதிப்பு கைப்பற்றலா?

துவரை நாம் பார்த்த சுயமுரண்களும், ஆய்வு செய்த சர்வதேச உற்பத்தி பணங்களும் வர்த்தகம், ஜி.டி.பி தொடர்பான தரவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதன் விளைவாக கிடைக்கும் தவறான சித்திரத்தை வெளிப்படுத்தின. அதற்கான காரணத்தை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள ஜி.டி.பி என்பதை இன்னும் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

labour protestஅடிப்படையில் ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் உருவாக்கிய “மதிப்புக் கூடுதலின்” கூட்டுத் தொகைதான் ஜி.டி.பி. அதாவது, மதிப்புக் கூடுதல் என்பதுதான் ஜி.டி.பி-யின் அடிப்படை அளவீடு. மதிப்புக் கூடுதல் என்பது ஒரு நிறுவனம் தான் வாங்கிய அனைத்து பொருட்களுக்கும் கொடுத்த விலைக்கும், விற்ற பொருட்களுக்கு பெற்ற விலைக்கும் இடையே உள்ள வேறுபாடாக கணக்கிடப்படுகிறது.34. இந்த மையமான புதியசெவ்வியல் கருதுகோளின்படி ஒரு நிறுவனத்தின் விற்கும் விலை, வாங்கும் விலைகளை விட எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவும் அந்த நிறுவனம் படைத்த மதிப்பு என்று கருதப்படும். [அதாவது கிராமத்தில் இருந்து கிலோ ரூ 10-க்கு தக்காளி வாங்கி, அதை சந்தையில் ரூ 50-க்கு விற்கும் வேலையை ஒருவர் செய்தால் அவர் சேர்க்கும் மதிப்பு 1 கிலோ தக்காளிக்கு ரூ 40. 1000 கிலோ வாங்கியிருந்தால் ரூ 40,000. அதே நேரம் அந்த 1,000 கிலோ தக்காளியை விளைவித்த விவசாயி வாங்கிய பொருட்களின் விலை ரூ 8,000 என்றால் அவருக்குக் கிடைத்த விற்பனை விலையிலிருந்து அதைக் கழித்து பார்த்தால் ரூ 2,000 அவர் சேர்த்த மதிப்பு. 3 மாதம் உழைத்து தக்காளி விளைவித்தவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 2, அதை வாங்கி கைமாத்தி விட்டவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 40]. ஆனால், இந்த மதிப்புக் கூடுதல் மற்ற நிறுவனங்களுக்கு கடத்தப்படவோ, அவற்றால் கைப்பற்றப்படவோ முடியாது என்கிறது புதிய செவ்வியல் பொருளாதாரவியல்.

புதிய செவ்வியல் கோணத்தில் பார்க்கும் போது, உற்பத்தி என்பது ஒரு ஒளி புக முடியாத கருப்புப் பெட்டி (உள்ளே என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது), அதைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் அதற்குள்ளே போகும் உள்ளீட்டு பொருட்களுக்கு அளிக்கப்பட்ட விலையும், அதிலிருந்து வெளியில் வரும் உற்பத்தி பொருட்களுக்கு பெறப்படும் விலைகளும்தான். அது அதைப் போன்ற மற்ற கருப்புப் பெட்டிகளிலிருந்து இறுக்கமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. லாபத்துக்கான போட்டியின் காரணமாக அவற்றுக்கிடையே எந்த மதிப்பும் கடத்தப்படவோ மறுவினியோகிக்கப்படவோ முடியாது.

labourமார்க்சிய அரசியல் பொருளாதாரம் இந்த அபத்தத்தை நிராகரிக்கிறது. இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கருதுகோளை முன்வைக்கிறது. அதன்படி ஒரு நிறுவனத்தின் மதிப்புக் கூடுதல் என்பது உண்மையில் அது கைப்பற்றிய மதிப்பைத்தான் குறிக்கிறது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மதிப்புக் கூடுதலில் ஒரு நிறுவனம் கைப்பற்றும் மதிப்பைத்தான் அது அளவிடுகிறது [முந்தைய உதாரணத்தில் விவசாயி உருவாக்கிய மதிப்பில் பெரும்பகுதி – கிலோவுக்கு ரூ 30 – என்று வைத்துக் கொள்வோம் இடைத்தரகரால் கைப்பற்றப்படுகிறது]. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் படைக்கப்பட்ட மதிப்புக்கும் அது சந்தையில் கைப்பற்றும் மதிப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. உண்மையில், மார்க்சிய மதிப்புக் கோட்பாட்டின்படி, மதிப்புக் கூடுதலை உருவாக்குவது போலத் தோன்றும் பல நிறுவனங்கள் (உதாரணமாக, நிதிச்சேவை நிறுவனங்கள்) உற்பத்தி சாராத நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டுள்ளன, அவை எந்த மதிப்பையும் உற்பத்தி செய்வதில்லை.

வழக்கமாக, “உள்நாட்டு உற்பத்தி”யைக் கணக்கிடும்போது சேர்க்காமல் விடப்படுபவற்றை முன்வைத்து ஜி.டி.பி விமர்சிக்கப்படுகிறது. புறவிளைவுகள் என்று அழைக்கப்படுபவை – உதாரணமாக, சுற்றுச்சூழல் மாசு, புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே போவது, பாரம்பரிய சமூகங்கள் அழிக்கப்படுவது முதலியன – கணக்கில் எடுக்கப்படுவதில்லை. மேலும், “உற்பத்தி எல்லை” என்று அது வகுத்துக் கொள்வதும் விமர்சிக்கப்படுகிறது. அந்த “உற்பத்தி எல்லை” பரிவர்த்தனை சரக்கு பொருளாதாரத்துக்கு வெளியில் நடக்கும் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளையும், குறிப்பாக வீடுகளில் நடக்கும் உழைப்பை ஒதுக்கி விடுகிறது.

இருப்பினும், ஒரு கருதுகோள் என்ற அளவில் ஜி.டி.பி ஒருபோதும் முறையான விமர்சனத்துக்குட்படுத்தப்படவில்லை. மார்க்சிய விமர்சகர்களோ மைய நீரோட்டத்தின் விமர்சகர்களோ கூட இந்தப் பணியை இதுவரை செய்யவில்லை. ஏன் என்பதற்கான விடையின் ஒரு பகுதி, மார்க்சிய மதிப்புக் கோட்பாடும், புதிய செவ்வியலின் கூடுதல் மதிப்புக் கோட்பாடும் ஒரு புள்ளியில் இணைகின்றன என்பதில் அடங்கியிருக்கிறது. சரக்குகளை விற்கும்போது பெறப்படும் விலைகள் உற்பத்தியில் உருவாக்கப்பட்ட மதிப்புகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த தனித்தனி வேறுபாடுகள் ஒன்றை ஒன்று ரத்து செய்து விடுகின்றன என்பதை மார்க்சியக் பொருளாதாரவியல் கண்டுபிடித்தது. அதாவது, ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, மொத்த மதிப்பு மொத்த விலைகளுக்கு சமமாக உள்ளது. 35

the new global economyஒரு நாட்டு பொருளாதாரத்தில் ஒரு நிறுவனம் உருவாக்கிய மதிப்பு (அதாவது, ஒரு உற்பத்தி நிகழ்முறை) மற்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்த பண்டங்களுக்கு கொடுக்கப்பட்ட விலைகளில் அடக்கப்படலாம் என்றால், வெவ்வேறு நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் இடையேயும் இது நடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக இப்போதைய உலகளாவிய உற்பத்தி சகாப்தத்தில் இது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், டேவிட் ஹார்வி ஒருமுறை முன்வைத்தது போல, “உபரி மதிப்பின் புவிசார் உற்பத்தி, அதன் புவிசார் வினியோகத்திலிருந்து வேறுபடலாம்”36 எந்த அளவுக்கு அது விலகியிருக்கிறதோ, மொ.உ.உ ஒரு நாட்டின் உற்பத்தியை அளப்பதற்கான பருண்மையான, ஏறக்குறைய துல்லியமான சராசரி என்ற நிலையிலிருந்து (அது ஒருபோதும் அப்படி இருந்ததில்லை என்பது தனி விஷயம்.) மேலும் விலகிச் செல்கிறது. அதற்கு மாறாக, ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளின் வாழும் உழைப்புக்கும் இடையேயான மேலும் மேலும் ஒட்டுண்ணித் தன்மையிலான சுரண்டல் அடிப்படையிலான உறவை, வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஏகாதிபத்திய தன்மையை மறைக்கும் திரையாக அது உள்ளது.

முடிவுரை

முன்பு குறிப்பிடப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கை பற்றி கருத்து கூறிய பைனான்சியல் டைம்ஸ் எழுத்தாளர் ஜில்லியன் டெட், “பொருளியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால் ஆழமானது. முன்பெல்லாம் பொருட்கள் எங்கு “உற்பத்தியாகின்றன” என்பதை கவனிப்பது மூலம் அவர்கள் ஒரு பொருளாதாரத்தின் வெளியீடுகளை அளவிட்டனர். ஆனால், ஒரு ஐஃபோன் (அல்லது ஒரு இத்தாலிய சூட் அல்லது அமெரிக்க சிறுமி பொம்மை)-ன் “மதிப்பு” எந்த நாட்டுக்குச் சொந்தமானது? நிறுவனங்கள் தமது விருப்பப்படி லாபங்களை இடம் மாற்றிக் கொண்டிருக்கும் உலகில் உண்மையான ‘வெளியீடு’ எங்கு வெளிப்படுகிறது?”37 என்று கூறியிருக்கிறார். உண்மையில் கேட்கப்பட வேண்டிய கேள்வி, “உண்மையான வெளியீடு” எங்கிருந்து வருகிறது என்பதை விட, அது எங்கு போகிறது, யார் அந்த வளத்தை உருவாக்குகிறார்கள், யார் அதைக் கைப்பற்றுகிறார்கள் என்பதுதான்.

workersமூன்றாம் உலக நாடுகளின் சுரங்கங்கள், தோட்டங்கள், வியர்வைக் கூடங்களிலிருந்து பெறப்படும் பொருட்கள் எங்கும் நிறைந்திருந்தாலும் இப்போது ஆதிக்கத்தில் உள்ள கண்ணோட்டங்கள் அவற்றை விளிம்புகளாகவும், உலக வளத்துக்கு அவற்றின் பங்களிப்பு முக்கியத்துவம் அற்றதாகவும் பார்ப்பது ஏன் என்பதை மொ.உ.உ தோற்றமயக்கம் பகுதியளவு விளக்குகிறது. மூன்றாம் உலக வாழும் உழைப்பு நமது ஆடைகள், மின்னணு பயன் பொருட்கள், நமது மேசையில் உள்ள பூக்கள், ஃபிரிட்ஜில் உள்ள உணவு, ஏன் அந்த ஃபிரிட்ஜையும் கூட படைப்பதாக இருந்த போதும் இதுதான் அவற்றின் கண்ணோட்டமாக உள்ளது.

ஒரு நாட்டுக்குள்ளான மொ.உ.உ-ல் உழைப்பின் பங்கு அந்த நாட்டுக்குள் நிலவும் உழைப்புச் சுரண்டல் வீதத்துடன் நேரடியாகவோ, எளிமையாகவோ தொடர்பு கொண்டிருப்பதில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் “மொ.உ.உ”யின் ஒரு பெரும்பகுதி, சுரண்டப்பட்ட மூன்றாம் உலக தொழிலாளர்கள் படைத்த மதிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நாம் எடுத்துக் கொண்ட மூன்று சர்வதேச விற்பனை பண்டங்கள் ஒரு சிறு மாதிரியாக வெளிப்படுத்தியது போல, உற்பத்தி உலகமயமாவது என்பது அதே நேரத்தில் மூலதனம்/உழைப்பு உறவு உலகமயமாவதும் ஆகும். இந்த மாபெரும் உருமாற்றத்துக்கான முக்கியமான இயக்க சக்தி குறைந்த கூலி மற்றும் அதிகரித்த சுரண்டலுக்கான மூலதனத்தின் தணிக்க முடியாத வேட்டை. இதன் முக்கிய விளைவு, ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளும் முதலாளித்துவமும் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களையும், வாழும் உழைப்பையும் சுரண்டுவதால் கிடைக்கும் வருமானத்தை சார்ந்திருப்பது இன்னும் அதிகரித்திருப்பது ஆகும். முதலாளித்துவத்துக்கு ஒரு முன் நிபந்தனையாக ஏகாதிபத்திய அடிப்படையில் உலகம் பிரிக்கப்படுவது இருந்தது, இப்போது அதன் உள்ளார்ந்த அம்சமாக மாறியிருக்கிறது. 38 புதிய தாராளவாத உலகமயமாக்கம், முழுவதும் பரிணாம வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வடிவத்தின் தோற்றத்தை குறிக்கிறது.

இறுதியாக, இங்கு விவரிக்கப்பட்ட கருதுகோள்கள், புள்ளிவிபரங்கள் பற்றிய விமர்சனம் உலக நெருக்கடி பற்றிய நமது புரிதலுக்கு மிகப்பெரிய தாக்கங்களை கொண்டிருக்கிறது. உலக நெருக்கடி, வடிவத்திலும், தோற்றத்திலும் மட்டுமே “நிதி” நெருக்கடி. எந்த நெருக்கடிக்கு எதிர்வினையாக அயல் உற்பத்தி முறை தோன்றியதோ அந்தக் கட்டமைப்பு நெருக்கடியின் மறு தோற்றத்தை இது குறிக்கிறது. அயல் உற்பத்தி முறையில் அதிக செலவிலான உள்நாட்டு தொழிலாளர்களுக்குப் பதிலாக குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்களை பயன்படுத்தியது, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் லாபங்களுக்கும், நுகர்வு மட்டங்களுக்கும், குறைந்த பணவீக்கத்துக்கும் அடிப்படையாக இருந்தது. 1970-களின் நெருக்கடிகளிலிருந்து ஏகாதிபத்திய பொருளாதாரங்கள் தப்பித்ததற்கு, கடன் பொருளாதார விரிவாக்கத்தோடு கூடவே அயல் உற்பத்தி முறை முக்கியமானதாக இருந்தது. மேலும் கட்டமைப்பு நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கு அயல் உற்பத்தி முறையின் ஆழமான தொடர்பு பல வழிகளில் வெளிப்பட்டிருக்கிறது.

உலகப் பொருளாதார நெருக்கடியை பகுப்பாய்வு செய்வதில் உற்பத்தி வளையத்துக்கு மைய இடம் கொடுப்பது பல மார்க்சிய பொருளியலாளர்களின் கவனத்தை பிரதானமாக ஈர்த்திருக்கிறது. இதற்கு கடந்த மூன்று பத்தாண்டுகளாக நடந்து வரும் புதியதாராளவாத உலகமயமாக்கலின் மூலம் இந்த வளையத்தில் நடந்திருக்கும் மகத்தான உருமாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்வது தேவையானதாக இருக்கிறது. அதற்கு மொ.உ.உ தோற்றமயக்கத்தை விட்டொழிப்பது தேவையாக உள்ளது.

(நிறைவடைந்தது …)

34. How do GDP accounts treat government activity? While the cost of governments’ inputs are precisely known, its outputs—from provision of healthcare to providing “security” in Afghanistan—are not sold on markets and cannot be measured by their prices of sale. National accounts deal with this problem by assuming that the total value of services provided by governments is equal to the costs of providing them. Thus the public sector, by definition, produces no value added.
35. Marx wrote that “the distinction between value and price of production…disappears whenever we are concerned with the value of labour’s total annual product, i.e. the value of the product of the total social capital.” Capital, vol. 3, 971.
36. David Harvey, The Limits to Capital (London: Verso, 2006), 441–42.
37. Gillian Tett, “Manufacturing is All Over the Place,Financial Times, March 18, 2011, http://ft.com.
38. This has been most clearly articulated by Andy Higginbottom, who has argued that holding “(southern) wages…below the value of (northern) labour power is a structurally central characteristic of globalised, imperialist capitalism…. Imperialism is a system for the production of surplus value that structurally combines national oppression with class exploitation.” Andy Higginbottom, The Third Form of Surplus Value Increase, conference paper, Historical Materialism Conference, London, 2009.

முந்தைய பாகங்கள்:

  1. ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
  2. ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
  3. ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்
  4. அவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை !
  5. உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !
  6. காக்டெய்ல் புகழ் பெர்முடா உலக தனிநபர் உற்பத்தி திறனில் முதல் நாடாம் !

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம்
: Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review
நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க