Wednesday, October 4, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.க108 ஆம்புலன்ஸ் - சேவையா? சுரண்டலா??

108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??

-

108 ஆம்புலன்ஸ்

 • விபத்துக்களினாலோ, நோய்களினாலோ, மனிதர்கள் உயிருக்குப் போராடுகின்ற மிக ஆபத்தான சூழ்நிலைகளிலே அவர்களைக் காப்பாற்றுகிற மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியினை அர்ப்பணிப்போடு செய்யும் பணியாளர்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு எண் 108.
 • 108-ன் மூலம் மக்களுக்குக் கிடைக்கிற சேவைகளை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். கடந்த தி.மு.க அரசு குறிப்பாக கருணாநிதி, ஏதோ தெருத்தெருவாக தானே சென்று செய்துகொண்டிருக்கிற மிகப்பெரும் சேவை என்பது போல 108 குறித்து விளம்பரம் செய்து கொண்டார். தற்போதைய ஜெயாவோ, இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கப் போவதாக, அதாவது தானே வீடுவீடாகச் சேவை செய்யப்போவது போலக் கூறியிருக்கிறார்.
 • ஆனால், இந்த மகத்தான சேவைகளை மக்களுக்குத் தரக்கூடிய 108-ன் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படுகின்ற துயரமும், இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்கிற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் யாரும் அறியாதது.
 • அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (Emergency Management and Research Institute- EMRI) என்கிற நிறுவனத்தை அவசர உதவிக்காக அழைக்கும் தொலைபேசி எண்தான் 108. இந்த அவசர உதவி மையமானது, தமிழகம் முழுவதும் 411 வாகனங்களை ஊருக்கு ஊர் நிறுத்தி வைத்திருக்கிறது. நாளொன்றுக்கு  சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்து வருகிறது.
 • திடீரென நடைபெறுகின்ற சாலைவிபத்துக்கள், மாரடைப்பு, தீக்காயங்கள், நோய்களினால் உருவாகின்ற ஆபத்துக்களுக்கான அவசர உதவிகள் மற்றும் பிரசவகால அவசரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளுக்கான அவசரஉதவிகளை 108-ன் ஊழியர்கள் செய்கிறார்கள்.
 • விலை உயர்ந்த நவீனக்கார்கள் எதிலும் இல்லாத; வேறு எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்சிலும் இல்லாத; அவ்வளவு ஏன், பெரும்பாலான தனியார் மருத்துவக் கிளினிக்குகளிலும் இல்லாத, அதி நவீன மருத்துவக்கருவிகள்; உயிர் காக்கும் மருந்துகள்; மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ நிபுணர்களோடு ஒரு நவீன மருத்துவமனைக்கு இணையாக 108- வாகனங்கள் இயங்கி வருகின்றன.
 • ஒரு 108- வாகனத்தில் ஒரு ஓட்டுனர்(pilot), மற்றும் ஒரு அவசரகால மருத்துவப் பணியாளர் (Emergency Medical Technician) ஆக, இரண்டு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் (shift) வேலை செய்கிறார்கள். ஒரு ஷிப்ட் என்பது காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலான பனிரெண்டு மணி நேரமாகும். ஷிப்ட் முடியப்போகும்போது ஏதேனும் ஒரு கேஸ் வந்தால் அதையும் முடித்துவிட்டுத்தான் இவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் கூடுதலான வேலைக்கான கூடுதல் சம்பளம் எதுவும் இவர்களுக்குக் கிடையாது. மேலும் இதற்கான நேரத்தை இவர்கள் அடுத்த ஷிப்ட் வரைக்குமான ஓய்வு நேரத்தில்தான் கழித்துக்கொள்கிறார்கள். அதாவது தொடர்ச்சியாக அடுத்த ஷிப்டிற்கு மீண்டும் மறுநாள் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள்.
 • மிகச்சரியாகக் காலை எட்டு மணிக்குத் துவங்கும் முதல் ஷிப்டில் பணியாற்ற வீட்டிலிருந்து 108-வாகனம் இருக்கும் இடத்திற்கு வரும் இவர்களுக்கு பயணப்படியோ, பஸ்பாஸோ வழங்கப்படுவது கிடையாது. மேலும் இவர்களின் சொந்த ஊரிலோ, அல்லது அதன் அருகாமையிலுள்ள ஊர்களிலோ, இவர்களுக்கு பணி தருவதும் கிடையாது. தமிழகத்தில் எங்கு போய் வேலைசெய்யச் சொன்னாலும் அங்கே இவர்கள் போயாக வேண்டும்.
 • வேலைக்கு வந்ததும் இ.எம்.டி யாக வேலை பார்ப்பவர்  முதல் வேலையாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்து பெற்றுக் கொள்கிறார். அதுபோல ஓட்டுனரும் வழக்கமான சோதனைகளைச் செய்து வண்டியை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். எவ்வளவு போக்குவரத்து நெருக்கடியிலும், மோசமான சாலைகளிலும் சிரமங்கள், நெருக்கடிகளைச் சமாளித்து சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் வாகனங்களை  ஓட்டக்கூடிய இளைஞர்கள்தான் இப்பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், முறையான பராமரிப்பு எதுவும் வாகனங்களுக்கு நடைபெறுவது இல்லை. டயர், பிரேக் உள்ளிட்ட முக்கியப் பாகங்கள் கூட பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன.
 • 108 வாகனமானது, ஒவ்வொரு ஊரிலும் உள்ள  போலீஸ் ஸ்டேசன், அரசு மருத்துவமனை, ஊரின் மையமான பகுதி, ஒரு பொதுவான இடம் ஆகிய ஏதேனுமொரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 108-ன் ஊழியர்கள் எப்போதும் வண்டியின் உள்ளேதான் இருக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. இவர்களுக்கு வாகனத்திற்கு வெளியே ஓய்விடமோ, கழிப்பறை ஏற்பாடோ கிடையாது. இதனால்ஈ.எம்.டி-க்களாக வேலை செய்கின்ற பெண்கள் படும்பாடு தனித்துயரம்.
 • வேலை நேரத்தினிடையே, தேனீர் நேரமோ, உணவு இடைவேளையோ கிடையாது. வண்டியினுள்ளேயே அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடத்துவங்கும் போது, அழைப்பு வந்தால் ஒரு நிமிடத்திற்குள் புறப்பட்டு விடுகிறார்கள். அடுத்த முப்பது நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்கிறார்கள். அவரைச் சுற்றி உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே கூடியிருக்கிற உறவினர்களைச் சமாளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றுகிறார்கள். ஒடிக்கொண்டிருக்கும் வண்டியிலேயே பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார்கள்.  குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைக்கோ, அல்லது தகுந்த மருத்துவமனைக்கோ, அல்லது பாதிக்கப்பட்டவர் அல்லது அவருடைய உறவினர்களின் விருப்பப்படியான மருத்துவமனைக்கோ சென்று சேர்க்கிறார்கள். இதற்குள் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களைப் பதிவேடுகளில்  பதிவு செய்கிறார்கள். மொத்தம் 22 பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களால் வாகனத்தினில் ஏற்படுகின்ற ரத்தக்கறை, வாந்தி, மலம், மூத்திரம், மற்றும் பிரசவமேற்பட்டால் உண்டாகும் அதன் கழிவுகள் ஆகிய அனைத்தையும் இவர்களே சுத்தம் செய்கிறார்கள். நாளொன்றுக்கு சுமாராக ஐந்திலிருந்து பத்து வரையிலான நபர்களைக் கையாளுகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்புக் கருவிகளோ, மருந்துகளோ வழங்கப்படுவதில்லை. ஒருமுறை கழட்டி மாட்டினால் கிழிந்துவிடுகிற அளவிற்கு மட்டரகமாகத் தயாரிக்கப்பட்ட கையுறையைத்தான் இவர்கள் பயன் படுத்துகிறார்கள்.
 • இப்படி கூடுதலான பணிச்சுமையிலும், பொறுப்பாகப் பணிசெய்யும் இவர்களுக்கு மிகவும் துயரத்தைக் கொடுப்பது இவர்களின் வேலைப்பளு அல்ல, மாறாக, இவர்களைக் கொடுமையாகச் சுரண்டுகிற நிர்வாகம்தான்.
 • 108-எனும் இந்த அவசரகால மருத்துவச் சேவையைச் செய்வதற்காக தமிழக அரசு ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ எனும் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. அது சாதாரண ஒப்பந்தமல்ல, நாம் அடிக்கடி செய்தித்தாள்களிலே படிக்கிறோமே அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். அது என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? இலாப, நட்டமில்லாமல் சேவை நோக்கோடு அரசும் தனியார் நிறுவனங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தத்தைத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறுகிறார்கள். ஒரு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்கின்ற அரசு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு சேவை செய்வதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முதலாளி எப்படி சேவை செய்கின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு முன் வருவான்? விற்க முடியுமென்றால், அதுவும் லாபத்தோடு விற்க முடியுமென்றால் தன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விற்கத் துடிப்பதுதானே முதலாளித்துவத்தின் சிறப்பியல்பு. உண்மை இவ்வாறு இருக்க எதனால் அந்த முதலாளி  சேவை செய்ய முன் வந்தார்? 108-ற்காக சேவை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளவர் ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்னும் நிறுவனத்தின் முதலாளியான  ஜி.வி.கிருஷ்ணராம ரெட்டி என்பவர்.
 • இந்த சேவைக்காக, ஆண்டு தோறும் அரசிடமிருந்து ஜி.வி.கே.யின் முதலாளி பெறுகிற பராமரிப்புத் தொகை மட்டும் ரூபாய் நாலாயிரத்து இருநூறு கோடி. இது தவிர, பிரசவம் நடந்தால் இரண்டாயிரம் ரூபாயும், மற்ற பிரச்னைகளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் பெற்றுக் கொள்கிறார். சரி, மொத்தமாக ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனத்தின் வரவு, செலவு எவ்வளவு?

முதலில் செலவைப் பார்ப்போம்.

ஒரு மாதத்திற்கு ஒரு வாகனத்திற்கு ஆகும் செலவு:

எரிபொருள்                                                                    ரூ. 20,000

பராமரிப்பு                                                                       ரூ.    5,000

2 பைலட்டுகள் சம்பளம்                                        ரூ.   11,400

2 இ.எம்.டி. களுக்கான சம்பளம்                        ரூ.   13,000

வார விடுமுறையில் மாற்றம் செய்யும்

பைலட் மற்றும் இ.எம்.டிக்கான சம்பளம   ரூ.     5,000

மருந்து மற்றும் கருவிகளுக்கான செலவு  ரூ.     2,000

இதர செலவுகள்                                                           ரூ.     3,600

ஆக, மொத்தம்                                                              ரூ. 60,000

400 வாகனங்களுக்கு, 400 X 60,000 =            ரூ. 2,40,00,000.

ஒரு ஆண்டிற்கு, 12 X 2,40,00,000 =                ரூ. 28,80,00,000.

இனி வரவாக அரசிடம் பெறும் கட்டணத்தைப் பார்க்கலாம்.

மொத்தமுள்ள 411 வாகனங்கள் மூலமாக, ஒரு நாளைக்கு வரும் மொத்த கேஸ்கள் சுமார் 3,000.

ஒரு கேஸுக்கு அரசிடம் பெறும் கட்டணம் ரூபாய் குறைந்தபட்சமாக ரூபாய் 1,500 என வைத்துக் கொண்டால்
ஒரு நாளைக்கு 3,000 X 1,500= 45,00,000 ரூபாய்
ஒரு மாதத்திற்கு 30 X 45,00,000= 13,50,00,000 ரூபாய்.
அப்படியானால் ஒரு ஆண்டிற்கு 12 X 13,50,00,000= 162 கோடி ரூபாய்

ஆக, ஒரு ஆண்டிற்கான மொத்த வரவு, செலவு விவரம்:
வரவு         = 162.00 கோடி.
செலவு     =   28.80 கோடி.

ஆக, ஆண்டொன்றிக்கு நிகர லாபம் 133 கோடியே 20 லட்ச ரூபாய்கள். இது குறைந்த பட்சத்தொகை என்பதை மறந்துவிடக்கூடாது.

இவ்வளவு லாபம் அடைகின்ற முதலாளி, ஈ.எம்.டி.க்குத் தரும் மாதச்சம்பளம் வெறும் 6,310 ரூபாய். பைலட்டுக்குத் தருகிற மாதச்சம்பளம் வெறும் 6,000 ரூபாய் மட்டும்தான். இதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரவு செலவுப் பின்னணி. உள்ளூர் புரிந்துணர்வு ஒப்பந்தமே இந்த லட்சணமென்றால் மாதத்திற்கொன்றாக பன்னாட்டுக் கம்பனிகளிடம் போடப்படுகின்ற மத்திய, மாநில அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தமெல்லாம் என்ன யோக்யதையில் இருக்குமென நாமே யூகித்துக்கொள்ளலாம்.

108 ஒரு அரசு நிறுவனமா?

108 வாகனத்தில் தமிழக அரசின் சின்னம் இருப்பதால் 108 ஒரு அரசு நிறுவனமென்றும், 108 வேலை ஒரு அரசு வேலை என்றும் மக்கள் நம்புகிறார்கள் அப்படி நம்பித்தான் அதில் வேலைக்கும் சேருகிறார்கள். ஆனால், 108 வேலை ஒரு தனியார் நிறுவன வேலைதான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அண்ணாத்துரை பிறந்த நாளில் 108 சேவை தொடங்கப்பட்டபோது, மிகப்பிரபலமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தது. பின்னர் சத்யம் போண்டியாகிப்போய் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்ததால் சத்யம் முதலாளியின் மச்சானான ஜி.வி. கிருஷ்ணராம ரெட்டிக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழகம் உள்பட மொத்தம் 18 மாநிலங்களிலே ஜி.வி.கே இது போன்ற சேவைகளை நடத்திவருகிறான்.

ஊழியர்களின் பரிதாப நிலமை:

பணியில் சேரும் ஊழியர்களை முதல் ஒரு வருட காலத்திற்குப் பல மாவட்டங்களிலும் அதன் பின்னர் சொந்த மாவட்டத்திற்கும் பணியாற்ற  அனுப்பப்படுகிறார்கள். ஆனால், வாகனங்களில் எதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் முதலில் நிர்வாகம் செய்வது ஊழியர்களை இடம் மாற்றுவதுதான். ஊழியர்களை அதிகாரிகளுக்கு அடிமைகளாக்கவே நிர்வாகம் நிர்ப்பந்திருக்கிறது. வேலையில் முறையாக இருந்து, அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொன்னாலோ, அல்லது அவசியமான கேள்விகள் எதையும் கேட்டாலோ, உடனடியாக மாவட்டத்தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கிறார்கள். தானே தவறு செய்ததாக நிர்ப்பந்தம் செய்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அல்லது இனிமேல் தவறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கிறார்கள். இவ்வாறு மூன்று எச்சரிக்கைக் கடிதங்கள் பெறுகின்ற ஊழியரை வேலையை விட்டு நீக்குகிறார்கள்.

அதிகாரிகளின் அயோக்கியத்தனம்:

இப்படியெல்லாம் ஊழியர்களிடம் கெடுபிடியாகவும்  கறாராகவும் நடந்து கொண்டு, 40,000 முதல் 50,000 ரூபாய்களுக்கும் கூடுதலாகச் சம்பளம் வாங்கி, ரெட்டியிடம் நல்லபேரை எடுக்கிற ஜி.வி.கே அதிகாரிகளின் அசல் சேவையுள்ளத்தைச் சிறிது பார்க்கலாம்.

1) வாகனங்களுக்கு மாதாமாதம் வழங்குகின்ற மருந்து மற்றும் கருவிகளைக் குறைந்த எண்ணிக்கைகளில் வாங்கி அதிமான எண்ணிக்கையில் வாங்கியதாகப் பில் எழுதிப் பணம் திருடி ரெட்டியை ஏமாற்றுகிறார்கள்.

2) அப்படியே வாங்கப்படும் மருந்துகளில் காலாவதியான மற்றும் காலாவதித் தேதிக்கு மிக அருகில் இருக்கும் மருந்துகளே மிக மிக அதிகமாக இருக்கிறது. இதன் மூலமாகவும் பணம் சுருட்டுகிறார்கள்.

3) வாகனங்களில் ஏற்படும் சிறு சிறு குறைபாடுகளுக்கும் பல ஆயிரக்கணக்கான தொகைக்கு பில்எழுதி ரெட்டியை ஏமாற்றுகிறார்கள்.

4) ஊழியர்களின் சம்பளங்களில் பிடித்தம் செய்யப்படுகின்ற பிராவிடண்ட் தொகை மற்றும் ஈ.எஸ்.ஐ-த் தொகைகளை வேலையிலிருந்து நின்று விட்ட எந்த ஊழியர்களுக்கும் இதுவரை வழங்கியதில்லை.அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் எந்த ஊழியர்களையும் வேலை செய்யவும் விடுவதில்லை.

இந்தப் புரிந்துணர்வுக்குப் பிறந்த அதிகாரிகள்

பிரசவக்காரியங்களுக்கு அதிகக் கட்டணம் கிடைக்கிறது என்பதால் பிரசவக் கேசுகளாக ஏத்துங்கள் என மானங்கெட்டதனமாக ஊழியர்களை  நிர்ப்பந்திக்கிறார்கள்.

 • திருச்சி டோல் கேட் பகுதியில் 108 பைலட் ஒருவர் வேறு வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஜி.வி.கே ரெட்டி எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. ஆனால், அவரது குடும்பத்திற்காக, பிற ஊழியர்கள் திரட்டிக் கொடுத்த தொகையான 3,25,000 ரூபாயைத் தானே கொடுத்ததாக ஜி.வி.கே ரெட்டி பத்திரிகைகளில் செய்தி கொடுத்தார். அவ்வளவு யோக்கியமான ரொட்டி அவர். சொந்த விமானத்தில் மாநிலம் மாநிலமாகப் பறக்கிற அவரது யோக்கியத்தனமும் அப்படித்தான் பறக்கிறது. சரி, ரெட்டியின் யோக்கியதையே இப்படி இருக்கும் போது, அவனைத் தாஜா செய்து வேலை பார்க்கின்ற அதிகாரிகள் மட்டும் யோக்கியனாக இருப்பானா என்ன?
 •  சமச்சீர்க் கல்வித் திட்டம் போன்ற கருணாதியின் சிறந்த பல திட்டங்களை ஜெயலலிதா காழ்ப்புணர்வோடு ரத்து செய்வதாக பல நடுத்தட்டுகள் தமிழகத்தில் அங்கலாய்த்துக் கொள்கின்றன. இதோ, ஜிவிகே ரெட்டியென்னும் கொள்ளையனுக்கு மக்கள் வரிப்பணத்தை அள்ளி ,அள்ளிக்கொடுக்கிறது கருணாநிதி போட்ட 108 புரிந்துணர்வு ஒப்பந்தம். அதை ரத்து செய்வாரா ஜெயலலிதா? மாட்டார். ஆனால் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? குழந்தைகளுக்கான 108 என்று அதை விரிவாக்கி இன்னும் கூடுதலாக இரண்டு வண்டிகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதைத் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இதுவரை 108-ன் பின்னால் மறைந்துகிடக்கிற ஊழியர்களின் துயரத்தையும், ஜிவிகே ரெட்டி நிறுவனம் அடிக்கிற கொள்ளையையும் பார்த்தோம்.

 • 108-ன் ஊழியர்களின் துயரங்களுக்கு ஜெயலலிதா முடிவுகட்டுவாரா? சென்ற ஆட்சியின் போது சாலைப் பணியாளர்களையும், அரசு ஊழியர்களையும் நடத்தியதைப் பார்க்கும் போது, அவர் எதை முடிவு கட்டுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆக, 108-ன் பணியாளர்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
 • உயிரைப் பயணம் வைத்து பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற வாகனம் ஓட்டும் பைலட்டுகளும், பாதுகாப்பு வசதியில்லாததால், பாதிக்கப்பட்டவர் மூலமாக, தனக்கு ஏதேனும் நோய் தொற்றுமோ எனக் கவலைப்படாமல் பணியாற்றுகின்ற ஈ.எம்.டிக்களும் ஆக, ஒட்டுமொத்தமாக 108-ன் பணியாளர்களும் எப்படி இந்த பிரச்சினையைப் பார்க்கவேண்டும்?
 • 108 ஊழியர்களின் பிரச்சினை அவர்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல. என்று இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டதோ, அன்றிலிருந்து  விவசாயிகள், தொழிலாளிகள், நெசவாளர்கள், சிறுவியாபாரிகள், மீனவர்கள், மாணவர்கள், என பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற பல்வேறு மக்கள் பிரிவினரின் பிரச்சினையோடு இணைந்ததுதான், 108 ஊழியர்களின் பிரச்சினை. இதை 108 -ன் ஊழியர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே 108-ன் ஊழியர்களாக இருந்து போராடுகிற அதே வேளையில், இதே காரணத்தினால், பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கிற மக்களோடும் அவர்கள் இணைந்து போராட வேண்டும். அப்போது மட்டுமே நிரந்தரமாக இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டமுடியும். அதற்கு முதலில் சரியானதொரு சங்கத்தை அவசியம் நீங்கள் உண்டாக்கியாக வேண்டும்.
 • அந்தச்சங்கம் 108 ஊழியர்களின் துயரங்களை, கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய அதே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நடத்தப்படுகின்ற பிற போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.

108-ன் ஊழியர்களாகிய உங்கள் மீது மக்கள்   கொண்டிருக்கும் நல்லெண்ணமும் மதிப்பும் நீங்கள் அவர்களுக்காகப் போராடும்போது உங்களது போராட்டங்களுக்கான ஆதரவாக அது வெளிப்படும்.

சங்கமாகுங்கள்!
மக்களிடம் செல்லுங்கள்!
மக்களுக்காக நில்லுங்கள்!

__________________________________________________________________

– கடற்கரைத்தோழன்.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. 108யை பற்றி விளக்கும் சிறப்பான கட்டுரை.பிரச்சனையை பற்றி மட்டுமல்லாது, பிரச்சனைக்குரிய தீர்வையும் கட்டுரையின் இறுதியில் சொல்லியிருப்பது பாரட்டுக்குரியது.

 2. கட்டுரையாளருக்கு அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15 என்று தெரியாமல் போனது ஏனோ?

  உங்கள் உதவிக்காக
  ஏ.ஆர் ரஹ்மான் பிறந்தநாள் – ஜனவரி 6
  சச்சின் டென்டுல்கர் பிறந்தநாள் – ஏப்ரல் 24
  மு.கருணாநிதி பிறந்தநாள் – ஜூன் 3

 3. வெள்ளிகிழமை ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு கட்டுரை எங்கே?போன்கப்பு !!!

  • என்ன அவசரமுண்ணே !

   சிவப்பு டவுசர் போட்டுக்குன்னு பால்வாடியில சமச்சீர் கரசேவை முடிஞ்ச கையோட காக்கி டவுசர கழ்ட்ட் வருவோம்ல !!!

 4. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உங்கள் மூலம் ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அது தமிழகத்தில் மட்டுமல்ல நாடு பூராவும் பல இடங்களிலும் இருக்கும் அவர்களுக்கு கிடைத்த நிவாரணமாக இருக்கும். நல்ல கட்டுரை. மிக உயரிய சேவை.

 5. //ஈ.எம்.டி.க்குத் தரும் மாதச்சம்பளம் வெறும் 6,310 ரூபாய். பைலட்டுக்குத் தருகிற மாதச்சம்பளம் வெறும் 6,000 ரூபாய் மட்டும்தான்//

  சம்பளம் குறைவு, சிப்ட் நேரங்களும் அதிகமாகவே இருக்கிறது.
  தீர்வாக, சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
  சிப்ட் நீளம், கேஸ்களின் அளவைப் பொறுத்து, எட்டு அல்லது ஆறு மணி நேரம் என்றாக்க வேண்டும்.
  அது போக, ஒவ்வொரு கேஸ்க்கும் ஊக்கப்படி தரப்பட வேண்டும்.
  இரண்டு overlapping ஷிப்ட்ஸ் போடுவதன் மூலம் உண்ணும் நேரங்களை கவர் செய்யலாம்.
  அவர்களுக்கென்ற ஓய்வறைகள் வண்டிகள் நிறுத்துமிடங்களில் ஒதுக்கப்பட வேண்டும்.

  இவையெல்லாம் குறைந்தபட்சத் தேவைகள் என்று கருதுகிறேன்.

 6. இதுவர அச்சடிச்ச ரூபாய் நோட்டையும்

  இனிமே அடிக்கப்போற ரூபாய் நோட்டையும்

  543 பேருக்கும் பிரிச்சுக்குடுத்து ஊழலை ஒழிக்கலாமேண்ணே !!!

  தனி ஒடமையை பொது ஒடமை ஆக்க என்னால முடின்ச யோசனை ?

 7. வணக்கம் வினவு,

  உங்களது தொகுப்புகள் பலவற்றை நான் படித்திருக்கின்றேன்…சிலவற்றில் நான் எதிர்ப்பு கருத்தும் தெரிவித்திருகின்றேன்.
  ஆனால் இன்று நீங்கள் வழங்கி இருக்கும் இந்த 108 ஊழியர்களை பற்றிய கட்டுரை மிக அற்புதமாக இருந்தது.
  விபத்து நடக்கும் போதுதான் நாம் அந்த வண்டியினில் ஏறுவோம், அன்றுதான் அந்த வண்டியினை பற்றிய தவறுகளை உணருவோம். இது காலம் காலமாய் எல்லோருக்கும் நடக்கும் பொதுவான ஒன்று. நாமோ அல்லது நமது சொந்தங்களோ அல்லது நண்பர்களோ விபத்துக்குள்ளாகும் போது மட்டுமே அந்த வண்டியின் தரத்தை பற்றி நாம் சிந்திப்பதில்லை…ஆனால் அந்த விபத்தில் நமக்கு ஏதாவது இழப்பு ஏற்படும்போது வண்டி மற்றும் ஊழியர்களை பற்றி அவதூறாய் பேசுவதும், பழிப்பதும் வாடிக்கையான ஒன்று.

  இங்கே மட்டுமின்றி எல்லா முதலாளி வர்க்கமும் ஊழியர்களை கசக்கி பிழிவது பொதுவான ஒன்று.
  உங்களது பதிவிற்கு 108 ஊழியர்களின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றி!!!!

  இப்படிக்கு
  மின்சார சிவா

 8. i think vinavu is a syco peoples… the staffs and the md , who are all responsible for this vinavu web are sadist and sycos… நீங்கலாம் மனரீதியா பாதிக்க பட்டுரிக்கீங்கன்னு நினைக்குறேன் …..go and check with a doctor

 9. கட்டுரை மிகச்சிறப்பாக வார்க்கப்பட்டிருக்கிறது. இன்று ஒருநாள் கூலி குறைந்தபட்சம் 300 ரூபாய் கூட இல்லாமல் குடும்பம் நடத்துவது வெகு சிரமம்! இதுபோன்ற உழைப்பாளர்களுக்கு நிச்சயம் தகுந்த வெகுமதி வழங்க வேண்டியது அவசியம். பரந்து விரிந்த பார்வையோடு எதையும் நாம் அணுகுவதில்லை. அதுதான் நம் மக்கள் விழிப்புணர்வின்மைக்குக் காரணம். எங்கள் பொறியியல் கல்லூரியில் வருட நிகர வருமானம் மட்டும் குறைந்தபட்சமாக பத்து கோடி நிற்கிறது. ஆனால் எங்களுக்கு உரிய சம்பளம் வழங்க நிர்வாகம் முன்வருவதில்லை. சுமார் ஆயிரம் பேரை வேலைக்கு வைத்துக்கொண்டு 100 கோடிக்கு மேல் தனியொருவனால் முதலாளி என்ற பெயரில் பொதுமக்கள் வரிப்பணத்தை சுரண்ட முடிவது ஏற்க இயலாத செயல். இந்த கோடிகளில் எத்தனை பர்சண்டேஜை கருணாநிதி தின்றான் எனத் தெரியவில்லை.

  கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கான தீர்வு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே! அதே நேரம் இதையே அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்பட்சத்தில் ஊழியர்களின் தரமான சேவை என்பது தொடரவேண்டும். ஏற்கெனவெ அரசாங்க மருத்துவமனைகளின் தாழ்ந்த தரமதிப்பீடும் சேவைக்குறைபாடும் நாம் அறிந்ததே! தாம் செய்யும் வேலையில் குறிப்பிடத்தகுந்த அளவிலான நேர்மையும் நாணயமும் மிக அவசியம் – அது தொழிலாளியோ, அதிகாரிகளோ, அல்லது தலைமைப்பொறுப்பில் உள்ளவர்களோ – எல்லோருக்கும் பொருந்தும்.

 10. 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மட்டும் அல்ல அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளார்களின் நிலையிம் இப்படித்தான் இருக்கின்றது.

 11. //108 ஆம்புலன்ஸ்

  விபத்துக்களினாலோ, நோய்களினாலோ, மனிதர்கள் உயிருக்குப் போராடுகின்ற மிக ஆபத்தான சூழ்நிலைகளிலே அவர்களைக் காப்பாற்றுகிற மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியினை அர்ப்பணிப்போடு செய்யும் பணியாளர்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு எண் 108.//

  இப்படி குறிப்பிட்டு விட்டு……

  //108-ன் மூலம் மக்களுக்குக் கிடைக்கிற சேவைகளை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். கடந்த தி.மு.க அரசு குறிப்பாக கருணாநிதி, ஏதோ தெருத்தெருவாக தானே சென்று செய்துகொண்டிருக்கிற மிகப்பெரும் சேவை என்பது போல 108 குறித்து விளம்பரம் செய்து கொண்டார்.// ஹி ஹி அப்புறம் இப்படி எதற்கு?

  விளம்பரம் செய்ததால் தான் ஆழமாக மக்கள் மனதில் பதிந்தது. இந்த திட்டம் ஒரு வழக்குரைஞர் மற்றும் சமூகநல ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததாலும் தான் இந்த திட்டம் வந்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

  அவர் (சமூக ஆரவலரும் வழக்கறிஞருமான) ஒருமுறை பாண்டிச்சேரி அருகே (சரியாக நினைவில்லை) ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு நபர் அடிபட்டவுடன் மருத்துவமனையில் சேர்க்க மருத்துவமனை ஆம்புலன்சை அனுகியபொழுது வர மறுத்தனர். தன்னுடைய காரில் எடுத்துச்சென்று அரசு மருத்துமனையை அணுகினார். மருத்துவர்களும் போலீஸ் கேஸ் என்று அந்த பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்ய மறுத்தனர்.

  அங்கு நிகழ்ந்த சம்பவங்களினால், பாதிக்கப்பட்ட மனதுடன் இருந்த அந்த ஆர்வலர் அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து வழக்கும் தொடர்ந்தார். எவர் அழைத்தாலும் மருத்துவ ஊர்தி வரவேண்டும் என்று அந்தக்காலக்கட்டத்திலேயே இந்த ஊர்தியும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. (இந்த ஊர்தி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்) ஆனால் இது சீர்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது அடுத்த வந்த அரசாங்கத்தால் செய்யப்படவேண்டும். அது ஜெயல்லிதா அரசால் நடைபெறாது.

  //….மிகச்சரியாகக் காலை எட்டு மணிக்குத் துவங்கும் முதல் ஷிப்டில் பணியாற்ற வீட்டிலிருந்து 108-வாகனம் இருக்கும் இடத்திற்கு வரும் இவர்களுக்கு பயணப்படியோ, பஸ்பாஸோ வழங்கப்படுவது கிடையாது. மேலும் இவர்களின் சொந்த ஊரிலோ, அல்லது அதன் அருகாமையிலுள்ள ஊர்களிலோ, இவர்களுக்கு பணி தருவதும் கிடையாது. தமிழகத்தில் எங்கு போய் வேலைசெய்யச் சொன்னாலும் அங்கே இவர்கள் போயாக வேண்டும்….//

  மேலும் மேலே குறிப்பிட்ட முறைகேடுகள் என்பது இந்த “108 ஆம்புலன்சில்” மட்டும் தான் என்பது இல்லை. சென்னை “போர்ட் டிரஸ்டில்” “கன்டெய்னர் டெர்மினல்” (சி.சி.டி.எல்) போன்ற அரசு “பாயின்டுகளையும்” (முனையம்), அராசாங்கத் தொழிற்சாலைகளின், ஆபத்தான பிரிவிற்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவக் குழு மற்றும் அராசாங்கத் தொழிற்சாலை ஆம்புலன்ஸ் பிரிவுகளில் எல்லாம் இப்படித்தான் கான்டிராக்ட் முறையில் சேவைகள் விடப்படுகிறது.

  இந்த ஊழியர்களுக்காக கான்டிராக்டரிடம் தரப்படும் சம்பளத்தில் 4 இல் ஒரு பங்கு மட்டுமே தரப்படுகிறது. இதை கண்காணிக்க அரசு தொழிலாளர் நல ஆய்வாளர் அமைப்புகள் இருந்தாலும். அவர்களுக்கும் இந்த கான்டிராக்ட் ஆட்கள் லஞ்சம் கொடுத்துவிடுகிறார்கள். இது ரொம்ப காலத்து நடைமுறை (கலைஞர், செயலலிதா மட்டும் காரணமல்ல) ஆகையால் இந்த முறைகேடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

  இன்னொரு அநியாயத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த கான்டிராக்டர்கள் நிறுவனத்தினரை “கேன்வாஸ்” செய்யும் பொழுதே இப்படித்தான் முகவான்மை செய்வார்கள். ஊழியர்களுக்கு போனஸ் தரவேண்டியது இல்லை, ஊதிய உயர்வு போராட்டங்கள் இல்லை, லாக் அப் என்ற விஷயங்கள் இல்லை. என்ன ஆச்சரியமாக இருக்கிறாதா? இதை விற்பனை பிரசுரமாக அதாவது பேன்பிளட், கேட்லாக்கா நிறுவனங்களிடம் விநியோகித்து தான் ஆர்டர் பிடிப்பது.

  (சில கார்பொரேட் நிறுவனங்கள் இப்பொது விழித்துக்கொண்டன். அப்பொழுதும் இந்த கான்டிராக்டர்கள் அவர்கள் கண்களில் மண்ணைத்தூவிவிடுவார்கள்.)

  போர்ட் டிரஸ்ட் கன்டெய்னர் டெர்மினலை கண்காணிக்கும் மருத்துவக் குழு சென்னை “நேஷனல் ஆஸ்பிட்டல்” என்ற ஒரு “போக்கத்த தனியார் மருத்துமனை”. இங்கு ஒருவர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டால் கன்பார்ம் மட்டை தான். அங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும். மருத்துவம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் பிளஸ் 2 பாய்ஸ் தான். தற்பொழுது கான்டிராக்டில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. வேறொருவருக்கும் கான்டிரக்ட் விட்டிருக்கலாம். அவர்களும் இதே முறையைத்தான் பின்பற்றுவார்கள். மத்திய அரசு நிறுவனத்துக்கே இந்த கதி!

  இந்தப்பணியை செய்பவர்கள் 24 மணிநேரமும் தூங்க கூடாது. அடிக்கடி கன்டெய்னர் இறக்கும் பொழுது ஊழியர்களுக்கு பலத்த காயம் நிச்சயம் ஏற்படும். ஆகையால் ரவுண்ட்சிலேயே இருக்கவேண்டும். இவர்கள் 48 மணிநேரம் தொடர்ந்து வேலை பார்த்தால் எப்படி தூங்காமல் அடிபடுகின்ற ஊழியர்களை காப்பாற்ற முடியும்.

  சாப்பாடு கூட தொடர் பணிக்காக வழங்குவதில்லை. எல்லாம் சொந்த செலவு தான். இதனால் அந்த வண்டியில் உள்ள மருந்துகளை விற்று வயிற்று பசியை போக்கிக்கொள்வார்கள். வாகன உதிரிப் பாகங்களை விற்றும் இயலாமையை போக்கி கொள்வார்கள். இது தவறு இல்லை. அவர்கள் மட்டும் உத்தமர்களாக இருந்து என்ன ஆகப்போகிறது? நம்ம அப்பாடக்கர் ஐ.டி ஆளுங்க மட்டும் ரொம்ப யோக்கியமா?

  இது ஒரு உதாரணம்….இதில் இன்னும் நிறைய இருக்கிறது.

  (அரசாங்கத்தில் இன்னும் பல அதிர்ச்சியான விஷயங்கள் இருக்கிறது. காலங்காலமாக மாற்றமுடியாமல் இருக்கிறது. சும்மா ஒரு சேம்பிள்’ ரேஷன் கடை…..இங்கே பணிபுரியும் தற்காலிக ஊழியருக்கே, அரிசியை வித்துதான் சம்பளம் தரப்படுகிறது அதாவது தெரியுமா? நிரந்தர ஊழியருக்கு சம்பளம் என்ன? 3000 ரூபா தான். எல்லாம் பட்டதாரிகள் தான். இன்றயை தேதிவரை தரப்பட்டு கொண்டிருக்கும் சம்ம்பளம். (இவங்க நம்மகிட்டேயே வந்து அவ்வளவு? அரிசி கடத்தலை பிடிச்சேன், இவ்வளவு? அரிசி கடத்தலை பிடிச்சேன்னு கணக்கு காட்டிகிட்டு இருக்காங்க! ப்..,பூ)

  இந்த மருத்துவ ஊர்திகள் இலவசம் என்றாலும், அப்படி இப்படி டிப்ஸ் வாங்கத்தான் செய்வார்கள். மக்களும் கொடுக்காமல் இருக்கமாட்டார்கள்.

  தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களும் இப்படித்தான். ஒரு தொழிலாளி 12 மணிநேரம் என்பதே சட்ட விரோதம் ஆனால் அவர்கள் தொடர்ந்து 24, 36, 48 மணி நேரம் என்று பணியாளர்களின் பெயர்களை மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு வேலை பார்ப்பார்கள். வாரத்திற்கு ஒரு முறைதான் வீட்டிற்கே செல்வார்கள். இந்த வேலைக்கு தரப்படும் ஊதியம் மிக மிக குறைவு.

  இந்த வேலைப்பார்ப்பவர்களுக்கு “ரிலீவர்” என்ற கூடுதலான ஊழியர்கள் கண்டிப்பாக வேண்டும். அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்குத்தான் இந்த கான்டிராக்ட் நிறுவனங்கள் இயங்குகின்றன. பங்களாக்காரர்களும் என்ன ரொம்ப மனிதாபிமானவர்களா? அவர்களும் இதையெல்லாம் தெரிந்து தான் இந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை நாடுகிறார்கள். இவ்வளவு வேலை பார்ப்பவன் தூங்கினா! உடனே பொறுக்கமாட்டாம பாவம்! அவன் தலையில தண்ணிய கொட்டுர பணக்கார நாய்கள் இந்த தமிழகத்தில் நிறைய உண்டு. இந்த வேலைகளில் பெரும்பாலும் வயசான ஆட்கள் தான் வருவார்கள். அவர்களை திருடன் ஒரே போடா போட்டுட்டு அங்கே இருக்கிறவங்களையும் போட்டுத்தள்ளிட்டு பணத்தை எடுத்துகிட்டு போயிடுவான். அப்புறம் இவருக்கு வேலை போயிடும் (உயிரோட இருந்தார்னா).

  இந்த நிறுவனங்களில் எல்லாம் இருக்கின்ற குறைந்த அளவு, பற்றாக்குறையான ஊழியர்களே மாற்றி மாற்றி வேலைப்பார்க்க வேண்டும். இந்த பாயின்டுல வேலைப் பார்த்தால் அடுத்த நாள் காலையில் அடுத்தப் பாயின்டுக்கு சென்றுவிடுவார்கள். அங்கிருப்பவர் இந்த பாயின்ட்டுக்கு வந்து வேலை பார்ப்பார்கள். அதற்கு சொல்லப்படும் காரணம் வேலை மிக குறைவு. அதுமட்டுமில்லாமல் விஷயம் தெரிந்தவர்கள், அப்படி இப்படி என்று எப்படியாவது காலத்தை ஒட்டவேண்டுமே என்று சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த இடத்தில் காலத்தை ஒட்டுவார்கள். மற்றவர்கள், வேலைக்கு வந்த இரண்டு நாளிலியே ஒடிடுவாங்க.

  ஆகையால் வேலை நேரத்தில் தூங்கத்தான் செய்வார்கள். தூங்கித்தான் ஆகவேண்டும்.

  இந்த கொடுமைகள் தீரவேண்டுமென்றால் உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் இந்த நாட்டில் வரவேண்டும். அது ஒன்றே ஒட்டுமொத்த தீர்வாக சொல்ல முடியும். பசங்க படிக்கிற கல்விக்கே முக்கு முக்குன்னு முக்க வேண்டியது இருக்குது. இதுல எங்கே? இதையெல்லாம் இதுங்க பார்க்கப்போகுது. இங்கே குறிப்பிட்டது குறைவு. நிறைய இருக்கிறது இடம் போதாது. இப்போதைக்கு இந்தளவுடன்.

  நம்ம ஊரு பாலிசியே இதுதான் வேலை செய்யறவனுக்கு வேலை கொடு! வேலை செய்யாதவனுக்கு கூலியை கொடு! அதுக்குத்தான் இந்த கான்டிராக்ட்டரிடம் இந்தப்பணியை கொடுப்பது.

  இந்த ஆம்புலன்சை அரசே ஏற்று நடத்துனா? நிரந்த ஊழியரை இப்போதைக்கு சேர்க்கணும். அப்புறம் அவங்க யூனியன் வச்சுப்பாங்க! அடுத்த கவர்ன்மென்ட் வந்தா தூக்கிடும். இதெல்லாம் தேவையா? அப்புறம் திடீர்னு கொடி பிடிப்பாங்க! ஆம்புலன்ஸ் அப்படியே நிக்கும். அப்புறம்,யார் கூப்பிட்டாலும் போகாது. அப்பவும் பாதிக்கப்படப்போவது சாமன்ய ஏழை மக்கள் தான்.

  கான்டிராக்டர் கிட்டே முதலிலேயே வரைமுறைகள் ஏற்படுத்தி ஒப்பந்தம் போடப்படவேண்டும் அது தான் இப்போதைக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.

  (கார்பொரேட் நிறுவனங்கள் இப்போது இந்த நிபந்தனைகளை கடுமையாக கான்டிராக்டர்களிடம் கடைப்பிடிக்கின்றன. காசை கொடுத்துட்டு வேலை வாங்கு! என்ற பாலிசி! இல்லைன்னா உன் கான்டிராக்ட் எனக்கு வேண்டாம்! வெளிநாட்டில் இருந்து பொழைக்க வந்தவன் தெரிஞ்சு வச்சிருக்கான்….நமக்குத்தான் தெரியாத மாதிரி காட்டிப்போம்…)
  இந்த புதிய அரசு ஏற்படுத்துமா?

  அந்த வரைமுறைக்கு ஆட்படாத கான்டிராக்டர்களை நீக்கிவிட்டு புதிய கான்டிராக்டர்களை அதாவது தொழிலாளர் நலன், குறைந்த பட்ச வாழ்வாதார ஊதியம், அட்டவணைப்படுத்தப்பட்ட விடுமுறை, ரிலீவர்…………. போன்ற தொழிலாளர் நலன் காக்கும் கான்டிராக்டர்களை நியமிக்க வேண்டும்.

  இவங்க கேக்குற “கட்டிங்கு” எந்த கான்டிராக்டரும் தொழிலாளர்களுக்கு சலுகைகள் கொடுக்க வரமாட்டான். இவங்களுக்கு (அரசாங்க அள்ளக்கைங்களுக்கு) எவ்வளவு? கட்டிங் கொடுக்கிறானோ? அதே அளவு “அமௌன்டை” இவனும் எடுப்பான். அதற்கு “பலி ஆடு” இந்த பாழாய் போன ஊழியர்கள் தான். அதற்கு தான் உழைக்கும் மக்கள் சர்வாதிகாரம்.?????????????

 12. அப்போ…

  இந்திக்கு டாட்டா சொல்ல வெச்சி

  நம்மை சந்திக்கு இழுத்தாங்க…

  ஆனா..

  அதைப் படிக்க வெச்சே தன் சந்ததியை

  டாட்டாவையே மிரட்டுற அளவுக்கு

  ஆளாக்கிவிட்டாங்க!

  இப்போ..?

  சமச்சீரை கொண்டு வரோங்கிற பேருல

  கிறுக்கல்களை கிரேட்டுங்கிறாங்க!

  சாக்கடையை சந்தனம்கிறாங்க!

  சமச்சீருதான் வேணும் தம்பி

  அது உண்மையான சந்தனமா இருந்தா..!

  சாக்கடைக்கும் சந்தனத்துக்கும்

  வித்தியாசம் பாரு தம்பி…

  உண்மையான பகுத்தறிவாலே!

  சமத்துக்கும் சீருக்கும்

  விளக்கத்தைக் கேளாய் தம்பி…

  ஊமையான உன்குரலாலே!

  படிதாண்டிப் போனா…

  பண்பு இல்லே!

  சுவர் தாண்டிப் போனா…

  சீர்மை இல்லே!

 13. 108 வணடியை அரசுதான் நடத்துகிறது என்று எண்ணியிருந்தேன்.அந்த எண்ணத்தில்
  உண்மையை துாவிவிட்டதக்கு தோழர்க்கு நன்றி!பல.

 14. I dont know what to write after reading the Income/Expenditure report. Pagal kollayaellam thandi vera ethuavathuthan sollanaum. Truly the drivers/attendant are squezzed !!!

  I don’t understand this statement. Are they gettign this amount from Govt?
  இந்த சேவைக்காக, ஆண்டு தோறும் அரசிடமிருந்து ஜி.வி.கே.யின் முதலாளி பெறுகிற பராமரிப்புத் தொகை மட்டும் ரூபாய் நாலாயிரத்து இருநூறு கோடி.

 15. சிறிய ஐ.டி கம்பெனிகள்நடத்தும் இத்தனை வருடம் வேலைக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று போடும் ஒப்பந்தத்தையும், அதன் அட்டூழியங்களையும் வினவு எழுதினால்நன்றாக இருக்கும்.கொடுக்கும் டார்ச்சர் தாங்கமுடியாமல் தனது ஒரு வருட சம்பளத்தை ‘ஒப்பந்த முறிவு’ என்ற ரீதியில் பிடுங்கி பணம் பறிக்கும் அரக்க தனத்தை அருகில் இருந்து பார்த்தவன்நான். அது குறித்து வழக்கு தொடுக்கநான் எடுத்த முயற்சிகள் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்தியதால் அந்த முயற்சியை கைவிட்டேன். வினவு கவனிக்குமா?

 16. பெரிய மென்பொருள் கம்பெனிகளில் போடும் ஒப்பந்தம் பெரும்பாலும் ஒழுங்காக இருக்கும், சில சின்ன கம்பனிகள் தான் சுரன்டுபவை.

  மிக மிக நேர்மையான கட்டுரை. பாவம் ஊழியர்கள் ஏனெனில், இது ஒரு மனதளவில் கடுமையான வேலை. அடுவும் 12 மனிநேரம் மிகவும் கொடுமை.நான் அறிந்தவரை அவர்கள் சிறப்பாக பனியாற்றுகின்றனர்.

 17. accounts missing this salary , office rent

  “இப்படியெல்லாம் ஊழியர்களிடம் கெடுபிடியாகவும் கறாராகவும் நடந்து கொண்டு, 40,000 முதல் 50,000 ரூபாய்களுக்கும் கூடுதலாகச் சம்பளம் வாங்கி, ரெட்டியிடம் நல்லபேரை எடுக்கிற ஜி.வி.கே அதிகாரிகளின் அசல் சேவையுள்ளத்தைச் சிறிது பார்க்கலாம்.”

 18. “நம்ம ஊரு பாலிசியே இதுதான் வேலை செய்யறவனுக்கு வேலை கொடு! வேலை செய்யாதவனுக்கு கூலியை கொடு! அதுக்குத்தான் இந்த கான்டிராக்ட்டரிடம் இந்தப்பணியை கொடுப்பது.

  இந்த ஆம்புலன்சை அரசே ஏற்று நடத்துனா? நிரந்த ஊழியரை இப்போதைக்கு சேர்க்கணும். அப்புறம் அவங்க யூனியன் வச்சுப்பாங்க! அடுத்த கவர்ன்மென்ட் வந்தா தூக்கிடும். இதெல்லாம் தேவையா? அப்புறம் திடீர்னு கொடி பிடிப்பாங்க! ஆம்புலன்ஸ் அப்படியே நிக்கும். அப்புறம்,யார் கூப்பிட்டாலும் போகாது. அப்பவும் பாதிக்கப்படப்போவது சாமன்ய ஏழை மக்கள் தான். ” super point give the answer this comment

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க