பத்திரிகைச் செய்தி

02.07.2018

 மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.

மேற்படி மனுவை சாக்காக வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பைப் பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி, என  பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்க தக்கது. பாசிச இந்துத்வா கொள்கையை வைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி தீவிரவாதம், பயங்கரவாதம் என பேசுவது, வேடிக்கையானது.

மீனவ பிரதிநிதிகள் கொடுத்த புகார் மனுவில்……

“காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம்.

தற்போது அந்த 2 வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.

‘‘தூத்துக்குடி வன்முறை சம்பவத்துக்கும் மீனவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டி மே 22 போராட்டத்தில் பங்கேற்க செய்தனர்’’ என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் 29-6-2018 அன்று மனு அளித்தனர்“.

மொத்த மனுவின் சாரம் மேற்கண்ட சில வரிகள்தான்.

நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்து, யாரை வேண்டுமானாலும் கைது செய்கிறது போலீசு. ஸ்டெர்லைட்டைவிட அதிக ஆபத்து போலீசின் இந்த அடக்குமுறைதான். ஒரு சில மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும், மக்கள் அதிகார அமைப்பின் மீதும் அவதூறு பிரச்சாரத்தை போலீசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மே 22 போராட்டம் மீனவ அமைப்புகள் முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை. மீனவ சங்க பிரதிநிதிகள் கொடுத்த மனுவில் போலீசின் தற்போதைய அடக்குமுறையை கண்டித்து, துப்பாக்கிச்சூடு படுகொலையை கண்டித்து ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்த புகாரை கொடுக்கவில்லை. இரு வழக்கறிஞர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அல்ல. போலீசு தனது பித்தலாட்ட நடவடிக்கையை நியாயப்படுத்த அவ்வாறு இட்டுகட்டி பரப்பி வருகிறது.

போராடும் மக்களுக்கு உண்மையாக உதவியதற்காக இன்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எண்ணற்ற வழக்குகளில் போலீசின் சித்ரவதையில் பாளையம் கோட்டை சிறையில் உள்ளார். எப்போது வெளியே வருவார் என தெரியாது. எதையும் செய்யத் தயங்காத போலீசார் உயிரோடு விடுவார்களா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. பல கோடிகள் புரளும் மதுரை பல்கலைகழக துணைவேந்தரை உச்சநீதிமன்றம் வரை சென்று பணி நீக்கம் செய்தவர் வாஞ்சிநாதன். வழக்கறிஞர் தொழிலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் திறமை உடையவர்.

வழக்கறிஞர் அரிராகவன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். நீதிமன்றத்தில் அவரை பற்றி விசாரித்துப் பாருங்கள். மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை செயல்பாடு பற்றி தமிழக மக்கள் அறிவார்கள். இந்நிலையில் போலீசார் சொல்வதை வேறு வழியில்லாமல் புகாராக கொடுத்த மீனவ பிரதிநிதிகளின் மனுவை அப்படியே அனைத்து பத்திரிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு போல் வெளியிட்டதன் நோக்கம் நேர்மையற்றது.

மே 22 போராட்டம் தூத்துக்குடி மக்கள் நடத்திய மாபெரும் தன்னெழுச்சி போராட்டம். ஜல்லிகட்டுபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக பெரும் மக்கள்திரள் அமர்ந்து விட்டால் என்ன செய்வது?. அதனால்தான் ஸ்டெர்லைட்டும், போலீசாரும் திட்டமிட்டு வன்முறை வெறியாட்டத்தை நடத்தி போராட்டத்தை முடித்து உள்ளனர். தமிழகத்தில் இனி யாரும் எதற்கும் போராடக்கூடாது என்பதன் அச்சுறுத்தல்தான் தூத்துக்குடி மாடல் துப்பாக்கிசூடு படுகொலை மற்றும் அதன்பிறகான போலீசின் அடக்குமுறைகள்.

இந்த படுகொலை குற்றத்தை திசை திருப்ப யார்மீது பழிபோடுவது என ‘பொறியில் அகபட்ட எலி’யாக தூத்துக்குடி போலீசு துடிக்கிறது. தென் மாவட்டங்களில் மக்கள் அதிகார அமைப்புத் தோழர்களை, ஏறத்தாழ அனைவரையும் மோசடியாக ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜோடித்து எழுதி வைத்துக்கொண்டு வீடுவீடாக வேட்டையாடி வருகிறது. 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் உள்ளிட்டு ஆறு தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், இரண்டு தோழர்கள் மீது 52-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது. என்.எஸ்.ஏ. சரவணன் என்ற கூலித்தொழிலாளி, வலிப்பு நோயால் அவதி பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சையின்றி சித்ரவதையை அனுபவத்து வருகிறார். அவரை ஈவு இரக்கமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளார்கள்.

மக்கள் அதிகாரத் தோழர்கள் எந்த வன்முறை தீ வைப்பு சம்பவத்திலும் ஈடுபடவில்லை. எந்த ஆதாரத்தையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யோ, அல்லது பா.ஜ.க அமைச்சர் பொன்னாரோ காட்ட முடியாது. தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பா.ஜ.க. அதிமுக தவிர தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அங்கு சென்று ஆதரித்தார்கள். எந்தப் பாகுபாடு, வேறுபாடுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இதில் மூளைச்சலவை எங்கு வருகிறது? வெளியிலிருந்து தூண்டுவது எங்கு வருகிறது? இதில் யார் சமூக விரோதிகள்? ஸ்டெர்லைட்டை மூடி விட்டார்கள் என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் பா.ஜ.க பொன்னாருக்கு ஒருவிதமாகவும், ஜக்கி வாசுதேவ், பாபா ராம் தேவ் சாமியாருக்கு வேறுவிதமாகவும் வெளிப்படுகிறது.

பா.ஜ.க. அமைச்சர் “ பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக வலம் வருகின்றனா். அரசியல் கட்சிகளிலும் பயங்கரவாதிகள் நுழைந்து இருக்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தால் வேறு பெயரில் செயல்படுவார்கள் அதனால் அவா்களை கரு அறுக்க வேண்டும். வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்” என தூக்கத்தில் நடக்கும் வியாதி போல் பிதற்றிவருகிறார்.

மீத்தேன், கெயில், சேலம் விமான நிலைய விரிவாக்கம், எட்டுவழிச்சாலை, சாகர்மாலா, ஆகியவற்றால் பாதிக்கபட்ட மக்கள் போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக சென்று ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முடியாத இந்த பாசிச கோழைகள்தான், மக்களோடு மக்களாக நின்று போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகளை பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி என பீதியூட்ட முயல்கிறார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சதி வழக்கை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கட்டும். கொலைகார போலீசே கொலைக்கான காரணத்தை விசாரிக்கிறது. ஸ்டெர்லைட்டிடம் கோடிகணக்கில் பணம் பெற்ற பா.ஜ.க கட்சியை சார்ந்த அமைச்சர் தீவிரவாதம், பயங்கரவாதம் என போலீசை உசுப்பேற்றி விடுகிறார். இதன்மூலம் அனைத்து மக்கள் போராட்டங்களையும் போலீசு அடக்கி ஒடுக்க வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார்கள். பொது அமைதிக்கு, பொது ஒழுங்குக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தால்தான் தமிழகத்தில் அமைதி நிலவும். அதற்காக அனைவரும் போராட வேண்டும்.

இப்படிக்கு,
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
பேச: 99623 66321

2 மறுமொழிகள்

  1. உங்களின் பொய் முகத்திரை கிழிந்து தொங்குகிறது வினவு

    உங்களை போன்ற பயங்கரவாதிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எங்கள் தலைவர் ரஜினி உங்களின் வன்முறை செயல்களை பற்றி அன்றே சமூகவிரோதிகள் என்று சொன்னார், அது மீனவ மக்களின் புகார் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க