privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!

மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!

-

மின்-கட்டண-உயர்வுமின் வாரியம் கூறும் கட்டணத்தைத் தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில்லை என்பதுதான்  மின்வெட்டு என்று கூறப்படுகிறது. கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு சொல்கிறது. மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும் இந்தப் பற்றாக்குறையை ‘முடிவுக்கு’ கொண்டு வரலாம்.

பாட்டில் தண்ணீரும் கேன் தண்ணீரும் தண்ணீர் பஞ்சத்தை இப்படித்தான் ‘ஒழித்திருக்கின்றன’. குடிதண்ணீர் வாங்க காசில்லை என்ற பிரச்சினையை தண்ணீர் பற்றாக்குறை என்று யாரும் சொல்வதில்லை. அது பணப்பற்றாக்குறையாகிவிடுகிறது.

ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப் செய்வதைப் போல, 20, 30  ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொள்வதற்கும் எப்படி இன்று பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம். மின்சாரம் என்பது கத்தரிக்காயைப் போல அன்றாடம் சந்தையில் விலை மாறும் சரக்காகி வருகிறது. இந்த மாற்றம் வெகு வேகமாக நம்மீதும் திணிக்கப்படுகிறது.

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ‘ஸ்மார்ட் மீட்டர்’ என்ற மின்சார மீட்டரை அறிமுகப்படுத்தவிருக்கிறதாம். காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்ன என்பதை இந்த மீட்டரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். அதாவது, வரவிருக்கும் காலத்தில் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கோ, ஒரு நாளுக்கோ கூட நிரந்தரமாக இருக்காது. மின்சாரச் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டை தவிர்த்துக் கொண்டு, விலை குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டண செலவைக் கட்டுப்படுத்த முடியும். இது மின்சாரத்துறையில் செய்யப்படும் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தமாகும் என்று கூறியிருக்கிறார் டில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பி.டி.சுதாகர். (பி.டி.ஐ; 26.2.12)

மைய அரசு அமைத்திருக்கும் ‘இந்தியா ஸ்மார்ட் கிரிட் டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, மின்சார மீட்டரை ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் இந்த ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் இந்தியா முழுவதற்கும் பத்து கோடி தேவையென்றும், அவற்றை மலிவு விலையில் உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் கூறியிருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரி நகரிலுள்ள 87,000 வீடுகளில் அடுத்த நான்கு மாதங்களில் இந்த மீட்டர்கள் நிறுவப்படும் என்று இந்த டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பு அறிவித்திருக்கிறது. (ஐ.பி.என். லைவ், மார்ச் 3, 2012)

மின் விநியோகத்தின் மீதான மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், மின் திருட்டைத் தடுக்கும் முயற்சி, மின் செலவை மிச்சப்படுத்த மக்களுக்கு தரப்படும் வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலங்களால் இந்த திட்டத்தை நியாயப்படுத்துகிறது அரசு. உண்மை அதுவல்ல.  மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வது என்ற முறையையே ஒழித்துவிட்டு, சந்தையில் மின்சாரத்தின் விலை என்னவோ அதைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பதற்கு மக்களைப் பழக்குவதே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் நோக்கம்.

28.3.2012 அன்று சட்டசபையில் மின்கட்டண உயர்வு தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில மின்வாரியம் கோராவிட்டாலும்கூட, கட்டணத்தை உயர்த்துகின்ற அதிகாரம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உண்டு என்று ஒரு விளக்கமளித்தார்.

மின்-கட்டண-உயர்வுதன்னுடைய அரசு அறிவித்திருக்கும் கட்டண உயர்வுக்கு, தான் பொறுப்பேற்றுக் கொள்ளாமல், வேறு யாரோ வைத்த செய்வினை போல ஜெயலலிதா சித்தரிக்கிறார் என்ற போதிலும், அப்படிப்பட்ட அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மையே.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.  கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை மாநில அரசிடமிருந்து பிடுங்கி சுய அதிகாரம் பெற்ற அமைப்பான இதனிடம் வழங்கப்பட்டுவிட்டன.  இதற்கான சட்டம் 1998இலேயே இயற்றப்பட்டுவிட்டது.

மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் போதுமானதாக இல்லை என்பதால் 2003இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் மத்திய மின்சாரச் சட்டம் இயற்றப்பட்டது.  இச்சட்டம், மின் உற்பத்தி  கம்பிகள் மூலம் கொண்டு செல்லுதல்  நுகர்வோருக்கு விநியோகித்தல் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்வது திறமையின்மைக்கும் ஏகபோகத்துக்கும் வழிவகுப்பதால், வாரியங்களை மூன்றாக உடைக்கக் கூறியது. மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும் என்றும், மின்சாரம்  உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை என்றும், தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதித்தது. மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியது. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறியது.

மின் உற்பத்தியிலிருந்து மாநில மின்வாரியங்கள் திட்டமிட்டே அகற்றப்பட்டன.  மின்சாரத் துறைக்கான நிதி, மாநில அரசுகளின் திட்ட ஒதுக்கீட்டில் 31.55 விழுக்காட்டிலிருந்து (199091) பத்தே ஆண்டுகளில் 15.25 விழுக்காடாக (200102) வீழ்ச்சி அடைந்தது. இலாபமீட்டி வந்த மின் வாரியங்கள் நட்டத்தில் விழத் தொடங்கின.

மின் வாரியங்கள் நட்டத்தில் விழுவதற்கான காரணமே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் என்ற கருத்தை அரசும், ஊடகங்களும் திட்டமிட்டே உருவாக்கியிருக்கின்றன. 1994-95இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ. 347 கோடி. 2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் அதுவல்ல.

1994 இல் தனது மின்சாரத் தேவையில் 0.4 சதவீதத்தை மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008  இல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது. இன்று தமிழக மின்வாரியத்தின் கடன் சுமார் ரூ.56,000 கோடி. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

“போட்டி இருந்தால் விலை குறையும். சேவைத்தரம் உயரும்” என்பதுதான், அரசுத்துறைகளை ஒழிப்பதற்கும், தனியார் துறையை ஊக்குவிப்பதற்கும் சொல்லப்படுகின்ற காரணம்.  மின்சாரத்துறையில் தனியார் அனுமதிக்கப்பட்ட பிறகு கட்டணம் குறையவில்லை. மாறாக, ஏறிக்கொண்டிருக்கிறது. மின் வாரியத்தை நட்டத்திலிருந்து காப்பாற்றத்தான் இந்த கட்டண உயர்வு என்று அரசு கூறினாலும் உண்மை அதுவல்ல.

தனியார் மின் உற்பத்தியாளர்களுடன் மின்வாரியங்கள் போட்டிருக்கும் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களின்படி, அந்த முதலாளிகளுக்குத் தரவேண்டிய தொகையைத் தருவதற்கு கட்டண உயர்வு அவசியம் என்று மத்திய மின்சார அமைச்சகத்தின் 21.1.2011 தேதியிட்ட கடிதம் தெளிவாகக் கூறுகிறது. (ஆதாரம் : ‘மின்சாரக் கட்டணம் தனியார்துறையின் வேட்டைக்காடு’, சா.காந்தி, ஒய்வு பெற்ற பொறியாளர்)

மின்-கட்டண-உயர்வுமின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchase Agreement) என்பதென்ன? தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு மாநில மின்வாரியங்கள் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் இவை. இவற்றின்படி, ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை என்பதும் எத்தனை மாதங்களுக்கு அந்த விலையில் மின்சாரத்தை தரவேண்டும்/பெற வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டுவிடும்.  மின்சாரத்தின் விலையை இருதரப்பினரும் பேசித் தீர்மானிப்பர்.

இந்த வகை ஒப்பந்தங்களில் மிகவும் இழிபுகழ் பெற்றது என்ரான் ஒப்பந்தம். 90களில் தபோல் மின்நிலையத்திலிருந்து ஒரு யூனிட்  8 ரூபாய் விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டு விட்டு, அந்த விலைக்கு மின்சாரம் வாங்க முடியாமல், மின்சார உற்பத்தியை நிறுத்தி வைப்பதற்காக மாதந்தோறும் நிலைக்கட்டணம் செலுத்தியே திவாலானது மகாராட்டிர அரசு.

தமிழகத்தில் அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து 2005-06  இல் தமிழக அரசு வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.17.78.  சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ. 8.74; மதுரை பவர்  ரூ. 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.6.58.  யூனிட்டுக்கு ரூ. 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06  இல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் 330 கோடி ரூபாயை  கொடுத்திருக்கிறது மின்வாரியம்.(காந்தி, மேற்படிநூல்)

தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ.2.14 காசுகள் என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக மின் வாரியத்தின் 56,000 கோடி ரூபாய் கடனும், அதனைக் கட்டுவதற்கு  நாம் தரப்போகும் கூடுதல் கட்டணமும் அரசுக்குப் போகவில்லை. நேரே முதலாளிகளின் பணப்பெட்டிக்குத்தான் போய்ச் சேர்கிறது.

ஒப்பந்தம் செய்த விலையில் ஒப்பந்தப்படி மின்சாரம் வாங்கவில்லையென்றால், தங்களது மின் நிலையங்கள் இயங்காமல் சும்மா இருப்பதற்கே அபராதக் கட்டணம் வசூலித்து மின்வாரியத்தைத் திவாலாக்கும் கறார் பேர்வழிகளான தனியார் முதலாளிகள், தமது தரப்பில் ஒப்பந்தங்களை மதிக்கிறார்களா?

ஒரு யூனிட் 2.26 காசுக்கு மின்சாரம் சப்ளை செய்வதாக ஏலம் கேட்டு, டாடாவுக்குச் சொந்தமான முந்திரா அல்ட்ரா மெகா பிராஜக்ட் என்ற 4000 மெகாவாட் அனல் மின்நிலையம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இதற்கான நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. இப்போது நிலக்கரியின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டதால், தான் ஏலம் கேட்ட விலையில் மின்சாரம் தர முடியாது என்றும் விலையைக் கூட்டவேண்டும் என்றும் கோருகிறது டாடா நிறுவனம். இந்தோனேசியாவில் உள்ள அந்த சுரங்கங்களும் டாடாவுக்கு சொந்தமானவையே என்பதால், மின்சாரத்தின் விலையைக் கூட்ட மறுக்கின்றன மாநில மின்வாரியங்கள்.

“மின்சாரத்தின் விலையைக் கூட்டித்தர மறுத்தால் மின்நிலையத்தை மூடுவோம். திவாலாகப்போவது நாங்கள் அல்ல, எங்களுக்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள்தான். பரவாயில்லையா?” என்று தெனாவெட்டாக அரசை மிரட்டுகிறார் டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அனில் சர்தானா. (எகனாமிக் டைம்ஸ், 5.2.2012)

தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், மின் வாரியங்களுக்கும் சுமார் 4 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கிகளோ, தங்களைத் திவால் ஆகாமல் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மின் கட்டணத்தை உயர்த்துமாறு ஆணையத்திடம் முறையிடுகின்றன.

இன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி அனல் மின் உற்பத்தியே. இதற்குத் தேவையான நிலக்கரியை பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா தருகிறது. குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக மின்வாரியங்களுக்குச் சொந்தமான அனல் மின்நிலையங்களுக்குச் சலுகை விலையில் கரியை விற்கிறது கோல் இந்தியா. கோல் இந்தியா தருகின்ற நிலக்கரி போதாமல், கணிசமான அளவு நிலக்கரியை பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன.

மின்-கட்டண-உயர்வுதற்போது உலகச் சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்து விட்டதைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கை சந்தித்த டாடா, அம்பானி, ஜின்டால், அதானி உள்ளிட்ட தரகுப் பெருமுதலாளிகள், “மின்சாரத்தின் விலையை உயர்த்துங்கள், அல்லது நிலக்கரியைச் சலுகை விலையில் வழங்குங்கள். இல்லையேல் அனல் மின் நிலையங்களை மூடவேண்டிவரும்” என்று அன்புடன் மிரட்டியுள்ளனர். உடனே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கூட்டிய மன்மோகன்சிங், முதலாளிகளுக்குத் தேவையான நிலக்கரியை வெட்டி எடுத்தோ, இறக்குமதி செய்தோ கொடுக்க வேண்டியது கோல் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பென்றும், ஒப்புக்கொண்டதில் 80% நிலக்கரியைத் தரத் தவறினால் முதலாளிகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். உள்நாட்டு நிலக்கரியை குறைந்த விலையில் விற்பது மட்டுமல்ல; இறக்குமதி செய்து, தள்ளுபடி விலையில் இம்முதலாளிகளுக்கு விற்க வேண்டும்.

டாடாவுக்கு  இந்தோனேசியாவிலும், அதானிக்கு ஆஸ்திரேலியாவிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. இந்தோனேசிய டாடாவிடமிருந்து அதிக விலைக்கு வாங்கி, இந்திய டாடாவுக்கு மானிய விலையில் நிலக்கரி விற்பனை! இதற்குப் பெயர் சுதந்திரப் போட்டி, மானியங்களை அகற்றுதல்!

இது மட்டுமல்ல, வரவிருக்கும் 6 ஆண்டுகளில் நிறுவப்படவுள்ள 40,000 மெகாவாட் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரிச் சுரங்கங்கள் தரகு முதலாளிகளுக்கு ‘சும்மா’ தூக்கித் தரப்பட்டிருக்கின்றன. இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சந்தை விலையில் விற்று லாபம் பார்க்கப்போகிறார்கள். (பிசினெஸ் லைன், 15.3.2011)

தனியார் மின் உற்பத்தியாளர்களில் இரு பிரிவினர் உண்டு. உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் குறிப்பிட்ட மின்வாரியத்துக்கோ, ஆலைக்கோ,  சில ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட விலையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு, விற்பனை செய்பவர்கள்   சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள் (Independent Power Producers).

இத்தகைய ஒப்பந்தங்கள் ஏதுமில்லாமல் சந்தையில் அன்றன்றைக்கு நிலவும் மின்சாரத் தேவையின் அடிப்படையில், மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்பவர்கள் வணிக மின் உற்பத்தியாளர்கள் (Mercantile Power Corporations). ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 17 ரூபாய்க்கும் மேல் கூடப் போவதுண்டு. இதற்கு உச்சவரம்பு ஏதும் கிடையாது.  இத்தகைய தனியார் பிணந்தின்னிகளிடம் மின்சாரம் வாங்கித்தான் தமிழக மின்வாரியம் திவாலாகியிருக்கிறது. சான்றாக, 2009-10  இல்  தமிழக மின்வாரியம், தனது மொத்த மின் தேவையில் 19 விழுக்காட்டை  வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.

இன்று 16,000 மெகாவாட் உற்பத்தியுடன் இந்திய மின் சந்தையின் 10%ஐ இவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். அடுத்த சில ஆண்டுகளுக்குள் மேலும் 40,000 மெகாவாட் இவர்களது பிடிக்குள் வர இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய குறுகிய கால பிணந்தின்னி மின்சந்தை இந்தியச் சந்தைதான். இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அக். 2008 முதல் ‘பவர் எக்ஸ்சேஞ்ஜ் ஆப் இந்தியா’ என்ற ஆன்லைன் சந்தை தொடங்கப்பட்டு, இதில் சூதாடப்படும் பண்டமாக மின்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொடங்கி மூன்றாவது ஆண்டிலேயே 1000 கோடி யூனிட்டுகளுக்கு மேற்பட்ட மின்சாரம் இந்தச் சந்தையில் சூதாடப்பட்டிருக்கிறது என்று பெருமை பொங்க அறிவித்திருக்கிறார் மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால்.

தனியார் அணுமின் நிலையங்களும் அனுமதிக்கப்பட இருக்கின்றன. ரிலையன்ஸ் எனர்ஜி, டாடா பவர், லார்சன் அண்டு டூப்ரோ போன்ற நிறுவனங்கள் பிரான்சின் அரேவா, ஜப்பானிய தோஷிபா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை வருகின்றன. இந்திய அணுசக்திக்கழகத்தின் (NPCIL) முன்னாள் தலைவர் வி.கே.சதுர்வேதி ரிலையன்ஸிலும், எஸ்.ஏ.வோரா என்ற முன்னாள் இயக்குநர் டாடா பவர் நிறுவனத்திலும் பொறுப்பேற்றிருக்கின்றனர்.  (அவுட்லுக், 22 அக்; 2007)

சூரிய ஒளி, காற்றாலை போன்ற மாற்று மின்சார முயற்சிகளும்கூட,  பெரும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களிடமே தரப்படுகின்றன. அவர்களுக்கு  மானியங்களை வாரி வழங்குவதுடன், அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்தையும் அடாத விலை கொடுத்து வாங்குகின்றன மின்வாரியங்கள். தமிழக மின்வாரியம் காற்றாலைகளுக்கு வைத்திருக்கும் கடன் மட்டும் 1500 கோடி ரூபாய்.

தற்போது 77% மின்சாரத்தை மத்திய, மாநில அரசு மின்நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. 23% தனியார் உற்பத்தி.  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தனியார் முதலாளிகளின் பங்கை 60% ஆக உயர்த்தவிருப்பதாகக் கூறி அமெரிக்க முதலீட்டாளர்களை வரவேற்றிருக்கிறார் மத்திய மின்சார அமைச்சர் ஷிண்டே.

மின் உற்பத்தி மட்டுமல்ல, மின் விநியோகமும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. டில்லி மின்விநியோக நிறுவனத்தின் பெயர், டாடா பவர் கம்பெனி என்றே மாற்றப்பட்டுவிட்டது.  உற்பத்தி, விநியோகம் இரண்டையும் அரசு மின்வாரியமே செய்வது ஏகபோகம் என்று கூறி, மாநில மின் வாரியங்களை உடைத்திருக்கும் அரசு, டாடாஅம்பானிகளின் நிறுவனங்கள் உற்பத்தியிலும் விநியோகத்திலும் மட்டுமின்றி எரிபொருளிலும்  தரகு முதலாளிகள் ஏகபோகம் செலுத்துவதை கேள்விக்குள்ளாக்கவில்லை.

மின்-கட்டண-உயர்வுஇருப்பினும், மோசமான சேவை, அசாத்தியமான கட்டண உயர்வு ஆகிவற்றால் தனியார் சேவை பல்லிளித்துவிட்டது. ஆத்திரம் கொண்ட டில்லி, மும்பை மக்கள் மீண்டும் அரசு மின்வாரியம் கோரிப் போராடுகின்றனர்.

மைய அரசு அமைத்திருக்கும் சுங்லு கமிட்டியோ, மின் தட இழப்பைக் குறைப்பதற்கு, மின் விநியோகத்தை மின்வாரியங்களிடமிருந்து பறித்து, அதைத் தனியார் முகவர்களுக்கு (Franchisee) கொடுக்குமாறும், கம்பிகள் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை 25 ஆண்டுகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களை அனுமதிக்குமாறும் ஆலோசனை கூறியிருக்கிறது. பேருந்துநிலைய கக்கூசை ஏலம் விடுவது போல, 255 நகரங்களின் மின் விநியோகத்தை ஏலம் விட்டு அரசாங்கம் கல்லா கட்டிவிடலாம் என்றும், அந்த ஏலதாரர்கள் மக்களிடம் வசூலித்துக் கொள்ளட்டும் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறது. பஞ்சாப், ஹரியானாவில் 31 நகரங்களில் முன்னோட்டமாக இது அமல்படுத்தப்பட இருக்கிறது. (இந்தியன் பவர் செக்டார், 10.2.2012) நெடுஞ்சாலைத் துறை டோல்கேட்டுகள் வசூலில் வெற்றியடைந்திருப்பதால், அதே முறையிலான தனியார்துறைபொதுத்துறை கூட்டினை மின் விநியோகத்திலும் அமல்படுத்தலாமென்றும் அரசு சிந்தித்து வருகிறது. மின் கட்டண வசூலை உத்திரவாதப்படுத்த, ஸ்மார்ட் மீட்டருடன் ப்ரீ பெய்டு கார்டு முறையை இணைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார்கள்.

தெற்காசியா முழுவதற்கும் 30,000 கோடி டாலர் செலவில் ஒரு மின் விநியோக வலைப்பின்னலை அமைத்து, ஒரே மின்சாரச் சந்தையின் கீழ் தெற்காசியாவின் எல்லா நாடுகளையும் கொண்டுவரவேண்டும் என்பதும் இந்தியத் தரகுமுதலாளிகளின் வேட்கை. தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயத்துக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா இதனைக் கூறினார். இத்திட்டத்தின் அடிப்படையில்தான் இந்திய-இலங்கை கடல்வழி மின்தடம் அமைக்கப்பட இருக்கிறது.

இன்று நாம் சந்திக்கும் பிரச்சினையை மின் உற்பத்திப் பற்றாக்குறை தோற்றுவிக்கும் நெருக்கடி என்று மட்டும் குறுக்கிப் புரிந்து கொள்ள கூடாது. குஜராத்திடம் 2000 மெகாவாட் மின்சாரம் உபரியாக விற்க வழியில்லாமல் உள்ளது. முதலாளித்துவ பொருளாதாரத்தில் பற்றாக்குறையைக் காட்டிலும் அபாயகரமான பிரச்சினை உபரி.

நாளை தமிழகம் மின் உபரி மாநிலமாகலாம். ஆனால் அந்த உபரி, சாதாரண மக்களின் மின்சாரப் பற்றாக்குறையை அதிகரிக்கும். இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் பிதுங்கி வழியும் தானியம்,  மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து வருவதைப் போல.

உணவுபட்டினியைத் தோற்றுவிக்கும். மின்சாரம் இருட்டையும் தோற்றுவிக்கும்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. அம்பானியும் மின்சாரம் தயாரிக்கிறார் அரசாங்கமும் மின்சாரம் தயாரிக்கிறது அப்புறம் ஆட்டோமேட்டிக்காக அப்பீட் ஆயிக்க வேண்டியது தானே மின்வாரியம், அதற்கு தோதாக புது கனெக்ஷன் எல்லாம் நம் வரிப்பணத்தில் பக்காவா போட்டு கொடுக்கவும் லேட்டஸ்ட் மீட்டர் எல்லாம் பொருத்தி அவனுக்கு கட்டணம் வசூலித்து கொடுக்கவும் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் அவனுக்காக ரெக்ரூட்மென்ட் பண்ணுகிறது நாம் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம். இதை எல்லாம் சப்போர்ட் பண்ண k.r.adhiyaman என்று ஒரு ஆள் வருவார் பாருங்கள் பல புள்ளி விவரங்களுடன்……நிறைய குண்டு நிரப்பி ஒரு துப்பாக்கிய கொடுங்கப்பா எதாவது உருப்படியா செய்வோம்.

 2. \\ இப்போது நிலக்கரியின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டதால், தான் ஏலம் கேட்ட விலையில் மின்சாரம் தர முடியாது என்றும் விலையைக் கூட்டவேண்டும் என்றும் கோருகிறது டாடா நிறுவனம்.மின்சாரத்தின் விலையைக் கூட்டித்தர மறுத்தால் மின்நிலையத்தை மூடுவோம். திவாலாகப்போவது நாங்கள் அல்ல, எங்களுக்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள்தான். பரவாயில்லையா?” என்று தெனாவெட்டாக அரசை மிரட்டுகிறார் டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அனில் சர்தானா. //

  தனியார் துறையின் ”திறமைக்கும் நேர்மைக்கும்” இதை விட என்ன சான்று வேண்டும்.

  \\ 2009-10 இல் தமிழக மின்வாரியம், தனது மொத்த மின் தேவையில் 19 விழுக்காட்டை வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.//

  இழப்பை சந்திப்பதை தவிர வேறு வழியில்லாத முட்டுச்சந்தில் அரசு நிறுவனங்களை தள்ளி விட்டுவிட்டு பொதுத்துறை நிறுவனங்கள் திறம்பட செயல்படுவதில்லை என்று கள்ளப்பரப்புரையை அவிழ்த்து விடும் அயோக்கியத்தனம்.

  \\ இந்தோனேசிய டாடாவிடமிருந்து அதிக விலைக்கு வாங்கி, இந்திய டாடாவுக்கு மானிய விலையில் நிலக்கரி விற்பனை! இதற்குப் பெயர் சுதந்திரப் போட்டி, மானியங்களை அகற்றுதல்!//

  தனியார்மய ஆதரவாளர்கள் இந்த அயோக்கியத்தனத்தையும் நியாயப்படுத்துவார்களா.

  • வருவார் அதியமான், சற்று பொறுங்கள் புள்ளி விவரம் திரட்டி கொண்டிருக்கிறார்.

 3. எல்லா பொருளும் விலை ஏறத்தான் செய்யும்….எல்லாம் வேணும் அதுவும் வரி கட்டுரவங்கிட்ட இருந்து ஓசில குடுத்தா..நல்லா ஓட்டுவீங்க பொழப்ப…

  40000 ஆயிரம் கோடி நஷ்டத்துல இருக்கும் போது இந்த சோம்பேரிங்களுக்கு 40% போனஸ் குடுக்கும் போது..நீ என்ன கீழிச்சுக்கிட்டு இருந்தே???

  • எப்படி 40ஆயிரம் கோடி நஷ்டம் என்பதுதான் இந்த கட்டுரையே. அவன் உழைப்பை பழிக்கும் நீ அந்த வேலையில் ஒரு அரைநாள் இருந்து பார்த்தால் தான் தெரியும். அவன் உழைப்பை எப்படி அரசு தனியாருக்காக வீணாக்குகிறது என்பதை தான் இந்த கட்டுரை. அப்புறம் வரிகட்டும் நீ, வரிகட்டாதவன் கட்டிய வீடு,அவன் கட்டிய உன் அலுவலகம்,அவன் போட்ட சாலை,அவன் செய்த வாகனம்,போன்றவற்றை உபயோகிக்காமல் இருக்க முடியுமா? நீ அவனுக்கு கூலி கொடுத்து தான் வீடு கட்டியிருப்பாய் அனால் உன்னை போல் அவனும் ஒரு குடும்பத்தலைவன் என்று யோசித்து உனக்கு ஒரு நாள் குடும்ப செலவுக்கு ஆகும் தொகையை கூலியாக கொடுத்திருப்பாயா? அவனுக்கு 40%போனஸ் என்பது உன்னுடைய ஒரு வார சம்பளம்.அவனை யோசிக்க விடாமல் பிழைப்பு கவலையிலேயே வைத்திருக்கும் நாம் அவன் விழித்தால் என்னாவோம் என்று கொஞ்சம் யோசித்து மனித நேயத்துடன் எதையும் அணுகுவோம்.

  • “40000 ஆயிரம் கோடி நஷ்டத்துல இருக்கும் போது இந்த சோம்பேரிங்களுக்கு 40% போனஸ் குடுக்கும் போது..நீ என்ன கீழிச்சுக்கிட்டு இருந்தே???”

   40000 ஆயிரம் கோடி நஷ்டத்துக்கு என்ன காரணம்? தெரியுமா இன்ட்டியன் தம்பு….
   40% போனஸ் சோம்பெரிகளுக்குனா ஒவ்வொரு பட்ஜெட்டிலும் முதலாளிக்கு கொடுக்குற மானியத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்?

   என்ரான் இந்தியாவை ஏய்த்த கணக்கு தெரியுமா?

 4. பொருளாதார கோமாளி மன்மோகன், பாசிச தீவிரவாதி ஜெயா, இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இத்தாலி சோனியா, இராமர் கோயில் கட்டினால் நாட்டின் அனைத்து பிரச்சனையும் தீரும் என்று நினைக்கும் ஆன்மீக கோமாளி அத்வானி கோஷ்டி, குடும்பமே நாடு என நினைக்கும் மாநில கட்சி தலைவர்கள், பெயரளவுக்கு இயங்கும் வலது, இடது, ஓரம், மூலை, முடுக்கு கம்ம்யுனிஸ்ட்டுகள், நாடாளத்துடிக்கும் சினிமா பைத்தியங்கள்… ரப்பர் ஸ்டாம்ப் கவர்னர், ஜனாதிபதி, தனக்கென்று சொந்த கருத்தேதும் இல்லாத, கேப்பையில் நெய் வடியுது என்று தலைவன் சொன்னால் எனக்கு ரெண்டு கோப்பை எனும் சட்டமன்ற/பாராளுமன்ற வெத்து வேட்டுக்கள்… யாரை குற்றம் சொல்ல ?…

  ஃபிரீயாய் கொடுத்தால் பினாயிலும் குடிப்பேன் என்று இலவசம் தன்வசம் வந்தால் போதும், அரசு விதிவசம் நடக்கும் என்று வாக்கு வியாபாரம் செய்யும் குடிமகன்கள் மேல் தான் தப்பு.. அனுபவிக்கட்டும்… !!!!

 5. After reading this piece, I felt like seeing the opening of Pandora’s box. The electricity issue is the prototype example of how liberalization and privatization exploit and thrive in third world countries like India.
  This article should be published and used for opposing privatization. A very valuable and useful tool for all of us. Thank you Vinavu.

 6. அருமையான பதிவு. இது போன்ற பதிவுகள் கீற்று தளத்திலும் காணலாம்.

 7. இந்த கட்டுரையின் புள்ளிவிவரங்கள் மின் உற்பத்தியில் தனியார்மயம் என்ன செய்யப்போகிறது என்பதை மிகவும் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க