” பொம்மிஸ் பெருமையுடன் வழங்கும் ’அவள் விருதுகள்’
பெண்ணென்று கொட்டு முரசே! இது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த சாதனைப் பெண்களின் சங்கமம்! அனைவரும் வருக! ”
கடந்த மார்ச் 14, 2018, அன்று சென்னை வர்த்தக மையத்தில் விகடன் குழுமம் நடத்திய ’அவள் விருதுகள்’ – ’சாதனை பெண்களின் சங்கமம்’ என்ற நிகழ்ச்சியின் பேனர் தாங்கி நின்ற வாசகம்தான் இது.
கிண்டி கத்திப்பாரா தொடங்கி நிகழ்ச்சி நடக்கும் வர்த்தக மைய கட்டிடம் வரை வழி நெடுக ஒரே கட்டவுட்டாக இருந்தது. விளம்பரத்துக்கான கட்டவுட்டின் ஒரு பகுதியில் சாதனை பெண்களான நடிகை, பாடகி, அரசியல்வாதி, சமூக சேவகி, இன்னும் பிற அறியப்படாத முகங்களும் புகைப்படங்களாக இருந்தன. மறு பகுதியில் இந்நிகழ்ச்சியை வழங்கும் விளம்பர நிறுவனங்களின் பெயர்களும் இருந்தன.
விளம்பர பேனரில் சாதனைப் பெண்களின் எண்ணிக்கையை விட விளம்பரங்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதிலும் பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள்தான் இந்நிகழ்ச்சியை வழங்குகின்றன.
உள்ளே வரும் கார்களுக்கு வணக்கம் வைத்து வரவழைத்தவர்களிடம் “சார் நானும் நிகழ்ச்சிய பாக்கணும், உள்ள போக ஏதாவது வரைமுறை இருக்கா?” என விசாரித்தேன். ”பாஸ் இருக்கணும்” என்றனர்.
பாஸா!…. இல்லாத பாஸ எங்கிட்டு தேட? விழாக் கூடத்தின் வாசல் வரை முயற்சி செஞ்சும் ’சாதனை பெண்களின் சங்கமத்தை’ பாக்க முடியல.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை ’ஓவியா ஆர்மி’யையே உருவாக்க வைத்தற்காக ஓவியா, பதினெட்டு வருடம் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தற்காக ஜோதிகா, அழுகை ஆர்பாட்டம் இல்லாத நவீன நடிப்பை தருவதற்காக ஆன்ட்ரியா, இந்த அடிப்படையில் சாதனை பெண்களை அடையாளம் கண்டுள்ளது ’அவள் விகடன்’.
இவர்கள் எல்லாம் ஒளி வெளிச்சத்தில் மின்னும் மின்மினிகள். உழைப்பின் வலியோடு போராடும் வாழ்க்கையோடும் சாகும் வரை உறுதிபட எதிர் கொள்பவர்களே நம் பார்வையில் சாதனைப் பெண்கள். இதெல்லாம் “அவள் விகடனு”க்குத் தெரியாததல்ல. முன்னோடிப் பெண்கள் என்று அவர்கள் காட்ட விரும்புவது எளிய மக்களை அல்ல!
எத்தனை திறமை இருந்தாலும் ஏழ்மையை எதிர் கொள்வதிலேயே பல பேருக்கு முழு வாழ்க்கையும் போராட்டமாக அமைந்து விடும். அன்றாட பசியை போக்குவதே சாதனையாகிவிடும். கத்தியில் நடப்பது போலான இந்த வாழ்க்கையில் ஒரு நாள் பொழுது கழிவதே பெரும்பாடு. நாளைக்கேனும் சோறு கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு இன்றைய இரவை கழிப்போர் எத்தனையோ பேர்.
இவர்களையெல்லாம் வலை வீசி தேடிப் பார்க்க வேண்டியது கிடையாது. அவர்கள் நம் அருகே எல்லா இடங்களிலும் எப்போதும் வாழ்கிறார்கள். “அவள் விகடன்” பேனர் தாங்கிய சென்னை நகரம் முழுவதும் அவர்கள் ஊடக உலகம் அங்கீகரிக்க மறுக்கும் சாதனையை ஒவ்வொரு நிமிடமும் நிகழ்த்தி வருகிறார்கள். இவர்களெல்லாம் நாடாண்டால்தான் இந்தியா சாதனை படைக்கும்! ஓவியா, ஜோதிகா சாதனைகளால் என்ன கிடைக்கும்?
பாஞ்சாலி பாட்டி – ஆடு மேய்ப்பவர்
இந்த கிண்டிய ஒட்டின பகுதிலதான் ஆடு மேச்சுகினு என் பொழப்பு ஓடுது. பொறந்ததும் இங்கதான், வாக்கப்பட்டதும் இங்கதான். ஆடு மாடுதேன் எங்க சொத்து. கிண்டியாண்ட ஆரம்பிச்சு தாம்பரம் தாண்டி மேச்சுகினே போலாம். இப்ப மில்ட்ரி, ஏர்போட்டு, பெரிய ஆபிசுங்கன்னு அடைச்சிட்டதால செரமாமாருக்கு.
ரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. நடு ராத்திரி திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன். ஆடு எல்லாத்தையும் மாடி மேல ஏத்துன பிறகுதான் நானும் போனேன்.
அரசாங்கம் குடுத்த அரிசிப் பருப்பும் பாயும் தலையணையும் வச்சுகிட்டு இன்னைக்கி வரைக்கும் குடும்பம் நடத்த முடியுமா?
பவானி, தாம்பரம். துப்புரவு தொழிலாளி
எங்க வீட்டுக்காரு வேலையதான் நான் பாக்குறே. அவருக்கு ஒடம்புக்கு முடியல. லீவு போட்டா சம்பளம் தரமாட்டாக. அதனால அவருக்கு பதிலா நானு வந்து வேலை செய்றேன். அவருக்கு வேலை போச்சுன்னா எங்குடும்பத்துல அஞ்சு பேரும் பட்டினிதான்.
எனக்கு ரத்தப் போக்கு அதிகமா இருக்கும். தலைக்கு ஊத்திகினா 20 நாளைக்காவது தீட்டு வந்துகினே இருக்கும். என்னால எந்த வேலைக்கும் போக முடியாது. எம்புருசன் சம்பாத்தியம் மட்டும் தான். அவரு லீவு போட்டா நானு வந்து செய்வேன். இல்லன்னா வீட்டு வேலைய பாத்துகினு இருந்துருவேன்.
அறிவுச்செல்வி மேடவாக்கம். சோளம் விற்பவர்.
எனக்கு மூனு பசங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு குடுத்துட்டேன். அடுத்து பையன் 11-வது படிக்கிறான். அடுத்த பொண்ணு 9-வது படிக்கிறா. எங்கூட்டுக்காரு வேற ஏறியாவுல கடை போட்டுருக்காரு.
மூத்த பொண்ணுக்கு கல்யாணம் முடிக்கிற வரைக்கும் நான் எங்கையும் வேலைக்கி போனதில்ல. எங்கூட்டுக்காரு சாம்பாதிச்சுட்டு வருவாரு, நான் வீட்ட பாத்துப்பேன். எம்பொண்ணுக்கு வாங்குன கல்யாண கடனுக்கு வட்டி கட்டி எங்களால மீண்டு வரமுடியல. அதனாலதான் நானும் தொழிலுக்கு வந்துட்டேன். இந்த கடன அடைக்கிறதுக்குள்ள, அடுத்து பொண்ணு கல்யாணம், பய படிப்புன்னு என்ன செய்யப் போறேன்னே தெரியல.
விஜயா கோடம்பாக்கம். வீட்டு வேலை செய்பவர்.
இன்னைக்கி நான் சந்தோசமா இருக்கேன் இனிப்பு எடுத்துக்குங்க. (மிட்டாய் கொடுத்தார்) எம் பொண்ணு பி.இ முடிச்சுட்டு வேலைக்கி போயி நேத்துதான் முதல் மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம் வாங்கிட்டு வந்தா. என்னோட கவலையெல்லாம் தீந்துட்டு. இருவது வருசத்துக்கு முன்ன அறியாத பிள்ளைய வச்சுகிட்டு திண்டாடி நின்னேன். நம்பிக்கைய எழந்துட்டமின்னா எழுந்திருக்கவே முடியாது போயிருமுன்னு மனசுல தைரியத்த வளத்துகிட்டு எம்பிள்ளைய படிக்க வச்சு சாதிச்சுட்டேன்.
எம்பொண்ணு அஞ்சு வயசாருக்கும் போது என்ன புடிக்கலன்னு சொல்லிட்டு வேற ஒருத்திக்கூட ஓடிட்டான் எம்புருசன். ஏழட்டு பேரோட பொறந்த நான் வசதி வாய்ப்பு இல்லாமெ ஒம்பது வயசுல வீட்டு வேலை பாக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கி வரைக்கும் பாத்துகிட்டே இருக்கேன். பத்து வருசமா ஆபீஸ்ல ஆயா வேல பாக்குறேன். அது போக ரெண்டு வீட்டுலயும் பாக்குறேன். கடன் வாங்கி சீட்டு போட்டு எப்படியோ படிக்க வச்சுட்டேன். பாதி கடனையும் அடச்சுட்டேன். மறுபடியும் சொல்றேன் இன்னைக்கி நான் சந்தோசமா இருக்கேன்.
ஜோதியம்மா,பழம் விற்பவர், நுங்கம்பாக்கம்.
எனக்கு எழு பிள்ளைங்க. எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ளேருந்து இந்த யாவரம்தான். இப்ப எம்பிள்ளைங்க பேரப்பிள்ளைங்க எல்லாருமே இந்த மார்கெட்டுலதான் வியாபாரம் பாக்குறோம். பூ, பழம், வேர்க்கடலை, கீரை ஆளுக்கொன்னா விப்போம். வித்து முடிச்ச ஆளுங்க விக்காதத எடுத்துட்டு போயி விக்கணும். எம்பிள்ளைங்களுக்கு தொணையா குந்திகினுருக்கேன்.
முனியம்மா, கிண்டி, பூ விற்பவர். (உள்படம் – காப்பு காய்ச்சிய அவரது கைகள்)
எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ரொம்ப வருசத்துக்கு முன்னயே வீட்டுக்காரு செத்துட்டாரு. இந்த பூக்கட்டிதான் பொண்ணுங்கள கர சேத்தேன். ஒரு மருமகன் குடிகாரன் வாழ வைக்காமெ வெரட்டி விட்டுட்டான். பேத்தியோட வந்து எங்கூடதான் இருக்கா. 12 வருசமா நான்தான் பாத்துக்கிறேன். இப்ப பேத்திய பொண்ணு பாத்துட்டு போயிருக்காங்க. கல்யாணத்துக்கு 50,000 ரூவா செலவாகும். வட்டிக்கிதான் கேட்டிருக்கேன். பூக்கட்டி கட்டி கையெல்லாம் காச்சுருந்தாலும் ஒரு நாள் ஒடம்புக்கு முடிலன்னு படுக்க மாட்டேன். அதனால நம்பி பணம் குடுப்பாங்கன்னு காத்துருக்கேன்.
சரோஜா, மடுவாங்கரை, தர்பூசணி விற்பவர்.
ரெண்டு பிள்ளைங்கள பெத்தேன். ரெண்டும் கைவிட்டுட்டுதுங்க. பத்து வருசத்துக்கு முன்னமே புருசன் போயி சேந்துட்டாரு. இப்ப யாரும் இல்லாத அனாதையா இருக்கேன். கடன் தொல்லை எதுவும் இல்ல. வர்ற வருமானத்துல 1000 ரூபா வீட்டு வாடகை போக சாப்பாட்டுக்கு வந்துரும். ஒடம்புக்கு முடியலன்னா ஒரு சுடுதண்ணி வச்சுக் குடுக்கவோ ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போகவோ யாருமே கெடையாது.
- வினவு புகைப்படச் செய்தியாளர்.
இந்த பெண்கள்தான் உண்மையான தன்னம்பிக்கையுள்ள, தைரியமான சாதனைப் பெண்கள்.உழைக்கும் சாதனைப் பெண்கள்தான் ஒட்டுமொத்த மனிதகுல முன்னோடிகள்.எளிமையான அருமையான கட்டுரை
மின்னொளியில் மினுமினுக்கும் வண்ணப் பூச்சிகளை வட்டமிட்டுக்காட்டும் விகடனும் ’சாதனைப் பெண்களும்’ சமூகத்தின் கேடு. இருட்டு சமூகத்திற்குள் தங்கள் வாழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் உழைக்கும் பெண்களே சமூகத்தின் ஆக்கம். வினவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.