ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

பாகம் : 6

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

ஜி.டி.பி — சில சுயமுரண்களும், வினோதங்களும்

ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான தரவுகளின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விளக்கங்களை நிராகரிப்பதற்கான கோட்பாட்டு அடிப்படையை பார்ப்போம். அதற்கு முன்பு இந்த புரட்சிகரமான நிராகரிப்புக்கான தேவையை உருவாக்கும் சுயமுரண்களையும், விளக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். மூன்று உலகளாவிய பண்டங்களில் நாம் பார்த்தது போல, ஒரு வாடிக்கையாளர் ஐஃபோன் ஒன்றை வாங்கும்போதோ, எச்&எம் ஆடை ஒன்றை வாங்கும்போதோ, அல்லது இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும்போதோ, இறுதி விற்பனை விலையின் ஒரு சிறு பகுதி மட்டுமே அந்தப் பொருள் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் ஜி.டி.பி.-யில் சேர்கிறது. அதன் பெரும்பகுதி, எந்த நாட்டில் அந்தப் பொருள் நுகரப்படுகிறதோ அந்த நாட்டின் ஜி.டி.பி-யில் சேர்க்கப்படுகிறது. இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைப்பவர் ஒரு பொருளாதாரவியலாளராக மட்டுமே இருக்க முடியும்.

Bermuda
2007-ல் உலகிலேயே அதிக தனிநபர் உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடு எது தெரியுமா? அது பெர்முடா

ஜி.டி.பி புள்ளிவிபரங்கள் தோற்றுவிக்கும் இந்த சுயமுரண்களுக்கு இன்னும் துலக்கமான அதிர்ச்சியளிக்கும் உதாரணம் ஒன்றை பார்ப்போம். 2007-ல் உலகிலேயே அதிக தனிநபர் உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடு எது தெரியுமா? அது பெர்முடா. அதாவது பெர்முடா நாட்டின் குடிமக்கள் இந்த பூமிப்பரப்பிலேயே மிக அதிக உற்பத்தித் திறன் படைத்தவர்கள். செப்டம்பர் 2001-ல் உலக வர்த்தக மைய தாக்குதலைத் தொடர்ந்து வேலியிடப்பட்ட நிதியங்கள் புதிய புகலிடம் தேடின. அவை சென்றடைந்த பெர்முடா என்ற இந்த வரியில்லா சொர்க்கத்தீவு அதுவரை முதல் இடத்தில் இருந்த லக்சம்பர்கை முந்தி உலகின் அதிக தனிநபர் உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடாக மாறியது. மேலும், காத்ரினா புயலைத் தொடர்ந்து பெர்முடா மேலும் வளர்ச்சி அடைந்தது. காத்ரினா புயலுக்குப் பின் காப்பீட்டு பிரீமியங்கள் சர்வதேச அளவில் அதிகரித்தன. குறுகிய கால நிதிமூலதனம் மறுகாப்பீட்டு துறையில் அதிகமாக பாய்ந்தது. அந்தத் துறையின் முக்கியமான மையங்களில் ஒன்று பெர்முடா. இவ்வாறாக, உலகின் தனிநபர் உற்பத்தித் திறன் மிக அதிகமான நாடாக வரிசைப்படுத்தப்பட்டது பெர்முடா. இருந்த போதும், கடலோர பார்களில் தயாரிக்கப்படும் காக்டெய்ல்களும், பிற மேட்டுக்குடி சுற்றுலா சேவைகளும்தான் பெர்முடாவில் நடக்கும் ஒரே உற்பத்தி நடவடிக்கை.31

இன்னொரு பக்கம், பெர்முடாவுக்கு 1,600 கிலோமீட்டர் தெற்கு-தென்மேற்காக உள்ள டொமினிகன் குடியரசில் 57 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களில் 1.54 லட்சம் தொழிலாளர்கள் குறைகூலிக்கு உழைத்து தேய்ந்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக வட அமெரிக்கச் சந்தைக்கு அனுப்புவதற்காக காலணிகளையும் ஆடைகளையும் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர்.32 வாங்கும் திறன் அடிப்படையிலான டாலர் மதிப்பில் அந்நாட்டின் தனிநபர் ஜி.டி.பி பெர்முடாவின் ஜி.டி.பி-ல் 8 சதவீதம், சந்தை செலாவணி வீதத்தில் பார்க்கும் போது அது 3 சதவீதம் மட்டுமே; 2007-ம் ஆண்டு தனிநபர் உற்பத்தியைப் பொறுத்த வரை சி.ஐ.ஏ உலகத் தகவல்கள் கையேட்டில் அது பெர்முடாவுக்குக் கீழே 97-வது இடத்தில் பின்தங்கி இருந்தது. இருப்பினும், எந்த நாடு உலக வளத்துக்கு அதிக பங்களிப்பு செய்கிறது, பெர்முடாவா அல்லது டொமினிகன் குடியரசா?

Leather Factory
டொமினிகன் குடியரசில் 57 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களில் 1.54 லட்சம் தொழிலாளர்கள் குறைகூலிக்கு உழைத்து தேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெர்முடாவையும், டொமினிகன் குடியரசையும் ஒப்பிடுவது ஒரு தனிச்சிறப்பான விஷயம்தான். பெர்முடாவின் ஏற்றுமதியான “நிதித்துறை சேவைகள்” உற்பத்தி சாராத நடவடிக்கைகள். அவை டொமினிகன் குடியரசு போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மதிப்புகளை குவித்து, அவற்றை முதலாளிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் மையமாக உள்ளன. “தனிநபர் உற்பத்தி” வேலியிடப்பட்ட நிதிய வர்த்தகர்களும், ஆலை தொழிலாளர்களும் சமூகத்தின் நலனுக்கும் அளிக்கும் பங்களிப்பின் உண்மையான சரியான அளவீடு என்றால் பெர்முடா, டொமினிகன் குடியரசு ஆகிய இரண்டு நாடுகளின் இடம் நிச்சயமாக நேர் எதிராக இருந்திருக்க வேண்டும்.

ஜி.டி.பி தோற்றமயக்கத்தை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்வதற்கு ஒரு சுயமுரணை பார்க்கலாம் : வால்-மார்ட், டாப் ஷாப் போன்ற கடைகளில் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு சீனா மற்றும் பிற காலணி, அணிகலன் உற்பத்தியாளர்களிடமிருந்து போட்டி தீவிரமாவதாக வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக டொமினிகன் குடியரசு முதலாளிகள் தமது தொழிலாளர்களின் கூலிகளை குறைக்க வேண்டியது வரும். இந்த போட்டி புதிய உற்பத்தி முறைகளால் இல்லாமல் சீனாவில் தொழிலாளர்களின் கூலி குறைவதால் ஏற்பட்டது என்றும் வைத்துக் கொள்ளலாம். வேறு விதமாகச் சொல்லப் போனால், இந்தப் பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் சமூக உழைப்பு நேரம் மாறவில்லை. இந்நிலையில் கூலி குறைந்திருப்பது, சுரண்டல் அதிகரிப்பதையும், உபரிமதிப்பு வீதம் (லாபம்) அதிகரித்திருப்பதையும் காட்டுகிறது.

காலணி தொழிலாளர்கள் அதிகமாகச் சுரண்டப்படுவதன் விளைவாகத் தோன்றும் கூடுதல் உபரிமதிப்பில் ஒரு பங்கு மட்டுமே அந்த நாட்டு முதலாளிகளின் லாபத்தில் சேர்கிறது. எஞ்சிய பகுதி ஒட்டு மொத்த முதலாளித்துவ உற்பத்தியின் உபரிமதிப்புகளின் தொகுப்புக்கு போய்ச் சேருகிறது. அது பல்வேறு வகையான முதலாளிகளுக்கிடையே லாபமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அதில் ஒரு பகுதி, நுகர்வோரின் நுகர்வு அளவை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கும் ஒரு பகுதி சேருகிறது.

டொமினிகன் குடியரசில் உண்மையான கூலி குறைக்கப்படுவதன் விளைவாக அந்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பு முதலாளிகள் ஈட்டும் உபரிமதிப்புக்கும், லாபத்துக்கும் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரமாக மாறுகிறது. ஆனால், ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான புள்ளிவிபரங்கள் இதற்கு நேர் எதிர் மாறான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன : டொமினிகன் குடியரசில் கூலி குறைவது அதன் ஏற்றுமதி பொருட்களின் விலைகளை வீழ்ச்சியடையச் செய்கிறது; டொமினிகன் குடியரசு உலக செல்வத்துக்கும் வழங்கும் பங்களிப்பும் குறைகிறது. டொமினிகன் குடியரசு தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் இதே வகையில்தான் அளவிடப்படுகிறது. உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி விலை குறைவது தொழிலாளரின் உற்பத்தித் திறன் குறைவதாக பார்க்கப்படுகிறது. இதுதான் உற்பத்தித் திறனை அளவிடுவதற்கு இப்போது பயன்படுத்தப்படும் நடைமுறை.

ஆனால், உண்மையில் இந்தத் தொழிலாளர்கள் முன்பு உற்பத்தி செய்த அதே எண்ணிக்கையிலான காலணிகளையே உற்பத்தி செய்கின்றனர், ஆனால் குறைவான பணத்தை கூலியாகப் பெறுகின்றனர். இதனால் அவர்கள் “மூலதனத்துக்கு உற்பத்தித் திறன்” அதிகமானவர்களாக மாறுகிறார்கள். இருப்பினும், மதிப்புக் கூடுதல் பற்றிய தரவுகள் அவர்களது உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்ததாக அறிவிக்கின்றன. “உழைப்பின் உற்பத்தித் திறன்” பற்றிய புள்ளிவிபரங்கள், ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான புள்ளிவிபரங்களைப் போலவே திரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

GDP illusion
“உழைப்பின் உற்பத்தித் திறன்” பற்றிய புள்ளிவிபரங்கள், ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான புள்ளிவிபரங்களைப் போலவே திரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

உண்மையில், உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வதற்கான திறவுகோல், “உழைப்பின் உற்பத்தித் திறன்” என்பதற்கு நாம் என்ன பொருள் கொள்கிறோம் என்பதையும், அதை நாம் எப்படி அளவிடுகிறோம் என்பதையும் பொறுத்திருக்கிறது. பொருளாதாரவியல் அறிஞர்களும், புள்ளியியலாளர்களும், ஒவ்வொரு தொழிலாளியும் சேர்க்கும் மதிப்பை கணக்கிடுகின்றனர். ஆனால், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் மிகவும் வேறுபட்ட ஆரம்பப் புள்ளியைக் கொண்டிருக்கிறது : மைய நீரோட்டத்தின் உற்பத்தித் திறன் என்ற கருதுகோள் விலையையும், மதிப்பையும் போட்டு குழப்பிக் கொள்கிறது. அதன்மூலம், இரண்டுக்கும் இடையே உள்ள சிக்கலான உறவை மறைந்து போகச் செய்து விடுகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, “உற்பத்தித் திறன்” என்பது மார்க்ஸ் தன்னுடைய மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதிய “உழைப்பு பயன்மதிப்பாக வெளிப்படுகிறதா அல்லது பரிமாற்ற மதிப்பாக வெளிப்படுகிறதா என்பதன் அடிப்படையிலான அதன் இரட்டைத் தன்மையை” உள்ளடக்கிய முரண்பாடுகளின் ஐக்கியம்.33

(தொடரும் …)

முந்தைய பாகங்கள்:

  1. ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
  2. ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
  3. ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்
  4. அவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை !
  5. உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம்
: Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review
நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க