privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரசு:அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! - 3

அரசு:அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 3

-

அரசு:அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! பகுதி -3

ரசியல்வாதிகளும், முதலாளிகளும் இணைந்த ஒரு ஒட்டுவகைப் (ஒட்டு மாங்காய் போல) பிரிவினர் தான் இன்று கட்சிகளையும் அரசுகளையும் ஆள்கிறார்கள்; நிர்வகிக்கிறார்கள். இதன் விளைவாக அரசு சொத்துக்களையும், அரசு கஜானாவையும், நாட்டின் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் சட்டபூர்வமாகவே, கொள்கை முடிவுகளின்படியே பகற்கொள்ளையடிப்பது அதிகரித்து வருவதோடு, இவர்களின் வரிஏய்ப்பு, தில்லுமுல்லுகளும் அதிகரித்துள்ளன. இவற்றில் புதுப்புது நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளில் ஈட்டப்படும் கருப்புப் பணமும் பன்மடங்கு பெருகிவிட்டது. அவற்றை வெளிநாடுகளுக்குக் கடத்தும் ஹசன் அலி போன்ற ஹவாலா ஏஜெண்டுகளும், நீரா ராடியா போன்ற அரசியல் தொழில் புரோக்கர்களும், அவர்களின் செல்வாக்கும் அதிகார பலமும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

ஹசன் அலி ஒரு நபர் அல்ல; அவனுக்குப் பின்னால் கார்ப்பரேட் முதலாளிகள், மத்திய-மாநில அமைச்சர்கள், தேசியக் கட்சிகளின் பெருந்தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள், நீதிபதிகள், ஆயுதக் கடத்தல்-போதை மருந்து கடத்தல் கும்பல்கள் ஆகியவர்கள் உள்ளனர். அவன் மீது கைவைத்தால் இந்த அத்தனை சக்திகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்; ஹசன் அலியும் அவனது கூட்டாளிகளும் ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளனர். அவன் தாவூத் இப்ராஹிமுடனும் ஆயுதக் கடத்தல் பேர்வழி ஆதனன் கஷோகியுடனும் தொடர்பு வைத்துள்ளான். 35,000 கோடி ரூபாய்களை ஹவாலா வழிமுறை மூலம் (அதாவது சட்டவிரோதமான பணப் பரிமாற்றத்தின் மூலம்) வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளான் என்று அரசாங்கமே குற்றம் சாட்டியுள்ளது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 10-03-2011); 1984-ல் ஒரு டாக்டர் மீது ஆசிட் வீசித் தாக்கிய வழக்கு ஹசன் அலி மீது உள்ளது. இந்த வழக்கு தொடர்பான பதிவேடுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசு சொல்லியுள்ளது. 2008-ல் மூன்று பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்ததாக இவன் மீது வழக்கு உள்ளது.

ஹசன் அலி, நீரா ராடியா
கருப்புப் பண மற்றும் ஹவாலா கடத்தல் பேர்வழி ஹசன் அலி மற்றும் அதிகாரத் தரகர் நீரா ராடியா. (கோப்புப் படம்)

தற்போது குதிரைப் பண்ணை அதிபராக உள்ள ஹசன் அலியின் வருமானம் ஆறு ஆண்டுகளில் 54 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2001-02-ம் ஆண்டில் இவனது ஆண்டு வருமானம் 528.9 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அடுத்த ஆண்டில் (2002-03-ல்) 5404 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பின்னர் 2006-07-ம் ஆண்டு 54,268 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (தினமலர், 21-03-2011). 2002-லிருந்து 2006-ம் ஆண்டுக்குள் – அதாவது நான்காண்டுகளில் அவனது வருமானம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

சாதாரணமாக இதே விகிதத்தில்தான் அவனது சொத்து அதிகரித்திருக்கும் என்று கணக்கிட்டால் கூட, 2006-லிருந்து 2010-ம் ஆண்டிற்குள், அதாவது அடுத்த நான்காண்டுகளில் இன்னும் ஒரு 10 மடங்கு அதிகரித்து 2010-ம் ஆண்டில் அவனது வருமானம் 5,40,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என்று சொல்லலாம். எனவேதான், அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகள் அவன் மீது வழக்குகள் போடவே தயங்குகின்றன; மரியாதையுடன் அழைத்து வந்து பிஸ்கட், டீ தந்து விசாரித்து விட்டு மரியாதையாக அனுப்பி வைக்கின்றன.

அம்பலமானது ஒரு ஹசன் மட்டுமல்ல, அம்பலம் ஆகாமல் பல ஹசன் அலிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். விசாரணை அமைப்புகள் இவனைப் போன்றவர்கள் மீது காரசாரமில்லாத குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும்; நாட்டின் திறமை வாய்ந்த வழக்குரைஞர்கள் இவர்களுக்காக வாதாடுவார்கள். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று உச்சநீதி மன்றமே இவர்களை விடுதலை செய்யும்.

ஹசன் அலிகளையும் நீரா ராடியாக்களையும்; அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகார வர்க்கத்தினரையும்; சி.பி.ஐ.யையும், தலைசிறந்த வழக்குரைஞர்கள், உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகளையும் தங்களது செல்லப் பிராணிகள் போல் ஊட்டி வளர்க்கும் ஒரு புதிய ஒட்டுவகை ஆளும் வர்க்கக் கட்சிகளுடைய ஏதோவொரு கூட்டணிதான் இத்தேர்தல்களில் ஆட்சிக்கு வரும். இவர்களின் ஒரே நோக்கமே மக்கள் பணத்தையும் நாட்டின் வளங்களையும் பகற்கொள்ளையடிப்பதுதான்!

எனவே, இன்றைய நிலையில் முதலாளித்துவ தேர்தல் முறையில் மக்கள் ஏதாவது ஒரு கோடீசுவரனைத்தான் எம்.எல்.ஏ.ஆகவோ, எம்.பி.ஆகவோ தேர்ந்தெடுக்க முடியும். கோடீசுவரர்கள்தான் அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் பிரதமர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் நோக்கம் – செயல்பாடுகள் பற்றி மேலே பார்த்தோம். இப்படிப்பட்ட கோடீசுவரர்களால், கோடீசுவரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சி, மக்கட்தொகையில் ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்காகப் பாடுபடும் என்பது நடக்கவே நடக்காது.

கார்ப்பரேட்டுகள் மீதான அரசு அதிகாரம் விலகுதல்;   அரசின் மீதான கார்ப்பரேட் அதிகாரம் இறுகுதல்.

தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் டெல்லியில் நடத்திய ஆலோசனைக் கூட்டம் (கோப்புப் படம்). அதிகார வர்க்க நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தகைய ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் கமிட்டிகள்தான் இப்பொழுது அரசின் இடத்தில் அமர்ந்துகொண்டு கேந்திரமான பொருளாதாரத் துறைகளை நிர்வகித்து வருகின்றன.

ஆறாவதாக, ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் உலக மேலாதிக்கம் மற்றும் உலகமயமாக்கலின் கீழ் ஒரு புதியவகை காலனியாதிக்கம் – அதாவது, மறுகாலனியாக்கம், இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் அமல்படுத்தப்படுகிறது. தங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள தேசிய அரசு, தேசங்களின் இறையாண்மை, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்டுள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து அரசமைப்பை முடக்கி அவற்றைத் தங்களின் (சர்வதேசியமாகியுள்ள ஏகாதிபத்திய நிதிமூலதனம் மற்றும் மேல்நிலை வல்லரசுகளின்) ஆணைக்கு ஆடும் கைப்பாவைகளாக மாற்றி உள்ளன. இவற்றின் கருவிகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவைதான் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக அரசாங்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன; ஆட்டுவிக்கின்றன.

சந்தைக்கு எல்லாம் தெரியும் என்ற புதிய தாராளவாத முழக்கத்தின் அடிப்படையில், சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான அரசியல் ரீதியான உறவை, முதலாளிக்கும் நுகர்வோனுக்கும் இடையிலான பொருளாதார உறவின் சட்டகத்தில் வைத்து, குடிமகனின் அரசியல் உரிமையை, நுகர்வோனின் பொருளாதார உரிமையாக மாற்றும் புதிய அரசியல் வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. வேலையின்மை, வறுமை, தற்கொலைகள் போன்ற அனைத்தும் பெருகி வருவதற்கு ஊழல், அயோக்கிய அரசியல்வாதிகள்தான் காரணம் என்றும், தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் அறிந்த அதிகார வர்க்கத்தினரிடம் கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதன் மூலமே இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதிகார வர்க்கத்தின் கையில் முடிவெடுக்கும் அதிகாரங்களும் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

கழிவுநீர் அகற்றுதல், குப்பை வாருதல் தொடங்கி கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் மற்றும் பொதுத்துறையைச் சீரமைத்தல், தனியாருக்கு விற்றல் – ஆகிய அனைத்து பிரச்சினைகள் தொடர்பான முடிவுகள் எடுக்கும் அதிகாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிறுவனங்கள் சார்ந்த வல்லுனர்களிடம் விடப்படுகின்றன.

மேலும், ஜனநாயக அமைப்பிற்கு வெளியே இந்நிறுவனங்கள் இருப்பதால், தமது முறைகேடுகள் தொடர்பாக மக்களுக்குச் சம்பிரதாயபூர்வ விளக்கத்தினைக்கூட இவை அளிப்பதில்லை. இந்நிறுவனங்கள் அளிக்கின்ற ஆய்வறிக்கைகள் நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்குமே இரகசியமாக்கப்பட்டு, அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள் என்ற வட்டத்திற்குள்ளேயே புதைந்து விடுகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து அதிகார வர்க்கத்தையும் மக்களுக்குப் பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோரையும் விடுவித்து விடுவதன் மூலம் அம்மணமான கார்ப்பரேட் அதிகார வர்க்கத்தின் ஆட்சியே இன்று இந்தியாவில் நடந்து வருகின்றது. கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் மீது அரசு ஏற்கெனவே விதித்திருந்த கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜனநாயக அமைப்பின் அதிகாரத்திலிருந்து கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

தேசிய ஆலோசனை கவுன்சில்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சோனியா தலைமையில் இயங்கி வந்த தேசிய ஆலோசனை கவுன்சில் குடிமைச் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரபலங்களைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும், முதலாளி வர்க்கத்தைக் கண்காணித்து நெறிப்படுத்தும் துறைகளிலும் அரசு எந்திரம் வெட்டிக் குறைக்கப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் புதிய தேவைகளை ஈடு செய்யும் திசையில் அதிகார வர்க்கமும் போலீசும் இராணுவமும் மென்மேலும் பெருக்கப்படுகிறது. மேலும் பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு இலாக்காகளிலும் மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும் ஆட்குறைப்பு மற்றும் அவுட்சோர்சிங் முதலான முறைகளைப் புகுத்தி அரசு நிர்வாகமும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. கார்ப்பரேட் முதலாளிகளும் ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்களும் அரசின் இயற்கையான கூட்டாளிகள் என்று முன்வைக்கப்பட்டு, அவர்கள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

அரசு அதிகார நிறுவனங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அரசு சாரா வல்லுனர்கள், தன்னார்வ குழுக்களின் இயக்குனர்கள் பங்கேற்கின்றனர். அரசுப் பணிகள் தனியாருக்கு அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன. அரசுத்துறை தனியார்துறை கூட்டுத் திட்டங்கள் பெருகி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. முன்பு அரசு ஏகபோகமாக இருந்து வந்த தொலைபேசி, மின்சாரம் போன்ற துறைகளில் அத்துறைகளுக்குரிய அமைச்சரவைகளுக்கு வெளியே, அதற்கும் மேலே, சுயேச்சையான அதிகாரம் கொண்ட ’ஒழுங்குமுறை ஆணையங்கள்’ உருவாக்கப்பட்டு, அதன்மூலம் அரசுத்துறைகளை திட்டமிட்டு நட்டப்படுத்தி, அப்புறம் அவற்றை ஒழிக்கும் சதித்திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் தனியார் முதலாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், அத்தகைய உறவுகள் முறைகேடானவை என்றும், நடவடிக்கைக்கு உரியவை என்றும் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டு வந்த மரபுகள் கைவிடப்பட்டிருப்பது மட்டுமல்ல, பொருளாதாரக் கொள்கை முடிவுகள் எடுக்கும் முன்னர் எஃப்.ஐ.சி.சி.ஐ., சி.ஐ.ஐ. போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சங்கங்களை அரசே அழைத்து கலந்தாலோசிக்கிறது. மக்கள் நலனையும் மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளிவிட்டு, சமூகத்தின் பிரதிநிதியாகவும் அரசு அதிகாரத்தின் அங்கமாகவும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் வர்க்கத்தை நியமிக்கும் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக ’கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்ச்சி’ என்ற புதியதொரு கோட்பாடு புகுத்தப்பட்டுள்ளது.

13-state-captionவேர்மட்ட ஜனநாயகம் என்ற பெயரில் ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற அதிகார மையங்களாக ஆக்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியங்களின் கண்களாகவும் காதுகளாகவும் விளங்கும் இந்த ஐந்தாம்படை அமைப்புகள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக மாற்றப்பட்டுள்ளன. மேலிருந்து கீழ் என்ற அதிகாரப்படிநிலை முறை நிராகரிக்கப்பட்டு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய சர்வதேச நிதிநிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளைப் புறந்தள்ளி நகராட்சிகளையும் ஊராட்சிகளையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு திட்டங்களை அமல் நடத்துகின்றன. அவற்றிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகளை முனை  மழுங்கச் செய்கின்றன.

நீர்வள மேம்பாடு, சாலை போடுதல், கல்வி, காடுவள நிர்வாகம், உள்கட்டுமானப் பணிகள் போன்ற இதுகாறும் அரசின் பொறுப்பு, கடமை என்று கூறப்பட்டு வந்த துறைகள் பலவற்றிலும் தனியார்துறை புகுத்தப்பட்டுள்ளது. நேரடியாக பொதுநலனுடன் தொடர்புள்ள இந்தத் துறைகளிலெல்லாம் தனியார் புகுத்தப்படுவதால், பொதுச் சொத்துக்கள் கார்ப்பரேட் முதலாளி வர்க்க ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டு மக்கள் இவற்றின் மீது எந்தவிதத்திலும் உரிமை கோர இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

மாறியுள்ள உலக நிலைமையில் தமது முழு ஆற்றலையும் வெளிக் கொண்டுவர வேண்டுமானால், அரசுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள், இன்னபிற அரசு சார் நிறுவனங்களைத் தன்னாட்சி கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும் என்ற புதிய தாராளவாதத்தின் கோரிக்கையும் அமலாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இவற்றுக்கான அரசு மானியங்களை வெட்டுவது மட்டுமின்றி, நாட்டின் பொதுத்தேவையின் அடிப்படையில் வகுக்கப்படும் திட்டங்களுக்கு சேவை செய்வதாக இந்த அமைப்புகள் இருப்பதும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் இலாபமீட்டும் முதலாளித்துவ நிறுவனங்களைப் போலவே மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. பன்னாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ நிறுவனங்கள் இவற்றை நேரடியாக தொடர்பு கொண்டு தம் தேவைக்கான ஆய்வுகளைச் செய்யும் ஆய்வுக் கூடங்களாகவும், தமக்குத் தேவைப்படுகின்ற துறைகளிலான பட்டதாரிகளை உருவாக்கித் தரும் பட்டறைகளாகவும், தமது வர்த்தக முகவர்களாகவும் பரப்புரையாளர்களாகவும் இவற்றை மாற்றியமைத்துள்ளன.

சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள்
சென்னை மாநகராட்சியின் சில மண்டலங்களில் குப்பை அகற்றும் பணிகளைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து ரிப்பன் மாளிகை முன்பு சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

சாராம்சமாகச் சொன்னால், மக்கள் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, நிலைநாட்டுகின்ற அறுதி அதிகாரம் என்ற தகுதியிலிருந்து அரசு மெல்ல மெல்ல அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. தமது அடிப்படைத் தேவைகளையும் கவுரவமான வாழ்க்கையையும் பெற முடியாத குடிமக்களுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்பதைக் கருத்தளவில்கூட மறுகாலனியாதிக்க கொள்கைகள் ஏற்பதில்லை. மாறாக, குடிமக்கள் அனைவரையும் நுகர்வோராகவும், எனவே, தமக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை விலைகொடுத்து வாங்கிக் கொள்ள கடமைப்பட்டவர்களாகவுமே அது கருதுகிறது. கல்வி, மருத்துவம், தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளும், சாலைகள் முதலான சேவைகளும் வணிகப் பொருட்களாக மாற்றப்பட்டு விட்டன. இதனால் குடிமக்களின் பாலான தனது கடமைகளிலிருந்தும் அரசு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.

சமூக ரீதியான தீர்வுகளைக் கோருகின்ற சிக்கல்களுக்கு சமூக ரீதியான தீர்வுகளை மறுத்து, தனிப்பட்ட தீர்வுகளை மக்களே தங்களது சொந்த பொறுப்பில் செய்து கொள்ளுமாறு மாற்றப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பற்றாக்குறை போன்று சூழலியல் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு மழைநீர் சேமிப்புத் திட்டம், புவி சூடேறுதல் பிரச்சினைக்கு கார்பன் வர்த்தகம், விவசாயத்தின் நசிவால் பெருகியுள்ள கிராமப்புற வறுமை – கடன் சுமைக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அணைக்கட்டுகள் அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றிற்காக கிராமம் கிராமமாக அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு ஒரு சமூகம் என்ற வகையில் மறுவாழ்வு வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்குத் தனிப்பட்ட ஈட்டுத்தொகை வழங்குதல் என எல்லாப் பிரச்சினைகளிலும் தனிப்பட்ட தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் ஒரு சமூகம் என்ற வகையில் அரசியல் ரீதியாகச் சிந்திக்கவும் திரளவும் விடாமல் மக்களின் சிந்தனையையே மறுகாலனியாதிக்க கொள்கைகள் விலங்கிட்டு வைத்துள்ளன.

அதற்கேற்ப இவ்வாறு மறுகாலனியாதிக்க முறையிலான சுரண்டல் ஆதிக்கத்தின் கீழ், இந்திய அரசின் கட்டுமானம், அதன் பாத்திரம், செயலாற்றும் முறைகள், சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளைக்கான ஒரு கருவியாக வெளிப்படையாகவே பறைசாற்றிக் கொள்ளும் அரசாக, சோசலிசம், காந்தியம், சமூகநீதி போன்ற பாசாங்குகள் எதுவும் இல்லாமல், நிலையான ஆட்சியை நிலைநாட்டும் வலுவான அரசாங்கம் என்ற இலச்சினை பொறித்த அரசாக மாற்றப்பட்டு விட்டது.

(தொடரும்)
______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க