கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா | சிறப்புத் தொடர் பாகம் 2
“ஒரு திருடன் உங்களை முத்தமிட்ட பிறகு பற்களை எண்ணிக் கொள்ளுங்கள்; ஒரு திருடனின் எழுத்தை படித்த பிறகு உங்களின் விழுமியங்களை சரி பாருங்கள்!”.
– புது மொழி
சமீபத்திய தமிழ் திரைப்படங்களின் ஆரம்பத்தில் வரும் பச்சை வண்ண லைக்கா (LYCA) நிறுவனத்தின் முத்திரை இப்போது பலருக்கும் பரிச்சயமாயிருக்கும். லைக்கா பிரபலமான இந்தக் காலத்தில்தான் கமல் – ரஜினி போன்றோர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கும் அறிவிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். லைக்கா நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றிய ராஜு மகாலிங்கம், தற்போது ரஜினி துவக்க இருக்கும் அரசியல் கட்சியின் நிழல் பிரிவு தலைவராக பணியாற்றுகிறார்.
ரஜினி – கமல் பேசும் ஊழல் ஒழிப்பு – ஒரு மோசடி என்பதை இவர்களுக்கு படியளக்கும் லைக்காவின் கறை படிந்த வரலாறே தெள்ளத்தெளிவாக காட்டி விடுகிறது. ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்ததாகக் கூறப்படும் காலாவின் நிதி ஆதாரமே லைக்காவின் கைங்கரியம்தான்.
காலாவைத் தொடர்ந்து ரஜினியின் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் எந்திரன்-2 அல்லது 2.0. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.550 கோடியை நெருங்கிவிட்டதாம். இந்திய திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவுடன் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது 2.0.
கத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு வர்த்தகத்தில் நுழைந்தது லைக்கா. அதைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன், இப்படை வெல்லும், 2.0, சபாஷ் நாயுடு, தியா, வட சென்னை, செக்க சிவந்த வானம், இம்சை அரசன் 24-ம் புலிகேசி, இந்தியன்-2 என அடுத்தடுத்த படங்களையும் தயாரித்து வருகிறது. இவை தவிர வெற்றிமாறனின் விசாரணை, மகேஷ் பாபுவின் ஸ்பைடர், காலா, இரும்புத் திரை போன்ற படங்களை விநியோகஸ்தராக வெளியிட்டது. இதன் மூலம் தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது லைக்கா. இதோடு தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் இருக்கிறது.
எந்திரன்-2 அல்லது 2.0 வின் முதல் தோற்ற வெளியீட்டுவிழா சென்ற 2016-ம் ஆண்டு மோடி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அறிவித்த சில நாட்களில் மும்பையில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவிற்கு மட்டும் செலவான தொகை சுமார் ஆறு கோடி ரூபாய்.
அன்று 2.0-வின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்த அப்படத்தின் வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்பு மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதென்று பொருளாதார அறிஞர்களே திடுக்கிடும் வண்ணம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதில் உள்ளூர் கருப்புப் பணத்தின் மிகச்சிறு பகுதியே வெளிநாட்டுக் கருப்புப் பணமாக சென்று ஹவாலாவாக இங்கு திரும்புகிறது என்று ‘பயங்கரமான’ ஆய்வு ஒன்றையும் வெளியிட்டார்.
ஜெயமோகன் பணியாற்றும் 2.0 – திரைப்படத்தின் தயாரிப்பாளரும் வெளிநாட்டு நிறுவனமுமான லைக்காவின் சட்டவிரோத பணப் பறிமாற்றங்கள், மோசடிகள் குறித்து ஏற்கனவே வினவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் பாகமாய் இந்தக் கட்டுரை வெளிவருகிறது.
பிரான்சில் வரிவிதிப்பை தவிர்க்க லைகா நிறுவனம் சட்டவிரோதமான முறையில் பணத்தை வரியில்லா சொர்க்கங்களில் உள்ள தனது கிளை நிறுவனங்களுக்கு கடத்துவதை “பஸ்ஃபீட்” BUZZFEED எனும் ஐரோப்பிய ஊடகம் அம்பலப்படுத்தியது.
கருப்புப் பணத்தை வரியில்லா சொர்க்கங்களுக்கு கடத்தும் நிறுவனங்கள் அதை வெள்ளையாக்க மீண்டும் வேறு தொழிலில் முதலீடு செய்யும். அப்படி முதலீடு செய்யும் தொழிலே ஆடிட்டிங் மற்றும் கணக்கு வழக்குகளை சரிவர செய்யாததாகவும், லாபம் கொட்டுவதாகவும் இருந்தால்? லைக்கா தனது கருப்புப் பணத்தை வெள்ளையாக்க தேர்ந்தெடுத்த துறைதான் தமிழ் திரைப்பட தயாரிப்பு. ’தி இந்து’ பத்திரிகைக்கு நேர்காணல் அளித்த லைக்காவின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா திரைப்படத் தயாரிப்புக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக கூறியிருந்தார். மோடியின் பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட போது ரஜினி, கமல் போன்றோரும் கருப்புப் பண ஒழிப்பு என அதைக் கொண்டாடினர். ஜெயமோகன் ஒரு இலக்கியவாதி என்பதால் அந்தக் கொண்டாட்டத்தைத் தாண்டி ஒரு ‘ஆய்வு’ கட்டுரையே வெளியிட்டார்.
அதில் ஜெயமோகன் சொன்னபடி வரிகட்டாமல் கருப்புப்பணமாக வெளிநாடு சென்று திரும்பும் பணத்தில் தான் அவருக்கே லைக்கா படியளக்கிறது. அவருக்கு மட்டுமல்ல ரஜினி, கமல் போன்றோருக்கும், லைக்காவே படியளக்கிறது. லைக்காவைப் பொறுத்தவரை திரைப்படத் தயாரிப்பே ஹவாலாதான். அந்த ஹவாலாவில் பயன் பெறுபவர்கள்தான் கமல்- ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் போன்றோர். இதை இன்னும் இழுத்தால் காலா படத்திற்கு பைனான்ஸ் செய்த லைக்காவின் பணம்தான் தனுஷின் கை வழியாக இயக்குநர் ரஞ்சித்திற்கும் ஊதியமாக போய்ச் சேர்ந்திருக்கிறது. இன்றைக்கு தமிழ் சினிமாவில் இயங்கும் அனேகம் பேர் லைக்காவை ஏற்று தொழுதால்தான் தொழில் செய்ய முடியும்!
தற்போது இங்கிலாந்தில் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மீண்டும் சிக்கியுள்ளது லைக்கா.
ஜூலை 2012 முதல் பிப்ரவரி 2016 வரையிலான இடைப்பட்ட காலத்தில் லைக்கா மொபைல்ஸ்-இன் இங்கிலாந்து பிரிவு தனது வர்த்தகத்தை குறைத்துக் காட்டி மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) குறைவாக செலுத்தியது அம்பலமாகியுள்ளது. கட்ட வேண்டிய நிலுவை வரியை அபராதத்துடன் சேர்த்து 26 மில்லியன் பவுண்டுகள் வரை (சுமார் 235 கோடி இந்திய ரூபாய்) லைக்கா நிறுவனம் இங்கிலாந்தின் வருவாய் மற்றும் சுங்கவரித் துறைக்கு (HMRC) செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக கார்டியன் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
முன்னதாக 2017-ம் ஆண்டு லைக்கா மொபைல்சின் நிதி கணக்கை செய்து வந்த KPMG என்ற கணக்கு தணிக்கை நிறுவனம் அப்பணியிலிருந்து விலகிக் கொண்டது. ”போதுமான கணக்கியல் பதிவுகள் பராமரிக்கப்படாததையும், லைக்கா தனது கிளை நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள் சரிவர பதிவு செய்யப்படாமலிருப்பதையும்” KPMG தனது அறிக்கையில் தெரிவித்தது. மேலும், லைக்காவும் அதன் கிளை நிறுவனங்களும் வரிவிதிப்பை தவிர்ப்பதற்காக தங்களுக்குள் சிக்கலான வலைப்பின்னலையும், பரிவர்த்தனைகளையும் கொண்டிருக்கின்றன என்றும் அந்நிறுவனம் கூறியது. ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஆடிட்டரே அது ஒரு ஃபிராடு நிறுவனம் என்று செல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவை எவற்றையும் லைக்காவோ இல்லை அதன் ஊழல் பணத்தில் உண்டு களிக்கும் எவரும் மறுக்க முடியாது. அனைத்தும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் !
2016–ம் ஆண்டு ஜூன் மாதம் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை (money laundering) நடவடிக்கைகள் தொடர்பாக பிரான்சில் லைக்காவின் 19 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பிரான்சு நாடு கடந்த மார்ச் 2017-ல் இங்கிலாந்தின் வருவாய் மற்றும் சுங்கவரித் துறை (HMRC) அதிகாரிகளிடம், லைக்கா மொபைல் நிறுவனத்தில் சோதனை நடத்தி விசாரிக்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு இங்கிலாந்து வருமானத்துறை மறுப்புக் கடிதம் எழுதியது.
“லைக்கா நிறுவனம், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக நன்கொடை வழங்கும் நிறுவனம் என்பதால், விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது” எனக் கூறிய அக்கடிதத்தை பஸ்ஃபீட் (buzzfeed) என்னும் பத்திரிகை அம்பலப்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள லேபர் கட்சியின் ஜெரமி கோர்பைன், “இங்கிலாந்து வருவாய் மற்றும் சுங்கவரித் துறை என்பது ஒரு அரசு நிறுவனம், அது எவ்விதமான ஒளிவு மறைவுமின்றி, எதற்கும் அஞ்சாமல், அனைத்து நிறுவனங்களையும் விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் இரண்டாண்டுக்கு முன்பு வரை கன்சர்வேடிவ் கட்சிக்கு சுமார் 2.1 மில்லியன் பவுண்ட் பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. ’பஸ் ஃபீட்’-ன் செய்திக்குப் பிறகு, இங்கிலாந்து கருவூலத்தால் தேர்வு செய்யப்பட்ட கமிட்டி மற்றும் பொதுக் கணக்குக் கமிட்டியின் உறுப்பினர்கள், இங்கிலாந்து வருவாய் மற்றும் சுங்கவரித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவிருக்கின்றனர். இங்கிலாந்து எம்பிக்களும் இது குறித்து விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
ஆனால் இங்கிலாந்தின் வருமான மற்றும் சுங்கத்துறை இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. தேடுதல் அனுமதி வழங்குவதற்கு போதுமான ஆவணங்களை பிரெஞ்சு வரித்துறை வழங்காததால்தான் அனுமதி வழங்கவில்லை என்று கூறியிருக்கிறது.
கன்சர்வேடிவ் (டோரி) கட்சி மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் தொடர்பும் லைக்காவின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவுக்கு இருக்கிறது. இங்கிலாந்தின் ஆசிய தொழிலதிபர்கள் குழுமத்தால் துவக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏசியன் ட்ரஸ்ட் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முக்கிய கொடையாளர்களில் ஒன்றாக லைக்கா குழுமம் இருக்கிறது. இத்தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்.
இந்த லைக்கா நிறுவனம் எப்படி இவ்வளவு பெரிய ஆளானது? ஈழ அகதியாக இங்கிலாந்து சென்ற சுபாஷ்கரன் அல்லிராஜா, ஒரு மெய்நிகர் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தை துவங்குகிறார். ஒரு மெய்நிகர் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனம், அலைபேசி சேவை வழங்கலுக்கான செல்போன் டவர், அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம் உரிமம் போன்ற எந்த கட்டமைப்பு வசதியையும் வைத்திருக்க தேவையில்லை. ஏற்கனவே அலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தொகுப்பை மொத்தமாக வாங்கி சில்லறைக்கு விற்றுக் கொள்ளலாம். மொத்தமாக பெற்ற அழைப்புகளை விற்கும் போது மறைமுகமான கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகளின் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றவும் செய்யலாம்.
லைக்காவும் இந்த உத்தி அல்லது மோசடியில் தான் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்தது. தோழர் கலையரசன் அதை விரிவாக விவரிக்கிறார்.
“லைக்கா அதிபரின் வளர்ச்சியை ஒரு தமிழன் கோடிஸ்வரனாகிறான் என்று தமிழ் கூறும் நல்லுலகம் ஆரம்பத்தில் பெருமைப்பட்டது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக வாழும் மக்களின் சந்தையை Niche market அழைக்கிறார்கள். மத்திய தரைக்கடலில் மூழ்கிச் செத்தது போக கரையேறியவர்கள் ஐரோப்பாவின் கடுமுழைப்பு வேலைகளில் ஈடுபட்டு தமது வயிற்றை கழுவுகிறார்கள். அகதி பிரச்சினை, குடியுரிமை இல்லாத பிரச்சினை எல்லாம் சேர்ந்து இவர்களை எந்நேரமும் அச்சத்தில் வாழ வகை செய்கிறது. அப்பேற்பட்ட மக்களிடம் பொருள் விற்பதுதான் மேற்கண்ட Niche market .
இத்தகைய மக்கள் ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இருக்கமாட்டார்கள். இவர்களிடம்தான் தனது மொபைல் சேவையை ஆரம்பித்தது லைக்கா. லைக்கா, ஞானம், லைபரா போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு பேசலாம் என்று இந்த அகதி மக்களிடம் விளம்பரம் செய்து கல்லா கட்டுகின்றன. லைக்கா, லெபராவின் தாய் நிறுவனமான ஞானம் இதில் முன்னோடி.”
இதில் லைக்காவின் திறமை அல்லது மோசடி என்ன?
“மலிவு விலையில் சேவையை வழங்கும் ஒரு நிறுவனம் நஷ்டமடைவதில்லை. மாறாக, பல கோடி இலாபம் சம்பாதிக்கின்றது என்ற உண்மை பலருக்கு உறைப்பதில்லை. ஒரு பொருளை மலிவு விலையில் வழங்கினால், அது பெருமளவில் விற்பனையாகும். ஆனால், என்றைக்குமே அதன் கொள்முதலுக்கு ஆகும் செலவு, அதை விடக் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், லைக்காவோ வேறு சில குறுக்கு வழிகளால், அதிக இலாபம் சம்பாதித்து வருகின்றது. லைக்கா நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை எனக்குத் தெரியும் என்பதால், அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். மற்றபடி, லெபரா, ஞானம் எல்லாம் இந்த மோசடிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.
லைக்கா நிறுவனத்தின் விளம்பரங்களில், எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கும் அட்டையில், குறிப்பிட்டளவு நிமிடங்கள் முன் கூட்டியே ஒதுக்கப் பட்டிருக்கும். ஆனால், அந்த அட்டையை ஒரு தடவையில் பாவித்தால் மட்டுமே, அந்தளவு நிமிடங்களும் கிடைக்கும். அதற்குள்ளும், இணைப்பு வழங்குவதற்கான ஆரம்பக் கட்டணம். நீங்கள் அந்த அட்டையை வைத்திருந்து, வெவ்வேறு அழைப்புகளை எடுத்து, துண்டு துண்டாக பிரித்து பாவித்தால், கணிசமான அளவு ஒதுக்கப் பட்ட நிமிடங்கள் காணாமல் போய் விடும்!
நிமிடங்களை திருடுவதற்காக பயிற்றப்பட்ட ஊழியர்கள், லைக்கா தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார்கள். எந்தெந்த நாட்டு அழைப்பிற்கு, எந்தெந்த தொகை வெட்டி எடுக்க வேண்டும் என்று, அதற்காக மென்பொருள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான லைக்கா பாவனையாளர்களுக்கு இந்த உண்மை தெரியும்.” – என்கிறார் தோழர் கலையரசன்.
இத்தகைய மோசடிக்கேற்பவே லைக்காவின் அலுவலகங்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சந்து பொந்துகளில் இருப்பதோடு அடிக்கடி இடத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள். இவர்களின் மோசடியை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்கும் போது லைக்காவின் தொலைபேசி அட்டைகளை விற்கும் சில்லறை வணிகர்கள்தான் மாட்டிக் கொள்கிறார்கள். பலர் மக்களிடம் அடியும் பட்டுள்ளனர்.
அந்த வகையில் லைக்கா வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களையும் சுரண்டுகிறது. லைக்கா சிம் அட்டைகளை தெருவில் நின்று கூவிக் கூவி பத்து மணி நேரம் விற்க வேண்டும். லைக்காவின் மோசடியை அறிந்தவர் யாரும் வந்தால் அவர்களிடம் திட்டுக்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். லைக்கா மற்றும் லெபரா நிறுவனங்களை கொள்ளைக் கோஷ்டிகள், மற்றும் மாஃபியா குழுக்கள் என்று மக்கள் திட்டுவதை தன் காதாலேயே கேட்டிருப்பதாக கலையரசன் கூறுகிறார்.
பல்வேறு நாட்டு அகதிகளைக் கவர்வதற்காக அந்தந்த நாட்டு அகதிகளையே விற்பனை பிரதிநிதிகளாக அமர்த்தும் லைக்கா நிறுவனம் அவர்களுக்கு பிரிட்டனின் குறைந்த பட்ச ஊதியத்தை கொடுப்பதற்கு பதில் அந்தந்த நாடுகளின் குறைந்த பட்ச ஊதியத்தையே கொடுக்கிறது. பத்து சிம்கார்டுகளை விற்றால்தான் அவர்களுக்கு போக்குவரத்து செலவு கிடைக்கும். விற்கவில்லை என்றால் கைக்காசை போட்டு அவர்கள் வீடு திரும்ப வேண்டும். அதாவது அவர்கள் சுபாஷ்கரனிடம் வேலை பார்ப்பதற்காக தமது பணத்தை செலவழிக்க வேண்டும்.
விற்பனைப் பிரதிநிதிகளை நேரடியாக லைக்கா அமர்த்தாமல் அதற்கென்றே பினாமி முகவர் நிறுவனங்களை பயன்படுத்துகிறது. இந்த திடீர் நிறுவனங்கள் ஒரிருவரைக் கொண்டு நடத்தப்பட்டு ஒரு வருடத்திற்குள்ளேயே மறைந்து போய்விடும். அதற்குள் அதில் பல மோசடிகள், வரி ஏய்ப்பு முடிந்து அதே நபர் புதிய இடத்தில் புதிய பெயருடன் திறப்பார்.
இப்படிச் சுரண்டப்பட்ட பணத்தைக் கொண்டு தமிழ்ப்படங்களைத் தயாரிப்பதோடு ராஜபக்சேவின் தொழில் கூட்டாளியாக இலங்கையிலும் முதலீடு செய்திருக்கிறது லைக்கா. அதைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்!
லைக்காவின் கரம் இங்கிலாந்து கட்சிகள், அரச குடும்பம், தமிழ் சினிமா, கமல் – ரஜினி படங்கள் என்று இறுதியில் இலங்கையிலும் நீள்கிறது!
- தொடரும்.
– இளநம்பி
(வினவு புலனாய்வு குழு உதவியுடன்)
பாகம் 1: கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா
ஆதாரங்கள்:
Tory donor Lycamobile in £26m tax dispute
MPs to question HMRC on refusal to aid French inquiry into top Tory donor
The UK Refused To Raid A Company Suspected Of Money Laundering, Citing Its Tory Donations
Lycamobile’s opaque tax affairs confounding its own auditors
The UK Refused To Raid A Company Suspected Of Money Laundering, Citing Its Tory Donations
சமூகவிரோதி ரஜனிக்கும், தூத்துக்குடிப் படுகொலைகளை நடத்திய வேதாந்தாவிற்கும் என்ன தொடர்பு?
The Rajapakse ‘connection’ and a multi million dollar deal