Thursday, December 5, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?

-

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப்   போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.  உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும்  அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான்.  “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.

‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங்.  “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.

மன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார்.  “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது.  இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்?”  இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் கதையைப் பிறகு பார்ப்போம்.  ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.

மைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது.  “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான்,  வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.

எவ்வளவு டன் உணவு கெட்டுப் போயிருக்கக்கூடும் என்ற வாதப்பிரதிவாதம் ஒருபுறமிருக்கட்டும்.  யானையை வாங்கியவன் அதனை அடக்க அங்குசத்தை வாங்க மறந்துவிட்ட கதையாக, 6   கோடி டன் அளவிற்குக் கொள்முதலை நடத்தியிருக்கும் அரசு, அதனைச் சேமித்து வைக்க இந்திய உணவுக் கழகத்திடம் கிடங்குகள் இல்லை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  இப்பொழுது இதற்குத் தீர்வாக, இந்த அபரிதமான கையிருப்பைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கத் தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுக்கப் போவதாக மைய அரசு கூறியிருக்கிறது.

உணவு மானியத்தைக் குறைப்பதற்காக, தானியக் கொள்முதல் செய்வதிலிருந்தும் கிடங்குகளைக் கட்டுவதிலிருந்தும் அரசு விலகிக் கொள்வது; அரசுக்குப் பதிலாக இந்நடவடிக்கைகளில் தனியாரை அனுமதிப்பது என உலக வங்கி இந்தியாவில் தனியார்மயம் புகுத்தப்பட்ட காலத்தில் இருந்தே கட்டளையிட்டு வருகிறது.  ஓட்டுப் பொறுக்கும் அரசியல் காரணங்களுக்காகத் தானியக் கொள்முதலை முழுவதும் கைவிடாத அரசு, சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தானிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுவதைக் கைவிட்டதோடு, அதனைத் தனியாரிடமும் ஒப்படைத்தது.  இன்று 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுதவற்கு இந்த உலக வங்கியின் கட்டளையும், அதனைச் சிரமேற்கொண்டு செயல்படுத்திய ஆளும் கும்பலும்தான் காரணம்.

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்!

இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.

இந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங்    தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்?  இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது?

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக உயர்ந்துகொண்டே செல்லும் இத்தருணத்தில், மன்மோகன் சிங் தன்னிடம் உள்ள கையிருப்பை ரேசன் கடைகளின் மூலமோ அல்லது வெளிச் சந்தையின் மூலமோ புழக்கத்துக்குக் கொண்டு வந்திருந்தால், விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும்.  ஆனால், அரசு இப்படி சந்தையில் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதை மன்மோகன் சிங் விரும்புவதில்லை.  தமக்கு ஓட்டுப் போட்ட ஏழை மக்கள் இவ்விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்களே என்பது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல், விலைவாசி உயர்வு அவசியமானது என்றுதான் திமிர்த்தனமாக அறிக்கை விட்டுவருகிறார், அவர்.

அரசு சந்தையில் தலையிட்டால், மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் நுழைந்துள்ள ரிலையன்ஸ், பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் நிறுவனங்கள் விலைவாசி உயர்வைப் பயன்படுத்திக் கொண்டு அடித்துவரும் கொள்ளை இலாபம் படுத்துவிடும் என்பதாலேயே, அவரது அரசு சந்தையில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.  உச்ச நீதிமன்றம் உத்தரவை அவர் புறக்கணிப்பதற்கும் இதுதான் காரணம்.  விலைவாசியை உயர்த்துவதற்காக வியாபாரிகள் சட்டவிரோதமான பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், மன்மோகன் சிங் அரசோ உணவுக் கொள்முதல்/சேமிப்பு என்ற பெயரில் சட்டபூர்வமாகப் பதுக்கலை நடத்தி, வர்த்தகச் சூதாடிகளுக்கு உதவி வருகிறது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவில், “வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர் என முத்திரை குத்தப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்; அல்லது அவற்றின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் வண்ணம் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.  வெளித் தோற்றத்தில் பட்டினி கிடக்கும் ஏழைகளுக்கு ஆதரவாகப் பேசுவது போலத் தெரியும் இந்த உத்தரவு, உண்மையில் உணவு வழங்கல் கொள்கையில் உலக வங்கியின் கட்டளைகளை விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஆலோசனையே சாட்சி.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலுள்ள இந்த ஆலோசனையை டாக்டர் மன்மோகன் சிங் புறக்கணிக்க மாட்டார் என்று அடித்துக் கூறலாம்.

வறுமைக் கோட்டுக்கு மேலே என்ற முத்திரை குத்தப்பட்ட குடும்ப அட்டைகள் டாடா, அம்பானி குடும்பங்களுக்கா கொடுக்கப்பட்டுள்ளது?  இந்தியாவிலேயே மிகப் பெரிய நகர்ப்புறச் சேரியான மும்பையில் உள்ள தாராவியில்  விரல்விட்டு எண்ணக்கூடிய குடும்பங்கள் தவிர, அங்கே வசித்து வரும் பிற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.  குடும்ப அட்டைகளை இப்படிப் பிரிப்பது ஏழைகளைக் காவு கொள்ளும் திட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

திட்ட கமிசனும் தேசிய ஆலோசனை கவுன்சிலும் இணைந்து சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், “வறுமைக் கோட்டுக்குக் கீழே/மேலே என்ற பிரிவினையின்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அரசுக்கு ஆண்டுதோறும் 1,40,000 கோடி ரூபாய் உணவு மானியமாகச் செலவாகும்; அதனால், அது நடைமுறை சாத்தியமற்றது.  மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்குக்கூட மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமையைத் தவிர, வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதையும் வழங்க முடியாது” எனத் திட்ட கமிசன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

அதாவது, அரசு தனது கையிருப்பிலுள்ள தேவைக்கும் அதிகமான உணவு தானியத்தை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்காது என்பது உறுதியாகிவிட்டது.   பூதம் புதையலைக் காத்த கதையாக மன்மோகன் சிங் இந்தக் கையிருப்பைப் பாதுகாத்துக் கொண்டிருக்கப் போகிறாரா அல்லது முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, அவரது ஆட்சியில் மக்கள் பட்டினி கிடந்த போதும் 2.8 கோடி டன் உணவுப் பொருட்களை ஐரோப்பிய மாடுகள் தின்பதற்காக ஏற்றமதி செய்தாரே, அதைப் போலச் செய்வாரா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லக்கூடும்.

ஏழைகள் பட்டினி கிடக்கும்பொழுது அரசு அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்ற அறநெறியெல்லாம் மன்மோகன் சிங்கிடம் கிஞ்சித்தும் கிடையாது.  இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையே அலட்சியப்படுத்தி வரும் அவர், ஏழைகள் பட்டினி கிடப்பதையா ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்?

2010-11 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உணவு மானியத்தில் 450 கோடி ரூபாயை வெட்டிய அவரது அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 5,00,000 கோடி ரூபாயை வரிச் சலுகையாக வாரி வழங்கியது.  இது பாமரனுக்கு ஓரவஞ்சனையாகத் தெரியலாம்.  ஆனால், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் அலுவாலியா – ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை, இந்தப் பாதையில் சென்றால்தான் இந்தியா உலகத் தரத்தை அடைய முடியும் என்று கருதுகிறார்கள்.

அவர்கள் தமக்கு வாக்களித்த கோடிக்கணக்கான ஏழை – எளிய மற்றும் நடுத்தர மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்தவில்லை.  பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், புதுப் பணக்கார மேட்டுக்குடிக் கும்பலின் பிரதிநிதியாகத்தான் மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இந்தக் கும்பலின் நலனை முன்னிறுத்தித்தான் போடப்படுகின்றன.  அவ்‘வளர்ச்சி’த் திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வை மேலும் மேலும் நாசப்படுத்தி வருவதை யாரேனும் கண்டித்தால், எதிர்த்துப் போராடினால், அவர்கள் அனைவரையும் “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’, “மாவோயிசத் தீவிரவாதிகள்” என முத்திரை குத்தி ஒடுக்கி வருகிறார், மன்மோகன் சிங்.  இப்படிப்பட்ட கும்பலிடம் உணவு மானியத்தை வெட்டக்கூடாது, ஏழை மக்களுக்கு கூடுதலாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என ஆலோசனை கூறுவதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்!

________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா? | வினவு!…

    திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியுள்ள மன்மோகன் சிங் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்?…

  2. மன்மோகனின் மிக அதிர்ச்சிகரமான இந்த செயல் மிகுந்த கண்டனத்திற்குறியது.

    அவரை சுற்றியுள்ள கும்பலே இம்முடிவிற்கு மூள காரணமாகவும் இருக்கலாம். எலிகள் சாப்பிட்ட பிறகு மீதமுள்ள சரக்குகள் அனைத்தும் வீனாக மக்கிப் போனாலும் பரவாயில்லை, கிடங்கில் கிடக்கும் இருப்பை நீண்ட காலம் வரை இருக்கிப் பிடிப்பதால், உள்நாட்டு வியாபார தளங்களில் ஒரு வித கற்பனை இழுபறி நிலையை உருவாக்கி அதன் ஊடே உருவாகும் நிலையை பயண்படுத்தி தானிய வகைகளின் தற்போதைய விலைகளை குறைக்காமலும் முடிந்தால் அதிக விலைக்கும் விற்று சுலப வழியில் நிறைய பணம் கொழிக்க முதலாளிகளுக்கு இது வழி வகுக்கிறது.

    கிடங்குகளில் அபரிதமாக கிடக்கும் தானிய வகைகளை அரசு அந்நிய செலாவணிக்கு ஆசைபட்டும் உள்நாட்டு முதலைகள் அற்ப டாலர்களுக்கு ஆசைப்பட்டும் அந்நிய நாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்துவிட்டு, பிறகு அவர்களிடமிருந்தே வேறு வகை தானியங்களை இறக்குமதி செய்யவும் செய்வார்கள்.

    இன்னும் ஒரு படி மேலே சென்று ஆராய்ந்து பார்ப்போமேயானால், மன்மோகனின் இவ்வடாவடிச் செயலின் பின்புலத்தில் சில அந்நிய சக்திகளின் சதித் திட்டமும் இருக்க வாய்ப்புகள் உண்டு.

    உலக வங்கியிடமும் பண்ணாட்டு நாணய கிடங்கிடமும் இந்தியா அதிக அளவு கடன்பட்டு இருப்பதை இங்கு நாம் மறந்துவிடக் கூடாது.
    இவ்விரண்டு அமைப்புகளின் அடிப்படை கொள்கைகள் சிலவற்றை இங்கு நாம் நினைவு கூர்ந்து பார்ப்பது நன்றே.

    நீர், நிலம், மண், விவசாயம், மற்றும் இதரபல மூளாதாரங்களை உடைய ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாட்டு அரசாங்கத்திற்கு தங்களது தேவைக்கும் அதிகமான, சில வேளைகளில் தேவையில்லாத கடன் சுமைகளை முதுகில் ஏற்றி மூச்சடைக்க வைத்து அவர்களை அடிமையாக்கி, முண்டமாக்கி, அந்நிய சார்புடைய மக்களாக்கி கடைசிவரை அவர்களின் உற்பத்தி பொருட்களையும் மூளப் பொருட்களையும் தாங்கள் வாங்கிய கடன்கள் மற்றும் அதன் வட்டிகளை வைத்து பிரட்டி மிக்க குறைந்த அடாவடி விலையில் அனைத்தையும் சுரண்டி எடுப்பதே இவர்களின் அடிப்படை கொள்கை.

    இதே அடிப்படையின் பெயரிலேயே கூட, இந்திய கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும் தானியங்கள் மேற்கூறிய அமைப்புகளின் உத்தரவின் பெயரில் இன்னும் சில காலங்களில் மேலை நாடுகளுக்கு அற்ப விலைக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புகளும் நிறைய உண்டு என கூறலாம்.

    சில நூறு ஆண்டுகளுக்கு முன், அந்நியன் பைபிளை காட்டி ஏமாற்றி ஊடுறுவி மண்ணையும் மக்களையும் ஆண்டான். இன்று அதே ஏமாற்று வேலைகளை உலக வங்கியும், பண்ணாட்டு நாணய கிடங்கும் (IFM) ‘நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம்’ என்னும் மாயை உருவாக்கி தேவையில்லா கடன் சுமைகளில் நாட்டை மூச்சடைக்க வைத்து சிறிது சிறிதாக தொடர்ந்து சாகடித்து வருகின்றன.

    தனது கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டாலொழிய இந்தியாவுக்கு உண்மையான விடுதலையும், வளர்ச்சியும், முன்னேற்றமும் கிடையாது.

  3. மிஸ்டர் சஞ்சய் காந்தி எங்கிருந்தாலும் இங்கே வந்த ஆஜராகவும்..

  4. அதை எல்லாம் எடுத்து ஏழைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தால் படார் என்று விலை குறைந்து பதுக்கல் வியாபாரிகளுக்கு நஷ்டம் வந்து விடாதா?. அதையும் பாக்கனுமாயில்லையா?அந்த ஆயிரம் பேர்களுக்காக தானே அரசாங்கம் நடக்குது?என் சாப்பாட்டிற்கு பிரச்னை வந்தால் பார்ப்போம்.என்ன நாஞ்சொல்றது.

    • திருவாளர் களப்பிரன் அவர்களே, பதுக்கல் வியாபாரிங்களுக்காகத்தான் இந்த அரசு இருக்குதுன்னு இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.

  5. சொந்த நாட்டு மக்கள் பட்டினியால் செத்தாலும் சாகலாம் ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிங்க லாபம் மடடும் எந்தவிதத்திலும் குறைந்துவிடக் கூடாது என்ற மன்மோகனின் கொள்கை எட்டப்பனையே விஞ்சக் கூடியது. அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஏழை மக்களின் மீதான கரிசனத்திற்குப் பின் உள்ள அரசியலை புஜ விளக்கியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

  6. காமன்வெல்த் விளையாட்டுக்கு காட்டிய அக்கறையை இந்த அரிசி பஞ்சத்தை போக்க மானம்க்கெட்ட மன்மோஹன்சிங் காட்டவில்லையே !

    பாதுகாப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நமதுவரி வீணாகிறது,அமெரிக்க அடிமையானபிறகு இவர்களால் அடித்தட்டு மக்களுக்கு அழிவைதவிர வேறுன்ன தரமுடியும் ,

    ஒபாமாவை வரவேற்கும் பணி ஆரம்பமாகி பரபரப்பாக இருக்கிறார்கள் இவர்களுக்கு மக்களாவது மயிராவது ?

    —–மெய்தேடி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க